- இலக்கியவெளி சஞ்சிகையின் சிறுகதைச் சிறப்பிதழில் வெளியான கட்டுரை. 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத் தொகுப்பு (2021)  நூலினை வெளியிட்டது ஜீவநதி பதிப்பகம், கலை அகம், அல்வாய், இலங்கை. -


வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.

மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகள் 80 களிலிருந்து தாயகம் சார்ந்தும் போரால் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் சார்ந்தும் இதுவரை அதிகமாக எழுதி வந்தார்கள். அந்தப் பொருண்மையில் அண்மைய புலம்பெயர் படைப்புக்கள் கணிசமான அளவு மாற்றங்களைக் கண்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவங்கள் அந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. வ. ந. கிரிதரனின் இத்தொகுப்பு, அடையாளம் குறித்த கேள்விகளையும் ஈழத்தமிழர் மாத்திரமன்றி ஒடுக்குதலுக்குள்ளாகிய வேற்று நாட்டவர்கள் அகதிகளாக வாழ்வது பற்றியும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் மத்தியில் இருக்கக்கூடிய உளவியற் சிக்கல்கள் பற்றியும் அதிகம் கவனத்தில் கொண்டிருக்கின்றது. இந்தப் பொருண்மை மாற்றங்களைப் படிப்படியாக ஏனைய எழுத்தாளர்களும் பதிவு செய்து வருகின்றனர். இவ்வகையில் கிரிதரனின் கதைகள் சர்வதேசியத் தளத்தில் நிற்கும் மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வனுபவம் சார்ந்த பார்வையாக விரிவடைந்துள்ளது.

அடையாளம் குறித்த கதைகள்

அடையாளம் குறித்தவற்றில் மனிதமூலம், Where are you from?, நீ எங்கிருந்து வருகிறாய், ஆபிரிக்க அமெரிக்க கனேடியக் குடிவரவாளன், யன்னல் ஆகிய சிறுகதைகளை இனங்காணலாம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எனது உணர்வுகள் மதிக்கப்படுகின்றனவா? நானும் மனிதனாக மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றேனா? முதலான வினாக்கள் இக்கதைகளில் இழையோடுகின்றன. இற்றைக்கு மில்லியன் கணக்கான மக்கள் உலக நாடுகளில் நாடிழந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் வீடற்றவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பதிவு செய்யும் விதமாக மேற்கூறிய சிறுகதைகள் அமைந்துள்ளன.

Where are you from? என்று தலைப்பிட்ட சிறுகதையானது, புகலிடத்தில் அகதிகளாக வந்து சேர்ந்தவர்களை அந்நாட்டவர்கள் முதலில் கேட்கும் கேள்வியாக அமைகின்றது. இந்தக் கேள்வியினை எதிர்கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சலை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் இவ்வாறு கேட்பதோடு அடுத்தடுத்த வினாக்களையும் தொடுப்பார்கள் ‘அண்ணை ஊரில எந்த இடம்?’ என்பார்கள். இவர்களின் வினாக்களில் தொக்கி நிற்பது சாதியத்தை அறியவேண்டும் என்பதே!

மேலைத்தேயத்தவர்கள் நிறவாத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார்கள். நம்மவர்கள் சாதிய அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறார்கள் என்று இச்சிறுகதையின் தொடக்கமும் முடிவும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இது தனிக்கதையாக எழுதப்பட்டாலும் ஏனைய கதைகளிலும் இதன் உணர்வோட்டம் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

வெளிநாட்டில் அறிமுகமில்லாத இருவர் சந்தித்தால் முதலில் காலநிலையினைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவார்கள். அடுத்து Where are you from? என்று கேட்பார்கள். அவ்வாறு கேட்பவரை நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்கிறார். அதற்கு அவர்கள் கோபப்படுகிறார்கள். அதேபோல் வயதில் குறைந்த இளைஞர் ஒருவர் Where are you from? என்று கேட்கும்போது உமக்கு வயது 20 எனக்கு வயது 30. ஆகவே, நீ எங்கிருந்து வந்தாய் என்பதைச் சொல் என்கிறார். இக்கதையிலும் எங்கிருந்து வந்தாய் என்று அவனிடம் மட்டுமே இதுவரை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எங்கள் பிள்ளைகளிடமும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். உன் மூலம் என்ன? ஆதியில் உன் குடும்பத்தவர் எங்கிருந்து வந்தார்கள்? உன் தாத்தா பாட்டி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்று நான் திருப்பிக் கேட்கும்போது ‘இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கிறாய் … கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கிறாய்’ என்று கோபப்படுகிறார்கள்.

ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன் என்ற சிறுகதையில் இன்னுமொரு மண்ணில் வேரூன்றுவதற்கு முயன்று தோற்றுப்போன கலிபோர்ணியாவில் வாழும் நைஜீரியன் ஒருவன், தன் மண்ணே சொர்க்கம் எனக் கூறுகின்ற மனநிலையைக் காட்டுகிறார். அந்த நைஜீரியன், கனடா ஒரு நாடா? என வெறுத்துப் பேசுகிறான். அதற்கு அவன் கூறும் காரணம் தனது நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமில்லை என்பது. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் அதிக குடும்பச் சுமையைத் தாங்கவேண்டியுள்ளது. அவற்றுக்காக இரவு பகல் பாராது மாடாக உழைக்கவேண்டியுள்ளது. எனவேதான் விரைவில் கலிபோர்னியா சென்றுவிடுவேன் என்கிறான்.

யன்னல் என்ற மற்றுமொரு சிறுகதையில் கறுப்பு மனிதனும் வெள்ளை மனிதனும் ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள். ஒருவரையொருவர் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் அவர்களது செல்லப் பிராணிகள் தங்கள் மகிழ்ச்சியை சிநேகித்தைத் தெரிவிக்கின்றன.

மனித மூலம் என்ற கதை ‘நான்’ என்ற பாத்திரம் தன்னைப்பற்றிக் கூறுகின்ற ஒரு விபரணமாக அமைந்துள்ளது. மனிதர்கள் நிறத்தாலும் குணத்தாலும் வேறுபட்டு நிற்கிறார்கள். அவன் நடந்து கொண்டேயிருக்கிறான். எதிரே வருபவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

இவ்வாறாக அடையாளம் தொடர்பான கதைகள் நான் யார் என்பதையும் நான் எங்கிருந்து வந்தேன் என்பதையும் வினாக்களாக எழுப்புகின்றன. அதேநேரம் நிறத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் வேறுபட்டு இருப்பவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனிதர்களை நிறத்தின் அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கிறார்கள். ஏளனப்படுத்துகிறார்கள். இவர்களும் மனிதர்கள்தான் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இவ்வாறு நூற்றாண்டுத் துயரமாகத் தொடர்கின்ற கதைகளை கிரிதரன் கூறுகிறார். புலம்பெயர் தமிழ் எழுத்துக்களில் இவ்வாறான கதைகளை ஆரம்பகாலங்களில் பார்த்திபன், கருணாகரமூர்த்தி ஆகியோரும் பதிவு செய்திருக்கின்றனர். கவிதைகளில் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளன. அடையாளம் இழத்தல் என்பதும் அடையாளத்தைத் தக்க வைப்பதற்கு புலம்பெயர்ந்த மக்கள் படும் பாடுகளும் புகலிடக்கதைகளில் வலிமையாகப் பதிவாகியுள்ளன.

தனித்து விடப்பட்டோர் மற்றும் அகதிகள்

தனித்து விடப்பட்டோர், அகதிகள் என்று கூறப்படுபவர்கள் ஒரு வகையில் அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்குள்ளாகியவர்களாகவே அமைகின்றனர். இந்த வகைப்பாடும் உலகப் பொதுவான போக்காகவுள்ளது. யமேய்க்கனுடன் சில கணங்கள், மான் ஹோல், சொந்தக்காரன், புலம்பெயர்தல், வீடற்றவன், கலாநிதியும் வீதி மனிதனும் முதலான சிறுகதைகளை இந்த வகைப்பாட்டுக்குள் அடக்கலாம்.

முழு யமேய்க்க சமூகத்தையும் சமூக விரோதக் கும்பலாகப் பார்ப்பது, அவர்களை இழிவுபடுத்துவது போன்றவற்றை மேற்குலகத்தினர் செய்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்குலகச் சூழலை தாங்கள் அசுத்தமாக்கிக் கொண்டும் காடுகளை அழித்துக் கொண்டும் மூன்றாம் உ லக நாட்டவர்கள் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது எவ்வகையில் நியாயமானது என யமேய்க்கனுடன் உரையாடும்போது வினாவெழுப்புகிறார்.

நடைபாதையில் வசிப்போர் மற்றும் வீடில்லாதவர்களைப் பற்றிய கதைகளாக மான்ஹோல், சொந்தக்காரன், புலம்பெயர்தல் ஆகிய மூன்று சிறுகதைகளையும் கூறலாம். ஆசிரியரின் சூழலியல் சார்ந்த நுண்மையான அவதானிப்பை இக்கதைகளில் வரும் பாத்திரங்களுக்கிடையிலான தொடர்பு நமக்கு உணர்த்துகிறது.

மான்ஹோலின் நடைபாதையில் இருந்து தன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவன் சிகரெட் பிடிப்பது, யாரிடமாவது வாங்கிச் சாப்பிடுவது, அதிகநேரம் தியானத்தில் இருப்பதுபோல அசையாமல் இருப்பது, நேரே தெரியும் பாராளுமன்றக் கட்டத்தைப் பார்த்து ‘அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன’ என ஒரு சித்தன் போல் பேசிக் கொண்டிருப்பது முதலானவற்றை மிக அநாயாசமாகக் காட்டுவார்.

இதேபோல் சொந்தக்காரன் சிறுகதையில் இருப்பிடமில்லாமல் பாதாளக் கட்டத்தில் தங்கும் அமெரிக்க பூர்வீக அகதி ஒருவனைப் பற்றி கதையில் கூறும்போது ‘நானோ அந்நிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்.’ என்று அகதிவாழ்விற்கு கதியாகிப்போன சுதேசிகளைக் குறிப்பிடுவார்.

புலம்பெயர்தல் என்ற சிறுகதையில் மனநிலை பாதிக்கப்பட்ட வீடற்ற வாசிகளில் ஒருவன் ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மூலையில் படுத்திருப்பான். அவனைக் கண்ட வெள்ளையன் ஒருவன் ‘பாம்’ இருக்கிறது என ஏளனமாகக் காவலாளியிடம் கூறுகின்றான். வீடற்றவன் என்று தலைப்பிட்ட மற்றொரு சிறுகதையில் வந்தேறு குடிகள், சிறுபான்மையினர் அனைவரும் இங்கு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காக வீடற்ற புதிரான மனிதன் ஒருவன் நகர மேயராகப் போட்டியிடுகிறேன் என்கிறான்.

கலாநிதியும் வீதி மனிதனும் என்ற கதையில் வீடற்ற வெள்ளையன் ஒருவன் மூன்றாம் உலக நாட்டவர்களைப் பார்த்து உங்களால் எங்களுக்கு வேலை இல்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டியவற்றையெல்லாம் நீங்கள் களவாடிவிட்டீர்கள் என்று வசைச்சொற்களை வீசுகிறான்.

புகலிடத்தில் வாழ்கின்ற வீடற்றவர்கள், தனித்து விடப்பட்டோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் முதலானவர்களின் வாழ்நிலையையும் அவர்களின் மனநிலையையும் இக்கதைத் தொகுதியில் காணமுடிவது ஒரு வகையில் தமிழ்அனுபவச் சூழலில் புதிய களங்களையும் புதிய வாழ்க்கை நெருக்கடிகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

பொற்கூண்டுக் கிளிகள் என்ற கதை முதுமையின் தனிமை பற்றிக் கூறுகிறது. முதிர்ந்த வயதில் ராஜரத்தினத்தார் தனித்து விடப்பட்டமை இக்கதையில் சொல்லப்படுகிறது.

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்ற சிறுகதை மிக நாசூக்காகச் சொல்லப்பட்டதாகும். கட்டடங்களில் தனித்து வாழும் மனிதர்கனின் ஆசைகள் நிராசையாகிப் போகின்றமை. தற்கொலை முயற்சிகள் முதலானவை பற்றி சிந்திப்பதற்கு இடமிருக்கிறது. முயல்களை இக்கதையில் உருவகமாகக் கொண்டு பார்த்தால் அவையுங்கூட மனித வாழ்வையே சொல்வதாக அமைகின்றது.

தமிழர் மனநிலை

புலம்பெயர்ந்த தமிழர் மனநிலையையும் பெண்களின் மாற்றங்களையும் மனோரஞ்சிதம், சீதாக்கா, கணவன், மனைவி, சாவித்திரி ஒரு சிறீலங்கன் ஆகிய கதைகள் ஊடாகக் காட்டுவார். இவை உளவியல் ரீதியிலும் அணுகப்படவேண்டிய கதைகளாக உ ள்ளன.

மனோரஞ்சிதம் என்ற சிறுகதையில் பெண்ணுக்கு தாலி ஒரு வேலி எனவும், நடை உடை பாவனையில் புதுமையை விரும்புவதுமாக தாயகத்தில் வாழ்ந்த இளம்பெண் ஒருத்தி, திருமணமாகிப் புகலிடம் வந்தபின்னர் முழுவதுமாக மாறி விடுகின்ற சந்தர்ப்பத்தைக் காட்டுவார். பொ. கருணாகரமூர்த்தியின் ‘மாற்றம்’ குறுநாவலில் இது போன்றதொரு பாத்திரத்தை அவதானிக்கலாம். பெண் திருமணமாகி வந்தபின்னர் கணவனுக்கு ஏற்றாற்போல மாற்றமுறுவதையும் குடும்ப நெருக்கடிகளால் தனது இலட்சியத்தை கைவிடும் அவலத்தையும் கிரிதரனின் இக்கதையும் சித்திரிக்கின்றது. இன்று பெண்சார்ந்த விடுதலையுணர்வை வெளிப்படுத்தும் படைப்புக்கள் அதிகம் வெளிவருவதையும் இத்தருணத்தில் நினைவுகொள்ளலாம்.

தமிழர் மனநிலையை சீதாக்கா, கணவன் ஆகிய சிறுகதைகள் காட்டுகின்றன. ஊரில் அறிமுகமான சீதாக்கா புலம்பெயர்ந்து வந்தபோது அவளுக்கு மற்றுமொரு தெரிந்தவ ஆண் உதவி செய்வதை தவறான பார்வையில் நோக்கி குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்தும் சக மனிதனின் இழிநிலையை கிரிதரன் காட்டுகிறார். நாம் புலம்பெயர்ந்தோம் புலன் பெயர்ந்தோமா? என்ற கேள்வியையும் கூடவே எழுப்பி சிந்திக்கத் தூண்டுகிறார்.

கணவன் என்ற சிறுகதை ஏஜென்சி மூலம் சிங்கப்பூர் ஊடாக அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஒழுக்கம் மீது கணவன் சந்தேகம் கொள்ளுதலும்; ஏனைய இரண்டு கதைகளாகிய மனைவி, சாவித்திரி ஒரு சிறீலங்கன் ஆகியவற்றில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் குடும்பமுரண்பாடுகள் அவர்களின் பிள்ளைகளை எவ்விதம் பாதிக்கின்றது என்பதையும் காட்டுகின்றன.

எனவே, தமிழர் மனநிலை அதிகமும் பெண்கள் தொடர்பான குடும்ப உறவு நிலையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பானவையாக அமைந்துள்ளன.

புகலிட வாழ்நிலை அனுபவங்கள் குறித்த கதையினையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். ஆசிரியரும் மாணவனும் என்ற கதையில் பொறியியலாளராகப் படித்த ஒருவன் புகலிடத்தில் துப்பரவுத் தொழிலாளியாகப் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படுவதை நினைத்து வருந்துகிறான். அதேநேரம் அவனுக்குக் கற்பித்த ஆசிரியர் தானும் வேலை தேடும் படலத்தில் ஈடுபடுகிறார். இருவரும் தத்தமது நிலையை மறைத்து உரையாடுகின்றனர். இவ்வாறான அவலமான வாழ்நிலை அனுபவங்களும் இத்தொகுப்பில் உள்ளன. அந்நியர்களாக இருந்தாலும் ஆபத்து வேளையில் உதவி செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை பொந்துப் பறவைகள் கதை கூறுகிறது. புலம்பெயர்ந்தோரின் நெருக்கடியாகன வாழ்வை கட்டடக்காடுகள் என்று காலம் செல்வம் உருவகித்ததுபோல் கிரிதரனும் அந்தக் கட்டடங்களில் வாழும் மனிதர்களைப் பொந்துப் பறவைகளாக உருவகித்துள்ளார்.

சூழலை வாழ்வியலுடன் ஒப்பிடுதல்

சூழலை வாழ்வியலுடன் ஒப்பிடும் சுண்டெலிகள், தப்பிப் பிழைத்தல், காங்ரீட் வனத்துக் குருவிகள், ஒரு மாநாட்டுப்பிரச்சினை ஆகிய நான்கு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

சுண்டெலிகளின் தொல்லையால் அதனை அழிப்பதற்காக அதன் ஒவ்வொரு அசைவையும் அறியக் காத்திருக்கிறார் ஒருவர். ஒருவேளை உணவுக்கான எலியின் தேடுதல், உயிர்வாழ்வதற்கு அது எடுக்கும் பிரயத்தனம் ஆகியன எலியின் மீது இரக்கத்தை வரவழைக்கிறது. இக்கதையை மனித வாழ்வுடன் ஒப்பிடலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அதனால்தான் செ. கணேசலிங்கம் இக்கதை பற்றிக் குறிப்பிடும்போது ‘சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர்வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தை கூறுகிறது’ என்று எழுதுகிறார்.

தப்பிப் பிழைத்தல் என்ற கதையில் உணவுக் கழிவுகளைக் கொட்டும் பெட்டியில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அது ஏன் என்ற வினா எழுகிறது. இங்கும் ஓர் அணிலை மனித வாழ்வுடன் ஒப்பிட்டு எந்தச் சூழலிலும் உயிரினம் தப்பிப் பிழைப்பதற்கு வழியொன்று இருக்கும் என்பதை கதாசிரியர் உணர்த்துகிறார்.

காங்ரீட் வனத்துக் குருவிகள் என்ற கதையில் அதிக பனி நாள்களில் ஏனைய குருவிகள் தமக்கு ஏற்ற இடத்திற்கு பறந்து போயிருக்க ஒரு மரத்தில் வாழும் சில குருவிகள் தங்கள் இடத்தை மாற்றாமல் பனியில் உறைந்து சிலையாகி விடுகின்றன. எதற்காக இந்தக் குருவிகள் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தன என தாயக வாழ்நிலையோடு ஆசிரியர் ஒப்பிட்டுப் பார்த்து வினா எழுப்புகிறார்.

ஒரு மாநாட்டுப் பிரச்சினை என்ற சிறுகதை டொராண்டோ வீதியொன்றில் ‘மூஸ்’ என்னும் மானினத்தை ஏற்றிச் சென்ற ட்ரக்டர் டிரெயில’ரிருந்து தப்பிய மிருகத்தின் கதை. இதை இலங்கைச் சிறைக்கூடத்தில் அடைபட்டுக் கிடக்கும் தமிழர் மனநிலையுடன் ஒப்பிடுகிறார். ‘ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை. இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனையோ? அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள். தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்’ என்ற கூற்று இலங்கைச் சிறையில் வாடுபவர்களையும் அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்து வாழக்கூடியவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது.

மேற்காட்டிய கதைகள் சூழலியல் அனுபவங்கள் குறித்தனவாக அமைந்துள்ளன. தொடர்புபட்ட உயிரினங்களை மையமாக வைத்து எழுதப்பட்டாலும் அக்கதைகளில் இருப்பது மனித வாழ்விலும் ஏற்படக்கூடிய நெருக்கடிகள்தான். இக்கதைகள் புதிய கதைக்களங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

நிறைவாக

கிரிதரனின் இக்கதைகள் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளன. அதனால் 90 களின் ஆரம்பகாலக் கதைகளும் இதற்குள் அடங்கியிருக்கின்றன. தாயக வாழ்வு சார்ந்த கதைகளையும் அதனுடன் இணைந்த கதைகளையும் அதிகமான படைப்பாளிகள் எழுதியிருக்கின்றனர். ஆனால் கிரிதரனின் இக்கதைத் தொகுப்பு அதிகமும் புலம்பெயர்ந்த மனிதன் ஒருவனின் புகலிட வாழ்வியல் அனுபவங்களின் திரட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக மூன்றாம் உலக நாட்டவர்கள் சுதேச நாட்டவரால் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள், ஒடுக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பது மிக அதிகமான கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சூழலியல் அனுபவங்களுடன் தனிமனித வாழ்வனுபவங்களை ஒப்பீடு செய்வதும் முக்கியமானது. ஆரம்பகாலக் கதைகள் சிலவற்றில் தன்னுணர்வு சார்ந்த வெளிப்பாடும் விபரணத் தன்மையும் தலைகாட்டுவதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்ட கதைகளில் அந்தக் குறைகள் களையப்பட்டுள்ளன. வ. ந. கிரிதரனின் ஒவ்வொரு கதைகளில் வருகின்ற கதைசொல்லியும் ஒரு பார்வையாளனாக, ஒரு நடைபயணியாக கனேடியத் தெருக்கள் முதல் ஒடுங்கலான பாதைகள் வரை வாசகரையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழரின் மனவுணர்வுகளை சூழலியல் அனுபவத்துடன் இணைத்துக் கதை கூறுகின்ற கிரிதரனின் கதைசொல்லும் நேர்த்தி வரவேற்கத்தக்கதாகும். கிரிதரனின் எழுத்துக்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் எழுத்துக்களுக்கு வளம் சேர்க்கக்கூடியவை என்பதற்கு இத்தொகுப்பும் சான்றாக அமைந்துள்ளது.

உசாத்துணை நூல்

1. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன், ஜீவநதி பதிப்பகம் (இலங்கை), 2021

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R