உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.
1970 – 1977 காலப்பகுதியில் இவர் பங்கேற்ற மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், திரைப்படங்களில் இவரைப் பார்த்திருக்கின்றேன். நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் நெறியாள்கையில் அரங்கேறிய எல்லார – காமினி நாட்டிய நாடகத்தில் கெமுனுவின் தாய் விகாரமாதேவியாகவும், கலைஞர் தாசீஸியஸின் பிச்சை வேண்டாம் நாடத்திலும், வாடைக்காற்று, கோமாளிகள் திரைப்படங்களில் முக்கிய நாயகியாகவும் பார்த்தேன். எனினும், நாம் மீண்டும் சந்தித்து எமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறை நட்பை வளர்த்துக்கொண்டது புகலிடத்தில்தான்.
இவரது கணவர் பாலேந்திராவை 1974 இல் சுஹேர் ஹமீட்டின் ஏணிப்படிகள் நாடகத்தில் பிரதான பாத்திரத்தில்தான் முதல் முதலில் பார்த்தேன். இவர்கள் இருவரையும் இல்லற வாழ்க்கையில் இணைத்தது, இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகம்தான். இந்த நாடகத்திற்கென ஓர் அபூர்வ செய்தி இருப்பதாக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அடிக்கடி சொல்வார். மழை நாடகத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் பின்னர் மணம் முடித்து இல்லற வாழ்வினை தொடங்கிவிடுவார்களாம். ஆனந்தராணி – பாலேந்திராவுக்கும் இதுதான் நடந்தது.
மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 2008 இல் இங்கிலாந்திலும், அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவுஸ்திரேலியாவிலும் இவர்களைச் சந்தித்தேன். ஆனந்தராணி, நாடகத் துறையில் 46 வருடங்களாக இயங்கி வரும் கலைஞர். நாடக நடிகையாக மட்டுமன்றி சினிமா, வானொலி நடிகையாக, பரதநாட்டிய ஆசிரியையாக, தொலைக்காட்சி, வானொலி, மேடை அறிவிப்பாளராக தடம் பதித்தவர்.
பூர்வீகம் வல்வெட்டித்துறை. இளமைக் காலம் கொழும்பில். வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி பழைய மாணவி. பிச்சை வேண்டாம் நாடகத்தில் பாலேந்திராவுடன் இணைந்து மேடை நாடகத்துறைக்கு அறிமுகமானவர். அப்போது இவருக்கு வயது 19. க. பாலேந்திரா நெறிப்படுத்திய மழை நாடகத்திலிருந்து இற்றைவரையில் அவரின் நெறியாள்கையில் சுமார் 40 நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றவர்.
பல நாடகங்கள் பெண்களை மையமாகக் கொண்டவை. நடிப்பதற்கு சிக்கலான சவாலான நாடகங்களில் தனது நடிப்பாற்றலால் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியவர். அவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளதுடன் பல விமர்சகர்களின் பாராட்டுதல்களையும் பெற்றது. குறிப்பிடத்தகுந்தவை: மரணத்துள் வாழ்வு, காத்திருப்பு, பிரத்தியேகக் காட்சி, ஆற்றைக் கடத்தல், திக்கற்ற ஓலம், சமூக விரோதி, கண்ணாடி வார்ப்புகள், மழை, நட்சத்திரவாசி , முகமில்லாத மனிதர்கள், துக்ளக், யுகதர்மம், ஒரு பாலை வீடு, கோடை, பிச்சை வேண்டாம்.
பாலேந்திராவினால் 1978 இல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் லண்டனில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர். இக் கழகத்தின் சுமார் 600 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் பங்கேற்றவர். இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, , ஹொலண்ட் முதலான பல நாடுகளில் இந் நாடகங்கள் மேடையேறியுள்ளன. லண்டனில் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் சிறுவர்களுக்கான தமிழ் நாடகப் பள்ளியை கணவர் பாலேந்திராவுடன் இணைந்து நடத்தி வருகிறார். சிறுவர் - இளையோர் நாடகங்களுக்கு உதவி நெறியாளராகவும் பணியாற்றும் இவர், நாடகங்களில் வரும் நடன அசைவுகளையும் வடிவமைத்து நாடகப் பாடல்களையும் பாடி வருகிறார்.
தாயகம் வரும்வேளைகளில் கணவருடன் இணைந்து பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிறுவர் இல்லங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தமிழ் நாடகமான, பாலேந்திரா நெறிப்படுத்தி, பி.விக்னேஸ்வரன் தயாரித்த கண்ணாடி வார்ப்புகள் (1982 ) நாடகத்தில் நடித்தவர். இந் நாடகம் பாலேந்திராவின் நெறியாள்கையில் மேடை நாடகமாக 1978 ஆம் ஆண்டு முதலில் மேடையேறியது. 1974 இல் இலங்கை வானொலியில் நாடக உரைச்சித்திரக் கலைஞராக இணைந்து 1981 வரையில் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்தவர்.
ஐரோப்பாவின் முதலாவது தமிழ் வானொலியான லண்டனைத் தளமாகக் கொண்ட சன்றைஸ் வானொலியில் 15 வருட காலம் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். லண்டன் தீபம் தொலைக்காட்சியில் 14 வருடங்கள் செய்தி வாசிப்பாளர் . தற்போது லண்டன் எஸ்.ஆர்.எஸ் தமிழ் வானொலியில் கதையாடல் நிகழ்ச்சியில் ஈழத்து எழுத்தாளர்களை அறிமுகம் செய்து, அவர்களின் சிறுகதைகளை வாசித்து வருவதுடன், ஈழத்து எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் வானொலிக்கு ஒலிவடிவில் வழங்கி வருகிறார்.
மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதிலும் தனித்துவம் மிக்கவர். இதுவரையில் சுமார் 400 கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவை பெரும்பாலும் பல தர்ம ஸ்தாபனங்களுக்கான நிதியுதவி நிகழ்ச்சிகளாகும். 200 அரங்கேற்ற நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
தாயகத்தில் கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசர், ஸ்ரீகாந்தம் சகோதரிகளிடம் பரதநாட்டியம் பயின்று 1973 இல் நவரங்கஹல அரங்கில் தனது சகோதரி பாலராணியுடன் அரங்கேற்றம் நிகழ்த்தியதோடு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார்.
புலம்பெயர்ந்த பின்பு, லண்டனில் பிறென்ற் தமிழ்ப் பாடசாலையில், 14 வருடங்கள் நடன ஆசிரியராக பணியாற்றியவர். Srilankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ் அறிவிப்புக் குரலுக்கு சொந்தக்காரிதான் ஆனந்தராணி. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்தராணி, லண்டனில் 32 வருடங்களாக அரசாங்கத் திணைக்களத்தில் நிர்வாக உத்தியோகத்தராகப் பணி புரிந்து இளைப்பாறியுள்ளார். நூலக நிறுவனத்தின் ஆவணகம் ஒலிநூல் பிரிவிற்காக இதுவரை உயர்தர மாணவர்களுக்கான சுமார் 150 கட்டுரைகள், ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் 225 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்து ஒலிப்பதிவு செய்து வழங்கியுள்ளார். ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி இதழில் தனது நாடக அனுபவங்களை எழுதி வருகிறார்.
ஆனந்தராணியின் கலைச்சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் கலாவிநோதர் பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையினரால் கலையரசி பட்டமும் மற்றும் பிறென்ற் தமிழ்ச் சங்க விருது, பூபாளராகங்கள் விருது, தமிழினியின் விருது, லண்டன் யூனிற்றி அமைப்பின் கலைப்புரவலர் விருது போன்றவை வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டிருப்பவர். இனி, இந்தப்பதிவின் தொடக்கத்தை மீண்டும் படித்துப்பாருங்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.