2015  -  1

வீட்டின் முன்னால் நின்ற மாமரம் நிறைபூ கொண்டிருந்தது. நெடிய மாரியின் பின் காகம்கூட அதிலே வந்தமர்ந்து கத்தியது அவள் கண்டதில்லை. இப்போது வந்து அணில்கள் பாயத் துவங்கியிருக்கின்றன. என்ன வாழ்க்கையிது என அலுத்திருக்கிறபோது பிரபஞ்சத்தின் இயக்கம் இவ்வாறுதான் வாழ்க்கை என்கின்ற தத்துவத்தைப் புரிதலாக்குகிறது. சந்திரிகாவுக்கும் அவ்வாறான தெளி -வு அப்போது ஏற்பட்டிருந்தது. அடைந்த துன்பங்களாலும், துயரங்களாலும், இறுதியாக வந்து விழுந்த தனிமையாலும்தான், வந்த ஞானம் அது. தனிமை, புரிய முடிந்தவர்களுக்கு பெரும் ஞான வித்தாகிறதுதான்.

சென்ற ஆண்டு தை மாதத்தில் எப்போதும் அலைந்து திரிய விதிக்கப்பட்டவர்போலிருந்த அப்பா மரணமாகியிருந்தார். மூன்ற மாதங்களின் முன் அம்மாவும் காலமாகிப் போனாள். பிளாஸ்ரிக் கால் பொருத்தி சந்தோஷமாக இருந்தபோதும், அவளை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்த தாயின் மறைவுதான், அவளை ஒரு புள்ளியில்போல் நிறுத்தி வாழ்க்கையை விசாரப்பட வைத்தது.

விறாந்தையிலிருந்து பார்த்தால் லூர்து மாதா ஆலயத்தின் முகப்பு காலை வெயிலில் பளீரிட்டுத் தெரியும். முகப்பின் மேல்பகுதியிலிருந்த கண்ணாடிக் கூட்டுக்குள் கையில் குழந்தை ஏந்தி, ஆகாய நீல மேனியில் வெண்ணுடை விளங்க, நூற்றாண்டுக் கணக்காய் கருணை வெள்ளம் பொங்க நின்றிருக்கும் மாதாவின் சொரூபம் கண்களில் படும். முதல் தரிசனத்திலேயே ‘மாதாவே…!’ என அவளது வாய் முணுமுணுக்கிறது.
அவள் உயிர்வரை களைத்திருந்தாள். ஏழு எட்டு வருஷங்களாக வாழ்ந்த வாழ்வு வெறுத்துப்போய் இருக்கிறது. வாழ்க்கை அர்த்தமிழந்து தோன்றுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஓய்ந்திருக்கிற ஓட்டோக்களின் உறுமுகைகள், இனி அவள் வீட்டு இருண்ட கேற்றடியில் மறைந்துநின்று ஒலிக்கத் துவங்கியிடும்.

அம்மா ஒரு தடுப்பரண்போலத்தான் அந்த விறாந்தையில் எந்நேரமும் சுவரோடு சாய்ந்தும், பாயில் படுத்தும் இருந்துகொண்டிருந்தாள். அவளில்லாத நிலையில் ஓட்டோக்களின் உறுமல் இனி வழக்கத்தைவிட அதிகரிக்கவும் செய்யலாம்.

வீடு மொத்தமும் வெறுமை நிறைந்துவிட்டது. உள்ளேயிருந்து அவளது இதயம் எழுப்பும் ஓலத்தைவிட வேறு சத்தம் அங்கே அவள் கேட்க இல்லை.
அவள் அசைந்தால் மட்டுமே சலனமும், அவள் அழுதால் மட்டுமே சத்தமும் எழுகிற நிலைமை மனத்தை அந்தரப்பட வைத்தது. அவள் உடல் களைத்திருந்தாள். மனம் மரத்திருந்தாள். சகல உணர்வுகளும் உள்ளுள் விறைத்துப் போயிருந்தன.

சகிக்க முடியாத அந்த வாழ்க்கையிலிருந்து எங்காவது ஓடிவிட மனம் தெறித்துக்கொண்டிருந்தது. அம்மாவை எரித்துவிட்டு வந்த அந்த நாளில் அது அவளது மனத்தில் விழுந்திருக்கலாம். தனிமை அவள் தனியளாகிவிட்டதை அறைந்து சொல்லியது. அந்த ஒரு வாய்க்கு ஒருவேளைத் தீனி போட சதிரத்தையும் மனசையும் எரித்துக்கொண்டான ஒரு வாழ்வு தேவையில்லை. மட்டுமில்லை. படையின் உதிரிகளின் காமச் சதிருக்கும் அவள் இலவசமாகிவிடக்கூடாது. அம்மா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஒரு ராணுவத்தானைக் கூட்டிவந்தான் ஒரு ஓட்டோக்காரன். ‘அவங்கட தயவு வேணும்’ என்று சிரித்தான். முகத்துக்கஞ்சி வேசை ஆடியிட முடியுமா? முதல் வெறுப்பு உண்டான தருணம் அது.

அம்மாவின் கடைசி மூச்சுவரை ஒரு தேவை அவளுக்கும் இருந்தது. அம்மா இல்லாது அவள்மட்டுமே வாழப்போகும் இனியிலாவது, அம்மா சொன்னதுபோல இருந்துவிட்டு அவள் போகவேண்டும். அவளுக்குமட்டும் ஒரு பிடி சோறு தேடுவது அவ்வளவு பெரிய கஷ்ரமுமில்லை. ஆனால் எங்கே ஓட?

மூன்று மாதங்களின் தேடலில் திடீரென்றெழுந்த ஒரு பொறியின் ஞாபகம் அவளுக்கு ஒரு வழியைத் திறந்துகாட்டியது.

ஏழு கன்னிமார் கோவிலடியில் ‘நெஞ்சுக்க குத்துது’ என்று சொல்லிக்கொண்டிருந்த ஒரு மதிய வேளையில் பாட்டியின் மரணம் சம்பவத்திருந்தது. யுத்தங்களிலெல்லாம் தன்னுயிரைக் காத்துவைத்திருந்தவள், வேளை வந்தபோது அதை ஒரு இறகாய் உதிர்த்துவிட்டிருக்கிறாள். ஊர்தான் கூடி அவளுடலை எரித்து கௌரவமான ஒரு சாவாய் அதை ஆக்கியிருந்தது.

கோவில் ஐயர் ஊர் வந்திருந்தபோது, அவளை எதிர்பாராதவிதமாக நல்லூரிலே சந்தித்தவேளை எல்லாம் கூறியிருந்தார்.

அவளுக்காக அழுவதற்கு எதுவும் இருக்கவில்லை. அவள் நிறைவாழ்வு வாழ்ந்தவள். தாய் சமுத்திராவுக்கே அவள் அழவில்லையே! இயல்புக்கு அழுது, இயல்பில்லாததற்கும் அழுது… அழுவதற்கே அந்த வாழ்க்கையென ஆகிவிடுவது, அவளுக்கு ஒப்பில்லாததாக இருந்தது. ஒப்பிருந்தாலும் அழ முடியாதளவுக்கு தனக்காய் அழுது அவள் கண்ணீரைத் தீர்த்திருந்தாள்.

பாட்டி கால்களில் விசையேந்தி வன்னிப் பெருநிலம் முழுக்க திரிந்தவள். அவளுக்கும் தரித்திருக்க தனதென்று ஒரு துண்டு நிலம் இருந்தது. ஒரு குடிலும் இருந்தது.

பாட்டி வாழ்ந்து கழித்த அந்த ஒற்றைக் குடிசை அப்போதும் அங்கே இருந்துகொண்டிருக்கலாம். போரடித்த நிலத்தில் குடிசை மீந்திருப்பது ஐயமேயெனினும், நிலம் பெயர்ந்து போயிராது. யாராவது குடியிருந்துகொண்டிருந்தால், சொல்லி சரிப்பண்ணிக் கொள்ள ஏலுமாயே இருக்கும். அம்மாவின் பெட்டிக்குள் நிலத்தின் உறுதி இருந்ததை அவள் கண்டிருந்தாள்.

கானாற்றுப் பாலத்துக்கு கிழக்காக இருந்த முதல் நிலம் அவளதுதான். அதிலே நட்டநடுவில் ஒரு பாலை மரம் முன்பு நின்றிருந்தது. வைத்த பிள்ளைகளில் இரண்டு தென்னைகளாய் எஞ்சியிருந்தன.

அந்த நாலு பரப்பு நிலம், ஓ… இன்னும் இரண்டு தென்னைகளும், அவள் கஞ்சி குடிக்க போதுமானதாயிருக்கும்.

அன்றைக்கே அந்த மாதத்தோடு வீட்டை விட்டுவிடுவதாக வீட்டுக்காரருக்குச் சொல்லிவிட எண்ணினாள். முன்பணத்தைத் திரும்பப் பெற அதையும்விட முன்னதாக அவள் அதை அறிவித்திருக்க வேண்டுமென அவர்கள் சொல்லிவிட மாட்டார்கள். அதை பெரிய உபகாரமாகவே எடுத்துக்கொள்வார்கள். அவளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்த துக்கங்களே அங்கே அவளை அவ்வளவு நாட்களாய் அவர்கள் விட்டுவைக்க ஏதுவாயிருந்தன.

அவள் பெயர்ந்து சென்றதை வீட்டுக்காரர் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.

முள்ளியவளையில் பாட்டியின் நிலத்தை சந்திரா அடைந்தபோது பொழுது சாய்கிற நேரம். நிலத்தின் நடுவே பாலை நின்றிருந்தது. பாலையின் பின்னால் ஒரு குடிசையும் இருந்திருந்தது. ஆச்சரியமாக சிறிதுநேரம் பார்த்தபடியிருந்தாள் சந்திரிகா.

சூட்கேஸையும் பெட்டியையும் முற்றத்தில் வைத்துவிட்டு சூட்கேஸிலிருந்து ரோச் லைற்றை எடுத்துக்கொண்டு குடிசைக்குள் சென்று பார்த்தாள். ஆட்களில்லாத இடத்தில் பாம்பு குடியிருக்க வந்திருக்கக்கூடாது. குடிவந்த பாம்பை விரட்டுவது பிறகு பெரிய சிரமமாகிவிடும்.

சுற்றிவர குந்து இருந்தது. அதன்மேல் வலிப்பமான செத்தை இருந்தது. மாரி ஒழுக்கு விழுந்த அடையாளங்கள் மண் நிலத்தில் புள்ளிகளாய்ப் படிந்திருந்தன. படலையொன்று கட்டி வைத்துவிட்டால் உடனடியாகக் குடியிருக்க போதுமான அறுக்கை வந்துவிடும்.

“ஆர் மோன நீ?” பக்கத்து வீட்டிலிருந்து ஒரு மூதாட்டி குறுக்கு வேலியோடு நின்றபடி வினவினாள்.

“யாழ்ப்பாணத்திலயிருந்து வாறன், ஆச்சி. முள்ளியாச்சியின்ர பேத்தி. இனிமே இஞ்சதான் இருக்கப்போறன்” என்றாள் சந்திரிகா.

“ஆராம், அம்மா, அது?” வீட்டின் உள்ளிலிருந்து ஒலித்த ஆரோவின் கேள்விக்கு, “முள்ளி ஆச்சியின்ர பேத்தியாம்” என்ற மூதாட்டி, சந்திரிகா பக்கம் திரும்பிக்கொண்டு, “வேற ஆரும் வரேல்லயோ? தனியவோ இஞ்ச இருக்கப்போறாய்?” என்றாள்.

“தனியத்தான் இருக்கப்போறன். வேற ஆரும் இல்லை எனக்கு. ஏன், ஆச்சி?”

“சும்மாதான் கேட்டன். ராவில பூச்சி பூரான்தான் கவனம். வேற பயமென்ன?. பக்கத்தில சனம் இருக்குத்தான.”

மூதாட்டியும், அவளின் பின்னால் வெக்கறையில் பாதி மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த நாலைந்து வயதான உருவமும் போன பின், பெட்டியை அவிழ்த்து உள்ளே வைத்திருந்த லாந்தரை எடுத்துக் கொளுத்தினாள். பிறகு வாசலில் வந்திருக்க நிறைந்த ஆயாசத்தில் ஒரு நெடுமூச்சு அவளிடமிருந்து பறிந்தது.

புதிய இடம்… புதிய வெளி… புதிய வாழ்க்கை…! சுவாசமும் இனிப்பதுபோல் உணர்ந்தாள்.

வானத்தின் சிவப்பு கருஞ்சிவப்பாய் ஆகிக்கொண்டிருந்தது. வெம்மை தணிந்து வியர்வையடங்கும்படி மெல்லிய காற்று உலவத் துவங்கியது.
கல்லாலான, மண்ணாலான, ஓடு போட்ட, கூரை வேய்ந்த வீடுகளாய் சூழவுள்ள வீடுகள் அமைந்திருந்தன. அது அவள் முன்பு பார்த்திருந்த ஊரல்ல. அங்கே வாழ்ந்த அவளது பாட்டி கண்டிருந்த ஊராகக்கூட அது இருந்திராது.

2010ஆம் 2011ஆம் ஆண்டளவில் அந்தப் பகுதிகளிலே மீள் குடியேற்றத்துக்கு ராணுவத்தின் அனுமதி கிடைத்தது. நிலமிருந்தவர், வீடிருந்தவர் ஈசல்கள்போல் முகாம்களின் வாசல்கள் திறக்க படைபடையாய் வந்தார்கள். பழைய குடியிருப்பாளர்களில் யார் யார் மீளக் குடியேறினார்களோ? புதிய குடிகளாய் எவையெவை வந்தனவோ? ஊர் பழையதுபோல் அல்லாவிடினும் ஊராகும்படி நிறைந்திருந்தது.
எனினும் ஒரு கனவு அழிந்த சோகத்தின் வரிகள் துலக்கமாய் அங்கே விழுந்திருந்தன. றோட்டுகள் புதியனவாய், தகரத்தாலான வேலிகள் புதியனவாய், சிறிய சிறிய கல்வீடுகள் புதியனவாய் ஒரு மாற்றம் அங்கே இருந்தது. மனிதர்களும் புதியவர்களாய் இருந்தார்கள். ஆனால் அந்த நிலம் முழுக்க யுத்தத்தின வடு இருந்தது. ஆணி அடித்து நிலையாய் நிறுத்தி வைக்கப்பட்டதாய் மனிதரின் கண்களில் ஒரு கலையாத சோகம் இருந்தது. இறுதி யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள்… யாரும் முழுதாய் மீண்டிருக்கவில்லை. வரும் வழியெங்கும் அதை அவள் கண்டிருந்தாள்.
இரண்டு மூன்று நாட்களின் பின் சாமான் வாங்க கடைக்குப் போன இடத்திலே ஒரு இளம் பெண் சந்திரிகாவுக்கு பழக்கமானாள். அவள் தன்னை கலாவதி என்று அறிமுகமாகியிருந்தாள். உறவுகள் எல்லாம் அழிந்து தாயோடு தனியனானதை அன்றே சொன்னாள். அவளை, இரண்டு நாட்களின் பின் முல்லைத்தீவுக்கு போய்வந்த வேளை சந்திரிகா வழியிலே மறுபடி சந்தித்தாள். பிறகு அவளாகவே ஒருநாள் வீடு வந்தாள். அந்தளவில் அவர்களுக்குள்ளான நெருக்கம் மேலும் அதிகரித்திருந்தது.

ஒரு நாள் கலாவதியின் வீட்டுக்குப் சந்திரிகா போயிருந்தாள். வாசல் மர நிழலில் கிடந்த இரண்டு மூன்று நாய்கள் குரைத்த சத்தத்தில் கலாவதி வந்து பார்த்து அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

“காவல் பலமாயிருக்கு, கலா.”

“எங்கட நாயளில்லை. ஊர்ஊராய்த் திரியிறதுகள்.”

இருவரும் திண்ணையிலர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

முள்ளி ஆச்சியின் பேத்தி அங்கே குடியிருக்க வந்துள்ள விஷயத்தை முன்பே கலாவதி தாய்க்குக் கூறியிருந்தாள். ஒரு மாத காலத்துள் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த அந்த நெருக்கம் அவளுக்கு புதுமையாய் இருந்ததைக் கண்டுகொண்டே தானும் திண்ணையில் வந்து அமர்ந்தாள் நாகாத்தை.

“கொஞ்சக் காலத்துக்குள்ளயே நல்லாய் அறிமுகமாயிட்டியள்!” என்றுவிட்டு, சந்திரிகாவின் யாழ்ப்பாண வாழ்க்கைபற்றி கேட்டாள்.

“நாங்கள் எங்க வாழுறம், அன்ரி? காலம்தான் எங்களில ஏறியிருந்து சவாரி செய்திட்டுப் போகுது. அது போக எங்கட வாழ்க்கையும் முடிஞ்சிடுது. கொண்டுபோய் சுட்டிட்டு இல்லாட்டி தாட்டிட்டு ஊர் போகிது” என்றாள் சந்திரிகா ஒரு அலுப்போடு.

அந்த அலுப்பில் நாகாத்தை ஆச்சரியப்பட்டாலும், அவளின் வார்த்தைகளில் அடியோடியிருந்த உணர்வை துக்கமாய் உணர்ந்தாள். ‘வாழ்ந்து பெரிய அனுபவமில்லாட்டியும் இந்தப் பிள்ளை எவ்வளவு சரியாய்ச் சொல்லுது எல்லாத்தையும்? நாங்கள் எங்க வாழுறம்… காலம்தான் எங்களில ஏறியிருந்து வாழ்ந்திட்டுப் போகுது… இப்பிடியெல்லாம் சொல்ல எவ்வளவுக்கு பட்டுக் கழிச்சிருக்கவேணும்?’

பிறகு சந்திரிகாவைப்பற்றிக் கேட்டாள்.

“நான் பிறந்தது வன்னியிலதான், அன்ரி. என்ர அம்மாவுக்கும் பாட்டிக்கும் எப்பவும் ஒரு சண்டை இருந்திது. தனித்தனியாய்த்தான் வாழ்ந்தினம். அம்மாக்கு விமானக் குண்டு வீச்சில தொண்ணூற்றெட்டிலயே முழங்காலுக்கு கீழ ஒரு கால் இல்லாமப் போச்சு. நானும் இயக்கத்திலயிருந்து வெளிக்கிட்டு கலியாணம் செய்தோடன யாழ்ப்பாணம் போயிட்டன். என்னென்னத்தை நினைச்சிருந்துதோ காலம், அதையெல்லாம் நான் அங்க போனோடன ஒழுங்கா செய்யத் துவங்கியிட்டுது. அங்க போய்க் கொஞ்சக் காலத்தில என்ர மனிசன் ஆனந்தனை வெள்ளை வான்காறர் பிடிச்சுக்கொண்டு போனாங்கள். தனியனாய்ப் போனாப் பிறகு, ஐயாவும் அம்மாவும் யாழ்ப்பாணம் வரப்போறமெண்டினம், கூப்பிட்டன். போன வருஷத்தில ஐயா, பிறகு இந்த வருஷத் துவக்கத்தில அம்மாவெண்டு ஒவருதராய்ப் போய்ச் சேந்தினம். இப்ப நான் மட்டும் தனியனானோடன சொந்த ஊரோட போய்ச் சேருவமெண்டு வந்திருக்கிறன். இஞ்ச என்னென்ன நடக்குமோ எனக்குத் தெரியா. மிச்சமிருக்கிறத காலம் வாழ விட்டிட்டுப் பாத்துக்கொண்டிருக்கிறன். சின்னனாய்… பெரிசாய்… எப்பிடிச் சொன்னாலும் இதுதான் என்ர கதை.”

அவள் பேசிய விதமே வித்தியாசமாய்ப் பட்டது கலாவதிக்கு. மெல்ல தாயின் காதோரம் சரிந்து குசுகுசுத்தாள்.

“என்னவாம், கலா?” என்று சந்திரிகா கேட்டதற்கு, “இல்லை… உமக்கும் பாட்டியைப்போல நல்லாய் கதைக்க வருகுதெண்டா” என்றாள் நாகாத்தை.

சந்திரிகா மெல்லச் சிரித்தாள்.

பாட்டியிடம் இருந்த கதை சொல்லும் திறமை வேறு என்பது அவளுக்குத் தெரியும். அது இனிமேல் அவளில் வரலாம். வராமலும் போகலாம். கதை சொல்வதற்கும், அதைக் கேட்பதற்குமான சமூகச் சூழல் வேறு. அது முதலில் வரவேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகலாம்? பத்து வருஷங்கள்..? பதினைந்து…? அல்லது அதற்கும் மேலே…?

நாகாத்தை வெற்றிலை போட்டாள். பிறகு தேநீர் வைக்க எழுந்து அடுக்களைக்குப் போனாள்.

சந்திரிகாவும் கலாவும் ஏதேதோ பேசி சிரித்தபடி இருந்தார்கள்.

தன்னால் முடியாதிருக்கிற விஷயத்தை சந்திரிகாமூலம் முயற்சித்தாலென்னவென நாகியிடத்தில் யோசனையொன்று திடீரெனப் பிறந்தது.
தேநீர் வைத்துக்கொண்டுவந்து கொடுத்ததும் சந்திரிகாவைப் பார்த்து நாகி சொன்னாள்: “சந்திரிகா, கேக்கிறனேயெண்டு குறைநினைக்காத. நாலைப் பெத்து ரண்டை சண்டையில துலைச்சிட்டு நிக்கிறன். ஒண்டு கால் ஊனமாய் இப்ப சீந்துவாரில்லாம எங்கயோ கிடக்கு. அதுதான் ஆம்பிளப்பிள்ளை, என்னவாச்சும் செய்துகொள்ளும். இவவாவது சந்தோஷமாயிருக்கிறத நான் பாக்கவேணுமெல்லோ? ஒரு வருஷம் வாழ்ந்து, ஒரு பிள்ளையைப் பெத்ததோட எல்லாம் முடிஞ்சிட்டுதே இவவுக்கு? நீயாவது கொஞ்சம் சொல்லிப் பாரன், தன்ர பின்னடியை கொஞ்சம் யோசிக்கச் சொல்லி.”

சந்திரிகாவுக்கு அந்த மனநிலை இல்லை. கலாவதி குழந்தையோடு வாழும் தனிவாழ்க்கை அவளுக்குத் தெரியும். நேர்ந்த விதம் தெரியாது. பெரும்பாலும் எல்லாருக்குமே அதுமாதிரியான வாழ்வு விதிக்கப்பட்டிருந்த சமூகத்தில் தனியான கவனத்தைக் கவரும் அம்சமும் அதில் இல்லை. எல்லாம் தெரிந்துகொண்டு மட்டுமே சொல்லக்கூடிய தனிப்பட்ட விஷயமுமது. சந்திரிகாவின் பதில் மிகநிதானமாக இருந்தது. “சொல்லுறன், அன்ரி. அவவிட்ட வேற சில விஷயங்களும் நான் கேக்கவேணும். எல்லாம் கேட்டிட்டு ஆறுதலாய் ஒருநாளைக்கு சொல்லுறன்.”

பதிலில் அவ்வளவு ஆர்வத்தைக் கண்டிருக்காவிட்டாலும், “சரி”யென்றாள் நாகாத்தை.

அதற்கான ஒரு வாய்ப்பு சந்திரிகாவுக்கு ஒருநாள் வாய்த்தது.

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கல் வந்தது. போவதாக கலாவதிக்கும் சந்திரிகாவுக்கும் தீர்மானம் எழுந்தது. எவ்வளவு கெஞ்சியும் தான் வரமாட்டேன் என்றுவிட்டாள் நாகாத்தை. கலாவதியும் சந்திரிகாவும் மட்டும் குழந்தையை நாகியுடன் விட்டுவிட்டுக் கிளம்பினார்கள்.
எல்லாருக்கும் அருள் பாலித்த அம்மன் கலாவதியின் தாய்க்கு மட்டும்தான் ஓரவஞ்சகம் பண்ணினாளோ? அது அவளுக்கும் அவளது அம்மனுக்குமான பிரச்சினைதான். என்றாலும் அவளின் கோபம் அவ்வளவு காட்டமாய் இருந்தது சந்திரிகாவுக்கு திகைப்பாயிருந்தது.
வெய்யில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஒரு மதியமாகிற வேளையில் கோவிலை அவர்கள் சென்று சேர்ந்தார்கள். பொங்க இடமில்லாதளவு ஜனக்கூட்டம். எங்கும் புகை சுழன்று திரிந்து கண்களை எரித்தது. தூரமாக நிழல் வழிந்த ஒரு மருத மரத்தடியில் அம்மனைக் கும்பிட்டுவிட்டு சென்று இருவரும் அமர்ந்தனர்.

இருவருமே தம் நினைவுகள் கெம்பியெழ சிறிதுநேரம் பேசாமலிருந்தனர்.

சந்திரிகாவுக்கு, சுமார் பத்து பதினொரு வருஷங்களுக்கு மேலான காட்சியொன்று நினைவைக் கிழித்தது. மாங்குளம் முகாமில் தங்கிருந்த காலத்தில் ஒருநாள் தன் சிநேகிதியுடன் அந்த இடத்துக்கு அவள் வந்திருந்தாள். அன்றைக்கு அரியாத்தை கதை சொன்னாள் பாட்டி. முடியும்வரை இருந்து கேட்டுவிட்டுப் போனாள்.

கலாவதிக்கு தன் தம்பி கணநாதனின் ஞாபகம் வந்தது. அம்மன் கொடியேறியிருந்த ஒரு திங்கட்கிழமை அவர்கள் அம்மனுக்கு பொங்கல் வைக்க வந்திருந்தார்கள். அப்போது கணநாதன், அக்கா, பிரியன் எல்லாரும் அவளுக்கு இருந்திருந்தார்கள். இப்போது கணநாதன், தயாவதி இரண்டு பேரும் உயிரோடு இல்லை. பிரியன் உயிரோடிருந்தும் இல்லையாய்ப் போனான். தயாநிதியின் மரணத்தின் பின் குழந்தைகளோடு தனபாலன் ஊரோடு போய்விட்டான். ஞானா எங்கேயோ இருக்கிறான். அம்மாவுக்கு மிச்சமாகிய ஆண்பிள்ளை. வீட்டுக்கு வருஷ கணக்கில்தான் வந்தான். இயக்கம் இருந்தபோது அவன் சமரில் காயம் பட்ட போராளி. இப்போது அவனை முடம் என்கிறார்கள். சமூகத்தில் மரியாதையுமில்லை, வாய்ப்புமில்லை. ஒருநாள் சொல்லி கண்கலங்கினான்.

இப்போது அவளும் அம்மாவும் குழந்தையும் மட்டும்.

கலாவதிக்கு தம்பியின் இழப்புதான் பெரிய பாரமாய் விழுந்திருந்தது. அக்காவினதை விடவும்.

நினைவு கலைந்த கலாவதியிடம் சந்திரிகா கேட்டாள், அவளின் குழந்தைக்காக, அவளுக்காகவும்தான், ஏன் அவள் ஒரு புதிய வாழ்க்கையைத் தேடிக்கொள்ளக்கூடாது என.

கலாவதி கேட்டதும் கலகலத்துச் சிரித்தாள். பிறகு, “எனக்கா…? அதெல்லாம் ஒண்டும் தேவையில்லை. வாழ்க்கையில ஒரு பற்றுக்கு என்ர பிள்ளை இருக்கு. அது போதுமெனக்கு. நான் எப்பிடியும் வாழ்ந்திடுவன்” என்றாள்.

“கடைசிவரை நிலைக்குமெண்டு நம்பி நாங்கள் ஒரு வாழ்க்கையை ஏமாந்திட்டம். எண்டாலும் போராட்டம் தந்த மனவுறுதி எங்களிட்ட இருக்கு. போராட்டத்தில தோத்திட்டம்தான். ஆனா நாங்கள் தோக்காத விஷயங்களும் கொஞ்சம் இருக்கு. அதில்லாட்டி இந்தளவு அழிவுக்குள்ள நாங்கள் தப்பிப் பிழைச்சிருக்கேலாது. சண்டை எதோ ஒரு வடிவத்தில இண்டைக்கும் இருந்துகொண்டிருக்கு எண்டுதான் எனக்குப் படுகிது.

என்னவொண்டு, அது ஆயுதச் சண்டையாயில்லை. இப்ப... எங்கட புருஷன்மாரைத் தா, எங்கட அண்ணைமாரைத் தா, எங்கட அப்பா அக்கா எங்கயெண்டு சொல்லு, எங்கட காணியளிலயிருந்து ஆமியள எடு, அரசியல் கைதியளை விடுதலையாக்கு என ஒரு போராட்டத்தை நடத்துறதுக்கான தைரியத்தை அந்த உணர்வுதான் தந்திருக்கு. தனிய வாழுறதுக்கும், தனியனாய் வாழுறதுக்குமான உறுதியையும் இதுதான் தந்தது. இந்த நிலையில, ஏமாறியிட்டமெண்டு நாங்கள் அழுதுகொண்டு இருந்திடக்குடாது, கலா.”

கலாவதி நிமிர்ந்து சந்திரிகாவைப் பார்த்தாள். அதுவும் ஒரு பெண்மையின் பிரவாகம்தான். ஆனால் அவள் பாதை வேறு. அவள் சொன்னாள்: “அந்தத் தயிரியம் என்னிட்ட இல்லைப்போல, சந்திரி. எல்லாரும் தயிரியசாலியளாய் இருந்திடவும் ஏலாதுதான? ஒருக்கா நான் ஏமாந்திட்டன். இனி மாட்டன். அவன் ஒரு துரோகம் செய்தான். பெரிய துரோகம். எனக்கு மட்டுமில்லை, என்ர மொத்த இனத்துக்கும் செய்தான். என்னைப் பணயமாய் வைச்சு அவன் ஆடின ஆட்டம். என்ர புருஷனெண்ட பேரிலதான் வீட்டுக்குள்ளயும், ஊருக்குள்ளயும் நுழைஞ்சான். இண்டைக்கு எல்லாம் முடிஞ்சுபோச்சு. அவன் ஒருநாள் வந்தான், சந்திரி. ‘மன்னிச்சிடு’ எண்டான். நான் தெளிவாய்த்தான் இருந்தன். ‘போடா!’ எண்டன். ‘இப்பிடியே போயிடு’ எண்டன். ‘எனக்கு நீ எண்டைக்கும் வேண்டாம், என்ர பிள்ளைக்கும் வேண்டா’மெண்டன். அழுவாரைப்போல கொஞ்சநேரம் நிண்டிட்டு போட்டான். இப்பவும், ஆரோ காந்தியிட்டுப் போட்ட கோம்பைதானே, நானுமொருக்கா காந்துவமெண்டு ஒருதன் வருவான். நிச்சயமாய் வருவான். அப்பிடி நிலமைதான் இப்ப ஊரிலயும் இருக்கு. ரண்டாயிரத்து பத்தில… ரண்டாயிரத்து பதினொண்டில… ஊர் முழுக்க வெளிநாட்டு உள்நாட்டு மாப்பிளயள் திரிஞ்சாங்கள். வானில, காரில, மோட்டார் சைக்கிள்ல திரிஞ்சாங்கள். நம்பமாட்டாய், அவ்வளவு பேர் திரிஞ்சாங்கள், சந்திரி. அவங்களுக்கு பலியான பொம்பிளையள் கனக்க. இண்டைக்கு பழையபடி இன்னொரு குழந்தையோட தின்னக் குடிக்க வழியில்லாமல் என்னென்னவோ செய்து சீவனம் பண்ணுதுகள். இதெல்லாம் தேவையா எனக்கு? நான் இன்னொருக்கா ஏமாறவே மாட்டன். அப்பிடி ஏமாறத் தயாரில்லாததாலயே இனி ஒரு வாழ்க்கையை நான் யோசிக்கமாட்டன்.”

“எல்லாரும் அப்பிடி இருப்பினமெண்டு சொல்லேலாதெல்லோ?”

“சத்தியமாய்ச் சொல்லேலாது. ஆனா… சண்டை முடிஞ்ச காலத்துக்குப் பிறகு நடந்த ஆயிரம் கதையள் எனக்குத் தெரியும். எத்தினையோ பொம்பிளையள் புருஷனில்லாமல் நிண்டுதுகள். அதெல்லாம் விதி, யுத்தத்தின்ர கொடுமையெண்டு அடங்கியிருக்கேலும். ஆனா யுத்தம் முடிஞ்ச பிறகு கலியாணமெண்டு கட்டியிட்டு, எல்லாத்தையும் முடிச்சுக்கொண்டு மூண்டு நாலு மாசத்துக்குள்ள அவங்கள் போயிட தன்னந்தனியாய் அலைஞ்சுதுகளே, அது துரோகம், சந்திரி. ஊர் ஊராய் அமையாததாலதான் இதெல்லாம் நடந்திது. நீ வன்னியில இருந்திருந்தா இதெல்லாம் உனக்கும் தெரிஞ்சிருக்கும். என்ர வாழ்க்கை அவ்வளவுதான். அதுக்காக நான் வாழமாட்டனெண்டு சொல்லேல்ல. வாழுவன், என்ர வழியில. என்ர புறியங்களோட. ஒருநாள் கூலிவேலைக்குப் போனாலும் சுளையாய் எழுநூறு எண்ணூறு ரூவா கிடைக்கும். அது போதும் எனக்கு.”
“அப்ப… அம்மாக்கு என்ன சொல்ல?”

“இதையேதான்.”

அவர்களுக்குள் நீண்ட மௌனம் விழுந்திருந்தது.

பொழுது மேற்கில் சரிந்துவந்தது.

நிலாக் காலம்தான். பொழுதுபட கிளம்பினாலும் வீட்டை போய்ச் சேர்ந்திடலாம்.

சிறிதுநேரத்தில் தன் உணர்ச்சிக் கொதிப்பை அடக்கிக்கொண்டு சந்திரிகா பக்கம் திரும்பினாள் கலாவதி. “அதுசரி… உன்ர கதை என்னமாதிரி? திரும்பி அவர் வருவாரெண்டுதான் இன்னமும் காத்திருக்கிறியோ?”

அவள் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அது. திடுக்கிடாவிட்டாலும் அது அவளை அதைத்தது. அவள் பதில் சொல்லத்தான் வேண்டும். தன்னை முழுவதுமாய் அவளுக்கு வெளிப்படுத்திய ஒருத்தியின் கேள்வி அது. நழுவிவிட முடியாது. “காத்திருக்கிறதாய்ச் சொல்லமாட்டன். ஆனந்தன் திரும்பி வருவானெண்டு எனக்கு நம்பிக்கையில்லாட்டியும், அதைத்தான் நான் இப்ப செய்துகொண்டிருக்கிறன்.”

“எதுக்கு?”

“அதுக்கு ஒரு கதை இருக்கு.”

“கதையோ…?”

“கதைதான். நாடகமாய் எழுதின கதை. புத்தகமாயும் வந்திருக்கு. இயக்கத்தில இருக்கேக்க வாசிச்சன். என்ர கதையும்… இன்னும் கனபேரின்ர கதையும்தான் அது. நெஞ்சுக்குள்ள இப்பவும் உயிரோட இருக்கிற கதை.”

“சொல்லு, கேப்பம். நேரம் இருக்குத்தான.”

‘ம்…!’

பெருநிலா காலித்திருந்தது.

இன்னும் சற்று இருள வானத்தில் நட்சத்திரங்கள் ஜொலிக்கும்.

காற்றும் வரும்.

“அது ஒரு காலம்… மனிசன் வாழ அலையோடயும், தரையோடயும் போரடிக்கொண்டிருந்த காலம்… 


2

வடவிலங்கையில் பொன்னாலை, அலுப்பாந்தி, வாகைக்கரை ஆகிய இடங்களுக்கு கிட்டவுள்ள ஒரு மீனவ கிராமம்.

அது 1957ஆம் ஆண்டு ஐப்பசி மாதம். அன்று கரிநாளும். முழு வானமும் கறுப்பால் மூடுண்டு போயிருந்தது. கடை யாமத்திலும் கீழ்த் திசையில் ஒளி வரக்கூடிய அறிகுறிகள் இருக்கவில்லை. நெத்தலிபோல் சில நட்சத்திரங்கள் மட்டும் அவ்வப்போது வானத்தின் ஓரத்தில் துள்ளுவது தெரிந்தது. மாரித் தவளைகள் சில கத்தின. சிள் வண்டொன்று இடைவிடாது கிரீச்சிடுவது கேட்டது.

ஓரக் கடலில் உலவிய காற்று மெல்ல நடந்து வந்து மாரிக் குளிரால் உடலைக் குத்தியது. வலைஞர் துயிலெழும்பும் நேரம் அதுதான். கடல் அவர்களை அழைக்கிற விதம் அது.

அப்போது ஊர்ப் பிள்ளையார் கோவில் மணி நிலமதிர எழுந்து உயரே பரந்தது. தென்னையில் வதிந்திருந்த குருவிகள் சில சிலிர்ப்படைந்து சிறகுகளை படபடவென சிணுங்காமல் ஓலையின் இழைகள் அதிர அசைத்தன.

மாயன் எழுந்து கடலுக்குச் செல்ல ஆயத்தங்கள் பண்ணினான்.

அவனது மனைவி மயிலி பழஞ்சோறும், மோதக வள்ளிக் கறியும், உடனரைத்த பச்சடியுமிட்டு குழைத்த சோற்றை கவளங்களாக்கி ஆசையாக அவனது ஏந்திய கையில் பரிமாறினாள். மாயன் வாங்கி வாங்கி அமுதம்போல் உண்டான்.

பிறகு அவன் கைகழுவி வர, கட்டிவைத்த பொதிசோற்றை அவனிடம் கொண்டுவந்து கொடுத்தாள் மயிலி. நெஞ்சை வகிர்ந்தெடுத்ததுபோல் ஏனென்று தெரியாதபடி ஒரு துணுக்கம்.

நீண்டகாலமாக அந்த உணர்வை மயிலி அடைந்து வருகிறாள். கடலின்மீதான ஒரு பயம் மிக நுண்மையாய் அவளுள்ளிருந்து வெளிப்படுகிற தருணம் அது. கல்யாணமான எந்தப் பெண்ணுமே கணவன் கடல் செல்லும்வேளையில் அவ்வாறுதான் உணர்வாளா? அல்லது காதல் மேவிய வலைச்சிகளுக்குமட்டுமே அந்த உணர்வு எழுகிறதா? அல்லது மயிலி அவ்வாறு அதிர்வதற்குக் காரணமாக ஏதேனும் ஒரு பேரழிவு கடலுள் அவளுக்கு விளைந்திருக்கிறதா?

அன்று பிள்ளையார் கோவில் பெரிய திருவிழா நடக்கவிருந்தது. ஊர்கூடித் தேரிழுக்கும் பெருந் திருவிழா. ‘வடம் பிடிக்க வாருங்கள்…’ என்று நாள்கள் பலவற்றுக்கு முந்தியே ஊர் அழைக்கப்பட்டிருந்தது. அன்றைக்கே திருவிழாவின் கொண்டாட்ட கலகலப்பை பூண்டுவிட்டது ஊர்.
மாயனுக்கும், மயிலிக்கும் அங்கு போவதற்கு திட்டமிருந்தது. அதை மென்மையாக அவனுக்கு ஞாபகப்படுத்தி அவனை வெள்ளென வந்துவிடக் கேட்டாள் மயிலி.

அப்போது அவளது கையிலிருந்த விளக்கை பக்கென்று ஊதி காற்று நூர்த்தது.

விசைகொண்டு இதயம் துடித்தடங்க, நொடிக்குள் விளக்கை மறுபடி கொளுத்தி ஏந்தி வந்தாள் மயிலி.

சவளை எடுத்துக்கொண்டு மாயன் ஒழுங்கையில் இறக்கினான். கையால் கோலிய சுடர் விளக்கோடு வாசலில் நின்று மயிலி அவனை வழியனுப்பினாள். தூரச் சென்று மாயன் திரும்பிப் பார்த்தபோது வழியின் தூரம் அவளை மறைத்திருந்தது.

இடையிலே மையுண்ட நெடுங்கண்ணாத்தையென்ற அயல் விதவைக் கிழவி எதிர்ப்பட்டாள். “என்ன தம்பி, வீச்சுக்கு வெளிக்கிட்டிட்டியோ? காத்து புதுமாதிரி சுழண்டு சுழண்டு அடிக்குது. மழையும் தூறத் துவங்கியிட்டுது. என்னவோ… வெளிக்கிட்டிட்டாய், போய்ச் சுகமாய்த் திரும்பி வா.”
மாயன் கடற்கரையை அடைகிற அளவில், அவனோடு தொழிலுக்குச் செல்லும் சகதொழிலாளிகளான வடிவேலுவும் அஞ்சானும் வந்து சேர்ந்தனர். மாயன் தனது கட்டுவள்ளத்தை இழுத்து கடலிலே ஏற்றினான். அலையின் வலிய கரங்களை எதிர்த்து அவனது திண்ணிய தோள்கள் சவளை வலிக்கத் துவங்கின.

மின்னல் வெட்டத் துவங்கியது.

தொடர்ந்து கன்னத்தில் அறைவதுபோல் முழங்கி மாதிரத்தைக் குலுக்கின மேகங்கள்.

அது அந்த வலைஞர்களின் உறுதிக்கும், கடலறிவுக்கும் விடப்பட்ட சவால். அவர்கள் இன்னும் தினவெடுத்தனர். அது பாரை படும் நேரம். கடலின் குமுறலில் யாருக்கும் புறணியில்லை. மூவரும் அலையை வலித்து கடலில் முன்னேறினர். திடீரென கிளர்ந்தெழுந்த சூறையொன்று அப்படியே தாவி ஓருடலைப் பற்றி இழுத்து பெருவீச்சொடு அப்பால் வீசியது. அந்த உடல் மாயனதாக இருந்தது.

அந்த நிலையில் பிள்ளையாரின் அனுக்கிரகம் கொஞ்சமேனும் அவனுக்கு இருந்ததுபோலும். மரக் கட்டையொன்று அவனது கைகளில் அகப்பட்டது.

அமிழ்ந்தும் மிதந்துமாய் குளிர்க் கடலைத் தாண்டி ஒருநாள் மாயன் கரையை அடைந்தான்.

கடல் கரையாக விரிந்த அந்த இடத்திலிருந்து, கரை ஊராகத் தொடராதிருந்தது. திசையெட்டிய தூரமெங்கும் கண்ணில் பட்டது பெருவெளி. கடல் கடந்தவன் கரை கடக்க முடியாமல் வீழ்ந்து கிடந்தான் பெரும்பொழுது.

பிறகு உடலும் மனமும் தெளிந்து காதங்களைக் கடந்தான். இடையே வனமொன்று குறுகியது. அதையும் கடக்க, தூரத்தே தெரிந்தது. அவனதல்லாத ஊரொன்று. அதுபோல் சென்னை, கல்கத்தா, பினாங்கு என பல இடங்களையும் அவன் தாண்டினான். அவன் காலடியில் மணல் வெளிகளும், வனங்களும் சிறுத்தன.

காதல் அவனை அழைத்துக்கொண்டிருந்தது. அதையே தேடி அவனும் ஓடிக்கொண்டிருந்தான். யுகங்கள்போல் காலம் கரைந்தழிந்தது.
வீண் போகாத நம்பிக்கைகளால் கடைசியாக ஒரு காலை நேரத்தில் அவனது சொந்த ஊரில் மாயன் கால் பதித்தான். அந்த நாள் 1966ஆம் ஆண்டு சித்திரை மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருந்தது. தன் நிலத்தைப் பிரிந்து சரியாக எட்டு வருஷங்களும் ஆறு மாதங்களும் அவனுக்கு ஆகியிருந்தன.

இடையிட்ட நெடுங்காலத்தின் பின் ஊரைக் கண்டவன் திகைத்துப் போனான்.

அது மாறியிருந்தது. புதிதாய்ச் சில கல்வீடுகள் அந்தத் திடலில் முளைத்திருந்தன. குடிசைகள் சில இல்லாமலாகியிருந்தன. மட்டுமில்லை, அவனது குடிசையே காணாமல் போயிருந்தது. அதன் முன்னாலிருந்த சில முதிர்ந்த பூவரசுகளையும் அவன் காணமுடியாதவனானான்.
அவனது வீடெங்கே? மயிலி எங்கே? அப்போது ஏணைப் பிள்ளையாய் இருந்த மகன் மன்னவன் எங்கே?

அமானுஷ்யம் கொண்டிருந்த அந்தப் பிரதேசத்தில் யாரைக் கேட்க?

கடலில் தூண்டில் போட்டுக்கொண்டிருந்த ஒரு சிறுவன் அப்போது அவனது கண்ணில் பட்டான். ஓடிச் சென்று வினவினான். “தம்பி… தம்பி… இஞ்ச இருந்த அரியக்குட்டி மாயன்ர வீடெங்க இருக்கு, தம்பி? அவன்ர பெண்சாதிக்கு மயிலம்மையெண்டு பேர்…”

சிறுவன் மாயனை ஏறஇறங்கப் பார்த்தான். பிறகு, “மாயர் இப்ப இல்லையே!” என்றான்.

“அவற்ர மனுஷி மயிலம்மை இருந்தாலும் போதும். அவையின்ர வீட்டை ஒருக்கா எனக்குக் காட்டுறியோ?”

‘ம்… இவரைப் பாத்தா பிள்ளை பிடிகாறன் மாதிரித் தெரியேல்லைத்தான்’ என்று நம்பிக்கைகொண்ட சிறுவன், “சரி, வாருங்கோ, காட்டிறன்” என கூட்டிச் சென்றான்.

போகிற வழியிலே தனது மகன் மன்னவனுக்கும் இப்போது அந்தச் சிறுவனின் வயதுதானிருக்குமென பாசக் கெடுவில் மாயன் பகர்ந்தான்.
சிறுவன் ஆச்சரியத்தோடு, தானேதான் மன்னவனென்றான்.

“நீயா என் மகன்?” என்று பிரலாபித்து, பின் தெளிந்து உணர்வலைகளில் பாதம் புதைய மேலே மகனுடன் நடந்தான் மாயன்.

அதோ வீடொன்று தெரிகிறது. அதுதான் அவன் வீடா? அங்குதான் அவனது மயிலி இருக்கிறாளா? அவனது இதயம் வெளியே வரத் துடித்தது.
வீட்டை அடைந்த மன்னவன் ஓடிப்போய் திண்ணையில் ஏறிநின்று, “அம்மா… அம்மா… ஐயா வந்திட்டார், பாயை எடுத்து விரியம்மா” எனக் கூவினான்.

‘ஐயாவோ? அதார் ஐயா?’ உள்ளேயிருந்த மயிலி புதிரோடு வெளியே வந்தாள்.

காதலொழுகும் கண்களோடு முற்றத்தில் நின்றுகொண்டிருந்தான் மாயன்.

கண்ட மயிலி ஏங்கிப்போனாள். “நீங்களா…?” என அலறினாள்.

அவனை என்றைக்குமே காணமுடியாதென்ற அவளது நிச்சயத்தின் அலறலல்லவா அது?

அத்தனை வருஷங்களில் மயிலிக்கு செத்தவனாகவா தான் ஆகியிருந்தான்? அவளுக்குள் ஒரு மனம், அதற்குள்ளும் காதலென்று ஒன்று இருந்து, தான் உயிரோடிருப்பதை அவளுக்கு சூசகமாயேனும் சொல்லவில்லையா? கடந்து வந்த காதங்களெல்லாம் வீணானவையா?

கணங்கள் யுகங்களாகிக் கரைய, வெறிச்சிட்டு நின்றிருந்தான் மாயன்.

அப்போது தடுக்குக் குழந்தையொன்று உள்ளே அழுது கேட்டது.

‘குழந்தை…? மயிலி வீட்டில் குழந்தை…?’ அவன் மயிலியைநோக்கி நிமிர்ந்தான்.

சிலையாக நின்றிருந்தாள் மயிலி. அவளது கண்கள் நீர் வார்ந்துகொண்டிருந்தன.

மயிலியின் முகத்தில் அவனது சகல கேள்விகளுக்குமான பதில் எழுதியிருந்தது. அவள் அப்போது யாரோவின் மனைவியாக அங்கே நின்றுகொண்டிருக்கிறாள்!

மாயன் வெடித்துச் சிதறினான்.

மாயனின் தம்பி மாசிலன் அப்போது அங்கே வந்தான். அண்ணனைக் கண்ட அவனுமே பேச்சு மூச்சற்று சிலையாய் உறைந்தான்.
மாயன் திரும்பி அவனைக் கண்டான்.

அவனிடமும் அவனுக்கு கேள்வி இனி இல்லை. பதிலை அவனது சிலைநிலை கொண்டிருந்தது.

ஆச்சரியம்மட்டுமா அவர்களைச் சிலையாக்கியது? அவனை எதிர்கொள்ள முடியாமையும்தான். அவர்கள் அவனை ஏமாற்றிவிட்டார்கள். அவனுக்கு துரோகமிழைத்து விட்டார்கள்.

சிறிதுநேரத்தில் மையுண்ட நெடுங்கண்ணாத்தையும், பிறகு மறைக்காடரும் அங்கே வந்தார்கள். தன்னைக் கண்டு அவர்களும் சிலையாவார்கள் என மாயன் நினைத்தான். அப்படியே அவர்கள் ஆனார்கள்.

தன் சிலைநிலை முதலில் கலைந்தவள் மயிலியாக இருந்தாள்.

அவளது பார்வை மையுண்டநெடுங்கண்ணாத்தையின் மேல் வெறுப்போடும் நெருப்போடும் ஏறியது. “அடியே, எத்தனை தடவை சொல்லியிருப்பன், என்னை அவர் முடித்த காலத்திலயிருந்தே அக்காளும் தம்பியுமாய்த்தான் நானும் மாசிலனும் பழகிறமெண்டு. திரும்பத் திரும்ப சொன்னனேயடி. ‘ஊரே சொல்லுது, நெருப்பில்லாட்டி புகை வருமோ?’ எண்டெல்லோ என்னோட தர்க்கம் பண்ணினாய்? கோதாரி வந்து குறுக்காலே போறவளே, மூதேவியே, சூர்ப்பனகையே, மூளிஅலங்காரியே எண்டெல்லாம்கூடத் திட்டினனே. எள்ளுப்போலயும் அரக்காமல் மாசிலனுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருக்கெண்டெல்லோ நிண்டாய். சீலை உடுத்தாப்போல என்ன, உனக்கு மானமிருக்கேல்லையேடி. உன்ர புருஷன் சரவணை செத்துப்போக அமர்பிடிச்சு மணியரோட காசுக்கு படுக்கப்போனவள்தான நீ? உனக்கு அப்பிடித் தவிர வேற எப்பிடி நினைக்கத் தெரியும்? பாழ்பட்ட கிழவியே, கடைசியில என்னைக் கவிழ்த்திட்டியேடீ. மறைக்காடரும் உன்னோட சேர எறும்பூர கல் குழிஞ்ச கதையாய் உடைஞ்சுதே என்ர ஒருமனம். இனி மீட்சியில்லை. மீண்டெழுந்தாலும் அர்த்தமில்லை. இந்தக் கலியாணத்தை நான் ஆசையில செய்யேல்லயெண்டதை ஆர் இனி நம்பப்போகினம்?”

மீண்டும் கல்லாகிற காலமாயில்லை அது.

மாயன் எல்லார் முன்னிலையிலும் நின்று வேகினான். கண்ணில் நீர் பொங்கி வழிந்தது. அது அவனது உயிர் உருகி வழிந்த நீர்தான்.
தனக்குள் அப்போதுமிருந்த அந்த அழியா பிம்பத்தைப் பார்த்து மாயன் பிரலாபித்தான். “நினைப்பெல்லாம் நீயாயெல்லோ ஓடி வந்தன்? வாழக் கூடிய எத்தினை ஊர்... எத்தினை ஊரைக் கண்டன்! எங்கயும் தங்க மனம் விடேல்லையே! உன்னைக் காணத்தான காதங்களைக் காலில கடந்து வந்தன்? இதைக் காணவோ இவ்வளவு பரதவிப்பில நான் வந்தது? கடல் மட்டும்தான் எனக்கு கொடுமை செய்ததாய் இண்டைவரைக்கும் நினைச்சிருந்தன். இல்லை… இல்லை… அதைவிடவும் கொடுமையானதொண்டு இருக்கு. இந்த ஊர். இந்த ஊர்தான் மயிலியை திரிச்சுது… மாசிலனை திரிச்சுது. அவை ரண்டுபேரும் சேர்ந்து என்னை எரிச்சினம். நான் எரிஞ்சுகொண்டிருக்கிறன்.”

மாயனின் நெஞ்செரிந்து வந்த சொல் எல்லாரையும் எரித்தது.

சந்திரிகா கதை முடிந்ததென்றாள்.

“தடாலெண்டு மயிலி நிலத்தில விழுந்து, நான் பாவி… நான் பாவீயெண்டு கதறித் துடிக்கேல்லையோ, சந்திரி, படங்கள்ல வாறமாதிரி?” கலாவதி சிரித்துக்கொண்டே கேட்டாள்.

சந்திரிகாவும் சிரித்தாள். “இல்லை. என்னைப் பொறுத்தவரை மயிலி மாயனைக் கண்ட நேரத்திலயும், மாயன் மயிலின் குழந்தை அழுகிற சத்தத்தைக் கேட்டோடனயும் செத்திட்டினம். உயிர் இருந்திது. எண்டாலுமென்ன, இனி அவையின்ர உயிர்தரிப்பு செத்ததுக்குச் சமம்தான். அங்க உடைஞ்சது ரண்டுபேருக்குமிடையில இருந்த கலியாண பந்தமில்லை, காதல். மாயனுக்கு மடத்தில மறைக்காடர் ஒரு வேலை குடுத்தார். மாயனும் தனியா வாழப்போறனெண்டு தன்ர மகனோட வெளிக்கிட்டான். அங்காலயும் கதை கொஞ்சத் தூரம் போகும். ஆனா எனக்கு கதை மயிலி சிலையாய் நிக்கிறதோடயே முடிஞ்சிட்டுது. மஹாகவியெண்டு ஒரு கவிஞரின்ர ‘புதியதொரு வீடு’ நாடகத்தில வாற கதைதான் இது. இந்தக் கதைதான் என்னை அச்சப்படுத்திக்கொண்டு இருக்கு, கலா. நான் கெட்டுக்கூட போகலாம். அது பெரிய விஷயமே இல்லை. எத்தினை தமிழ்ப் பொம்பிளயள ஆமியள் கெடுத்தாங்கள்? யுத்த காலத்தில தானாய் கெட்டதுக்கும், அதுக்கும் தன்மையில வித்தியாசமில்லையெண்டுதான் நான் சொல்லுவன். அதால காத்திருக்கிறன். நம்பிக்கை இல்லாட்டியும் ஆனந்தனை நான் காத்திருக்கவேணும். மாயன் கிட்டத்தட்ட ஒம்பது வருஷத்துக்குப் பிறகுதான் மீண்டு வந்தான். ஆனந்தனும் ஒருநாளைக்கு திரும்பி வரலாம். அவன் வரேக்க நான் அவனுக்காக இருக்கவேணும். அந்த நிமிஷத்துக்குப் பிறகு, அவனுக்கும் எனக்குமிடையில இருக்கிற பந்தத்தை உடைச்செறிஞ்சிட்டு நான் போவன். ஆனா அதுவரைக்கும் நான் காத்திருக்கவேணும். தனிப்பட்ட ஆக்களுக்கிடையில எண்டாலும் அது முக்கியமான ஒரு அறம்.”
கலாவதியால் அப்போது சந்திரிகாவைப் புரிய முடிந்தது. ஆனாலும் ஒரு நெருடலையும் அவள் உணர்ந்தாள். “தங்கட புருஷன்மாரைக் காணாமல்போன எல்லாப் பொம்பிளையளுக்கும் இப்பவே இருக்கிற வறுமை, தனிமை, வேதனையளோட காத்திருக்கிறதும் இன்னொரு சுமையாய் ஏறப்போகுது, இல்லையே, சந்திரி?”

“காணாமல் போதலெண்ட விஷயத்தில இருக்கிற பெருஞ்சோகமே அதுதான், கலா. அதுக்கு ஈடு சொல்ல வேற இல்லை.”

வீட்டுக்குச் செல்ல இருவரும் எழுந்தனர்.

வானத்தில் வெள்ளிகள் மினுங்கிக்கொண்டிருந்தன.


3
அறுவடை முடிந்த நிலங்களில் மேற்படை காய்ந்து பொருக்குப்பட்டுப் போயிருந்தது. கழிவுநீர் வற்றிய ஓடைக்குள் அகிளான்களும், நில எலிகளும் ஊர்ந்து திரிந்தன. குளத்தின் நீர் பரந்திருந்த பெருவெளியில் கடற் காகங்கள் சில மரங்களில் அமர்ந்து சோர்ந்திருந்தன. ஏக்குற்ற நிலையில் செங்கால் நாரைகள். கூழைக் கிடாக்கள் சதுப்புகளில் காலூன்றி நின்றிருந்தன.

கால்நடைகளுக்காகத் திறக்கப்பட்ட குளத்து நீர் கால்வாய்களின் அடிவயிற்றின் வெண்மை தெரிய நகர்ந்துகொண்டிருந்தது. எங்கும் அந்த மதியத்தில் ஒரு வெப்பத்தின் மணம் வியாபித்திருந்தது.

இரணைமடுக் குளத்து அணைக்கட்டின் புனரமைப்பு வேலைகள் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. பெருமளவு தென்னிலங்கைத் தொழிலாளரும் அதிகாரிகளும் அதில் பங்குகொண்டிருந்தனர். அனைவரது போக்குவரத்துக்களாலும் இரணைமடுப் பாதையில் இடையறாத இரைச்சல் எழுந்துகொண்டிருந்தது. சிறிது தூரத்திலிருந்த ராணுவ முகாமிலிருந்து அடிக்கடி ஜீப்களும், ட்றக்குகளும் வந்தும் போயுமாய் இருந்தன. காலையும், பகலும், முன்னிரவும் இரணைமடு வீதி பெரும் கலகலப்பிலிருந்தது. அப்பால் இராமநாதபுர பக்கமாய் புதிதாக நிர்மாணமாகிய விமானநிலையத்திலிருந்தும், அதை நோக்கியும் சென்ற வாகனங்களின் இரைச்சல் அக் கலகலப்பில் மேலும் திணிவைச் செய்திருந்தது.

சியோன் சுவிசேஷ கூட்டங்களுக்குச் செல்ல அண்மையில் ஆரம்பித்திருந்த பரஞ்சோதி, அன்றைய ஞாயிற்றுக் கிழமையிலும் சென்று ஜெகோவாவின் விசுவாசிகளது சாட்சியங்களைக் கேட்டுவிட்டு மதியமளவில் கார்த்திகாவோடு வீடு திரும்பியபோது பொலிந்த முகம் கொண்டவளாய் இருந்தாள். அந்த மாரிக்குள் வீட்டை வேய்ந்து தருவதாக அருட்சகோதரர் ஜெபரட்ணம் சொல்லியிருந்தது அந்தப் பொலிவை அவள் முகத்தில் வருவித்திருந்தது.

ஒரு காலத்தில், அறுபதுகளிலும் எழுபதுகளிலும், கனகாம்பிகைக் குள குடியேற்றம் தோன்றுவதற்கு முன்னர், திருவையாறு குடியேற்றத் திட்டம் துவங்குவதற்கும் முன்பான காலத்திலே, உருத்திரபுரத்து அமெரிக்க மிஷனிலிருந்து ஒரு வெள்ளைக்கார அம்மா, செம்மண்ணும் மக்கியும் பரவிய பாதைகளில் ஏழை எளியவர்களின் குடிசையெல்லாம் சைக்கிளில் சென்று கல்விக்கும் சுகாதாரத்துக்கும் ஆற்றிய தொண்டுகள்பற்றிய கதைகளை பரஞ்சோதி அங்கே குடியேறிய காலத்தில் கேட்டிருந்தாள்.

அப்போது ஒன்றிரண்டு சைக்கிள்தான் அப்பாதையில் ஓடி சைக்கிள்களின் காலமும் அதுதான் என்பதைக் காட்டிக்கொண்டிருந்தன. மற்றும்படி ட்றக்குகளும், ஜீப்களும், கார்களும், ட்ராக்ரர்களும், லாண்ட் றோவர்களும், மோட்டார் சைக்கிள்களுமே அந்தப் பாதைகளில் சவாரிசெய்தன. ஆயினும் வெள்ளைக்கார அம்மாவின் சைக்கிள் தடங்கள் தார் றோட்டுகளாகிவிட்ட அந்தப் பாதைகளில்கூட இன்னும் அழியாதிருப்பதான தோற்றமொன்று பரஞ்சோதியின் மனத்தில் காட்சியானது.

அருட்சகோதரர் ஜெபரட்ணம் மோட்டார் சைக்களில் திரிந்தார். அவர் திரிந்த அந்த தடங்கள் நெடுங்காலத்தின் பின்னரும் அப்பாதைகளில் அழியாதிருப்பதை ஒரு ஏழை கண்டு மனது வெதும்பக்கூடியதாய் இருக்குமென்று ஏனோ அவளது மனத்தில் தோன்றியது. பண வரவுக்கான வழிகளெல்லாம் அடைபட்டிருக்கிற நேரத்திலும், மனத்திலிருந்து அவர் வழிகளை உண்டாக்கினார். சில குடும்பங்கள் அவ்வாறாக அவரது கருணையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தன.

மத, சமூக நிறுவனங்களின் உதவியில்தான் பலபேருடைய வாழ்க்கையே அங்கே நடந்தது.

மனிதர்களின் இயக்கம் இயல்புக்குத் திரும்பியிருந்ததென்பது மெய்யே. ஆனால் வாழ்க்கை இன்னும் அங்கு திரும்பாதேயிருந்தது.
2009 மேயில் யுத்தம் முடிந்த அறிவிப்பு வெளிவந்து ஏ9 பாதை திறக்கப்பட்டது அறிந்த மறுநாள் கிளிநொச்சிக்கு ஓடிவந்தாள் பரஞ்சோதி.
அவள் தெரிந்துகொண்டதே இரண்டாயிரத்துக்குப் பிந்திய கிளிநொச்சியைத்தானென்றாலும், அன்றைக்கு அதையே அவளால் அடையாளம் காணமுடியாது போய்விட்டது. பரந்தனிலிருந்து கிளிநொச்சி மைதானம்வரை இதுதானென்று ஒரு இடத்தை குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி அந்தப் பகுதி மாறுகோலம் கொண்டிருந்தது. கட்டிடங்கள் தகர்ந்தும், மரங்கள் முறிந்துமான அழிவின் தாண்டவக் காட்சிகள் எங்கும். மண் மூடைகளின் அரண்களும், துவக்கேந்திய ராணுவமும் சந்திகள் எங்கும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு பேரழிவின் கதை வெளியில் எழுதியிருந்தது.

கை முறிந்து, கால் இழந்து, கண் பெயர்ந்த குழிகளை துணியால் மூடிக் கட்டியென நிறைய மனிதர்களை அப்போது அவள் கண்டாள். ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிக்கொண்டு, ஆஸ்பத்திரிக்கு சென்றுகொண்டு என அவர்களது நகர்வுகள் இருந்தன. குழந்தைகள் உறவுகளென குடும்பமாக இருந்தவர்களது துன்பங்கள் ஒருவகையானவை என்றால், தனியாக இருந்தவர்களது சோகங்கள் வேறொரு வகையானவையாக இருந்தன. ‘என்ஜிஓ கால் குடுக்குது’ என்ற வதந்தியிலேயே சனம் திரண்டது. ‘எங்க…? எங்க…?’ என்று அலைந்து ஆவலாதிப்பட்டது. வானொலி சொன்னதினதும், தொலைக்காட்சி காட்டியதினதும் மும்மடங்கு உண்மைகள் அவளது தரிசன வெளியில் கிடந்தன.

அவள் வீட்டுக்கு வந்தபோது வீடு கட்டோடு இருந்திருந்தது. வீட்டில் பலகையென்று பெயரிருந்த எதுவும்தான் மிஞ்சியிருக்கவில்லை. பிணைச்சலோடு கழற்றி எடுத்துப்போயிருந்தார்கள். அடிவளவில் நான்கடி ஆழ குழியொன்றிருந்தது. அந்த எறிகணை வீச்சில் அடிபட்டு பாதி முறிந்து விழுந்துவிட்ட தென்னங் குற்றி ஆளுயரத்தில் நிலத்தில் காய்ந்து நின்றிருந்தது.

மீண்டும் வாழத் தொடங்கலாம். ஆரம்பத்திலிருந்து புதிதாக. ஆனால் சங்கவிக்கும் பிள்ளைக்கும் என்ன நடந்ததென்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். தப்பி கரை சேர்ந்திருந்தால், மெனிக் பாமில் இருக்கிறார்களா, பம்பைமடு போன்ற வேறு முகாம்களிலா அல்லது எங்காவது தறப்பாளின் கீழ் ஒதுங்கியிருக்கிறார்களா என தேடவேண்டும்.

கண்டவரையெல்லாம் கைகூப்பி கண்ணீராய் நின்று விசாரித்தாள். ‘மெல்லிசாய்… உயரமாய்… சிவப்பாய்… ஒரு இருபத்தைஞ்சு இருபத்தாறு வயதளவில… ஒரு பொம்பிளப் பிள்ளையோட ஆரையும் கண்டியளோ? பிள்ளைக்கு மூண்டு நாலு வயசிருக்கும். எப்பவும் சிரிச்சுக்கொண்டிருக்கும்… கண்டியளோ ஆரும்?’

கண்டிருந்தால் யாருக்கும் அந்த அடையாளங்கள் போதும்தான். ஆனால் பரஞ்சோதி கேட்டவர்களில் யாரும் அவர்களைக் கண்டிருக்கவில்லை.
கிளிநொச்சி மகாவித்தியாலயம் அகதி முகாமாய் மாறியிருந்தது. தினசரி அங்கேதான் போனாள். பைலோடு நிக்கிற எவரையும்தான் சென்று கேட்டாள். ‘என்ர மகளையும் பேரப்பிள்ளையையும்… சங்கவி, கார்த்திகாவெண்டு பேர். மெல்லிசாய்… உயரமாய்… சிவப்பாய்…’

மழை ஒழுக்குக்கு வைக்கவும் கிண்ணங்கள் வீட்டில் இருக்கவில்லை. தூவானம் அடிக்காத இடமாய் திண்ணையிலே முந்தானையை உதறி விரித்துக்கொண்டு படுத்தெழும்பினாள். ராணுவமோ, தொண்டு நிறுவனங்களோ மதியத்தில் சாப்பாட்டு பார்சலும் தண்ணீர்ப் போத்தலும் கொடுத்தன. வாளி, கிணற்றுக் கயிறு, சமையல் பாத்திரங்களும் ஒரு நிறுவனம் இடம்பெயர்ந்தோரைப் பதியுமிடத்தில் மூன்றாம் நாள் கொடுத்தது.

ஒருநாள் கறுப்புச் சட்டை போட்ட ஒரு தாடிக்கார முதியவர் வாசலில் வந்து நின்றார். அவரது கையிலே ஒரு வெள்ளைக் கடதாசித் துண்டு இருந்தது. அவள் உயிர் தரித்திருக்க கொண்டுவந்த சாசனமாகவிருந்தது அது.

அதிலேதான் தான் அப்போது மெனிக் பாமின் முன்னாள் போராளிகளுக்கான தடுப்பு முகாம் பகுதியிலே கார்த்திகாவோடு இருக்கிற செய்தியை சங்கவி தெரிவித்திருந்தாள்.

‘அங்கிருந்து எந்தளவில அவையின்ர விடுதலையோ இனி?’ அழுகைதான் வந்தது பரஞ்சோதிக்கு. ஆனாலும் ‘செத்துப்போன அறுபதினாயிரம் பேர்க் கணக்கில அதுகள் ரண்டும் சேர்ந்திராததே போது’மென்று அடங்கினாள்.

உடனேயே வெளிக்கிட்டு வவுனியாவுக்கு பஸ்ஸெடுக்க நடந்தாள். ரூபியிடம் ஓடிப்போய் சங்கவியினதும் குழந்தையினதும் நிலைமையைச் சொன்னாள். சாந்தமலருக்கு தொலைபேசி செய்து விஷயத்தை தெரிவித்தாள் ரூபி.

சங்கவியையும் பிள்ளையையும் பார்ப்பதற்கு அனுமதி கேட்டு கடிதங்கள் எழுதி களைத்திருந்த ஒருநாள், அதிகாரத்தின் கதவு திறந்தது. மேலும் மெலிந்த மகளையும், வாடிப்போனாலும் இன்னும் சிரித்துக்கொண்டிருந்த பேத்தியையும் பரஞ்சோதி கண்டாள்.

பூட்டிய கதவு திறந்து தங்களை வெளியே விடுமென சங்கவி சொல்லும் எந்தவொரு திகதியையும் அவள் தவறவிடவில்லை. அவளைப் பொறுத்தவரை வடமராட்சி ஆகிப்போனது வவுனியா. சாப்பாட்டுக்கு இருந்ததோ இல்லையோ, பஸ்சுக்கு காணுமான காசு கிடைத்ததும் சங்கவியையும் குழந்தையையும் பார்க்கவே ஓடினாள். அவளுக்காக அழ இன்னும் பரஞ்சோதியிடத்தில் கண்ணீர் இருந்தது. எப்போதும் அழுதுகொண்டே திரும்புபவளாக அவள் இருந்தாள். பாவம் செய்தவர்கள்கூட பிறக்கலாம், ஆனால் சங்கவியளவு செய்தவர்கள் பிறக்கவே கூடாதென அவள் தீர்க்கமாய் நம்பினாள். அந்த எண்ணத்தை மாற்றும்படி எந்தவொரு சம்பவமும் நடவாதேயிருந்தது.

2012 ஏப்ரலில் தடுப்பு முகாமின் கதவுகள் திறந்து சங்கவி வெளியே வந்த ஆண்டில், மாரிக்கு ஒழுக்கு விழத் துவங்கிய கூரை அது. 2013, 2014 மழைக்கும் ஒழுக்கு அதிகரித்த ஸ்திதியிலேயே இருந்துகொண்டிருந்தது. புள்ளிகளாய் வெளிச்சம் தெரிந்த ஓட்டைகளுக்கு பரஞ்சோதி வைக்கோல் போட்டு மூடிமூடி வைத்தாள். அது இப்போது பார்க்க வைக்கோலால் வேய்ந்த கூரைபோல தெரிந்துகொண்டிருந்தது.
இருபதினாயிரம், பதினையாயிரமென்று எல்லோருக்குமே மீள்குடியேற்றத்தின்போது உதவித்தொகை கொடுத்தார்கள். அது இடைத்தங்கல் முகாங்களிலாவது பதிந்தவர்களுக்குத்தான் கிடைத்தது. பதிவுப் பத்திரம் கைவசம் இல்லையென்றாலும் வீடு திருத்த ஐயாயிரம் ரூபா ஆரம்பத்தில் ஒருமுறை பரஞ்சோதி பெற்றாள். அரிசியும், பருப்பும், படுக்க ஒரு பாயும் இன்னும் சமையல் பாத்திரங்கள் சிலவும், பன்னிரண்டு நெளித் தகரங்களும்கூட கிடைத்தன. அரசாங்கம், அயலகம், வெளிநாடு என எது அளித்த மீள்குடியேற்ற உதவியிலும் அவள் பெற்றது அவ்வளவாகவே இருந்தது.

சங்கவி வீடு வந்தபின்னால்தான் அவளுக்கான புனர்வாழ்வுப் பணத்தில் வீட்டறைக்கும், பின் ஜன்னலுக்கும் கதவுகள் போடக்கூடியதாக இருந்தது.

தன்னுடைய ‘பல’னை யாருக்கோதான் சேர்ச்சிலே சொல்லிக்கொண்டிருந்தாள் பரஞ்சோதி. சொன்னபோது தடுக்கத் தடுக்கவும் அவளுக்கு கண் கலங்கி வந்தது. அருட்சகோதரர் ஜெபரட்ணம் அதைக் கண்டார். ‘அழாதயுங்கோ. எல்லாருக்கும் எல்லாமே துன்பமாய்த்தான் நடந்திருக்கு. பிரார்த்திப்பம். உங்கட வீட்டுக்கு புதுக்கூரை போட விசுவாசிகளின் உதவியோட இந்த மாரிக்குள்ள வழி செய்து தரலாம். கலக்கமடையாதயுங்கோ.’

வீட்டுக்கு வந்தபோது எந்த இடத்தில் காலையில் அமர்ந்திருந்தாளோ அந்த இடத்திலேயே சங்கவி அமர்ந்திருந்தாள். இப்போதெல்லாம் அவள் தனது வாழ்க்கையை அதிகமாயும் யோசிப்பதாய்ப் பட்டது பரஞ்சோதிக்கு. இப்போதாவது நிஜங்களை எண்ணுவது நல்லதென நினைத்தாள். தன்னுடைய பிழைகளை, தவறுகளை ஒவ்வொருவரும் ஒரு தருணத்தில் எண்ணிப்பார்த்தே ஆகவேண்டும்.

அவைகளையே சங்கவி அப்போது செய்துகொண்டிருந்தாள்.

அது சிறையின் பெருங்கதையும், சிறை மீண்டும் வேறொரு சிறையுள் அடைபட்ட சிறுகதையும்.

அப்போது லோகீசன் தங்கம்மாப் பாட்டியின் வீட்டிலிருந்து திருநகரிலுள்ள ஒரு வீட்டுக்கு குடியிருந்துகொண்டிருந்தான். அவளிலிருந்து இன்னும் விலகிச் செல்லும் ஒரு முன்முனைப்பு அதுவெனில், அவளிடத்தில் வழக்கில்லை. ஆனால் அதை ஒற்றை வெட்டின் துண்டிரண்டான கறாரில் அவளுக்கு அவன் சொல்லியாகவேண்டும். அதற்கான அவசியம் அப்போது நேர்ந்திருக்கிறது.

அவளது மகளுக்கு பத்தாவது வயது முடிந்து, போன கார்த்திகையிலிருந்து பதினொன்று தொடங்கியிருந்தது. தளதளத்து வந்த உடம்பு அவள் பக்குவமடையும் காலம் நெருங்கிவிட்டதை தெரிவித்துக்கொண்டு இருக்கின்றது. யாருடைய பரவணியின் உடம்புவாசி அது? சங்கவி அவளில் கூடுதலான கவனம் செலுத்தவேண்டியவளாய் இருக்கிறாள். எந்தக் குழந்தைக்குமே அந்தக் கவனம் அவசியம். எப்போதும் சிரித்துக்கொண்டிருந்து திடீரென தன் சிரிப்பை மறந்துபோன பிள்ளையில் அந்தக் கவனம் இன்னுமின்னும் அவசியம். இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான் கார்த்திகாவை முதன்முதலாக பள்ளிக்கு கூட்டிச் சென்று இரண்டாம் வகுப்பிலே சங்கவி சேர்த்திருந்தாள். இரண்டு வாரங்களிலேயே பள்ளிக்கூடத்திலிருந்து ஆள் வந்திருந்தது. சங்கவியும் பரஞ்சோதியும் போயிருந்தார்கள். ‘இந்தப் பிள்ளையை ஆராவது டொக்டரிட்ட காட்டினியளோ? எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கொண்டே இருக்கு. இது சிரிக்கிறதப் பாத்து மற்றப் பிள்ளையளும் சிரிக்கிது. தன்னால பாடம் நடத்தேலாமல் இருக்கெண்டு ரீச்சர் வந்து சொல்லுறா’ என்று கேட்டார் தலைமையாசிரியர். ‘அப்பிடி சிரிக்கிறது மட்டும்தான், சேர். மற்றப்படி ஆள் நோமல்தான். மற்றப் பிள்ளையளோட சண்டைக்கும் போகமாட்டா. எது சொன்னாலும் அவவுக்கு விளங்கும்’ என்று பதட்டத்தோடு பதிலுரைத்தாள் சங்கவி.

தலைமையாசிரியர் மெதுவாகச் சிரித்தார். ‘இப்ப அவவுக்கு விளங்கும் விளங்காதெண்டது பற்றியில்லை பிரச்சினை. அப்பிடிச் சிரிக்கிறதே ஒரு அப்நோர்மல்தான். இப்ப பிள்ளையை பள்ளிக்குடத்துக்கு விடவேண்டாமெண்டு நான் சொல்ல வரேல்லை. வகுப்பு குழம்புறது ஒருபக்கம் இருக்கட்டும். அவவுக்கே அது நல்லமில்லையெல்லோ பிற்காலத்தில? இதை ஏன் நீங்கள் யோசிக்கேல்லை?”

பிள்ளை எப்போதாவதுதான் அப்படிச் சிரிக்கிறாளென்ற ஒரு பதிலைத்தான் பரஞ்சோதி சொல்லத் தொடங்கினாள். சங்கவி விடவில்லை. கணவன் காணாமல் போனதையும், தானும் பிள்ளையும் தடுப்பு முகாமில் இருந்ததையும் கூறி, தனக்கு கரிசனமிருந்ததென்றும், ஆனால் என்ன செய்வதென்பதுதான் தெரியாதிருந்ததென்றும் தெரிவித்தாள்.

அவர் இரங்கக்கூடிய மனிதராக இருந்தார். பலபேரிடம் பயந்துகொண்டுதான் அணுகவேண்டியிருக்கிறது. அவர் அப்படியல்ல. ‘நீங்கள் ஒண்டும் செய்யவேண்டாம். குழந்தை மனநல காப்பகம் கனக்க இஞ்ச இருக்கு. அங்க பிள்ளையைக் கொண்டுபோனாலே அவை எல்லாத்தையும் கவனிச்சுக்கொள்ளுவினம். இல்லாட்டி என்ஜிஓக்கள் எதாவது முகாம் நடத்தினாலும் அதுக்கு கூட்டிக்கொண்டு போங்கோ. சும்மா இஞ்ச இருக்கிற கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனாலே அவை சரியான ட்ரீட்மென்ற் குடுப்பினம். அதால இத கவனிக்காம விட்டிடவேண்டாமெண்டு சொல்லத்தான் வரச்சொன்னனான்.’

சங்கவியும், பரஞ்சோதியும் திரும்பினர்.

ஆனால் ஒரு வைத்திய உதவியை நாடிச்செல்ல முடியாத அளவுக்கு சுற்றிச் சுற்றி வீட்டிலே பிரச்னை இருந்துவிட்டது. காணாமல் போன குணாளனால், குணாளனைத் தெரியுமென்று வந்த லோகீசனாலென எப்பொழுதும் மனவீறல்கள்தான் சங்கவிக்கு. எதுவும் ஒழுங்கில் அவளுக்கு இன்னும் அமையவேயில்லை. ஒரு பிரச்னை போனால், வேறொன்று வந்தது. தினசரிகளின் இந்தச் சதிராட்டத்தை எப்படிச் சமாளிப்பது?
கார்த்திகா குறித்து மேலே முறைப்பாடு வராதவகையில் அது மெல்லமெல்ல முக்கியமான விஷயம் என்பதிலிருந்து ஒதுங்கிக்கொண்டது.
இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் கார்த்திகா திரும்பிவரவில்லை. பரஞ்சோதிதான் அதுபற்றி புறுபுறுத்தபடி திரிந்துகொண்டிருந்தாள். ‘இனி இதுக்காக உடுப்பு மாத்திக்கொண்டு போய்வர ஏலாது. வந்திடுவாள், பொறம்மா பாப்பம்’ என்றாள் சங்கவி. மேலும் நேரமாக பார்த்துவரலாமென சங்கவி புறப்பட்ட வேளையில் கார்த்திகா வந்தாள்.

‘ஏன் கார்த்திகா இவ்வளவு நேரம்? எங்க நிண்டு விளையாடினனி?’

சங்கவியின் கேள்விக்கு கார்த்திகாவிடமிருந்து பதில் வரவில்லை.

பரஞ்சோதியும் வந்தாள்.

கார்த்திகா அழுதிருப்பாள்போல இருந்தது. வந்த நேரத்திலிருந்து அவள் சிரிக்கவுமில்லை. ‘ஏனடி, என்ன நடந்தது? வாயைத் திறந்து சொல்லன்’ என்று சங்கவி கலவரப்பட, கார்த்திகா அழத் தொடங்கினாள்.

பொறி பட்டதுபோல் திடுக்கிட்ட பரஞ்சோதி விறுவிறுவென கார்த்திகாவை கைப்பிடியில் இழுத்துக்கொண்டு வீட்டறைக்குள் ஓடி கதவைச் சாத்தினாள். சங்கவிக்கு தாயின் எண்ணம் பிடிபட்டு எழும்ப பரஞ்சோதி ஒரு நிம்மதி மூச்சொடு வெளியே வந்தாள்.

அது ஒரு நிம்மதிதான். ஆனாலும் ஏதோ ஒன்று நடந்திருக்கிறதுதானே? என்ன நடந்தது? எவ்வளவு பாரதூரமானது? பாலியல்ரீதியாகத்தான் அவளது பாதிப்பு இருந்ததா? அவர்களால் எதையும் அறியமுடியாதிருந்தது. மாற்றி மாற்றி எத்தனை தடவைகள் கேட்டபோதும் கார்த்திகா ஒன்றில் பேசாமல் இருந்தாள் அல்லது அழுதாள்.

‘விழுந்தியா, கார்த்திகா, கீழ?’ என சங்கவி கேட்டதற்கு ஆமென்று தலையை ஆட்டினாள்.

‘ஏன் விழுந்தனி? ஓடி வந்தியா?’

அதற்கும் தலையை ஆட்டினாள்.

‘என்னத்துக்கு ஓடினனி?’

அதற்கு பேசாமலிருந்தாள்.

‘சொல்லடி, என்னத்துக்கு ஓடினனீ?’

அப்போது அழுதாள்.

‘விடு, சங்கவி.’ பரஞ்சோதி சொன்னாள். ‘இப்ப வேண்டாம். கொஞ்சம் பிள்ளை தெளியட்டும். பிறகு கேட்டுப் பாப்பம். எதோ நடந்திருக்கு. என்ன நடந்திருக்குமெண்டதை யோசிச்சா நெஞ்சை உலுப்புது. கிளிநொச்சி புழுத்துப்போய்க் கிடக்கு. இயக்கத்தில இருந்தது, ஆமியில இருந்தது, வேலைக்கு வந்தது… ஒரே சனம்தான? ஆர் எவரெண்டு எப்பிடிக் கண்டுபிடிக்கிறது? இனிமே ஒண்டும் செய்யேலாது. காலமை பின்னேரம் கார்த்திகாவை நீயோ நானோ இனி பள்ளிக்குடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டு, கூட்டிக்கொண்டு வரவேணும்.’

தனக்கான வாழ்க்கையின் இழுபறியில் தன்னுடைய மகளைக் கவனிக்காதிருந்துவிட்ட வேதனை அப்பொழுது சங்கவியின் மனத்தை உலைவித்துக்கொண்டிருந்தது. லோகீசனின் முடிவு அவளுக்கு அந்த நிர்ப்பந்தத்திலேயே அவசரமாயும், அவசியமாயும் தெரியவேண்டியிருந்தது.
வாழ்க்கையில் கனவு காணலாம். ஆனால் கனவுகளில் வாழ்ந்துவிடக் கூடாது. அவளது கனவுக்காலம் முடிந்துவிட்டது.

நிஜத்தில்… நிஜத்தில் மட்டுமே வாழ இனி இந்தச் சமூகம் பணிக்கப்பட்டிருக்கிறது.

சாமியிடம் சொல்லி லோகீசனை அடுத்த ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு வரச்சொல்லவேண்டும். நேரிலே எல்லாவற்றையும் பேசிவிடலாம்.
சேர்ச்சிலிருந்து வந்த கார்த்திகாவும் பரஞ்சோதியும் உடை மாற்றி வந்து திண்ணையில் அமர்ந்தனர். “மாரிக்குள்ள வீட்டை மேய்ஞ்சு தாறமெண்டு இண்டைக்கு சுவாமி சொன்னார்” என்றாள் பரஞ்சோதி.

அது ஒரு பெரிய ஆறுதல்தான் சங்கவிக்கு.

கார்த்திகா எழுந்து குசினிக்குப் போய் தண்ணீர் பானையில் எடுத்துக் குடித்தாள். ஒரு சின்னப் பரஞ்சோதியாக அவள் வளர்ந்து கொண்டிருப்பதாய் சங்கவிக்குத் தென்பட்டது. தோற்றத்தில் மட்டுமில்லை, இயங்குதலிலும் அது இருந்தது. போன சித்திரை வருஷத்துக்கு வடமராட்சி போயிருந்தபோது சாந்தியக்காவும் அதைச் சொல்லியிருந்தாள். மேலும், ‘ஒரு பயத்தில அவளின்ர சிரிப்பு பறிபோயிருக்கு. ஆபத்தொண்டும் வராமல் அந்தக் கடவுள்தான் காப்பாத்தியிருக்கிறார். மிகவும் புத்திக் கூர்மையுள்ள சில பிள்ளையளுக்கு, அப்பிடி சின்ன வயசில ஒரு குறைபாடு இருந்திருக்கு. கவனமாய்ப் படிப்பி. அடுத்த தலைமுறையில இருந்துதான் இழந்துகள நிரப்பவேண்டியிருக்கு ’ என்றாள். கூடவே, ‘அங்கயிருந்து நீ என்ன செய்யப் போறாய்? இஞ்ச வந்திடன். வீட்டோட ஒரு பெரிய காணியாய் குத்தகைக்கெடுத்துத் தாறன். கார்த்திகாவையும் இஞ்ச நல்ல பள்ளிக்குடமாய்ப் பாத்து படிக்கவைக்கலாம்’ என்றும் சொல்லியிருந்தாள். சாந்தமலர் ஆசிரியையாக அப்போது இல்லை. பிரதேச கல்வித் திணைக்களத்தில் அவளுக்கு உயர்வான ஒரு பதவி கிடைத்திருந்தது. அவள் இப்போது வேலைக்கு போய்வர ஒரு ஸ்கூட்டர் வாங்கிவைத்திருந்தாள். வர்த்தினி அப்போது யாழ் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்தாள். மயூரன் அடுத்த ஆண்டு ஏஎல் பரீட்சை எடுக்கிறான்.

அக்காவின் பெருமளவு பயங்கள் அழிந்திருந்தன. தன் மகனை மீட்டுத் தந்ததில் தாயாருக்கு பெரும்பங்கிருந்ததை மயூரன் இல்லாத வேளைகளில் அவள் எப்போதும் சொல்லிவந்தாள். ‘அம்மா…’ என்று ஆதரவாக அவள் அழைக்கும் கணங்களில் அந்த நன்றியுணர்வு தெறித்துக்கொண்டிருந்தது.

தேவையில்லாத ஆக்களுக்கு நம்பர் கொடுக்கவேண்டாமென்று சொல்லி போனமுறைதான் ஒரு கையடக்க செல்பேசி வாங்கி சங்கவிக்கு கொடுத்திருந்தாள் சாந்தமலர்.

எல்லாவற்றிற்கும் போராட்ட நிலைமையே முதல் காரணமாய் இருந்ததென்றாலும், தானேதான் தன் சகோதரிகளைவிட்டு விலகியிருந்தாளென்று சங்கவிக்கு இப்போது தோன்றத் தொடங்கியிருந்தது. எல்லாருக்கும் அவளில் பாசம் இருந்தது. அவள்தான் ஒரு புறக்கணிப்பில் எல்லாரையும் வேதனைப்படுத்திக்கொண்டு இருந்துவிட்டாள்.

அவள் அதுவரை கண்டிராத வேறுவேறு திசைக் கதவுகள் அப்போது திறக்கத் தொடங்கிருந்தன.

அப்போது தாமரையக்கா வந்தாள். பரஞ்சோதி அப்பால் எழுந்து போய்விட விழுந்த தனிமையுள், “கார்த்திகாவின்ர விஷயம் அம்மா சொன்னா, நேற்று வீட்டை வந்த இடத்தில. இதெல்லாம் என்ன, சங்கவி?” என்றாள்.

“நானென்ன செய்யேலும், அக்கா?”

“உப்பிடிச் சொல்லி நீ தப்பிச்சிடேலாது, கண்டியோ. பிள்ளைக்குப் பொறுப்பு நீதான? பிறகு... நானென்ன செய்யிறதெண்டா?”

சங்கவி பேசாமலிருந்தாள்.

“இஞ்ச பார், லோகீசின்ர விஷயத்தில நீ கெதியாய் ஒரு முடிவுக்கு வரவேணும். அது விலகி விலகிப் போறதும், நீ துரத்தித் துரத்திக்கொண்டு ஓடுறதும் நல்லாவே இருக்கு பாக்க? விசர்த்தனமாய் மனத்தில ஒண்டையும் வைச்சு குழப்பிக்கொண்டிராத. லோகீஸ் அங்க குடிவெறியில விழுந்தெழும்பிக்கொண்டு திரியுதாம். நீ என்னெண்டா...”

“அதாலதான் தாமரையக்கா, ஒண்டையும் முடிவெடுக்கேலாமலிருந்தன்.”

“இப்ப ஒரு தேவை வந்திருக்கெல்லோ?”

“சாமியிட்ட சொல்லி அடுத்த ஞாயிற்றுக்கிழமை லோகீசை வரச்சொல்லப்போறன். எல்லாம் நேரில கதைக்க நினைச்சிருக்கிறன்.”
“வெட்டொண்டு துண்டிரண்டாய் கேட்டிடு. ஏலாட்டிச் சொல்லு, நான் கதைக்கிறன். அதுகின்ர தமக்கை மணி என்னோட நல்ல பழக்கம். அவவோட கதைக்கிறன் இல்லாட்டி.”

“வேண்டாம், நானே லோகீஸோட கதைக்கிறனக்கா.”

“அதைச் செய் முதல்ல.”

தாமரையக்கா சென்ற பின்பும் நெடுநேரமாய் அவள் விட்டுச்சென்ற வார்த்தைகளையே யோசித்துக்கொண்டிருந்தாள் சங்கவி. ‘அது விலகி விலகிக்கொண்டு போறதும்... நீ துரத்தித் துரத்திக்கொண்டு ஓடுறதும்...’

ஒருதர் ஓடுறதும், மற்றவர் துரத்துவதுமான அது எந்தவகைக் காதல்? இன்னும்... அது காதலேதானா?


4

அன்றைய இரவுபோல ஒன்றை நிலா என்றும் கண்டிருக்கவில்லை. அது இருளினதும், நிசப்தத்தினதும் அடர்த்தியோடு இருந்திருந்தது. காலையில் தூறலாகத் துவங்கி வலுத்த மழையோடு காற்றும் சேர்ந்து மூசி மூசி அடித்தது. மூன்று மணிபோல மின்சாரம் போனது. ஆறு மணியளவில் பொத்தென்று காற்று ஓய்ந்ததில் அப்போது சாமி விளக்கின் தீபக் கொழுந்து அலைக்கழியாமல் எரிந்தது. மழை தூறலாய்… துமியாய்… ஆகி நின்றிருந்தது. எது செய்யவும் மனம் இசைந்து வராது பஞ்சிப்பட்டுக் கிடந்தாள் நிலா. எட்டு மணியானதும் இனி படுக்கலாமென நினைத்தாள். வாசலின் முதல் படியில் ஏறி நின்றிருந்த வெள்ளத்தைப் பார்த்துக்கொண்டே கதவைச் சாத்தி உள்ளே திறாங்கைக் கொளுவி சட்டத்தை மாட்டினாள்.

அம்மம்மாவின் வட்டக்கச்சி வீட்டில் அவள் அங்கே தனியாக இருந்த மூன்றாம் நாள் இரவு அது. அந்த இரவில் சித்தப்பாவின் மகனைக் காணச் சென்ற அம்மம்மா சித்தப்பாவுடன் கொழும்பிலிருந்து பயணம் தொடங்கியிருப்பார். விடிகிறபோது வீட்டில் இருப்பார். காலநிலை சட்டென மாறிய அந்தக் கடைசி இரவுதான் அவளை சஞ்சலப்படுத்தியது. அதுபோன்ற தனிமையில் அவள் இரவுகளைக் கழித்ததுண்டு. இருளையும், மழையையும், தனிமையையும் சேர்த்துத்தான் கழித்திருக்கவில்லை. அதுவே அவளை பெரிதும் கலவரப்படுத்தியது.

ஒருவேளை அந்தக் கால் தனியாக இருந்ததுதான் அவளின் மனம் கலவரப்பட காரணமாகியதோ? அவசரமாக காலை எடுத்துக் கொளுவுவதென்றாலும் இருபது நொடிகளுக்கு மேலே ஆகும். ஒரு செயற்பாட்டுக்கான இருபது நொடித் தாமதத்தின் எண்ணமே, அந்த இரவைப் பயங்கரமாக்கியதெனில், அவள் காலோடேயே படுத்தும் கொள்ளலாம்.

அதற்கும் மனது ஒருமுனைப்பட்டு வரவில்லை. காலை கழற்றி வைத்துப் படுத்துத்தான் பழக்கமாகியிருந்தது. அது தன்னின் கால் அல்லவென படுத்திருக்கும்போதுதான் தெரிந்தது. கழற்றி வைத்துப் படுப்பதைவிட பொருத்திக்கொண்டு படுப்பது அவலமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை எதிர்வீட்டு ஜெனற்றின் அம்மா, நிலா அக்காவுக்குப்போல அவளுக்கும் கால் முளைக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவ்வளவு நாளாகியும் தனக்கு கால் முளைக்கவில்லையே என்று ஜெனற் காலைப் பார்க்கும் நேரமெல்லாம் அழுதுகொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு கால் முளைத்திருந்தது. றப்பர்-பிளாஸ்ரிக் கால். அவள் ஓடியாடி இப்போது விழுந்து விழுந்து விளையாடிக்கொண்டு இருக்கிறாள்.

2009 மே 16இல் நந்திக் கடலோரத்தில் ஓடிக்கொண்டிருந்த பொழுதுதான் சனங்களுக்கிடையில் ஷெல் விழுந்து வெடித்துச் சிதறியதில் அவளது இடது பாதம் தொலைந்தது. பாதத்தோடு போகுமென்றுதான் நிலா நினைத்திருந்தாள். சிகிச்சையில் முழங்காலோடு கழற்றியிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் படுத்திருக்கையில் கால் முளைக்குமென்று சொல்லி தாக்காட்டுகிற வயதில் அவளில்லை. அதனால் தொண்டு நிறுவனங்கள் மூலம் இப்போது நிறைய கால் கிடைக்கிறது என்றுதான் சொன்னார்கள். அக்கா நித்தியா அழுதுவிட்டுச் சொன்னாள், ‘கவலைப்படாத, தட்டுப்பாடுதான், எண்டாலும் கால் வாங்கியிடலாம்’ என்று. ஆம், அதில் கவலைப்பட என்ன இருக்கிறது? தங்கை உயிரோடு பிழைத்ததே பெரிய விஷயம் அவளுக்கு. அப்போது நிலா சோகமாய்ச் சிரிக்கச் செய்திருந்தாள்.

அடிவளவுக்குள் க்றூக்… என்று கத்திக் கேட்டது. கேணி நீர்ப்பட்டிருந்த சொறித் தவளை கூப்பிட்டதுபோல் தோன்றவில்லை. அது தன் அடிவயிற்று வெள்ளை தெரிய புரண்டுகிடந்து, மரணத்தின் வாயிலிருந்து அலறிய மண்டூகத்தின் தொனியாய்த்தான் பட்டது நிலாவுக்கு. உயிர் கொஞ்சம் உறைந்ததுபோல் இருந்தது அந்தச் சத்தத்தில்.

தன் நினைவுகளைப் பதிந்துகொண்டிருந்த அவளது நீளக் கொப்பி மேசையில் காலுக்கருகே கிடந்தது. உறக்கம் வர பின்னடித்த அந்தப் பொழுதை நினைவுகளை உருவியெடுத்து எழுதுவதில் கழித்திருக்கலாம். வேண்டாம், அது நினைவுகள் கிளறுப்படாதபடி இறுகிக் கிடந்த சமயம்.

பக்கச் சிறகொன்று திறந்திருந்த ஜன்னலினூடாக அறையைவிட திணிவு குறைந்த இருளையும், உள்ளைவிட ஐதாகியிருந்த வெளியின் நிசப்தத்தையும் அவள் கவனித்தபடி இருந்தாள்.

நேற்றிரவும் அதே நேரத்தில் அவள் விழித்திருந்தாள். மின்சாரம் இருந்ததில் எழுதிய பக்கங்களை வாசித்துக்கொண்டிருந்தாள். அப்போது லண்டனிலிருந்து கஜந்தனின் தொலைபேசி வந்தது.

‘இரவு ஒரு மணி இருக்கும் இப்ப அங்க. என்ன செய்யிறாய்?’ என எடுத்தவுடன் கேட்டான் கஜந்தன்.

‘நான் இன்னும் படுக்காமல் இருக்கிறன். குளிர்காலம் துவங்கப்போற ஒரு காலங்காத்தால எழும்பி நீ லண்டன்ல என்ன

செய்துகொண்டிருக்கிறாய்?’ என்றாள் நிலா.

‘வெள்ளணத்தான் நான் எளும்புறது.’

‘இண்டைக்கு என்ன சொல்லப்போறாய்?’

‘இனிமே போனில ஒன்டும் சொல்றதில்ல உனக்கு. நேரில வந்துதான் சொல்லுவன்.’

‘சரி. இப்ப என்னத்துக்கு எடுத்தனீ?’

‘நேரில வாறத சொல்லத்தான். ரண்டாயிரத்து பத்தில வந்தன்… பன்ரண்டில வந்தன்… போன வருஷமும் வந்தன்… உன்னைப் பாக்க இல்லை.’
‘நீ சொல்லிப்போட்டு வரவேணும். திடீரெண்டு வந்து நிண்டுகொண்டு, நிலா நிலா ஓடி வாவெண்டா, என்னால ஓடிவர ஏலாது, கஜன். ரண்டு காலும் இருக்கிறவைக்கே அப்பிடி வாறது கஷ்ரம். எனக்கு ஒண்டரைக் கால்தான இருக்கு.’

‘அதுதான் முந்தியே சொல்லுறதுக்கு இப்ப போன் எடுத்தன்.’

‘சரி. எந்தளவில வாறாய்?’

‘கிறிஸ்ற்மஸ் லீவோட.’

‘சரி, வா. சந்திப்பம். அவசரமாய் எங்கயோ போறாய்போல கிடக்கு.’

‘போய்க்கொண்டு இருக்கன். ஒன்பது மணிக்கு பார்லிமென்ற் முன்னால இன்டைக்கு ஒரு அசெம்பிளிங் இருக்கு.’

நிலா கிணுகிணுத்துவிட்டு சொன்னாள். ‘லண்டன்ல இன்னும் புகலிட நாடுகளில நடக்கிற கூத்துகளைப்பற்றி அறிஞ்சுகொண்டுதான் இருக்கிறம். கட்டாயம் செய்யவேணும். அறுபதாயிரம் பேரின்ர ஆவியள் சாந்தியடையவேணுமெல்லோ?’

‘அது தேவையில்ல என்டிறியா?’

‘செய்யவேணும். அரசு தரப்பில கனக்க போர்க் குற்றம் நடந்திருக்கு. அதை ஜெனிவா மாநாட்டிலயும், யுஎன்னிலயும் விசாரணைப்படுத்த வேணும். ஆனா அதைச் செய்யவேணுமெண்ட குரல் இஞ்சயிருந்து… இலங்கையிலயிருந்து… வரவேணும், புலம்பெயர் தேசங்களிலயிருந்தில்ல.’
‘நான் எது சொன்னாலும், நீ அதுக்கு ஒன்டு சொல்லிக்கொண்டு இருக்கிறாய். நாங்கள் இஞ்ச இது செய்யிறது தேவையில்லையா?’
‘நீங்கள் ஒண்டும் செய்யவேண்டாம்.’

‘விளங்கேல்ல.’

‘வெளியிலயிருந்து, தமிழ்நாட்டில இருந்தும்தான், இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி ஒருதர் மூச்சுவிடக்குடாது எண்டிறன். அதைச் செய்ய இஞ்ச எங்கட தமிழ்த் தலைவர்மார் இருக்கினம்.’

‘அப்பியெல்லாம் சொல்ல ஏலாது, நிலா. எந்த யுத்தத்திலயும் சர்வதேசத்துக்கு அக்கறை இருக்கு. சர்வ தேசத்தை யோசிக்காம நடந்ததாலதான் இவ்வளவு பெரிய அளிவு தமிழாக்களுக்கு வந்தது அங்க.’

‘நீயும் அரசியல் பேசிறாய், கஜன்.’ அவள் சிரித்தாள்.

‘அப்பேக்கயும் நான் இலங்கை அரசியல் பேச மாட்டன். நான் இப்ப பேசுறதும் சர்வதேச அரசியல்தான். எப்பவும் ஒரு யுத்தம் நடக்கத்தான் செய்யுது. நாங்கள் விரும்பினாலும், விரும்ப இல்லையென்டாலும் நடக்குது. ஆனா அது சரியா நடக்கவேனுமின்டு சர்வதேச சட்டம் இருக்கு. அப்பிடி நடக்க இல்லையென்டா… அதை விசாரிக்க நாங்கள் கேக்கலாம். அது எல்லாரின்டயும் கடமை. அதைத்தான் நான் செய்யிறன்.’

‘யுத்தம் வேண்டாமெண்டு சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண நீ எப்பவாச்சும் றோட்டுக்கு வந்திருக்கிறியா?’

‘இல்லய்.’

‘அப்ப… அதால வந்த அழிவுகளைப் பேசுறதுக்கும் உனக்கு உரிமையில்லை. நீங்கள் புலம்பெயர்ந்த தமிழீழ அரசு அமைப்பியள். அது உங்களுக்கு சந்தோஷம். ஆனா சர்வதேச அரசியல் சார்ந்து அது ஒரு குப்பையெண்டது உனக்குத் தெரியேல்லையோ?’

‘நான் அதுக்கு எதிராய்த்தான் கதைச்சன்.’

‘அது போதாது. புலியளின்ர மில்லியன் டொலர்க் கணக்கான சொத்துக்களுக்கு என்ன ஆச்செண்டும் கேள்வி கேக்கவேணும்?’

‘இஞ்ச கொஞ்சம் பேர் கேக்கிறம்தான? கேட்டா, அண்ணை வருவர், அவரிட்ட நாங்கள் கணக்கு குடுக்கிறம் எண்டு இருக்கு இஞ்ச.’

‘அண்ணையை இன்னும் உயிரோட வைச்சிருக்கிறதுக்கு அதுதான் காரணம். கடைசி யுத்தத்தில அறுவதாயிரம் தமிழ்ச் சனம் செத்திருக்கு, கஜன். அதுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லாமல் தப்பேலாது.’

‘அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது, நிஷா?’

‘நீங்கள் உசுப்பேத்திவிட்ட யுத்தம்தான அது?’

‘அதுக்குத்தான் நான் நேரில வந்து உன்னோட பேசுறமென்டு சொன்னது.’

‘நேரில வந்தாலும் என்ர கருத்து இதுதான்.’

‘நீங்கள் நல்லாய்க் கஷ்ரம் பட்டிட்டிங்கள். அதுதான் நீ இந்தமாதிரி பேசிறாய்.’

‘நீங்கள் கஷ்ரமே படேல்லை. அதாலதான் பேசவேண்டாமெண்டு சொல்லுறன். கஷ்ரப்பட்டவையின்ர நியாயத்தை கஷ்ரப்படாத ஆக்கள் எப்பிடிப் பேசேலும்?’

‘ஆனா நான் இதுகளப் பேச வரேல்ல.’

‘அப்ப, என்ன பேச வாறாய்?’

‘வந்து சொல்றன்.’

கஜந்தன் என்ன பேச வருகிறான்?

வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தாள் நிலா. நேற்று அவ்வாறு யோசித்த வேளையிலும், அது ஒரு சந்தோஷமான உரையாடலைக் கொண்ட சந்திப்பாக இருக்காதென்று அவளது மனம் சொல்லிக்கொண்டிருந்தது.

அது ஒரு இருண்மையான மனநிலையையே அவளிடத்தில் தோற்றுவித்திருந்தது. நேற்றைய இரவில் தோன்றிய அந்த இருண்மையின் தொடர்ச்சியா அன்றிரவும் வெளிப்பட்டுக்கொண்டு இருப்பது?

ஒரு கோழி எங்கோ கூவியது கேட்டது.

சாமக் கோழியாக இருக்காது. அது சாமம் கடந்த வேளை. விடியலுக்கு முந்திய கூவலாக இருக்கலாம். அப்படியானால் விடியல் கெதியில் வந்துவிடும். நிலாவின் மனவிறுக்கம் லேசாய்த் தளர்ந்தது. அப்போது அவளின் இமைகள் மூடத் துவங்கின.

உறக்கம் நன்றாக அவளை ஆட்கொண்டிருந்த ஒரு பொழுதில் வாசலில் சந்தடியும், பின்னர் கதவு திறபட்ட சத்தமும் கேட்டது. அம்மம்மா வந்துவிட்டாரென்று நினைத்துக்கொண்டேயிருக்க இருள் மூட்டம் விலகியதுபோல பயம், அவதியெல்லாம் மறந்த உறக்கத்தில் அவள் ஆழ விழுந்தாள்.

எழுந்தபோது பத்து மணி ஆகியிருந்தது.

வெளியே போய்வருவதெல்லாம் சிரமமாக இருந்ததில் அவள் எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்யவேண்டி இருந்தாள். அன்றைக்கு மதிய பஸ் எடுத்து கனகாம்பிகக்குளத்துக்கு போவதாய் இருந்தது. பஸ்சுக்கு தாமதமாகிவிட்டதுபோல் தோன்ற, அவசரமாக வீதிக்கு வந்தாள். இன்னும் இரண்டு மூன்று பேர் அந்த நேர பஸ்சுக்காக காத்திருந்தார்கள். அது தவறினால் இனி மாலையிலேதான் பஸ்.

கனகாம்பிகைக் குளத்தில் சங்கவியின் வீட்டை அவள் அடைந்தபோது தாயாரும் இருந்திருந்தாள். சங்கவி அவளை எதிர்பார்த்திருந்தாள். இயக்கத்திலிருந்த காலத்திலிருந்து அவர்களுக்குள் நெருக்கமிருந்தது.

சிறிதுநேர உரையாடலின் பின்தான் வாசல் கொட்டிலில் படுத்திருப்பது யாரென கேட்டாள் நிலா. அதற்கு சங்கவி, ஒரு சாமியார், தான் உயிரோடிருக்கிற முதல் செய்தியை காவிவந்து வீட்டில் அம்மாவிடம் சேர்த்த மனிதர், பகலில் தூங்கி இரவை விழித்துக் கழிக்கிற பிறவியென அறிமுகம் செய்தாள். “ஊர் அடியுண்டு திரிஞ்ச மனிசன். நல்ல விஷயமுள்ள ஆள். நீ கட்டாயம் அவரோட பேசவேணும்.”

“எனக்கு ஒரு சாமியத் தெரியும். அவரும் கட்டாயம் சந்திக்கவேண்டிய ஆள்தான். எழும்பட்டும் பாப்பம்” என்றாள் நிலா.

பரஞ்சோதி அடுப்படியிலிருந்து சமையலை புறுபுறுத்தபடி கவனித்துக்கொண்டு இருந்தாள். எல்லாம் புகைப் படலத்தின் மீதான புகார்ப் படலம்தான். கயிறு கட்டி பின்தாழ்வாரத்தில் அடுக்கி தொங்கவைத்த தடிகளும் கொத்து விறகுகளுமாய் இருந்தும் நனைந்துபோனதில் எரிய பிடிவாதமாய் மறுத்தது.

குணாளனுக்கு நேர்ந்த நிலைமையும், பின்னால் லோகீசன் மேலான அவளது விருப்பமும் நிலாவுக்குத் தெரியும். வாழ்க்கையை திசைமாறிச் செல்ல விட்டவள் அவள். போராளியாய் இருந்தவள் இயக்கத்திலிருந்து விலகியதற்கு நூறு காரணங்கள் சொல்லக்கூடும். நிலா அதில் ஒன்றைக்கூட ஒப்புக்கொள்ள மாட்டாள். இயக்கத்தின் பலஹீனம் அங்கிருந்து தொடங்கியதென அவள் எப்போதும் சொல்லிவந்தாள். இரண்டு ஆயுதக் கப்பல்களை படையினர் அழித்துவிட்டதில் கடைசி யுத்தத்தில் புலிகளுக்கு ஆயுதத் தட்டுப்பாடு இருந்ததென்று பலர் சொன்னதை நிலா ஆக்ரோஷமாக மறுத்தாள்.

‘ஆயுதம் இல்லாததில்லை, புலியளுக்கு ஆக்கள்தான் இல்லாமலிருந்திது. கிளிநொச்சிக்கு கிட்ட ஆமி வாறவரைக்கும் இயக்கத்தின்ர மோட்டச் சைக்கிள்ல ஓடித் திரிஞ்ச ஒருதரும், கிளிநொச்சி விழுந்தாப் பிறகு ஆயுதத்தை தொட்டும் பாக்கேல்லை. மண் அரண் கட்டுறதுக்கும், ஆயுதங்கள் தூக்கிறதுக்கும் புலியளுக்கு கூலிக்குமட்டும் வேலைசெய்தமெண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால்ல சனத்தோட சனமாய்க் கரைஞ்சுபோட்டினம். தேவை வந்தா ஆயுதமெடுக்க புருஷன் பெண்சாதியாய் வருவமெண்டவை, அவசரமாய் ஆள்வலு தேவைப்பட்ட நேரத்தில குடும்பத்தப் பாதுகாத்துக்கொண்டு இருந்திட்டினம். வாழ்க்கையில குடும்பமெண்டு வந்திட்டா அந்தளவு ருசியும் அதில வந்திடுதுதான். அந்த ருசி பிறகு போகாது’ என்று அவள் சொன்னாள்.

போருக்குத் தயாராயிருந்த ஒரு படையிலிருந்து போராளிகள் நழுவியோடிய கதை அது. ராணுவம் கிளிநொச்சியை சூழ்ந்தபோது எண்ணிக்கை மட்டுமே இருந்தது, போராளிகளைக் காணவில்லை.

அவளுக்கு நீலகேசியென்று இன்னொரு சிநேகிதி அவளது படையணியில் இருந்தாள். ‘எப்ப பார், கத்தரிக்காயும் சோறும்தான். கத்தரிக்காயும் சோறும் திண்டு திண்டு சலிச்சுப்போச்சடி’ என்று சாப்பாட்டு நேரத்தில் வெளியாகவே சலித்துக்கொண்ட ஒரு போராளி. அவள் சிரித்துச் சிரித்து ஒன்றை பத்தாக,.. பத்தை நூறாக விரித்து கதை சொல்லுற சாமர்த்தியசாலியாய் இருந்தாள். சொந்த இடமே அவளுக்கு வன்னிதான். ஒரு வெளிப்படையும், தீரமும், போராட்டத்தில் விசுவாசமும் கொண்டிருந்தவள். அவளும் ஓடினாள். ‘காதல் வந்துட்டுது, கலியாணம் செய்து பிள்ளைபெறப் போற’னென்று போய்விட்டாள். பின்னால் அவள் பிள்ளை பெறவில்லையென்றும், குடும்பமாயே இருக்கவில்லையென்றும் நிலா அறிந்தாள். அதிலே ஒரு பெரிய கதை இருந்தது.

சங்கவிக்கு அவள் பேசுவது கேட்க ஆச்சரியம் எழுந்துகொண்டிருந்தது. “இவ்வளவு தெரிஞ்சுகொண்டிருக்கிறியே!” என்று வியந்தாள். “ஏன் நிலா, இதையெல்லாம் நீ எழுதுவியா உன்ர புத்தகத்தில?”

“2009 மே 16ஆம் தேதிவரை ஆயுதம் வைச்சிருந்த போராளியாய் இருந்தனான், சங்கவி. கால் போனாப்பிறகுதான் ஆயுதத்தைக் கைவிட்டன். பன்ரண்டு வருஷம் இயக்கத்தில இருந்திருக்கிறன். இதையெல்லாம் விட்டிட்டு பிறகு நான் என்னத்தை எழுதுவனெண்டு நினைச்சாய்?”
“தலைவர்மார் செய்ததுகளையும் எழுதுவியோ? பூனை வளத்தது… நாய் வளத்தது… குரங்கு வளத்தது எல்லாம்…?”

“அதுதான் எல்லாமெண்டு சொன்னனே.”

“எல்லாம் எழுதினா புத்தகமாய் வாறது கஷ்ரம்.”“கஷ்ரம்தான். எண்டாலும் எல்லாத்தையும்தான் எழுதுவன். தைரியமுள்ள, நியாயம் தெரிஞ்ச ஒரு ஆளாலதான் அந்தப் புத்தகத்தைப் போடேலும். ம்… அது போகட்டும். நீ இப்பிடி இருந்து என்ன செய்யப்போறாய்? ஒண்டை மறந்திடாத. எங்களுக்கு இருவது இருவத்தைஞ்சுக்கு உள்ளயில்லை, முப்பது முப்பத்தைஞ்சுக்கு மேல வயது போட்டுது. சராசரி வாழ்க்கையில பாதி முடிஞ்சுது. வாழுறதெண்டு நினைச்சிட்டா… அந்தச் சுகம் தேவைதானெண்டு நினைச்சிட்டா… அடைஞ்சிடவேணும். இல்லாட்டி விட்டிடவேணும்.”
அவளிடம் பதில் தயாராய் இருந்தது. “கடைசியாய் ஒருக்கா லோகீசிட்ட கதைக்கப்போறன்.”

“அப்ப… இன்னும் லவ்விருக்கு.”

“விருப்பமிருக்கு.”

“அப்ப, கேள். சரி வரேல்லயெண்டா வேற ஒராளை கலியாணம் கட்டு. அதுவும் இப்ப கஷ்ரம். ஆம்பிளயளவிட கலியாணம் கட்டாத, புருஷனில்லாம இருக்கிற பொம்பிளயள் இப்ப கனக்க. லோகீஸ் விரும்பேல்லயெண்டா… ஒண்டையும் யோசியாத, எல்லாத்தையும் மற. கண்டறியாத கலியாணம்.”

“அதைத்தான் செய்யப்போறன்.”

“நல்ல முடிவு. எண்டாலும் இன்னொருக்கா யோசி. வாழுறது சந்தோஷமாய்த்தான் இருக்கும். வாழ்க்கையில இன்பம் சுழிச்சு சுழிச்சு எழும்புற இடம் கலியாணம்தான், சங்கவி.” சொல்லிவிட்டு கடகடவெனச் சிரித்தாள் நிலா. பௌர்ணமி உதிர்ந்து கொட்டுண்டு ராவைச்

செழிப்பாக்குகிறமாதிரி முகமெங்கும், சூழவும் பிரகாசமெறிந்தது.

அவர்கள் அப்படி கதைத்திருக்கிறார்கள். முன்பேயும். முகாமில் போராளிகளாய் இருந்த காலத்திலும்.
“நிலா…!” மென்மையாக அழைத்தாள் சங்கவி. “நீ என்னமாதிரி? எனக்காவது ஒரு பிள்ளை இருக்கு…”

“எனக்கு கால் இல்லை. அதால கலியாணம் நடக்காது.”

“காலில்லாட்டி கலியாணம் நடக்காதா?”

“காலுள்ள பொம்பிளயளுக்கே கலியாணம் நடக்காமலிருக்கு.”

“சொந்தக்காறரில ஒருதருமில்லையோ? வீட்டில ஒரு முயற்சியும் எடுக்கமாட்டினமோ?”

“எதுக்கும் பொறு. கெதியில லண்டன்லயிருந்து ஒருதர் வரப்போறார். அவர் என்ன சொல்லுறாரெண்டு பாப்பம்.”

“கேட்டா என்ன சொல்லுவாய்?”

“முதல்ல வரட்டும்.” பிறகு ஏதோ ஞாபகம் வர, “சங்கவி, உனக்கு ஞாபகமிருக்கா, அப்ப, கேசி ராவில படுத்திருக்கேக்க, புத்தகமொண்டை வைச்சுக்கொண்டு பாட்டாய்ப் பாடி நடிச்சுக் காட்டுவாள்…?” என்று கேட்டாள்.

“ஞாபகமிருக்கு. சிறுநண்டு மணல்மீது படம்ஒன்று கீறும்…. சிலநேரம் அதைவந்து கடல்கொண்டு போகும்…! அதுதான?”

“கெட்டிக்காறி. இப்பவும் ஞாபகம் வைச்சிருக்கிறாய். மனிசரின்ர கனவுகளை காலம் அழிக்கிறதச் சொல்லுற ஒரு கதையாய்த்தான் அதை நான் அப்ப எண்ணியிருந்தன். ஆனா அது ஒரு நிஜத்தின்ர கதை. காலகாலமாய் நிலைச்சிருக்கக்கூடின சத்தியத்தின்ர கதை. அதுக்கு முடிவு எத்தினையும் இருக்கட்டும். அப்பிடி இருக்கலாம். ஆனா அது சத்தியம். இப்ப எங்கட சமூகத்தில பொம்பிளயள் எதிர்கொண்டிருக்கிற பிரச்சினையின்ர கதையும்தான் அது. காணாமல்ப் போன ஆக்களின்ர கதையை நான் இதில பாக்கிறன், சங்கவி. உன்னை நினைக்கேக்க இந்தக் கதையை அப்பப்ப நான் நினைப்பன்.”

“வாழுறதுக்காண்டித்தான் இயக்கத்தைவிட்டு வெளியில வந்தன். அம்மாவை வாழவைக்கவேணும்… அக்காவுக்கு இடஞ்சல் குடுக்கக்குடாது… ஒண்டும் நடக்கேல்லை. இயக்கத்தில இருந்த பலனுக்கு மூண்டு வருஷத்தை தடுப்பு முகாமிலயும் கழிச்சன். இனி ஆருக்காண்டியும் நான் காத்திருக்கேலாது. குணாளனுக்காண்டியுமில்லை, லோகீசுக்காண்டியும் இல்லை” என்றாள் சங்கவி.

பரஞ்சோதி இன்னும் அடுப்படிக்குள் நையமடித்துக்கொண்டு இருந்தாள். பழைய பம் குழலால் ஊது ஊதென்று ஊதித் தள்ளினாள். மூச்சடைக்கிறதுபோல் இருமினாள். ‘அம்மாவுக்கும் வயசு போயிட்டுதுதான். பாவம்!’ என்று அவளைக் கண்டு நினைத்தாள் சங்கவி.
அப்போது முன்கொட்டிலில் சத்தம் கேட்டது. சாமி எழும்பிவிட்டார். நிலாவும் சங்கவியும் சென்றனர். “நான் அப்பவே நீங்களாய்த்தான் இருக்குமெண்டு நெச்சன்” என்றபடி ஒரு குற்றியில் அமர்ந்தாள் நிலா.

அவள் நடந்து வருகையில் அவளுக்கு நேர்ந்திருக்கக்கூடிய விபத்தை அனுமானித்துக்கொண்டார் சாமி. முகம் முழுக்க துக்கம் வழிந்து கொண்டிருக்க அவளையே பார்த்தபடி இருந்தார். வாயில் வார்த்தைகளாய் உணர்ச்சி குதிக்க தயாராய் இருந்தது.

நிலா முந்தினாள். “ஷெல் விழுந்து வெடிச்சதில இப்பிடியாச்சு, ஐயா. இது இரவல் கால்தான். ஒரு என்ஜிஓ தந்தது. எனக்கு சொந்த கால் முளைக்க இதை திருப்பிக் குடுத்திடுவன். வேறயொண்டும் கேக்காதயுங்கோ.”

அவளால் அப்படியான நேரத்திலும் சிரிக்கமுடியுமா?

தன் உணர்வு வீச்சிலிருந்து மீள சாமிக்கு வெகுநேரம் பிடித்தது. அவர் விஷயத்தை மாற்றியபோதும் அவரின் கண்கள் நீரால் பளீரிட்டிருந்தன. “பன்ரண்டு வருஷம்! இல்லையே, நிலா? பெரிய காலம். அப்பிடியான சந்திப்பு இப்பிடித் துவங்கியிருக்கக்குடாது. ம்…! எங்க இருக்கிறாய் இப்ப?”

“இஞ்சதான்… வட்டக்கச்சியில.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்க சங்கவி எதிர்வீட்டு வாசலில் அப்போது நின்றிருந்த ஜோதியோடு சென்று கதைத்தாள்.

“டேய்.. ஓடாத… நில்லு… நாயே நில்லு…” என்று குழந்தையை அதட்டிக்கொண்டிருந்தாள் ஜோதி. கையில் ஒரு சிறிய கம்பு வைத்திருந்தாள். “சரியான குளப்படி, அக்கா. எனக்கு பொழுது முழுக்க இதை மேய்க்கிறதிலயே கழிஞ்சு போகுது” என்று சலித்தாள். 

பிள்ளையின் குளப்படி வெறுப்பாகவும் வெளிப்படுமா ஒரு தாயில்? அதைத்தான் சங்கவி அப்போது ஜோதியின் கண்களில் கண்டாள். வெறுப்பு!
ஒருமுறை சொல்லியிருந்தாள், தன் குழந்தை சரியாக ஒன்றுக்கும் உதவாத அவனது அப்பனைப்போல என்று. சொல்லும்போதும் ஒரு துக்கமும், ஒரு கோபமும் இருந்தது அவளில். அதை, கணவன் இல்லாமல்போன துக்கமும், விதியின்மேலான கோபமுமென்று சங்கவி

எடுத்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை அதிர்ஷ்டம் கெட்ட குழந்தையாய் தந்தையை வயிற்றிலிருந்தே தொலைத்த பிள்ளையென்று கோபம்கொண்டாளோவெனவும் எண்ணியிருந்தாள்.

யுத்தம் கால், கையென்று வெட்டி வெட்டி பலபேரின் அவயவங்களைத் தின்றது. பலபேரை அப்படியே சப்பித் துப்பியது. இன்னும் பலபேரை அது விழுங்கி ஏப்பமிட்டது. அவளது குழந்தையின் தந்தையை அது விழுங்கியிருந்தது. கூட வந்துகொண்டிருந்தவன் திடீரெனக் காணாமலானான். எப்படி? தெரியாது. பிறகு அவள் என்றைக்குமே அவனைக் காணவில்லை. விசாரிப்பிலும் தகவல் கிடைக்கவில்லை. ஓடிவிட்டானோ என்றும் ஒரு சமயத்தில் நினைத்தாள். உடம்புகூட கிடைக்கவில்லை. ஒரு மறைதல்! ஆவியாய்க் கரைதல்!

ஒரு வருஷம் மெனிக் பாமில் இருந்தாள். அந்தக் கதையெல்லாம் ஜோதி சங்கவிக்குச் சொல்லியிருக்கிறாள். தான் அடையுண்டிருந்த இடத்தை நினைத்து நினைத்துச் சொன்னாள். அது அவளிருந்ததும்தான். ஆனால் அவள் சொன்னதில் விபரம் இருந்தது.

எழுநூறு ஏக்கர் நிலப் பரப்பில் சுமார் மூன்று லட்சம் மக்களை இறுக்கிய இடமாக அது இருந்தது. இருபத்து நான்கு முகாம்கள். தாழ்நிலப் பூமியில் அமைந்திருந்ததனால், மழை அங்கே பெய்தாலும், வேறிடத்தில் பெய்தாலும் முகாம்கள் தண்ணீருக்குள் அழுந்துவனவாயிருந்தன.
மருந்து வசதிகள், வெளித் தொடர்பு வசதிகள் எதுவுமே இருக்கவில்லை. நடமாட்டத் தடைகூட இருந்தது.

பக்கத்தே அருவியாறு பாய்ந்துகொண்டிருந்தது. அது பெருக்கெடுக்கிறபோது ஈரலிப்பும், குளிரும் மட்டுமில்லை, நோய்களும் பெருகிவந்தன. பெரும்பாலும் ஆறு முகாமை இரு கூறாக கிழித்துப் போட்டிருந்தது. ஏ14 மதவாச்சி-மன்னார் பாதை ஊடறுத்துத்தான் ஓடியிருந்தது. உலகின் மிகமோசமான இடப்பெயர்வாளர் முகாமென சர்வதே அளவில் கணிக்கப்பட்ட அங்கிருந்துதான் அத்தனை காலத்தை அவள் கழித்திருந்தாள்.
மெனிக் பாம் விளைத்த பயம் அப்போதும் அவளில் இருந்துகொண்டிருந்ததை சங்கவி கண்டிருந்தாள். கடந்த இரண்டு வருஷங்களாக அந்த வீட்டில் தனியாக இருந்துகொண்டிருக்கிறாள்.

சங்கவி தாயிடம் திரும்பி வந்தாள்.

சாமியுடன் பேசிக்கொண்டிருந்தாள் நிலா.

“எனக்கு உம்மட கவிதையைப் படிக்க ஏலாமலே போச்சே, மகள்” என்றார் சாமி ஏதோ ஞாபகம் வந்தவராக.

“நீங்கள் இன்னும் அதை மறக்கேல்லையோ? இப்ப அந்தக் கவிதையே என்னிட்டயிருந்து காணாமல்போச்சு, ஐயா, சமாதானம் காணாமப்போன மாதிரி. ஆனா சமாதானத்தின்ர அழகு அதில நல்லாய் வந்திருந்திது.” சொல்லிவிட்டு சிரித்தாள் நிலா. பிறகு, “சண்டையும் முடிஞ்சுது. ஏ9 பாதை எப்பவாச்சும் பூட்டுவானெண்ட பயமும் இனி இல்லை. இனியாச்சும் ஒருக்கா உங்கட நீளக் கையிருக்கிற ராட்சசியின்ர ஊருக்கு போயிட்டு வாருங்கோவன்” என்றாள்.

அதில் தீர்க்கமான முடிவிருந்தும் பதிலைச் சொல்ல அவர் சிறிது யோசித்தார். பிறகு சொன்னார்: “போகவேணும். இந்தளவு காலமாய் பிரிஞ்சிருக்கிற ஊரில காலை மிதிக்கத்தான் தயக்கமாயிருக்கு. எண்டாலும் போற எண்ணத்தோடதான் இருக்கிறன். கெதியில போகத்தான்வேணும். கட்டாயம் போவன்.” தனக்கேபோலத்தான் சாமி முணுமுணுத்தார். நிலாவுக்கு வார்த்தைகளை கலைத்துப் பிடிக்கிற சிரமம் ஏற்பட்டது.

நிலா சங்கவியின் விஷயத்தை சாமியிடம் பிரஸ்தாபித்தாள். “நீங்களெல்லாம் பக்கத்தில இருக்கேக்க, வாழ்க்கை சம்பந்தமான ஒரு விஷயத்தில சங்கவி இடையில நிண்டு இப்பிடி இழுபடுறது நல்லாயிருக்கோ, சாமிஐயா?”

“அவளின்ர யோசினை என்னிட்ட எப்பவும் இருக்கு, மகள். லோகீசன்ரயும் சங்கவியின்ரயும் பிரச்சினை உண்மையில எனக்கு என்னெண்டே விளங்கேல்ல. எதுவுமே இல்லாம ஒரு பிரச்சினை அவைக்குள்ள.”

“இருக்கு, சாமிஐயா. கலியாணமாகி புருஷனைக் காணாமல்ப் போன பொம்பிளயளின்ர விஷயத்தில அந்தாள் எண்டைக்காவது திரும்பி வந்திடுமோவெண்டு நினைக்க இடமிருக்கெல்லோ?”

“அது சங்கவிக்குத்தான வரும்? லோகீசுக்கு என்ன பிரச்சினை?”

“லோகீசுக்கும் வரும். தெரிஞ்ச ஆளாயிருந்தா இன்னும் கூடவாய் வரும்.”

“வருமெண்டாலும், ஏழெட்டு வருஷமாய் யோசிக்க அதில என்ன இருக்கு?”

“அப்பவும் யோசிக்கத்தான் வேணும்.”

“ம்… சங்கவியின்ர பிரச்சினை முடியட்டுமெண்டுதான் காத்துக்கொண்டு இருக்கிறன். முடிஞ்சா இஞ்ச இருக்கமாட்டன். எனக்கு வேற பயணம் இருக்கு.”

சங்கவியின் காதலின் ஓடுதளத்திலிருந்த இடர்களை யோசிக்க நிலாவுக்கு சங்கவிமேல் இரக்கமாக வந்தது. அவளுடைய வெளியில் தென்படும் உடம்புக்குள் இரும்பாலான இன்னொரு உடம்பு இருக்கிறது. துவக்கை அநாயாசமாக எடுப்பாள். அது அவளின் உடம்புக்கு பாரமானதாகவே தென்படும். ஒரு எலும்புக்கூடு தூக்குவதுபோல தோன்றும். அவளோடு பழகியவர்களுக்குத்தான் அதைச் செய்வது அவளின் உள்ளிருக்கும் அந்த எஃகு உடம்பென்பது தெரிந்திருந்தது. வெடி வைத்தாலும் குறி தவறுவதில்லை. வாழ்க்கையில் அவளது குறிகள் தவறிப்போய்க்கொண்டு இருப்பது என்ன தர்க்கத்தில்?

சாமி தொடர்ந்துகொண்டிருந்தார்: “சங்கவி லோகீஸை வரச்சொல்லியிருக்கிறா. அனேகமாய் வாற ஞாயிற்றுக்கிழமை லோகீஸ் இஞ்ச வரும். வராட்டி நான் அங்க போவன். சாதகமான பதில் லோகீஷிட்டயிருந்து வந்தா சரி, இல்லயெண்டா சங்கவி தன்ர அலுவலைப் பாத்துக்கொண்டு பேசாமப் போயிடவேணும். இதை சங்கவியிட்ட வடிவாச் சொல்லியிட்டு போ.”

சங்கவி எல்லாம் தூரவிருந்து கண்டாள். நிலாவின் பார்வை அடிக்கடி தன் பக்கம் திரும்புவதைக்கொண்டு அவள் தன்னைப்பற்றியே சாமியிடம் கதைத்துக்கொண்டிருக்கிறாளென எண்ணினாள்.

“பெருங்கனவுக் காலம் முடிஞ்சிட்டுது, ஐயா. இது சிறுகனவுகளின்ர காலம். கனவுகள் மனிசருக்குப் பின்னால தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். அதுக்காக அந்த கனவுகளைத் தூக்கி வைச்சு நாங்கள் கொண்டாட ஏலாது. இந்தளவில சங்கவிக்கு தன்ர நிஜ வாழ்க்கையைத் தெரிஞ்சிருக்குமெண்டுதான் நினைக்கிறன். லோகீஷின்ர முடிவை அறிஞ்சிட்டாளெண்டா, அந்தக் கனவை அவளே கைவிட்டிட்டு தன்ர பாட்டில போவாள்.”

அதைச் சொல்லும்போது கொஞ்சம் சோகமாய்த்தான் நிலா உணர்ந்தாள். அவளிலிருந்து அந்தக் காதல் பிரியும் கணம் மிகுந்த வலி நிறைந்ததாய் இருக்கப் போகிறது. அவள் அழுவாள். கொஞ்சம் விறைச்ச மண்டைக்காரி என்பதால் கண்ணீராய் கொட்டமாட்டாள். ஆனால் அவளது ஆத்மா அழும். அவளுக்குள் எழும் அந்தப் புலம்பல் நீண்ட காலத்துக்கு உள்ளே கேட்டுக்கொண்டு இருக்கும்.

“அதுக்குப் பிறகெண்டான்ன சங்கவிக்கு கார்த்திகாவின்ர தாயாய் கனவு வரவேணும்.”

“மெய்தான்” என்றவள் பிறகு எதையோ ஞாபகமாகிக்கொண்டு, “லோகீஸ் முந்தி இயக்கமெதிலயாச்சும் இருந்துதோ, சாமிஐயா?” என்று கேட்டாள்.

“இருந்ததெண்டுதான் நினைக்கிறன். ஆனா எந்த இயக்கமெண்டு தெரியாது. எனக்கு ஊகமிருக்கு. ஊகிக்கிறதால அதை நான் ஆருக்கும் சொல்லமாட்டன்.”

“சரி, அதை நீங்களே வைச்சிருங்கோ. நான் வரப்போறன்.”

“சரி. இனி எப்பெப்பவோ? கண்டு கதைச்சது பெரிய சந்தோஷம். நீ எப்ப ஊருக்குப் போப்போறாய்? அம்மா, அப்பா, அக்கா எல்லாம் உனக்கு இருக்கெல்லோ?”

“அப்பா போயிட்டார். அம்மாவும் அக்காவும் இருக்கினம். ஒரு நல்ல கால் முளைச்ச பிறகு அங்க போவன். அதுமட்டும் இஞ்சதான். இஞ்சயும் நான் தனியா இல்லத்தான? அம்மம்மாவோட இருக்கிறன்” என்றுவிட்டு நடந்தவள் திரும்பி சாமியைக் கேட்டாள்: “மழை போதுமோ, ஐயா? இல்லை, இன்னும் வேணுமோ?”

“என்ர வயலுக்குப் போதும்.” சாமி கடகடவெனச் சிரித்தார்.

அவர் பரவசத்திலிருந்தாரென்பது நிலாவுக்கு வந்தவுடனேயே தெரிந்திருந்தது.

அன்று மாலை நிலா சென்ற பின்னால் சங்கவி சிறிது தெளிந்த மனநிலையோடிருந்தாள். லோகீசனின் விஷயத்தில் எதையும் எதிர்கொள்ள நிலாவோடு கதைத்த பின்னால் மனம் திடமாய் இருந்தது. நிலாவால் அவற்றையெல்லாம் தன் நண்பிகளிடத்தில் செய்யமுடியும். அப்போது எதிர்வீட்டில் கதைவழிப் பட்டதுபோல் சத்தமாக இருந்தது. அது ஆச்சரியமான விஷயம். ஜோதிக்கு சொந்தங்களென்று யாரும் இருந்திருக்கவில்லை. யாருடனும் பழகாதவளும் அவள். யாரைக் கண்டும் ஒழித்தவள். அங்கே என்ன சத்தம்?

சங்கவி தெருவுக்கு வந்தாள். வாசல் கொட்டிலில் சாமி இல்லை. கிணற்றடியில் பரஞ்சோதியும் கார்த்திகாவும் நின்றிருந்தார்கள். சங்கவி ஜோதி வீட்டுக்குப் போனாள்.

சங்கவியின் பார்வை அங்கிருந்த ஒரு மனிதரில் நிலைத்திருப்பதின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தடுமாற்றத்துடன், “அப்பா” என்றாள் ஜோதி.
கறுப்பாக, ஒட்டிய வயிறாக, முன்வளைந்த உடம்பும், கெவட்டைக் கால்களுமாக இருந்த அவர் அப்பால் எழுந்து நடந்தார். அவள் அந்தக் கால்களை நடக்கும்போது கவனித்ததை ஜோதியும் கண்டாள்.

சரியாக அவரது சாங்கலில்தான் ஜோதியின் பிள்ளை இருந்தான்.


திடீரென்று சங்கவியின் ஞாபகத்தில் ஜோதியின் கூற்றாய் ஒரு பொறி பறந்தது. ‘சரியாய் தேப்பனைப்போல பெடியன்.’

யாருடைய தகப்பனைப்போல?

சங்கவி குழம்பினாள்.

மேலே நின்று பேசுவதற்கான மனநிலை சங்கவிக்கு இருக்கவில்லை. சங்கவி திரும்பினாள். “சரி, வாறன்.”

படலையைத் திறந்து போகும்போது சங்கவி கண்டாள், இன்னும் ஜோதி தன்னில் பதித்த பார்வையை விலக்காமல் ஏக்குற்று நிற்பது.
சொந்த ஊருக்குத் திரும்புகிறதுபற்றி பேசியிருப்பார்கள். ‘ராணுவக் கட்டுப்பாடு…’, ‘கெதியில விடுபட்டிடும்…’, ‘அங்க போயிடுவம்…!’ தொடர்ந்த அவளது தந்தையின் பேச்சின் சொற்கள் சில காதில் விழுந்தன.

இரவு கூதல் அதிகமாயிருந்தது.

இரணைமடுவில் கலிங்கு திறந்திருந்ததுபோல. நீர் வழிந்த பேரோசை அடங்கிய ராகமாய் எழுந்துகொண்டிருந்தது. இடையில் எழும் சப்தங்கள்தான் பின்னணியில் ஒரு ஓசை இருந்துகொண்டிருப்பதைக் காட்டியது. மற்றும்படி கலிங்கு பாய்ந்தது இயல்பான பிரபஞ்ச ஓசைபோல் பின்னமற இருந்தது.

காலையில் ஜோதியின் வீட்டில் எழுந்த கதறல் கேட்டு அக்கம்பக்கத்து சனங்கள் ஓடிப்போனார்கள். சங்கவி வாசலைக் கடக்கையில் ஏற்கனவே அங்கு ஓடியிருந்த பரஞ்சோதி திரும்பிவந்தாள்.

“என்னம்மா?”

“அந்தப் பெட்டை கிணத்துக்க குதிச்சு செத்துப்போச்சடி.”

சாமியும் வர மூவரும் கேற்றடியில் நின்றிருந்தனர்.

“நீயேன் ஒருமாதிரி இருக்கிறாய்?” பரஞ்சோதி கேட்டாள்.

“ஒண்டுமில்லையம்மா.” சங்கவி மேலே அதில் நிற்காமல் வீட்டுக்கு நடந்தாள். ஜோதி தன் விடுதலையைத் தேடிய விதம் அவளை

நெஞ்சுள்ளிருந்து அரித்துக்கொண்டிருந்தது. 


5

கிளிநொச்சியிலிருந்து சென்றுவிடுவதற்கு லோகீசனுக்கு தீர்மானமாகியிருந்தது. அதை விரைவில் செய்துவிடுவதற்கும் திண்ணமிருந்தது. அதுவரையில் சங்கவியை நேரில் சந்தித்துவிடக்கூடாதென்று மட்டுமில்லை, தான் அவளைக் கண்டுவிடக்கூடாதென்றும், மிகுந்த திட்டத்துடன் அவன் வீட்டை திருநகருக்கு மாற்றியிருந்தான். இருந்தும் நினையாப்பிரகாரம் போன வெள்ளி மாலையில் அவளைக் காண நேர்ந்துவிட்டது.
அவன் கண்டால் நினைவில் அறையும்படி இருக்கவேண்டும் என்பதுபோல் அன்றைக்கு வெளிக்கிட்டு வந்திருந்தாளோ? பச்சை நிறச் சேலையில் கூந்தல் அலைபாய அப்படியொரு அழகோடு தாயுடனும் கார்த்திகாவுடனும் நின்றிருந்தாள். இறகுகளை அடித்துக்கொண்டு பறந்துகொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிபோல் அவளது கண்கள் அப்போதும் சிரிப்பை உதிர்த்து திரிந்தபடியிருந்தன. கன காலத்துக்குப் பிறகு அந்தச் சிரிப்பு அவளது கண்களில் வந்திருந்தாய்ப் பட்டது. கடைக்குள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த லோகீசன், அவள் வந்துநின்ற வவுனியா பஸ்ஸில் ஏறிப் போன பின்னர் வெளியே வந்தான்.

அன்றிரவு முழுக்க வண்ணத்துப் பூச்சியின் பறப்பை மனத்துள் அடக்க அவனுக்கு மிகுந்த பிரயத்தனம் வேண்டியிருந்தது. அப்போது அவனுக்குப் பிடித்தமான நெருதாவின் கவிதையொன்றின் கடைசி வரிகள் ஞாபகமாயின. ‘என் இனிய பெண்ணே \ இருளே… தெளிவே \ என் இதயமே… என் கறண்டியே \ மங்கிய என் வளத்தின் உப்பே \ எனது தெளிந்த சாரை நிலவே’ என்று அது முடிந்திருக்கும். முன்பெல்லாம் அந்த முடிவிலிருந்து ‘என் எட்டாத நிலவே \ கைகளுக்குள் சிக்காத புகாரே \ கள்ளே… கள்ளின் மணமே’ என அந்தக் கவிதை அவனுக்குள் விரிந்திருக்கிறது. இன்று… அவளிலிருந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறான்.

சாமியையாவது சந்தித்து போர் வெளித்த அந்தத் தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் தான் தொலைந்து போகப்போகும் செய்தியை சங்கவிக்காக விட்டுப் போகவே எண்ணியிருந்தான்.எதிர்பாராத விதமாக அவரையும் அன்றைக்கே வழியில் காணநேர்ந்தது.

‘தம்பி, கொஞ்சம் உம்மோட பேசவேணும். ஞாயிற்றுக் கிழமை பின்னேரம்போல ஒருக்கா வீட்டுப் பக்கம் வரேலுமோ?’ என்று கேட்டார்.

அவர் என்ன பேசுவாரென்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அது சுகமான உரையாடலாக இருக்காதென்பதும் தெரியும். ஏற்கனவே அவனுக்குத் எண்ணமிருந்தது என்பதோடு, சங்கவி இல்லாத ஒரு தருணத்தில் அந்த உரையாடல் எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும், நிகழ்த்த கடினமாயிருக்காதென்று அவன் கருதினான். ‘நானே வரவிருந்தன், ஐயா. கட்டாயம் வாறன்.’

அவளைச் சந்திக்க, பேச சிறிதுகாலம் அவன் செய்யாதிருக்கிறான். ஒழிந்துகொண்டு இருக்கிறான். ஆனால் அவன் எண்ணியபடி எதுவும் அமைந்து வரவில்லை. அவளுக்கு மட்டுமில்லை, அவனுக்கும். அவனுக்கு அந்த வண்ணத்துப்பூச்சியின் பறப்பு மனத்துள் இன்னும் நிற்பதாயில்லை.

தான் என்றோ போட்ட கற்களே அப்போது தன் விருப்பத்தின் தடைகளாக குறுக்கே வந்து நிற்கின்றன என்பதை லோகீசன் தெரிந்தான். தனது விருப்பத்தையும், தன் பாவத்தையும் என்றுமே அந்த விஷயத்தில் ஒருசேர வைத்துவிட முடியாதென்று அவனது தர்க்கம் சொன்னது. அவளிலிருந்து விலகிவிட வேண்டுமென்ற தீர்ப்பை அறுதியாக அதுதான் எழுதியது.

ஞாயிற்றுக் கிழமை சாமியிடம் தனக்கு எழுதப்பட்ட தீர்ப்பையே அவன் வாசிப்பான்.

மாலையானதும் எழுந்து சாமியைச் சந்திக்க ஆயத்தமானான். அப்போது அவனது அக்கா மணிமேகலை சடுதியில் வந்தாள்.

கோபமாயிருந்தாள். அதுவரை சகஜமாய்ப் பேசுவதைமட்டும் செய்யாமலிருந்தவள், அன்றைக்கு கோபத்தோடும் வந்திருந்தது அவனைத் தடுமாறவைத்தது. “அக்கா…!”

“அம்மா போன் பண்ணினா. நாலைஞ்சு முறை போனடிச்சும் நீ எடுக்கேல்லையாமே, அதுதான் ஒருக்கா போய்ப் பாத்து சொல்லச்சொன்னா.”

“வேலை கொஞ்சம் அதிகமாய்ப் போச்சு. மனமும் சரியில்லை…”

“அதுதான் ஒவ்வொரு நாளும் தண்ணியடிச்சுக்கொண்டு நீ இருக்கிறதப் பாத்தா தெரியுதே…!”

“விட்டிடுவனக்கா.”

“ஆயிரம்தரம் உப்பிடி நீ சொல்லியிட்டாய்.”

“இந்தமுறை சத்தியமாய் விட்டிடுவன்.”

“என்னவோ செய். அம்மாவைப் போய் கெதியில பாத்திடு. எங்கயோ போக அவசரமாய் வெளிக்கிட்டுக்கொண்டு இருக்கிறாய்போல கிடக்கு…?”

“கிட்டத்தான்.”

“அப்ப, நில்லு. உன்னோட கொஞ்சம் பேசவேணும்.”

அவளுக்கு அப்போது அவனில் கோபமில்லை, இரக்கமுமில்லை. நல்ல அறிவார்த்தமான ஒரு தாய்க்கும் தந்தைக்கும் மகனாய்ப் பிறந்து, அவர்களின் நேர்மையில் பாதியைக்கூட கொண்டிராமல் அரசியல் தறுதலையாகி, பின் ஒரு இயக்கத்தில் ஒன்றிப்போய் ஆயுத கலாச்சாரத்தை தொடர்ந்துகொண்டு இருந்துவிட்டு, இனி ஒன்றுமே வேண்டாமென்று இறுதி யுத்தத்தின் பின் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிப்போனவன் அவன். இலக்கு இல்லாததால் இப்போது நிலையெடுக்க முடியாதிருப்பவன்.

“மிதிவெடி பொறுக்கிற வேலை முடிஞ்சுதோ?’’

‘’முடிஞ்சுது.’’

“இனி என்ன செய்யப்போறதாய் உன்ர உத்தேசம்?” அவள் கேட்டாள்.

அது போன தடவை சந்தித்தபோது நடந்து, அவளது கோபத்தில் குழம்பிப்போன உரையாடலின் தொடர்ச்சியென்பதை அவன் உணர்ந்தான். “என்ன செய்யிறது? யாழ்ப்பாணம் போப்போறன். அங்கயிருந்துதான் எதையெண்டான்ன செய்ய யோசிக்கவேணும்.”

“எல்லாரும் யோசிச்சு ஒரு தீர்மானத்தோட போவினம். நீ அங்க போய்த்தான் யோசிக்கப்போறாய். சரி, அவசரமாய் போகவேணுமெண்டு நினைக்கிறாய்போல.”

“அக்கா… நான்…”

“நீ ஒண்டும் சொல்லவேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும். நீ வாறதுக்கு முந்தி இஞ்ச வந்தவள் நான். எனக்கும் ஞாயமான ஆக்களைத் தெரியும, தம்பி. ஒண்டுமட்டும் சொல்லுறன். எங்கயெண்டான்ன போ, ஆனா வழி முழுக்க ஒரு பாவத்தை நீ கட்டி இழுத்துக்கொண்டுதான் போவாயெண்டதைமட்டும் மறந்திடாத. அவ்வளவுதான் சொல்லுவன். நான் போறன்.”

அவள் விறுவிறென நடக்கத் துவங்கினாள். கேற்றடியில் போய்க்கொண்டிருக்கையில் திரும்பாமலே சொன்னாள்: “அம்மாவைப் போய் கெதியில பாத்திடு.”

“பாக்கிறன்.”

சாமியைப் பார்க்க புறப்பட்டபோதிருந்த அதே மனநிலை அப்போது அவனிடத்திலில்லை. ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போகிற வழியில் இன்னொரு பிரச்னை தோன்றியிருக்கிறது. ‘அக்கா பாவமென்று குறிப்பிட்டது, சங்கவியின் விஷயத்தையா?’

லோகீசன் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சாமியைப் பார்க்கப் போனான்.

சாமி கொட்டிலில் இருந்திருந்தார்.

அவன் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்து மோட்டார்ச் சைக்கிளை நிற்பாட்டினான். சாமி எழுந்தபடி, “வீட்டில ஒருதருமில்லை. நாங்கள் அங்க திண்ணையிலிருந்தும் பேசலாம்” என்று சொல்லி முன்னால் நடந்தார்.

அவர்கள் எங்கேயென்று அவன் வழக்கம்போல் கேட்கவில்லையென்பதை சாமி கவனித்தார். பிறகு அவராகவே தெரிவித்தார். “எல்லாரும் வவுனியாவுக்குப் போயிருக்கினம்.”

“தெரியும்” என்றான் அவன். “வெள்ளிக்கிழமை பின்னேரம் அவை வவுனியா பஸ்ஸில ஏறுறதப் பாத்தன்.”

இருவரும் திண்ணையில் அமர்ந்தனர்.

அவனுக்கு எங்கிருந்து ஆரம்பிப்பதென, ஏற்கனவே மனம் சிறிது குழம்பியிருந்த வகையில், தெரியாதிருந்தது. அவனே தொடங்கட்டுமென்பதுபோல் சாமி கொளுவியிருந்த லாம்பைக் கழற்றி சிமிலியை ஒரு பேப்பர்த் துண்டினால் துடைத்துக் கொண்டிருந்தார்.
சாமியில் கலை ஏறியிருந்ததை அவன் தெரிந்தான்.

மாரியிருள் நேரத்தோடு விழுந்துகொண்டிருந்தது.

ஞாயிறு பூண்டிருந்த நிசப்தத்தில் அணைக்கட்டிலிருந்து நீர் பாயும் ஓசை கேட்டது.

ஒரு துக்கமான பயணமாகவே அவனது அந்த ஒப்புமூலம் இருக்கப்போகிறது. ஆனாலும் அவன் அதிலிருந்து இனி பின்வாங்கிவிட முடியாது. லோகீசன், “ஐயா…!” என்றான்.

சாமி நிமிர்ந்து பார்த்தார். அவன் கவனமாக வார்த்தைகளைக் கோர்த்தான். “நினைப்புக்கும் கனவுக்குமிடையில மிகவும் மங்கலான பிரிகோடொண்டிருக்கு. பாதிப்புக்கள் வாறவரை அந்த பிரிகோடு கனபேருக்கு தெரிஞ்சிடாமலே இருந்திடுது.”

சாமி ஒன்றும் சொல்லாமல் அவனது வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். சிலநாட்களுக்கு முன்பு நிலாகூட கனவைப்பற்றித்தான் பேசியிருந்தாள். ‘ஒவ்வொருத்தருக்கும் கனவிருந்திருக்கு. அதிலிருந்தே அவையள் சரியத் துவங்குகினம் என்றிருந்தாள் அவள். லோகீசனும் தன் கனவிலிருந்து சரிந்தவனோ? இவனது கனவு என்னவாயிருந்திருக்கும்? சங்கவியே இவனது கனவா?’ சாமி யோசித்தார்.

“எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில… எதிர்பாராத ஒரு நேரத்திலதான் சங்கவியை நான் முதல்ல பாத்தன்.”

அவன் தன் கனவுக் கதையையே சொல்லத் துவங்குகிறானென்பதை சாமி தெரிந்தார். “ஓமந்தையில அவ பொதுசனத்தின்ர லைனில நிக்கேக்கதான…?” சாமிக்கு அவள் அவைபற்றி முன்பே சொல்லியிருந்தாள்.

“இல்லை. அவவின்ர வீட்டில… இஞ்ச… இதே இடத்தில. ஓமந்தையில பாத்தது அதுக்கும் கனகாலத்துக்குப் பிறகுதான்.’
சாமி துடைத்த லாம்பை ஓரமாக வைத்துவிட்டு அவனைநோக்கித் திரும்பினார்.

“எப்பிடிச் சொல்லுறது, எவ்வளவத்தைச் சொல்லுறதெண்டு எனக்குத் தெரியேல்லை. எல்லாத்தையும் சொல்லாமல் இதை விளங்கப்படுத்தியிடவும் ஏலாது. நான் ஒரு ஏமாத்துக்காறனோ… சபல புத்திக்காறனோ… மற்றவையை துன்பப்படுத்தி அதில சுகம் காணுற சாடிஸ்டோ இல்லையெண்டத ஒராளாச்சும் தெரிஞ்சிருக்கவேணுமெண்டதால எல்லாத்தையும்... எல்லாத்தையும்தான்... இப்ப உங்களிட்ட சொல்லப்போறன்.”

விழுந்துகொண்டிருக்கும் அந்தியில் வெளிவரப்போகிற அந்திப் பேய்களோடு குணாளனும்கூட இருந்து அவனது கனவுக் கதையைக் கேட்கலாம். இனி அவையெதுவும் அவனது கரிசனமில்லை.

லோகீசன் பின்னே அரக்கி சுவரோடு சாய்ந்தான்.

வானம் தெரிந்தது. புகார் தெரிந்தது. மெல்லிய கீறாய் மாரிக்கால அம்புலி தெரிந்தது. அவனது ஸ்திதி காலத்தைத் தேடுவதுபோல் இருந்தது.

2002ஆம் ஆண்டு எப்போதும் அவனுக்கு ஞாபகமிருக்கும். அந்த ஆண்டில்தான் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கைச்சாத்தானது. ஒரு அலுவலாக தீவிலிருந்து வந்து கல்வியங்காட்டிலே லோகீசன் தங்கியிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் நடந்த ஆட்கடத்தலொன்றில் அவரது வெளிநாட்டு உறவினர்களிடமிருந்து பெற்ற விடுப்புத்தொகையின் ஒரு பகுதி இங்கே அந்த ஆட்கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கைமாறியிருக்கிறதென்ற செய்தியை அவனது இயக்கத் தலைமை அவனிடத்தில் சொல்லி, அதுபற்றி உடனடியாக விசாரித்து விபரம் தெரிவிக்கப் பணித்தது.

தனது திறமையான ஒற்றனை வரவழைத்து தகவலைச் சொல்லி, அதுபற்றிய பூரண விபரம் தர காலஎல்லை குறித்துவிட்டான் லோகீசன். மாலி என்கிற அந்த மனிதர் தனது இரகசிய விசாரணையை வன்னியிலிருந்து தொடங்கினார். ஏ9 பாதை திறந்திருந்த காலம் போக்குவரத்தில் பெரிய இடைஞ்சலைச் செய்யவில்லை மாலிக்கு. பூநகரியில் கமமிருந்ததிலும், அவரது மகளும் குடும்பமாகவிருந்து அங்கே விவசாயம் செய்துகொண்டு இருந்ததிலும் புலிகளிடம் சந்தேகத்தைத் கிளப்பாமலே வன்னியில் அவரால் இயங்க முடிந்திருந்தது.

லோகீசன் எதிர்பார்த்திருந்த காலவெல்லைக்கு முன்பாகவே மாலி மறைக்கப்பட்டிருந்த பெருநிதிபற்றிய விபரத்தை பெருமளவு திரட்டிவிட்டிருந்தார். மாலி அவனிடம் அதைச் சொன்னபோது புளுகத்தில் துள்ளிப்பாய்ந்தான் லோகீசன். “உங்களத் தவிர இந்த விஷயத்தை இவ்வளவு கெதியிலயும், இவ்வளவு கச்சிதத்திலயும் முடிக்கிறதுக்கு வேற ஆளில்லை, அண்ணே” என்று மாலியைப் பாராட்டினான்.
மாலி அதை பவ்வியமாய் மறுத்தார். “இல்லை தம்பி, இந்த பதுக்கல்ல ஈடுபட்டிருக்கிற மூண்டு பேரை எதிர்பாராமல் கண்டதாலதான் இவ்வளவு கெதியில இந்த விஷயத்தை நான் அறிய முடிஞ்சது.”

“அந்த பெருநிதிப் பதுக்கல்ல சம்பந்தப்பட்ட ஆக்கள் வெளிப்படுற சரியான இடத்தைக் கணிச்சு நீங்கள் கவனிப்பை வைச்சதாலதான் இவ்வளவு கெதியில சாத்தியமாச்செண்டும் எடுக்கலாமெல்லோ?”

“அப்பிடியெண்டாலும்... அந்தப் பெருநிதி எங்க பதுங்கியிருக்கு எண்ட விபரத்தை அறியமுடியேல்லையே.”

அவசரமாய் லோகீசன் சொன்னான்: “கண்டுபிடிச்சிடலாம்.”

மாலிக்கே அவனது நம்பிக்கை ஆச்சரியமாக இருந்தது.

“இஞ்ச பதுங்கியிருக்கிற பெருநிதி வெளியில வரத்தானவேணும், அண்ணை?”

“ஒருவேளை அது இத்தறுதியில கொழும்புக்குப் போயிருந்தா…?’’

“அது ஆளோடதான் கூடப்போகும். ஆக்கள் இஞ்சதான? அப்ப கவலையில்லை. ஆனா அடங்கியிருக்கிறமாதிரி இருந்திட்டு திடீரெண்டு ஒருநாளைக்கு பெருநிதி பக்கெண்டு வெளியில வந்திடும், கவனமாய் இருங்கோ. இண்டையிலயிருந்து ஒராளை உதவிக்குத் தாறன். அந்தாள் இஞ்ச நிண்டு உங்களுக்குத் தேவையான வேலையளைச் செய்யட்டும்.”

சில மாதங்களின் பின் லோகீசனைத் தொடர்புகொண்ட மாலி, அந்தச் செயற்பாட்டின் முக்கியமான ஆள் போராளிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளதையும், மேற்கொண்டு சகஜ வாழ்வுக்குத் திரும்பவிருக்கிறதால இப்ப பணிஷ்மென்ரில இருக்கிறதாயும் தெரிவித்தார்.
திட்டமாய்த்தான் வேலைசெய்கிறானென மனத்துக்குள் மெச்சிய லோகீசன் அந்த பெருநிதிச்செல்வனின் பெயரைக் கேட்டான்.
“குணாளன். குணாளனோட ரமேஷ், சிவா எண்டு ரண்டு பேர். இந்த ரண்டு பேரும் இயக்ககாறரில்லை.”

“குணாளனா…? இயக்கப் பேர்தான? ஆளை எனக்குத் தெரியும்போல இருக்கு, அண்ணை. குணாளனை நான் பாக்கவேணுமே.”

“புலியளப்பற்றி உங்களுக்குத் தெரியும். அவங்கட பார்வையிலயிருந்து லேசாய் தப்பி வந்திடேலாது, தம்பி.”

“காலம் சாதகமாய் இருக்கு, அண்ணை. தமிழ் சிங்கள கலைஞர்களின்ர ஒன்றுகூடல் யாழ்ப்பாணத்தில நடக்க இருக்கெல்லோ… வித்தியாசமான நடமாட்டங்கள் இருக்கிற நேரம். ஒன்றுகூடல் முடிய எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச கம்பஸ் பெடியளோட சேர்ந்து வந்திடுவன். எனக்கு வேறயும் ஒரு வசதியிருக்கு. திருநகரில என்ர அக்கா இருக்கிறா.”

கனகாம்பிகைக் குளத்துக்கு ஒரு மாலைவேளை லோகீசன் வந்து சேர்ந்தபோது மாலி அவனைச் சந்தித்தார். கூட்டிச் சென்று குணாளனை மறைவில் நின்று காட்டினார்.

லோகீசனுக்கு உடனடியாக அவனை அடையாளம் காணுவது சிரமமாக இருந்தது. பிறகு அது தெரிந்தபோது அவன் திடுக்கிட்டான். சித்தப்பாவின் மகன் வசியின் கொலைக்குக் கட்டளையிட்ட எந்தக் கொலைகாரனை கடந்த மூன்று வருஷங்களாகத் தேடிக்கொண்டிருந்தானோ, அதே குணாளனே பெருநிதிச் செல்வனென்று அறிந்தபோது, லோகீசனுக்கு இரட்டிப்புச் சந்தோஷமாகிவிட்டது. தம்பி தப்பிவிட்டிருந்தாலும், அதில் அவனது சின்னம்மா இறந்த வலியை அவனால் மறந்துவிட முடியாது.

அவனது கவனம் விழுந்த இன்னொரு அம்சம் அந்த வீட்டில் இருந்தது. அது கண்ணில் விழுந்து மனத்தில் பதிகிற அழகைக் கொண்டிருந்தது.

“பேர் தெரியுமோ?”

“சங்கவி. இயக்கப் பேர் சொரூபா.”

“சங்குதான்.”

லோகீசன் அடுத்த நாளே திரும்பி யாழ்ப்பாணம் போய்விட்டான்.

பெருநிதிபற்றிய விஷயத்தில் பெருநச்சரிப்பைச் செய்துகொண்டு இருந்தது தலைமையகம். எவ்வளவு முயன்றும் கிடைத்த தகவலுக்கு மேலே எதையும் கிரகிக்க லோகீசனால் முடியவில்லை. எல்லாரும் எல்லாமும் மறக்கிறவரை கால அவகாசம் அளித்திருந்ததுபோல் விஷயம் உறங்க விடப்பட்டிருக்கிறதென அவன் நம்பினான்.

அவ்வப்போது குணாளனும் கூட்டாளிகளும் யாழ்ப்பாணம் வந்துபோவது அவர்களுக்குத் தெரியவந்தது. வெளிநாடு போவதற்கு மும்முரமான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன என்பதையும் அவர்கள் அறிந்தார்கள். ஆனால் பெருநிதியின் இருப்பிடம் தெரியவேயில்லை. அதன் மதிப்பும் அறியப்படவில்லை.

யுத்தம் தன் கரங்களை கிழக்கில் இறுக்கியது. ஏ9 பாதையில் ராணுவம் புலிகளென்ற இரண்டு தரப்பின் சோதனை நிலையங்களையும் கடந்துவருதல் முன்னாள் போராளிகளுக்கு கடினமாகத் தொடங்கியது.

ராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் புலிகளுக்கில்லாத ஒரு இரகசிய வழிமூலம் குணாளனும் கூட்டாளிகளும் யாழ்ப்பாணம் வர ஆயத்தங்கள் நடப்பதாகத் தெரியவர லோகீசன் குழு உஷாரானது.

குணாளனும் கூட்டாளிகளும் யாழ்ப்பாணம் வந்து கடலோரக் கிராமமொன்றில் தங்கியிருந்த ஓர் இரவில், வெள்ளை வானில் வந்து குணாளனைக் கடத்திச் சென்றார்கள்.

சரசாலை நீர்வெளியில் ஒரு கண்டல் மரத்தடியில் கைகால்கள் கட்டிப்போடப்பட்டு இருந்தவனை விசாரணை செய்தான் லோகீசன். “என்னை ஆரெண்டு தெரியுதோ, குணாளன்? தெரியாதெண்டுமட்டும் சொல்லியிடாத. சரியான கடுப்பில இருக்கிறன்.”

அவன் தெரியுமென்று தலையசைத்தான்.

“ஆர் சொல்லு பாப்பம்?”

“வசியின்ர அண்ணை.”

“ம். சரியாய்த்தான் அடையாளம் கண்டிருக்கிறாய். வசியை போடச்சொன்னது நீதான?”

“வசியை…? இல்லை, அது நானில்லை. வசியைப் போடச்சொன்னது, தருமா. போட்டது கசின். எனக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்லை. அப்ப நான் வன்னியில இருந்தன்” என அவன் அலறினான்.

“இப்ப அதை விசாரிக்க நான் வரேல்ல. எனக்குத் தெரியவேண்டியதெல்லாம் நீ பதுக்கி வைச்சிருக்கிற புதையல் எங்கயிருக்கு எண்டதுதான். எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுதெண்டு இந்தளவில உனக்கு விளங்கியிருக்கும். பொய் சொன்னியோ போட்டிடுவன். உண்மையைச் சொன்னியெண்டா சின்னம்மான்ர விஷயத்தில நீ சொன்னதை நம்பிக்கொண்டு உன்னை இப்பிடியே போக விட்டிடுவன்.”

மாலி லோகீசனை நிமிர்ந்து பார்த்தார். அப்படி கடத்தியவர்களை விடுவிக்கிற செயற்பாடெதுவும் அவர்களது நடைமுறையில் இருப்பதில்லையே! ஒருவேளை அதை குணாளனிடமிருந்து தகவலை எடுப்பதற்கான உத்தியாக லோகீசன் பாவிக்கிறான்போல என்றெண்ணி அவர் நிதானமானார்.

வெளிநாட்டுக்கு பிறகுகூட போகலாமென நினைத்து யாரிடம் அதைக் கொடுத்துவைத்திருக்கிறான் என்ற உண்மையை குணாளன் சொல்லிவிட்டான்.

“எவ்வளவு?”

“பதினேழு லட்சம்.’

“அவ்வளவுதானோ?”

“இருவது கிடைச்சது. மூண்டைச் சிலவழிச்சிட்டன்.”

“பொய் சொல்லாத. உனக்குக் கிடைச்சது ஒரு கோடி.”

“அதை அஞ்சு பேருக்குள்ள பகிர்ந்தனாங்கள்.”

“ஆரது?”

“கணேஷ், ரூபன், மயில்வாகனம், தங்கராசா.”

“இப்ப எங்க அவங்கள்?”

“அவங்கள் கொழும்புக்குப் போய் ஆறு மாசத்துக்கு மேல. இத்தறுதியில வெளிநாட்டுக்கே போயிருப்பாங்கள்.”

“நீ வைச்சிருக்கிற காசில மூண்டுபேரும் என்னெண்டடா வெளிநாடு போவியள்?”

“முதல்ல நான் போயிட்டு பிறகு சிவாவையும், பிறகு ரண்டு பேருமாய் ரமேஷையும் கூப்பிடுறதாய்த் திட்டம்.”

“நீ அந்த மூண்டு லட்சத்தை சிலவழிக்கேல்ல. ஆரிட்டயோ அதையும் குடுத்து வைச்சிருக்கிறாய். அப்ப… உனக்கு இன்னொரு ஷோர்ஸ் வீடு இருக்கு.”

“இல்லை… சத்தியமாய் அதை செலவுதான் பண்ணின்னான்.”

“ம்.” லோகீசன் திரும்பி மாலியிடம் சொன்னான்: “மாலியண்ணை, நான் போய் என்னமாதிரியெண்டு பாக்கிறன். உண்மையெண்டா, ராசனை அனுப்புவன், நீங்கள் கட்டை அவிட்டு இவனை இஞ்சயே விட்டிட்டு ராசனோட பைக்கில வந்துசேருங்கோ.”

இறுதி யுத்தம் முடிந்து சிறிது காலத்துக்குள்ளே, இயக்க செயற்பாடுகளிலிருந்து முற்றாக லோகீசன் விலகிக்கொண்டான். தனக்கான ஒரு வேலையைத் தேடிக்கொண்டு சாதாரண பொதுஜனனாக மாறினான்.

2013இல் புற்றுநோய் காரணமாக மகரகம ஆஸ்பத்திரியில் கிடந்த மாலியை பார்க்கச் சென்ற இடத்தில்தான் குணாளனுக்கு நேர்ந்த முடிவு லோகீசனுக்குத் தெரிய வந்தது.

லோகீசன் துடித்துப்போனான். ஆனால் மாலியை அந்தநேரத்தில் கோபிக்கவும் முடியவில்லை. “ஏனண்ணை அப்பிடிச் செய்தனியள்?” என்று கேட்டு பெரிதும் விசனப்பட்டான்.

“அண்டைக்கு அவனை அப்பிடியே விட்டிருந்தா, எங்களுக்கொரு குடும்பமிருக்கெண்டு நினைச்சு நாங்கள் தவிக்கவேண்டி வந்திருக்கும். அப்பிடி நடைமுறையில்லையே, லோகீஸ். விஷயம் வெளிய வராம முடிக்கிறதுதான வழக்கம்.”

அப்போது சங்கவியோடு அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டு சுமார் ஒரு வருஷம். எந்தநேரத்திலும் கைகளுக்குள் வந்து விழ அந்த நிலவு தயாராக இருந்தது. அவனும் ‘தத்தெடுக்க’ தயாராகத்தானிருந்தான். ஆயினும் குணாளன் எங்கேயென்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாததில், அவளுடனான பழக்கத்துக்கு ஒரு எல்லையைக் கிழித்திருந்தான் அவன். எல்லைமீற துடிக்கிறபோதெல்லாம், ‘விடை தெரியட்டும். எல்லாம் பிறகு’ என தன்னை அவன் அடக்கினான். இந்த நிலையில்தான் குணாளன் கொலைசெய்யப்பட்டுவிட்ட செய்தி தெரிய வந்திருக்கிறது.
அதில் அவளுடனான உறவில் தனக்கான சாதக அம்சத்தைக் கருதாமல், தன்னால் விடுவிக்கப்பட்ட ஒருவன், சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, அவன் பெரிய மனச்சிக்கலுக்கு ஆளாகிப்போனான். எவன் கொல்லப்பட அவன் காரணமாக இருந்தானோ, அவனது மனைவியோடு குலவுவதென்பதை அவனால் நினைக்கவும் முடியாதிருந்தது.

மகரகமவிலிருந்து கிளிநொச்சி வந்த லோகீசனுக்கு எண்ணியபோதெல்லாம் உடம்பும் மனமும் நடுங்கத் துவங்கிவிட்டன. இரண்டு நாட்கள் அது அவனைப் படுக்கையிலும் விழுத்தியது. எழுந்து மறுபடி நடமாட ஆரம்பித்தபோது பழைய உரமும், பழைய கம்பீரமும்கொண்ட லோகீசனாய் அவன் இருக்கவேயில்லை.

மகரகமவிலிருந்து திரும்பிய பின்னால் வந்து பார்ப்பதாகச் சொன்ன லோகீசனைக் காணவில்லையென சாமியை ஒருநாள் அவனிடம் அனுப்பியிருந்தாள் சங்கவி.

தன் மனத்திலிருந்த குணாளனின் ஆதிக்கத்தை அளவுபார்க்கிறவகையில் இருள்விழவே செல்வதென்று தீர்மானித்திருந்த ஒரு சனிக்கிழமை நாளில், லோகீசன் சங்கவி வீடு போனான்.

அவனது தளும்பிய நடையில் அவனது நிலை அவளுக்குத் தெரிந்தது. அவன் கண்களிலிருந்த தாபத்தின் கோடுகளைக் கண்டவள் ஆசையில் பூத்தாள்..

மனத்தை இழுத்தபடி உடம்பும், உடம்பை இழுத்துக்கொண்டு மனமுமாய் அவளை நெருங்க எடுத்த எத்தனத்தில் இரண்டுமே தோற்றுப்போக அத்துமீறிய பிரதேசத்திலிருந்து அவன் பின்வாங்கினான். போதையோடிருந்தபோதும் தன் குற்றவுணர்விலிருந்து அவனால் மீளவே முடியவில்லை. மீட்டெடுக்க முடியாதபடி கனவுகள் அறுதியாக அழிந்த சோகத்தோடு அவன் தன் வீடு சென்றான்.

மிதிவெடிகளை அகற்றும் வெளிநாட்டு நிறுவனமொன்றில் மிதிவெடி அகற்றுவதைக் கண்காணிக்கிற வேலையில் அவன் அப்போது இருந்திருந்தான். என்றோ ஒருநாள் ஒரு மிதிவெடி கண்டெடுக்கப்படுகிறபோதோ, செயலிழக்கச் செய்யப்படுகிறபோதோ வெடித்துச் சிதற நிறைய சாத்தியமிருக்கிறது. தனக்கான ஒரு சுயதண்டனையாக அவ்வாறு நடக்க அவனுள் ஒரு விருப்பமிருந்தது. அதனால் அந்த வேலையிலிருந்து ஆபத்தின்றித் திரும்பும் ஒவ்வொரு நாளிலும், அவன் ஓர் துக்கத்தை அடைந்துகொண்டிருந்தான்.
காதலும், பாவமும் இரண்டு துருவங்களிலிருந்தும் அவனை இழுத்து முறித்தன.

உடைந்த மனத்தோடு லோகீசன் திரிந்துகொண்டிருந்த ஒருநாள் சங்கவியை அவளது வீட்டு வாசலிலே எதிர்ப்பட்டான்.

“உள்ள வாருமன்.”

“வாங்கோ....லோகீஸ்!” கார்த்திகா சிரித்தபடி அழைத்துக்கொண்டிருந்தாள்.

தவிர்க்கமுடியாத அழைப்புகளில் லோகீசன் வந்தான்.

தேநீர் குடித்து முடிய, மாமரத்தில் மொய்த்த கிளிகளைக் கலைத்தபடி சங்கவி கிணற்றடிப் பக்கமாக நகர்ந்தாள். அவன் கூட நடந்தான்.
கிணற்றுக் கட்டிலே சாய்ந்து நின்று அவனை ஏறிட்டுத் திரும்பினாள் சங்கவி. “இப்பிடிக் கேக்கிறனேயெண்டு குறைநினைக்காதயும், லோகீஸ். முந்தி இயக்கத்திலயிருந்த நேரத்தில எந்தப் டிவிஷனில இருந்தனிர்?”

“ஏன் கேக்கிறீர்?”

“இல்லை, பணிஷ்மென்ற் குடுக்கிற டிவிஷனில இருந்த ஆக்களுக்கு கொஞ்சக் காலத்தில மனப்பிரமை வந்திடுகுதாம். மனப் பிரமையெண்டா, பயித்தியமாய்த் திரியவேணுமெண்டில்லை. குடிகாறராய்… எந்தநேரமும் யோசனையோட... வெளிக் கவனம் இல்லாம... நினைக்கிறதச் செய்யமுடியாம…அந்த மாதிரி. அதுதான் கேட்டன்.”

அவளது கேள்வி நிலைகுத்தியிருந்த இடம் அவனுக்குத் தெரிந்தது. காணாமல்போயிருந்த குணாளனைவிட கொல்லப்பட்டுவிட்ட குணாளன்தான் தன்னின் சகல சாத்தியங்கள் ஊடாகவும் தோன்றி அவனை அவளிலிருந்து அடித்து விரட்டிக்கொண்டிருக்கிறானென்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதை அவனும் சொல்லிவிடமாட்டான். அப்போது அந்தக் கேள்விக்கான பதிலை அவன் வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும்.

“எனக்கு அப்ப மனப்பிரமையெண்டு நினைக்கிறிரோ?”

“ச...சாய். இப்ப அடிக்கடி குடிக்கிற மாதிரியிருக்கு, அதால கேட்டன்.”

“பணிஷ்மென்ற் டிவிஷன்ல இருக்கேல்ல.”

அவனை அவள் நம்பினாள்போலத்தான் இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் அவளது சஞ்சலம் இருந்தது. அந்த நம்பிக்கையையே அவன் அடித்துநொருக்க தீர்மானித்தான். அதன் முதல் நடவடிக்கையாகவே அங்கிருந்து அவன் திருநகருக்குச் சென்றது.

அவன் கதையை முடித்தபோது இருள் விழுந்து நிறைந்திருந்தது.

திகைப்பிலிருந்து மீண்ட சாமி லாம்பைக் கொழுத்தி மேலே கொளுவினார். சிறிதுபொழுதை மௌனத்தில் கடத்தினார். அவர் எதை, எந்தக் கோணத்தில் யோசித்தாரோ? அவரிடமிருந்து பிறந்த கேள்வி இவ்வாறாக இருந்தது. “அதுசரி, காணாமப் போறதுக்கே காரணமாயிருந்திட்டு, காணாமல்போன ஆளை தேடாமல் விடக்குடாதெண்டு அந்தப் பிள்ளையை அந்தளவு அலைக்கழிச்சிரே, லோகீஸ். பாவம், அந்தப் பிள்ளை என்ன செய்திது உமக்கு?”

“குணாளனை மாலி விட்டிட்டானெண்டுதான் நான் நம்பியிருந்தன். குணாளன் செய்த குற்றத்துக்கு, அவன் இயக்கத்தில அப்ப இல்லையெண்டாலும், பயங்கரமான தண்டனை கிடைக்கும். அதுக்குப் பயந்து ஓடியிருக்கலாமெண்டு நினைச்சன். ஒருவேளை அவன் வேற வழியில காசைப் புரட்டிக்கொண்டு வெளிநாடு போறதுக்கும் சான்ஸ் இருக்கு. இல்லாமல் ராணுவமோ, துணைக்குழுவோ அவனைப் பிடிச்சு காணாமப்போயிருந்தா, அவள்மூலமாய் அதை நிச்சயப்படுத்தலாமெண்டுதான் அவளை போ... போவெண்டு நான் கலைச்சது. அவன் இல்லாமல் போயிட்டானெண்ட ஒரு துண்டுக்காக நான் எப்பிடி காத்திருந்தனெண்டு ஆருக்குத் தெரியும்?”

“ம்… நல்ல கதைதான். அப்பிடியெண்டாலும் அதை சங்கவியிட்ட நேராய்ச் சொல்லியிருக்கலாமெல்லோ?”

ய். அவன் செய்திருக்கவேண்டியது அதுதான். ஆனால் அதைக் கேட்டு அவள் என்ன நினைப்பாளென தெரியாததால்தானே விட்டிட்டிருந்தான். அது ஏன் சாமிக்குப் புரியாமலிருக்கிறது?

அகத்தின் உறவுகளை, அதன் சிக்கல்களை மீள்விசாரணைப் படுத்துவது அவனுக்குச் சங்கடமாகவிருந்தது. ஒரு குற்றவுணர்வில் வதங்கிக்கொண்டிருந்தவன், அங்கிருந்து ஓடி கொஞ்சம் மீட்சிபெற எண்ணியிருக்கையில், எங்கே ஓடினாலும் அந்தப் பாவம் அவனைத் தொடரவே செய்யுமென அக்கா திட்டிவிட்டுப் போயிருக்கிறாள். இங்கோ, அவ்வளவு காலமாய் தன் மனத்தில் மூடிக் கிடந்த உண்மைகளையெல்லாம் திறந்து கொட்டியபோதும், அவளில் இரங்குவதையும் அவனில் இறுகுவதையும் கட்டாயம் செய்ய முன்தீர்மானம் செய்ததுபோல் எந்தவித உணர்ச்சியின் பிரதிபலிப்புமின்றி கல்லாய் இருந்துகொண்டிருக்கிறார் சாமி. உறவில் தொடுப்பை விழுத்தவல்ல, உறவையே வெட்டிவிட்டுப் போக வந்திருக்கிறவனுக்கு இவையெல்லாம் அதிகம். ஆனாலும் அவன் தெளிவுபடுத்த இன்னும் கொஞ்சம் இருந்தது.


“பரஞ்சோதியன்ரி வடமராட்சி போயிருக்கிறது தெரிஞ்சாப் பிறகும்... நல்லாய்ப் பொழுதுபட்டாப் பிறகும்... இஞ்ச நான் வந்திருக்கிறன், ஐயா. பாவத்தை வெல்லமுடியாமல் ஆசையோட துடிச்சுக்கொண்டு நிண்டிருக்கிறன். என்னால அதை வெல்லவே முடியேல்ல. நான் எனக்கே அந்நியமாகிப் போயிருந்தன். சங்கவிக்கு அந்நியமாகிறதும் அதாலதான் நடந்தது. முடிஞ்சிருந்தா அப்பவே எங்கயாச்சும் ஓடியிருப்பன்.”

“ஏலாமல் போச்சுப்போல?”

“ஏலாமத்தான் போச்சு.”

“அதென்னெண்டு ஏலும்? அவளைத்தான் நீர் அந்த முதல் பார்வையிலயே விரும்பத் துவங்கியிட்டீரே!”

“இல்லை”யெனக் கத்தியபடி லோகீசன் சாமியின் பக்கம் திரும்பினான். “விசர்க்கதை கதையாதயுங்கோ. குணாளன் காணாமல் போயிட்டானெண்டு தெரிஞ்ச பிறகுதான் நான் அவளை விரும்பத் துவங்கின்னான்”.

சாமிக்கு வீடி தேவையாயிருந்தது. கொட்டிலுக்கு எழுந்து போகிற பஞ்சியில் தவனத்தை அடக்கிக்கொண்டு சொன்னார்: “உண்மையில நீர் சங்கவியை மனசார விரும்பியிருந்தா, குணாளன் காணாமல் போனது உமக்கு நல்லவொரு வாய்ப்பாயெல்லோ இருந்திருக்கவேணும்?”
“அவன் செத்திட்டானெண்டு தெரியாததால, திரும்ப வந்திடுவானோண்டு நினைச்சன்.”

“அப்பேக்கயும் உமக்கு அதில நல்ல வாசிதான இருந்தது.”

“நீங்கள் நல்லாய் விளங்கேல்லை, ஐயா. எவன்ர சாவுக்கு காரணமாய் இருந்தனோ, அவன்ர மனிசியையே கலியாணம் செய்துகொண்டு நான் குடும்பம் நடத்தியிடேலுமா? ஒரு எல்லையை மீறி நான் அவளை நெருங்கிற ஒவ்வொரு தருணத்திலயும், அவனே நேரில முன்னால நிண்டு என்னைத் தடுக்கிறமாதிரி இருந்துகொண்டிருந்திது.”

“செத்த ஆள் முன்னை நிண்டு தடுக்கிறதெண்டது ஒரு மாயமெண்டு நீர் நினைக்கேல்லயோ?”

“அந்த மாயம் என்ர மனசுக்குள்ளயிருந்தெல்லோ வந்திது. என்னால அதை அழிக்கவே முடியேல்லை. என்னை நம்புங்கோ, ஐயா. சங்கவியிலயிருந்து எட்ட எட்டவாய்ப் போனது இதுகளாலதான். இப்ப அதுதான் என்னை முழுதுமாய் அவள்லயிருந்து விலகவும் வைச்சிருக்கு. எனக்கு நல்லாய்த் தெரியும், அவளை நான் இழந்திட்டனெண்டு. சாகுமட்டும் என்னோட வரக்கூடின இந்தத் துக்கத்தோட எங்கயோ போய் அவளைக் காணாத தூரத்தில இருக்கிறதத் தவிர எனக்கு வேற வழியில்லை. நான் போயிடுவன், ஐயா. கெதியில போயிடுவன்.”
ஒரு விசுக்குப்போல் அவனது கையசைவு கண்டு சாமி நிமிர, அவன் எந்த அசைவுமின்றி கைகள் கீழேயிருக்க உட்கார்ந்திருந்தான். ஆனால் சாமி அவன் கண்களைத் துடைத்ததைக் கடைக்கண்ணில் கண்டுவிட்டிருந்தார். அதில் அத்தனை பரிவு அவனிடத்தில் அவருக்குத் தோன்றவில்லை. அவன் சங்கவியின் மனத்தை உடைக்கும்படியான முடிவை எடுத்துவிட்டுப் போகிறவன். அவளை மீளாப் பெருந்துயரில் ஆழ்த்திவிட்டு மறையப் போகிறவன்.

லோகீசன் சாமியின் நிஷ்டை கலைத்தான். “ஐயா…!” சாமி அவன்புறம் திரும்ப சொன்னான். “ஆயுதம் எடுத்த போராளியான என்ர கையில கொலைப்பட்ட ஆக்கள் இருக்கினம். அப்பிடிச் செய்த எந்தக் கொலைக்கும் என்னிட்ட பதிலிருக்கு. மனச்சாட்சியின்ர உறுத்தலும் அதுகள்ல இல்லை. குணாளன்ர கொலையில நான் அடையிறது நரகவேதனை, ஐயா. அவன் எனக்கு ஆருமே இல்லை. இருந்தும் அப்பிடியொரு வதை என்னில. ஒரு கொலையை மிகச் சாதாரணமாய் நியாயப்படுத்திற இந்தச் சமூகத்தில இருந்துகொண்டு, ஏன் நான் இதையெல்லாம் உங்களிட்டச் சொல்லிக்கொண்டு இருக்கிறனெண்டு எனக்கே தெரியேல்ல. ஒருவேளை என்னை ஒராளாச்சும் தெரிஞ்சிருக்கவேணுமெண்டதால இப்பிடிச் செய்யிறனோ தெரியா. அப்பிடி ஒருதரை கண்டுபிடிக்கிறதிலயும் எனக்கு தோல்விதான் கிடைச்சிருக்கு. வேற நான் என்ன சொல்ல?”
மேலே அவர் ஏதாவது சொல்லக்கூடும் என்பதையும் எதிர்பார்க்காமல் எழுந்தான்.

சாமிக்குத் தெரிந்தது, அவன் மிகவும் உடைந்துபோயிருந்தது. அவர் எதுவும் சொல்லவில்லை. தானும் கூடஎழுந்தார். லாம்பைக் கழற்றி எடுத்தார். வாசல்வரை அவனோடு நடந்தார். கேற்றை திறந்துவிட, மோட்டார் சைக்கிளோடு அவன் வந்தான். அவர் லோகீசனின் தோளைத் தொட்டார். அப்போது அவரது கலை குறைந்திருந்தது.

அவன் நின்று அவரைநோக்கித் திரும்பினான்.

தான் காணாமல் அவன் விட்டுத் துடைத்த கண்ணீரை அப்போது தனக்குள்ளாய் கண்டார் சாமி. உண்மையில் அவனுக்காகவும் அவர் துக்கப்பட்டார். “நான் ஆருக்கெண்டு ஆறுதல் சொல்ல? சங்கவிக்கா? உமக்கா? எல்லாருமே பாவப்பட்ட ஜென்மங்களாயிருக்கிறம். எங்களுக்கு உண்மையில இவ்வளவு அழிவு வந்திருக்கக்கூடாது, லோகீஸ். இதையெல்லாம் பாத்து யுத்தம் எவ்வளவு கொடுமையானதெண்டு நாங்கள் நம்புவம்.”

அவன் போய்விட்டான்.

சாமி வெகுநேரமாய் அதிலேயே நின்றுகொண்டிருந்தார்.

அவர் பீடி எடுத்து புகைத்துக்கொண்டிருந்த சிறிதுநேரத்தில் சங்கவியும் பரஞ்சோதியும் கார்த்திகாவும் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வந்தனர்.

“அதுக்குள்ள வந்திட்டியள்” என்றார் சாமி.

“நாளைக்கு பள்ளிக்குடமெல்லே..” என்று சொல்லிவிட்டு அவரது கையிலிருந்த லாம்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கார்த்திகாவுடன் நடந்தாள் பரஞ்சோதி.

கேற்றைக் கொளுவிவிட்டு அவர் முன்னால் தாமதித்தாள் சங்கவி. அவளுக்கான பதிலாக அவரே ஐந்தரை அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தார். அதன்மேல் சின்ன வார்த்தைகளால் என்ன பயன் விளைந்துவிடும்?

மெல்ல அவள் சிரித்தது ஒரு துக்கத்தின் வெடிப்புப்போல் சூழ அடித்தது. “லோகேஸ் போறத கண்டன், சாமி. அதுகின்ர முகத்தைப் பாத்தோடனயே பதிலை நான் அறிஞ்சிட்டன். எங்களுக்கெண்டு எழுதியிருக்கிற வாழ்க்கையைவிட நாங்கள் எவ்வளவு குத்துக்கறணம் அடிச்சாலும், வேறமாதிரி வாழ்ந்திட ஏலாது. மூண்டு வருஷமாய் இயக்கத்தில இருந்தன். மூண்டு வருஷமா தடுப்பு முகாமில இருந்தன். லோகீசனுக்காய் காத்திருந்த இந்த மூண்டு வருஷத்தையும் அதுகள்மாதிரி ஒண்டாய் நான் எடுத்துக்கொள்ளுறன்.”

மீண்டும் சிரித்துவிட்டு அவள் நடந்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு தெளிவு இருந்தது தெரிந்தது.

‘பதினைஞ்சு வரியமில்லை, அதுக்கு மேலயும் இந்த யுத்தத்தின்ர பாதிப்பு இருக்கும்.’ யாருக்கோ முன்பொருமுறை தானே சொல்லியிருந்த வாசகங்கள் அப்போது சாமிக்கு நினைவு வந்தன.


 6

அவருக்கு வேறு மனிதர் இல்லை. சங்கவி, பரஞ்சோதி, கார்த்திகா, எதிர்வீட்டு தமயந்தியென எல்லோரிடமும் சொல்லி விடைபெற்றாகிவிட்டது. வாசலில் சங்கவியோடும் கார்த்திகாவோடும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு எட்டி கொட்டிலுக்குள் பூஸி தென்படுகிறதாவென பார்த்தார். அது இன்னும் பரணிலேயோ, வெளியிலேயோ? தூர நின்ற பரஞ்சோதியைநோக்கி கையை அசைத்துவிட்டு அதே கறுப்பு உடையோடும், தன் ஒற்றைப் பையோடும் சாமி நடக்கத் துவங்கினார். கிளிநொச்சி பஸ் நிலையத்தை அவர் வந்துசேர்ந்த சிறிது நேரத்திலே பருத்தித்துறை பஸ் வந்தது.

பஸ் பயணம் முழுக்க சாமியின் நெஞ்சு பதறிக்கொண்டிருந்தது. உள்ளே சுழித்தெழுந்துகொண்டிருந்த பல்வேறு மனவோட்டங்களின் தெறிப்பு உடம்பையே அதிர்த்தியது. பலப்பலவாகிய முகங்களின் தோற்றங்கள். அவை உறவுகளென்ற முகமூடியிட்டு அணுக்கத்தில் நின்று காட்டிய அனுசரணைகளும் துரோகங்களும் அப்போது நினைவில் ஏறி நின்றிருந்தன.

தன் பூர்வீக மண்நோக்கி அவர் திரும்பிக்கொண்டிருக்கிறார். அவர் உள்ளின் கதறல் வழியெங்கும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பருத்தித்துறை வீதியிலிருந்து கிளை பிரிந்த தம்பாசெட்டி தெருவை அடையாளம் காண சிரமமாயிருந்தது. இருந்தும் தூர நிர்ணயத்தில் நெல்லியடி தாண்டிவந்த ஒரு சந்தியில் இறங்கினார். தம்பாசெட்டி தெருவில் பழைய நினைவு எடுத்துச் சென்ற திசைவழி நடந்தார். கோயில்களும் உருமாறி நின்றிருந்தன. ‘தம்பி, அல்வாய் வடக்குக்கு…?’ என வழி கேட்டு நடையைத் தொடர்ந்தார்.

ஐம்பது வயதாகிய, அறுபது… எழுபது… எண்பது வயதாகிய என, எதிர்ப்பட்ட எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்த்தபடி நடந்தார். அந்தப் பார்வையின் விசை தாங்கமுடியாமல் புறுபுறுத்தவண்ணம் தலை தாழ்த்தி அவர்கள் கடந்து போனார்கள். சகுந்தலையின் சாயலில்கூட ஒரு பெண்ணை அவரால் காணமுடியவில்லை.
கடைசியாக தன் ஊரிருந்த இடத்தை அடைந்தபோது சாமி திடுக்கிட்டார். அவரது ஊர் அங்கே இல்லாதிருந்தது. அங்கே இருந்துகொண்டிருந்தது வேறோர் ஊர். அது எங்கிருந்தோ வந்திருக்கவில்லை. அங்கிருந்தே உருவாகி பழையதை மூடி எழுந்திருந்தது.

அந்த வீடுகளின் திண்ணையில் சரி, தெருவிலும் ஒழுங்கையிலும் சரி தெரிந்த ஒரு முகத்தை அவர் காணமுடியாதவராயிருந்தார். பழைய வாழ்முறையின் வேர்கள்கூட அங்கே இல்லாதிருந்தன. புதிய மனிதர்களைக் கொண்டதாக, அவர்களின் புதிய வாழ்முறையிலாக, புதிய சரித்திரத்தின் அங்கமாக அந்த ஊர் வேற்றுருக்கொண்டு நின்றிருந்தது.

மழை வெள்ளம் அரித்து கற்பாறைகள் மிதந்திருந்த ஒரு வழியினூடு பெருவெளியொன்றை ஞாபகக் குறிப்பில்கொண்டு நடந்து, ஒருகாலத்தில் தனது வீடிருந்த முகரியில் திரும்பினார். அங்கே அவரதாய் ஒரு காலத்திலிருந்த வீடு இருக்கவில்லை. அந்த வளவும் முந்தியதுபோல இல்லாமல் பலப்பல கூறுகளாய்க் கிடந்தது. மதில்களும் குறுக்கு வேலிகளுமாய் சிறிய சிறிய காணிகளில் நிறைய புதுவீடுகள் எழுந்து நின்றிருந்தன. ஏழறைகள், இரண்டு சமையலறைகள், இரண்டு கூடங்கள்கொண்ட பெரிய வீடு, சிறிய வீடாய் அவற்றின் பின்னால் ஒளியிழந்து கிடந்தது.
அதிலேயே நின்று மௌனமாய் சாமி அழுதார்.

வேறென்ன செய்திருக்கமுடியும்?

பின் தொடர்ந்து நடந்தார்.

ஐநூறு பரப்புக்கு மேலுள்ள பெரிய நீர்வெளி அது. மழை கால வெள்ளத்தில் முழுப் பரப்பும் நீரால் மூடுண்டிருக்கும். குளத்தின் ஓரத்தில் மாயக்கைக் கிணறு புதிய கட்டுமானத்தில் இருந்தது. சமுத்திரத்தைக் கொண்டுவந்து கொட்டினாலும், அந்த நீரையே சமுத்திரத்தில் கொண்டுபோய்க் கொட்டினாலும் தன் நீர்மட்டம் மாறுபட்டுவிடாத கிணறு அது. கிணற்றின் கிழக்காய் மரங்கள் வளர்ந்து கற்பாங்கை மறைத்த இடத்தில் மாயக்கையின் பாறைக் குகை தெரிந்தது. பின்னால் அடர் மரக் கூடலுள் நாச்சிமார் கோவில் கண்டார்.

அவர் வழிமாறி எங்கோ வந்துவிடவில்லையென்பதை குளமும், கிணறும், குகையும், கோவிலும் எண்பித்துக்கொண்டிருந்தன. கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பதற்காய் ஊர் கொண்டிருந்த கோவிலல்ல அது. காலகாலமாய் நிலைத்திருந்து வீடுகளையும், காணிகளையும், தோட்டங்களையும், நீர்நிலைகளையும் அங்குள்ள மனிதர்களோடு புரந்துகொண்டிருந்த தெய்வத்தின் கோவிலது. வேம்பும் ஆலும் மருதையும் இலந்தையும் சடை விரித்து அங்கே நின்றிருந்தன. வெயில் நுழைபறியாக் குயில் நுழை பொதும்பர்!
மாலை மங்கிக்கொண்டிருந்தது.

அவருக்கு வேறு புகல் இல்லை.

அங்கேயே அன்றிரவைத் தங்க அவர் முடிவுகொண்டார்.

அது அவரது தெய்வம் குடிகொண்டிருக்கும் தலம். அவரது நினைவுகளைக் கிண்டிக் கிண்டி காலத்தினைக் காட்டக்கூடிய சூழல். அவர் வெளியுலகைக் கண்டிருக்கவும், வெளியார் உள் காணமுடியாததுமான அமைவு கொண்டிருந்தது அந்த இடம்.

அங்கிருந்துதான் வெளியே உலவியவர்களையும், இருளும்போது கூட்டுக்குள் ஓடி அடையும் குருவிகள்போல, வீடுகளுக்குள் ஓடிக்கொண்டிருந்த மனிதர்களையும் கண்டார். இருண்டு விளக்கேற்றிய பின் எழுந்த சப்தங்கள் அரவங்களில் அவர்களது வாழ்முறையும் சாமிக்குத் தெரிந்தது.
முன்பெல்லாம் எந்த நாளிலும் சரி அக் கிராமம் இரவு பத்து மணிக்கு முன்பாக, குறிப்பாக பத்தரை மணிக்கு இலங்கை வானொலியில் இறுதி நிகழ்ச்சியான தேசியகீதம் ஒலிக்கும் முன்பாக, தூங்கப் போவதில்லை. எல்லார் வீட்டிலும் இல்லாதபோதும் அடுத்தடுத்த வீடுகளின் வானொலி ஓசை ஊர் முழுக்கவாய் ஒலிக்கும். அப்போது அந்தக் கிராமம் ஏழு மணிக்கே தூங்கப் போவதாய் இருந்தது. கள் வெறியும், களி வெறியும், பக்தி வெறியும்கொண்டு நிலவில், இருளெனில் சூழ் பிடித்து, மக்கள் நடந்துதிரிந்த அவரது கிராமமெங்கே? நிலவும், வீதி மின்சார விளக்குகளும் இருந்த நிலையிலும், இரவு விழுந்ததும் தன்னை மூடிக்கொண்டுவிட்ட அந்தக் கிராமம் எங்கே?

அது இதுவில்லை என்றே சாமி நினைத்தார்.


உடனே கேள்வியொன்று விடைத்தெழுந்தது. ‘எனது ஊருக்கு என்னானது?’

அதை கீழ் மேலாய் மாற்றிப்போட்டது யுத்தமென்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாதெனத் தோன்றியது.
அது இனரீதியாய் விழித்தெழுந்து விடுதலை வேட்கைகொண்ட இளைஞர்களின் ஆயுத பயிற்சிக்கு களமமைத்துக் கொடுத்த பூமி. தன் குறுகிய ஒழுங்கைகளாலும், புதர்களாலும், மரங்களாலும் அவர்களுக்காக இரகசியங்களின் பாதுகாப்பைச் செய்த மண். அதன் காரணமாகவே இந்திய ராணுவத்தின் காலத்திலும், இலங்கை ராணுவத்தால் தொடங்கப்பட்ட வடமராட்சி யுத்த காலத்திலும் அது நூறு நூறாய் தன் புதல்வர் புதல்வியரது கொலைக் களமாயும் அமைந்தது. மயானம் செல்லமுடியாத நெருக்கடிகளை அது எதிர்கொண்டிருந்தது. அதனால் வசதியான இடத்திலே சடலங்களை அது சுட்டுப் போகும் நிர்ப்பந்தமும் கொண்டிருந்தது.

அது யுத்தத்தில் பங்குகொண்டும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுமிருந்த பூமி. அது பல நூறு பேரை காவு கொடுத்ததுபோல் பல நூறு பேரைப் புலம் கடந்து ஓடவிட்ட மண்ணும். அதனுடைய மாற்றம் அவைககளாலும் விளைந்திருக்க முடியும். சாமி அவற்றை உணர்ந்தவர்தான். ஆனால் அந்த மாற்றம் அவ்வளவு தலைகீழானதாக இருந்ததே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் அங்கு இல்லாத அந்த முப்பத்தைந்து வருஷ காலத்தை எண்ணினால் அது ஒரு மாற்றமேயில்லை. மனிதர்களை மட்டுமில்லை, இயற்கையை வைத்துப் பார்த்தாலுமே முப்பத்தைந்து வருஷங்களென்பது எவ்வளவு பெரிய காலவெளி! யாரும் இலகுவில் உள்நுழைந்து பார்த்துவிட முடியாத தசாப்தங்களின் பெரும் காலப் பிரதேசம். அன்று ஒரு மரம் கொண்டிருந்திருக்கக்கூடிய விதை, இன்று பெருமரமாய் முதிர்ந்திருக்க முடியும். கல்லும் தேய்ந்திருக்கக்கூடிய காலவெளியல்லவா அது?

ஒரு நெடுங்காலத்தை வெளியே கரைத்துவிட்டு தன் வயதை மறந்துகொண்டு வந்திருக்கிற சாமிக்கு, அந்த புவித்தலத்தின் மாற்றம் அதிர்வைத் தந்திருக்கும்தான். பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமி, மச்சாள், மச்சான், அண்ணன் தம்பியான உறவுகளெல்லாம் அந்த முப்பத்தைந்து வருஷ காலத்தில் கிளைத்தெழுகிறபோது, காலனின் கைவீச்சில் அடிபட்டுப் போய்ச் சேர்ந்த உயிர்களையும் அவர் கணக்கிலெடுக்க வேண்டும்.
ஊர் அவையெல்லாவற்றாலும்தான் மாறியிருந்தது. அன்றாடப் பார்வை அதைக் கண்டுகொள்ளாது. கண்டுகொள்ள முடியாத பருண்மையில் அந்த மாற்றம் இருந்திருக்கும். ஆனால் முப்பத்தைந்தாண்டு வெளியில் ஒன்று இன்னொன்றாகவே தோற்றம் பெற்றிருக்கும். சாமி அந்த இன்னொன்றையே அப்போது கண்டுகொண்டிருந்தார்.

அவரது வயது என்னவாயிருக்கும்? பழைய ஆயிரத்தின் இறுதி எழுவது ஆண்டுகள் சக புத்தாயிரத்தின் முதல் பதினைந்து ஆண்டுகள் சமன் எண்பத்தைந்து வயது. வயதை மறக்கும்படியான அந்த வாழ்வை காலம் அவருக்கு அளித்திருந்தது. அந்த தவபலத்தோடு வந்து அவர் பெரியப்பா சித்தப்பாக்களைத் தேடுவதும், தன் சமவயதினரைத் தேடுவதும்கூட நியாயமில்லை. இளைய தலைமுறைகூட இறந்தும், புலம் பெயர்ந்தும், இடம்பெயர்ந்துமாய் சிதறிப் போயிருக்கிறதே! அவரது ஊர் எப்படி அப்போதும் மாறாமல் இருந்துகொண்டிருக்க முடியும்?
அப்போது அவருக்குப் புரிந்தது.

உவந்தால்தான் அது வாழ்க்கை. இல்லையேல் வெறும் உயிர்த் தரிப்பு. அலைந்துழல்வில் இருந்த வாழ்வை உவந்தே அவர் வாழ்ந்திருந்தார். தன்னந் தனியாக. தான் நினைத்தது நினைத்தபடியாக. அந்த தேசத்தில் அவர் அலையாத பிரதேசமில்லை. அவர் சந்திக்காத மொழியினம் இல்லை. தமிழும், சிங்களமும், ஆங்கிலமும், போத்துக்கீசியமும், ஆபிரிக்க மொழியும், தெலுங்கும், மலையாளமும், உருதுவும், பார்சியும், அரபியும் அவர் சொற்களாயாவது அங்கு கேட்டிருக்கிறார். இசைக்காவிட்டாலும் ஒரு பாணனாய் வாழ்ந்ததில் அவர் அடைந்த பேறு அது. எல்லோருக்கும் அவ்வாறு கிடைத்துவிடாது.

அவர் கோவிலைப் பார்த்தார்.

கோயில் பூட்டியிருந்தது. பூஜை வைக்கப்பட்டு நாள்களாகியிருக்கும். கற்பூரத் தாழியில் காற்றில் பறந்துவந்த சில சருகுகள் விழுந்துகிடந்தன. வெள்ளி பூஜைமட்டும் காணுகிற அம்மனாயிருப்பாள்.

அவர் திண்ணையில் சரிந்தார்.

வெகுநேரமாயிற்று தூக்கத்தின் கிறக்கமும் கண்களில் இறங்க.

தன் காதலின் உன்மத்தத்தில் ஜெகதாம்பிகையோடு ஓடிவந்து, ஆறுமுக மாப்பாண முதலி குடும்பத்தின் ஒரு கிளையாய் விழுதுவிட எண்ணித்தான் கதிர்காம மாப்பாணன் அங்கே வேரூன்றியது. காமத்தின் குறுக்குவழியில் சூழ்ச்சிக்குப் பலியான பரமேஸ்வர மாப்பாண முதலி, தன் தந்தைவழிச் சொத்தெல்லாம் இழந்து சிறியவொரு சூட்கேசும் ஒரு பையும்கொண்டு பெரியம்மாவின் வெள்ளைப் பூனை பின்தொடர நெடும்பயணம் புறப்பட்ட அந்த நாள் அவருக்கு ஞாபகம். காதலால் தனபாக்கியமும், காமத்தால் சகுந்தலையும் அவரை அடக்கியாண்ட படலத்தை அவர் பாம்பு தன் செட்டையினைப்போல் நினைவிலிருந்து கழற்றிவிட்டுத்தான் பயணியானார். ஆனால் பிறகு செட்டை முளைத்தது.
தேடலற்ற பயணமாக அது தொடங்கியது. இடையில் அவரது நினைப்பில் பதியாமல் சில ஆண்டுகளும் கழிந்திருந்தன. என்றோ தன்னை மறந்தவர் எங்கோ போய்க்கொண்டிருக்கையில் தான் எதற்காக அங்கே வந்தாரென்றும், அது எந்த இடமென்றுமான கேள்விகளுடன் சடுதியில் மனத்தின் பிரக்ஞை மீண்டது. அது தொடர்ந்து தேடலுடனான பயணமாக முடிந்திருக்கிறது.

அந்தக் குகையின் உள்ளில், யாரின் கண்ணும் புகமுடியாத இருளில் தனபாக்கியத்தின் கன்னித் திரை கிழித்த நாளில், காதல் அவருள் அந்த வயதிலும் பொங்கியிருந்தது. ஒரு சூழ்ச்சியில் எல்லாவற்றையும் கீழ் மேலாக்கினாள் சின்னம்மா. சகுந்தலையென ஒரு மகள் இல்லாதிருந்தால் அவளே அவனைச் சரஸித்திருப்பாளோ? அந்தளவுக்கு அந்தப் பெருஞ்சொத்தில் அவள் வெறி கொண்டிருந்தாள்.

போயிற்று. எல்லாம் போயிற்று. கொண்டிருந்த பந்தம், கும்பிட்ட தெய்வம் எல்லாமே. அக்கம்மாத் தெய்வம் மட்டும்தான் தன் நெடுங்கரத்தை நீளநீளத்துக்கும் நீட்டி அவரைத் தேடியிருக்கிறாள்.

சாமி துயிலில் விழுந்தார்.

வானம் நிறைய நட்சத்திரங்கள் மினுங்கின. புகாரற்றிருந்ததில் அவை பூமியில் வெளிச்சத்தைச் சிந்தச் செய்தன. ஒரு பெரிய வெள்ளி கிழக்கில் சுடர்விட்ட பொழுதில், ‘பாணா…! மாப்பாணா…!’ என்று மெல்லியதாய் ஒரு இசை காதில் கேட்டது. எங்கிருந்து எழுகிறது? அவரது கனவிலிருந்தா? அல்லது பிரபஞ்சத்தின் ஒரு மூலையிலிருந்தா? அல்லது மண்கிழித்து வருகிறதா? எப்படியாயினும் அது தட்டிக்கொடுக்கும் இதமாய் தூக்கத்தை இன்னும் அவரில் இறக்கவே உதவியது.

‘மாப்பாணா…!’

காதோர முணுமுணுப்புடன் மாயக் கரமொன்று அவரை குழந்தையாய்த் தழுவியது. சாமி துடித்து விழித்தார்.

உடல் உறைந்தது.

அந்த உணர்ச்சியை அவரால் இனம்காண முடியும்.

விரிகூந்தலுள்ளிருந்து தொடங்கி காதங்களையும் கடந்து அவரைத் தொட்ட அதே மாய ராக்கினியான அக்கம்மாவின் கரம்.
அக்கம்மாவென்று காலைகளில் கூவிய உடைச்சியும் அவ்வாறேதான் உணர்ந்தும், நெகிழ்ந்தும், உருகியிருப்பாளா? அவர் எண்ணினார்.
ஊருக்கில்லாவிட்டாலும் ஓரிருவருக்காவது தன்னைப் புலப்படுத்த அக்கம்மாத் தெய்வத்துக்கு சித்தம் இருந்திருக்கிறது. அப்படியானால் அவர் கண்டிராத அக்கம்மாத் தெய்வம் அவரைக் கண்டிருக்கிறாள். அவர் நினைக்காதபோதும், உணர்வில் தட்டும்விதமாய் தன் கரம் நீட்டியிருக்கிறாள்.

அந்த தெய்வ கடாட்சம் அவரில் எப்போது விழுந்திருக்கும்?

அவரால் ஒரு சம்பவத்தை நினைவுமீட்க முடியும்.

அயல் வீட்டு கற்பக ஆச்சி சின்ன மாப்பாணனுக்கு ஒருநாள் ஒரு அழகான கதை சொன்னாள்.

என்ன இதம் அந்த மடியில் கண்டானோ? வெண்ணுடை தரித்து தனியே வாழ்ந்த ஆச்சி வீடு வந்தால், வாசலோரத்தில் சுவரோடு சாய்ந்து கால்நீட்டியிருக்கும் அவளின் மடியில் சரிந்துவிடுவான் அவன். அவளும் மடியைத் தயாராக வைத்திருந்ததாயே தோன்றும், அவன் வந்து விழுந்ததும் அவள் கைபோட்டு அணைக்கும் விதம்.

அன்றைக்கும் அவ்வாறுதான். அவளருகேயிருந்த பொல்லை அப்பால் நகர்த்திவிட்டு ஆச்சியின் மடியில் படுத்தான் சின்ன பரமு.
ஆச்சிக்கு பொக்குவா

. ஆனாலும் கதைசொல்கிற வேளையில் அவளுக்கு எப்படியோ பற்கள் முளைத்துவிடும். சொல்லுகள் அறுத்துறுத்து வந்துவிழும்.
ஆச்சி சட்டை அணிவதில்லை. முந்தானையை குறுக்காகவும் கட்டமாட்டாள். அவளது சமூகத்தில் அது பழக்கமுமில்லை. மாறாடிதான் போடுவாள். மாறாடியை அவள் என்றும் கவனம்கொண்டிருப்பதில்லை. அது தன் பாட்டுக்கு தோளிலிருந்து சரிந்தும், விழுந்தும், தொங்கியுமாய் இருந்துகொண்டிருக்கும்.

மடியில் படுத்த சின்ன பரமு நிமிர்ந்து பார்க்கிறான். மாறாடி விலகிய ஆச்சியின் வலது பாச்சி அவன் முகம் முன்னே

தொங்கிக்கொண்டிருக்கிறது. அம்மாவுக்கும் அம்மாவாகும் கனதி. ஆனாலும் பால் சுரந்து சுரந்து களைத்துப்போயிருந்தது.

பாச்சி சுரந்து அமுதம் பெய்ததுபோல் ஆச்சியின் கதை விரிந்தது. பாச்சி மறைந்தது.பெருநிலம் படைத்த ஒரு ஆத்தைக்கும் அப்பனுக்கும் வீரமாப்பாணன், குமாரவேல், கந்தர் ஆகிய மகன்கள். அவர்களுக்கு ஒரே உடன்பிறப்பாய் பிறந்தாள் வள்ளிநாச்சியார்.

பெருகியிருந்த வளத்தின் ஏகபுத்திரி. குடும்பத்தின் செல்லப் பெண். ஊருக்கும்தான்.

அவள் உடையவளாய் இருந்தினால் ஊர் உடைச்சியென்று அழைத்தது.

அந்தச் செல்லம் வறுமை கண்ட இடத்திலெல்லாம் இரங்கியது.

பனையோலையில் பொத்திய கூடைகளில் நிறைத்து வைத்த நெற்களஞ்சியத்திலிருந்து உடைச்சியின் கை வாரி வாரி வழங்கியது. பெற்றவர், உடன்பிறந்தவர் எவருமே அதைக் கண்டுகொண்டதில்லை.

அவள் பக்குமடைந்த சிறிது காலத்து குள்ளேயே எழுத்தும் கணக்கும் அறிந்தோனொருவனை உடைச்சிக்கு கணவனாக்கி வைத்தார்கள் பெற்றாரும் உற்றாரும். கள் மணக்காத, புகையிலை நாறாத தன் கணவனில் வெகு பிடித்தமிருந்தது உடைச்சிக்கு. அவளுக்கான குடும்பசுகம் சொற்ப காலமே அமைய விதியிருந்ததை கோள்களின் கணிப்பு காட்டியது. அதை ஜோதிடன் அச்சத்தில் அவர்களிடம் சொல்லாதிருந்தான்.
அந்தச் சின்ன வயதில் உடைச்சியின் கணவனின்மேல் மரணம் திடீரென ஒருநாள் விழுந்தது. உடைச்சி அறிந்த கணமே ஏக்கத்தில் மயங்கி வீழ்ந்தாள்.

ஈமக் கிரியைகள் முடிந்தன. தொடர்ந்து காடாத்து, எட்டுச் செலவு எல்லாம் முடிந்தும் உடைச்சி வாய்திறந்து யாருடனும் பேசாதிருந்தாள். ஊமைபத்திப்போனது அவளது வாய். ஒருநாள் அதிகாலை படுக்கையிலிருந்த உடைச்சி அக்கம்மாவெனக் கூவினாள். ‘அக்கம்மா…! அக்கம்மா…!’
வீடும், ஊரும் கேட்டு திகைத்தது.

அவள் மாயத்தின் கைவிரித்த ஆதிக் கிழவியல்லவா?

மாய யக்கனின் உடன்பிறந்தாளென அவளை ஊரில் முதிசுகள் சில அறிந்திருந்தன. தன்னை கற்குகையுள் அவள் காவலுக்கு வைத்திருந்தாளென அவர்கள் நம்பியிருந்தனர்.

அந்த நம்பிக்கையை கதையாகச் சொல்லினர்.

அக்கம்மா அவ்வப்போது கைகளை வெளியேநீட்டி தன் பிரியத்துக்கு உரியவர்களை இரவுகளில் அழைப்பதாக அந்தக் கதை அமைந்தது.
அச்சிறு இலங்கைத் தீவு அப்படியொரு அழகை எங்கெங்கும் கொண்டிருந்தது. மத்திய மலைகள் தீவின் முலைகள்போலிருந்து கிழக்கையும் தெற்கையும் மேற்கையும் புரந்தபோது, வடக்கு ஒதுக்கப்பட்டதுபோல் வரண்டிருந்தது. வடிநீர் வழிந்துவந்து தேக்கங்களாய் ஆகியபோதும், வடக்கு பொதுவில் வறள் பிரதேசமாகவே இருந்தது கண்டு, மாயக்கா தன் விரல்களால் மண்ணிலே துளைகளிட்டாள். அவற்றிலிருந்து ஊற்று பொங்கியெழுந்த நிலைகளில் நீர் ததும்பிக்கொண்டு இருந்தது. அவை பாதாளத்தின் நீரேரியோடு தொடுப்புண்டிருந்தன. அல்வாயில், நிலாவரையில், மீசாலையிலென என்றும் வற்றா நீர் நிலைகள் உருவாகின. மகா யக்காவின் மாயக் கை அந்த அற்புதங்களை விழுத்தியதால் அந்தப் பிரதேசமே மாயக்கையாயிற்று.

மாய யக்கனின் ஆட்சி அந்நிலப் பரப்பெங்கும் ஊன்றியிருந்தபோது, பொன்னும் மணியுமாய் யக்கன் குகைக்குள் குவித்துவைத்த பெருநிதியை தன்னகப்படுத்தி, அதற்கு தானே தன்னைக் காவலுக்கு நிறுத்தினாள் மாய யக்கா. அவ்வண்ணம் அவனது அக்கிரமங்களுக்கு அவை துணை போகாது தடுத்தாள்.

மாயக் குகையுள்ளிருந்த மாயக்கா குகை விரித்து நெடுவழி கண்டு கீரிமலைத் தீர்த்தத்தோடும், நிலாவரையின் பாதாள கங்கையோடும் தொடர்பு கண்டாள். பின்னால் அவள் அந்த இடத்தை தன் ஸ்தலமாக்கினாள்.

பஞ்ச கன்னியரை அக் குகையில் பலியிட்டால் மாயக்கா வெள்ளிக் கிடாரத்தில் பொன் கொடுப்பாளென பரவிவந்த கதையை, மாயக்காவின் மேலான பழிவாங்குகைக்காக மாய யக்கன் பரவவிட்ட சூழ்ச்சியென ஊர்ப் பெரிசுகள் உடனேயே கண்டுகொண்டன.

ஊரின் அந்த அபிமானமே அவளை அக்கம்மா ஆக்கியது.

வெளியான இடத்தில் ஒளியுள்ள இடமெல்லாம் கண்டு வெண்ணுடை உடைச்சி பரவசம்கொண்டு நின்றாள்.

‘அம்மா… அம்மா’வென அவளது இதயம் கூவிக்கொண்டே இருந்தது. சூழ தெய்வங்கள் இருந்தன. ஆனால் அவளது அம்மாவான தெய்வம் எங்கும் காணாளாய் இருந்தாள்.

நீண்ட வருஷங்களின் பின் ஒருநாள் வழக்கம்போல் தோணியெடுத்து மதுரை மீனாட்சியை வணங்க கடல்கடந்த உடைச்சி, வழிபாட்டின் பின் கடைத்தெருவில் வரும்போது தெய்வாம்சமும், லட்சணமும் கொண்ட ஒரு அம்மன் சிலையைக் கண்டு வாங்கினாள்.

வீட்டிலே கொண்டுவந்து பொருத்தமான இடம் தேர்ந்து பிரதிஷ்டம் செய்தாள்.

உடைச்சியின் மனம் நிறைவடைந்தது. ஆனாலும் உள்ளுள்ளாய் ஒரு சின்னக் குறையிருந்து நாளாக ஆக வளர்ந்து வந்தது. ‘உலகு புரக்கவேண்டிய அன்னையை என் வீட்டிலேயே கொலுகொள்ள வைத்திருத்தல் முறையாகுமா? மேலும், எனக்குப் பின் யார் அன்னையின் பூஜா காரியங்களை செவ்வனே நிறைவேற்றப் போகிறார்கள்?’

உடைச்சியின் மனக்குறை தீர்க்க ஒருநாள் இரவு கனவில் தரிசனமானாள் அன்னை. கனவாகவும் நனவாகவும் தோற்ற மயக்கம் கொண்டிருந்தது அக்காட்சி. அன்னை சொன்னாள். ‘என்னை உன் வேவிலந்தை வளவிலுள்ள வேவிலந்தையின் கீழே பிரதிஷ்டை செய்து ஊருக்காய் விட்டுவிடு.’
‘வேவிலந்தை மரத்தின் கீழா?’

‘ஆம், அங்கேதான். தம்முள் இணைந்து பிணைந்து நிற்கும் வேவிலந்தையை நீ என்னவாக நினைத்திருக்கிறாய்? வேம்பாக நானிருக்கிறேன். இலந்தையாக இருப்பது சிவன். இருவரும் இணைந்த அர்த்த நாரீசுவரத் தோற்றமே வேவிலந்தை.’

‘ஆனால் அந்த இடத்தில் மூர்த்தியும், தீர்த்தமும், தலமும் இல்லையே, தாயே!’

‘சரியான ஐயம். மாலையில் போய்ப் பார். மூன்று தீபங்கள் அவ்விடத்தைச் சூழ கொழுந்துவிட்டெரிவது காண்பாய். மேற்குத் தீபம் என் இருப்பிடமாகும். கிழக்கில் எரிவது நான் நீராடும் பொய்கை. மூன்றாம் தீபம் என் மூர்த்தத்தின் மையமாகும்.’
கனவின் பிரமிப்பிலிருந்த உடைச்சி மாலையில் வேவிலந்தை வளவு சென்றபோது இருளில் எரிந்துகொண்டிருக்கும் முத் தீபங்கள் கண்டாள்.
பின்னால் அம்மன் வேவிலந்தையின் கீழ் சாஸ்திரபூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட ஊரார் பெருமகிழ்வோடு வழிபாடாற்றி வந்தனர்.
அன்னை ஊராரின் நம்பிக்கைகளோடு வேவிலந்தையின் கீழ் வாழ்ந்தாள்.

ஆச்சி கதையை முடிக்க, ‘இன்னொரு கதை சொல்லாச்சி’ என பரமு கேட்டான்.

‘நாளைக்கு.’

அப்போது மறுபடி அவனுக்கு பாச்சி தெரிந்தது, கதாசுரபி கொண்டிருந்த தாயில்.

சாமிக்கு காலவெளி கடந்தும் அந்தக் காட்சியைக் காண அப்போது முடிந்திருந்தது.

விழித்திருந்த சாமியின் கண்களில் விடியல் தெரிந்தது.

ஊர் சலனமாகிற்று.

அரவங்கள் கேட்டு, சலனங்கள் உணர்ந்து, இயக்கங்கள் கண்டுகொண்டிருக்கையில் வெய்யில் ஏறியிருந்தது.

அவர் எங்கேயும் வாழ்ந்துவிடலாம். அங்கே வாழ்வதில் சிரமமிருக்கும். சாமி அதை உணர்ந்தார்.

இரண்டு நாட்கள் இன்னும் ராணுவத்தின் கீழிருந்த ஊர்களின் எல்லைவரை பலாலி வீதியிலென்றும், காங்கேசன்துறை வீதியிலென்றும் அலைந்து இடங்கள் கண்டபிறகு சாமி செல்வச் சன்னதி கோவிலுக்கு வர இருட்டுகிற நேரமாயிருந்தது. தொண்டமானாறு கண்டார். நீர் பளபளத்து பரந்துகொண்டிருந்தது. அதன் கரையின் வெளி கண்டார். அப்பாலிருந்த கொடிக்கல்லும் கோட்டைக்காடும் எண்ணினார்.
அன்றிரவு அங்கேயே சாமி தங்கினார்.

மறுநாள் புறப்பட்டு பருத்தித்துறைக்கு சென்று அங்கிருந்து முல்லைத்தீவுக்கு பஸ் எடுத்தார். மாலையில் முள்ளியவளை பள்ளிக்கூடத்தடியை வந்தடைந்தார்.

எப்போதும் திண்ணையில் படுக்க ஒரு மூலையும், குடிக்க ஒரு வாய் கஞ்சியும் நாகி வீட்டில் அவருக்கு இருந்தது.

எவ்வளவு மாறிப்போய்விட்டது அந்த ஊர்! பரந்தன்-கிளிநொச்சி வீதியென்ன, மாங்குளம்-முல்லைத்தீவு வீதியென்ன பயணங்கள் இலகுவாய் இருந்தது மட்டுமில்லை, வீதியோரங்களில் புதுப் புது வீடுகளும் முளைத்திருந்தன. ஒரு யுத்தம் நடந்த பூமியாக அது தென்படவேயில்லை. அழிவுகளை மூடிக்கொண்டு வளர்ச்சிகள் எழுந்துகொண்டிருந்தன.

மக்களும் கால்களில் விசையேறி போயும் வந்தும்கொண்டு இருந்தார்கள்.

வேலையாய் பாதியினர். அலைச்சலில் மீதியினர்.

அவர்களது மனங்களில் ஒரு மனவுளைச்சல் எப்பொழுதும் இருந்துகொண்டு இருந்தமை தெரிந்தது சாமிக்கு. இழப்புகளின் துக்கமாய், தோல்வியின் வடுவாய், ஏமாற்றத்தின் விரக்தியாய் அது.

அந்த அவசரமும், மனவுளைச்சலுமே யுத்தம் விட்டுவைத்திருக்கும் மீதி. வடமராட்சிபோல, தென்மராட்சிபோல அந்த மாவட்டமும் விரைவில் பௌதீக அழிவுகளிலிருந்து முற்றாக மீண்டெழுந்துவிடும். ஆனால் உள் வடுக்கள் மிக நீண்ட காலத்துக்கு அங்கே நிலைத்திருக்கப் போகின்றன. அவை அவர்களின் வாழ்நிலைகளை உள்ளரித்திருந்தன. வறுமையோடும், நவீன வசதிகளின் இன்மையோடும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அப்போது பெற்றுள்ள இலௌகீக அழிவுகளில் வாழ்வாதாரமும், நவீன வசதிகளும் பெற்றிருந்தபோதும், துக்கமாகவே வாழ்க்கை இருந்துகொண்டிருந்தது. யுத்தம் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்கிளப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உள்ளுரங்களைத் தின்று தீர்த்துவிட்டிருந்தது. குடாநாட்டில் தொடங்கிய யுத்தம் கிழக்கில் பரவி வன்னியில் முடிந்திருந்தது. அதனால் அது நிறையப் பாதிக்கப்பட்ட மண்ணாயிருந்தது. அதிலிருந்து அது மீண்டெழ காலம் பிடிக்கும்.
அப்படி அவர்களுக்கு நேர்ந்திருக்கக்கூடாது.

எப்படி நேர்ந்தது அது?

அவர்கள் பொழுதுள்ள வேளைகளிலெல்லாம் அதையே யோசித்தார்கள். பதில் கிடைக்காத இடத்தில் விஸ்வரூபமாய் நின்றிருந்தது, ‘இனி?’ என்ற கேள்வி.

சாமியால் அவர்களது முகங்களிலிருந்து அதை உணர முடிந்திருந்தது.


 7
கூடத்தில் வழக்கமான தன் இடத்தில் அமர்ந்திருந்தாள் குசுமவதி. அவளது உடலும் மனதும் சோர்ந்து கிடந்தன. அன்று காலையிலே எழுந்து குசினிக் காரியங்களை முடித்துவிட்டு வந்து, பந்துலவின் படத்திலிருந்த பழைய சரிகை மாலையைக் கழற்றி புதிய மாலைபோட்டு ஊதுபத்தி கொழுத்திவைத்தாள். பிறகு அதிலே வந்து அமர்ந்தவள்தான். நினைவுகள் சுழித்தெழுந்து எங்கெங்கும் அலைந்துகொண்டிராமல், வழக்கமாக அந்த நாளில் நிலைகொள்ளும் ஒரே புள்ளியில் நின்றிருந்தன.

முதல்நாள் மாலையில் வந்திருந்த சுது சொல்லிக்கொண்டு காலையில் சியானி வேலைக்குப் போகும்போதே புறப்பட்டுப் போயிருந்தான். அன்றைய தினத்தில் அவளிருந்த நிலையை அவனால் புரிய முடிந்திருக்கும். ‘நான் கிளம்புகிறேன், குசுமவதி. நீ சொன்னவைகளை நான் யோசிப்பேன்’ என்றான் போகையில். அவள், ‘சரி’ என்றுமட்டும் சொல்லி தலையாட்டினாள்.

காற்றில் அலைக்கழியா புகை இழையங்கள் மேலே ஏறி கரைந்துகொண்டு இருந்தன. பார்த்துக்கொண்டே இருந்தாள். அரநாயக்கவில் வாழ முடியாமல் வவுனியா ஓடிவந்து, பதின்மூன்று ஆண்டுகள் கழிந்துபோயிருக்கின்றன. குடும்பத்தைப் பொறுத்த கடமைகளை ஒழுங்காக ஆற்றி, பந்துலவின் குழந்தைகளை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கிவிட்டிருக்கிறாள். அவனது ஆன்மா நிச்சயம் சாந்திப்பட்டிருக்குமென அவள் நம்பினாள். அந்த ஆண்டின் அவனது நினைவு நாளில் அவள் கொள்ளும் பெரிய ஆறுதல் அது.

அன்றைக்கு மார்கழி 28. பந்துல மறைந்து அன்றோடு பதினைந்து வருஷங்கள் முடிந்து பதினாறு துவங்குகிறது. வாழ்க்கையெனும் உயர்ந்த தருவின் எத்தனை கணுக்களை காலம் விழுங்கிவிட்டது! ஆனால் அவளது அவன்பற்றிய நினைவுகளோ விழுங்கப்படாமல் உயிர்த்திருக்கின்றன.
பதினைந்து வருஷங்களை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தபோதும், மீதியான பொழுதுகளில் அவள் பந்துலவோடு தன் காதலை வாழ்ந்துகொண்டுதான் இருந்தாள். காமம்தான் எச்சமாய்ப் போய்க் கிடந்தது.

அன்றைய நாளில், 2000 மார்கழி 28ல், பந்துல பெட்டிக்குள் கிடந்த அந்தக் காட்சி அவளுக்குத் தோற்றமாகிக்கொண்டு இருந்தது. கோடிச் சாறம், கோடிச் சேர்ட், அதே பழைய தாடி. ஏதோ குறைவுபடுவதுபோல் தோன்றியது. யோசித்து, அவனது தொப்பியை தலையில் வைக்கவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். ‘அது உன்னிடம் இருந்தாலும் ஞாபகம்தானே? நீயே வைத்திரு’ என உக்குவின் அக்கா ஜெயஶ்ரீ கூற, தொப்பியை வைத்துக்கொண்டு இறுதி ஊர்வலத்தை அனுப்பி வைத்தாள்.

அவனுக்கு அணுக்கமாயிருந்தவர்களில் பலபேர் காணாமல் போயிருந்தனர். பலர் கொலைசெய்யப்பட்டிருந்தனர். மீதியானவர்களில் பலபேர் தம்மை அடையாளங்காட்ட பயந்து வராதிருந்தார்கள். பத்து பதினைந்து பேரோடு அந்த ஊர்வலம் புறப்பட்டுப் போனது. கூடச் சென்றவள், குழந்தைகள் இரண்டும் அவளை இழுத்துக் கதற, வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். பெரும் புரட்சியைக் கனவு கண்டு, வழி திறம்பியதில் எதுவித அடைதலுமின்றி தோல்வியோடும், துரோகத்தின் நகப் பதிப்போடும் மரித்துப்போன பந்துலவின் உடல் மாலைக்குள் அடக்கமானது.

அந்த நாளில் மட்டும்தான் பந்துல தொப்பியின்றி சவப் பெட்டிக்குள் கிடந்த அந்த இறுதிக் காட்சி அவளுக்கு நினைவாகிறது. அப்போது அன்றைக்கே இறந்ததுபோன்ற திடுக்காட்டம் கொள்கிறாள். மற்றைய நாட்களில் அவள் அவ்வாறு உணர்வதில்லை. வழக்கம்போல் பெரமுனவின் வேலைகளுக்காக வெளியூர் போயோ, தலைமறைவாக அலைந்துகொண்டோ அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே அவள் பாவித்துக்கொள்கிறாள். வாழ்ந்த காலத்தின் பதிவுகள் அவ்வாறு எண்ண வலு இலகுவில் இசைந்துகொடுக்கின்றன.
நகரம் அடங்கிய இரவுகளிலும் உறங்காது, மஞ்சணத்தியின் கிளைகளிலிருந்த குருவிகளின் கிளுகிளுப்பைக் கேட்டுக்கொண்டிருக்கையில், கைகளுக்குள் அவனில்லாத தவனத்தை குசுமவதி அடைகிறாள்தான். அவன் உடனில்லாததில் தாபம் எழுகிறதுதான். அது ஊனுருக்கும் நினைவுத் தவமாய் பின்னால் தொடருகிறது.

1987இலிருந்து 2000இன் மார்கழிவரை சற்றொப்ப பதின்மூன்று பதின்னான்கு வருஷங்கள் அவர்களது தாம்பத்திய வாழ்க்கை நீடித்திருந்தாலும், மூன்று நான்கு வருஷங்களுக்கு மேல் சேர்ந்திருக்க அவனுக்கும் அவளுக்கும் விதியிருக்கவில்லை. அவளது தவனம் தாபமாகிற புள்ளி அது.
அரசியல் வேலைகளுக்காக பந்துல எப்போதும் அலைபவனாயிருந்தான். எண்பத்தொன்பதில் அவனது தலைவனும் நண்பனுமான ரோகணவின் படுகொலையின் பின், பெருங்காலத்தை தலைமறைவிலே கழித்தவன் அவன். அந்த மூன்று நான்கு வருஷங்களின் வாழ்க்கையே அவளுக்கு யயானி, சியானி இருவரையும் கொடுத்து அவளது அருந்தல் வாழ்க்கையையும் சாசுவதமாக்கியது.

பதின்மூன்று வருஷங்களில் மூன்று நான்கு வருஷ வாழ்க்கை எவரிலும்தான் திருப்தியை எவ்வளவுக்கு நிறைத்திருக்க முடியும்? ஆனால் அவளது காதல் அந்த இடைவெளிகளைப் பற்றிப்படர்ந்து மூடியது.

உள்ளிருந்த தாபத்தின் தவனக் குரல் அவ்வப்போதேனும் எழுந்தது. அது அவளது கண்களை எப்போதும் கசிந்து மினுமினுக்க வைத்துக்கொண்டிருந்தது. ‘நீயும் அவ்வுணர்ச்சியும் \ பிடிமானமின்றி \ அடைய ஒண்ணாது \ பிடிக்க ஒண்ணாது \ காற்றாய் மிதந்து போயின’ என்ற கமலா விஜேரத்னவின் கவிதை வரிகளை அப்போது அவளிதயம் ஓங்கிக் கூவுகிறது.

அதுவே அனலை அவிந்தடங்க வைக்கிறது.

தவனம் காமத்தின் தவிப்பாகி, மறுபடி காதலான தவனமாகிறது. பந்துலவின் மனைவியாக அவள் தன்னைத் தப்பவைத்த விந்தை அவ்வண்ணமே நிகழ்ந்தது.

பாதையில் பிரசவ வலியெடுத்து தவித்தபோது, தேவதாரு மரங்கள் வளைந்து கூடலாய்க் கவிந்து நிற்க மாயாதேவி சித்தார்த்தவைப் பிரசவித்ததுபோல், கவிந்து கூடலாய் மூடுண்டிருந்த அவளதூர்த் திட்டு நிலத்தில் ஒரு முன்னிரவிலேதான் அவள் யயானியைக் கருவேற்றாள். சமாந்தரமற்றதெனினும் அந்த நினைப்பு எப்போதும் அவளை புனிதத்தில் வைத்திருந்தது. அதையே தன் காதலறமாகக் கொண்டு, பாதைகளின் பல்வேறு கடினங்களையும் அவள் தாண்டிவந்த கதையைக் கொண்டது அவளது கைம்மையின் பதினைந்து வருஷங்கள்.

அவன் தன்னோடிருப்பதானது அவள் இலகுவாய்க் கொள்ளும் பாவனை.

ஒருநாள் நீண்ட பிரிவின் பின் சேர்ந்திருந்த ஓரிரவில் பந்துல அவளுக்கொரு கதை சொன்னான்.

இரவின் வெகுநேரம் கடந்திருந்தது அவன் கதை சொன்ன பொழுதில்.

அவன் அன்று ஒரு கடுந் தேவனாய் இருந்திருந்தான். மீண்டும் மீண்டும் காதலைக் கேட்டான். மெய்யாகவே அவள் களைத்திருந்தாள். இருந்தும் கதை கேட்டாள்.

‘கதை கேட்ட பின் தூங்கிவிடுவாயா, குசும?’

குசுமவதி, ‘நான் விழித்திருப்பேன்’ என்று சிரித்தாள்.

அவன் கதைசொல்லத் தொடங்கினான்.

அவனது கையணைப்புள் தன்னை மறைத்திருந்து கதை கேட்டாள் அவள்.

அப்ரடைற்றுக்கும் ஹெர்மிஸ்சுக்கும் மகனாகப் பிறந்தவன் ஹெர்மாபுரடிடஸ். புனித இடா மலையின் குகைகளில் நீரர மகளிரால் வளர்க்கப்பட்டவன். பதினைந்து வயதளவில் பேரழகனாகிவிடும் ஹெர்மாபுரோடிடஸ், சூழலின் கனதியில் வெறுப்பேறி ஒருநாள் குகையைவிட்டு வெளியேறுகிறான்.

துருக்கிய பெருவெளியில் ஊர்கள், நகரங்களைத் தாண்டி அவன் நடந்துகொண்டே இருக்கிறான். வழியிலே அவனொரு குளத்தைக் காண்கிறான். தெளிந்த நீர், சூழவிருந்த பலவகை மரங்களின் சோலையெழில் அவனை அந்த இதத்துள் நனைய மனத்தை உந்துகின்றன. அவன் குளத்தை நெருங்குகின்றான்.

குளத்தில் மறைந்திருந்த சல்மாகியென்ற நன்னீர் நிலைகளையெல்லாம் காக்கும் நீரணங்குகளில் ஒருத்தி, அவனது அழகில் மோகம்கொண்டு அவனை காதலுக்கு அழைக்கிறாள். சல்மாகியைவிட இளையவனாகவும், பயணியாகவுமிருந்த ஹெர்மாபுரடிடஸ் அவளை மறுக்கிறான். என்னில் ஒரு முத்தத்தையாவது பதித்துப் போவென்ற நீரணங்கின் இறுதி இச்சையும் அவனால் மறுதலிக்கப்படுகிறது. அவள் தாளாத சோகத்தோடு சிறிதுநேரத்தில் மறைந்துபோகிறாள்.

சூழலில் யாருமில்லையெனக் கருதுபவன் நிர்வாணியாய் குளத்திலிறங்கி நீராடத் துவங்க, மறைந்திருந்த சல்மாகி திடீரென குளத்தில் பாய்ந்து அவனைத் தன் நிர்வாணத்தால் தழுவிக்கொள்கிறாள்.

ஹெர்மாபுரடிடஸ் அவளை விலக்க வலுவாகத் தெண்டிக்கிறான். காமத்தின் வேட்கை அதிகரிக்கப்பெற்ற சல்மாகி, அப்போதும் அவனைத் தழுவியிருந்தபடியே, அவன் என்றும் தன்னிலிருந்து பிரிந்து போய்விட முடியாத வரத்தை கடவுளிடம் யாசிக்கிறாள்.
கடவுள் அந்த வரத்தினை அளிக்கிறார்.

ஹெர்மாபுரடிடஸ்சும் சல்மாகியும் ஆணாயும் பெண்ணாயும் ஆண்பெண்ணாயும் உயிருடன் உறைவை அடைகிறார்கள்.
‘அதுபோலத்தான் நீயும் நானும் ஆகியிருக்கிறோம், குசும. பகலில் குடும்பத்தை நடத்துபவளாய் நீ ஆணாயும், நான் பெண்ணாயும். இரவில் அதை நடத்துகிற ஆணாய் நானிருக்கிறேன். பெண்ணாய் நீயிருக்கிறாய். ஸ்திதிகள் மாறிக்கொண்டிருக்கிறோம். ஆணாய் பெண்ணாய் நிலைபெறாத இந்த இணைவு இனிது அல்லவா?’

‘கதை தொடங்கியதும், நடந்ததும் வேறு பாதை. எனினும், அது முடிந்த விதத்தில் நமது காதல் இருக்கிறது. நீயின்றி, நானின்றி... நாம்தானே இருக்கிறோம்’ என்று அன்று கூறியிருந்தாள் குசுமவதி.

ஆம், பற்றிப் படர்ந்து இருவர் ஒருவரான கதை அது. காதலின் மூர்க்கம் விளைத்த ஒற்றைப் பரிமாணம். அவன் அப்போது இல்லாமல் போயிருக்கிறான். ஆனால் அவள் அவனில் இன்னும் பற்றிப் படர்ந்து ஏறியபடி இருந்துகொண்டிருக்கிறாள்.

குசுமவதியின் கண்களில் நீர் திரண்டது.

அவளுக்கு ஒரு ஆறுதலாய் சியானி வளர்ந்துகொண்டிருக்கிறாள். தோற்றத்திலும், குணாம்சத்திலும் எல்லாவற்றிலுமாக. அவள் தனது அம்மா அனுலபோல இருக்கிறாளென்று குசுமவதியே முன்பு எண்ணியிருக்கிறாள். கொஞ்சம் தடிப்பாய், கொஞ்சம் குள்ளமாய், எப்போதும் கலகலத்துக்கொண்டிருப்பதாய், எதையும் பதறாமல் செய்யத் தெரியாமலாய் இருந்தமை அவ்வாறு எண்ண ஏதுவாயிருந்தது. அப்போது, குறிப்பாக அன்றைக்கு, அவள் காண்கிறாள் சியானி தனது அம்மம்மா போலில்லை, தன் தந்தைபோல வளர்ந்துகொண்டு இருக்கிறாளென்று.
எப்படியோ அவளில் குழந்தையிலிருந்து இல்லாத ஒரு நிதானம் அப்போது வந்திருந்தது. அளவாகப் பேசவும் ஆரம்பித்திருந்தாள். எதையும் ஒரு முன்னொழுங்கில் பதறாமல் செய்யப் பழகியிருந்தாள். அன்று காலை வேலைக்கு புறப்படும் முன்னர் தந்தையின் படத்துக்கு முன்னால் நின்று அஞ்சலி செலுத்தியபோது, அவள் உயர்ந்துவிட்டதையும் கண்டிருந்தாள். சுதுகூட சொல்லியிருந்தான், சியானி தன் தந்தை பந்துலவைப்போலவே வளர்ந்து வருவதாக. உனக்கு இனி குறையில்லையென்றும் சொன்னான்.

வாழ்க்கையை இனி அவள் அச்சப்படத் தேவையில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தந்தையின் இறுதிச் சடங்குக்கு அரநாயக்க சென்று திரும்பிய வேளையில், அம்மா அனுல கேட்டிருந்தாள்: ‘மல்லி கல்யாணமாகிவிட்டான். கொழும்புக்கு வரச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறான். நான் என்ன செய்யட்டும், குசும?’

‘யோசித்து செய்யுங்கோ, அம்மா. உங்களது எல்லாப் பிள்ளைகளும் கல்யாணமாகி, வேறுவேறு இடத்தில் ஒதுங்கியிருந்தாலும், உங்களுக்கு சோறு போடக்கூடிய அளவுக்காயினும் நல்லாகவே இருக்கிறார்கள். நீங்களேன் அதை இப்போதே யோசிக்கவேண்டும்?’

தன்னால் இயலாமல் வருகிறபோது அதை யோசிப்பதாக அம்மாவும் சொன்னாள்.

‘ஒருவேளை நானே சிலகாலத்தின் பின் இங்கே வந்துவிடவும்கூடும்.’

‘அது இன்னும் நல்லது’ என்றாள் அனுல.

அம்மாவுக்கு சரியாகத்தான் சொல்லியிருந்தாள் குசுமவதி. அவளது பிள்ளைகள் எல்லாருமே ஸ்திரமான ஒரு நிலையில்தான் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அரநாயக்கவுக்கு சமீபத்தில் ஹெட்டிமுல்லவில் இருக்கிற அக்காமார்கூட.

யயானி அப்போது கொழும்பு புறநகர் ஒன்றிலே கமத்தொழில் அலுவலராக அரச உத்தியோகத்தில் இருந்தாள். போன சித்திரையிலேதான் வேலை கிடைத்திருந்தது. சியானி ஓஎல் முடித்துவிட்டு தையல் மெஷின் கம்பெனி ஒன்றிலே வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறாள். குசுமவதிக்கும் பணி நிரந்தரம் கிடைத்திருக்கிறது. எல்லாம் ஒரு ஒழுங்கில் போய்க்கொண்டிருக்கிற திருப்தியின் வலயத்துள் அப்போது அவள் இருந்திருந்தாள்.

பெரிய ஆசைகளும் அவளுக்கு இருந்திருக்கவில்லை. எல்லாம் குடும்பத்தைப்பற்றிய சின்னச் சின்ன தேவைகளையே ஆசைப்பட்டாள். அவை அடையப்பெற்றிருக்கின்றன. நல்ல நண்பர்களும் அவளுக்கு சுது மல்வான, சரத் முனசிங்க, உக்கு பண்டார என. கூட ரூபிபோன்ற நல்ல அயலவளும்.

காலை வேலை முடிந்து வந்தால் அல்லது மாலை வேலைக்குப் போவதன் முன்னால் பெரும்பாலும் அவளுக்கு வீட்டிலே தனிமைதான். ஆனாலும் ரூபி இருக்கிறவரை அந்த தனிமையை அவள் உணரவே முடிந்ததில்லை. பேச்சுத் துணைக்கு, இட்டல் இடைஞ்சலுக்கு, ஆபத்து அந்தரத்துக்கு எல்லாவற்றிற்கும் அவள் ஓடிவந்தாள். குசுமவதியும் அதுபோலத்தான். அயல் வீட்டினராயிருந்து பிரிக்க முடியா உறவு வட்டத்துக்குள் அவர்கள் வந்திருந்தார்கள்.

அடுத்த வீட்டிலே எழுந்த சந்தடியைக்கொண்டு ரூபி சொல்லியிருந்தபடி அவளது அம்மாவும், தங்கையும் வந்துவிட்டார்களென தெரிந்தாள் குசுமவதி. ‘கொஞ்சம் பொறுத்து போகவேண்டும். சுதுவும் உக்குவும்கூட அவளைப் பார்க்க பிரியப்பட்டிருந்தார்கள். சுதுவுக்கு அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஒருவேளை இன்றோ நாளையோ உக்கு வந்தால் அவனுக்கு பார்த்துப் பேச முடியுமாயிருக்கும்.’

சுது முதல்நாள் மாலையில் வந்திருந்தான். இரவு நெடுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளில் வாசிக்கிற, தொலைக்காட்சிச் செய்திகளில் கேட்கிற விஷயங்களெல்லாம் அவளைத் தொல்லைப்படுத்தவே செய்கின்றன. யயானியும் அங்கிருக்கும்வரை அவ்வாறுதான் உணர்ந்திருந்தாள். எல்லாம் ஒற்றைப் பொய்யை வெவ்வேறு விதங்களில் சொல்லவும், வியாக்யானம் செய்யவுமான அரசியலாகவே இருந்ததை அவர்கள் தெரிந்திருந்தனர். அதனாலேயே அவளுக்கும், உக்குவுக்கும், சுதுவுக்கும் நடைமுறை அரசியலில் ஆர்வம் பெரிதாக விடுபட்டுப் போயிருந்தது.

தமிழ்ச் சண்டைபற்றித்தான் அவளும் சுதுவும் நிறையப் பேசினார்கள்.

இன்னொரு தமிழ்ச் சண்டைக்கு இனி வரலாற்றில் இடமில்லையென்று சுது திட்டவட்டமாய்ச் சொன்னான். ‘லங்காவுக்கு வெளியில் நிறைய தமிழர்கள், ஐந்து லட்சம் வரையில், இருக்கிறார்கள். இது ஒரு பலமேயில்லை, குசுமவதி. அவர்கள் இங்கே பலமடைந்திருக்கவேண்டும். புலம் பெயர்ந்த தேசத்தில் உள்ளவர்களின் குரல் எதுவும் செய்துவிடாது. அங்கேயுள்ள சில பேர் முன்னிலை பெற உதவலாம், அவ்வளவுதான் அதன் சிறப்பு’ என சுது சொன்னபோது குசுமவதி தன் கருத்தைப் பகிர்ந்தாள்.

‘இன்னொரு வகையிலும் அது பலஹீனம். ஊரிலுள்ளவர்களின் மனத்தை அது அங்கே போக துடிக்கவைத்துக்கொண்டு இருக்கும்.’
‘மெய்தான். அதுதானே நடந்துகொண்டிருக்கிறது. நூறு நூறாக இங்கே சிறீலங்காவிலிருந்தே மோட்டார் வள்ளத்தில் அவுஸ்திரேலியா நோக்கி நிறையப் பேர் போகிறார்கள். இடையிலோ கரையிலோ பிடிபட்டு பலபேர் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். பலபேரை அங்கேயே முகாம்களில் தடுத்துவைத்திருக்கிறார்கள். எல்லாம் அதை நிஜமென்றுதானே சொல்லுகின்றன?’

‘மேலும்… அங்கேயுள்ள தங்கள் உறவினர்களின் வாழ்க்கைபோல் இங்கேயுள்ளவர்களை வாழவும் அது ஏங்கவைத்துக்கொண்டிருக்கும்.’
‘அது அவர்களை அரசியல்ரீதியாக போராடவும் வைக்காது. விட்டுக்கொடுப்புக்கள், சமசரங்கள், பேரங்கள், காட்டிக்கொடுப்புகளாக அவர்களது அரசியல் சோரம் போகும். தமிழ் அரசியல் இன்றைய நிலையில் தந்திரோபாயமாகச் செயல்படுகிறதா அல்லது சோரம் போய்விட்டதா என்று தெரியவில்லை. இது ஒரு முக்கியமான தருணம். அவர்கள் முன்பே செய்திருக்கவேண்டிய அரசியல் போராட்டத்தை இப்போது செய்யப்போகிறார்கள். அதை தந்திரோபாயங்களில் செய்ய அவர்களுக்கு திண்ணமிருக்கவேண்டும். கோபமான அரசியல் போராட்டமும் தோல்வியைக் கொடுக்கும்.’

‘அதுசரி, நேர்மையாக வாழுகிறவர்கள் இல்லையென்கிறாயா, சுது?’

‘அவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பார்கள். அவர்களே இங்கிருந்து கஷ்ரத்தில் உழல்பவராய் இருப்பார்கள். தங்கள் அரசியலில் தாக்கம் செய்ய போதுமான வலுவற்றவர்களாயிருப்பார்கள். அப்போது தம் மண்ணையும், மண்ணின் வளங்களையும் அவர்களால் காப்பாற்ற முடியாது போகும். நமது மண் போகிறதே என்ற கூச்சலும் சர்வதேச பார்வையாளர்கள் இருக்கிறவரைதான் சாத்தியம்.’

‘போர்க்குற்ற விசாரணைகூட நடக்காமல் போகலாம்.’

‘இல்லை. அது நடக்கும். இங்கே சிறீலங்காவில் நடக்கும். லங்கா மனிதர்களால் நடக்கும். என்ன நடக்கிறதென தெரியாமல் நடந்து முடியும். இது ஜோஸியமில்லை, குசுமவதி. கடந்த கால வரலாறு. இல்லாவிட்டால் எல்லா தீமைகளும் அவர்கள்மேல் விழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது. ஒரு தேசிய இனமாகக்கூட இல்லாமல் அவர்கள் அழிந்துபோவார்கள்.’

தன் மன ஆவேசத்தில் மறுபடி இருமினான் சுது.

மாலையில் ஆஸ்மா இழுக்க, மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டுதான் அங்கே வந்திருந்தான். அவசரமாய் சுடுதண்ணீர் தரும்படி வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து ஆறினான். பின்னர் ஏதோ ஆயுர்வேத சூரணமொன்றை கிண்ணமெடுத்து கலக்கிக் குடித்தான். இரண்டாயிரத்து ஒன்பதின் பின்னால் அவனது ஓட்டம் நின்றிருந்தாலும், அலைச்சல் குறையாதிருந்ததை குசுமவதி அறிவாள். கொஞ்சம் ஆசுவாசம் அடைந்ததும் குசுமவதி கேட்டிருந்தாள். ‘நீ ஊருக்குப் போனாலென்ன, சுது? இனிமேல் உன்னால் இந்த அலைச்சல்களும், வெய்யில் பனி மழைகளும் தாங்க இயலாது. அங்கே யாரும் உனக்கு இருப்பார்கள்தானே? உன் தங்கைக்கு மணமாகிவிட்டாலும் அது ஒரு வசதியல்லவா அங்கே உனக்கு? அங்கேயே போய்விடு, சுது. ஆஸ்மா ஒன்றும் பயங்கரமான வியாதியில்லை இப்போது. நிறைய இங்கிலிஷ் மருந்துகள் வந்திருக்கின்றன. நீ ஓய்வாக இருந்து நாட்டு வைத்தியம் செய்தால்கூட கொஞ்சக் காலத்திலே குணமாகிவிடும். நீ ஊருக்குப் போ.’
‘பார்க்கலாம்’ என்று சிரித்தான்.

பார்த்துக்கொண்டேதான் இருப்பான். அவனுக்கு போக விருப்பமில்லையென்று அவளுக்குத் தெரியும். அவனுக்கு அங்கே ஒரு சிக்கல் இருக்கிறது. ஊரிலே தமயந்திக்கு என்ன நடந்ததென்று அவனுக்குத் தெரியாது. அவள் இன்னமும் அங்கே இருந்துகொண்டிருந்தால், அவளை அவனால் மேலும் உதாசீனப்படுத்திவிட முடியாது. ஊருக்கு வெளியே இருந்ததால் அவளது நினைவு ஓரத்தில் விழுந்து கிடந்தது. அங்கே போனால் அது மறுபடி அவனில் தொற்றிக்கொண்டுவிடும். ஒரு புத்த பிக்குவாய் அவளை திரஸ்கரிக்க இருந்த திடம், அவ்வாறு இல்லாதபோது அவனால் இயலாமல் போய்விடும். தமயந்தி அந்தளவில் வேறு திருமணம் செய்திருந்தால்... அது சுதுவை மிகப் பெரிய அளவில் பாதிக்கும். அவனால் அங்கே வாழ்ந்துவிட முடியாத நிலை உருவாகும். அவன் அலைச்சலிலேயே இருக்க, மரணமற்றிருக்க சபிக்கப்பட்ட அஸ்வத்தாமபோல், ஆகிவிடுவான்.

துக்கமாய் எண்ணினாள் குசுமவதி.

அப்போது வேலியோரத்திலிருந்து ரூபியின் குரல் எழுந்தது. “அம்மாவும் தங்கச்சியும் வந்துவிட்டினம், அன்ரி’.

சந்திக்கவேண்டுமெனச் சொல்லியிருந்தாள். அவளது தங்கையை இரண்டொரு தடவைகள் கண்டது மட்டும்தான். சிரித்ததுமுண்டு. பேசியதில்லை. கணவனைக் காணாமல் போன பெண். கல்யாணத்தின் முன் போராளியாயும் இருந்தவள். அவளது துக்கம் பெரிதென்பதை குசுமவதியால் உணரமுடியும். இறக்கக் கொடுப்பதைவிட காணாமலாகுவது மிகப்பெரும் கொடுமை. நீண்ட காலம் ஆகிவிட்டதுதான். அதனாலென்ன? துக்கங்கள் முற்றாய் அழிந்துவிடுவதில்லை. அவளுக்கு நாலு வார்த்தைகள் ஆறுதலாகச் சொல்லவேண்டும்போல் அப்போதும் இருந்தது குசுமவதிக்கு.

குசுமவதி ரூபி வீடு சென்றபோது பரஞ்சோதி வழக்கம்போல் கலகலப்பாய் அவளை வரவேற்கவில்லை. ‘வாருங்கோ’ என்றுவிட்டு பேசாமலிருந்தாள். கூட வந்திருந்த மகளின் முகமும் கறுத்துப்போய் எட்டவாய் இருந்துகொண்டிருந்தாள். குடும்பப் பிரச்னையாயிருக்கும் என்று அனுமானித்த குசுமவதி, தான் காலையில் அல்லது வேலையால் மாலையில் திரும்பிய பிறகு வருவதாகச் சொல்லிக்கொண்டு, சிறிதுநேரத்தில் திரும்பினாள்.

குசுமவதி போனதும், “வெளியாக்கள் வந்திருக்கிற நேரத்திலயாச்சும் உந்த மூஞ்சையளை கொஞ்சம் சிரிச்சமாதிரி வைச்சிருங்கோவனப்பா” என்று எரிந்து விழுந்தாள் சாந்தரூபி.

வெவ்வேறு திசைகளைப் பார்த்தபடி சங்கவியும் பரஞ்சோதியும் அமர்ந்திருந்தனர். தாய்க்குப் பக்கத்தில் இருந்து இருவரையும், பிறகு ரூபியையும் பார்த்தபடி இருந்தாள் கார்த்திகா. சாந்தரூபியின் பிள்ளைகள் இரண்டும் ஆட்டம் பாட்டம் குறைந்து கார்த்திகாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி திரிந்துகொண்டிருந்தன.

“உப்பிடி ரண்டு பேரும் கொளுவலோட இருக்கேக்க ஏன் இஞ்ச வெளிக்கிட்டு வந்தனியள்? அப்பிடி என்ன நடந்தது உங்களுக்குள்ள? நீங்களாவது சொல்லுங்கோவன், அம்மா.”

ரூபியின் நச்சரிப்பில் பரஞ்சோதி வாய் திறந்தாள். “என்னத்தை ரூபி சொல்லுறது? ஒல்லியுடம்பெண்டுதான் இருந்தன். அதுக்குள்ள இந்தளவு கொழுப்பு இருக்கெண்டு எனக்குத் தெரியாமப்போச்சு.”

கொழுப்பு பிடித்து என்னென்னவோ காரியங்கள் செய்யலாம். கொழுப்பு பிடித்து சங்கவி என்ன செய்தாளென்று பரஞ்சோதி சொல்லவில்லை. சொல்ல முடியாமல் விட்டாளென்றுதான் சாந்தரூபிக்கு கொள்ளவேண்டி இருந்தது.

விஷயத்தின் எங்கோ ஒரு இடம் தொடப்பட்டிருந்தபோதும், கொண்டிருந்த அளவுக்குமேல் சங்கவியின் முகம் கடுமை ஏறாதிருந்ததை பரஞ்சோதி கவனித்தாள். உண்மையில் தான் எண்ணியபடி இல்லாமல், தானாக ஒரு நிலைமையை கற்பனை பண்ணுகிறாளோ என்றும் யோசித்தாள்.
தேநீரைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, “தேத்தண்ணி ஆறப் போகுது. எடுத்துக் குடியுங்கோ. கார்த்திகா, அவை என்னெண்டான்ன செய்யட்டும், நீ எடுத்துக் குடி. குடிச்சிட்டு, அண்ணையும் அக்காவும் பாத்துக்கொண்டிருக்கினம், போய் அவையளோட கதைச்சுக்கொண்டிரு” என்றாள் சாந்தரூபி.

சங்கவி தேநீரை எடுத்துக் குடித்தாள். கொஞ்சம் மனம் நிதானப்படுவதை உணர்ந்தாள். அம்மாவின் பக்கம் திரும்பினாள். இன்னும் அவள் காலையின் இறுக்கமும் துக்கமும் தளர்ந்ததாய்க் காணவில்லை. அவளை அதற்குமேலும் வருத்த சங்கவிக்கு விருப்பமில்லை. பிள்ளைமையில் நனைந்த உணர்வுகள் மேனி முழுக்க வியாபித்தன. அவள் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது. அம்மா பாவம்தான்!

பஸ்ஸிலே வரும்போதும் அவள் முகத்தை மறுபுறம் திருப்பியிருந்து அவ்வப்போது அழுதுகொண்டிருந்தாள். யாரும் காணாதிருக்க கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தாள். அவளது உருக்கமான கோலமே சங்கவியை வறட்டி எடுத்தது.

முதல்நாள் இரவில் தொடங்கி, காலையில் மறுதலித்து, அப்போதுவரை தொடர்ந்திருக்கும் அச் சூழ்நிலைமைக்கு காரணமாயமைந்த அந்தச் சம்வாதத்தை சங்கவி அப்போது நினைத்துப் பார்த்தாள். பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறையாகவிருந்தது. முதல்நாள் மதியத்தில், கார்த்திகாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சங்கவி வெளியே கிளம்பினாள். காசு எதுவும் கேட்காமலே போனதும், கார்த்திகாவை உடனழைத்துப் போகாததும் பரஞ்சோதியின் நெற்றியைச் சுருங்க வைத்தன. நிலா வீட்டுக்குத்தானே போகிறாள், வரட்டும் கேட்கலாமென நினைத்து பேசாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

இரவு ஒன்பது மணியாகியும் சங்கவி திரும்பவில்லை. பரஞ்சோதிக்கு பரபரப்பாகிப் போனது. திண்ணையில் அமர்ந்திருந்தவள் எழுந்து படலைக்கும் முற்றத்துக்குமாய் அலைந்துகொண்டிருந்தாள். ஆறுதல் வார்த்தையொன்று சொல்ல ஒருவரில்லை. சாமிகூட இல்லை. சாமி இல்லாத வெறுமையை அப்போது முதன்முதலாக உணர்ந்தாள் பரஞ்சோதி.

சிறிதுநேரத்தில் வாசலில் மோட்டார் சைக்கிள் இரைச்சல் கேட்டது. சங்கவியாய் இருக்கலாமென பார்த்துக்கொண்டிருக்க, படலை வெகுநேரமாகியும் திறபடவில்லை. பரஞ்சோதி வாசலைநோக்கி நடந்தாள். அவள் படலையை அணுக சங்கவி அவசரமாக படலையைத் திறந்துகொண்டு வந்தாள்.

மோட்டார் சைக்கிள் போய்விட்டது.

போறது யாரென்று பரஞ்சோதி கேட்க, ஒன்றும் சொல்லாமலே. ‘வாருங்கோம்மா’ என்றுவிட்டு சங்கவி வீட்டுக்கு நடந்தாள்.
பரஞ்சோதியின் முகம் தொங்கிப்போயிருந்தது.

சாப்பிடுகிற நேரம்வரைக்கும் பெரிதாக அவர்களுக்குள் கதைபேச்சு இருக்கவில்லை. படுக்கப் போகிறபோது சங்கவி கேட்டாள், ‘நாளைக்கு வவுனியா போற விஷயம் என்னமாதிரி, அம்மா? அக்காவீட்டை காலமை போறம்தான?’ என்று.

அவர்களுக்கு அடுத்த நாள் வெள்ளிக் கிழமை காலையில் போகிற திட்டம் இருந்தது. அதற்கு பரஞ்சோதி, ‘போகத்தான் வேணும். ஆனா… காசு...? அரசரத்தினம் இருந்தாலாவது கேட்டுப் பாத்திருப்பன்’ என்றாள்.

‘என்னிட்ட காசிருக்கு. மூண்டு பேரும் போட்டு வரக் காணும்.’

‘ஆரிட்ட வாங்கின்னி, நிலாவிட்டயோ?’

‘இல்லை.’

‘பின்ன ஆரிட்ட?’

‘ஆரிட்டயோ.’

‘ஆரிட்டயோ எண்டிறதும் ஒரு மறுமொழியே? ஆளச் சொல்லன்.’

‘ஏன் கேக்கிறியள்?

‘சும்மாதான் கேக்கிறன், சொல்லு.’

‘ஒராளிட்ட வாங்கினனெண்டு சொன்னா பேசாம விடுங்கோவன். ஆர் எவரெண்டு ஏன் பிச்சுப் புடுங்கிக் கேக்கிறியள்?’
‘சொல்லு, சங்கவி.’

‘உங்களுக்கு கல்மடுவில இருக்கிற அரசரத்தினம் மாதிரி, வட்டக்கச்சியில எனக்கொரு ராசரத்தினம் இருக்கெண்டு வையுங்கோவன்.’

மேலே பரஞ்சோதியிடமிருந்து ஒரு வார்த்தை பிறக்கவில்லை. அவளது முகம் அப்படியே கறுத்துப் போனது.

சங்கவி படுத்துவிட்டாள்.
காலையிலெழுந்தபோது தாய் அடிவளவில் அந்த மழைத் தூறலுக்குள் நின்றபடி நிலத்தைச் சாறிக்கொண்டிருந்ததை சங்கவி கண்டாள். அந்த இடத்தில் முந்நூறு மிளகாய்க் கன்றுகளாவது அந்தமுறைக்கு வைக்கவேண்டுமென்று அவள் சொல்லிக்கொண்டிருந்தவள்.

சங்கவி எழுந்துவிட்டது தெரிந்ததும், பரஞ்சோதி வீட்டுக்கு வந்தாள். ‘சொல்லு, சங்கவி, நேற்று காசு ஆரிட்ட வாங்கின்னி?’

‘சொல்லாட்டி விடமாட்டியள்போல. வேற ஆரிட்ட நான் வாங்கிறது? ராசரத்தினத்திட்டத்தான்.’

‘அதார் ராசரத்தினம்?’

‘என்னம்மா இது, வட்டக்கச்சி ராசரத்தினத்தைத் தெரியாதே? நீங்கள் கண்டிருக்கிறியள், அம்மா, மறந்து போனியள்போல’ என்றுவிட்டு கிணற்றடிக்குப் போய்விட்டாள்.

திரும்பிவந்து அவள் வெளிக்கிட ஆரம்பித்தாள்.

பரஞ்சோதி விறைத்தவளாய் திண்ணையில் அமர்ந்திருந்தாள். கார்த்திகா சுற்றிச் சுற்றி வந்து அவளது முகத்தைப் பார்ப்பதிலிருந்து அவள் அழுகிறாளென்பதை சங்கவி அனுமானித்துக்கொண்டாள்.

கார்த்திகாவை வெளிக்கிட்டதும் தேநீர் போட்டு எடுத்துவந்தாள் சங்கவி. ‘ஏனம்மா, நீங்கள் வெளிக்கிடேல்லயே? மழை வரப்போற மாதிரிக் கிடக்கு. நேரத்தோட வெளிக்கிட்டா நல்லது.’

பரஞ்சோதி முகம் கழுவிவந்தாள். சட்டை அணிந்தாள். சேலை கட்டினாள். தலையை வாரி முடிந்தாள். எங்கே அம்மாவின் அந்த உபாத்தியாயினிக் கோலம்?

பஸ்ஸிலேகூட ஒரு வார்த்தை அவள் சங்கவியோடு பேசவில்லை.

அம்மாவை அழவைக்கக்கூடாதென்றுதான் எப்போதும் சங்கவி எண்ணுகிறாள். அவள் சங்கவியைப் புரிந்துகொள்வாளா சொன்னாலும்? அந்தத் திணறல் சாந்தரூபி வீடு வந்த பிறகும் அவளிடம் இருந்துகொண்டிருந்தது.

“என்ன நடந்ததெண்டு சொல்லாமல் ரண்டு பேரும் உப்பிடியிருந்தா நானென்ன செய்யிறது? சொன்னாத்தான எதையெண்டான்ன செய்ய?” சாந்தரூபி திரும்பவும் தொடங்கினாள்.

சிறிதுநேரம் மௌனமாயிருந்த பரஞ்சோதிக்கு ரூபியை சாந்திப் படுத்த எதையாவது சொல்லவேணும்போல இருந்தது. “அதொண்டுமில்லை, ரூபி. நீ ஒண்டையும் யோசிச்சு குழம்பாத. எங்களுக்க அப்பப்ப வாறதுதான? நான் கதைச்சுக் கொள்ளுறன், நீ விடு.”

அதற்குமேல் நிலைமை சுமுகமாகிவிட்டதுபோல் தென்பட்டது. “தயவுசெய்து, திரும்பி நான் வரேக்கயும் உப்பிடி இராதயுங்கோ.” சாந்தரூபி கடைக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு வெளியே போனாள். பிள்ளைகள் மூன்றும் கூடிச் சென்றன.

கூரைத் தாழ்வாரத்தின் தகரத்தில் சிலுநீர் சலசலவென அவ்வப்போது உதிர்ந்தது.

எங்கிருந்தோ பறந்து வந்த சில காகங்கள் மாமரத்திலமர்ந்து சிறகை உதறி சுதாரித்தன.

ஒரு புத்தபிக்கு வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.

பரஞ்சோதி அழைக்க சங்கவி கிட்டவந்தாள். கையை அன்போடு பற்றினாள். மயிலிறகால்போல் மெதுவாகத் தடவினாள். சங்கவியின் மேலெல்லாம் புளகித்தது. தான் பிறந்த அந்தக் கணத்திலும் தன்னைத் தூக்கியெடுத்த தாய் அவ்வாறுதானே பரிவோடு தடவியிருப்பாள்?
“சொல்லு, சங்கவி, நேற்று ஆரிட்டப் போய் காசு வாங்கின்னி?”

சங்கவி அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் நீர் மினுங்கிக்கொண்டு இருந்தது. சங்கவியால் அதற்குமேல் தாங்கமுடியவில்லை. கண்ணீர் பொலபொலக்க குலுங்கி அழுதாள். “கோவிக்காதயுங்கோ, அம்மா. காசு நான் ஆரிட்டயும் வாங்கேல்ல. சாமி போகேக்க கார்த்திகாவிட்ட தந்த காசுதான் அது.’

‘அவரிட்ட ஏன் வாங்கின்னி? அந்தாள் பாவம்…’

‘நான் வேண்டாமெண்டுதான் சொன்னன். அவர் கேக்கேல்ல, பிள்ளைக்கு எதாச்சும் வாங்கிக் குடுவெண்டு வில்லங்கமாய்த் தந்திட்டுப் போட்டார்.”

பரஞ்சோதி கண்களைத் துடைத்தாள். “அப்ப என்னத்துக்கு அந்தமாதிரிச் சொன்னனி?”

“வாயில என்னமாதிரியோ வந்திட்டுது.”

“நீதான் கடைசிப் பிள்ளையெண்டாலும் உனக்கும் தெரியும், உங்களையெல்லாம் நான் தனியனாயிருந்து எவ்வளவு கஷ்ரப்பட்டு வளத்தனெண்டு…”

“நீங்களொண்டும் சொல்லவேண்டாம், அம்மா. எல்லாம் எனக்குத் தெரியும்” என்று அவளது வாயை தன் கரம்கொண்டு மூடினாள் சங்கவி.
அவள் அப்போதும் பரிவோடு சங்கவியின் கரத்தை தடவிக்கொண்டே இருந்தாள். அந்த ஆறுதல் என்றும் வேண்டியிருந்ததுபோல் சங்கவியும் கரத்தை இழுக்காமலே இருந்தாள்.

வாழ்க்கை விழுத்தும் வளையங்களுள் தடுக்கி விழுந்துவிடாமல் கரையேறுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது? போரடித்த நிலத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்வதிலும் எவ்வளவு அவலம் சூழ்ந்துவிடுகிறது?

அப்போது சங்கவி, பரஞ்சோதி இருவரிலும் அந்த நினைப்பே உருண்டுகொண்டு இருந்தது.


8
காலையில் நிலாவின் முகம் ஒளிர்ந்திருக்கவில்லை. கையில் நாடியைப் பொறுத்தி யோசனையோடு மேசையில் அமர்ந்திருந்தாள். யாருடைய தொலைபேசி அழைப்பையோ எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதுபோல அம்மம்மாவுக்குத் தோன்றியது. எழுதுகிற நேரத்தில் நிலா அவ்வாறிருந்ததை சிலபோது அவர் கண்டிருக்கிறார். அப்போது எதற்காக அவ்வாறு இருக்கிறாளென்று அவரால் அனுமானிக்க முடியாதிருந்தது. யோசனையோடேயே அப்பால் நகர்ந்தார்.

கஜந்தன் கொழும்பு வந்து சேர்ந்துவிட்டனென்றும், அன்றோ மறுநாளோ வீட்டுக்கு வருகிறானென்றும் நிலாவுக்கு தாயார் போன் செய்திருந்தாள். வட்டக்கச்சிக்கு அவன் வருவானென்று அவளுக்குத் தெரியும். அடுத்த வெள்ளிக்கிழமை புறப்படுவதாக இங்கிலாந்திலிருந்தே போன் செய்தவன். ‘எங்கயும் ஓடியிடாத’ என்றும் சொல்லியிருந்தான்.

எவ்வளவு வசதிகளைக் கொண்டிருந்தபோதும் செல்பேசியில் யாருக்கும் ஒழிந்துவிட முடியாத ஒரு பெரிய வசதியீனம் இருந்ததை, அவனுக்கு ஒழிய முடியாததில் அப்போது நினைத்தாள் நிலா.

கஜந்தன் ஏன் அவளைச் சந்திக்க வருகிறான்? அவளுக்கு ஊகமுண்டு. அதுவே அவனது நோக்கமெனில், அந்தச் சந்திப்புக்கே அவசியமில்லையென்று அவள் கருதினாள். போனிலேகூட அதைப் பேசலாம். அந்த விஷயத்தை போனிலே பேசுவதில், உணர்ச்சிகளை நேரில் எதிர்கொள்ளாமல் தவிர்ந்துவிட ஒரு வசதியும் இருந்தது. அவளுக்கு அந்த அவதி அவசியமில்லை. எந்த நிலைமையை எதிர்கொள்ளவும் தயாராக, எதுவித நியாயங்களாலும், ஆசைகளாலும் இளக்க முடியாததாக அவனுக்கான பதில் அவளிடத்தில் இறுகிக் கிடந்திருந்தது.
அவன் யாரோவாக இல்லையென்பதால் எதுபற்றியும் அவனோடு அவள் பேசலாம். ஆனால் அவனது நோக்கம் அதுவேயெனில், மறுசிந்தனையின்றி அந்தப் பதிலை அவனிடத்தில் தெரிவிதுவிடுவதென்று அவள் திண்ணப்பட்டாள்.

அவள் தன்னாலும், தன் நினைவுகளாலும் கனத்துக் கிடப்பவள்.

அவளோடு களத்தில் நின்ற பல போராளிகள் திருமணமாகிக்கொண்டு கடைசி யுத்தத்திலிருந்து தப்பினார்கள். சங்கவி, நீலகேசி, மலர் என பலர் அவ்வாறு போனவர்கள். கடைசிவரை களத்திலிருந்து காலை இழந்திருந்தாலும் அவர்களுள் நின்றுகொண்டிருப்பவள் அவளாகவே இருந்தாள்.
மலர்பற்றி அண்மையில்தான் அறிந்தாள். போன வாரத்தில் ஒருநாள் சுதந்திரபுரம் போய் மலரைச் சந்தித்தாள்.

இரண்டு குழந்தைகள் அவளுக்கு. றம்பைக்குளம் புனர் வாழ்வு முகாமிலிருந்து இரண்டு வருஷங்களுக்கு முன் விடுதலையாகி வந்த நாளிலிருந்து படுக்கையாகவே கிடக்கும் தன் கணவனைக் காட்டினாள். அங்கஹீனம் ஆகாமலே ஒரு அசைவிறுக்கம்!

‘மருந்தெடுக்கேல்லயோ, மலர்?’

‘ஆஸ்பத்திரியில காட்டி எடுத்ததுதான். கொஞ்சமும் சுகம் வரேல்லை.’

‘அதென்னெண்டு சுகம் வாறது?’ என்று குடிசைக்குள் கிடந்தபடி சொன்னான் மலரின் கணவன். ‘விஷ ஊசியெதோ போட்டிட்டாங்கள்போல. தொற்றுநோய்த் தடுப்புக்கெண்டு, வெளியில வாறதுக்கு சரியாய் ரண்டு கிழமைக்கு முன்னால, அங்க முகாமில வச்சு ஒரு ஊசி போட்டாங்கள். அண்டையிலயிருந்து துவங்கினது. முதல்ல தஞ்சக்கேடாயிருந்திது. பிறகு நடக்கேலாமல் வந்திது. இஞ்ச வந்தோடன பாயில விழுத்தியிட்டுது. ஆரிட்டச் சொல்ல… ம்?’

சொல்லிவிட்டு அவன் பலஹீனத்தில் விட்ட இரைத்த மூச்சு வெளியில் கேட்டது.

‘ரசாயனக் குண்டு போட்டாங்களெல்லோ? அந்த நேரத்தில இவரும் அங்கதான் நிண்டவர். அதால வந்த தாக்கமாயிருக்குமெண்டும் சொல்லுகினம்’ என்ற மலர் மேலும் சொன்னாள்: ‘எங்களுக்குத்தான் வாயில்லை. நீயெண்டான்ன இதுகளை வெளியில சொல்லலாமெல்லே?’
அந்த விண்ணப்பம் அவள் தன் நிலையில் நின்றுகொண்டிருப்பதன் அடையாளம்.

ஆயினும் ஒரு அங்கஹீனத்தின் வலியுடன் இருப்பவள் நிலா. அது மெய்யை மட்டுமில்லை, அவளின் மனத்தையும் பலஹீனப்படுத்தியிருக்கிறது. தன்னம்பிக்கையைத் தொலைக்கப் பண்ணியிருக்கிறது.

பள்ளிக் காலத்தில் படிப்பைவிட விளையாட்டிலே அவளுக்கு மிகுந்த திறமை இருந்தது. ஓடுதல், பாய்தல், வலைப்பந்தாட்டங்களில் வெகுவாகச் சோபித்தவள். காலை இழந்த பின் ஏற்பட்ட தனிமைகளில் அவள் வெட்டியெடுக்கப்பட்ட அந்த பாதிக் காலையே யோசித்திருந்தாள். அந்தக் கால் தந்த உரத்தையும், செயற்பாடுகளையும் எண்ணியே காலத்தைக் கழித்துக்கொண்டு இருந்தாள். அந்தக் காலிலேயே உந்தியெழும்பி பதினெட்டரை அடி தூரத்தை நீளத்தில் பாய்ந்திருக்கிறாள். எவ்வளவு உறுதியும் வனப்பும் நீட்டமும் கொண்டனவாய் இருந்தன அவளது கால்கள்! அவற்றில் முழங்கால்களுக்கு கீழே சின்மயிரும் பூத்திருந்தது. அதன் அழகே தனியானதாக இருந்தது. அப்படியான காலில் ஒன்றுதான் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. இடுப்புக்கு கீழே அப்போது அவள் அழகே இல்லை. இடுப்புக்கு மேலேயும், அதனால், அவள் முன்பிருந்த அழகியாய் இல்லை. பிறர் சூழ நின்றபோது சிரிக்க முடிந்த அவள், தனிமையில் அழுவதையே தடுக்க முடியாமலிருந்தாள்.

அது எதுவுமே இல்லையென்று அவளால் தன்னைத் தானே ஏமாற்ற முடியவில்லை. அதனால் அவள் முடங்கிவிடமாட்டாள் என்பது எவ்வளவு நிஜமோ, அந்தளவு நிஜம் அவள் முன்பிருந்த அளவுக்கு தன்னை வலிதானவளாய் உணரவில்லை என்பதும். அது எங்கோ ஓரிடத்தில் அவளது சகல வன்மைகளையும் அடித்து நொறுங்கப் பண்ணியிருக்கிறது. ஒரு பலஹீனத்தை அந்தப் புள்ளியில் அவள் இணைத்துக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து அவளுக்கொரு பொய்க் கால் கிடைத்தது. ‘தேவையெண்டா இன்னொரு கால் வாங்கியிடலாம்’ என்று சொன்னார் அவளது சித்தப்பா. ‘அடுத்த கால் போனாப் பிறகு பாப்பம்’ என்று அதற்கு விரக்தியோடு பதில் சொன்னாள் நிலா. சித்தப்பா அவளோடு பேச்சைக் குறைத்தது அதன் பிறகுதான்.

அவளுக்கெதற்கு இன்னொரு கால்? தீபச்செல்வனின் கவிதையொன்றில்போல ‘இந்தக் கால் என்ஜிஓ தந்தது \ இன்னொரு கால் வாங்கினால் \ மாறி மாறிப் போடலாம்’ என அவளால் எண்ணமுடியாது. அந்த ஆசை ஆகக்கூடிய அவலம் கொண்டதென்பதை அவள் உணர்ந்தவள். அதை வாசித்த இரண்டு இரவுகளில் அவள் அழுதுகொண்டே கிடந்தாள்.

யுத்தத்தில் அகப்பட்ட அனைவரது வாழ்க்கையும் ஆறாத் துயரிலேயே கிடக்கிறது. பொருத்தமற்ற கால் கிடைத்து, பொரித்த இடத்தில் மறுபடி புண்ணாக்கி அவதிகொண்டவர்கள் இருக்கிறார்கள். அதனால் சிலருக்கு முழங்காலிலிருந்து பெருந்தொடைப் பொருத்தோடு மறுபடி கால் கழற்றப்பட்டிருந்தது. அவளைக் கடிக்காதவரையில் அந்தக் கால் அவளுக்குப் போதும்.

பொருத்தமான ஒரு கால் கிடைத்த பிறவியொன்று, அந்த மகிழ்ச்சியில் இருந்துகொண்டு, தனக்கு இன்னொரு கால் கிடைத்தாலென்று எண்ணுவது ஆசையாகத் தோன்றவில்லை, பொய்க்காலின் பலனை இன்னும் கொஞ்சம் அனுபவித்துவிட எழுந்த துடிப்பாகத் தெரிந்தது. அது அப்போதும் கால் இல்லாதிருப்பதின் துயரமே. உலகில் எங்கேயும் அவலமிருக்கலாம். இந்த அவலத்துக்கு நிகரானதுதான் உலகில் எங்கேயும் இருக்கவில்லை.

அவளால் அதை உணர முடிந்தது.

ஒரு பொய்க் கால் கிடைத்தபோது, இழந்த சிலவற்றை மீட்டெடுக்க அவளால் முடிந்ததே தவிர, நெஞ்சுறுதியை மீட்டுத்தர அதனால் முடியவில்லையே. அந்த இடத்தில் அது முற்றாகத் தோற்றிருந்தது.

காலைக் கடனைக் கழிக்கிற நேரத்து அவஸ்தையை எந்த வார்த்தையால் வெளிப்படுத்துவது? காலைக் கடன் கழிக்க பயப்படுகிறதாய் அது முடிந்திருக்கிறது. அந்தப் பயத்தினால் காலையில் எழும்பாமலே படுக்கையில் மனது சுணங்கிக் கிடக்கிறது. அவள் ஒரு பெரியதொரு வாழ்வின் பகுதியை அதனால் இழந்திருக்கிறாள்.

பொய்க் கால் ஒரு மாற்று. அது எப்போதும் இழப்பினையே சொல்லிக்கொண்டிருக்கிறது.

அந்த வலியை ஒருபோதும் கஜந்தன் உணரப்போவதில்லை. அதனால் துணையின்றி தனியே செல்லக்கூடிய வழியொன்று அவளுக்கு வேண்டும். அப்பா தந்த தமிழிருக்கிறது. அவளுக்கு எழுத்தும் வந்தது. அது ஏதாவது வழியைக் காட்டுகிறதாவென இனிமேல்தான் அறியவிருக்கிறாள்.
அவை எல்லாவற்றையும் கஜந்தனுக்கு அவள் புரியவைக்கவேண்டும். வரட்டும். எந்த நேரத்திலும் வரட்டுக்கும். அவனுக்கான பதில் அவளிடம் தயாராக இருக்கிறது.

அம்மம்மா கேட்டார், “ ஏன் நிஷா, எழும்பின நேரத்திலயிருந்து என்னமோமாதிரி இருக்கிறாய்?” என்று.

அம்மம்மாவுக்குச் சொல்லலாம். அம்மாவைவிட புரிதல் அவரிடம் அதிகம். “கஜன் வாறமெண்டிருக்கிறான்.”“ம்… நானும் அறிஞ்சன்.”

“ஏன் வாறானெண்டு தெரியேல்ல.”
“உன்னோடதான் எதோ தனியாக் கதைக்க வாறானாம். வித்தியா நேற்று சொன்னா.”

“ம். என்ன கதைக்க வாறானெண்டு வெளியாய் ஒருதரும் சொல்லேல்ல. ஆனா எனக்கு ஒரு ஊகமிருக்கு, அம்மம்மா. அதாலதான் கொஞ்சம் பயமாய்க் கிடக்கு.”

“உனக்கெண்டு ஒரு எண்ணமிருக்கெல்லோ, அதைச் சொல்லு.”

“அதைத்தான் சொல்லுவன். எண்டாலும் எப்பிடிச் சொல்லுறதெண்டுதான்…”

“லண்டன்லயிருந்து வாறதால யோசிக்கிறியோ…?” அம்மம்மா சிரித்தார்.

“அதுக்கில்லை, அம்மம்மா. அவன் சரியான நல்லவன்.”

“அப்ப.. நீ யோசிக்கத்தான் வேணும்.”

அம்மம்மா அப்படித்தான் சொல்வதும், செய்வதும். சொல்லிவிட்டு அப்பால் போய்விட்டார்.

திடீரென அன்றைக்கு மதியத்துக்கு மேல் வருவதாக சங்கவி சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது நிலாவுக்கு. அன்றைக்கு தன்னிடம் வரும் முக்கியமான ஒரு சிநேகிதியை அழைத்து வருவதாகவும் சொல்லியிருந்தாள்.

ஆவலோடு நிலா நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தாள்.

மாலையில் சங்கவி தன் ஆச்சரியத்தோடு வந்து சேர்ந்தாள்.

கேசீ…!” கண்டதும் நிலா கூவிவிட்டாள். பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தும் அடையாளம் மறக்கவில்லை. சந்திரிகாவை நீலகேசியென்ற இயக்கப் பெயரிலேயே நினைவுகொண்டிருந்தாள் நிலா.

அந்தச் சத்தத்தில் அம்மம்மா வந்து எட்டிப்பார்த்துவிட்டு போனார்.

இருவரையும் உள்ளே அழைத்து நிலா உட்காரவைத்தாள். நலங்கள் விசாரிப்பான பின், வாழிடங்களும் நிலைமைகளும் பற்றிய உசாவலானது. பிறகு சங்கவிக்கும் சந்திரிகாவுக்குள்ளும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது எனக் கேட்டாள்.

“சங்கவிதான் முதல்ல போனெடுத்தா. பேரைக் கேட்டோடனை என்னால நம்பவே ஏலாமப் போச்சு” என்றாள் சந்திரிகா. அவளது உடம்பு மொத்தமுமே அப்போது சந்தோஷத்தில் விரிந்திருந்தது.

“சந்திரியின்ர நம்பரை எனக்குத் தந்தது எங்கட சாமிதான். சந்திரிகாவின்ர அம்மம்மாவைப்பற்றின கதை வரேக்க, சாமி உடன அவ பேத்தியைத் தெரியுமெண்டார். தொடுப்புக்கு வழி கிடைச்சிது.” தான் சந்திரிகாவைத் தொடர்புகொண்ட விதத்தை சங்கவி கூறினாள்.
“சாமிஐயா வந்திட்டாரா?”

“ஒரு உண்மையைச் சொல்லவேணுமெண்டு வந்தார் ஒருநாள். பிறகு தம்பலகாமம் போப்போறதாய்ச் சொல்லியிட்டு போட்டார்.”
“என்ன உண்மையைச் சொன்னார்?”

“குணாளன் இனி எண்டைக்கும் வரமாட்டானெண்ட உண்மையை.”

சங்கவி சிரிப்பதையே நிலா, நீலகேசி இருவரும் சிறிதுநேரம் பார்த்தபடியிருந்தனர்.

அன்று மழைத் தூறல் அடங்கியிருந்தது. வானம் நீலமாய், ஓரிரண்டு வெண்மேகங்கள் அசைந்து போக தெளிவாய் இருந்தது.

தெளிந்துவந்த நிலா தான் இன்னொரு விருந்தினரை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதை ஒருபோது அவர்களுக்குச் சொன்னாள்.

“லண்டன்லயிருந்து வாறார்.” “எதுவோ கேக்க வாறாரெண்டு முந்தி சொன்னியே…?” சங்கவியின் கேள்விக்கு, “அவர்தான்” என்று பதிலளித்தாள் நிலா. பிறகு, “அதுசரி, நீ லோகீசோட கதைச்சிட்டியோ? பதில் கிடைச்சிட்டுதோ?” என்று சங்கவியைக் கேட்டாள்.

சங்கவியின் அத்தனை முகக் களையும் ஒரு கணத்தில் வரண்டது. பதில் என்னவாயிருக்குமென்பதை நிலா உணர்ந்தாள். அவளுக்கு அப்போது அவள் படித்த யாரோவின் கவிதையொன்று ஞாபகமாயிற்று. ‘எல்லாம் இறுதியில் பழகிப் போய்விடும்.’ ஏமாற்றங்களும் துயரங்களும் இறுதியில் பழகியே போய்விடுகின்றன.

ஒரு முயற்சியில் தன்னைத் தெளிவித்துக்கொண்டாள் சங்கவி. சிரிக்க முயன்றாள். “கிடைச்சிட்டுது, நிலா. லோகீசின்ர பதில் எனக்கும், என்ர பதில் லோகீசுக்கும்.”

நிலா புரியாமல் அவளைப் பார்த்தாள். “குணாளன்ர உண்மை லோகீசுக்குத் தெரியுமோ?”

“சாமிக்குத் தெரியிறதுக்கு முந்தியே லோகீசுக்கு அது தெரியும். போறதெல்லாமே போகட்டும். இழப்பும் தோல்வியும்தான எப்பவும் எனக்கு கிடைச்சு வந்திருக்கு? எல்லாம் பழகிப் போச்சு, நிலா. இதில துக்கப்பட இனி இதில ஒண்டுமில்லை. நாங்கள் எதிர்பார்க்காத புறத்தில ஒரு வாழ்க்கையிருக்கு. அதுகும் எங்கட வாழ்க்கைதான் எண்டது கனபேருக்குத் தெரியிறேல்ல. அந்த வாழ்க்கை என்னெண்டதை இப்ப நான் கண்டிட்டன்.”

நிலா சொன்னாள்: “அதில்லை, லோகீசுக்கு உன்ர பதிலெண்டு எதோ சொன்னியே…”

“ஆர் இல்லாட்டியும் நான் சந்தோஷமாய்த்தான் இருப்பனெண்ட பதில்.”

நிலா அவளது சோகத்திலிருந்தான சுளுவான மீட்சியை பாராட்டத்தான் நினைத்தாள். ஆனால் துக்கம்தான் வந்தது.

போராட்ட காலத்தின் நினைவுகள் போராளிகளிடத்தில் பெரும்பாலும் மறைந்துபோவதில்லை. வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையில் அவர்கள் சிரித்துக்கொண்டு கழித்த நாட்கள் அவை. ஆனால் கடைசியில் வந்து விழுந்த நாட்கள் மிகப் பயங்கரமானவைதான். அவை சிரித்துக்கொண்டு கதைத்க முடியாதவை. அவை அவர்கள் மறக்க நினைத்தவை. பயங்கரங்களைக் கொண்டிருந்தவை. தங்கள் கண்ணெதிரில் விழுந்த அழிவுகளினாலும், மரணங்களினாலும் அவை ஏற்பட்டிருந்தன. சந்திரிகாவினதும், சங்கவினதும் அனுபவங்களைவிட நிலாவினது வேறானவை. எனினும் அவர்களும் சொல்லமுடியாத் துயருழன்றவர்களே. சந்திரிகாவின் அனுபவத்தையும், துயரையும் எவ்வித வார்த்தைகளால் அளக்கமுடியும்?

அவர்களுள் சிலருக்கு வெளிநாடு போகவும், திருமணம் செய்யவும் யோகமிருந்திருக்கிறது. அதில் சிலருக்கு குடும்பமே யோகமாக அமையாதிருந்தது. எது செய்யவும், இளமையின் கீதத்தை இசைக்கும் வயதும் கடந்து போய்விட்டிருந்தது. அன்றைய போராளிகளெல்லாம் ஏறக்குறைய நடுத்தர வயதைத் தாண்டியவர்களாக இருந்தார்கள். சிறகே கனக்கிற பறவை எவ்வளவு தூரத்துக்கு பறந்துவிடும்!
மனம் தெளிந்து தேநீர் குடித்தபடி அவர்கள் பல்வேறு விஷயங்களையும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்களுடைய பேச்சுக்கள் அரசியலைவிட வாழ்க்கைபற்றியதாகவே அதிகமும் இருந்தன. நிலா கொஞ்சம் அரசியலுக்குள்ளாக பயணிக்க முனைந்தாள். அரசியலிலிருந்து மறுபடி சமூகத்துக்கும், வாழ்க்கைக்குமாய் அதை மடைமாற்றி விட்டுக்கொண்டிருந்தனர் சந்திரிகாவும், சங்கவியும். அவர்களும் அந்த அரசியலின் அங்கங்களென்ற வகையில் அரசியலின் இழுவையிலிருந்து முற்றுமாய் விலகி அவர்களால் இருந்துவிடவும் முடியாது.

“நீ எதோ எழுதிக்கொண்டிருக்கிறாயெண்டு சங்கவி சொன்னாள். முடிச்சிட்டியா?”

சந்திரிகாவின் கேள்விக்கு, “முடிஞ்சமாதிரித்தான். அதுக்காக, போர் மிச்சம் விட்ட போராளியளியளில தெரிஞ்சவையை தேடித் தேடிச் சந்தித்திச்சுக்கொண்டிருந்தன் ரண்டு வருஷமாய். சில ஞாபகங்களை பேர்களாய்… இடங்களாய்… காலங்களாய் அடையாளப்படுத்த எனக்கு அவையின்ர உதவி தேவையாயிருந்திது. அப்ப உன்னையும் நான் நினைச்சன், கேசி. எப்பிடித் தொடர்புகொள்ளுறதெண்டதுதான் தெரியாமப் போச்சு” என்றாள் நிலா.

“நான் இயக்கத்தில இருந்ததும் கொஞ்சக்காலம்தான. இயக்கத்தை விட்டாப் பிறகு என்ர அனுபவம் உன்ர போரனுபவத்தை எழுத அவ்வளவு உதவியாயிருக்காதெண்டு நினைக்கிறன்” என்றாள் சந்திரிகா.
அதற்கு சங்கவி, “எங்களில மட்டுமில்லை, கனபேருக்கு யுத்தகால அனுபவத்தைவிட, பிறகு வந்த அனுபவம்தான் பயங்கரமாய் இருந்திருக்கு” என்றாள்.
“இந்தத் துன்பங்களையெல்லாம் எங்கட அரசியல் கொஞ்சம் குறைச்சிருக்கலாமெண்டு நினைக்கிறன். ஆனா தமிழ் அரசியல் மக்கள்லயிருந்து எட்டவாய்த்தான் போய்க்கொண்டிருக்கு. எங்களுக்கான அரசியலை ஆரும்தான் பேசுறதாய் எனக்குத் தெரியேல்ல. அதால அதிலயிருந்து முழுவதுமாய் நான் விலகித்தான் நிக்கிறன் இப்ப” என்றாள் சந்திரிகா.

“அப்பிடி ஏன் நினனக்கிறாய்?”

நிலாவின் கேள்விக்கு சந்திரிகா பதிலிறுத்தாள்: “போராட்டத்துக்கு முந்தியிருந்த அதே பழைய தலைமுறையின்ர விருப்பும் வெறுப்பும் தந்திரமுமாய்த் துவங்கியிருக்கிற இந்த தமிழ் அரசியல், சாத்வீகமெண்ட ஒரு விஷயத்தை விட்டுப் பாத்தா, புதிய சிந்தனையேயில்லாத ஒரு தெருமட அரசியலாய்த்தான் இருக்கு. மாநகரசபை அரசியலையும், மாகாண அரசியலையும் பேசி அவை சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கினம்...”

“அப்ப என்ன செய்யவேணுமெண்டு நினைக்கிறாய்?”

“மொத்த அரசியலை… இலங்கை மொத்தத்துக்குமான அரசியலை… பேசவேணும். இனி அதுதான் சரி.”

“நானும் அப்பப்ப தமிழ் அரசியலைப்பற்றி யோசிக்கிறன். யோசிக்கிறது மட்டும்தான். என்ர வாழ்க்கையையே போராட்டமாய் நடத்திக்கொண்டிருக்கேக்க… கார்த்திகாவுக்கு இப்ப பத்து முடிஞ்சிது… இந்தநிலைமையில எனக்கு இன்னொரு போராட்டம் ஏலவே ஏலாது” என சந்திரிகா சொல்லும்போதே சோர்வடைந்தாள்.

“விழுந்த நிலமையிலிருந்து மீண்டெழுறதுக்கே இன்னும் கன பேரால ஏலாமலிருக்கு. என்.ஜி.ஓ.க்களிலயும், உள்ளக மனித உரிமை அமைப்புக்களிலயுமே இன்னும் தங்கியிருக்கவேண்டிக் கிடக்கு. சுலபமாய் ஒரு வார்த்தையில சொல்லியிட்டினம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வன்னியில கனக்கவெண்டு. அந்த அடையாளம் உண்மையில இருக்கிற நிலைமையை மூடி மறைக்கச் செய்யுதெண்டதுதான் என்ர எண்ணம்” என்றாள் சந்திரிகா.

“இதொண்டுக்கும் அவசியமில்லாமல்… நாங்கள் பலமாயிருந்த காலத்திலயே எல்லா அரசியல் பிரச்சினையும் முடிஞ்சிருந்தா…?” சங்கவியைத் தொடர்ந்தாள் நிலா: “உனக்கு குடும்பம் அந்தமாதிரிப் போயிரா… கேசிக்கு போயிரா… எனக்கு கால் போயிரா… என்னைப்போல கனபேருக்கு நிலமை இப்பிடி ஆகியிரா…” அவளுக்கு வார்த்தை இடையில் அறுந்தது.

அவளிடத்தில் ஒரு புள்ளிவிபரம் இருந்தது. இறுதி நிலவரப்படி நாட்டிலே அப்போது இருபத்தோராயிரத்து எண்ணூற்று எழுபத்துமூன்று பேர் இடுப்பிலோ காலிலோ கையிலோ யுத்தத்தால் ஊனமடைந்தவர்களாய் இருந்தார்கள். சத்திர சிகிச்சையை எதிர்பார்த்து உடம்பிலே உலோகத் துண்டுகளைச் சுமந்துகொண்டு திரிவோர் உட்பட்ட தொகை அது. அவ்வாறு சத்திர சிகிச்சை செய்தால் உயிர் பிழைக்கக்கூடிய சாத்தியம் குறைந்து எந்நேரமும் தம் மரணத்தை ஒரு சடுதியில் எதிர்பார்த்திருக்கிற சிலரும் அந்தத் தொகையிலுள்ளனர். முள்ளந்தண்டில் குண்டு பாய்ந்து அசைவியக்கம் அறுத்தும் பலபேர் படுக்கையிலே உண்டு.

மேலே மூவரும் பேசாத மௌனத்தின் கனதிகொண்ட பொழுதுகள் சில கழிந்தன.

இடையிலே அம்மம்மா வந்து சொன்னார், “நிஷா, நேரம் போட்டுது. இவை ரண்டுபேரும் ராவைக்கு நிண்டிட்டு காலமை போறதுதான் நல்லது” என.

“அப்பிடித்தான் சொல்ல இருந்தன், அம்மம்மா” என்றாள் நிலா.

“அப்ப… உம்மட லண்டன் விருந்தாளி…?” சங்கவி கேட்டாள்.

“இப்ப வரலாம். இல்லாட்டி நாளைக் காலமை வரலாம். இப்ப வந்தாலும் கதைக்கிறதுக்கு என்ன இடஞ்சல் இருக்கப்போகுது?”


9
வெளியே கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. நிலாவின் அக்கா வித்தியாவும் கஜந்தனும் இறங்கி வந்தார்கள். அறிமுகங்களும் உபசரணைகளும் முடிந்தன.

“அக்காவுக்கு இன்னும் கலியாணமாகேல்லையெல்லோ?” என்று நிலாவின் காதோரம் சரிந்து கேட்டாள் சங்கவி.

ஒரு துணுக்கம் நெஞ்சை அழுத்தியது. உடனடியாக மீண்டு, “இல்லை. செய்யிறேல்லயெண்டு பிடிவாதமொண்டுமில்ல. பெரிய ஒரு சீதனத் தொகை… கால் கோடி, அரைக் கோடியெண்டு… இருந்தா, மாப்பிள்ளை வரும். இல்லாட்டி இப்பிடியே இருந்து காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்” என்றாள்.

நிலாவின் அக்காவின் வாழ்க்கைபற்றி நண்பர்கள், அம்மாகூட, அறிந்ததில்லை. சம்பந்தப்பட்ட இருவருக்கும் நிலாவுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாயிருந்தது அது. அது ஒருவகையான சோகம். மே 20 2009இல் நடந்தது. எப்படி நடந்தது என்று இன்னும் அதிசயப்பட வைக்கும் சோகம். ஶ்ரீமல் புதுக்குடியிருப்பில் ஒரு பயணிகள் வானிலே அமர்ந்திருக்கையில் யுத்தம் முடிந்துவிட்டது அறியாத ஒரு கரும்புலிப் பெண் தற்கொடைத் தாக்குதலாய் இயக்கிய குண்டில் செத்துப்போனவர்களில் ஒருவனாக இருந்தான் அவன். பத்திரிகையில் இரண்டாம் நாள் வந்த செய்தியில்தான் வித்தியாவே தன் இழப்பை அறிந்தாள். அந்தத் துக்கத்தோடுதான் அவள் நிலாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கும் வந்தது. அக்கா தனக்கு ஶ்ரீமல் இறந்துபோன பின் கல்யாணம் வேண்டாமென்றாள். எதுவுமறியாத அம்மா அவளின் கல்யாணத்துக்கு எதை விற்று கால் கோடி அரைக் கோடி பணம் எடுப்பதென யோசித்துக்கொண்டிருக்கிறாள். வித்தியாவின் காலம் போய்க்கொண்டிருக்கிறது.

“அப்ப… கலியாணப் பேச்சில சறுக்க உமக்கு இன்னொரு காரணம் இருக்கு” என்று குதூகலப்பட்டாள் சங்கவி. “அக்காவுக்கு கல்யாணம் முடியாம நான் செய்யேலாதெண்டு அவருக்குச் சொல்லலாம்தான?”

“மறுக்கிறதுக்கு பத்து காரணம் இப்பவே என்னட்டை இருக்கு.”

“மறுப்பியா?”

“சம்மதிக்கிறதுக்கு ஒரு காரணத்தைக் காட்டினாக்கூட ஓமெண்டு சொல்லியிடுவன்.”

கஜந்தனும் வித்தியாவும் அம்மம்மாவுடன் கதைத்துவிட்டு வந்தார்கள்.

சிநேகிதிகளின் வெளியைவிட்டு பொதுவெளியில் அவர்கள் சிறிதுநேரம் பேசினர்.

இரவுச் சாப்பாடு முடிய சிநேகிதிகள் ஒரு அறையிலும், வித்தியா அம்மம்மாவின் அறையிலும் படுப்பதாக ஏற்பாடு. கஜந்தனுக்கு அவள் தனது அறையைக் கொடுப்பாள். அவர்கள் படுக்கச் செல்ல, கூடத்துள் நிலாவும், கஜந்தனும் தனித்த அமைதிக்குள் இருந்துகொண்டிருந்தனர்.
கஜந்தனுக்கு கூச்சமொன்றுமில்லை. பன்னிரண்டு பதின்மூன்று வருஷங்களில் அவனுமேதான் வளர்ந்திருந்தான். வேலைமட்டுமே கரரிசனமாய் அக்காவுக்கும் தங்கைக்கும் கல்யாணமான பின்னரும் எந்த உல்லாசங்களுமின்றி ஒரு மந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனுக்குள் ஒரு உறுதி இருக்கிறது. அவன் பேசக் கூச்சப்பட்டு இருந்துவிடமாட்டான். அவன் பேசக் கூசுவதற்கு ஏதாவதிருந்தால் அது அவனது மொழித் தடங்கலாகவே இருக்கமுடியும். இருந்தும் அவன் தாமதித்தது, இல்லையென்ற ஒற்றைச் சொல்லை பதிலாக அவள் சொல்லிவிடும்விதமாக அந்த வலிமையற்ற தன் மொழியின் உரையாடல் அமைந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையினாலே ஆகும்.
கூடத்து மணிக்கூடு அப்பொழுது 10.30 என்பதைக் காட்டியது.

இரவு தன் நிசப்தத்தை நீளமாய் உறைய விட்டிருந்தது.

அது வெளியில்போல் உள்ளிலும்.

மௌனம் பிளந்து கஜந்தனின் செருமல் எழுந்தது. “இஞ்ச மளை குறைஞ்சு பெய்ஞ்சிருக்கு. ஆனா அணைக்கட்டு திறந்திருக்கு. வரேக்க பாத்தன்.”
“குளம் நிறையிறதுக்கு மழை இஞ்ச பெய்யவேணுமெண்டில்ல. எங்க பெய்ஞ்சாலும் குளத்துக்கு தண்ணி வந்து நிரம்பும். குளம் நிரம்பினா கலிங்கைத் திறந்து விடுவினம். திறக்காம விட்டு குளம் மீட்டுப் பாய்ஞ்சிருந்தா, நீயும் இப்ப இஞ்ச வந்திருக்கேலாது. நாங்களும் இஞ்ச இருந்திருக்கேலாது.”

“ஓ..!”

“நீ வாறதப்பற்றிச் சொல்ல பின்னேரம் போனெடுப்பாயெண்டு பாத்துக்கொண்டிருந்தன்.”

“அது… நான் என்ர போனை என்ர பிறன்டின்ர வீட்டில கொளும்பில விட்டிட்டன். அப்பம்மான்ட நம்பர் ஒன்டும் ஞாபகம் இல்லய்... அதுதான்... இது உன்ர அம்மா தந்தது” என்று இழுத்தான் கஜந்தன்.
“பிறண்டின்ர ஆக்களெண்டியே… சிங்கள ஆக்களா?”
“ஓ. எனக்கு லண்டன்ல அரவிந்த நல்ல பளக்கம். முந்தி இங்க ஜேர்னலிஸ்டா இருந்தான். சண்டை துவங்க அங்க அகதியா வந்தான்.”
“அப்பிடியான ஆக்கள் கனபேர் இப்ப அங்க இருக்கினமெல்லே?”
“கனக்கப் பேர். லண்டன்லயும், பாரிஸிலயும் நோர்வேயிலயும் என்டு கனக்கத்தான்.”
“எங்கட ஊரில ஒரு பழமொழி இருக்கு, கஜன். உனக்கு விளங்குமோ தெரியாது. எள்ளோட சேந்த குற்றத்துக்கு எலிப் புழுக்கையும் சேந்து காயுறதாம்.”
“எங்கட பிரச்சினையில சரி பிளை சொல்ல வந்ததால சிங்கள ஆக்கள் சிலபேர் கஷ்ரப்படுறத சொல்லுறாய். சன்டே லீடர் எடிரர் விக்ரமதுங்கவ இங்கயே சுட்டு கொன்டாங்கள். எக்னாலிகொடபோல ஆக்களை கடத்திக்கொண்டு போய் இல்லாமப் பண்ணினாங்கள். அதுமாதிரி கனக்க ஜேர்னலிஸ்டுகளும், சுனந்த தேசப்பிரிய மாதிரி கவிஞர்களும், சிங்கள அரசியல் சினிமா எடுத்த கன ஆக்களும் இலங்கையை விட்டுப்போய் வெளியிலதான் இருக்கினம்.”
“இப்ப சண்டை முடிஞ்சுது. இனி அவை திரும்பிவருவினமெண்டு நெக்கிறியோ?”
“சண்டை முடிஞ்சிதுதான். ஆனா புள்ளி வைச்சிருக்கெல்லோ அவைக்கு. அவை எப்ப வந்தாலும் இஞ்ச கரச்சல் இருக்கும். அதால கனபேர் வரமாட்டினம்.”
“அதுசரி, கஜன், இப்பவும் நீ முந்தின மாதிரி சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவேணுமெண்டு லண்டன்ல நடக்கிற ஊர்வலங்களுக்கு போறனியோ?”
“சிலநேரத்தில. அப்பிடி ஒரு பிறஷர் இலங்கை கவர்ன்மென்ருக்கு குடுக்கிறது நல்லம்தான?”
“எனக்குத் தெரியாது. நீ வாறதுக்கு கொஞ்சம் முந்திவரை நானும் என்ர பிறன்ஸ்சும் பேசிக்கொண்டிருந்தம், போரில பாதிக்கப்பட்ட ஆக்கள் அந்தப் பாதிப்புக்குள்ளயே கிடக்கினம்… பாதிக்கப்படாத ஆக்கள் அந்தப் பாதிப்புகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கினமெண்டு.”
“போனில நீ எனக்கு அப்பிடித்தான் சொன்னது.”
“எண்டாலும்…எங்கட அபிப்பிராயத்தைச் சொல்ல ஒரு வெளி… என்னவோண்டு சொல்லுவினமே… ங்ஆ… ஸ்பேஸ் … அது இஞ்ச இல்ல.”
“கருத்துச் சுதந்திரத்தின்ர முக்கியமான அம்சமாய் இருக்கிறது… அந்த ஸ்பேஸ்தான்.”
“கொஞ்சம் இருந்திதுதான் இஞ்சயும். அது இறுதி யுத்தத்துக்கு முந்தி. இப்ப இல்லை. எல்லாத்தையும் இல்லாமலாக்கின பெரிய தோல்விதான் தமிழாக்களுக்கு மேல விழுந்தது.”
“அப்பிடி ஒரு பெரிய தோல்வியைத் தரவேணுமென்டுதான் அரசாங்கம் கடைசிநேரத்தில அந்தமாதிரி நடந்ததா எல்லாரும் பேசிச்சினம்.”
“முந்தி ஒருக்கா, வெண் நடுகல்லுகள் வரிசையாய் இருக்கிற மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமத்தில இருக்கு, பாத்திட்டுப் போ எண்டனே… நீ பாத்தியா?”
“பாத்தன்.”
“ரண்டாயிரத்தொன்பதுக்குப் பிறகு பாத்தியா?”
“இல்ல. போகேல்ல அங்க.”
“இப்ப போய்ப் பார் ஒருக்கா. உடைஞ்சிடுவாய், கஜன். எல்லாம் உழுது கிளறி... போராட்டத்தின்ர நினைவெல்லாத்தையும் அழிக்கிற அவ்வளவு வெறியோட... ஒரு சின்ன அடையாளமும் மிஞ்சாமல்... அழிச்சுப் போட்டிருக்கு. நினைவுக்கெண்டு ஒரு வெண் நடுகல் நிமிந்தபடி இல்ல. மாவீரர் தினத்தைக் கொண்டாட அரசாங்கம் அனுமதியும் கொடுக்கிறதில்லை. கடைசிநேர அனுமதியால அது பெரிசா நடக்கிறதுமில்லை. இந்த வருஷம் கனகபுரத்திலயும், முழங்காவிலிலயும், வன்னி விளாங்குளத்திலயும், உடுத்துறையிலயும் நடந்திருக்கு. கொடிகாமத்தில மாவீரர் துயிலும் இல்லமிருந்த இடத்தில இப்ப ஆமி காம்ப் இருக்கு.”
“ஒரு இடத்திலயும் இல்லையா?”
“ஒரு இடத்திலயும் இல்லை. மாவீரரின்ர வித்துடல் விதைச்ச அந்த மண்ணுக்குள்ளயிருந்து தமிழீழத்தைக் கனவு கண்டுகொண்டிருந்த ஆத்மாக்களெல்லாம் நகரம் முழுக்க அந்தரிச்சுத் திரியுதுகள்.”
“விளங்கேல்லய்.”
“மண்ணுக்குள்ள அமைதியாய்க் கிடந்த ஆவியளெல்லாம் இப்ப இந்த மண்ணெல்லாம் அலைஞ்சு திரியுதெண்டு சொல்லுறன்.”
மௌனம் விழுந்தது.
நிலாவின் கண்கள் கலங்கியிருப்பதை கஜந்தன் மெல்லிய குமிழ் விளக்கு வெளிச்சத்திலும் கண்டான்.
நீடித்துவிடக்கூடாது அந்த மௌனம். மட்டுமில்லை. அந்தத் திசையில் அந்த உரையாடல் நடந்திருக்கக்கூடாதென்றும் பட்டது அவனுக்கு. ஒருபோது யோசிக்கையில் நிலா திட்டமிட்டே அந்த மய்யத்தை நோக்கி உரையாடலை நகர்த்திச் சென்றதாயும் கருதினான். அது அவனைத் திணறச் செய்தது.
நிலா திடீரெனச் சிரித்தாள். நிலைமையின் இறுக்கத்தைத் தளர்த்த எண்ணியவள்போல் இருந்தது அது. பிறகு கேட்டாள்: “நீ இப்ப சொல்லு, கஜன், என்னோட என்ன பேச வந்தனி?”
கஜந்தன் தன்னைச் சுதாரிக்க சிரமப்பட்டான். அவனுடைய கண்களுக்குள்ளுமே வெண் நடுகல் வரிசை நின்றுகொண்டிருந்தது. பிறகு, “உனக்குத் தெரியும், நான் என்ன பேச வந்தனென்டு” என்றான் உரமில்லாத குரலில்.
“எனக்கு எப்பிடித் தெரியும்? நீதான் சொல்லவேணும்.”
“எனக்கு எப்பிடி சொல்லுறது என்டதுதான் தெரிய இல்லய். அது.. உனக்கு… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கான்டு கேக்க வந்தன்.”
“இதைக் கேக்க ஏன் தயங்கிறாய்? எனக்கு நல்லா உன்னைப் பிடிக்கும்.”
“பிடிச்சதென்டது அது இல்லய்… உனக்கு என்னை மேரேஜ் பண்ண விருப்பம் இருக்கான்டு கேட்டன்.”
நிலா கடகடவெனச் சிரித்தாள்.
அம்மம்மா இன்னும் படுக்காதிருந்தவர், பின் அறையிலிருந்து எட்டிப் பார்த்தார்.
கஜந்தன் சிறிது வெக்கறைப்பட்டுப் போனான். கருநிழல் முகத்தில் படிவது தெரிந்தது.
“சொறி… சொறி, கஜன். நான் உன்னை பகிடி பண்ணேல்ல. என்னையும் இந்த ஒற்றைக் காலோட விரும்பி கலியாணத்துக்கு கேட்டதில நான் சந்தோஷம்தான் பட்டிருக்கவேணும். ஆனா எனக்குச் சந்தோஷமில்லை கஜன். உனக்கு நான் வெள்ளை நடுகல் நிலத்தின்ர இண்டைய நிலையைச் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. எனக்குத் தெரிஞ்ச… தாக்குதலுக்குப் போறதுக்கு முன்னம் என்னிட்ட வந்து ‘போட்டு வாறன், நிலா’வெண்டு சொல்லிப்போட்டு போய் திரும்பிவராத... என்ர சிநேகிதியளயும் சிநேகிதன்களயும் அந்த துயிலும் இல்லங்களிலதான் புதைஞ்சிருந்தினம். சண்டை முடியிறவரை எல்லாம் நல்லபடிதான் இருந்திது. இப்ப என்ர கனவில வந்து, ‘யுத்தம் ஏன் அப்பிடிப் போச்சு…? எங்கட கனவுக்கு என்னாச்சு…? எங்கட ஈகமெல்லாம் வீணா?’ எண்டு கேக்கினம், கஜன். ராராவாய் எழும்பியிருந்து அழுகிறன். அனேகமாய் ஒவ்வொரு ராவிலயும்தான். அப்பிடியான நான் கலியாணத்தை நினைச்சுப் பாக்க ஏலுமா, நீயே சொல்லு.” சாந்தமாய், அவன் விளங்குகிற விதமாய் நிலா எடுத்துச் சொன்னாள்.
அவ்வளவு தூரம் கடந்துவந்தவன் அந்தளவில் விட்டுவிடமாட்டானென்பது அவள் எதிர்பார்த்ததுதான். “இப்பிடி இருந்து உன்னால என்ன செய்ய ஏலும்?” கஜந்தன் கேட்டான்.
“கனக்க செய்யேலும். இஞ்ச இருந்துதான் செய்யவும் ஏலும். நான் எழுதுவன். என்ர அப்பா தந்த சொத்து அது. அவரே நல்ல ஒரு வாசகராய் இருந்தார். என்னையும் வாசிக்கவைச்சார். அந்தத் தமிழால நான் எதையாச்சும் செய்யேலும். நானெழுதின கவிதையள்... வெளிவந்தது வராதது எல்லாம்... அழிஞ்சுபோச்சு. எங்க தேடி எடுக்கேலுமோ? எடுக்கத்தான் ஏலுமோ தெரியாது. ஆனா புதிசாய் எழுதுவன். நடந்ததை, நடக்கவேணுமெண்டதை எல்லாம் எழுதுவன்.”
“நீ அதை விரும்பினா எங்கயிருந்தும் எளுதலாம், நிஷா. இப்ப கனபேர் லண்டன்ல, பாரிஸ்ல, ரொறன்ரோவில இருந்தும் எளுதுகினம்தான?”
“தெரியும். அதுகள்ல கொஞ்சம் வாசிச்சுமிருக்கிறன். ஆனா இஞ்சயிருந்தாத்தான் என்னால எழுதலாம்போல கிடக்கு.”
“அது ஒரு… ஹவ் ரு சே… ஒரு பிரமைதான். மேரேஜ் பண்ணினாலும் நீ அங்க வர கனக்க காலம் எடுக்கும். போர்மாலிற்றீஸ் இருக்கு. அப்ப எளுதலாம். இப்ப இருக்கிற ரெக்னோலஜின்ர வசதிக்கு தூரமென்டிறது ஒன்டுமேயில்லய். நினைச்ச நாளில இஞ்ச வந்திடலாம். ரண்டு குடியுரிமை எடுக்கிறதுக்கும் இப்ப வசதி வந்திருக்கு. அது ஒன்டுமே சரிவராதின்டா… நான் இஞ்ச வந்து இருந்திடுறன். வளி இருக்கு.. மனம்தான் வேணும்.”
“பயித்தியம். நீ இஞ்ச வந்திருக்க எப்பிடி ஏலும்? உன்ர வேலை…. இஞ்சத்தக் கிளைமேற்… உன்னால ஏலாது.”
“ஏலும்.”
“அந்தளவுக்கு என்னைப் பிடிச்சிருக்கா, கஜன்?”
“பிடிக்கும். ரண்டாயிரத்து மூன்டில வந்ததுக்குப் பாத்தன், அப்ப பிடிச்சது.”
“நீ சொல்லவே இல்ல.”
“அப்ப சண்டை நடந்திது.”
“ம்… உயிரோட தப்பிவந்தா பாப்பமெண்டு விட்டிட்டியா?”
“நீ தப்பி வருவாயென்டு தெரியும் எனக்கு.”
“எப்பிடி?”
“மனத்தில தெரிஞ்சிது.”
“மனத்தில தெரிஞ்சிதா…? சரி. அப்ப… எனக்கு காலிருந்திது. இப்ப… ஒண்டரைக் கால். இப்பவும் பிடிக்குதா உனக்கு?”
“இப்பவும்தான்.”
“முதல்ல எங்கட வயசை நீ யோசிச்சுப் பாத்தியா?”
“நீ என்னைவிட கொஞ்சம்தான் பெரிசு. ஆறு மாசம் பெரிசு. அது ஒன்டுமே இல்லய்.”
“நீ எண்பத்தைஞ்சு கிலோ… நான் அம்பத்தைஞ்சு கிலோ… அதுகும் பெரிசில்லையா?”
“அதுவும் பெரிசில்ல.”
“சம்மதிக்கிற அளவுக்கு நான் வந்திட்டனெண்டு நினைச்சிடாத, கஜன். துக்கத்தோடயும் வலியோடயும் வாழ்ந்ததுகளை, இப்ப சிரிச்சுக்கொண்டு நினைக்க பழகிக்கொண்டிருக்கிறன். அதுதான் சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்கிறன். வேற ஒண்டுமில்லை.”
அவனது உற்சாகம் பொத்தென விழுந்திருக்கும். அவன் அதைக் காட்டாதிருந்தான்.
“உன்னை முதல்ல என்ர ஒரு நல்ல சிநேகிதனாய்த்தான் பாத்தன். பிறகுதான் மச்சானெண்ட சொந்தம். என்ர மனத்தில இருக்கிற வலியும் துக்கமும் வடுவும் பாரமும் உனக்குத் தெரியா. என்னில விழுந்த தோல்வியின்ர வடு நான் சாகும்வரை என்னைவிட்டுப் போகா. அதை அடையாளப்படுத்திற மாதிரித்தான் என்ர ஒண்டரைக் கால் என்னோடயே எப்பவும் இருந்துகொண்டிருக்கு.”
“கால் கை இல்லாமப் போன ஆக்கள் கனபேர் கின்னஸ் றெக்கார்டே வைச்சிருக்கினம். நீ கின்னஸ் றெக்கார்ட் புக்கை எடுத்துப் பாத்தா எல்லாம் தெரியும்.”
“அதுக்கான வசதி என்னிட்ட இல்ல, கஜன். தெம்பும் இல்ல. நான் எனக்குள்ளயே குறண்டிப் போய்க் கிடக்கிறன். இது என்ர நேச்சர்… இயல்பு. எனக்கு தெரிஞ்ச ஜெனற்றெண்டு ஒரு சின்னப் பிள்ளை இருந்திது. அதுக்கு ஷெல் அடிச்சு என்னைப்போலதான் பாதிக் கால் போயிட்டுது. அந்தப் பிள்ளைக்கு, கால் போனா திரும்ப முளைக்கும்தான எண்டு அதுகின்ர அம்மா சொல்லிக்கொண்டிருந்தா. காலைப் பாத்திட்டு அது முளைக்கேல்லயெண்டு கண்டவுடன அந்தப் பிள்ளை அழத் துவங்கியிடும். அந்தச் சின்னப் பிள்ளைக்கு தாய் சொன்னமாதிரி, கலியாணம் செய்துகொண்டு லண்டனுக்கு வா, அங்க உனக்கு கால் முளைக்குமெண்டு… பிளீஸ்… என்னிட்ட சொல்லியிடாத. நான் முப்பத்தைஞ்சு வயசுப் பொம்பிளை.”
அவளை அப்படியே நேருக்கு நேர் பார்த்தபடி அவதானமாய்க் கேட்டுக்கொண்டிருந்த கஜந்தன், அவள் முடித்த பிறகும் அப்படியே இருந்தான். பின் சொன்னான் அதே தீட்சண்யமான பார்வையுடன். “நீ எதை வேண்டாமென்டிறியோ, அதுதான் எனக்கு இப்ப சொல்ல இருக்கு, நிஷா. நீ ஏத்துக்கொள்ளுவியோ மாட்டியோ... நம்புவியோ மாட்டியோ... விரும்புவியோ மாட்டியோ... எனக்குத் தெரியாது. ஆனா அதைவிட சொல்ல என்னிட்ட வேற இல்லய். என்னைக் கலியாணம் கட்டிக்கொண்டு வா லண்டனுக்கு, உனக்கு அங்க ஒரு நல்ல கால்… சொந்தமா முளைச்சதுபோல அந்தளவு சொபிஸ்ரிகேற்ரெட் கால் ஒன்டு… உனக்கு நான் வாங்கித் தாறன். சொந்தமானதா பீல் பண்ணுற அளவுக்கான கால்… எங்க, எந்த நாட்டில, எவ்வளவு பணமின்டாலும் குடுத்து நான் அதை வாங்கித் தாறன். இற் இஸ் எ ப்ரொமிஸ்.”
கஜந்தன் நிறுத்தினான்.
நிலா எதுவும் சொல்லாதிருந்திருந்தாள்.
அவனது கண்களில், அவன் சொன்ன அந்த பொய்க் காலின் உயிர்த் துடிப்பை, அந்தளவு மெதுமையும் உறுதியும் இலகுவும்கொண்ட அசைவியக்கத்தை நிஜமாய்க் கண்டாள் நிலா.
தனக்காகவே அதை அவன் சொல்லவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவன் எங்கோ கண்டிருக்கிறான். அதை வாங்கி அவளுக்குப் பொருத்தும் ஆர்வத்தையே அவன் கொண்டிருக்கிறான். கடன்பட்டேனும் வாங்கித் தருமளவுக்கு காதலும் அவனுக்கிருந்தது. அவன் காதல் என்ற வார்த்தையை உபயோகிக்கவேயில்லை. பிடிக்குமென்று சொன்னான். பிரியமென்றும் சொன்னான். ஆனால் அது காதல்தான்.
அது அவளிடத்தில் இருந்ததா?
ஆனாலும் ஒரு இரை கொளுவிய கொளுக்கி நீருக்குள் இறக்கப்பட்டிருக்கிறது. கால் என்ற கொளுக்கி. அவள் அதைக் கவ்வலாம். அவன் தரக்கூடிய காலுக்காகக்கூட இல்லை. அவன் அவளில் கொண்டிருக்கிற கரிசனத்துக்காக. அந்த கரிசனம் பொங்கி கண்களில் வழிந்துகொண்டிருக்கும் காதலுக்காக.
அவனது கண்களிலிருந்த கால்பற்றிய கனவு அப்போது அவளில் தொற்றியிருந்தது.

உயிர்த் துடிப்புள்ள, பெருமளவு உணரத்தக்க உயிர்த்துவமான ஒரு கால்…

அவளது கண்களிலிருந்து அடக்கவும் அடங்காமல் கண்ணீர் வழிந்தது. அடக்க அவளெடுத்த முயற்சி விசும்பலாய் மீறியது. விசும்பல் சில நிமிஷங்களில் அழுகையாய் வெடித்தெழுந்தது.

அம்மம்மா எழுந்துவந்து வாசலில் நின்றிருந்தார்.

வித்தியா அவள் பின்னால் நடப்பது என்னவெனத் தெரியாத திகிலில் நின்றாள்.

கஜந்தன் அவர்களைச் சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினான். பிறகு நிலாவின் பக்கம் திரும்பி, “முடிச்சிட்டியா?” என்றான்.
வித்தியாசமாக வெளிப்படுத்தப்பட்ட அந்த உணர்வினைக் கண்டு சிறிய ஆச்சரியத்தோடு அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு, அவனை நோக்கினாள். “அழாதயெண்டுதான் நீ சொல்லுவாயெண்டு பாத்தன்…”

“நான் சொன்னாலும் நீ அழுவாய். அதால அழுது முடியட்டுமென்டு இருந்தன். நீ அளுகிறத முதலாயும் கடசியாயும் பாக்க விரும்பினன்.”
“நான் கலியாணத்துக்குச் சம்மதமெண்டா என்ன செய்வாய்?”

“அக்காட்ட முதல்ல சொல்லுவன். பேந்து அக்கா எல்லாரிட்டயும் சொல்லும்.”

“கலியாணம் முடிஞ்சாப் பிறகு அந்த சொபிஸ்ரிகேற்ரெட் காலை மறந்திடமாட்டியே?”

“நிஷா…!”

“சும்மா சொன்னன். நான் கால் இல்லாமல் போனதை எவ்வளவு பீல் பண்ணுறனெண்டு கண்டு, எனக்கொரு அருமையான கால் வாங்கித்தாறதாய் நீ சொன்னதே எனக்குப் பெரிசு. அதுக்காகவே உன்னைக் கலியாணம் செய்ய சம்மதிப்பன். அதுக்காகவே காதலிக்கவும் செய்வன்.”

அது கேட்டு பொங்கிப் பூரித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென களைத்தவன் போலானான் கஜந்தன். கொட்டாவி விட்டான். சகல உணர்வு நரம்புகளும் இளகி தளர்ந்தான்.

“என்ன, நித்திரை வருகுதா?”

“மூன்டு நாள் நித்திரை நான் கொள்ள இல்லய்.”

“யோசினையில இருந்தியா? வா, முன்னறையில வந்து படு. கட்டில்ல நுளம்பு வலையும் புதுசா வாங்கிப் போட்டிருக்கு.”

“இஞ்ச நுளம்பு ஒரு பெரிய பிரச்சினை, இல்லே?”

“பிரச்சினைதான். ஆனா மலேரியா நுளம்பை இயக்கம் இருந்த காலத்திலயே முழுக்கவும் ஒழிச்சிட்டுது.”

“கிறேற்.”

“காலமை நாவக்குழிக்கு கிளம்பிறியா, கஜன்?”

“ம்.”

“லண்டனுக்கு எப்ப போகவேணும் நீ?”

“விடிஞ்சாப்பிறகு அக்காவோட பேசியிட்டுத்தான் அதைப் பாக்கவேணும். குட் நைற், நிலா.”

“சரி, படு. குட் நைற்.”

சிநேகிதிகள் படுத்திருந்த அறைக்குள் சென்று படுத்தாள் நிலா. அரவத்தில் தலையை நிமிர்த்திப் பார்த்த சங்கவி, “சொல்லியிட்டியா, நிலா?” என்று மெல்லக் கேட்டாள்.

“ம்.”

“சம்மதமில்லையெண்டுதான? உன்னிட்டயிருந்த பத்துக் காரணத்தோட நான் சொன்ன ஒண்டுமாய் பதினொரு காரணம் இருந்ததெல்லே? உனக்கு அதைச் சொல்ல கஷ்ரமாயிருந்திராது.”

“சம்மதிக்க ஒரு காரணம் இருந்தாலே போதுமெண்டும் சொன்னனெல்லோ? அந்த ஒரு காரணத்தை கஜன் காட்டினான். சம்மதிச்சிட்டன்.”

மெளனமாய் அவளை அதிசயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கிவி. பிறகு, “சந்தோஷம். ஆனா... உன்ர சம்மதம் இப்பதான் உன்னிட்ட வந்திருக்கேல்ல. அது உன்னிட்ட எப்பவும் இருந்திருக்கு, நிலா” என்றுவிட்டு படுத்துவிட்டாள்.

நிலாவுக்கு நித்திரை இழுபறிப்பட்டது.

அவளுக்காக ஒரு சரியான காலின் கனவைத் தேக்கியபடி கண்கள் பிரகாசிக்க இருந்த கஜந்தனின் முகம் அவளது மனத்தில் தோன்றிக்கொண்டிருந்தது.

சொறித் தவளைகள் பிரளயம் வரப்போவதுபோல் சூழவுள்ள நீர்நிலைகளிலெல்லாம் இருந்து கத்தின. பின்வளவில் மாமரத்து இலைகள் காற்றில் சரசரத்தன. இதமான பின்னிசையில் அவளுக்கு ஒருபோது மெல்ல தூக்கம் வந்தது.

நித்திரையில் அவளொரு கனவு கண்டாள்.

முறிந்த ஒரு ரோஜாச் செடி மறுபடி கிளைவிட்டு செழித்து பூப்பூத்ததுபோல் அவளுக்கு ஒரு கால் முளைத்திருந்தது. ரோஜாப்பூ நிற கால். அவள் காலை அசைத்துப் பார்க்கிறாள்.

அது அசைந்தது.


(முற்றும்)
************************

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here