1.1 அறிமுகம்
மனித வாழ்வு முழுவதும் ஏற்றமும் இறக்கமும் விரவிக் கிடக்கின்றன. அவ்வாழ்வில் ஏற்படும் சோதனைகளால் மனிதன் துவண்டு போகின்றான். செய்வதறியாது சோர்ந்து போகின்றான். அச்சோர்வை நீக்க ஆடலும் பாடலும் கேளிக்கையும் கூத்தும் தோற்றம் பெற்றன. “ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது” என்ற அழகான பாடல் வரிகள்கூட இவற்றையே மெய்ப்பிக்கின்றன. கிராமப்புற மக்கள் தமது ஓய்வு நேரத்தைக் கலைவாழ்வில் செலவழித்தனர். அவ்வேளைகளில் தமக்குத் தெரிந்த ஆற்றல்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்வாறுதான் கலைச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றன.
நாடகக் கலையும் இன்பமூட்டக்கூடிய ஒரு கலைதான். மக்களின் வாழ்க்கை முறையிலும் வழிபாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் எவ்வாறு மண்ணின் வேர் பிணைந்திருக்கிறதோ அவ்வாறே நாடகக் கலையாலும் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தலைமுறை தலைமுறையாகக் கடத்த முடிந்திருக்கிறது.
கடவுள் வழிபாட்டில், காதலில், பிரிவில், வெற்றியில், தோல்வியில், மொழியில், இலக்கியத்தில் என இன்னோரன்ன அம்சங்களுடன் இந்தப்பண்பு இணைந்திருக்கின்றது. ஒரு சமூகத்தின் பண்பாட்டை அறிய வேண்டுமாயின் அவர்தம் கலைகளைச் சீர்தூக்கிப் பார்த்தாலே கண்டுகொள்ளலாம் என்று கூறுவர். ஆதிகால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பித்த இந்தப் பண்பு வரலாறு முழுவதும் நீண்டிருக்கிறது.
நாடகக் கலையானது பாராம்பரியமும் பழமையும் மிக்கதொரு கலையாக இருக்கிறது. அது கூத்துக் கலையாக ஆரம்பித்து நாடகமாகி அரங்கியற் கலையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றது. மக்களின் சிந்தனையைத் தூண்டவும், அவர்களை ஒரே கொள்கை நோக்கித் திரட்டவும் இதனால் முடிந்திருக்கிறது. இன்று ஒருவருக்குத் தொழில் வாய்ப்பைத் தேடிக் கொடுக்கின்ற கற்கைத் துறையாகவும் உயர்ந்திருக்கிறது. இவ்வாறான கலைத்துறையில் தன்னை அர்ப்பணித்த வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளையின் நாடகம் சார்ந்த பணிகளை மதிப்பிடுவதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
1.2 ஏழுமலைப்பிள்ளையும் இளமைக்காலமும்
வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை யாழ்ப்பாணம் மயிலிட்டியில் 1953 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 05ஆந் திகதி பிறந்தவர். பெற்றோர் வல்லிபுரம் சின்னம்மா. குடும்பத்தில் நான்காவது பிள்ளை. தற்போது மலையாளபுரம் கிளிநொச்சியில் வாழ்ந்து வருகிறார்.
தந்தை சின்னார் வல்லிபுரம் சங்கீதத்தையும் நாடகத்தையும் முறையாகப் பயின்ற ஒரு கலைஞர். அவர் 1925ஆம் ஆண்டு தென்னிந்திய நாடகக் கலைஞரான வேல் நாயக்கர் அவர்களைக் குருவாகக் கொண்டு சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, வள்ளி திருமணம், பக்த நந்தனார், நல்ல தங்காள், குலேபகாவலி, பூதத்தம்பி, கோவலன் கண்ணகி முதலான நாடகங்களைப் பயின்றவர். நடிப்புக்குப் பாராட்டுப் பெற்றதோடு 1925 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டுவரை இலங்கையின் பல பாகங்களிலும் நாடகங்களை மேடையேற்றி நடித்துப் பாராட்டுப் பெற்றவர்.
ஏழுமலைப்பிள்ளையின் சகோதரி இரத்தினம், இதிகாச புராண படலங்கள் பாடுவதில் வல்லவர். சகோதரன் குணலிங்கம் சிறந்த நாடக நடிகராகத் திகழ்ந்திருக்கின்றார். இவ்வாறான கலைக்குடும்பத்தின் பின்னணியிலிருந்து வந்தவரே வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை.
தனது ஆரம்பக் கல்வியை யாழ் மயிலிட்டி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் பின்னர் யாழ் காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் ஆங்கில மகா வித்தியாலயத்திலும் பயின்றார். பாடசாலை ஆண்டு விழாக்களில் மேடையேற்றப்பட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மன், சாம்ராட் அசோகன், ஒதெல்லோ, வெனிஸ் நகர வணிகன், மார்க் அன்ரனி ஆகியவற்றில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றார்.
“தனது 15 ஆவது வயதில் நாடகப் பிரதிகளை எழுத ஆரம்பித்த இவர் சூழ்ச்சி, மகாசேனன், சிவன், யேசுநாதர், காசியப்பன், தாழ்ந்த தமிழகம், இராவணன் ஆகிய நாடகங்களை எழுதி, நடித்துப் பாடசாலை ஆண்டு விழாக்களில் மேடையேற்றினார். ‘யேசுநாதர்’ நாடகம் மாகாண நாடகப் போட்டியில் சிறந்த நாடகமாகத் தெரிவானதோடு சிறந்த நடிகருக்கான பரிசும் இவருக்குக் கிடைத்தது. இதேபோல் பாடசாலைகளுக்கிடையேயான நாடகப் போட்டியில் இவரது ‘காசியப்பன்’ நாடகம் முதற்பரிசைப் பெற்றதும் சிறந்த நடிகருக்கான பரிசு இவருக்குக் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.” (1)
ஏழுமலைப்பிள்ளை தனது 15 ஆவது வயதில் (1968) இலங்கையில் முதற்திரைப்படத்தை இயக்கியவரும் இலங்கைச் சினிமாவின் தந்தையெனவும் அழைக்கப்படும்’ஹென்றி சந்திரவன்ச’ வினால் சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1969 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் தமது 25 ஆவது ஆண்டுவிழாவையொட்டி நடாத்திய பேச்சுப் போட்டியில் முதற்பரிசான தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
பாடசாலைக் காலத்தில் நடித்த ‘வெனிஸ் நகர வணிகன்’ என்ற நாடகம் வட்டார நாடகப் போட்டியில் முதற்பரிசு பெற்றதுடன் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. பாடசாலை நாடகங்களுக்கிடையிலான போட்டியில் ‘காசியப்பன் நாடகம்’ முதற்பரிசையும் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது.
1.3 கலைச்செயற்பாடு
1968 இல் சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் 1969 இல் பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்றதும் 1972 இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடித்ததும் தனக்குக் கிடைத்த பெருமையான பேறுகள் என ஏழுமலைப்பிள்ளை தன்னைப் பற்றிய சுயகுறிப்பில் (‘என் கதை’, மகுடபக்கம்) எழுதியுள்ளார். 1976 இல் திருநெல்வேலி நாடக அரங்கக் கல்லூரியில் நவீன நாடகங்களுக்கான பயிற்சி பெற்றார். பின்னர் 1991 இல் வெளிநாட்டுக் கலைக்குழுவிடம் குரல் பயிற்சியும் அரங்குப் பயிற்சியும் பெற்றார். பிறமொழித் திரைப்படங்களுக்குத் தமிழில் குரல் வழங்கும் பயிற்சியும் பெற்றார்.
பல்துறைக் கலைஞர் நா. கருணானந்தசிவம் நெறியாள்கை செய்த ‘தண்ணீரும் சுடும்’ என்ற சமூக நாடகத்தில் ‘விடுதலை வீரன் தவம்’ என்ற பாத்திரமேற்று நடித்தார். அதன்பின்னர் காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றத்தினரின் ‘பாஞ்சாலி சபதத்தில்’ துச்சாதனனாகவும், மு. தேவராசாவின் ‘சாய்ந்த சாணக்கியன்’, ‘சாணக்கிய சபதம்’ ஆகியவற்றில் நந்த மன்னன், போரஸ் மன்னன் பாத்திரங்களிலும் நடித்தார். பொன் கணேசமூர்த்தியின் ‘நீலக்கல்’ என்ற நாடகத்தில் சுந்தர் சிங் என்ற தளபதியாக வேடமேற்று நடித்தார். மாவிட்டபுரம் முத்தமிழ்க் கலாமன்றத்தின் ‘ஏனிந்த அவலம்’ நாடகத்தில் கர்ணன் பாத்திரமேற்றும் ‘வன்தொண்டன்’ நாடகத்தில் முனிவர் பாத்திரமேற்றும் நடித்தார்.
ஏழாலை முத்தமிழ்க் கலாமன்றம் இயக்கிய ‘சூழ்ச்சியின் முடிவு’ ‘கடமை’, ‘ஆட்டக்காரி’ முதலான நாடகங்களிலும் நடித்தார். கட்டுவன் பாலர் ஞானோதய நாடக மன்றத்தின் ‘சங்கிலியன்’ நாடகத்தில் சங்கிலியன் வேடமேற்று நடித்தார். ‘தெல்லியூர் நாடக மன்றம்’, ‘ஏழாலை பாரதி நாடக மன்றம்’ ஆகியவற்றிலும் இணைந்து நடித்துள்ளார்.
1977 இல் மயிலிட்டியில் இலங்கேஸ்வரன் நாடக மன்றத்தை உருவாக்கி அதில் யூலியஸ் சீஸர், சதியால் சரிந்த சாம்ராட்சியம், இராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், சாம்ராட் அசோகன், சோக்கிரட்டீஸ், வீர சிவாஜி, விடுதலைக்கோர் கடுங்கோன், வீரத்திலகம், சூழ்ச்சி, தாஜ்மஹால், ஒதெல்லோ, மக்பெத், ரோமியோ யூலியற், வெனிஸ் நகர வணிகன், துரோகத்தின் முடிவு, இரத்தவெறி முதலான நாடகங்களை போட்டிகளில் மேடையேற்றி சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நாடகத்திற்கான விருது, சிறந்த ஒப்பனைக்கான விருது ஆகியவற்றைப் பெற்றார்.
1978 முதல் 1984 வரையில் பலாலி ‘உதயதாரகை சனசமூக நிலையம்’ மற்றும் ‘உதய கலைவாணி சனசமூக நிலையம்’ ஆகியன நடாத்திய நாடகப் போட்டிகளில் ஏழு வருடம் தொடர்ச்சியாக முதல் நாடகத்திற்கான பரிசு பெற்றுள்ளார்.
1981 இல் மட்டக்களப்பு காரைதீவு கலைக்குழுவுடன் இணைந்து ‘களம் கண்ட கவிஞன்’, ‘கலையும் கண்ணீரும்’ ஆகிய நாடகங்களில் நடித்தார். அவ்வேளையில் ஜெமினிகணேசன் உள்ளிட்ட தென்னிந்தியக் கலைஞர்களின் பாராட்டுப் பெற்றதாகவும் மகுடபங்கம் ‘என்கதை’ யில் எழுதியுள்ளார்.
பொன்.கணேசமூர்த்தியின் வானொலி நாடகங்களான இலங்கை மண், பொன்பரப்பித் தீவு ஆகியவற்றுக்கு குரல் வழங்கியுள்ளார். 1974 இல் இலங்கை வானொலியின் தமிழ் நாடக சேவை ஆரம்பிக்கப்பட்டபோது கலைஞர் நா. கருணானந்தசிவம் எழுதிய ‘மானம்’ என்ற வானொலி நாடகத்தில் சோழன் செங்கணான் பாத்திரத்திற்குக் குரல் வழங்கியுள்ளார். மேலும் ‘உரைகல்’, ‘ஆழிக்குமரன்’, ‘மீண்டும் கண்பார்வை வேண்டும்’, ‘என் ஊரும் அகதியாம்’, ‘வணங்காமண்’, ‘உதிரம்’, ‘நடுகல் பேசும்’, ‘கடல் போர்’, ‘வீரகாவியம்’, ‘வீரத்திலகம்’, ஆகிய வானொலி நாடகங்களுக்கும் குரல் வழங்கியுள்ளார். பல நாடகப்பிரதியாக்கப் போட்டிகளில் பரிசில்கள் பெற்றுள்ளார்.
1973 ஆம் ஆண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்ட எச். சி. பிலிம்சின் ஹென்றி சந்திரவன்ச இயக்கிய ‘வனகெதகெல்ல’, ‘பலிக நிம’, ஆகிய சிங்களத் திரைப்படங்களிலும் எச். சி. பிலிம்சின் ‘சுமதி எங்கே’ பிரைட்டன் பிலிம்ஸ் தயாரித்து ஜோ. தேவானந்த் இயக்கி ஜெய்சங்கர் ராதிகா நடித்த ‘ரத்தத்தின் ரத்தமே’, இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பாகிய ரஜனிக்காந் நடித்த ‘தீ’, மற்றும் ‘பாதை மாறிய பருவங்கள்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கமலஹாசனின் ‘மருதநாயகம்’ (வெளிவரவில்லை) திரைப்படத்திலும் பங்கேற்றிருக்கிறார்.
2013 இல் நிலந்த தேசப்பிரியவின் தமிழ் சிங்களத் திரைப்படமான ‘தன்ஹ ரதி ரங்கா’ இல் வன்னித்தமிழன் செல்வராஜ் என்ற பாத்திரமேற்று நடித்திருக்கிறார். இது ஆறு சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறது. இவை தவிர நேற்று, மறுபக்கம், மண்வாசனை, பிரதிபலிப்பு, வியூகம், இப்படியுமா ஆகிய குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
100ற்கும் மேற்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களைத் தமிழில் மாற்றிப் பிரதியாக்கம் செய்தபோது அதில் வருகின்ற பிரதான பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். இவரது மற்றொரு கலைத்திறமையாக இது அமைந்திருக்கிறது. தற்காலத்தில் இளையவர்களின் ஈழத்து பாடல்களை (காணொளி) வரவேற்று அவர்களின் பணிகளுக்கு உற்சாகமூட்டி வழிகாட்டி வருகின்றார்.
தனது கலைத்துறையின் ஈடுபாட்டுக்கு வழிகாட்டிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி எமிலி, மயிலிட்டி ஆசிரியர் அன்ரனிசாமி, இளவாலை ஐந்துகண் மதவடி ஆசிரியர் சவரிப்பிள்ளை, மாவிட்டபுரம் பரயோகலிங்கம் மாஸ்டர், மருதனார்மடம் மாணிக்கம் மாஸ்டர், சைவப்புலவர் செல்லத்துரை, நாடக அரங்கக் கல்லூரியில் பயிற்சியளித்த நாடகர் தாசீயஸ் ஆகியோரை தனது வழிகாட்டிகளாகக் கொள்கிறார்.
பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனனாகப் பாத்திரமேற்று நடித்ததைக் கலையரசு சொர்ணலிங்கமும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் பாராட்டியதையும் நினைவு கூர்கின்றார். தமிழாராய்ச்சி மாநாட்டில் மேடையேற்றிய ‘தண்ணீரும் சுடும்’ நாடகத்தை அச்சு ஊடகங்கள் பாராட்டியமையும் நினைவு கொள்கிறார்.
இவர் எழுதிய படைப்புகளுக்காக பாராட்டுப்பத்திரங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றார். ‘மகுடபங்கம்’ நூலுக்காக வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான விருது மற்றும் கிழக்கு மாகாண தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.
‘சதுரங்க வேட்டை’ நூலுக்காக வடக்கு மாகாண சிறந்த நூல் விருதையும் தமிழ்நாட்டில் சோழன் விருதையும் பெற்றுக் கொண்டார். ‘மகுட பங்கம்’, ‘வீரகாவியம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘சத்திய வேள்வி’ ஆகிய நூல்கள் இலங்கை கலாசார திணைக்களத்தின் அரச இலக்கிய விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அவை சான்றிதழ்களைப் பெற்றிருக்கின்றன. ‘ஆணை’ என்ற நூல் 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதையும் வடமாகாண சிறந்த நூல் விருதையும் பெற்றுக்கொண்டது.
நீண்டகாலக் கலைப்பணிக்காக இலங்கை கலாசார அமைச்சின் ‘கலாபூஷண விருதை’யும் வடமாகாணத்தின் ‘முதலமைச்சர் விருதை’யும் பெற்றிருக்கும் ஏழுமலைப்பிள்ளை அரச நிறுவனங்களாலும் சமூக நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
கரைச்சி பிரதேச செயலகத்தின் ‘கலை எழில்’, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ‘கலைக்கிளி’, நீதி அமைச்சின் ‘மத்தியஸ்தர் புத்தாக்க விருது’, கல்வி அமைச்சின் ‘அகில இலங்கை சாதனையாளர் விருது’, இந்தியா பூவரசி நிறுவனத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, கலாசார அமைச்சின் ‘கலைமாமணி விருது’, மற்றும் ‘கலைக்காவிய நாயகன்’, ‘கலைச் செம்மல்’, ‘கலை அரசு’, ‘நாடக மேதை’, ‘கம்பீரக் குரலோன்’, ‘இலங்கை மண் கலைஞர்’ முதலானவற்றையும் பெற்றுக்கொண்டுள்ளார். அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஷாமஸ்ரீ, தேசகீர்த்தி, தேசமான்ய விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வாசிப்பு, எழுத்து, நடிப்பு என்றபவற்றோடு அகில இலங்கை சமாதான நீதவானாகவும் மத்தியஸ்தர் சபை உறுப்பினராகவும் பல்வேறு சமூக நிறுவனங்களின் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். அவரது நாடக எழுத்துருக்களையும் ஏனைய படைப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு நாடகக் கலைத்துறைக்கு வழங்கிய பங்களிப்பை நோக்குவோம்.
2.0 ஏழுமலைப்பிள்ளையின் படைப்புகள்
வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை எழுதிய நூல்களை பொருள் அடிப்படையில் நோக்கினால் அனைத்துமே நாடகத்துறை சார்ந்தவைதான். அமைப்பின் அடிப்படையில் ‘உலகை வெல்ல முயன்றவன்’ வரலாற்று நூலாகவும் ‘கீதாத்துவம்’ ஆன்மீக உரையாடற் காவியமாகவும் அமைந்துள்ளன. ஏனையவை நவீன நாடக எழுத்துருக்களாகவே அமைந்துள்ளன. பின்வருவன ஏழுமலைப்பிள்ளை எழுதிய நூல்களாகும்.
2014 மகுடபங்கம் (நாடகப்பிரதி - கரைச்சி, கலாசாரப் பேரவை வெளியீடு)
2015 வீரகாவியம் (நாடகத் தொகுப்பு - காவேரிக் கலாமன்றம்)
2017 சதுரங்க வேட்டை (நாடகத் தொகுப்பு - அல்வாய், ஜீவநதி வெளியீடு)
2018 சத்தியவேள்வி (நாடகத் தொகுப்பு - வேந்தன் வெளியீடு)
2019 உலகை வெல்ல முயன்றவன் (வரலாற்று நூல் - கிளிநொச்சி, வேந்தன் வெளியீடு)
2020 ஆணை, (நாடகத் தொகுப்பு - கிளிநொச்சி, வேந்தன் வெளியீடு)
2021 கீதாத்துவம் (ஆன்மீக உரையாடற் காவியம் - இராவணா வேந்தன் வெளியீடு)
நாடகப் பிரதிகளைப் படிக்கத்தக்க பிரதிகள், நடிக்கத்தக்க பிரதிகள், படிக்கவும் நடிக்கவும் தக்க பிரதிகள் என்று வகைப்படுத்தி நோக்கலாம். ஏழுமலைப்பிள்ளை மிகத் தேர்ந்த நாடக நடிகராக இருந்தவர். தனது நடிப்பால் பேரும் புகழும் பெற்றவர். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற நோக்கிற்கிணங்க தான் நடித்த நாடகங்களை அனுபவங்களாகக் கொண்டு சாதாரண மக்களும் வாசித்துவிளங்கி நாடகத்தின் மீதான ரசனையையும் கலையுணர்வையும் வரலாற்றுணர்வையும் பெற்றுக்கொள்ளவேண்டும் எனக்கருதி நாடக எழுத்துருக்களை ஆக்கியுள்ளார்.
“நாடகப் பிரதி பற்றிய விவாதம் நம்மில் தொடரும் விஷயம். இலக்கிய மாணவர்களிடையே தொடர்ந்து எழுப்பப்படும் கருத்து தமிழில் நாடகப் பிரதிகள் இல்லை என்பது. இது உண்மை என்றாலும் நாடக நிகழ்வுகளும் அளிக்கைகளும் நம்மிடையே நிறைய இருக்கின்றன. இவற்றைப் பிரதிகளாகக் காணவேண்டும்.”(2) என்ற ப. மங்கையின் கூற்று நாடகப் பிரதிகளுக்கு எப்போதும் தேவை இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றது.
ஏழுமலைப்பிள்ளை பள்ளிப் பருவத்திலிருந்தே இசைநாடகங்களிலும் நவீன நாடகங்களிலும் பங்கெடுத்திருக்கின்றார். நடித்துத் தேர்ச்சி பெற்றிருக்கின்றார். இவருடைய அதிகமான நாடக எழுத்துருக்கள் 90களுக்குப் பின்னரே எழுதப்பட்டுள்ளன. இச்செயற்பாடு இவரது நோக்கத்தை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. தான் நடித்துப் பெற்ற அனுபவத்தின் ஊடாக இளைய தலைமுறைக்கும் இவ்வாறான கலைச்சொத்துக்களைக் கையளிக்கவேண்டும் என்ற வேணவாவே இவ்வெழுத்துருக்கள் உருவாகுவதற்குக் காரணமாகவும் இருந்திருக்கலாம்.
“அரங்க விமர்சனத்தைப் பொதுவாக இரு தளங்களில் அணுக முடியும் அதாவது நாடக எழுத்துரு (Dramatic text) அதாவது இது அனேகமாக இலக்கியமாக நோக்கும் பண்பு கொண்டதாக பெரும்பாலும் அமையும். ஆற்றுகை உரு (Performing text) அதாவது நாடகத்துக்கு எவ்வாறு ஆற்றுகை உரு ஆகிறது என்பதனை ஆற்றுகை நிலையில் வைத்து விளங்கிக் கொள்ளல். எனவே, நாடகம் ஒரு ஆற்றுகைக் கலை என்ற வகையில் நாடக எழுத்துருவும் ஆற்றுகை நிலையில் வைத்து விளங்கிக் கொள்வதிலேயே அரங்க விமர்சனத்தின் கவனம் குவிக்கப்பட வேண்டும். ஆற்றுகை நிலையில் நாடகம் நடிப்பு மூலமாகவே சொல்லப்படுவதால் நடிப்பை மையமாகக் கொண்ட ஆற்றுகையின் வடிவப் பூரணத்துவத்திற்கு அரங்கின் மூலங்களான காண்பியங்கள் கேட்பியங்கள் எவ்வாறு உதவியுள்ள என்பதனை தர்க்கபூர்வமாக வியாக்கியானஞ் செய்தல் அரங்க விமர்சகனின் பணியாகும்.” (3) இந்நோக்கு மிக அவசியமானதுங்கூட.
பொதுவாக தொடக்கம் வளர்ச்சி உச்சம் வீழ்ச்சி முடிவு என்ற ஐந்து கூறுகளும் பொருந்தக்கூடிய வகையில் எழுதப்பட்ட நாடக எழுத்துருக்களை புராண நாடகங்கள், இதிகாச நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், வாழ்க்கை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் என உள்ளடக்க அடிப்படையில் நோக்குவர்.
எமக்குக் கிடைத்திருக்கும் ஏழுமலைப்பிள்ளையின் எழுத்துருக்களை புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் என வகைப்படுத்தலாம். அத்தோடு ‘உலகை வெல்ல முயன்றவன்’ வரலாற்று நூலாகவும் ‘கீதாத்துவம்’ ஆன்மீக உரையாடற் காவியமாகவும் அமைந்துள்ளன. மகுடபங்கம், வீரகாவியம், சதுரங்க வேட்டை, சத்தியவேள்வி, ஆணை ஆகியன நாடக எழுத்துருக்களின் தொகுப்புகளாக அமைந்துள்ளன.
2.1 புராண நாடகங்கள்
ஆரம்பகாலத்தில் புராண இதிகாசக் கதை மரபுகளி;ன் ஊடாக அரிச்சந்திரன், மார்க்கண்டேயன் முதலிய புராணங்களை அடிப்படையாகக் கொண்டும்; இராமாயணம் மகாபாரதம் முதலிய இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டும் பல்வேறு மனித உணர்வுகளையும் வாழ்க்கை அம்சங்களையும் வெளிப்படுத்தும் வகையில் அமையப்பெற்ற நாடகங்கள் எழுதப்பெற்றன. அந்த வகையில் ஏழுமலைப்பிள்ளையின் நாடக எழுத்துருக்களில் சிலவற்றை புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டமைந்த பிரதிகளாக இனங்காண முடியும்.
இந்த வகைப்பாட்டுக்குள் கந்தபுராணத்தில் சூரனை வதைத்த கதையை ‘முருகனின் முதற்போர்’ என்ற பிரதியாகவும் அரிச்சந்திர புராணத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வாய்மை காத்த மன்னன்’ என்ற பிராதியாகவும் ஆசிரியர் தந்துள்ளார். இவற்றை புராண நாடகங்கள் என்ற அடிப்படையில் நோக்கலாம்.
2.2 இலக்கிய நாடகங்கள்
ஏழுமலைப்பிள்ளை அவர்கள், இராமாயணம் - மகாபாரதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நாடகப்பிரதிகளை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், திருக்குறள், சமய இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் நாடகப்பிரதிகளை ஆக்கியுள்ளார். இவ்வாறானவற்றை இலக்கியப் பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களாக நோக்கலாம்.
சங்க இலக்கியம், காப்பியம், ஆகியவற்றில் காணப்படும் சிற்சில கதா பாத்திரங்களையும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு தலைமைப் பாத்திரங்கள் செந்தமிழ் நடையிலும் சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத் தமிழிலும் அமையக்கூடியவாறு இலக்கிய நாடகங்கள் எழுதப்பெற்றிருக்கின்றன. இதற்கு பாரதிதாசனின் ‘பிசிராந்தையார்’ மறைமலையடிகளின் ‘அம்பிகாபதி’ முதலானவற்றை எடுத்துக்காட்டாகச் சுட்டலாம். புராண இதிகாசம் சார்ந்தவை, வரலாறு சார்ந்தவை எனக் கருதப்படுகின்ற நாடகங்களும்கூட அடிப்படையில் இலக்கியம் சார்ந்தவையாகவே அமைந்துள்ளன. இவ்வகையில் ஏழுமலைப் பிள்ளையின் பின்வரும் பிரதிகளை இலக்கிய நாடகங்கள் என்ற அடிப்படையில் நோக்கலாம்.
நடுகல் பேசும்
வீராதி வீரன் இந்திரஜித்
இராமவீரம்
இலட்சியத் துறவு
வீரகாவியம் (அரவான்)
சதுரங்க வேட்டை
சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்)
வள்ளுவர் பொதுமை
நாவுக்கரசரின் ஞானம், பக்தி, தொண்டு
2.3 வரலாற்று நாடகங்கள்
நடந்த நிகழ்ச்சிகளை உண்மைக்கு மாறுபாடின்றி எடுத்துரைக்கும் அடிப்படையில் அமைந்தவற்றை வரலாற்று நாடகங்கள் என்பர். இவ்வாறானவற்றுள் ஒரு சில வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாக வைத்தும் சிலவற்றை கற்பனையாகப் புனைந்தும் எழுதப்படுவது உண்டு. ஒருவருடைய வாழ்க்கை வரலாறு முதுவதும் தெரிந்த நிலையில் பிறப்பு, வாழ்வு, இறப்பு வரையான அம்சங்கள் இதனுள் இடம்பெறுகின்றன. ஏழுமலைப்பிள்ளை எழுதிய நாடகங்களில் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையும் உள்ளன. இந்த வகைப்பாட்டுக்குள் தமிழர் வரலாறு சார்ந்த நாடகங்களாக
சங்கிலியன்
மருது பாண்டியர்கள்
பரஞ்சோதியின் வீரம், துறவு
இராஜேந்திரசோழனின் மனப்பக்குவம்
ஆணை
தந்தையின் ஆணை
வேங்கையின் ஆணை
தேசத்தின் ஆணை
துரோகத்தின் முடிவு
ஆகியவற்றை நோக்கலாம். இவை தமிழ் மன்னர்கள் சார்ந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் நில வாழ்வோடு தொடர்புபட்டவை.
இதேபோல் தமிழ் மன்னர் சாராத இந்தியாவின் வடநாட்டு அரசியல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவையும் மேலைத்தேயத்தவர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவையுமான நாடகங்களும் உள. வீர சிவாஜி, ஜுலியஸ் சீசர், அசோகன், போரஸ், மகா அலெக்சாண்டர் ஆகியோரைப் பாத்திரங்களாகக் கொண்ட வரலாற்று நாடகங்களாக பின்வருவன அமைந்துள்ளன.
வீரசிவாஜி
ஜுலியஸ் சீசர்
பழிக்குப் பழி
மகுடபங்கம்
மாவீரன் போரஸ்
மாவீரனை மயக்கிய பேரழகி
வெற்றியின் ஆணை
மேற்காட்டிய புராண நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் ஆகியவற்றை பொருண்மையின் அடிப்படையில் தனித்தனியாக வகைப்படுத்தலாம்.
ஒரு நாடகத்தின் முதன்மையான அம்சமே எழுத்துப்பிரதி ஆகும். எழுத்துப்பிரதிதான் ஒரு நாடகத்தைப் பார்வையாளர் முன்னிலையில் முழுமையான அரங்காக மாற்றுகிறது. “சமகால நிலையில், நாடகமாக ஆடப்படுவதற்கான எழுத்தினை Script என்று சொல்லுகிற மரபு உண்டு. எழுதப்பட்டது என்பதுதான் அதனுடைய கருத்து. இதனை நாம் தமிழில் இப்போது ‘எழுத்து’ என்று கூறுகின்றோம்.” (4) எனவே மேலே குறிப்பிட்ட நாடகங்கள் அத்தனையும் எழுத்துருக்களாக அமைந்திருக்கின்றன. இவற்றை உள்ளடக்கம், உத்தி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக நோக்குவோம்.
3.0 எழுத்துருக்களின் உள்ளடக்கம் - உத்தி
ஏழுமலைப்பிள்ளையின் நாடகப்பிரதிகளை புராண நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என்ற அடிப்படையில் மேலே நோக்கினோம். அவற்றின் கதைகளையும் கதைப்பண்புகளையும் உத்திகளையும் தனித்தனியாக ஆராயலாம்.
ஒரு நாடக எழுத்துருவின் ஊடாக கதைக்கருவும் கதையும் சொல்லப்படுவது மட்டுமன்றி பாத்திரங்களில் பல்வேறு உணர்ச்சிகளும் வெளிப்படும் வகையிலும் அமைந்திருக்கும். அவை பாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாக வெளிப்படும். பாத்திரங்களின் மோதுகைகளும் முரண்பாடுகளும் சம்பவங்கள் மூலம் வளர்த்துச் செல்லப்படும்போது இயல்பான ஒரு கலைப்படைப்புக்கு இருக்கக்கூடிய வளர்ச்சியும் ஏற்றமும் உச்சமும் வீழ்ச்சியும் நாடகப்பிரதியிலும் வெளிப்படும்.
மறுபுறம் கதைக் கட்டமைப்பின் ஊடாக அதன் வடிவமும் உத்திகளும் மொழியின் பல்வேறு சாத்தியப்பாடுகளும் வெளிப்படக்கூடியவையாக அமைந்திருக்கும். இவற்றை ஏழுமலைப்பிள்ளையின் எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயலாம்.
3.1 புராண நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்
புராணத்தை அடிப்படையாகக் கொண்ட நாடக எழுத்துருக்களில் கந்தபுராணம், அரிச்சந்திர புராணம் ஆகியவற்றினடியாக எழுதப்பட்ட ‘முருகனின் முதற்போர்’, ‘வாய்மை காத்த மன்னன்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இரண்டும் மகுட பங்கம் தொகுப்பில் உள்ளன.
தர்மத்தைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் படைக்கப்பட்ட சிவனின் மைந்தனாகிய முருகன், சூரனின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அழித்துத் தன்வசப்படுத்தும் கதையாக கந்தபுராணத்திலிருந்து முருகனின் முதற்போர் அமைந்துள்ளது.
சூரனை முருகன் வதம் செய்யும் கதை இது. சூரனைத் திருத்த முடியுமா என்று ஆலோசித்து வருமாறு வீரபாகுதேவரை முருகன் அனுப்புகிறான். ஆனால் சூரன் செருக்கினாலும் அகங்காரத்தினாலும் அதனை ஏற்கவில்லை. இறுதியில் முருகன் சூரனை அழிக்கிறான். இதனையே ‘முருகனின் முதற்போர்’ என்ற நாடக எழுத்துரு காட்டுகிறது,
இது நான்கு காட்சிகளைக் கொண்டது. முதலில் திருக்கைலாயக் காட்சி வருகிறது. இக்காட்சியில் சிவபெருமான் உமாதேவியார் இந்திரன் முருகன் தேவர்கள் முதலியோர் வருகின்றனர். இந்திரன் சிவபெருமானிடம் அசுரர் பரம்பரையால் தாம் வருந்தும் நிலையை எடுத்துக் கூறுகின்றான். முருகன் வீரபாகுதேவரை அனுப்பி அசுரரை அழிப்பதற்கு முன் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த முடியுமா என்று அறிந்து வருமாறு அனுப்புகிறான்.
சூரனும் வீரபாகுதேவனும் உரையாடுகின்றனர். உரையாடலில் சூரன் ஆணவத்துடன் பேசுகிறான். இறுதியில் உரையாடல் முற்றுகிறது. வீரபாகுதேவரைப் பிடிக்க சூரன் முனையும்போது சூரனின் வீரமகேந்திரபுரியை வீரபாகுதேவர் அழித்து விட்டுச் செல்கிறார். சூரன் தன் சபையில் ஆலோசனை செய்தல், போர்க்கோலம் பூணுதல், போரில் பானுகோபன் - சிங்கமுகனை அழித்தல், இறுதியில் சூரன் முருகனுடன் போர் செய்தல் முதலானவை சொல்லப்படுகின்றன. இறுதியில் நீ திருந்தவே மாட்டாய் என்று முருகன் சூரனை அழிக்கிறான். இதுவே முருகனின் முதற்போர் என்ற நாடகம் ஆகும்.
நாடக உத்தியாக நான்கு காட்சிகளில் இந்நாடகம் விரிகின்றது. மேடைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இளையோர் அரங்குகளில் நடிப்பதற்கேற்றவாறு எளிமையான மொழியிலும் இலக்கிய ரசனையுடன் சொற்களைக் கையாண்டுள்ளமையும் சிறப்பிற்குரியதாகும்.
“நாடக எழுத்துரு வாசிப்பறிவும் அரங்கின் பல்வேறுபட்ட நடிப்பு அனுபவமும் அரங்கினதும் அரங்க மூலக்கூறுகளினதும் நுட்பமான பரிச்சயமும் ஒருவருக்கு கைவினைத் திறனையும் கலையுணர்வினையும் வளர்த்து விடுவதாக இருக்கும். அவரது இயல்பான கலையுணர்வும் தரிசனமும் அவரைக் கலைஞனாக்குகிறது. (5) புராண மரபின் அடிப்படையில் தோற்றம் பெற்ற கதையாயினும் தற்காலத்திற்கு ஏற்ப வசனம் பேசி நடிக்கக்கூடிய நவீன நாடகப் பிரதியாக இது அமைந்துள்ளது.
மற்றைய நாடகப் பிரதி ‘வாய்மை காத்த மன்னன்’ இது மக்களிடையே மிகப் பரவலாக அறியப்பட்ட அரிச்சந்திர புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. அரிச்சந்திர வெண்பா, அரிச்சந்திர புராணம், அரிச்சந்திர அம்மானை, அரிச்சந்திர கீர்த்தனை, அரிச்சந்திரன் கதை, அரிச்சந்திரன் நாடகம் என பல்வேறு வடிவங்களில் இது வழங்கப்படுகிறது.
தமிழில் அரிச்சந்திரன் கதைகளுக்கு எல்லாம் மூல நூலாக அரிச்சந்திர புராணத்தைக் குறிப்பிடுவர். இதனை காவிய மரபில் வைத்தும் நோக்குவர். அரிச்சந்திர புராணத்தை வீரகவிராயர் இயற்றினார். ஆனால் அரிச்சந்திர புராணத்திற்கு முன்னர் அரிச்சந்திர வெண்பா என்னும் தமிழ் நூல் அரிச்சந்திரன் கதையைச் சொன்னதெனக் குறிப்பிடுவர். இது வடமொழிக் கதை மரபில் இருந்து வந்தது.
சொன்ன சொல் தவறாத வாய்மை என்னும் நீதிக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அர்pச்சந்திரன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. செய்யுள் வடிவில் உள்ள அரிச்சந்திரன் நாடகத்தை ‘தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம்’ புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அதனை வீரை லிங்கபாராதி இயற்றினார்.
அரிச்சந்திரன் சூரியகுலத்தின் 28 ஆவது அரசன் என்று புராணத்தில் குறிப்பிடப்படுகின்றான். சத்தியத்தைக் காப்பாற்றி வாழ்வதற்கு அவன் வாழ்க்கையில் அடைந்த துன்பங்கள் ஏராளம். இதனையே ஏழுமலைப்பிள்ளை ‘வாய்மை காத்த மன்னன்’ என்ற நாடக எழுத்துருவாகத் தந்துள்ளார்.
தேவலோகத்தில் வசிட்டர் விசுவாமித்திரன் இருவரும் கொண்ட போட்டியின் காரணமாக அரிச்சந்திரன் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றான். அரிச்சந்திரன் உண்மையை உயிராய் மதித்து பூலோகத்தில் வாழ்பவன். என்று வசிட்டர் கூற, அவ்வாறு சொல்வது பொய் அரிச்சந்திரன் நல்லவன் அல்லன் என விசுவாமித்திரர் மறுத்துரைக்கின்றார். எனவே, அதனை நிரூபிப்பதற்காக பல்வேறு சோதனைகளை அரிச்சந்திரனுக்கு ஏற்படுத்துகின்றார் விசுவாமித்திரர். வாய்மைக்காக தன் நாட்டினை இழந்தது மட்டுமல்லாமல், தன்னையும் அடிமையாக்கி, மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசன் ஆகியோரையும் அடிமை வாழ்வுக்கு ஆளாக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இவ்வாறான துன்பங்களிலிருந்து எல்லாம் மூழ்கி, புடம்போட்ட தங்கமாக சத்தியத்தின் காவலனாக விளங்கி உண்மைக்கு உயிரையும் தர இருந்த வரலாற்றை உலகுக்குப் புகட்டுவதற்காக எழுந்ததே அரிச்சந்திரன் கதையாகும்.
இதனை நூலாசிரியர் ஏழுமலைப்பிள்ளை பதினொரு காட்சிகளில் எளிமையும் செம்மையும் நிறைந்த மொழியில் படிப்பதற்கும் நடிப்பதற்கும் ஏற்ற பிரதியாக ஆக்கியுள்ளார்.
வாழ்வில் துன்பங்களால் பக்குவம் அடைந்த ஒருவன் அந்தத் துன்பத்தில் உழன்று துவண்டு போவான். அவ்வாறு துன்பத்தில் உழன்றவனின் பேச்சு எவ்வாறிருக்கும் என்பதனை அதிர்ந்து பேசாமல் மிக அமைதியான ஓடையாக இந்நாடகத்தை ஆசிரியர் எழுதியுள்ளார்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.