2021இல் யாழ் ராஜா திரையரங்கு உரிமையாளர் எஸ்.தியாகராஜா மறைந்தபோது நான் முகநூலில் 'நாங்கள் அறிந்த 'சுப்பர் ஸ்டார்' - எஸ்.ரி.ஆர் . என்றொரு பதிவிட்டிருந்தேன். எம் பதின்ம வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஆளுமை எஸ்.ரி.ஆர். ஏனைய திரையரங்கு உரிமையாளர்களின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்திருக்காத எம் நினைவில் நிற்பவர் எஸ்.ரி.ஆர். எஸ்.ரி.ஆர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ராஜா திரையரங்கும், அதன் காவல்காரன் 'கட் அவுட்'டும்தாம்.
தற்போது எஸ்.ரி.ஆர் - நினைத்ததை முடித்தவர்' என்னும் தலைப்பில் அவரது வாழ்க்கையை , சாதனைகளை நினைவு கூரும் நூல் வெளியாகியுள்ளது. மேற்படி நூல் எனது மேற்படி கட்டுரையினையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி.
நூல் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அது பற்றிய என் கருத்துகளைப் பதிவு செய்வேன். நூல் சிறப்பான வடிவமைப்புடன் வெளியாகியிருப்பதைக் காண முடிகின்றது. இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நூல் அவரை நினைவு கூரும் முக்கியமானதோர் ஆவணம். நூலை வெளியிட்ட அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.
இவர் அரசியலில் பதவி நாட்டமில்லாதவரென்று நினைக்கின்றேன். இருந்திருந்தால் மிகவும் இலகுவாக பாராளுமன்ற உறுப்பினராக இவர் வந்திருக்க முடியும். முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக மிளிர்ந்திருக்க முடியும். அரசியலில் ஒளிர்வதற்கு இவரது வசீகர முகவாகும், ஆளுமையும் உதவியிருக்கும்.
நூலிலுள்ள எனது கட்டுரை!
அஞ்சலி: நாங்கள் அறிந்த 'சுப்பர் ஸ்டார்' - எஸ்.ரி.ஆர்!
எத்தனையோ திரையரங்குகளில் எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் எத்தனைபேருக்கு அத்திரையரங்க உரிமையாளர்களைத் தெரிந்திருக்கும்? ஆனால் இவரை இலங்கைத் தமிழ் மக்கள் பலரும் அறிந்திருந்தார்கள். அவர்தான் யாழ் ராஜா திரையரங்க உரிமையாளர் எஸ்..தியாகராஜா.
இவரைப்பற்றி நான் முதன் முதலில் அறிந்துகொண்டது யாழ் ராஜாவில் 'காவல்காரன்' திரைப்படக் 'கட் அவுட்'டைப்பார்த்தபோது. எம்ஜிஆரின் திரைப்படங்கள் இவருக்கு மிகவும் வசூலை வாரிக்குவித்தன. காவல்காரன் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. எம்ஜிஆரின் நூறாவது திரைப்படமான 'ஒளி விளக்கு' முதலாவது முறையாகத் திரையிட்டபோது 150 நாட்களைக் கடந்து ஓடியது. மீண்டும் திரையிட்டபோதும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
ராஜா திரையரங்கில் காவல்காரன் வெற்றி விழாப் புகைப்படங்கள், கட் அவுட் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அங்கு எந்தத் திரைப்படம் பார்க்கச் சென்றாலும் அவற்றைப் பார்க்காமலிருந்ததில்லை.
ராஜா திரையரங்கு இன்னுமொரு விடயத்துக்காகவும் எம் நினைவிலிருக்கும். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும். யாழ் ராஜா திரையரங்குக்கும் அருகிலிருந்த ஒழுங்கை , கே.கே.எஸ் வீதி வரை செல்லும் வீதி, அவ்வீதியில்தான் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் மல்லிகை காரியாலயம் அமைந்திருந்தது. அக்காரியாலயத்தைக் குறிப்பிடுகையில் ராஜா தியேட்டரையொட்டிச் செல்லும் ஒழுங்கையில் அமைந்திருந்தது என்பதைக் குறிப்பிட யாரும் மறந்ததில்லை.
நாங்கள் வவுனியாவிலிருந்தபோதுதான் அங்கு அவர் வசந்தி திரையரங்கைக் கட்டினார். வவுனியா மகாவித்தியாலயத்துக்கருகில் அமைந்திருந்தது.
போர்ச்சூழலில் யாழ்ப்பாணத்திரையரங்குகள் எல்லாம் மறைந்து நினைவுகளில் நிற்பவையாக மாறி விட்டிருக்கையில் எஸ்டிஆரின் திரையரங்குகள் மட்டும் பீனிக்ஸ் பறவைகளாக மீண்டும் உயிர்பெற்றுச் சிறகடிக்கின்றன.
எம் பால்ய பருவத்தில் காவல்காரன் கட்அவுட்டில் மயங்கிக் கிடந்த காலகட்டத்தில் என் பெற்றோர் இவரைப்பற்றிக் கூறியது இன்னும் நினைவிலுள்ளது. அடிமட்டத்திலிருந்து தன் உழைப்பால் திரையரங்க உரிமையாளராக உயர்ந்தவர் என்று அவரைப்பற்றிக் கூறியது இன்னும் நினைவிலுள்ளது.
என் பதின்ம வயதுகளில் யாழ் இந்துவில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கஸ்தூரியார் வீதியில் யாழ் இந்துக் கல்லூரிக்கண்மையில் , விடிகேயின் டியூசன் நிலையத்துக்கு முன்பாக, வீதியின் மேற்குப் புறத்தில் பெரியதொரு மாடி வீட்டைக் கட்டியிருந்தார். அவ்வீட்டுக்கருகில் யாழ் இந்து மாணவர் ஒருவரின் குடும்பத்தினரும் இன்னுமொரு மாடி வீட்டைக் கட்டியிருந்தனர். அவ்வீடுகள் அக்காலகட்டத்தில் நகரின் முக்கியமான 'லாண்ட் மார்க்'குகளாக விளங்கின.
இவ்வளவும் நினைவுகளில் முகநூற் பதிவுகளில் எஸ்டிஆரின் மறைவுச் செய்தியினை அறிந்தபோது வந்து போயின.
எஸ்டிஆர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் குறியீடுகளில் ஒருவர். வாழ்க்கைச் சவால்களையெல்லாம் எதிர்நோக்கி வெற்றியடைந்த ஆளுமையாளர்களிலொருவர் எஸ்.ரி.ஆர். ஒரு காலத்தில் இவரது திரையரங்குகள் எம்மைக் களிப்புற வைத்தன. எம் இளமைக்கால நினைவுகளில் , அனுபவங்களில் அவை அழியாத கோலங்கள்.
ஆழ்ந்த இரங்கல்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.