அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் கோமகன் நினைவுகள் ! குரலற்றவரின் குரலை ஒலிக்கச்செய்தவரின் குரல் ஓய்ந்தது ! ! - முருகபூபதி -
எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.
எழுத்தாளர்கள் அனைவருமே ஒரே நேர்கோட்டில் பயணிக்கமுடியாது. மாற்றுக்கருத்துக்களுடன் போராடும் இயல்புள்ளவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களின் இயல்புகளை நன்கு தெரிந்துகொண்டே தொடர்பாடலை மேற்கொண்டு நேர்காணல் தொகுப்பினை வெளியிடுவதே பெரிய சாதனைதான். அச்சாதனையை குறிப்பிட்ட குரலற்றவரின் குரல் தொகுப்பின் மூலம் நிகழ்த்தியவர் கோமகன்.
எதுவரை , வல்லினம் ,காலம் ,எக்ஸெல், முகடு, ஜீவநதி, நடு, மலைகள், ஒருபேப்பர், அம்ருதா, தினகரன், தினக்குரல் முதலானஇதழ்கள்,இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். நெருடிய நெருஞ்சி , வாடா மல்லிகை ஆகிய தலைப்புகளில் பயண இலக்கியங்களும் வரவாக்கியிருப்பவர். சர்வதேச இலக்கிய ஆளுமைகளின் ஆக்கங்களை தமிழுக்கு மொழி பெயர்த்தல், ஈழத்து, புலம்பெயர், தமிழக படைப்பாளிகளின் ஆக்கங்களை காய்த்தல் உவத்தலுக்கு இடமின்றி வாசகப் பரப்புக்கு கொண்டு செல்லல், ஒய்வு நிலையில் இருக்கும் ஈழத்து இலக்கிய ஆளுமைகளை வெளிக்கொணரல் முதலான நோக்கங்களுடன், பிரான்ஸிலிருந்து 'நடு' என்னும் இணைய இதழையும் வெளியிட்டு வந்தவர். சினிமா சிறப்பிதழ் ,கிழக்கிலங்கை சிறப்பிதழ் ,மலையக சிறப்பிதழ் முதலானவற்றையும் 'நடு' இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது.