3.2 இலக்கிய நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்

சங்க இலக்கியம் முதலானவற்றையும் அவ்விலக்கியங்களில் வருகின்ற கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்படுகின்ற நாடகங்களை இலக்கிய நாடகங்கள் என்று அழைக்கலாம். நடுகல் பேசும், வாய்மை காத்த மன்னன், வீரகாவியம், வீராதி வீரன் இந்திரஜித், சதுரங்க வேட்டை, இராமவீரம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்), வள்ளுவர் பொதுமை, இளங்கோவின் இலட்சியம், நாவுக்கரசரின் ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றை இந்த அடிப்படையில் நோக்கலாம். இவற்றில் இதிகாசக் கதைமரபுகளுடன் தொடர்புபட்ட இராமாயணம், மகாபாரதம் முதலான கதைகள் உள்ளனவெனினும் அவை ஆய்வு வசதிக்காக இலக்கியப் பிரதிகள் என்ற வகைப்பாட்டிலேயே நோக்கப்பட்டுள்ளன.

3.2.1 இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்

நடுகல் பேசும், வீராதிவீரன் இந்திரஜித், இராம வீரம் ஆகிய மூன்றையும் இராமாயணக் கதைகளின் அடிப்படையில் நோக்குவோம். நடுகல் பேசும் என்பது மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. இராமனுடன் போரிட்டு மாண்ட இராவணனின் வீரம் இந்நாடகத்தில் சொல்லப்படுகிறது.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் வலையில் அகப்பட்ட பெரியதொரு இரும்புப் பெட்டியைத் திறந்து பார்க்கிறார்கள். அப்பெட்டியில் ஏட்டுச் சுவடி அகப்படுகின்றது. அதை ஒரு பண்டிதரிடம் எடுத்துச் சென்று அதில் இருப்பது என்னவென அறிந்து கொள்கிறார்கள்.

இப்பிரதி மேடையில் நடிப்பதற்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கிறது. இதனை ஆற்றுகையாக்கும்போது பார்வையாளரின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இக்காட்சி அமையலாம். “நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படுகின்ற அந்த விடயம் பொருள் என்று கொண்டால் அரங்கு என்பது அது சம்பந்தப்பட்ட முழுவதையும் இணைத்துக் காட்டுவது. யார் காட்டுகிறார்கள் எவ்விடத்தில் காட்டப்படுகிறது. யார் முன்னே காட்டப்படுகிறது எந்தச் சூழலில் காட்டப்படுகிறது போன்ற எல்லாவற்றையும் அரங்கு உள்ளடக்கியுள்ளது. அரங்கு பற்றிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அது பன்முகப்பட்டதொரு கலையாகும். இதனுடைய பூரணத்துவத்திற்கு பல்வேறு கவிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒருங்கு நிலைநின்று உதவல் அவசியமாகும். நடிகர், நாடகாசிரியர், நெறியாளர், காட்சி விதானிப்பவர், ஆடையணிகளுக்குப் பொறுப்பாயிருப்பவர், ஒளியமைப்புக்குப் பொறுப்பாய் இருப்பவர் எனப் பலர் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒருவர் செய்வதை மற்றவர் முனைப்புறுத்திக் காட்டுகின்ற வகையில் தொழிற்பட்டு நடக்கின்ற பொழுதுதான் நாடகம் என்கின்ற வடிவம் பூரணத்துவத்துடன் அதனுடைய பொலிவுடன் விளங்கும்.” (6)

இந்நாடகப் பிரதி இரண்டு காட்சிகளைக் கொண்டது. முதலாவது காட்சி இலங்கைக்கடலில் நடப்பதாகவும் பாத்திரங்களாக மீனவர்கள் சம்மட்டியார் பண்டிதர் ஆகியோர் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் காட்சியில் இராவணன் சபையும் அங்கு இராவணன் வீபீடணன் கும்பகர்ணன் மேகநாதன் ஆகிய பாத்திரங்களும் வருகின்றன. நாடகக் குறிப்புகள், பாடல், உரையாடல் ஆகியவற்றிற்கு ஊடாக இந்நாடகம் நகர்கின்றது.

கம்பராமாயணத்துடன் தொடர்புபட்ட மற்றைய எழுத்துரு வீரகாவியம் தொகுப்பில் உள்ள ‘வீராதி வீரன் இந்திரஜித்’ ஆகும். இராவணனின் மகன் மேகநாதன் இந்திரனோடு சண்டைபுரிந்து இந்திரஜித் ஆகிய கதையை இது சொல்கிறது. இராம - இராவண யுத்தக்களத்தில் விபீடணனால் கைகள் அறுபட்ட நிலையிலும் வாயினால் வேல் ஏந்தி மேகநாதன் போரிடுகிறான். அவனின் மனவுறுதியை இப்பிரதியில் ஏழுலைப்பிள்ளை காட்டுகிறார்.

“மக்களின் மகத்தான வாழ்விற்காக தம் உயிரை அற்பணித்துப் போராடி மரணத்தின் பின்னரும் மாற்றனை மண்டியிடச் செய்யும் மானமும் வீரமும் தியாகமும் கொண்ட மான வீரர்களின் வரலாறுகளை நாடகமாக எழுதவேண்டுமென்பது எனது நீண்டநாள் இலட்சியம்” (7) என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இப்பிரதி நான்கு காட்சிகளைக் கொண்டது. இராவணன், மண்டோதரி, மேகநாதன் (இந்திரஜித்), இந்திரன், விபீடணன், இலக்குவன் முதலான பாத்திரங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. முதலாவது காட்சியில் இலங்காபுரி அரண்மனையில் இராவணன், இந்திரஜித், மண்டோதரி ஆகியோரின் உரையாடலும் மற்றைய காட்சியில் விந்த நாட்டின் காட்டுப்புறத்தில் இந்திரன் மேகநாதன் சந்திப்பும் இடம்பெறுகின்றன. அங்கு இந்திரனுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது சண்டையாக மாறுகிறது. காட்டுக்கொடிகளால் இந்திரனைக் கட்டிவிடுகிறான் இந்திரஜித். இந்திரன் மன்னிப்புக் கேட்கிறான். அப்போது “இந்திரா என்னை இந்திரஜித் என்று சொல், இந்திரனை வெற்றி கொண்ட இந்திரஜித்தன் என்று சொல்.. ஆரியனை வென்ற திராவிடன் என்று சொல்” என்று மேகநாதன் வீரமுழக்கமிடுகிறான்.

3ஆம் காட்சியில் இந்திரஜித்தும் நாகநாட்டு மன்னனின் (நாகநாட்டு மன்னனைப் போரில் வென்றவன் இந்திரஜித்) மகளாகிய சுலோச்சனையும் சந்திக்கின்றனர். இறுதிக்காட்சியில் விபீடணன், மேகநாதன், அனுமன், இலக்குவன், சுக்கிரீவன் சந்திக்கும் நிகும்பலை போர்க்களமும் காட்டப்படுகிறது.

இதுவும் ஆற்றுகைக்கு ஏற்ற பிரதியாக அமைந்திருக்கிறது. காட்சித் தொடங்கத்தில் அவை பற்றிய விபரமும் மேடைக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மற்றைய நாடகப் பிரதியான ‘இராமவீரம்’ சதுரங்க வேட்டை தொகுப்பில் உள்ளது.

“இராமாயண காவியத்தில் ஒருவரது அழிவில் இன்னொருவரது வெற்றியில் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு பொய்களையும் புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு வெற்றி பெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும் சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் என் மனதில் பதிந்திருந்தது. அதனால் ‘இராமவீரம்’ என்னும் நாடகத்தை வாலியை இராமன் கொல்லும் நிகழ்வினூடாகப் படைத்துள்ளேன்.” (8) என்று இராமவீரம் பிரதி உருவாகியதற்கான காரணம் குறித்து நாடகாசிரியர் எழுதியுள்ளார்.

இங்கு ஒரு சதுரங்க ஆட்டமே நிகழ்த்தப்படுகிறது. அதனாற்தான் தொகுப்பு நூலுக்கு சதுரங்கம் என்று பெயரிட்டுள்ளார். இராமனுக்கு சீதையைத் தேட சுக்கிரீவனின் படை வேண்டும். அதற்கான ஓர் எதிர்பார்ப்பு வாலியின் மரணத்துடன் கைக்கு வந்து சேர்கிறது. வாலி வதைப்படலம் இலக்கிய உலகில் மிகுந்த சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உட்பட்டதாகும். இங்கு நாடகாசிரியர் தன்னுடைய பார்வையில் வாலிவதையை எழுதியுள்ளார்.

“இராமவீரம் இராம காவியத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது. வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது நியாயம்தானா என்ற ஐயம் இதுவரை தீர்க்கப்படாமலேயே உள்ளது. ஆனால் ஏழுமலைப்பிள்ளை அவர்கள் அது தவறானது என்றே உறுதியாகச் சொல்கிறார். வாலிவதைப் படலத்தைக் கருப்பொருளாகக் கொண்டு தமது நாடக பாடத்தை எழுதியிருக்கும் நூலாசிரியர் ‘இராமவீரம்’ என எள்ளலாக அதற்குத் தலைப்பிட்டிருப்பதே இராமவீரம் கறைபட்டிருப்பதை எடுத்துக்காட்டவே என்று கொள்ளலாம்.(9) என்று கலாநிதி த. கலாமணி அணிந்துரையில் எழுதுவது மிகச் சரியான கணிப்பாகவே அமைந்திருக்கிறது.

இந்நாடகம் மூன்று காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதற்காட்சியில் மாயாவியுடன் வாலி மலைக்குகையில் யுத்தம் செய்யச் செல்லுதலும் சுக்கிரீவன் மலைப்பாதையை மூடிவிடுதலும் நிகழ்கின்றன. மற்றைய காட்சியில் இலங்கைக் காட்டுப்புறத்தில் இராமன் இலக்குவன் உரையாடுவதும் இறுதியில் வாலியை இராமன் வதம் செய்தபோது நிகழ்ந்த உihயாடல்களையும் தருகின்றது.

வாலி, சுக்கிரீவன் ஆகியோருடன் மாயாவியைத் தமிழ்வீரன் என்று ஆசிரியர் படைத்துள்ளார். மலைக்குகையில் வாலிக்கும் தமிழ்வீரனாகிய மாயாவிக்கும் இடையில் சண்டை ஏற்படும்போது ஆரியம் திராவிடத்தை அழிக்க வந்ததென்றும் அதற்குத் துணைபோனவன் நீ என்பதாலுமே உன்னுடன் யுத்தம் செய்யவந்தேன் என்று மாயாவி கூறுகிறான். ஆனால் வாலி வேறாகக் கூறுகிறான்.

இந்நாடகப்பிரதியில் நாடகம் ஒன்றின் உத்திகளில் ஒன்றாகிய முரண்களின் மோதுகை மிகச்சிறப்பாக வெளிப்படுகிறது. மலைக்குள் சென்ற அண்ணன் வாலி திரும்பி வரும் பாதையை மூடிவிட்டு கிட்கிந்தையின் அரச செல்வத்திற்காக கனவு காண்கிறான் சுக்கிரீவன். “அண்ணன் சாய்ந்து விட்டால் அரியணை என் காலடியில். ம். வாலி உள்ளே போய்விட்டான். மாயாவி உள்ளே காத்திருப்பான். இந்திரன் திட்டப்படி இந்த வாயிலை மூடிவிட்டால் வாலியும் மாள்வான். மாயாவியும் மரணத்தைத் தழுவுவான். பிறகு கிட்கிந்தை நாட்டின் சொர்ணமுடி சுக்கிரீவன் தலையிலே” என்று தனக்குத் தானே கூறிச் சிரித்தபடி குகையின் வாயிலைச் சுக்கிரீவன் மூடி விடுகிறான்.

மறுபுறத்தில் மாயாவிக்கும் வாலிக்கும் இடையிலான மோதலில்…உரையாடலில்… “மாற்றானின் கலாசாரத்தை மண்ணிலே விளைய விட்டவன் நீ. பெண்ணடிமைப் பெருங்கொடுமை. குலப்பேதம் குறுகிய சிந்தனை. கிட்கிந்தையில் இவை வளர இடங்கொடுத்தவன் நீ” என்று மாயாவி வாலியைக் குற்றங்கூற வாலியோ, “ஓ அரியணை ஆசை என் தம்பியையும் அசைத்து விட்டதா? மாயாவி ஏமாந்து விட்டாய் நீ, இலங்கை மன்னன் இராவணனின் நேசன் இந்த வாலி. திராவிடத்தையும் அவர்களது தேனான பண்பாட்டையும் நேசிப்பவன் நான்” என்று கூறுகிறான்.

இந்த முரண்களின் மோதுகை இறுதியில் வாலி இராமன் உரையாடலிலும் வருகிறது. “மூட ஆரியனே நீ வாலியைக் கொல்லவில்லை. அறத்தின் வேலியைக் கொன்றிருக்கிறாய். புலியைப் பிடிப்பதற்கு எலியைத் துணை கொண்டு வந்திருக்கிறாய். உன் மனைவியை மீட்டுத் தாவென்று என்னைக் கேட்டிருந்தால் மன்னன் இராவணனிடம் நயந்து பேசி மின்னற் கணத்திலே உன் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பேன். அண்ணன் தம்பி சண்டைக்குள்ளே புகுந்து உன் ஆசையை நிறைவேற்றியிருக்கிறாய். உன்னை உலகம் பழிக்கும் உயர்ந்தவர் உள்ளம் பழிக்கும்” என்று கூறுகிறான்.

எனவே, இராமவீரம் என்ற இப்பிரதிக்கூடாக ஏழுமலைப்பிள்ளை ஒரு மீறலை நிகழ்த்தியுள்ளார். இதனாலேயே “கம்பராமாயணமே இராமாயணம் என்று நம்பியிருக்கையில் வித்தியாசமான பார்வைகளுக்கும் விடுதலை பெற்ற பார்வைகளுக்கும் இடமிருக்கப் போவதில்லை. பலநூறு இராமாயணங்கள் பற்றி அறியும்போது கம்பராமாயணத்தின் அரசியல் புரியத் தொடங்குகிறது” (10) என்று கலாநிதி சி. ஜெயசங்கர் எழுதியிருக்கிறார்.

3.2.2 மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள் என்ற வகையில் வீரகாவியம், சதுரங்க வேட்டை, கீதாத்துவம், சத்தியவேள்வி (பீஷ்மரின் தியாகம்) ஆகியன அமைந்துள்ளன. கீதாத்துவம் ஆன்மீக உரையாடற் காவியம் ஆகும். ஏனையவை நாடகப் பிரதிகளாக அமைந்துள்ளன. இவற்றை பாரதக் கதைப்போக்கின் அடிப்படையில் வைத்துப் பார்க்கலாம்.

மகாபாரதத்தில் அரவான் பற்றிய கதை மிகப் பிரபலமானது. அரவான் என்ற பாத்திரம் பல்வேறு வாசிப்புகளை நிகழ்த்துவதற்குரிய பிரதியாக அமைந்துள்ளது. அருச்சுனனுக்கும் தாய் உலுப்பிக்கும் பிறந்தவனே அரவான். அருச்சுனன் தர்ப்ப யாத்திரையின்போது நாககுலத்து மங்கை உலுப்பியைத் திருமணம் செய்கிறான். இவர்களுக்குப் பிறந்தவனே அரவான். பின்னர் தமிழகத்து மங்கை சித்ராங்கதையை மணம் செய்கின்றான்.

அருச்சுனன் சுபத்திராவையும் திருமணம் செய்கிறான். பாண்டவர் குலத்திலே உயர்குலத்து மங்கையாகிய சுபத்திராவையும் மகன் அபிமன்யுவையும் அங்கீகரிக்கிறார்களே தவிர, தாழ்ந்த குலத்து மங்கையர் இருவரும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, தந்தை அருச்சுனனைப் பழிவாங்குவதற்காக கௌரவர் சேனையுடன் சேருகிறான் அரவான்.

கிருஷ்ணரின் சூழ்ச்சியால் பாண்டவர்களுக்குச் சார்பாக யுத்தத்தில் பலியிடப்பட்டவன் அரவான். இவனை யுத்தத்தில் பலியிட கௌரவரும் பாண்டவரும் துடிக்கின்றனர். ஒரு வகையில் அரவானுக்கு இருபுறத்தாரும் துரோகம் இழைத்திருக்கிறார்கள். அரவானை சிந்தனையில்லாமல் ஆக்கி தமது சுயநலனுக்குப் பலியிட்டிருக்கிறார்கள்.

“அரவானின் எதிர்ப்புணர்வு நியாயமானது. அருச்சுனனால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட பிற சமூகப் பெண்கள் பலருள் உலூபி என்ற பெண் ஒருத்தியின் புதல்வனாக பெற்ற தாய்க்கு இழைக்கப்பட்ட பாதகத்திற்கு நியாயத்தைத் தேடி தவமாக்கியிருக்கும் வாழ்க்கை. எதனைப் பலியெடுக்க நின்றதோ அதனாலேயே பலிகொள்ளப்பட்டிருக்கின்றது என்ற துயரத்தின் பின்புலம் அறிந்து கொள்ளப்படவேண்டியது. கர்ணனைத் தந்திரத்தால் கொன்று அருச்சுனனின் பாணத்திற்கு அவனது வெற்றுடலும் சாய்க்கப்பட்டது போல் அரவானையும் தந்திரத்தால் புத்தியை மழுங்கடித்து அவனது சிந்தனைப் புலத்தைச் சிதைத்து தசைகளை முறுக்கேற்றி பலிக்கடா ஆக்கியிருக்கிறது. இது புத்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் மீட்டெடுப்பதற்குமான காலம்.” (11) என்று இந்நாடகப் பிரதிபற்றிக் கூறுவர்.

அரவான் எழுத்துரு 12 காட்சிகளைக் கொண்டது. பாடசாலை வகுப்பறையில் தவசி என்ற ஆசிரியர் கதை கூறுவதோடு முதற்காட்சி தொடங்குகிறது. குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பாக பலி கொடுக்கப்படுகிறான் அரவான். யுத்தத்தில் கௌரவர்கள் வெற்றி பெறவேண்டுமானால் 32 இலட்சணங்களும் எதிர்ரோமமும் கொண்ட மாவீரன் ஒருவனைப் பலியிட்டு யுத்தத்தைத் தொடங்கினால் வெற்றி உனக்கே கிட்டும் என சகாதேவன் கூறுகிறான். இங்கு யார் பக்கத்திலிருந்து பலியிடல் நடைபெறுகிறதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்நாடகப் பிரதியில் அரவான் அமிர்தவல்லி தாய் உலூபி உரையாடுதல், சாத்திரம் சம்பந்தமாக அறிய துரியோதனன் சகாதேவனை அழைத்தல், துரியோதனன் அரவானைச் சந்தித்து தமது பக்கம் வெற்றி பெற அழைத்தல், சகாதேவனும் கண்ணனும் உரையாடுதல், அரவான் மாளிகை, காளிகோயிலில் அமாவாசை நாளுக்குரிய தர்ப்பணங்கள் நடத்துதல், அரவான் காளி கோயில் முன் போர்நடனம் புரிதல், திரௌபதியும் கண்ணனும் உரையாடுதல், அரவானுக்குத் திருமணம் செய்ய பாண்டவர்கள் பெண் தேடுதல், கண்ணனே பெண்ணாக மாறி அரவானை மணம்புரிதல், இறுதியில் அரவான் களப்பலியாகுதல். இவ்வாறு ஆசிரியர் கூறி முடிக்கிறார்.

துரியோதனன் பக்கத்தில் போரிடுவதற்கு அரவான் சம்மதிக்கின்றான். துரியோதனின் சூழ்ச்சியினால் அமாவாசை இரவு காளிகோயில் தன்னைப் பலியிடுவதற்கு அரவான் சம்மதிக்கிறான். அப்போது அர்ச்சுனனை கால்விலங்கிட்டு கைவிலங்கிட்டு அரவானின் தாயிடம் கொண்டு வந்து நிறுத்துவேன் என்றும் துரியோதனன் உறுதியளிக்கிறான். ஆனால் இதனைத் தெரிந்து கொண்ட கண்ணன் அமாவாசைக்கு முதல்நாளாகிய சதுர்தசியில் சூரியனையும் சந்திரனையும் சந்திக்க வைத்து முதல்நாளை அமாவாசையாக்கி அரவானுக்குப் புத்தி புகட்டி பாண்டவர் பக்கம் களப்பலியாக்கி விடுகிறான்.

இந்நாடகத்திற்கு ஊடாக யுத்தம் என்பது தர்ம வழியில் நிகழ்வது அல்ல. அந்த யுத்தம் அதர்மம் நிறைந்தது. சூழ்ச்சியும் வஞ்சகமும் சதியும் நிறைந்தது. தமது வெற்றிக்காக இன்னொருவரைப் பலிகொடுக்கின்றனர். இவ்வாறான பிரதிகள் ஊடாக சமூகத்திற்கு சொல்லப்படும் செய்தி என்ன என்ற கேள்வி எழுகின்றது. இங்கு அமிர்தவல்லிக்கு இருந்த புத்திக் கூர்மைகூட அரவானுக்கு இல்லாமல் ஆக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பாண்டவர்களாலும் கௌரவர்களாலும் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு பலியிடப்பட்டவனாக அரவான் இருக்கிறான். எனவே அரவான் போன்ற நாடகப் பிரதிகள்

“சமூகங்களின் விடுதலைக்கான உரையாடல்களின் அடிப்படைகள் ஆகின்றன. ஏனெனில் சிந்தனை ரீதியாக விடுபட்ட சமூகங்களே விடுதலையின் பல பரிமாணங்களையும் புரிந்து கொள்ளக் கூடியவையாகின்றன.” (12) என்று கூறப்படுவது தற்கால இலக்கியப் போக்கில் குறிப்பாக தலித் இலக்கிப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக அமைந்திருக்கிறது.

‘சதுரங்க வேட்டை’ என்பது குருஷேத்திரப் போரில் கண்ணனின் சூழ்ச்சிகளைப் பேசுகின்ற மற்றொரு நாடக எழுத்துரு ஆகும்.

“தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும் என்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட மகாபாரதத்திலிருந்து தருமத்தை வெல்ல வைப்பதற்காக கண்ணன் செய்யும் சூழ்ச்சிகள், அதர்மப் போர்கள், கௌரவர்கள் வாழவேண்டும் என்பதற்காகப் பதிலுக்கு துரியோதனன் செய்யும் சூதுகள், வஞ்சகங்கள், சதுரங்க வேட்டையாக எழுதியுள்ளேன்.” என்று வாக்குமூலம் தருகிறார் நூலாசிரியர்.

சூது, வஞ்சகம் என விரியும் மகாபாரதக் கதையிலே கண்ணனின் சூழ்ச்சிகளே இங்கு சதுரங்க வேட்டையாக அமைந்திருக்கிறது. மறுபுறத்தில் துரியோதனின் வஞ்சகமும் காட்டப்பட்டிருக்கிறது.

எட்டுக் காட்சியாக இந்நாடகப்பாடம் விரிகின்றது. பாண்டவர் குடியிருப்பில் பஞ்சபாண்டவரும் கண்ணனும் பாஞ்சாலியும் வனவாசத்தையும் அஞ்ஞான வாசத்தையும் முடித்து விட்டு வந்து உரையாடும் காட்சி, கோள்களைக் கணக்கிட்டு நாள்களைக் கணிக்கும் சகாதேவனுடன் கண்ணன் உரையாடுதல், தருமனும் பாஞ்சாலியும் கண்ணனும் உரையாடுதல், கண்ணனைத் தூது செல்ல வேண்டுதல், துரியோதனன் அவையில் நடைபெறும் சம்பவங்கள், கண்ணன் தூது சென்ற விடயம் பற்றி பாண்டவர்களுக்குத் தெரியப்படுத்துதல், கண்ணன் தூது சென்ற சமயத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கட்டியக்காரர்கள் விபரித்தல், துரியோதனன் சபை, இறுதியில் துரியோதனன் தனிமையிலிருந்து அவரவர் செய்த சபத மொழிகளை நினைத்து மனஞ்சோர்ந்து போதல் ஆகியன இந்நாடகப் பிரதியில் விரிகின்றன.

தருமன் குருதிப் புனலில் குளித்தெழுந்து வெற்றிமாலை சூட்டிக் கொள்வதை விரும்பவில்லை என்று கூறியபோது “ஐவருக்கும் பத்தினியே அடுத்தவன் நான், வந்து அமரடி என் தொடை மீது என்று துரியோதனன் ஆர்ப்பரித்தபோது உன் தம்பியர்கள் செய்தார்களே உயிர் துடிக்கும் சபதங்கள். அவையெல்லாம் என்னாவது?” என்று வினாவெழுப்பி துரியோதனிடன் தூது செல்கின்றான் கண்ணன்.

அங்கு மாயச் சூதில் நாட்டைப் பறிகொடுத்த பாண்டவரும் பாஞ்சாலியும் அன்று பெரியோர்கள் பணித்த வண்ணம் பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாதவாசமும் செவ்வனே முடிந்து திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு அருமையான தாயாதி பாகத்தில் மீண்டும் கொடுத்து அவர்களோடு நட்புரிமை கொண்டு நீ வாழ வேண்டும் என்று கேட்கிறான். ஆனால் துரியோதனன் வெகுண்டு எழுகின்றான். கண்ணனை அவமதிக்கின்றான். இறுதியில் விடைபெறும்போது கண்ணன் நலம் விசாரிக்கும் வார்த்தைகளின் ஊடாகவும் வெவ்வேறு சம்பவங்களின் ஊடாகவும் துரியோதனன் பக்கமிருந்த பெரியோர்களும் வீரர்களும் சில காரணங்களால் போர் புரிவதில் இருந்து தவிர்க்க சில சபதமொழிகளைக் கூறுகின்றனர்.

குருஷேத்திரப் போரில் உன்பொருட்டு நான் வில்லேந்திப் போரிடமாட்டேன் என்று விதுரர் கூறுகிறார். அஸ்வத்தாமன் என்னைப் படைத் தலைமையில் இருந்து ஒதுக்கி விட்டாயே என்கிறான். குருஷேத்திர யுத்தத்தில் நான் பங்கேற்கப் போவதில்லை. தீர்த்தாடனம் போகிறேன் என்கிறான் பலராமன், ஒரு சூத புத்திரனின் நட்புக்காக என்னை நாவெடுத்துப் பழித்துரைத்தபோது மௌனித்திருந்த உன் சார்பில் நான் ஆயுதம் தரித்து பாண்டவர்களைக் கொல்லமாட்டேன் என்கிறார் பீஷ்மர். பீஷ்மர் காலூன்றிக் களத்தில் நிற்கும்வரை நான் கையிலே வில்லைத் தொடமாட்டேன் என்கிறான் கர்ணன், இவ் உறுதி மொழிகள் எல்லாம் துரியோதனனை சோர்வுக்குள்ளாக்குகின்றன. இதனால்தான் கண்ணன் தூது சென்று சாதித்ததைவிட சூது செய்து சாதித்தது ஏராளம் என்கிறார் நூலாசிரியர்.

இப்பிரதியில் பெண் சார்ந்த விடுதலைக் கருத்துக்களை ஆசிரியர் பாஞ்சாலி என்ற பாத்திரத்திற்கு ஊடாக உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கொண்டு வருகிறார். பாரதத்தில் பெண்கள் ஊமைகளாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரிகளாக இருக்கவேண்டும். அவர்கள் ஆண்கள் ஆட்டிப் படைக்கும் தோலாட்டப் பொம்மைகள், ஆடி விளையாடும் சூதாட்டக் காய்கள், ஆண்களுக்காகச் சூலாகிப் பிள்ளை பெறும் உரிமை மட்டும்தான் பெண்களுக்கு! பேணி வளர்ப்பதும் வாரியணைப்பதும் பிள்ளைகளைத் தங்கள் வாரிசுகளாய் உருவாக்கிக் கொள்வதும் ஆண்களே? யுத்தம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவெடுங்கள்! என்று பாஞ்சாலி கூறுகிறாள்.

இதனாலேயே “பாரதியின் பாஞ்சாலி சபதம் அன்றைய பெண் அடிமைத்தனத்தை குறிபொருளாய்க் கொண்டதுபோல ‘சதுரங்க வேட்டை’ இன்றைய அரசியல் சதுரங்க ஆட்டத்தை குறிபொருளாய்க் கொண்டு மகாபாரதக் கதைக்கு வியாக்கியானம் அளிக்கின்றது” (13) என்று சொல்லப்படுகிறது.

மகாபாரத்திலிருந்து மற்றொரு பிரதியான பீஷ்மரின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டு சத்தியவேள்வியை ஆசிரியர் படைத்துள்ளார். இதில் பீஷ்மரின் வீரம் கம்பீரம் தியாகம் ஆகியன சொல்லப்படுகின்றன.

சந்தனுவின் மகன் பீஷ்மர், அரச ஆட்சியைத் தியாகம் செய்தவர். தன் சகோதரர்களுக்காக வாழ்ந்தவர். காசிராஜன் மகள்மார் (அம்பா, அம்பிகா, அம்பாலிகா) மூவருக்கும் சுயம்வரம் நடைபெறும் நேரத்தில் மறை நூல்கள் போதித்த எண்வகை விவாக முறைகளில் ஒன்றாகிய இராக்கதர் முறையின்படி மூவரையும் கவர்ந்து செல்ல பீஷ்மர் வருகிறார். அப்போது சௌபால தேசத்து ராஜாவான சால்பா மீது காதல் கொண்ட அம்பாவைக் கவரும்போது பீஷ்மருக்கும் சால்பாவுக்கும் இடையில் போர் மூள்கிறது. சால்பா தோல்வியடைகிறான். அம்பா பீஷ்மரிடம் உயிர்ப்பிச்சை கேட்டு தன் காதல் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு மன்றாடுகிறாள். பீஷ்மர் அவனை மன்னித்து விடுத்தபோது, சௌபால தேசத்து ராஜா சால்பா தான் பீஷ்மரிடம் தோல்வியடைந்துவிட்டேன் என அம்பாவையும் வெறுக்கிறான்.

இதனால் அம்பாவின் திருமண வாழ்வு குலைந்து போகிறது. தன் திருமண வாழ்வைக் குலைத்த பீஷ்மரைப் பழிவாங்க அம்பா கடும்தவம் புரிந்து தீயுடன் சங்கமமாகிறாள். மறுபிறப்பில் அவளே சிகண்டியாக உருவெடுத்து குருஷேத்திரப் பேரில் பீஷ்மரைக் கொல்கிறாள். இதுவே பீஷ்மரின் கதை.

“வாழ்நாளில் என் தந்தை கவலை இன்றி வாழ வேண்டும். வரலாற்றில் எம் வம்சம் ஆலவிருட்சமாகத் தழைக்க வேண்டும். அதற்காக ஆயுள் முழுவதும் நான் பிரமச்சாரிய விரதம் பூண்டு நிற்பேன். அத்தோடு சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்காக என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இது கங்கையின் மைந்தனின் சபதம்… சந்தனு புத்திரனின் சத்தியம்” என்று சபதம் பூண்டு மிகப்பெரும் வீரனாக வாழ்ந்த பீஷ்மரை அம்பையின் சாபம் சிகண்டி வடிவில் வந்து சாய்த்தது. ஆனால் பீஷ்மரின் சத்தியவேள்வி ஜெயித்தது என்கிறார் ஆசிரியர்.

பாஞ்சாலி ஆண்களால் வஞ்சிக்கப்பட்டதுபோல் அம்பாவும், ஆண்களால் தனது வாழ்வு பறிக்கப்பட்டது என்று முழக்கமிடுகிறாள். “என்னால் என் வாழ்வைத் தீர்மானிக்க முடியவில்லை. அது ஆடவர்களின் கைவிரிப்பில் சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது. இன்று நான் ஏமாந்து போயிருக்கலாம். மீண்டும் இன்னொரு பூகம்பமாய்த் திரும்பி வருவேன். தந்தையே பெற்ற பெண்ணை நிர்க்கதியாகக் கைவிட்ட உங்களுக்கு எதற்காக அரசுரிமை… சால்வா காதலித்தவளை கைப்பிடிக்கத் தகுதியில்லாத உனக்கு எதற்காக இந்த உறைவாள். பிதாமகரே பெண்களின் வாழ்;வைக் கூறுபோடவா உங்களிடம் இந்த வீரவாள். வெற்றிவாள். இழந்த இந்தக் கணக்கை நேர்செய்ய நான் மீண்டும் பிறப்பேன்.” என்று சபதம் செய்கிறாள்.

இப்பிரதிக்கூடாக, பெண்களின் மறுக்கப்பட்ட உரிமைக்குரலை ஏழுமலைப்பிள்ளை கொண்டு வந்துள்ளார். இங்கு பீஷ்மரின் தியாகம் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உடையதோ, அம்பாவின் மறுக்கப்பட்ட வாழ்வுக்கான குரலும் உணர்வுபூர்வமாக வெளிப்படுகிறது.

3.3.3 ஏனைய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள்

இந்தப் பகுப்பில் கம்பராமாயணம், மகாபாரதம் தவிர்ந்த ஏனைய இலக்கியங்களை அடிப்படையாக் கொண்ட எழுத்துருக்களை நோக்குவோம்.

சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதியாக ‘இலட்சியத் துறவு’ அமைந்துள்ளது. இது சத்தியவேள்வி என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் அரச போகத்தை வெறுத்து துறவு வாழ்வு மேற்கொண்ட இலட்சிய வரலாற்றைக் கூறுவதே இலட்சியத்துறவு ஆகும். தமிழ்நாட்டில் நிலவிய கோவலன் கண்ணகி மாதவி கதையைக் காவியமாக்கித் தமிழுக்குத் தந்த இளங்கோவடிகள், சேரசோழபாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒன்றுமையைக் குலைந்து வாழ்ந்த காலத்தை ஐந்து காட்சிகளின் ஊடாகக் கொண்டு வருகிறார்.

முதற்காட்சியில் சேரன் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் சிலப்பதிகாரம் பற்றி உரையாடுவதும் ஏனைய காட்சிகளில் காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்ட இடத்தை நேரில் பார்த்தபடி பரதவருடன் உரையாடுவதும் அமைந்துள்ளது. பாண்டியர், இளங்கோவடிகளை விலங்கிட்டு அரண்மனைக்கு அழைத்துச் செல்வதும் விசாரிக்கப்படுவதும் ஏனைய காட்சிகளி;ல் கூறப்பட்டுள்ளன.

“பண்டைய நம் தமிழரிடையே காணப்பட்ட உள்வீட்டு முரண்பாடுகளை உடைத்தெறியப் புகுத்தப்பட்ட பாத்திரங்கள் அற்புதமானவை.” (14) என்று இந்நூலின் அணிந்துரையில் குறிப்பிடுவதுபோல் இங்கு இளங்கோவடிகளின் அரசியற் பற்றற்ற நிலையும் சேரநாடு, சோழ நாடு பாண்டிய நாடு என்ற எல்லைகள் கடந்து தமிழ்நாடு என்ற பொதுப்பரப்பில் மூவேந்தர்களும் ஒன்றுபடவேண்டும் என்ற வேணவாவும் கொண்டவராக இளங்கோவடிகளை ஏழுமலைப்பிள்ளை படைத்திருக்கிறார்.

சத்தியவேள்வி தொகுப்பில் ‘வள்ளுவர் தூது’ என்ற பிரதி திருவள்ளுவர் பாத்திரத்தைக் கண்முன் கொண்டு வருகின்றது. “இந்த நாடகத்தைப் படிப்பவர்களும் பார்ப்பவர்களும் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே என் நோக்கம். அவர் வாழ்ந்த காலம் அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் கலை இலக்கிய அரசியல் ஆன்மீக வாழ்க்கையில் இரண்டறக் கலக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.” என்று ஏழுமலைப்பிள்ளை எழுதுகிறார்.

இந்நாடகத்தில் மூவேந்தர்களுக்குள் ஒற்றுமை உண்டாக வேண்டும் என்பதற்காக சோழமன்னன் கரிகாலனிடம் பாண்டியன் உக்கிரப்பெருவழுதிக்காகத் தூது செல்கிறார் வள்ளுவர். இதற்கூடாக வள்ளுவரின் பொதுமையும் நாவன்மையும் பேசப்படுகின்றன.

பாண்டியன் சபையாக இருக்கட்டும் சோழனின் சபையாக இருக்கட்டும் மிகத் தெளிவாகவும் நயமாகவும் அர்த்தமாகவும் பேசி அவர்களின் மனங்களை மாற்றுகிறார் வள்ளுவர்.

அப்போது, கரிகாலன் வள்ளுவரிடம் கூறுகின்றான்

“உங்கள் வருகையை முன்னிட்டு சிறையிலிருக்கும் சில குற்றவாளிகளுக்குச் சிறை வீடும் தரப்படுகிறது. என் வடநாட்டுப் படையெடுப்பு வெற்றியின் அறிகுறியாக எனக்காக மகத நாட்டு மன்னன் இங்கு அமைத்த பட்டிமண்டபத்தில் நீங்கள் இன்று மாலை மக்களுக்கு அறவுரை ஆற்றவேண்டும்.” என்று வேண்டுகிறான். இவ்வாறான மனமாற்றங்களை மன்னர்களுக்கு ஏற்படுத்துவதற்கு சங்கப் புலவர்கள் பல பாடல்களை இயற்றியும் அறக்கருத்துக்களை வலியுறுத்தியும் வந்திருக்கிறாரகள் என இலக்கியங்கள் ஊடாக அறிகிறோம். அதேபோல் வள்ளுவரின், பொதுமையும் நாவன்மையும் இப்பிரதியில் வெளிப்படுகின்றன.

வள்ளுவர் எடுத்துரைக்கும் வார்த்தைகள் திருக்குறளிள் மறைக்கருத்துக்களைக் காட்டுவதோடு இலக்கியச் சிறப்புக்களையும் வெளிப்படுத்துகின்றன.

“வீரரிடம் பகை கொண்டாலும் அறிஞரிடம் பகை கொள்ளக்கூடாது”

“எண்ணித் துணிக கருமம்”

“பகைவரிடம் நட்பு நாடும்போது அவர்களிடம் நாம் நம் துன்பங்களைச் சொல்லக்கூடாது. உறுதியாகவே இருக்கவேண்டும்.”

“முயலைக் கொன்ற அம்பைவிட யானையைக் கொல்ல குறி பார்த்துத் தவறிவிட்ட வேலே சிறந்தது.”

“முதலைக்கு நீரில் இருக்கும்வரைதான் பலம், நிலத்திற்கு வந்தால் பலமில்லை”

“தன்வலிமை பகைவனின் வலிமை, தனக்கும் பகைவனுக்கும் துணையாக இருப்பவர் வலிமை சீர் தூக்கிப் பார்க்கவேண்டும்.” முதலானவற்றை திருக்குறளில் இருந்து உரைப்பகுதிகளாக எடுத்துக்காட்டுவது கற்றோர் மட்டுமன்றி மற்றோரும் எளிதில் புரிந்து கொள்வதற்கு வழிவகுக்கின்றது.

“நாவுக்கரசனான மருள் நீக்கியார்” என்ற மற்றொரு நாடகப்பிரதியில் நாவுக்கரசரின் - ஞானம் பக்தி - தொண்டு ஆகியவற்றை எடுத்துச் சொல்வதற்கு முனைந்திருக்கிறார்.

நாவுக்கரசர் என்னும் மருள் நீக்கியார் குடும்பத்தில் தந்தை இறந்ததுடன் தமக்கையாரின் அரவணைப்பில் வாழ்ந்தவர். தமக்கையாரின் கணவரும் போரில் இறந்துவிட மனம் சோர்ந்து போன நிலையில் பாடலிபுரத்திற்கு கல்வி பயிலச் செல்கிறார். அங்கு சைவசமயத்திலிருந்து சமண மதத்திற்கு மாறுகிறார். அங்கு தருமசேனர் என் பெயரில் துறவிகளுக்குத் தலைவராகிறார்.

தம்பி மதம் மாறியமைக்காக தமக்கையாரின் மனந்துடிக்கிறது. தமக்கை திருவதிகை வீரட்டானத்துக்குச் சென்று இறைவனிடம் முறையிடுகிறார். சிறிது காலத்தில் கலையறிவுக்கும் கற்பனைப் புகழுக்கும் பதவிக்கும் பட்டங்களுக்கு இடமாக உள்ள அவனுடைய நெஞ்சம் உன் திருவடிகளுக்கு இடமாக விளங்காதா என்று வேண்டுகிறார்.

தீராத சூலைநோயின் காரணமாக தமக்கையாரிடம் வந்து சேர்கிறார். பின்னர் திருவதிகை வீரட்டானத்தை வணங்கி சூலை நோய் நீங்கப் பெறுகின்றார். தமக்கை திலகவதியாரின் தொண்டும் அர்ப்பணிப்பும் நாவுக்கரசரை மனம் மாற்றுகிறது. பக்திப் பாடல்கள் பாடி இறைவனைத் தொழுது ஏத்துகிறார். உழவாரத் தொண்டு புரிகிறார்.

பட்டம் பதவி படிப்பு ஆட்சி அதிகாரம் இவை எல்லாவற்றையும் மதிக்காதே. அன்பு தொண்டு இவைகளை மட்டும் போற்றி வாழக் கற்றுக்கொள் என்பதைத் தம்பியாருக்குப் போதனையாகக் கூறுகிறார் திலகவதியார். இதனை, ஆற்றுகைக்கு ஏற்றவாறான ஒரு நாடகப்பிரதியாக ஏழுமலைப்பிள்ளை தந்துள்ளார்.

3.3 வரலாற்று நாடகங்கள் : கதையும் கதைப்பண்புகளும்

ஏழுமலைப்பிள்ளை வரலாற்றின் அடிப்படையிலும் நாடக எழுத்துருக்களை ஆக்கியுள்ளார். அவற்றில் குறித்த கால ஆட்சியாளர்களும் அதில் முனைப்புப்பெறும் பாத்திரங்களும் வெளிப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட நாடக எழுத்துருக்கள் தமிழ்மன்னர்களின் ஆட்சிப் பிரதேசங்களை ஒட்டியனவாகவும் இந்தியாவின் வடமாநிலப் பிரதேசக் கதைகளையொட்டியவையாகவும் அமைந்துள்ளன. மறுபுறத்தில் மேலைநாடுகளின் ஆட்சியாளர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டும் சில நாடகப் பிரதிகளை ஆக்கியுள்ளார். அவற்றைப் பொருள் அடிப்படையில் வகுத்துப் பார்த்தால் அதிகமும் நிலங்களுக்கான யுத்தங்களாகவும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான யுத்தங்களாகவும் இருந்துள்ளன. மறுபுறத்தில் இந்த யுத்தங்களுக்கு ஊடாகவே துரோகமும் வஞ்சகமும் பழிவாங்கலும் காதலும் தியாகமும் வீரமும் கூடப் பேசப்பட்டுள்ளன. அந்த வகையில் வரலாற்றின் அடிப்படையாக எழுந்த நாடகப் பிரதிகளை பின்வருமாறு வகைப்படுத்திப் பார்க்கமுடியும்.

அ) தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்
ஆ) ஏனைய நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்

தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட பிரதிகள் என்று சங்கிலியன், ஆணை, தந்தையின் ஆணை, வேங்கையின் ஆணை, புயலுக்குப்பின், தேசத்தின் ஆணை, துரோகத்தின் முடிவு, வீரசிவாஜி, மருதுபாண்டியர்கள், பரஞ்சோதியின் வீரம் துறவு ஆகியவற்றை உள்ளடக்கலாம்.

தமிழரல்லாத ஏனைய நிலப்பரப்புக்களை அடிப்படையாகக் கொண்ட பிரதிகளாக ஜுலியஸ் சீசர், பழிக்குப் பழி, மகுடபங்கம், மாவீரன் போரஸ், மாவீரனை மயக்கிய பேரழகி வெற்றியின் ஆணை ஆகியவற்றை உள்ளடக்கலாம்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R