(1)
2022 ஆவணியில் வடலி வெளியீடாக வந்த யதார்த்தனின் ‘நகுலாத்தை’ நாவல், தன் மதிப்பீட்டை அண்ணளவாய்ச் செய்வதற்கான வெளிகளையே கொண்டுள்ளது. அதில் ஐதீகம், நாட்டார் பாடல், வாய்மொழி இலக்கியங்களின் பயன்பாடுபற்றியதும், அப் படைப்பாக்கத்திற்கு நிறையவே தேவைப்பட்டிருக்கக் கூடிய தேடல்கள், கள ஆய்வுகள்பற்றியதுமான படைப்பாளியின் எந்த விபரங்களும் இல்லை. வடவிலங்கையின் நிலவியல் படம் மட்டும் தரப்பட்டுள்ளது.
கதையிலிடம்பெறும் ஐதீகங்கள் குறித்து, அவை ஐதீகங்களா புனைவுகளா என்பதுபற்றிய படைப்பாளியின் வாக்குமூலம், இதுபோன்ற ஓர் இலக்கியப் பிரதிக்கும் முக்கியமானது. அல்லாமல், நாவல் கட்டமைப்பு தவிர்ந்த காத்திரமான விமர்சனம் சாத்தியப்படாது. இத்தகைய தட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்படும் விமர்சனம், ஏகதேசமாய் தன் வழியில் முன்செல்லவோ, தடைகளால் பின்னிழுக்கப்படவோதான் செய்யும்.
நாவல் சார்ந்த குறையாகவன்றி இதை பதிப்பு சார்ந்த குறையாகக் காணவேண்டும்.
(2)
மொழி வழியில் ‘நகுலாத்தை’ ஒரு பிரதியாய் நன்கு கட்டமைந்திருக்கிறதென்பதில் ஐயமில்லை. அது பாவித்த மொழி அந்த மண்ணுக்கானது. பல இலங்கைத் தமிழ் நாவல்களில் பயின்றிருக்காத உரையாடல் வளம் ‘நகுலாத்தை’யிலுண்டு.
பிரதேசவாரியாய் முக்கியம் பெற்றிருக்கும் சொற்கள் சில எவ்வாறு தம் வெகுவான பொருத்தம் கருதி தமிழுக்கே உரியனவாகவும், தமிழாய்வுக்கு உதவுபவையாகவம் ஆகினவோ, அதுபோல இலங்கையின் வடபிரதேச, குறிப்பாக வன்னிப் பிரதேச, பேச்சுவழக்கிலுள்ள மொழி வளம் அவைசார்ந்து பயனளிக்கக்கூடியது. அவ்வாறான பல சொற்களை பிரதியில் அடையாளப்படுத்த முடியும். ‘உருத்து’ (தூளாக்குதல்) என்ற சொல்லை உதாரணத்துக்கு இங்கே குறிப்பிடலாம்.
மொழியினால் அமையும் இலக்கியம், மொழியையே வளப்படுத்தக்கூடியது என்கிறார்கள் மொழியியலாளர். இதை, ஆர்.ஷண்முகசுந்தரத்தின், பூமணியின், புதுமைப்பித்தனின் எஸ்.பொ.வின், கே.டானியலின் உரையாடல் மொழியிலிருந்து தமிழ் பெற்ற வளங்களாய்க் கண்டிருக்கிறோம்.
அந்த மொழி வளம் ‘நகுலாத்தை’யில் கணிசமானவளவு அதிகம். எனினும் சொற்கள் அதில் துருத்திக்கொண்டு நிற்கவில்லையென்பது சிறப்பு.
(3)
இன்றைய காலகட்டம் நவீன தன்மைகொண்ட நாவல்களின் காலமாகயிருக்கின்றது. 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய யதார்த்தவகை நாவல்களிலிருந்து, இலக்கிய விமர்சனமானது அதனை ஒரு விரிந்ததும் கூர்ந்ததுமான தளத்திற்கு எடுத்துச்சென்றுள்ளதாய்க் கருதமுடியும்.
மேற்குலகைத் தொடர்ந்து தமிழிலும் இவ்வாறான நாவல்களின் வரவு அதிகரித்திருப்பதைக் காணமுடிகிறது. இவை பரீட்சார்த்தமாய் புனையப்படத் தொடங்கிய காலத்திலிருந்து Anti- Novel என மேற்குலகில் அடையாளப்படுத்தப்பட்டன. தமிழில் அவை எதிர் நாவலென பெயர்பெற்றன.
இவற்றின் முக்கியமான அம்சம், ஒரு வரன்முறையான கதையை அவை கொண்டிருப்பதில்லை என்பதாகும். கதையானது, பலர் எதிர்கொண்ட பல சம்பவங்களின் விவரிப்பாகி, பல விஷயங்களையும், அதனால் பல கூறுமுறைகளையும் கொண்டதாக இருக்குமென பொதுவில் சொல்லப்பட்டது. தமிழில் இன்று சுட்டி அறியப்படும் நாவல்கள் மய்யமான ஒரு கதையைக் கொண்டிருக்கவில்லையென்பது அவதானமாகியுள்ளது.
மேலும், நவீன நாவல்கள் கதைகூறலின் முழுச் சாத்தியத்தையும் பயன்கொள்வதில்லை. பாத்திர வார்ப்பும் பல புனைவுகளில் புறக்கணிப்புப் பெறுகின்றது. உணர்ச்சி விவரிப்புகள் இப் பிரதிகளால் நாடகீயமாகக் கணிக்கப்பெற்று ஒதுக்கவும் படுகின்றன. அவை புள்ளிவைத்தாற்போல் காட்ட அல்லது எடுத்துச் சொல்ல நினைப்பது பரவசமாகவே இருக்கின்றது என்பது அறியப்பட்டுள்ளது.
எனினும், உலக இலக்கியமென்று பேசப்படுகையில் கதைப் பின்னலும், பாத்திர வார்ப்பும், உணர்ச்சிச் செழுமையும் நன்கமையப்பெற்றதான ‘போரும் அமைதியும்’, ‘கு;றறமும் தண்டனையும்’, ‘இரு நகரங்களின் கதை’ போன்றனவே கவனமாகின்றன. இன்றும்கூட. அவை அக் காலகட்ட வாழ்வையும், மனிதாபிமானத்தையும் தம்முள் எடுத்துச் சென்றதே அதன் காரணமென்கிறார்கள் விமர்சகர்கள்.
நவீன, பின்நவீன நாவல்கள் எதையும் இவ்வாறு செய்யவேண்டியதில்லை எனப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்கள் போதுமெனப்படுகிறது. அதில் பரவசமிருப்பதுவே கட்டாயமெனப்படுகிறது.
‘நகுலாத்தை’ அவ்வழியையே முன்னெடுத்ததாய் தயக்கமாகச் சொல்லமுடியுமாயினும், கொஞ்சம் வித்தியாசமும் பட்டிருக்கிறது. சமுதாயத்திலிருந்து தனிமனிதர்களாய் இதன் பாத்திரங்கள் தலையெடுக்கின்றன. இவற்றில் ஆச்சி, தாமரை, சின்ராசன், சண்முகம், துரிதம் ஆதியன கீரிப்பிள்ளை மேட்டுச் சமூகத்தின் மனநிலையில் பதிவாக்கம் பெற்றவைகளே. தனித்தனியே உணர்வுபூர்வமாகவும், அரசியல்பூர்வமாகவும் இயங்கிக்கொண்டிருந்தாலும், அவை சமூகமாகவும் இனமாகவும் பொதுமையும் கொள்கின்றன.
நாவல் நெடுக்கவும் அலைந்துழன்று வரும் பாத்திரங்களும் இவையே. கூட, சின்ராசனின் சக்கடத்தானையும் சேர்த்துக்கொள்ளலாம். சின்ராசன்போலவே, அவன்கூட நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அதுவும் பயணிக்கவே செய்கிறது.
(4)
‘நகுலாத்தை’ இரண்டு கதைகளை அல்லது கதைப் பின்னல்களை கொண்டிருப்பதாக தீர்மானமாய்க் கூறமுடியும். இருந்தும் ஒன்றில் ஒன்றாக, உட்பிரதிக் கூறாக மிடைந்துபோயிருப்பின் அது வேறொரு தளத்திற்கு நாவலை உயர்த்தியிருக்கும். துர்லபம், அது அவ்வாறு ஆகமுடியாது போனது.
ஒரு கதை, கீரிப்பிள்ளை மேடு என்கிற பழம்பெரும் வன்னி நிலப் பகுதியையும், அதைச் சூழ்ந்த வனத்தையும் வெளியையும் களமாகக்கொண்டு அதற்கான ஐதீகங்கள், தொன்மங்கள், நாட்டார் கதையாடல்கள் வழி மக்களின் நம்பிக்கையூடாய் உருக்கொண்ட நகுலாத்தையும், காக்கைவதனனும் பற்றிய விவரிப்பாய்ச் செல்கிறது. மக்களின் நம்பிக்கைக்குரிய ஆத்தா தெய்வமாதல், அருள்வாக்கும் அருளும் அளித்தல் ஆகியனபற்றிய எடுத்துரைப்பு அதன்மேல் தொடர்கிறது. மேற்கொண்டு, மக்களின் அன்றாட வாழ்முறையும் மத சம்பிரதாயங்களும் விவரணை பெறுகின்றன.
கிழக்கில் குடியேறிய வதனமாரின் கதை உருவாகிய வழியில் ஏறக்குறைய நகுலாத்தை கதையும். எழுகிறது.
கப்பலில் வந்து கடலில் மூழ்கி, பின் நிலம் சேர்ந்து, ராணிகளாக ஆட்சிசெய்திருக்கையில், ஒரு சிக்கலான தருணத்தில் எதிரிகளுக்குத் தோற்காமல் தம்மை எரியூட்டி மாய்ந்து தெய்வமாகிறார்கள் வதனமார். அதுபோன்ற ஒன்றே நகுலாத்தை கதையும்.
நாகர்களால் அழிபடுவதிலிருந்து தம்மைக் காக்க இயக்க குலம் எழுப்பும் அவலக் குரலுக்கு தெய்வம் செவிசாய்க்கிறது. ஆதிப்பெண்டின் அருள்வாக்கில் நகுலாத்தையின் வரவு முன்மொழியப்படுகிறது. அதன்படி இந்தியாவிலிருந்து கட்டுமரமொன்றில் வருகிறாள் நகுலாத்தை. அவளுதவிக்காய் கூட வருபவன் காக்கைவதனன்.
நிலம் சேர்ந்த நகுலாத்தை வெள்ளையருக்கு ஒளித்து வாழ்ந்து இறுதியில் கீரிப்பிள்ளை மேட்டில் அமர்ந்து தெய்வமாகிறாள்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட நிகழ்ந்ததாக அறியப்படும் இச் சம்பவமும், அதை உறுதிப்படுத்தும்படியான உபகதைகளும், அவற்றை இன்றும் மெய்ப்பிப்பனவாய் நடக்கும் சம்பவங்களும்கொண்டு மாந்திரீகத் தன்மையில் விளங்குகிறது இப்பகுதி.
விடுதலை இயக்கத்தின் வலிந்த ஆட்சேர்ப்பில் தம் பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர், அவர்களை மீட்டெடுக்க முடியுமாவென்பதை அறிய ஆத்தையிடம் அருள்வாக்கு கேட்கிறார்கள். மேலும் யுத்த அவலங்களை எதிர்கொள்ளும் செயலுக்கான விசையை உருவேற்ற பறையும் கொட்டும் முழக்குபவர்களாகவும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களது சடங்காசாரங்களில் ரத்தமும், கூச்சலும், கொடூரமும் பொங்கிநிற்கின்றன. இவையெல்லாம்தான் பிரதியை ஒரு மாயத்தன்மையில் நடப்பதாக எண்ணவைக்கின்றது.
இவற்றுள் ஒரு மழை நாளிரவில் காங்கேயனுக்கும் அவன் மனைவி துரிதத்திற்கும் விளையும் அனுபவம் காத்திரமானது.
ஒருநாள் காங்கேசன் கிளிநொச்சி புறப்படுகிறான். அங்கே ஏற்கனவே தொடுப்பிருந்த சைலஜா இடமணுகி காய்ச்சுச் சாராயம் குடிக்கிறான். நிறைபோதையில் வீடு திரும்பும் வழியில் மழையில் அவன் காயம்பட்டுப் போகிறான். ரத்தம் ஊற்றெனப் பெருக்கெடுக்கிறது. இருட்டிலும் மழைக் குளிரிலும் ரத்தவிழப்பின் பலஹீனத்திலும், எதுவும் செய்யமுடியாதுபோகும் காங்கேசன், ஆத்தா வளவை (கோயிலை) அணுகி அங்கே மயங்கி விழுந்துவிடுகிறான்.
இப்போது அவனுயிர் காக்க அவனுக்கோர் உதவி தேவைப்படுகிறது.
உணவு தயாரித்து வைத்துக்கொண்டு கணவன் வருவானென வீட்டிலே காத்திருக்கிறாள் துரிதம். அப்போது அ வளை வௌியிலிருந்து அழைத்துக் கேட்கிறது. குரல் வெளிச்ச ரூபத்தில் அவளை ஆத்தா வளவுக்கு எடுத்துச்செல்கிறது. அங்கே தன் கணவனின் நிலை கண்டு துடிக்கும் துரிதம் அவனை இறுதியில் காப்பாற்றுகிறாள்.
இப் பகுதியே பிரதியின் முக்கியமான கூறுவென்பதை பிரதிக்கான தலைப்பு ‘நகுலாத்தை’யென இடப்பட்டமை துல்லியமாய்க் காட்டும்.
(5)
ஈழப் போரின் இறுதிக்கட்ட விவரிப்பாக அமைந்துவிடுகிறது பிரதியின் இரண்டாம் கதையாடல். இது, ஒருவகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இறுதிக் கட்டப் போரது இயங்குதல்பற்றிய திறந்த விமர்சனமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது.
இயக்கத்துக்கு வலிந்து ஆள்சேர்த்தல், பெற்றோரின் அதற்கான எதிர்ப்பு, பிடிபடுவதிலிருந்து தப்பியோடுதலும் பிடிபட்டபின்பான தப்பியோடுதல்களும், இடப்பெயர்வும், மற்றும் இயக்கத்தின் கெடுபிடித்தனம், அதிலுள்ள தனிநபர்களின் அதீத ஆசைகளுமென பலவும் இதில் பதிவாகின்றன.
இறுதிக் கட்ட ஈழப்போரின் ஒட்டுமொத்த படை நகர்வும், போராட்டமும் பெரும்பாலும் நிகழ்வுகளின் பின்னணியாகவே இப் பகுதியில் வருகின்றன. முக்கியத்துவம் பெறுவது யத்தத்தால் பாதிக்கப்படும் மக்களின் அவலமும் சிதறுண்ட அவர்களின் மனநிலையுமாகவே இருக்கின்றது. அவையும் ஓர் உள்ளிடப் பார்வையில் பதிவாவது விசேஷம். அது விமர்சனத்தின் நேர்மையை பிரகடனப்படுத்தி விடுகிறது.
பிரதியில் விவரிப்புப் பெறும் அரசியல் போக்குகளினை 2005ஐ ஒட்டியதென கணிக்கமுடியும். அக் காலப் பகுதியில்தான் விடுதலைப் புலிகள் வலிந்த தம் படையணி சேர்த்தலை தீவிரமாகச் செய்தார்கள். இந்த இறுதிக் கட்டப் போரே ஏனைய மூன்று கட்ட ஈழ போர்களையும்விட அழிவும் அவலமும் கூடியது. அவற்றை பிரதி தன் நெஞ்சில் ஆழமாகவே எழுதியுள்ளது. தாமரை, செந்தழல், தயிர்வளை, அரசி, வெரோணிக்கா, தமயந்தி, அன்னப்பிள்ளை ஆகிய பாத்திரங்களின் இயங்குதல் தீவிரத்துடன் இந்த இரண்டாம் கதை அமைந்துபோகிறது.
இப் பாத்திரங்களுள் தாமரை பல்வேறு குணநலன்களுடனான பாத்திரமாகிறது. அவை படிமங்களாய் தீவிர அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெரோணிக்காவுடனான ஒருபாலின தொடர்புள்ளதாய் ஒன்று, சுயவின்பப் பாத்திரமாய் இன்னொன்று, தயிர்வளைக்கு பேயோட்டுவதாய் வேறொன்று, போராளியாய் மேலுமொன்றுவென வெவ்வேறு குணவிஸ்தாரமுள்ள படிம வார்ப்புக்கள். ஆயினும் தாமரை பாத்திரம் பிளவுபட்ட ஆளுமை (கொண்டதாக பலஹீனம்தான் அடைந்தது.
(6)
வனமும் வனம் சார்ந்த நிலமுமான முல்;லை நில வாழ்க்கை மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கிறதென்பதும், மிருகங்கள் பறவைகள் நீரகங்கள் என பலவும் இயல்பாய் வேட்டை நுணுக்கத்துடன் விளக்கம்பெற்றுள்ளனவென்பதும் ஒரு பிரதியின் காத்திரத்தை எடுத்துரைப்பதாகாது. ஆனால் அதுவொரு கண்ணி. வேறொரு முக்கியமான விஷயத்தை அதனுடன் இணைத்துப் பார்ப்பதற்கான ஊடாக அது இருக்கச்செய்யும்.
இப் பிரதியில் இரண்டு அத்தியாயங்களில் விரிவாக விளக்கப்படும் கலட்டியன் வேட்டையை வாசகர்க்கு காண்பிப்பதற்கான ஊடு இங்கே இருக்கிறது. வனத்தின் வனப்பும் பயங்கரமும் உறைந்திருந்தன இந்த அத்தியாயங்களில்.
(7)
சுமார் 300 ஆண்டளவான வன்னியின் வரலாற்றுக் காலகட்டங்களின் பதிவு பிரதியிலுண்டு. கத்தோலிக்கத்தின் வருகை, ஆங்கிலராட்சியில் வன்னி, குடியேற்ற நிலத்தில் மலைநாட்டுத் தமிழரின் ஊடாட்டம், குரோதத்தால் விளையும் அன்னம்மாள் மரணமும் முத்துசாமியின் கொலையும், வடக்கில் நிலவிய இடதுசாரிச் சிந்தனையென பலதையும் காலம் தன் சுவட்டினைப் பதிக்க நூல் திறந்த மனத்துடன் இடமளிக்கிறது.
அது அடைசலாயிருக்கிற ஒரு புழங்கும் கூடம்போல, வாசிப்பை இடைஞ்சல் செய்யும்படிக்கும் சிலவேளை ஆகிவிடுகிறது.
இப் பதிவாக்க முயற்சியும் ஒரு நாவலின் முக்கியமான பணியாவதில்லை. மனித வாழ்க்யோடு இணையும் அதன் தத்துவார்த்தப் புலமே பிரதானமாகி நாவலின் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறது. பிரதி எவ்வளவு தூரம் இதை நிறைவேற்றுகிறதென்பது வாசக நிலைப்பாட்டுக்குத் தக பல்வேறாக இருக்கமுடியும்.
(8)
‘நகுலாத்தை’யில் சில சறுக்கல்கள் சரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சில உன்னதங்களை அடையவும் இது தவறவில்லையென்பதனை சேர்த்தே சொல்லவேண்டும்.
அத்தகைய உச்சங்கள் இருப்பதனாலேயே அந்தப் பள்ளங்கள் அதல பாதாளங்களாய்த் தோன்றச் செய்யவும் கூடும்தான்.
அந்த உன்னதங்களில் ஓரிரண்டு உதாரணத்துக்கு இங்கே.
படையெடுப்புகளின்போது நீர்த் தேக்கங்கள் உடைக்கப்பட்டு பெருநீர்ப் பெருக்கு யுத்தக் கருவியாய் எதிரிகள்மீது ஏவப்படுதல் முன்பேயும் புராதன இலங்ககைச் சரித்திரத்தில்கூட நிகழ்ந்திருக்கிறது. அது பெரும் பெரும் அனர்த்தங்களை எதிரிகளுக்கு விளைவித்திருக்கின்றது. ஈழ இறுதிப் போரில் கீரிக் குள உடைப்பு, எதிரிப் படைகளுக்கு எத்தகைய அழிவை விளைவித்தனவோ? ஆனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இடம்பெயர்ந்த மக்கள் மண் திரும்புவர். அந்த மண்ணில் மறுபடி வாழ்வு தொடரவே செய்யும். ஆனால் அவர்களின் அழிவின் நினைவுகள் என்றும் மாறாதவையாகவே இருக்கும்.
கீரிக் குள உடைப்பின் திட்டமும், நீரின் பெருக்கும், அதை விசைப்படுத்திய போராளி தாமரையின் மரணமும் அதிர்வு தரும் வகையில் பிரதியில் பதிவாகியிருக்கின்றன. உதாரணமாய் பின்வரும் பத்தி:
‘வோக்கி அலறியது. வெடிக்கவைக்க சங்கேதம் வந்தது. சார்சரின் சீலை அகற்றிவிட்டு அழுத்தினாள். சி4’கள் தங்களை பொறியாக்கி சக்கைகளுக்கு விஸ்வரூபம் கொடுத்தன. கீரிப்பிள்ளை மேடு பெரிதாகக் குலுங்கி அடங்கியது. இருட்டில் குளம் இராட்சதக் குணத்துடன் காதை இரைக்கும்படி சீறிக்கொண்டு பாய்ந்து ஊருக்குள் இறங்கியது. தாமரை வேகமாக குளக்கட்டில் ஏறி ஓடத்தொடங்கினாள். உடல் நடுங்கியது. கால்கள் தடுமாறவதை அறிவில் கொண்டுசேர்க்க போதிய குருதி உடலிலிருக்கவில்லை. ஏழு மருதடியை நெருங்க முதல் வீழ்ந்தாள். அப்படியே குளக்கட்டில் வழுக்கியது உடல். மழையின் சத்தம் வறண்டது. துவக்குச் சத்தங்கள் காதுக்குத் தூரமாகப் போயின. வைகாசிக் கிழவரின் கொட்டுப் பறை மெல்ல செவிச் சுரணையில் இருந்து அகன்றுபோனது. எல்லாச் சத்தமுமம் அடங்க எங்கும் நீரின் குரல்.’ (பக்: 453)
நினைவில் நிரந்தரமாய்ப் பதியும் தருணமிது.
அடுத்து, நாகம் கீரிகள் சண்டை.
இலக்கியத்தில் மிகு ஆக்ரோஷம்கொண்ட இரண்டு மிருகச் சண்டைகளை என் வாசிப்பில் நான் இதுவரையில் சந்தித்திருக்கிறேன். ஒன்றை, ஜெயமோகனின் ‘விஷ்ணுபுர’த்தில் ; அடுத்ததை, பாலமனோகரனின் ‘வட்டம்பூ’வில்.
‘விஷ்ணுபுர’த்தில் வரும் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்துவிடுகிறது. பழக்கப்பட்ட போர் யானையொன்றை அதை அடக்குவதற்காய்க் கொண்டுவருகிறார்கள். மத யானையை அடக்கி வழிநடத்துவதோ, அதைக் கொன்று அழிப்பதோ சந்தர்ப்பத்திற்கு இயைந்தெடுக்கிற போர்யானையின் சாதுர்யமான தீர்மானத்திலிருக்கிறது.
மத யானை அடக்கப்படக்கூடிய நிலைமையில் இருக்கவில்லை. போர் யானை தன் வலிய தந்தங்களினால் அதைக் குத்திக் கொல்கிறது. நேரில் கண்ட மனிதர்களினதுபோன்ற பதற்றம் வாசகரில் அக் கணம் ஏறியிருக்கும்.
போல, பாலமனோகரனின் ‘வட்டம்பூ’வில் ஒரு மிருகச் சண்டை. கதை தொடங்கும் முதலாவது அத்தியாயத்திலேயே கலட்டியன் சிறுத்தையொன்றை தன் கூர்ங் கொம்புகளினால் குத்திக் கொல்வது விவரணையாகின்றது.
தாயெருமையின் வழிநடத்துதலில் எருமைக் கூட்டம் வருகின்றது. பதுங்கியிருந்த சிறுத்தை எருமைக் கன்றொன்றை கொன்றுவிடுகிறது.
அந்த எருமைக் கூட்டத்தின் காவலனான கலட்டியன் சினந்தெழுகிறது.
உறுமும் சிறுத்தைக்கும், முக்காரமிடும் கலட்டியனுக்குமிடையே உக்கிரமான யுத்தம் நடக்கிறது.
அதன் முடிவில் வளைந்த தன் வெட்டுக் கொம்புகளினால் குத்தி சிறுத்தையைக் கொல்கிறது கலட்டியன்.
கலட்டியனை அடக்கி வசக்கியெடுக்கும் சிங்கராயரரின் வேட்டைச் சாமர்த்தியம் வெளிப்படுவதும் பாலமனோகரனின் வேட்டை நூல் எனத் தக்க இந்த ‘வட்டம்பூ’விலேதான்.
இந்த இரண்டுக்கும் இணையானது, யதார்த்தனின் ‘நகுலாத்தை’யில் வரும் நாகத்துக்கும் கீரிக்கும் இடையிலான சண்டை.
நாகத்தைக் கண்ட கீரியும், கீரியைக் கண்ட நாகமும் ஒன்றையொன்று கொன்றுவிடும் மூர்க்கத்தோடு யுத்தத்தில் இறங்குகின்றன.
எவற்றினாலும் வென்றுவிட முடிவதில்லை.
கீரி தன் இறுதிக்கட்ட முயற்சியில் இறங்குகிறது.
நாகத்தைச் சுற்றி கீரி ‘நாண வட்டம்’ இடுகின்றது.
கீரி இவ்வாறிடும் ‘நாண வட்ட’த்தை எந்த நாகத்தாலும் மீற முடிவதில்லை.
நாகம் வட்டத்துள்ளேயே மந்திரத்தில் கட்டுப்படதாக ஆசுவாசத்துடன் அடங்கிக் கிடக்கிறது.
அப்போது சூழவிருந்த புதரிலிருந்து ஒரு கீரி வெளிவருகின்றது. ஏது செய்ய முனையும் முன்னதாக இன்னுமிரண்டு கீரிகள் வெளிவருகின்றன. நாகம் திகைத்து நின்றுவிட்டு, சீற்றத்துடன் தலை நிமிர்கிறது.
அப்போது தோன்றுகிறது வெளீரென்ற நிறத்தில் ராணிக் கீரி.
நாகம் அறிகிறது தன் விதி எழுதியாகிவிட்டதென்பதை.
ராணிக் கீரி வட்டத்தின் விட்டத்தில் அங்குமிங்குமாய் ஒரு மாயப் பாய்ச்சலைச் செய்யும்.
மூன்று துண்டுகளாய் ‘நாண வட்ட’த்தின் நடுவே கிடக்கிறது நாகம். கெம்பீரமாய் புதரில் மறைகிறது வெள்ளைக் கீரி.
பிரதியில் வாசகர் உணர்விலேறுமிடங்களில் இது உச்சம்.
இது, நாவலின் முதல் பகுதியான ‘மழை அழைப்பித்த படல’த்தின் முதலாம் அத்தியாயத்தில் வருவதுதான். ஆயினும் இதுபோன்ற தன் பரவச இருப்பை, இறுதிவரை தக்கவைத்துச் செல்கிறது நாவல்.
(9)
இ றுதி யத்தம் நடக்கிறது. மக்கள் நந்திக் கடலோரம் நடக்கிறார்கள் பாதி உயிருடன். காயம்பட்ட சின்ராசனின் மரணமும் சக்கடத்தானின் மரணமும் நிகழும்பொழுது 5000 நாய்கள் குழுமும் ஒரு மாயக் காட்சி அவனது கண்ணில் விரியும். பின்னால், ‘சின்ராசனின் முகத்தின் ஒளி நீர்மட்டத்தில் பரவியது. தலைக்குள் சுரணைபோவது தெரிந்தது’ என நாவலின் ஐந்தாம் பகுதியான ‘கீர்த்;தித் திருஅகவ’லி ல் வரும் அடங்கல் ஒரு மாயத்தின் விகாசத்தோடு நிறைவுறுகிறது.
நாவலும் நிறைவுற்றிருக்கவேண்டிய இடம் இதுதானெனவே படுகிறது.
ஆனால் சின்ராசனின் மரணத்தின் பின்பும் நீட்சியாகும் எவ்வியின் கதை, தன் உச்ச விசையை நாவல் இழக்கும்படி செய்கிறதெனவே நான் கருதுகிறேன்.
(10)
பலவிடங்கள், ஐதீகங்கள் பேசும் வலுவான சொல்லாடலும், மிக்க கலைத்துவமும் கொண்டிருக்கையில், நாவல் அரசியல் பேசும், தன் இரண்டாம் கதையாடலைப் பகிரும் இடங்கள் பெருமளவு தட்டையாகிப் போய்விடுகின்றன.
விவரணப் பாங்கு இவ்விடங்களில் அவசியப்பட்டிருப்பினும், அவற்றின் நீட்சியும் தொடர்ச்சியும் வாசிப்பில் ரசனையை இறங்கவே வைக்கின்றன.
சயந்தனின் ‘ஆதிரை’ நாவலின் இறுதியில் ஆதிரை கதை இவ்வாறு வந்தது. ‘நகுலாத்தை’யில் இவ்வண்ணம் வந்திருக்கிறது. யார் கண்டது? இதுவே நவீன நாவல்களின் ஓரடையாளமாக காலத்தில் ஆகவும்கூடும்தான்.
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல்தானே வழக்கு!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.