டோக்கியோவிலிருந்து கிழக்கே காமகுரா போகும் வழி கடற்கரைச்சாலை ஒரு பக்கம் கடற்கரை மறுபகுதியில் மலைத்தொடர்களைப் பார்க்க முடிந்தது. இந்த மலைத்தொடரின் மத்தியில் யப்பானின் முக்கிய ஃபூஜி மலை உள்ளது. இந்தியாவில் இமயமலைபோல், யப்பானிய மதச் சடங்குளிலும் இலக்கியத்திலும் ஃபூஜி மலை கருப்பொருளாக உள்ளது. தற்காலத்தில் வெளிநாட்டினரும் இங்கு செல்வதும் மலையேறுவதும் முக்கிய ஒரு விடயமாக உள்ளது.
நாங்கள் சென்ற இலையுதிர்காலத்தில் காலத்தில் பஸ்ஸில் போகும்போது பனிபடர்ந்த சிகரங்கள் மத்தியில் ஃபூஜி மலையை எங்களால் பார்க்க முடிந்தது . எரிமலையானதால் வெள்ளை பனி, மலை முகட்டிற்கு கொடுத்தகம்பிளித் தொப்பி போன்ற வடிவம் கவர்ச்சியானது. மலைச்சிகரம் பெரும்பாலும் மேகங்களால் மறைக்கப்பட்டு இருக்கும்.
அழகானதாக இருந்தபோதிலும் இந்த மலையை வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் ஏற முடியும். மற்றைய காலத்தில் பாதுகாப்பிற்காக மற்றவர்களை அனுமதிப்பதில்லை என்றார். ஃபூஜி மலை மற்றைய மலைகள் போன்றது அல்ல. அது ஒரு எரிமலை கடைசியாக 300 வருடத்திற்கு முன்பாக பொங்கியது. நமது நாடுகளில் வானிலை அறிக்கையில், மழை வெயிலைக் காண்பதுபோல் தினமும் ஃபூஜி மலையின் நடத்தைகளை அறிவிப்பார்கள் . டோக்கியோவிற்கு அண்மையில் ஃபூஜி மலை இருப்பதால் மக்கள் உணவுகளை வாங்கி வைப்பதும், எரிமலையின் பொங்கலை எதிர்பார்த்து இருப்பதுமான விடயங்கள் நடப்பதாக ரிச்சாட் சொன்னபோது எரிமலையை மடியில் கட்டியபடியே வாழ்க்கைதான் டோக்கியோ மக்களுக்கென நினைக்கத் தோன்றியது.
எங்களுக்கு மலையேறும் எண்ணம் இல்லாதபோதிலும் ஃபூஜி மலை பற்றிய சுவையான விடயங்கள் அறிய முடிந்தது. பத்து மணி நேரத்தில், தான் மலைக்கு ஏறியதாகச் சொன்னார் ரிச்சாட் என்ற அந்த இளைஞர். மலையின் மேல் குடிசைகள் உள்ளதால் ஏறுபவர்கள் மலையின் பல இடங்களில் தங்கிச் செல்ல முடியும் . யப்பானில் அடிக்கடி சொல்லும் வசனம் உள்ளது: “ஒரு முறையாவது ஃபூஜி மலை ஏறாமல் விட்டால் நீ முட்டாள் ஆனால் , இரண்டாவது தடவை ஏறினால் அதை விட முட்டாள் “.
ஆரம்பத்தில் ஃபூஜி மலைமேல் இலவசமாக ஏற முடியும். ஆனால, தற்போது பலர் குப்பைகளைப் போடுவதால் பணம் வசூலிக்கிறார்கள் . அப்பொழுது எனக்கு நேபாளம் சென்றபோது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்கள் விட்டுச் சென்ற குப்பைகளைச் சேகரித்து கண்காட்சியாக வைத்திருந்தது நினைவு வந்தது
ஏன் யப்பானில் குப்பைக்கூடைகள் தெருவில் பார்க்க முடியாது? என்ற எனது கேள்விக்கு ‘குப்பைகள் ஒவ்வொருவரும் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள் அவர்கள் குப்பையை, அவர்களே அப்புறப்படுத்த வேண்டும்’ அப்போது வீடுகளில் குப்பைகளை அகற்றுவது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக ‘குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அகற்றுபவர்கள் வரும்போது அவர்களிடம் அதைக் கொடுப்பது வழக்கம் அல்லாவிடில் நீங்கள் பணம் கொடுத்து அகற்றவேண்டும். உங்கள் குப்பை கலயத்தைத் தெருவில் வைப்பதைக் குற்றமாக பார்க்கப்படும் . சில கடைகளில் குப்பைக்கூடைகள் உள்ளது . ஆனால்,டோக்கியோவின் மத்திய பகுதியில் வைத்தால் எல்லோரும் போடுவார்கள் என்பதால் வைப்பதில்லை ‘ . என்று பதில் வந்தது யப்பானில் நாங்கள் பார்த்த இடமெங்கும் சுத்தமாக இருந்ததின் இரகசியத்தை அறிந்து கொண்டேன்.
நாங்கள் போன காமகுரா (Kamakura) என்ற இடத்திலுள்ள அமிதா புத்தர் (Amida Buddha) மிகவும் பிரபலமானது . தற்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. 24 மீட்டர் உயரமான இந்த சிலையின் ஆரம்பம் 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. இந்த சிலை இருக்குமிடம் கடற்கரை நகரமானதால் பல தடவை சேதமானது. 800 வருட வரலாற்றில் பல தடவை சுனாமியால் தாக்கப்பட்ட நகரம், டோக்கியோ கிழக்குப் பகுதியில் இருப்பதால் கோடையில் மக்களால் நிரம்பி வழியும். ‘ ( 1923 The Great Canto earthquake) கடந்த நூறு வருடங்களாக எந்த சுனாமியும் இல்லை என்பது ஒரு நிம்மதி என்றார்’ ரிச்சாட்
24 மீட்டர் உயரமான இந்த வெண்கலச் சிலை உள்ளே கோறையானது பின்பக்கத்தில் யன்னல்போல் உள்ளே பார்க்க முடியும். பல இலக்கியங்கள், கவிதைகளில் முக்கிய பொருளாகியவர் அமிதா புத்தர்.
அமிதாப் புத்தர் ஒரு காலத்தில் அரசராக இருந்து புத்தராக மாறியவர். திபெத்திய வஜ்ஜிரஞான பௌத்தத்திற்கும், மகாஞான பௌத்தத்திற்கும் உரியவர். அவரை பிரபஞ்ச புத்தர் (Celestial Buda) என்பார்கள். இவர் முன்னொரு காலத்தில் புத்த குருவாக இருந்து தனக்கான உலகத்தை உருவாக்கினார் என்பதுடன் அமிதாப் என்பது அளவில்லாத பிரகாசம் என்பதால் இவரை கிழக்காசிய நாடுகளில் வழிபடுகிறார்கள். யப்பானிய பௌத்தத்தின் இந்த (Pure land Buddhism) பிரிவின் தாமரை இதன் சின்னமாகும்
யப்பானில் மக்கள் மத்தியில் உருவான இரு பௌத்த பிரிவுகளில் பெருமளவில் மக்களிடம் போனது (Pure land Buddhism) அல்லது அமிடா புத்தம் என்பார்கள் . யப்பானில் புத்தபிக்குகள் ஆரம்பத்தில், பணம் வசூலிப்பு சண்டைகளில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஒரு சீர்திருந்தவாதமாக அமிடா புத்தம் குயோட்டாவில் உருவாகியது. இதில் மக்கள் பாவங்கள் செய்தாலும் அமிடா புத்தர் இறுதியில் மன்னித்து காப்பாற்றுவார் என்றும் சொல்லப்பட்டது. இது அக்காலத்தில் மிகப் புரட்சிகரமானதாக பார்க்கப்பட்டு அரசால் இதை போதித்தவர்கள் தடை செய்யப்பட்டார். ஆனால், அவரது போதனை மக்களிடம் உள்வாங்கப்பட்டதன் காரணம் பௌத்த சூத்திரங்களை அறியாத சாதாரணமானவர்கள் அமிடா புத்தரை வணங்கி முக்தி பெறலாம் என்ற கொள்கை மக்களிடம் செல்ல ஏற்கனவே அரசர்கள், பிரபுக்கள், பிக்குகள் என நிறுவனப்படுத்தப்பட்ட பௌத்த மதம் உடைந்தது.
வெண்கலத்தால் செதுக்கப்பட்ட சிலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு மற்றைய பகுதிக்குச் சென்றபோது இலங்கை முன்னாள் ஜனாதிபதி பற்றிய குறிப்பு தெரிந்தது . எனது மனதில் சந்தோஷமும் அதேவேளையில் சிறிய அதிருப்தியும் என்னுள்ளே ஒன்றை ஒன்று மீறி எழுந்தது.
சில மனிதர்கள் ஏதாவது ஒரு விடயத்தைச் செய்து விட்டு வரலாற்றில் இடம் பெற்று விடுவார்கள். அதேவேளையில் பல நல்ல விடயங்களைச் செய்தவர்கள் இலகுவாக வரலாற்றிலிருந்து மறக்கப்பட்டு விடுவார்கள்.
ஜே .ஆர் ஜெயவர்த்தனாவைப் பற்றி எனக்கு நல்ல கருத்து இல்லை.அதற்குக் காரணம் உள்ளது. இலங்கை இனப்பிரச்சினையில் ஜே .ஆர் ஜெயவர்தனா தவிர்ந்த மற்றைய தலைவர்கள் பலர் ஏதோ ஒருவிதத்தில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தீர வேண்டும் என விரும்பியவர்கள். அவை எவரையும் சமனாகப் பாவித்த நியாயமான தீர்வு என இல்லாத போதிலும் பிரச்சினையைக் குறைந்த பட்சம் அவர்கள் உக்கிரமாக்கவில்லை. ஆனால், இலங்கையில் இனப் பிரச்சினை மட்டுமல்ல, பொருளாதாரப் பிரச்சினையையும் மிகக் கீழே தள்ளிய ஒரே தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்பது எனது கருத்து. ஆனால், யப்பானில் நான் சென்ற காமகுரா புத்த கோயிலில் அவரது வார்த்தைகள் வெண்கலத்தில் பொறிக்கப்பட்டிருந்தன. அந்நிய நாட்டின் தலைவர் வார்த்தைகளை வணக்கத்தலமொன்றில் பதிவு செய்திருப்பது சாமானியமான விடயமல்ல.
யப்பான் இரண்டாவது உலகப் போரில் தோல்வி அடைந்து நேச நாடுகளிடம் சரணாகதி அடைந்த நாடு. அப்போது சோவியத் ரஸ்யா போன்ற நாடுகள் யப்பானை பழி வாங்க முனைந்தபோது யப்பானுக்கு ஆதரவாகப் பேசிய முக்கிய தலைவராக ஜே .ஆர.ஜெயவர்த்தனாவின் பேச்சுகள் புத்த தேவாலயத்தில் பொறிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது .
‘புத்த பகவானின் போதனையின்படி, நாம் வெறுப்பின் மூலம் வெறுப்பை அழிக்க முடியாது, அன்பே ஒரே வழி ‘என்று ஜே .ஆர் . ஜெயவர்த்தனா சொன்னதை 'துயரமான காலத்தில் ஆசியாவிலிருந்து வெளிவந்த அறிவார்ந்த வார்த்தை என நியூயோர்க் ரைம்ஸ் பாராட்டியதுடன் இந்த வார்த்தையை உச்சரித்தவர் தனது ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் உச்சரிப்பில் இலங்கையின் பிரதிநிதியாக இருந்த ரிச்சாட் ஜெயர்த்தனா ' என மேலும் எழுதியிருந்தது .
யப்பானின் மிக முக்கியமான இடத்தில் 24 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமிடா புத்தர் அமைந்திருப்பது மிகவும் அழகிய பூங்கா.
இங்கிருந்து நாங்கள் எனுசீமா (Enoshima) தீவுக்குச் சென்றோம். அழகான தீவு அங்கிருந்து தெளிவாக ஃபியூஜி மலையை பார்க்க முடியும். இந்த தீவில் பல கடல் உணவு கடைகள் உள்ளன . யப்பானில் எப்பொழுதும் சமைக்காத உணவு அவர்களது உணவுக்கடைகளில் உள்ளது. ஆக மொத்தம் கடையில் வாங்கும்போது கவனமாக வாங்கவேண்டும். கடலுணவிற்கப்பால் கோழி, குதிரை இறைச்சிகூட சமைக்காமல் கிடைக்கும் என்றார் ,எங்கள் வழிகாட்டி ரிச்சாட் . அத்துடன் கோழியைத் தவிர மற்றவை எல்லாம் தன்னால் உண்ண முடிந்தது என்றார்.
இந்த எனுசீமா தீவு நாங்கள் செலவழித்த சில மணி நேரங்கள் சில விடயங்களைப் புரிய வைத்தது. அங்கு ஒரு கோவில் பெண் தெய்வத்திற்கு (Benzaiten) அமைக்கப்பட்டு உள்ளது . அதை ஆங்கிலத்தில் பார்த்தபோது கலைத் திறமைக்கானது (Goddess of eloquence) என்றார்கள். பின்பு ஆராய்ந்தபோது நமது சரஸ்வதியை ஒத்த பெண் தெய்வம் மிக உயரத்தில் அமைந்துள்ளது . இந்த தெய்வத்தை தேடிய பார்த்தபோது 6ம் நூற்றாண்டுகளில் சரஸ்வதியே இந்தியாவிலிருந்து சீனா வழியாக யப்பானுக்கு வந்து யப்பானிய பெண் தெய்வமாக அமைந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. அத்துடன் இது ஷின்ரோ மதக்கோவிலாகும் . அப்படி பார்த்தால் சரஸ்வதி பிரமதேவனை விட்டு வெளிநாடு போனது மட்டுமல்ல மதமும் மாறிதாகத் தெரிகிறது. தற்காலத்தில் அவுஸ்திரேலியாவில் மணம் முடிந்து வந்த பெண்கள்போல், மனிதர்கள் மட்டுமல்ல தெய்வங்களும் நாடு விட்டு நாடு செல்லும் காலம் இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது . மனிதர்களுக்கே எல்லைகள் , கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தேவை .தெய்வங்களுக்கு அவை தேவையில்லைதானே! இயற்கையின் அழிவுகளை எதிர்த்து, அக்கால மக்கள் உள்ளூர் தெய்வங்கள் மட்டுமல்ல வெளியூர் தெய்வங்களின் துணையோடு அணிவகுத்து நின்றார்கள்.
மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு ஏறிவிட்டுத் திரும்பி வரும்போது ஒரு சிலையைப் பார்த்தேன் அது யப்பானில் அக்குபஞ்சர் வைத்தியர் ஒருவருக்கு வைக்கப்பட்ட சிலையாகும் அக்குபஞ்சர் வைத்தியமுறை சீனாவில் தொடங்கிய போதிலும் யப்பான் கொரியா போன்ற நாடுகளில் பரவியிருந்தது. இலங்கையில் கூட யானைக்கு அக்குபஞ்சர் செய்வதற்கான வரைபடங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிலையை நெருங்கி அங்கிருந்த எழுத்துகளை வாசித்தபோது சுகியாமா என்ற அவருக்குச் சிறு வயதில் பார்வை அற்றுப் போய்விட்டது . ஆனால் அக்குபங்கர் படித்தாலும் பார்வை அற்றதால் அக்குபஞ்சர் புள்ளிகளை உடலில் தெரிந்துகொண்டு, அதில் ஊசிகளைச் செலுத்துவது( அக்காலத்தில் பைன் ஊசிகளால் செய்யப்பட்ட ஊசிகள்) கடினமானதாக இருந்தது. இதனால் மனமுடைந்து ஒரு குகைக்குள் சென்று உபவாசமாக தியானித்தபோது கல்லில் தடுக்கி விழுந்து நினைவிழந்தார். மீண்டும் நினைவு வந்தபோது அக்குபஞ்சர் ஊசியோடு கொண்ட மூங்கிலைக் கண்டார் . இதன்பிறகு அக்குபஞ்சர் திறம்படச் செய்ததுடன் அக்கால டோக்கியோ பிரதேச அதிகாரி (5 th Shogun) பிணியைக் குணப்படுத்தியதால் பெரும் புகழும் பணமும் பெற்றார் என எழுதியிருந்தது.
வைத்தியர் ஒருவருக்கு சிலை அமைப்பது இலகுவில் நடக்கும் விடயமில்லை என்பதுடன், நான் மூன்று மாதங்கள் அக்குபஞ்சர் படித்தது எனக்கு நினைவுக்கு வந்தது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.