இன்று ( 12 ஆம் திகதி ) முற்பகல் நடைப்பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர், இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து, எமது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது. அதனைப்படித்ததும் அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல் “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது:
ஊடகவியலாளர் பாரதி ராஜநாயகத்தின் முகநூல் பதிவு 'நீண்ட காலமாக காலனுடன் போராடிக்கொண்டிருந்தவா். அவரது மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான் இருப்பாா். மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக ராமும் நானும் சென்றிருந்தோம். அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது "இருங்கோ இருங்கோ கதைப்பம்" என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு விரைவாக விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது. தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும் ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத் தொடங்கிவிடுவாா் என்று அவரது மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும் மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.'
நண்பர் இராஜநாயகம் பாரதியின் மேற்கண்ட பதிவுடன் எனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் மாணிக்கவாசகம், வவுனியா பிரதேச நிருபராக இருந்தார். அவரது கையெழுத்துக்களை, முதலில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோதும், அதன்பின்னர் 1984 தொடக்கம் 1987 தொடக்கம் வரையிலும் ஆசிரிய பீடத்திலிருந்தும் பார்த்து வந்திருக்கின்றேன்.
நான் ஆசிரிய பீடத்திலிருந்த சுமார் மூன்று ஆண்டுகள் எனது கடமை நாட்களில் தினம் தினம் தொலைபேசியில் பேசும் ஒருவராகவும் நண்பர் மாணிக்கவாசகம் திகழ்ந்தார்.
அக்காலப்பகுதி வட, கிழக்கு பிரதேசங்கள் போர் மேகங்களினால் சூழப்பட்டிருந்தது. அத்துடன் ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் முப்படைகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் அடிக்கடி மோதல்கள் நடந்தன. ஆயுதப்படையினரின் தேடுதல் வேட்டை, சுற்றிவளைப்பு முதலான சொற்களே எங்கள் வீரகேசரியின் பெரும்பாலான செய்திகளின் தலைப்பாக அமைந்திருக்கும். அவற்றை எழுதியவர்களில் ஒருவராக பி. மாணிக்கவாசகம் இருப்பார்.
பிரசேத நிருபர்களுக்கு மாதச் சம்பளம் என்றில்லை. அவர்கள் எழுதும் செய்திகள் வீரகேசரியில் வெளியானால் மாத்திரமே அதற்குரிய வேதனம் கிடைக்கும். அவர்களின் செய்திகள் அச்சில் வெளிவரும் பட்சத்தில், ஆசிரிய பீடத்தின் ஒரு மூலையில், பிரதம ஆசிரியர் – செய்தி ஆசிரியர் அமர்ந்திருக்கும் பகுதியில் செல்வி நிர்மலா மேனன் என்ற சகோதரி காலை, முதல் மாலை வரையில் அடிமட்டம் (Foot Rule ) வைத்து செய்திகளை அளந்து, அதற்குரிய வேதனத்தை ஒரு பேரேட்டில் குறித்துக்கொண்டிருப்பார்.
ஒரு பிரதேச நிருபரிடமிருந்து வரும் செய்திகள் எத்தனை அடி நீளத்தில் எத்தனை அங்குலத்தில் அச்சில் வருகின்றதோ, அதற்கேற்பவே வேதனம் கிடைக்கும். இந்தக்கதைகளை இன்றைய இளம் தலைமுறை நிருபர்கள், ஊடகவியலாளர்கள் அறிவார்களா..? மிகக்குறைந்த ஊதியத்தையே வேதனமாகப் பெற்று குடும்பத்தின் பாரத்தை சுமந்தவர்களில் ஒருவர்தான் மாணிக்கவாசகம். வீரகேசரி ஆசிரிய பீடம் காலை எட்டு மணிக்கே பரபரப்பாகிவிடும். முதலில் மித்திரன் பத்திரிகைக்குரிய செய்திகளை வவுனியாவிலிருந்து மாணிக்கவாசகமும் இதர வடக்கு - கிழக்கு பிரதேச நிருபர்களும் தொலைபேசி ஊடாகத்தரத் தொடங்கிவிடுவார்கள்.
“ஒரு புறம் வேடன், ஒரு புறம் நாகம் - இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் “ என்பதுபோன்று எமது வடக்கு – கிழக்கு பிரதேச நிருபர்கள் செய்தி வேட்டையில் ஈடுபட்ட காலம் அது. செய்திகள் தொடர்பாக மாணிக்கவாசகம் பல தடவைகள் வவுனியா இராணுவ முகாம்களுக்கும் அந்தப்பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கும் விசாரணைளுக்கு சென்று வந்திருப்பவர். மக்களுக்கு குறிப்பாக வாசகர்களுக்கு உண்மைச் செய்திகளை தரவேண்டும் என்பதற்காக ஓர்மத்துடன் இயங்கிய ஊடகவியலாளர்களில் ஒருவர்தான் மாணிக்கவாசகம்.
விடுதலை இயக்கங்கள் கண்ணிவெடிகளை புதைத்துவைத்துவிட்டுச்சென்றால், அதில் சிக்கும் இராணுவத்தின் வாகனங்கள் சிதறிவிடும்போது, அதில் கொல்லப்பட்ட இராணுவத்தினருக்காக பழி தீர்க்கும் படலம் உடனடியாகவே தொடங்கிவிடும். அந்தப் படலத்தில் கொல்லப்படுபவர்கள் வீதியில் சென்ற அப்பாவிப்பொதுமக்களும், அப்பிரதேசத்தில் வீடுகளில் முடங்கியிருந்தவர்களும்தான். அவ்வாறு இறந்தவர்களை அரச ஊடகம் ( லங்கா புவத் ) பயங்கர வாதிகள் எனச்சொன்னபோது, “ இல்லை, இல்லை அவர்கள் அப்பாவிகள் “ என்று உறுதிப்படுத்தி, பெயர் – தொழில் – குடும்ப பின்னணி பற்றிய பூரண விபரத்துடன் செய்திகளை தந்து ஊடக தர்மத்தை நிலைநாட்டியவர்தான் மாணிக்கவாசகம். அவர் பயணித்த பாதை நெருக்கடியானது. சுருக்கமாகச்சொன்னால் நெருப்பாற்றை கடந்து வந்தவர்.
இலங்கையில் கொல்லப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மூவினங்களிலும் இருக்கிறார்கள். பலர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்கள். மாணிக்கவாசகரும் இந்த உலகின் எங்காவது ஒரு மூலைக்கு புலம்பெயர்ந்து சென்றிருக்கமுடியும். ஆனால், அவர் இறுதிவரையில் வவுனியாவிலேயே குடும்பத்துடன் இருந்தார். வீரகேசரிக்கு மாத்திரம் அல்ல, ரொய்ட்டர் சர்வதேச செய்தி ஊடகத்திற்கும் லண்டன் பிபிசி, மற்றும் சில இணைய இதழ்களுக்கும் செய்திகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருந்தவர். மாணிக்கவாசகம் அவர்களின் எழுத்தாற்றல் அவரை நூலாசிரியராகவும் மற்றியது. அவர் எழுதிய கால அதிர்வுகள் என்ற நூல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
போர்க்காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றவர் மாணிக்கவாசகம் என்பதற்கு பல சம்பவங்களை ஆதாரமாக அடுக்கிக்கொண்டே போகலாம். வவுனியா பிரசேதத்தில் முன்னர் தேடுதல் வேட்டைகளில் கைதாகும் அப்பாவிகளின் பெற்றோர்கள், தமது பிள்ளைகள் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு முதலில் மாணிக்கவாசகத்தின் உதவியைத்தான் நாடியிருக்கிறார்கள்.
நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்ட நான்கு பெண்குழந்தைகளின் தந்தையாரான ஒரு லொறிச்சாரதியின் உடலை கண்டுபிடிப்பதற்காகவும் மேலதிக செய்திகளை அறிவதற்காகவும் மாணிக்கவாசகத்தைதான் நான் தொடர்புகொண்டேன். குறிப்பிட்ட சாரதி எனக்கு உறவினராகவும் இருந்தமையால், மாணிக்கவாசகம் அது சம்பந்தமாக கூடுதல் அக்கறை காண்பித்தார்.
இறுதி யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தபோது சரணடைந்தவர்களில் ஒருவரான கவிஞர் புதுவை இரத்தினதுரை பற்றியும், அவரது குடும்பத்தினர் குறித்தும் செய்திகளை அறிவதற்கு மாணிக்கவாசகம் அவர்களையே தொடர்புகொண்டேன்.
இவ்வாறு சமூகத்திற்காக இயங்கிய நண்பர் மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை தருகிறது. வாழ்நாள் முழுவதும் எழுத்துப்போராளியாக வாழ்ந்திருக்கும் அன்னாருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன். இம்மாதம் 01 ஆம் திகதிதான் அவரது 76 ஆவது பிறந்த தினமும் வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வாழ்நாள் செய்தியாளன், இன்று செய்தியாகிப்போனார் !
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.