சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் ! மறைந்த ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் நினைவாக வழங்கப்படுகிறது !! - தகவல்: அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் . -
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன. அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து, பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூலாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புத் துறையில் ஒரே ஒரு நூலே போட்டிக்கு வந்தமையால், இனிவரும் ஆண்டுகளில் நடத்தவிருக்கும் போட்டியில் அதனை பரிசீலிப்பது என முடிவாகியிருக்கிறது.