முன்னுரைபழங்காலத்தில் ஆயிரம் என்ற எண்ணிக்கை பேச்சுவழக்கில் பெரிய எண்ணாகக் கருதப்பட்டது. ஆயிரம் தடவை சொன்னேனே, ஆயிரம் தடவை போய் சொல்லி என்பது நாம் அறிந்ததுதான். தொல்காப்பியத்தில் எண்ணுப் பெயர் புணரியல் விதிகள் விரிவாக குற்றியலுகர புணரியலில் இடம் பெற்றுள்ளன. எண்ண இயலாத அளவீடுகளைக் குறிக்க தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலான பெயர்களும், வழக்கில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களில் நாம் காண முடிகிறது. பரிபாடலில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன பேரெண்ணுப் பெயர்கள் என பாடப்பட்டுள்ளது. சங்கம் என்பது கோடி என்றும், தாமரை என்பது கோடாகோடி என்றும் சொல்லப்படுகிறது. கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுபெயர் வரும் இடங்களை இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.
சீதைக்கு, இராமனுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்
இராமன் வில்லை உடைத்ததைக் கேட்ட மிதிலை நகரத்து மக்கள் சந்தோஷமாகப் பேசினர். இராமனின் அழகைக் காண்பதற்குச் சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும். சீதையைக் காணவும் அதைப்போல இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும். இந்த அழகனின் தம்பியினுடைய அழகையும் பாருங்கள் என்று சிலர் சொல்லுவர். இந்த அழகர்களைப் பெற்றுள்ள இவ்வுலகம் தவம் பெற்றுள்ளது என்பது சிலர். இவ்வுலகில் தோன்றிய அழகர்களான இவ்விருவரையும் நாம் காணுமாறு இந்த மிதிலை நகருக்கு அழைத்து வந்த விசுவாமித்திரனை வணங்குங்கள் என்பர் ஒரு சிலர்.
“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்
நம்பியைக் காண்மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார்
இம்பர் இந்நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்”
(கார்முகப்படலம் 657)
ஆயிரம் கைகள்
தசரதன் சேனைகளுடன் சந்திர சயலம் விட்டுச் சோனையாற்றை அடையும்போது, நட்சத்திரங்களாகிய பற்களைப் பெற்ற இரவாகிய இரணியனைக் கோபித்து தொகுதியாக உள்ள வெப்பம் கொண்ட கதிர்கள் என்று சொல்லப்படுகின்ற ஆயிரம் கைகளை வெளியே நீட்டிக்கொண்டு, தான் தோன்றுகின்ற இடமாகக் கொண்ட உதயகிரி எனும் பொன் தூணிலிருந்து நரசிங்க மூர்த்தியைப் போல விளங்கும் சூரியன் உதயமானார்.
“மீனுடைய எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி”
(பூக்கொய் படலம் 839)
ஆயிரம் கண்கள்
விசுவாமித்ர முனிவர் தசரதனைக் காண அவர் அரசவை அடைந்தார். தசரதன் மண்டபத்தில் தூய்மையான வெண்மையான சிங்காசனத்தில் விளங்கித் தோன்றினார். ஆகாயத்தில் செல்லும் சாரணர் தசரதனைக் கண்டு நம் தலைவனான இந்திரன் இவன்தானோ என்று ஐயுற்றனர். பின்பு நன்கு பார்த்து இவனுக்கு ஆயிரம் கண்கள் இல்லை, அதனால் இந்திரன் அல்லன் என்று தன் ஐயத்தைப் போக்கிக் கொண்டனர்.
“நாயகன் இவன் கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினர்”
(கையடைப் படலம் 317)
ஆயிரம் யானைகளின் வலிமை
முனிவர் தாடகையின் வரலாற்றைக் கூறும் போது இராமனிடம் இனிய பல உயிர்களைக் கொன்று திரியும் செயலை வாழ்க்கையாக உடையவளும் எமனைப் போன்ற கொடும் தோற்றமுடையவளும், இவையெல்லாம் ஆயிரம் மத யானைகளின் வலிமையைப் பெற்றவளும் ஆகிய ஒருத்தியின் வரலாற்றைக் கேட்பாயாக என்று கூறத் தொடங்கினர்.
“அன்றியும் ஐ இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினால் உறுதி கேள் என”
(தாடகை வதைப்படலம் 360)
ஆயிரம் கண்கள் உண்டாக சாபம்
இந்திரன், கௌதம முனிவர் மனைவி அகலிகை மேல் ஆசை கொண்டு, முனிவர் வேடத்தில், முனிவர் இல்லாத நேரத்தில், அவரது உருவில் குடிசையை அடைந்து அவளுடன் மகிழ்ந்திருந்தான். ஞான திருஷ்டியால் இதை அறிந்த முனிவர் அங்கு வந்து இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் உண்டாகும் படி சாபம் விட்டார். உடனே ஆயிரம் கண்கள் தோன்றின.
“ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினான் அவையெல்லாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம்”
(அகலிகைப்படலம் 478)
பெண்களுக்கு அடையாளமாக உள்ள பெண் குறிகள் ஆயிரம் உன் உடம்பில் தோன்றுவதாக என்று இந்திரனுக்கு சாபம் அளித்தார் இமைக்கும் நேரத்திற்குள் பெண் குறிகள் ஆயிரம் அவன் உடம்பில் தோன்றின
மன்மதனின் ஆயிரம் மலர்க்கணை
விசுவாமித்திரர் இராமனுக்குக் குறிப்பு காட்ட இராமன் வில்லை நோக்கி எழுந்து செல்லும்போது தூய்மையான தவங்களைச் செய்யும் பழமை மிக்க விசுவாமித்திரரால் ஏவப்பட்ட இராமன் சிவனது வலிய வில்லை முறிப்பதற்கு முன்னர், சிவந்த அணிகலன்களை அணிந்த மங்கையரின் மனங்கள் தோறும் மலர் அம்புகளை எய்து, மன்மதன் ஆயிரம் வில்களை முறித்தான்.
“சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்”
(கார்முகப்படலம் 641)
ஆயிரம் இராமர் வந்தாலும் உனக்கு ஈடாகார்
பரதன் பெருந்தகையைக் குகன் புகழ்ந்து கூறும் போது, புகழ் படைத்த பரதனை உன் தாயாகிய கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு உன் தந்தையாகிய தசரதன், அயோத்தி நாடாளும் ஆட்சி பொறுப்பினை உன்னிடம் அளித்தான். ஆனால் நீயோ ஒருவன் தன்னிடம் உள்ள தீய செயல்களை எல்லாம் விட்டு விடுவதைப் போல, இந்த ஆட்சி பொறுப்பினையே விட்டு விட்டாய். வருத்தம் தோய்ந்த உள்ளத்தோடு இங்கே வந்துள்ளாய். இத்தகைய உனது சீரிய பண்புகளை எல்லாம் நன்கு ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஆயிரம் இராமன் வந்தாலும் உன் ஒருவனுக்கு ஈடாக மாட்டார் என்று வியந்து கூறினான்.
“போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா”
(கங்கை காண் படலம் 10 19)
ஆயிரம் ஓடங்கள்
குகன் காணிக்கையுடன் இராமனைக் காண தவப்பள்ளி வரும்போது, இராமன் முனிவர்களுடன் இருந்தான். குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையிலே பழங்காலம் தொட்டு ஓடங்களைச் செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்.
“ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க் குகன் எனும் நாமத்தான்”
(குகப்படலம் 637)
ஆயிரம் திருநாமம்
சித்திரக் கூடத்தின் இயற்கை அழகை இராமன் சீதைக்குக் காட்டினான். நாம் உயர்வாக மதிக்கும் தேவர்களுக்கும், மானுடராகிய நமக்கும் ஒரு தன்மையில் பொருந்தி ஒரு நிலையில் நிற்கும் குற்றமற்ற வனம் அழகிய கண்களை உடையவனுமான ஆயிரம் திருநாமம் உடைய திருமாலின் அவதாரமான இராமன் ஜனகனுடைய புதல்வியான சீதைக்கு சந்தன மரங்கள் நெருங்கிய பொன்னை உடைய அந்த பெரிய சித்திரக்கூட மலையினது இயற்கை வளங்களை எல்லாம் விளங்கும்படி காட்டலானான்.
“நினையும் தேவருக்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற
அனகன் அம்கணன் ஆயிரம் பெயருடைய அமலன்”
(சித்திரக் கூடப் படலம் 728)
ஆயிரம் அம்புகள்
இராமனுடன் கரன் போர் புரியும் போது நெருப்பைப் போன்ற கொடிய வடிவம் உடையவையும், காற்றைப் போன்ற வேகம் பெற்றவையும் அம்புக்குரிய எல்லாச் சிறப்புகளையும் பெற்றவையுமான கொடிய வாயையும் கூர்மையையும் கொண்ட ஆயிரம் அம்புகளை அரக்கர் தலைவனான கரன் இராமன் மேல் செலுத்தினான். அவற்றை நெருப்பைப் போன்ற கொடிய வடிவம் உடையனவும் காற்றைப் போன்ற வேகம் பெற்றெனவும் அம்புக்குரிய எல்லாச் சிறப்புகளையும் பெற்றவையுமான கொடிய வாயையும் கூர்மையையும் கொண்ட ஆயிரம் அம்புகளால் இராமன் துணித்து அறுத்தான்.
“தீ உருவக்கால் விசைய செவ்வியன வெவ்வாய்
ஆயிரம் வடிக்கணை அரக்கர்பதி எய்தான்”
(கரண் வதைப்படலம் 531)
இமையாத கண்கள் ஒரு ஆயிரம் இல்லையே
சிறந்த தவத்தோன் என்று எண்ணி சீதை, இராவணனை வரவேற்றபோது சீதையைக் கண்ட இராவணன் சிவந்த இதழ்களை உடைய தாமரை மலரை விட்டு இங்கு வந்துள்ள திருமகள் போன்ற சீதையினது ரத்தின ஒளியைப் பெற்ற திருமேனியின் அழகைக் காண்பதற்கு என எனக்குள்ள 20 விழிகள் போதுமா? இமையாத கண்கள் ஒரு ஆயிரம் இல்லையே என்று எண்ணி துன்புற்றான்.
“ஏயுமே இருபது இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை என்று அவலம் எய்தினான்”
(ஜடாயு உயிர் நீத்த படலம் 831)
ஆயிரம் ஆண்டுகள் கண்டாலும்
மூல பலப் படையின் அழிவு காணுமாறு சுக்ரீவனை இராமன் ஏவும்போது தாவும் இயல்புடைய அலைகளை உடைய ஏழு கடல்களும் ஒன்றாகத் திரண்டது போலத் தோற்றத்தைத் தரும் பாதகரான அரக்கர் பொருந்திய இடங்களில் எல்லாம் காண்பவர் அச்சத்தால் விம்மி அழுது கொண்டு நிற்பதல்லாமல், ஆயிரம் ஆண்டுகள் கண்டாலும் காட்சிக்கு ஓர் எல்லை இல்லை. ஆதலால் நீ ஆய்ந்து கூறுவாயாக என்று வானரர் வேண்டினர்.வீடணன் அதற்கு விடை சொல்லலானான்.
“ஆயிரம் பருவம் கண்டால் காட்சிக்கோர் கரையிற்று அன்றால்
மேயின துறைகள் தோறும் விம்மினார் நிற்பது அல்லால்”
(வானவர் களம் காண் படலம் 35 25)
ஆயிரம் பெருவெள்ளம்
மூல பல வதைப் படலத்தில் வன்னி பாய்ந்து பொருமாறு கூறினான். அவன் ஆயிரம் பெரு வெள்ளமாகிய அரக்கர் படை இராமனது அம்புகளால் அழிவு பெறும். அழிந்த பின்னர் இனி செய்ய வேண்டியது யாது? மன உறுதி பெற்று, இராமன் மீது பாயுங்கள் என தன் தலைவனான இராவணனுக்கு நல்லது செய்யும் நோக்கத்தோடு கூறினான்.
“ஆயிரம் பெருவெள்ளம் அரைப்பட த்
தேய நிற்பது பின் இனி என்செயப்”
(மூலபல வதைப் படலம் 33 68)
பகைவரின் வலிமையை எடுத்துக் கூறும் போது, இலங்கையின் எல்லையில் தீயினும் கொடியவர்களாய்ப் போர் செய்யும் அரக்கர்தம் படை ஆயிரம் பெரு வெள்ளம் போன்றது. இந்தப் பெரும்படை, முப்புரி நூல் அணிந்த மார்பு கொண்ட இராம லக்ஷ்மணர்கள் எய்த இரண்டு விற்களால் எமபுரத்தின் உட்புறம் சென்று நிறைந்தது போல் அழிந்தது.
“ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில்
தீயின் வெய்ய போர் அரக்கர்தம் சேனை அச்சேனை”
(படைக்காட்சிப் படலம் 32 28)
ஆயிரம் பரி
இராவணன், இராமனுடன் முதல் நாள் போர் புரிய செல்லும்போது, அவன் ஏறிய தேர் 1000 குதிரைகள் கட்டப்பட்டது. அதிர்கின்ற குரலை உடையது. மிகப்பெரிய கடலைப் போன்றது. வானவர் நாடு எங்கும் தெரிந்தது. இந்திரன், இராவணனிடம் வன்மையிழந்த போது அவனேத் தந்தது.
“ஆயிரம் பரி பூண்டது அதிர் குரல்
மாயிருங் கடல் போன்றது வானவர்”
(முதல் போர் புரி படலம் 10 52)
ஆயிரம் பெயரவன்
இராமன், கும்பகர்ணன் செல்லும் வழியே அம்புகளால் தடுத்த வானரர்கள் எரிக்கும் கதிரையுடைய சூரியன் புதல்வனைப் பெற்றெடுத்த கையினனாய் கும்பகர்ணன் சென்றான். இனி எங்களுக்கு அரசர் யார் என்று கூக்குரலிட்டவாறு ஆயிரம் பெயர்களை உடைய இராமனின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.
“ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்”
( கும்பகர்ணன் வதைப் படலம் 14 86)
ஆயிரம் பெரும் தோள்கள்
இராவணன் மந்திரப் படலத்தில் வீடணனின் அறிவுரைக்கு இராவணன் விடை கூறும் போது, வலிமையுடையவனான திருமால் தன் விஸ்வரூபத்துக்கு உரிய ஆயிரம் பெரும் தோள்களையும், ஆயிரம் தலைகளையும் கொண்டு மிகப் பெரிய மண்ணுலகையும் உள் அடிக்குள் அடக்க வல்ல பெரிய வடிவத்தை எழுதியது சிறுமையுடையது என்று எண்ணி, நாம் தின்கின்ற வலிமை குறைந்த மனித வடிவத்தை எடுத்தானோ என்று கேட்டான்.
“ஆயிரம் பெரும் தோள்களும் அத்துணைத் தலையும்
மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்”
(இராவணன் மந்திரப் படலம் 126)
ஆயிரம் தீயநிமித்தங்கள்
ஒற்றுக் கேள்விப் படலத்தில் மாலியவான், இராவணனுக்கு அறிவுரை கூறும் போது, ஆயிரக்கணக்கான தீய நிமித்தங்கள் இந்த இலங்கையில் தோன்றியுள்ளன எனக் கூறுகிறார்கள். உயிர்களுக்குத் தாயைக் காட்டிலும் அருள் சுரந்து நலம் செய்யும் பெண்களுள் நல்லவளான சீதை இருக்கும் இடம் எதுவென கண்டறிவதற்காகத் தகுதியுடையவனான இராமன் அனுப்பிய தூதனான அனுமான் தாக்கியதால், இலங்கை நகரத்தின் தெய்வம் இந்நகரத்தைக் காத்தலை விட்டுச் சென்றுவிட்டது என்றும் சொல்கிறார்கள். இது நாட்டில் போர் வந்துவிட்டது என்றும் கூறுகின்றனர் என்று கூறினான்.
“ஆயிரம் உற்பதங்கள் ஈங்கு வந்தடுத்த என்றார்
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறியத் தக்கோன்”
(ஒற்றுக் கேள்விப்படலம் 766)
ஆயிரம் கணைப்பாய்தல்
நாக பாசப் படலத்தில் இந்திரஜித்துக்கும், இலட்சுமணனுக்கும் போர் நடைபெற்றது. இலட்சுமணன் செலுத்திய ஆயிரம் அம்புகள் தன்னைத் தாக்கியவுடன் கொடியவனான இந்திரஜித் பொங்குகின்ற நெருப்பின் மீது நெய் பொழிந்தது போல, மனம் கொதித்து இலட்சுமணன் மீது நூறு அம்புகளை ஒருசேரச் செலுத்தினான்.
“ஆயிரம் கணைப்பாய்தலும் ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்துறா”
(நாக பாசப் படலம் 20 67)
ஆயிரம் தேர்கள்
பிரம்மாஸ்திரப் படலத்தில் அரக்கரை இலட்சுமணன் அழிக்கும்போது ஒருமுறை தொடுத்து விடப்பட்ட அம்பில் ஆயிரம் தேர்கள் அச்சு முறிந்து விழும். தாவி ஓடும் குதிரைக் கூட்டங்கள் இறந்துவிழும். பாகர்கள் இறப்பார்கள். அச்சம் அற்றுப் போகப் படைத்தலைவர்களின் பெரிய தலைகள் துணிக்கப்படும். இத்தகைய போர் நடக்கும் களத்தில் தீ கிளம்பும். புகை மேல் எழும். உலகமே எரிந்து போகும்.
“ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும்
பாய் பரிக்குலம் படும் பாகர் பொன்றுவர்”
(பிரம்மாஸ்திரப் படலம் 24 31)
பிரம்மாஸ்திரப் படலத்தில் போர் நிகழ்ச்சியை நோக்கி இந்திரஜித் வியக்கும் போது, ஆயிரம் தேர்களையும், ஆற்றல் மிக்க யானைகளையும், அசைந்தாடும் இயல்புள்ள குதிரைகளையும், ஆயிரம் காலாட்படையினரின் தலைகளையும், சக்கராயுதம் முதலிய படைக் கருவிகளையும், அறுத்த பின்பும் அப்பால் சென்ற அம்புகளின் வேகத்திறமையைத் விரும்பிப் பார்ப்பான். விரைந்து செல்லும் அம்புகளுக்கு எல்லை என்று எதுவும் இல்லாத பரப்பினைப் பார்ப்பான்.
“ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை
ஆயிரம் தலையை ஆழிப்படைகளை அறுத்தும் அப்பால்”
(பிரம்மாஸ்திரப் படலம் 24 10)
அதிகாயன் தேரில் வர, அங்கதன் தோள் மேலே போர் புரியும்போது பாற்கடலில் நீரை, நெருப்புப் பிறக்குமாறு கலக்கிய வாலியின் மகனான அங்கதன், ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட இடிபோல ஒலி எழுப்புவதான அதிகாயனது உறுதியான தேர் சென்று எல்லாத் திசைகளிலும் தானும் ஒரு காற்றாடி போலச் சாரி சுற்றிச்செல்வான். அந்தத் தேர் மேல் நோக்கி உயர்ந்தால், தானும் உயர்வான் கீழ்நோக்கி தாழ்ந்தால் தானும் தாழ்வான். வானத்தை அடைந்தால் தானும் அங்கு போவான்.
“ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண் தேர்
போயின திசைகள் எங்கும் கறங்கு எனச் சாரி போமால்”
(அதிகாயன் வதைப்படலம் 18 51)
ஆயிரம் தாமரை
நிகும்பலையாகப் படலத்தில் யாகத்தீ அணைதல் கண்டு இந்திரஜித் மனம் வருந்தினான். ஆயிரம் தாமரை என்னும் பேரளவினைக் கொண்ட கடல் போன்ற பெரிய அரக்கர் மிகக் குறைந்த ஏ என்னும் நேரத்தில் அழிந்ததும், தூயோனாகிய இலட்சுமணனது வில்லாற்றலும், தொடங்கிய வேள்வி முற்று பெறாமையால் தான் அடைந்த துன்பத்தையும், சினத்தையும் தூண்டிவிட இந்திரஜித் மனம் புழுங்கினான்.
“ஆயிரம் மலருடைய ஆழி மாப்படை
ஏ உனும் மாத்திரத்து இற்ற கொற்றமும்”
(நிகும்பலையாகப்படலம் 29 33)
ஆயிரம் யோசனை தூரம்
மருத்துமலைப் படலத்தில் அனுமன் மருத்துமலையைப் பெயர்த்து எடுத்து மீண்டும் வருகிறார். உலகம் முழுவதும் பரந்த புகழுடன் கூடிய அனுமன், ஆயிரம் யோசனை தூரம் அகலம் மேலே உயர்ந்து, ஆயிரம் யோசனை தூரம் ஆழ்ந்துள்ள அந்தச் சஞ்சீவி மலையை ஏ என்ற ஒருமுறை சொல்லும் கால அளவில் ஒரு கையில் ஏந்தியபடி தாவினான்.
“ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம்மலை”
(மருத்துமலைப் படலம் 2708)
ஆயிரம் பேர்
கும்பகர்ணன் வதைப் படலத்தில் கும்பகர்ணன் வாள் ஏந்தி போரிடுகிறான். இரண்டாயிரம் பேய்கள் சுமந்து செல்வதாகிய எரிக்கும் ஒளியை உடைய வயிர வாளைப் பிடித்த வலக்கையை உடைய கும்பகர்ணன், ஆயிரம் பேர்கள் சுமந்து வந்து அந்த இடத்தில் கொடுத்ததாகிய ஒப்பற்ற மிகப்பெரிய கேடயத்தை இடக்கையில் ஏந்தி கொண்டான்.
“ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு
மா இருங் கேடகம் இடத்து வாங்கினான்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 15 12)
ஆயிரம்கிரணங்கள்
ஆயிரம் என்கின்ற மிகுதியான கிரணங்களைக் கொண்ட சூரிய மண்டலம் சுற்றி வருகின்ற மேருமலை போன்ற தோற்றம் கொண்ட கும்பகர்ணன், கேடயத்தை அசைத்து மேல் வீசி, வானத்து விண்மீன்களைக் கீழே உதிர்த்து விழச்செய்தான். ஆதிசேசனின் உச்சியுடன் பூமியை அதிரச்செய்தான். ஆரவாரம் செய்தான் (கும்பகோணம் வரைபடலம் 15 13)
ஆயிரம் சிங்கங்கள்
கும்பகர்ணன் வதைப் படலத்தில் கும்பகர்ணன் போர் புரிவதற்காகத் தேரில் ஏறினான். ஆயிரம் சிங்கங்களும், ஆயிரம் யானைகளும், ஆயிரம் பூதங்களும் பூட்டப் பெற்றதும் மிகப்பெரிய பூமியைச் சுமப்பனவுமாகிய 8 யானைகளும், 8 நாகங்களும் பின்வாங்கச் செய்வதை ஒத்த மிகுந்த பாரமுடையதும், மிக்க ஒளியுள்ள மணிகள் பதித்ததுமான தேர் ஒன்றின் மீது ஏறி வந்தான். கும்பகர்ணன்
“ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம்
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 13 16)
மல்லர்கள் ஆயிரம்
கும்பகர்ணன் வதைப் படலத்தில் கும்பகர்ணனை எழுப்பவும், இராவணன் மல்லரை அனுப்பினான். அந்த விலங்குப் படை கும்பகர்ணனை மிதித்துச் செல்லவும் அவன் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. இந்தச் சேனையும் வெற்றி பெறாமல் திரும்பி விட்டது என்று பணியாளர்கள் நால்வரும் இராவணனுக்குத் தெரிவித்தனர். இராவணன் உடனே தம் தொழிலில் வல்லவரான மல்லர்கள் ஆயிரம் பேரிடம் தொழில் திறமை மிகுந்த நீங்கள் உங்கள் சேனையோடு கும்பகர்ணனை எழுப்பச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பினார். (கும்பகர்ணன் வதைப் படலம் 12 60)
ஆயிரம் குதிரைகள்
எதற்கும் அசையாது கும்பகர்ணனின் அளவற்ற உறக்கத்தை மேற்கொண்ட அந்தக் கும்பகர்ணனது மார்பிலே மாலையைப் போல விளங்க, கடிவாளம் முதலியன பூட்டப் பெற்ற விரைவாகச் செல்லும் ஓர் ஆயிரம் குதிரைகள் வேகமாக வர, அவற்றை அவன் மேல் செல்ல விட்டு குளம்புகள் உடலில் பொருந்த நடத்தி, விரைவோடு கூடிய சாரிகையாக வந்தார்கள். அதனால் கும்பகர்ணன் தூக்கம் பெரும் பெருட்டுத் தன் துடையில் தட்டியதுபோலப் பெருந்தூக்கத்தில் ஆழ்ந்தான். (கும்பகர்ணன் வதைப்படலம்1265)
மயிலுக்கு ஆயிரம் கண்கள்
சீதையைக் காணாது வருந்திய இராமன் புலம்புனான். என் எதிரில் ஓடி விளையாடும் மயிலே, சீதையின் சாயலுக்குத் தோற்று மறைந்து மனம் வருந்தி அவளுக்குப் பகைவர் போல உலவிய நீயும், அவள் இல்லாததால் மனம் மகிழ்ந்தாயோ அவளைத் தேடும் என் உயிரின் இரங்கத்தக்க நிலையைக் கண்ணாரக் கண்டாய். அங்ஙனம் கண்டும் மனம் களித்து நடனம் செய்கின்றாய். சீதை சென்ற விடத்தைச் சொல்ல மாட்டாயோ. நான் அவளைக் காணவில்லை என்று சொல்லாயாயின் ஆயிரம் கண்களை உடைய உனக்குத் தெரியாதபடி அவள் மறைந்து செல்லும் வழியும் உண்டோ?
“தேடா நின்ற என் உயிரைத் தெரியக் கண்டாய் சிந்தை உவந்து
ஆடா நின்றாய் ஆயிரம் கண் உடையார்க்கு ஒளிக்குமாறு உண்டோ”
(பம்பைப் படலம் 26)
ஆயிரம் வீரர்கள்
கிட்கிந்தைப் படலத்தில் சுக்ரீவன் பட்டம் ஏற்று ஊருக்குள் செல்லும்போது அந்தக் கிட்கிந்தை நகரமானது, தூய்மையான திண்ணிய படிகத்தால் செய்யப்பட்ட சுவர்களிலும், சுற்றுப்புறங்களிலும் தலைமை சான்ற நவமணிகள் பதித்து செய்யப்பட்ட மிக உயர்ந்த தூண்களின் இடையிலும், இலட்சுமணனின் பிரதிபிம்பம் சென்று தங்குவதால், கையில் வில்லுடனே ஆயிரம் வீரர்கள் வந்துள்ளார்களோ என்று எண்ணிக் கண்டவர் தளர்ச்சி வருமாறு விளங்கியது.
“சாயை புக்குறலால் கண்டோர் அயர்வுறக் கை விலோடும்
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அவ்வூர்”
(கிட்கிந்தைப் படலம் 660)
வானரப்படை தலைவர் ஆயிரம்
தானை காண் படலத்தில் படைத்தலைவர் படையுடன் வந்து சேர்ந்தனர். அந்த சதவலி எனும் வானர வீரன் பத்து நூறாயிரம் யானைகளின் மிக்க வன்மையுடன் பொருந்திய வானரப்படை தலைவர் ஆயிரம் பேர் தன்னுடனே வர, வகுக்கப்பட்ட உடல் வளைவையுடைய 16,000 கோடி வானரப் படையுடனே சுக்ரீவனிடத்தில் வந்தான்.
“ஆனை ஆயிரம் ஆயிரத் தெறுழ் வலியமைந்த
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த”
(தானைகாண் படலம் 700)
ஆயிரம் சிகரங்கள்
கடல் தாவு படலத்தில் கடலிடை எழுந்த மைந் நாகத்தை உந்தித் தள்ளி அனுமன் செல்லும்போது மேலே ஓங்கிய செம்பொன்மயமான ஆயிரம் சிகரங்கள் மின்ன, ஓயாத அருவி தொகுதிகள் தோளில் தரித்த மேலாடை போல் விளங்க, இராவணன் முதலிய தீயவர்கள் இருப்பதால் அவர் தீமைகளைத் தீர்ப்பதற்காகத் திருமால், மீன்கள் நிறைந்த கடலிலிருந்து எழுந்து வரும் தன்மையுடையதாகி மைந்தாக மலை வானைத் தொடுமாறு எழுந்தது.
“மீ ஓங்கு செம்பொன் முடிஆயிரம் மின் இமைப்பு
ஓயா அருவித்திரள் உத்தரியத்தை ஒப்பத்”
(கடல் தாவு படலம் 40)
ஆயிரம் அழகிய திருவிளக்கின் ஒளி
திரிசடை கண்ட கனவில் ஆயிரம் அழகிய திருவிளக்கின் ஒளி ஒன்றாகப் பொருந்தும் படி ஏற்றிய சிவந்த ஒளியை உடைய ஒரு பெரிய விளக்கை ஏந்திக் கொண்டு திருமகள், இராவணனின் அரண்மனையிலிருந்து வீடணன் அரண்மனையை அடைந்தாள்.
“ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்திச் செய்யவள்”
(காட்சிப்படலம் 380)
ஆயிரம் கைகள்
கார்த்தவீரியார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. நிந்தனைப் படலத்தில் சீதை, இராவணனிடம் செல்லும் நல்ல நெறியை அறியாத நீசனே உன் 20 கைகளையும் பற்றிக் கொண்டு, உன் வாய் வழியே வெளியே குருதி கொட்டக் குத்தி பெரிய சிறையில் அடைத்த சுத்த வீரன், ஆயிரம் கைகளைப் பெற்ற கார்த்தவீரியார்ஜுனன். அவனுடைய வைரம் போல உறுதியான தோள்களை வெட்டித் தள்ளியவன் பரசுராமன். அப் பரசுராமன் என் இராமனால் வழி இழந்த செய்தியை நீ அறியவில்லையோ என்று வினவினாள்.
“ஆயிரம் தடக்கையால் நின் ஐந் நான்கு கரமும் பற்றி
வாய் விழி குருதி சோரக் குத்தி வான் சிறையில் வைத்த”
(நிந்தனைப் படலம் 463)
ஆயிரம் சாகைகளாக உள்ள சாம வேதம்
இராவணனின் பெருமைகளை அரக்கியர்கள் சீதையிடம் கூறும்போது இராவணன் இந்த உலகங்களைப் படைத்த பிரம்மனின் மகனான புலஸ்தி னுக்கு மகனான விசிர முனிவரின் மகன் ஆவான்.மூன்று உலகங்களுக்கும் தலைவன் ஆவான். ஆயிரம் சாகைகளாக உள்ள சாம வேதத்தில் சமர்த்தன். ஆன்ற அறிவுள்ளவன். தீவினைகள் வென்றவன். உன்னிடம் உண்மையான காதல் கொண்டதைத் தவிர, அவன் செய்த இழித்தொழில் எது? என்று கேட்டனர்.
“வையகம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன்”
(நிந்தனைப் படலம் 482)
ஆயிரம் அம்புகள்
இலட்சுமணன் அதிகாயனோடு போரிடும்போது அவன் ஒரு முறை செலுத்தும் தொடுப்பினில் ஓர் ஆயிரம் கூரிய கொடிய அம்புகள் கரிய மேகங்கள் பொழிகின்ற மழைத் தாரைகள் போல நிமிர்ந்து சென்று கவ்விய தன்மையால் மத மயக்கம் கொண்ட 2000 யானைகள் இறந்து விழுந்தன. அவனது வில்வித்தையின் சிறப்பைத் தேவர்களும் அறிய மாட்டார்கள். அதனால் அதனை இனிமேல் ஆராய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
“ஓர் ஆயிரம் அயில் வெங்கணை ஒரு கால் விடு தொடையில்
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று”
(அதிகாயன் வதைபடலம் 18 13)
ஆயிரம் என்ற சொல்லாடல்
கும்பகர்ணன் வதைப்படலத்தில் கும்பகர்ணனுக்கும், இராமனுக்கும் இடையே போர் நடைபெற்றது. இராமன் செலுத்தும் அம்புகளில் வானத்தில் பறப்பவை ஆயிரம். பகைவர் உடலில் பாய்வன ஆயிரம். பெருமையும் அழகு மிகுந்த மார்புகளை பிளப்பவை ஆயிரம். பல திசைகளில் திரிபவை ஆயிரம் சென்று தைக்காமல் மேலே மறைபவை ஆயிரம் .ஒவ்வொரு இடத்தை நோக்கி இன்னும் வருபவை ஆயிரம். இவ்வாறு இராமனின் கூரிய அம்புகள் உள்ளன என்றாலும் ஒலி பிறக்குமாறு அங்கே முழங்கிக்கொண்டு காற்றாடி வலசாரி- இடசாரியாகக் கதாயுதத்துடன் திரிந்து கொண்டிருந்தான் கும்பகர்ணன்.
“பறக்க ஆயிரம் படுவன ஆயிரம்
பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம் திரி வன ஆயிரம்
சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம்
வடிக் கணை என்றாலும்
சிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன்
கறங்கு எனப் பெருஞ்சாரி”
(கும்பகர்ணன் வதைப் படலம் 15 47)
ஆயிரம் முறை புகழ்ந்தல்
கும்பகர்ணன், இலக்குவனுடன் போரிடும்போது அவனது திறமையைக் கண்டு வியந்து போரிலே இறந்து போனவரின் மிகுதியான தொகையையும், இலட்சுமணன் வெளிப்படுத்திய ஒப்பற்ற ஆண்மையையும் பார்த்த அவன், திரிபுரங்களை எரித்த சிவபெருமானும் இந்த இலட்சுமணனுமே போர் புரிவதில் ஒப்பற்ற வில்வீரர்கள் என்று ஆயிரம் முறை கூறினான்.
“ திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின்
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான்”
(கும்பகர்ணன் வதைப்படலம் 14 40)
ஆயிரம் இராவணர்கள் எதிர்த்து நின்றாலும்
கும்பகர்ணன், இராமனுடன் போரிட்டு தன்னுடைய கை கால்களை இழந்த நிலையில் இராமனிடம் வேண்டுகிறார். இராமனது வில்லாற்றலுக்கு ஆயிரம் இராவணர்கள் எதிர்த்து நின்றாலும் சமம் ஆகார். நான் கைகளையும், கால்களையும் அவனது வில்லாற்றலால் இழந்துவிட்டேன். இனி நான் போர் செய்ய எனக்கு உதவும் துணையாகிய வேறு உறுப்பைக் காண்கிலேன். இந்நிலையில் நான் என்ன செய்ய முடியும்? இராவணன் சீதை மீது கொண்ட ஆசை எனும் நோயினால் எனக்கும் அழிவு வந்து சேரும் முறைதான் என்ன வியப்பு. எப்போதும் அழிவில்லாமல் வாழ வேண்டியவனான இராவணனுக்கு இனி உயிர் பிழைக்கும் வழி இல்லை என்று கும்பகர்ணன் தன் மனதின் நினைத்துத் துன்புற்றான்.
“ஐயன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர்
அமைவிலர் அந்தோர் யான்
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி
உதவல் ஆம் துணை காணோம்
மையல் நோய் கொடு முடிந்தவா தான் என்றும்
வரம்பு இன்றி வாழ்வனுக்கு
உய்யுமாறு அரிது என்றும் தன் உள்ளத்தின்
உணர்ந்து ஒரு துயருற்றான்“
(கும்பகர்ணன் வதைப் படலம் 15 64)
காதல் அவஸ்தைகள் ஆயிரம்
இராவணன் சீதையை நோக்கி பலவாறாகப் பேசும்போது, எனது உயிர் காமநோயை அனுபவிக்கும் போதும், இவ்வாறு அனுபவித்து பல நாட்களைக் கழித்த போதும் எனது உயிர் நாயின் இழிந்த உயிர் போல மதிக்கப்படும். நூலைத் தொடக்கம் முதல் உணர்ந்த சான்றோர்கள் காமத்தில் உள்ளதாகக் கூறும் அவஸ்தைகளின் வரிசை பத்து என்று பொய்யாகக் கூறுவார்கள். அவை ஆயிரம் என்றாலும் உண்மையாகாது. அதற்கும் மேற்பட்டதாகும் என்று கூறினான்.
“நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணக்கும் ஆவி
நாய் உயிராகும் அன்றே நாள் பல கழிந்த காலை
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்துப் பகுத்த பத்தி
ஆயிரம் அல்ல போன ஐயிரண்டு என்பர் பொய்யே“
(மாயாஜனகப் படலம் 1587)
ஆயிரம் தவங்கள் உள:
சரபங்கமுனிவர் இராமனிடம், ஐயனே ஐயனே ஆயிரக்கணக்கான தவம் புரிந்துள்ளேன். நீ இங்கு வருவாய் என எண்ணம் உண்டு. என் இரு வினைகளும் இருந்தன .இனி எனக்கு எந்த ஒரு வினையும் இல்லை.
“ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான்
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன்“
(சரவங்கன் பிறப்பு நீங்கு படலம் 111)
ஆயிரம் விதமான தவங்கள் நீருக்குள் இருத்தல், நெருப்பிடையே வேகாது இருத்தல், ஒற்றை காலில் நிற்றல், புற்றுமாய் மரமுமாய் உற்றிறுத்தல், காட்டில் திரிதல், காற்றை மட்டுமே புசித்திருத்தல், தாமரை இலையும் தண்ணீரும் போலவும், புளியம்பழமும் மேலோடு போலவும் உலகோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல் முதலியனவாய் இருக்கும் தவங்கள்.
முடிவுரை
பழங்காலத்தில் ஆயிரம் என்ற எண்ணிக்கை பேச்சுவழக்கில் பெரிய எண்ணாக வழக்கில் இருந்தது. எண்ண இயலாத அளவீடுகளைக் குறிக்க தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலான பெயர்களும், வழக்கில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களில் நாம் காண முடிகிறது.வில்லை ஒடித்த இராமனின் அழகைக் காண சீதைக்கும், சீதையின் அழகைக் காண இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றும், இந்திரன் ஆயிரம் கண்களை உடையவன் என்றும், தாடகை ஆயிரம் யானைகளின் வலிமையைப் பெற்றவள் என்றும், குகன் பரதனை ஆயிரம் இராமர் வந்தாலும் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்றும், திருமாலுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு என்றும், சீதையைக் கண்ட இராவணன் தனக்கு இமையாத கண்கள் ஆயிரம் இல்லையே என்று வருந்தினார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அரக்கர் படை ஆயிரம் வெள்ளம் உடையது என்றும், இலங்கை நாட்டில் ஆயிரம் தீய நிமித்தங்கள் ஏற்பட்டன என்றும், ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி, ஆயிரம் கணைகளைச் செலுத்தினான் என்றும், மருத்துமலை இங்கிருந்து ஆயிரம் யோசனை தூரத்தில் உள்ளது என்றும், கும்பகர்ணனை ஆயிரம் பேர் சேர்ந்து எழுப்பினர் என்றும், ஆயிரம் கிரணங்களைக் கொண்டது சூரிய மண்டலம் என்றும், மல்லர்கள் ஆயிரம் பேர் இருந்தனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. வானரப் படை தலைவர் ஆயிரம் பேர் இருந்தனர். ஆயிரம் அழகிய விளக்கின் ஒளி ஏந்திய திருமகள் வீடணன் அரண்மனைக்கு வந்தாள். கார்த்தவீரியார்ஜுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. சாம வேதத்தில் உள்ள ஆயிரம் சாகைகளையும் இராவணன் அறிந்திருந்தான். எதிரியின் வீரத்தையும் ஆயிரம் முறை புகழ்ந்து கூறினர் என்பதையும், ஆயிரம் இராவணர்கள் வந்தாலும் இராமபிரானை வெற்றி பெற முடியாது என்ற கும்பகர்ணன் கூறினான் என்பது போன்ற பல பல இடங்களில் கம்பராமாயணத்தில் ஆயிரம் என்ற எண்ணுப் பெயரை கம்பர் பயன்படுத்தியுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.