அஞ்சலி: ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரன் தெணியான் விடைபெற்றார்! வடபுலத்தின் அடிநிலை மக்களின் விடுதலைக்காகவும் பொற்சிறையில் வாடும் புனிதர்களுக்காகவும் குரல்கொடுத்தவர்! - முருகபூபதி -
- எழுத்தாளர் தெணியான் மறைந்து விட்டார். வர்க்க/வர்ண விடுதலைக்காக, சமூக அவலங்களுக்கெதிராக ஒலித்த போர்க்குரல் ஓய்ந்துவிட்டது. அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதியின் அஞ்சலிக் கட்டுரை. தெணியான் அவர்களின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அனைவருடனும் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. - பதிவுகள்.காம் -
கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை நேற்று 22 -05- 2022 ஆம் திகதி தமது 80 வயதில் வடமராட்சி கரவெட்டி கரணவாய் இல்லத்தில் மறைந்தார்.
06-01-1942 ஆம் திகதி வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது. தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் அவர் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.