11
முன்னொரு காலத்தில் வழித் தடங்களும் அற்றிருந்த பெருவனம் மாங்குளத்துக்கும் முல்லைத் தீவுக்குமிடையே செறிந்து கிடந்தது. உள்நுழைந்து செல்கிறபோது தடங்கள் தோன்றி மறைந்து மீண்டும் தோன்றுவதான விந்தையை அவை கொண்டிருந்தன. பெருமரங்களின் அடியில் புல் பூண்டு செடி கொடிகள் துளிர்விடாதென்று யார் சொன்னது? அந்த விதி வனத்துக்கு இல்லை. விதிகள் பிறப்பதும் நிலைப்பதும் மண்ணில் காண்பவை. மனிதரால் இழைக்கப்படுபவை. வனம் தனக்கான விதிகளை தானே வகுக்கிறது.
மழை பெய்யும் காலத்தில் வனம் தாகம் தணிக்கிறது, நனைகிறது, விளையாடுகிறது. வெயிலடிக்கும் காலத்தில் அது உயிர்தரித்திருக்க மட்டும் நீரைத் தேடுகிறது. அந்த நீரை அது மண்ணில் காபந்துசெய்து வைத்திருக்கிறது. அந்தவகையில் யாருமறியா ஒட்டகமாய் இருக்கிறது வனம். பூக்கும் மரங்கள் வனத்தில் நிறையவேயெனினும், அவைகளில் தேத்தாமரம் ராணியாக இருக்கிறது. அதன் வாசம் வெகுதூரத்துக்குப் பரவி வனத்தையே வாசக் காடாக்கிவிடுகிறது. அது பூக்கும் காலத்தில் வனமெங்கும் வானவரும் வந்து மகிழ்ந்து விளையாடி களித்துச் செல்வர் என்கின்றன வனவரது கதைகள்.
கனி தரும் மரம் ஒவ்வொன்றும் பூக்கும். பூத்துவிட்டு சினைப்படுவதற்காய் சிப்பிபோல் வாய் பிளந்து காத்திருக்கும். காற்றிலும் தும்பிகளிலும் தேனீக்களிலும் தொற்றிவரும் ஒரு மகரந்தத் துகளுக்கானதுதானே பூவின் தவம்? தவத்தின் சித்தியில் சூல் கொள்கின்றன பூக்கள். காய்கள் தோன்றுகின்றன. காய்கள் கனிகளாகின்றன. குருவிகளின் பட்சணிப்பிலும், காற்றின் வீச்சிலும் இனவிருத்தி தூரதூரங்களிலும் நடக்கிறது. மரம் ஒரு சுற்று வாழ்வை முடித்த ஆசுவாசம் கொள்ள மழை வருகிறது.
வனம் மிருகங்களின் உறைவிடம் மட்டுமில்லை. குருவிகளின் சரணாலயம் மட்டுமில்லை. மனித வாழ்வை, வாழ்வின் அர்த்தங்களை ஊறச்செய்யும் சுனையாகவும் இருக்கிறது. அதை மனித குலம் பெரும்பாலும் உணர்ந்துகொண்டதில்லை.
வனவர் வனத்தை அறிந்தவர். அவர்கள் வன தெய்வத்தை அருளுருக் காலங்களில் கண்டுமிருந்தனர். அதன் ஜீவகருணை அவர்கள்மேல் நிறையவே படிந்திருந்தது. வனத்துள் அவர்கள் அச்சப்பட்டது எக் காலத்திலும் நடந்ததில்லை. வன மிருகம் எவரை, எதற்காக அச்சுறுத்தவேண்டும்? அது அச்சப்படும் பிராணி. அச்சத்திலேயே வாழ்கிறதுக்காய் அது சபிக்கப்பட்டது. அவர்கள் அதன் சாபம் தெரிந்தவர்களில்லை. ஆனாலும் அவற்றில் அச்சம் கொள்ளாதிருந்தார்கள்.
வேறுவேறு காரணங்களுக்காய், வெவ்வேறு காலங்களில் வனம் மனிதர்களின் வெறுமையை அடைந்துகொண்டிருக்கும். அந்த விதியினால் எங்கிருந்தோ உற்பத்தியாகி வந்து குளமாய்ப் பரந்து, கடலுள் பாய்ந்த யான் ஆற்றின் ஓரத்திலிருந்த பெரும் குடியிருப்பில், அப்போது சனம் ஆறேழு குடிசைகளில் அடங்கியதாய் சுருங்கிப் போயிருந்தது. அங்கே எஞ்சியிருந்தவர்கள் முன்புபோலன்றி ஆண்டுகளைக் கணக்கெடுக்க தெரிந்தவர்களாய் இருந்தார்கள்.
அங்கிருந்த ஒரு குடிசைத் தம்பதிக்கு ஒருநாள் ஒரு மகள் பிறந்தாள். அந்த ஆண்டு 1950 என அவர்கள் ஞாபகம் வைத்திருந்தனர். அவள் அவர்களின் வன தேவதைபோல் வளர்ந்தாள். தனியே வனமலைபவளை அடக்க யானை வரும், புலி வரும், நரி வரும், ஓநாய் வரும், பாம்பும் வருமென வீட்டார் அவளை அச்சப்படுத்தினார்கள். அவள் யானை வரட்டும், புலி வரட்டும், நரி வரட்டும், ஓநாய் வரட்டும், பாம்பும் வரட்டுமென கூவித் திரிந்தாள்.
அவளுக்கு அம்மா இருந்தாள், அப்பா இருந்தான், தாத்தா இருந்தார், பாட்டி இருந்தார். ஆனால் உறவுகள் இருக்காததில் துக்கமடைந்த அவள் வன உயிர்களையெல்லாம் உறவு ஆக்கினாள்.
அவள் பிறந்து ஐந்து முழு வருஷங்கள் கழிந்த பின்னாலேதான் அவள் பிறந்த தகவல் இலங்கைப் பிறப்புப் பதிவேட்டில் பதிவாக்கம் பெற்றது. அன்று அவளுக்கு ஒரு பெயரும் வைத்தார்கள். குழந்தையின் பெயரை அதன் அப்பன் வெறியிலே நாத்தழும்பி சரித்திரா என சொல்லிவிட்டான். சமுத்திராவென அவளை அழைக்க ஆரம்பித்த பின்னாலேதான் அவளுக்கு சரித்திராவென பெயர் வைக்கப்பட்டிருந்தது அவர்களுக்குத் தெரிந்தது. அதை ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்த கிறித்துவ இறைதூதர்கள் கண்டு சொன்னார்கள்.
அவர்கள் மோட்டார் காரில் அப்பாலுள்ள நகரத்திலிருந்து பெருவீதி வழியே வந்திருந்தனர். சிரிக்க மட்டுமே செய்த, கருணை செய்யமட்டுமே தெரிந்த மனிதர்களாயிருந்தார்கள் அவர்கள். அவர்கள் கறுப்பு நிறமான சிறிய பலகைச் சட்டமிட்ட தகட்டினையும், ஒவ்வொரு பக்கத்திலும் ஆடு, மாடு, கோழி முதலியவற்றின் வர்ணப் படங்களையும்கொண்ட அழகான புத்தகத்தையும் அவளுக்குக் கொடுத்து, அவள் அவற்றிலுள்ள எழுத்துக்களை வாசிக்கவும், அவைபோல் எழுதவும் பழகவேண்டுமென்று சொன்னார்கள். பின் அவள் பள்ளிக்கு அவசியம் செல்லுதல் வேண்டுமென்றும் பணித்தார்கள். பள்ளி காட்டின் ஓரத்திலுள்ள நகர எல்லையில் அமைந்திருந்தது.
தாத்தா அவற்றைக் கண்டார். புத்தகத்தை வாங்கிப் புரட்டினார். பிறகு ஒரு மாலையில் சரித்திராவுக்கு அதிலுள்ள எழுத்தைப் பயிற்றுவித்தார். தாத்தா பெரிய படிப்பாளிதான். ஒரு அரிச்சுவடி அட்டையிலிருந்த எல்லா எழுத்துக்களும் அவருக்குத் தெரிந்திருந்தன. பன்னிரண்டு வார்த்தைகளை அவர் படிக்கத் தெரிந்திருந்தார். படிப்பித்த முதலெழுத்து என்னவென தாத்தா ஒருநாள் ஆவலோடு பேத்தியைக் கேட்டார். அவள் சொன்னாள், ‘ஆனா.’
தந்தை விவசாயமும் வேட்டையும் தொழிலாய்ச் செய்துகொண்டிருந்தான். அவன் காட்டின் தென்திசையில் சென்று அதிகமும் வேட்டையாடினான். அவன் நிறைய கள் குடிப்பவனாயும், மனைவிக்கு கள் கொண்டுவந்து பருகக் கொடுப்பவனாயும் இருந்தான். மாரியில் வீட்டிலிருந்து விவசாயமும், கோடையில் வெளியே சென்று வேட்டையுமென வாழ்முறையை இரண்டாக வகுத்துக்கொண்டிருந்தான். வீட்டிலிருந்த காலத்தில் காதலும், வெளியே சென்ற காலத்தில் காமமும் அவனுக்கு அனுபவப் பிராப்தியாயிருந்தன. அவன் ஊரில், நாட்டில் உலவிய பல்வேறு கதைகளையும் தெரிந்திருந்தான். அவனுக்கு கதை சொல்லும் வல்லபமும் இருந்தது. அவையெல்லாம் அந்தமாதிரிப் புத்தகங்களாய் எழுதிவைக்கத் தக்கனவென வெறியேறிய ஒருநாள் தன் மனைவிக்கும், மகளுக்கும் சொன்னான் அவன்.
கையிலே சிலேற்றும் பென்சிலும் கொண்டுதிரிந்த தன் மகள்மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவன் ஒருநாள் அவளை, ‘வாடி என் செல்லக்கிளியே’ என இழுத்தணைத்து ‘நானுனக்கு படிப்பு சொல்லித் தருகிறே’னென அவளுக்கு தானறிந்த முதலெழுத்தைப் படிப்பித்தான். அந்த எழுத்தை சரித்திரா, ‘அயன்ன’ என்றாள்.
‘அந்த எழுத்து வேண்டாம்’ என்றாள் எல்லாம் பார்த்திருந்த சரித்திராவின் அம்மா. ‘உன் அப்பா சொல்லிக்கொடுத்த எழுத்தே அவள் படிக்கட்டும்.’
சேலையணிந்து, சட்டை போட்டு, நிமிர்ந்திருந்த முலைகளை மறைக்க மாறாடி போட்டு, கொண்டை வைத்த ஒரு முது ஆசிரியை அவளை பள்ளியென்ற கூடத்திலே நிலத்தில் சப்பாணி கட்டி இருக்கவைத்து கொஞ்சநேரம் படிப்பித்தும், பின்னால் அவளுக்கு ஒரு சிரட்டையளவு தகரப் பால்மா கரைத்துக் கொடுத்தும் அனுப்பினாள். அந்தப் பால் மறி, பசு ஆகியனவற்றினதைவிட மிகுந்த சுவையுள்ளதாயிருந்ததை சரித்திரா கண்டாள். அவ்வாறு பதினேழு பேர் பள்ளிக்கு வந்து படித்து பால் குடித்துப் போனார்கள்.
மழை பெய்தால் பள்ளி இருப்பதில்லை. கொஞ்சக் கொஞ்ச நாட்களில் இரண்டிரண்டு நாட்கள் எது காரணமுமின்றி பள்ளி இல்லாதுமிருக்கும். பள்ளியுள்ள நாட்களில் பால் குடிக்கவும், பின்னர் கொடுக்க ஆரம்பித்த வறுத்த விசுக்கோத்து அல்லது பணிஸ் சாப்பிடவும் சரித்திரா அங்கே போய்வந்தாள். வேறு பிள்ளைகளும் நிறையவாய் வரத் தொடங்கின. அவள் பள்ளி போனது எதற்காயிருந்தாலும், முது ஆசிரியை கரும்பலகையில் எழுதி அவளுக்கு வில்லங்கமாய் படிப்பித்தாள். அந்த மொழியை அவள் தமிழென்று சொல்லிக்கொடுத்தாள்.
அவ்வாறு மாதங்கள் பலவாய் ஓடி ஆண்டுகள் சில கழிந்தன.
மாரி முடிந்திருந்த காலம் அது. வனமெங்கும் மரங்களெல்லாம் பசுந்தளிர் தாங்கி நின்றிருந்தன. வேகவேகமாய் மண்ணை தலைநீட்டிய பசும் புற்கள் மறைக்கத் துவங்கியிருந்தன. எங்கும் வனம் பசுமை பூண்டிருந்தது.
பள்ளி துவங்குமென அறிவிக்கப்பட்டு நாள்கள் சில கடந்தும் சரித்திரா பள்ளி போகாதிருந்தாள். தாத்தாவும் அப்பனும் சொன்னார்கள், சரித்திரா வீட்டிலிருக்கிறதைவிட பள்ளி செல்வதுதான் நல்லதென. அவர்களுக்கு அவளைக் கட்டுப்பாட்டில் வைக்க வேறு வழி தெரிந்திருக்கவில்லை.
ஒரு கொப்பியும், புதிதான ஒரு லைப் பென்சிலும் கொண்டு சரித்திரா அன்று பள்ளி சென்றபோது வெள்ளை வேட்டியும், நீண்டதும், கழுத்தால் கொளுவுவதும், கை தொளதொளத்ததுமான சட்டை போட்டு ஒரு நடுத்தர வயது ஆசான் நின்றுகொண்டிருந்தார். அவளுக்குத் தெரிந்த, தெரியாத பல பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஆசான் கட்டித் தொங்கிய ஒரு தண்டவாளத் துண்டில் இருப்புக் கம்பியினால் டண் டண்… டண்டண்…டாண் என அடித்தார். பள்ளி வளாகம் முழுக்க பெருந்தொனியெழுப்பி அந்தச் சத்தம் அடங்கியதும் பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் நான்கு ஐந்து இடங்களில் அமர்ந்தனர். அப்போது கொய்யகம் வைத்துச் சேலைகட்டி, கைநீண்ட பெருங்கழுத்துச் சட்டையும் அணிந்து தன் மிதந்த மார் மறைக்க வலது பக்க மாறாடியும் போட்ட ஒரு மாது வந்தார். அவருக்கு முகம் சிரிப்பற்று கடுகடுவென இருந்தது. அவளது முந்திய ஆசானும் ரீச்சரும் வந்த வழியையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தாள் சரித்திரா. அவளுக்கு ஆனா…. ஆவன்னா படிப்பித்தும், அம்மாவும் ஆடும் இலையும் ஈயும் எழுதப் பழக்கியும் விட்ட அவர்கள் பிறகு வரவேயில்லை.
அவளுக்கு அவள் தெரியாத வேறு மொழி ஒன்று கற்பிக்கப்பட்டது. அதை தன்னால் படிக்க முடியவில்லையென வீட்டிலே அவள் குறைப்பட்டுச் சொன்னபோது, தாத்தா சொன்னார், அவளுக்கு அது படிக்கத்தான் வேண்டுமென்று. ‘நீ சொல்லித் தந்தது படிப்பிக்க மாட்டினமோ?’ என சரித்திரா கேட்க, தலையை வேகமாக வலமும் இடமுமாய் ஆட்டிய தாத்தா சொன்னார், ‘சட்டம் வந்தாச்சு, இனி அதுதான் படிப்பிப்பாங்கள், அதையே நீயும் இனி படிக்க வேணு’மென்று.
சரித்திரா தன்னை யாரோ உள்ளுள்ளிருந்து உடைத்ததாய் உணர்ந்தாள். அந்த உடைப்பால் இரண்டாகிய மனத்தில் தமிழும் சிங்களமுமாகிய மொழிகள் வேறுவேறாய்க் கிடந்தன.
மேலே சில வருஷங்கள் கடந்தன. அது 1958என வருஷம் சொல்லப்பட்டது. அது பெருங்கலகக் காலமென வரலாற்றில் பதியப்பட்டது. அக் கலக காலத்தில் அவளது அப்பன் காணாமல் போனதாகச் சொல்லி, அம்மா அழுத கண்ணோடு ‘இந்தப் பிள்ளையை நானெப்பிடி வளத்து ஆளாக்கப்போற’னென்று அரற்றியபடி திரிந்துகொண்டிருந்தாள்.
தாத்தாகூட அவ்வாறு முகம் தொய்து, உடம்பு தளர்ந்துதான் திரிந்தார். அந்தமாதிரி பாட்டி செத்தபோதுகூட அவர் ஆகியிருக்கவில்லை. அது ஏனென்று சரித்திராவுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் யோசித்தபோது தானும்கூட முன்புபோல் உற்சாகமாயும் சந்தோஷமாயும் இல்லையென்று அவளுக்குத் தெரிந்தது.
ஒருநாள் அம்மா சொன்னாள், ‘நாங்கள் இஞ்சயிருந்து போகவேணும். வனம் முந்தினமாதிரி இல்லை. நிறைய வேற்று மனிசர் வந்து மரம் தறிக்கவும் யானை பிடிக்கவும் செய்யினம். ஆக்கள் காணாமல் போறது அதாலயோ, என்னவோ?’ என்று. தாத்தா குந்தியிருந்தபடி நெடுநேரம் பேசாமலிருந்த வாய்திறந்து சொன்னார், ‘அது சரிதான், இனி இஞ்சயிருந்து வாழேலாது, போகத்தான் வேணு’மென்று. சரித்திரா எங்கேயென்று கேட்கவில்லை. எந்த இடமென்று சொல்லியிருந்தாலும் அவளுக்குத் தெரிந்திருக்கப் போவதுமில்லை. இருந்தும் அவள் அதில் ஒரு ஆறுதலை உணர்ந்தாள். அது தன் தந்தையின் மறைவோடு ஒருவகையில் சம்பந்தப்பட்டதென்று மட்டும் அவளுக்குத் தெரிந்தது. அப்பன் இல்லாவிட்டால் போவதுதான் நல்லதென அவள் நம்பினாள்.
ஒரு விடியல் காலையில் அவர்கள் ஆளுக்குகந்த பருமனில் சாக்கு மூட்டைகளை எடுத்துக்கொண்டு வடக்குத் திசையில் கிளம்பினார்கள்.
அப்போது வனம் அழுதது. வன தெய்வம் தடுக்கும் மார்க்கமறியாது திகைத்திருந்தது. எதிர்ப்பட நீர் சலசலத்தோடிய ஆழமற்ற ஒரு ஆறு கிடந்திருந்தது. அதை புடவையை மன்னிப் பிடித்தபடி அம்மா இறங்கிக் கடக்க ஆரம்பித்தாள். தாத்தா அநாயாசமாக துண்டை உயர்த்தாமலே நடந்தார். அவரது கோவணப் பொதியில் தெறித்த நீர் பட்டது. தலையில் சாக்கை வைத்து இரண்டு கைகளாலும் சமனப்படுத்திப் பிடித்திருந்த சரித்திரா, தன் முழுப் பாவாடை நனைய உருண்டைக் கற்களில் பாதங்கள் அழுந்தும் ஒரு இன்ப வலியை அனுபவித்துக்கொண்டு தாத்தாவின் பின்னால் நடந்தாள். அவள் மனத்துக்குள் ஒரு கதை இருந்தது.
அதை மரம்வெட்டிக் களைத்த ஒரு பொழுதில் சரையைப் பிரித்துவைத்து வெற்றிலை போட்டுக் குதப்பிக்கொண்டிருந்த ஆறேழு பேர்களடங்கிய ஒரு கூட்டத்திடையே, ஓட்டைப் பல்லனாயிருந்த ஒரு மரம்வெட்டி வெற்றிலையின் குதம்பல் சிந்தச் சிந்தச் சொல்லியிருந்தான். அந்தக் கதை சொல்லப்பட்டபோது சரித்திராவுக்கு பத்து அல்லது பதினொரு வயதிருக்கும். அது நல்ல சிருங்காரக் கதையாகவிருந்தது. அவளுக்கு வெட்கம் வரப்பார்த்தது. யாரும் தன்னைக் காணாததில் அவள் வெட்கத்தைவிட்டு கதையைக் கேட்டாள். கண்ட காட்சியொன்றுபோல கேட்ட அந்தக் கதை அவள் மனத்தில் மிக்க நெடுங்காலம் ஆழப் பதிந்திருந்தது.
ஒருகாலத்தில் அந்தக் காட்டின் தென்திசையில் ஒரு களனி இருந்தது. அந்தக் களனியின் மேட்டு நிலத்தில் ஒரு பெரிய மண்வீடு இருந்தது. அந்த மண்வீட்டில் ஒரு கிழவன், அவனது இரண்டு மகன்கள், மூத்த மகனது மனைவியென நான்கு பேர் வசித்து வந்தார்கள்.
மூத்த மகனின் மனைவி முண்டுடுத்தி பெருங்கழுத்துச் சட்டை மட்டும் போட்டவளாயிருந்தாள். அவளுக்கு பெரிய தனங்கள் இருந்தன. பெருங்கழுத்தினூடாக, அவள் குனிந்து வேலைசெய்யும் பொழுதுகளில் தனக் குடுவைகளுக்கிடையிலான பெருங் கணவாய் தெரியுமாயிருந்தது. கண்ணில்பட நேர்ந்த சமயங்களில் கிழவனின் பார்வை அந்தக் கணவாயுள் விழுந்து நீந்திக்கொண்டிருக்கும். அவனது கைகளோ அடர்ந்து நரைத்த தன் மீசையை உருவிக்கொண்டிருக்கும்.
மூத்த மகனின் மனைவிக்கு இது தெரிந்தாலும் அவள் எதுவித சலனமும் பட்டுக்கொள்ளாதிருந்தாள். இன்னும், அந்தக் கிழவனுக்கே உணர்ச்சிகளைக் கிளர்த்த முடிந்ததில் மெல்லிய சந்தோஷத்தையும் அவள் கொண்டதாய்த் தெரிந்தது.
அப்போது விதைத்த பயிர் வயலிலே நன்கு வளர்ந்திருந்தது. பன்றிகள் கூட்டமாய் வந்து கதிர்நெல்லை வெட்டியழித்துவிடுமென இரவுகளில் மூன்று ஆண்களும் நாளுக்கு ஒருவர்வீதம் காவலுக்கிருந்தார்கள்.
ஒருநாள், தன் தாய் தந்தையரைப் பார்க்க ஹபெஸ்ஸ நகருக்குக் கிட்டவாயுள்ள கிராமம் போயிருந்த மூத்த மகனின் மனைவி அன்று வீடு திரும்புவதாக இருந்தாள். வண்டி கொண்டுபோய் அவளை யாராவது ஒருவர் கூட்டிவரவேண்டியிருந்தது. முதல்நாளிரவு காவலுக்கிருந்து வந்த மூத்த மகன் தந்தையைப் பார்த்து, நித்திரை முழிப்போடு தன்னால் அவ்வளவு தூரம் வண்டியோட்டிப் போய்வர முடியாதென்று அவனையே போய் தன் மனைவியை அழைத்துவரும்படி சொன்னான். கிழவனும் மறுக்காமல் வண்டிகட்டிப் புறப்பட்டான்.
தன் மருமகளை ஏற்றிக்கொண்டு கிராமத்திலிருந்து மதியத்தில் புறப்பட்ட கிழவன், இடைவழியில் மாடுகள் நீரருந்தவும், சிறிது இளைப்பாறவுமாய் ஒரு குளத்தின் மரத்தடியில் வண்டியை நிறுத்தி, மாடுகளுக்கு நீர் காட்டி, அவை மேய சிறிது அவகாசமளித்து குளத்துப் புற்றரையில் விட்டிருந்தான்.
அப்போது வெற்றிலை போட்டு சப்பித் துப்பிக்கொண்டிருந்த கிழவன் தன் மருமகள் வாத்துபோல அங்குமிங்கும் நடப்பதையும், மயிலாய் அசைவதையும், குளத்து நீரையள்ளி தெளித்து மகிழ்வதையும், கரையின் குறுணிக் கற்களைப் பொறுக்கி அவற்றை குளத்தில் படர்ந்திருந்த தாமரை இலைகளில்பட்டு துள்ளும்படி நீரில் எறிவதையும் கண்டபடி தானும் மகிழ்ச்சி அடைந்துகொண்டிருந்தான்.
அவ்வேளை மருமகள், “மாமனே!” என அழைத்தாள்.
கிழவன் ஆர்வமெழத் திரும்பி, “என்ன, மருமகளே?” என்று கேட்டான்.
“எனக்கு அந்த தாமரைப் பூக்களிலே மிகுந்த விருப்பம் பிறந்திருக்கு. கொஞ்சம் பிடுங்கித் தர இயலுமோ?”
கிழவன், “சொன்னால் செய்வன்தான”யென எழுந்து துண்டை உரிந்து கரையில் எறிந்துவிட்டு நீரில் இறங்கினான். தாண்டித் தாண்டி நடுக் குளத்தில் பூக்களிருந்த இடத்தை அடைந்தான். குளிர்நீர் அவன் விதைகளையும், குறியையும் சில்லிடப் பண்ணி குதூகலம் எழுப்பியது. அவன் அவள் கேட்டபடி பறித்துவந்து கொடுக்க, “ஐயையோ, மாமனே! இதுகள் மொட்டாயெல்லோ இருக்கு? நான் விரிந்த பூக்களல்லவோ கேட்டேன்” என்று அலறிச் சொன்னாள். அதற்கு கிழவன், “பூக்கள் மாலைக்குள் வாடிவிடும். மொட்டுக்கள்தானே நாளைவரையிருக்கும். பிறகு அவை பூவாகும்” என்றான். பிறகு, “மொட்டையே பார்த்துக்கொண்டு போனதால மொட்டையே பிடுங்கியிட்டேன்போல” என்றான் சிரித்தபடி.
அவள் ரசிக்காமல் அடங்கியிருந்தாள்.
பின் புறப்படலாமென கிழவன் சொல்ல மொட்டுக்களை வண்டியில் வைத்துவிட்டு பெருமரத்தின் பின்னே அவசரமாய் ஒதுங்கி முண்டை மன்னிப்பிடித்தபடி நின்று மூத்திரம் கழித்தாள். அது கண்ட கிழவனுக்கு வீரியம் பொங்கத் தொடங்கிவிட்டது. அடக்கிவைத்திருந்த ஆசையெல்லாம் பொங்கி வெளிப்பட துடித்து நின்றது. கிழவன் பாய்ந்தோடிப் போய் அவளைக் கட்டியணைத்தான். பின் அவளின் எதிர்ப்பின்மை தெரிய அப்படியே அவளை மரத்தோடு சாய்த்துவைத்து அவளோடு போகம் செய்தான்.
மருமகள் அவனது ஆண்மையில் வாய்பிளந்து தலையைப் பின்னே சரித்து பாதிவிழி மூடியபடி மயங்கி நின்றாள். அக் குளக்கரை அரசமரத்து இலைகளெல்லாம் அப்போது சரசரத்துப் பறப்பதும், கிளைகளெல்லாம் குலுங்குவதும் அவள் பாதி விழியால் கண்டாள்.
வெகுநேரத்தின் பின் தன் ஆசை தெறித்தடங்க கிழவன் சுயமடைந்து வண்டியில் மாடுகளைப் பிணைக்க கோவணத்தை இழுத்துச் சொருகியபடி முன்னால் நடந்தான். காணாத இன்பம் கண்ட மருமகள் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தபடி பின்தொடர்ந்து வண்டிலுக்குப் போனாள்.
இருட்டுகிற வேளையிலே வண்டி களனி வீட்டை அடைந்தது. தூங்கியெழுந்து குளித்து சாப்பிட்டு நீண்ட நாட்கள் பிரிந்திருந்த மனைவியைக் காணும் ஆவலில் காத்திருந்தான் மூத்தவன். சின்னவன் முற்றத்தில் ஏதோ காரியத்தில் மூழ்கியிருந்தான். மாடுகளை அவிழ்த்து கட்டிவிட்டு, அன்றைக்கு காவல் தன் பொறுப்பென்று களைப்பே அற்றவன்போல் களனிக்குப் புறப்பட்டான் கிழவன்.
இருட்டு பூரணமாய் விழுந்து நிலா காலிக்கத் தொடங்க வீட்டுக் கதவு தாழிடப்பட்டது. கட்டிலில் பதுமையாய்க் கிடந்திருந்த மனைவியைக் காண மூத்தவனுக்கு கொள்ளை ஆசை பிறந்தது. மெதுவாய் அவளருகில் சரிந்து, ஆதரவாய் அவள் முலை, ஆகம், உதரம், அடிவயிறு தடவி, ஒரு பூவை முகர்வதுபோல் அவளை இதமாய் முத்தமிட்டு புணர்ந்து முடித்தான். அவனுக்கு அவ்வளவு காலம் பிரிந்திருந்த மனைவிமேல் மீண்டும் ஆசை வந்தது. அதன் பின்பும் தணியாதவன் மேலுமொருமுறை அவளைக் கூடினான். அதிகாலையில் மன்மத விளையாட்டை அவர்கள் முடித்ததும் கணவன் கேட்டான், “வாழ்க்கையில் இன்றுபோல் இன்பம் நீ என்றேனும் கண்டதுண்டோ?”வென.
மனைவி சட்டையை அணிந்து முடிச்சை இறுக்கி இட்டபடி சொன்னாள்: “பூ…! இது என்ன? உன் அப்பன், அந்தளவு கிழவன், நான் சிறுநீர் கழிக்கையில் கண்டுவிட்டு ஓடிவந்து என்னைப் போகித்த வேகத்தில் நான் சாய்ந்து நின்ற பெரிய அரச மரமே அடி காண ஆட்டம் கண்டது. நீ புரிந்த போகத்தில் நான் கிடந்த கட்டில்கால் கொஞ்சமும் முனங்கவில்லை.”
‘ஆ, பாவி, நம்பி அனுப்பினனே, இப்பிடி மோசஞ் செய்திட்டியேடா!’ என மனம் துடித்து, “என் பெண்டிலைக் கெடுத்த பாவி உன்னைக் கொல்லாமல் விடமாட்ட”னென்று அலறியபடி வெட்டுக்கத்தியுடன் பாய்ந்து வெளியே ஓடிவந்தான்.
அப்போது வெளியே படுத்திருந்த சின்னவன் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்து அண்ணனைத் தடுத்து, “ஏன் இவ்வளவு சீற்றம்? யார் மீது?” என காரணம் வினவினான்.
தம்பிக்கு நடந்தது சொன்னான் அண்ணன்.
சின்னவன் நடந்ததெல்லாம் விளங்கினான்.
இந்தநிலையில் அண்ணனைத் தடுக்க முடியாதென்பது அவனுக்குத் தெரிந்தது. மனைவியைக் கெடுத்தவனை எவரும் கொல்லவேதான் ஓடுவர். தந்தையை யூகமாய்த்தான் காப்பாற்ற முடியுமென்று நினைத்து விரைந்து திட்டமொன்று இட்டான்.
“அண்ணா!” என ஆதரவோடு மெல்லச் சிரித்துச் சொன்னான்: “பூ… இதுதானா? இதற்காகவா இத்தனை கோபம் கொண்டிருக்கிறாய்? நான் என்னவோ ஏதோவென்று பயந்துபோனேன். அண்ணா, தெய்வத்துக்கு நிகரான நம் அன்னையையே எத்தனை இரவுகளில் இவன் புணர்ந்திருக்கிறான்! அதை நீயும்கூட கண்டிருந்தாய்தானே? அப்போதெல்லாம், கத்தியை எடுத்துக்கொண்டு இந்தமாதிரி அவனை வெட்டிவிடுகிறேனென்று நீ ஓடவில்லையே! அன்று எல்லாம் பார்த்துவிட்டு பேசாமல் இருந்த நீ, இப்போது உன் மனைவியைப் புணர்ந்தானென்று கத்தியை எடுத்துக்கொண்டு ஓடுவதில் ஞாயமில்லை. போடு கத்தியைக் கீழே!”
அண்ணன், தம்பியின் பேச்சில் ஆவேசம் தணியப் பெறலானான். ‘அன்னையைப் புணர்ந்தபோதே அவனை வெட்டியிருக்கவேணு’மென்று எண்ணி கத்தியைக் கீழே எறிந்தான் .
செரும வந்த உந்துதலை அடக்கியடக்கி சரித்திரா மறைந்துநின்று கேட்ட கதை இது.
அவ்வப்போது மேலோட்டமாய் நினைவில் வந்திருந்தது.
அன்றைக்கு சாக்கு மூட்டைகளுடன் மருமகள் முண்டை மன்னிப் பிடித்தும், கிழவன் கோவணம் தெரிய மேலே இழுத்த துண்டுடனும் போய்க்கொண்டிருக்கையில், சூழ்நிலையின் பொருத்தம் கருதி விஸ்தாரமாய் அவள் மனத்தே அது விரிந்தெழுந்திருந்தது.
அந்தக் கதையில் அவளது சொல் எதுவும் உள்நுழைந்து இருந்ததாவென நிச்சயமாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் கதைகள் அவரவரின் சொல்களையும் ஏற்றே வாழ்கின்றன என்பதை ஆசான் விரித்துரைத்த புத்தபிரான் கதையைக் கேட்டதிலிருந்து அவள் அனுமானித்து அறிந்திருந்தாள். ஏனெனில் அந்தக் கதையை அவள் இரண்டுவிதமாய் ஆசானிடமிருந்தும், புத்தசாமியிடமிருந்தும் கேட்டிருக்கிறாள்.
ஆற்றைக் கடந்து மூவரும் மறுகரையை அடைந்தனர்.
சாக்குப் பொதியை கீழே இறக்கி வைத்துவிட்டு ஆயாசம்கொண்டபடி வந்தவழி பார்த்து திரும்பி நின்றிருந்தான் கிழவன். ‘ம்…!’ என பெருமூச்சுவிட்டான். பார்த்திருந்த அவளுக்குமே அவ்வாறுதான் பெருமூச்சு வந்தது. தாயாருமே அவ்வாறு விட்டிருக்கலாம்.
‘ஏ… வனமே! விடை கொடு. ஏ… யான் ஓயாவே! எங்களை இதுவரை வாழவைத்த உனக்கு எங்கள் நன்றி. வன தெய்வங்களே! நாங்கள் மனிதர்கள். பலகீனமானவர்கள். எங்கே சென்றும் சுகமாக வாழ வாழ்த்தியனுப்புங்கள்!’
தாத்தா, பேத்தி, மருமகள் மூவரின் பிரார்த்தனை சூழலெங்கும் உருக்கமாய் வியாபித்தெழுந்தது.
12
ஒரு ஐந்து மணியாகும் நேரமளவில் பரஞ்சோதி சந்திரிகாவின் வீடடைந்தபோது அவள் அங்கே நின்றிருந்தாள். சங்கவி மூலமாக ஏற்பட்ட முதல் பரிச்சயத்தின் பின் சிலமுறையே அவளைச் சந்தித்திருப்பினும், இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் விழுந்திருந்தது.
கச்சேரி றோட்டிலிருந்து யாழ் ரயில் நிலையம் போகும் பாதையிலிருந்தது அவள் குடியிருந்த வாடகை வீடு. வீட்டு முற்றத்தில் மாமரமொன்று நின்றிருந்தது. பிடித்த பிஞ்சுகளில் பெருவாரியும் வெம்பல்களாய்க் கீழே கொட்டுண்டு கிடந்தன. மீதியிலும் பெரிதாக மிஞ்சுமென்ற நம்பிக்கை காலநிலை பொறுத்து எழவில்லை. மாரிக் காய்ப்பு பெரும்பாலும் அப்படித்தான் ஆகிறது எங்கேயும்.
மாமரம் முற்றத்திலும், தொடர்ந்து விறாந்தையிலும் விழுத்திய நிழல் குளிர்மையாயுறைந்த இடத்தில் விரித்திருந்த பாயில் சுவரோடு சாய்ந்திருந்தாள் சந்திரிகாவின் தாய். அருகே நொண்டிச் செல்ல வசதியாக இன்னும் எந்த என்.ஜி.ஓ.வினதும் பார்வை அவளில் விழவில்லையென்பதைச் சொல்லிக்கொண்டு கிடந்தன ஊன்று கட்டைகள். முல்லைத்தீவிலிருந்து அண்மையில்தான் அங்கே வந்திருந்தாள். கூட தந்தையும் வந்திருக்கலாம். வெளியே போயிருப்பார். அவர்களை அங்கே கூப்பிடவிருந்ததை சந்திரிகா போனதடவை சந்தித்தபோது பரஞ்சோதியிடத்தில் சொல்லியிருந்தாள்.
எவரையும் சுகம் விசாரிப்பது சுகமான அனுபவமாக இல்லாமலாகி வெகுகாலம். பழக்கத்தில் அது வந்துவிடுகிற நிஜமிருந்தும், சுக செய்தியை எதிர்பாராதே கேட்கவேண்டியிருந்தது. அதனால் சிரித்து தலையசைத்து வந்தனம் செய்வதே பெரும்பாலானவர்களிடத்தில் நடைமுறைக்கு வந்திருந்தது. அது சுலபமாக இருந்தது. நேரில்தான் அது சரியாகும்.
பரஞ்சோதி சந்திரிகாவின் தாயைப் பார்த்துச் சிரித்து ஒருமுறை தலையசைத்துவிட்டு விறாந்தை நாற்காலியில் அமர்ந்தாள். கூடவந்து சந்திரிகா பக்கத்தில் அமர்ந்து, “கண்டு கனகாலம், அன்ரி” என்று முகமன் சொன்னாள்.
“மெய்தான். இப்பாவாச்சும் கண்டதே பெரிய காரியம்” என்றாள் பரஞ்சோதி.
சந்திரிகா சிரித்தாள்.
அவளது கண்கள் வீங்கியிருந்தனபோல் தெரிந்தது பரஞ்சோதிக்கு. அதில் சிவப்பு ரத்த நாளங்கள் வெகுவாய் ஓடியிருந்தன. மெலிந்த உடம்புதான் அவளுக்கு. அன்றைக்கு இன்னும் மெலிந்துபோனவளாய்த் தோன்றினாள்.
சங்கவிபற்றி, அவளது பிள்ளைபற்றி முதலில் விசாரிப்பாயிற்று. போன மாதம் வலிந்து காணாமல்போனோர் பற்றிய விசாரணைக் கமிஷனுக்கு அவள் வந்திருந்ததைச் சொன்னாள் சந்திரிகா. பரஞ்சோதிக்கு அத் தகவல் மனத்துக்கு மிகுந்த நிறைவாய் இருந்தது. குணாளன்பற்றி ஒரு முடிவு, அது நல்லதோ கெட்டதோ, விரைவில் தெரிவது நல்லதுதான் என நினைத்தாள். யாழ்ப்பாணம் வந்தவள் அல்வாய் வராமல்போனதை ஏனென்று நினைத்து மனம் குழம்பவில்லை பரஞ்சோதி. முதல்நாள் சாந்தமலர் சொன்னதை அவளிடம் சொல்லவேண்டுமென்பது ஞாபகமாயிற்று.
“நம்பிக்கையாய் எதாவது தெரியவந்துதோ, சந்திரிகா? எவ்வளவு நாளைக்குத்தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கப்போகினம்?”
‘ப்ச்!’ சந்திரிகா உணர்வு தெளித்தாள்.
அது எல்லா சங்கதிகளையும் பரஞ்சோதிக்குத் தெரியப்படுத்தியது.
‘போன ஆறு வருஷமாய்ச் சொல்லிக்கொண்டிருந்ததைத்தான் இப்பவும் சொல்லுகினம்’ என்று அவள் சொன்னதாய்க் கொள்வதா? அல்லது ‘உவையென்ன சொல்லுறது? எல்லாம் தெரிஞ்ச கதைதான? தாட்டிருந்தாலும் இத்தனை வருஷத்தில எலும்பும் உக்கிப்போயிருக்கும்’ என உறுதிப்பட்டிருப்பதாய்க் கொள்வதா? பரஞ்சோதிக்குத் தெரியவில்லை.
இனி அதுபற்றி பேச பெரும்பாலும் எதுவுமில்லை. பேசாமல்விடவே நிலைமை இருக்கிறபோதிலும், மேலே எதையும் தொடரமுடியாதபடி அது தன்னை ஓடிவந்து முன்னிலைப்படுத்திக்கொண்டிருந்தது.
வேறுபேருக்கு அப்படி வரலாம். அப்படித்தான் வரும். அவர்களுக்கே அப்படி வருமா? வரக்கூடாது. வந்தால் அதன்பின்னே சூக்கும காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் அதைத்தான் கதைத்தார்கள்.
சந்திரிகா தேநீர் வைத்துவர மூவரும் குடித்தபடி அமர்ந்திருந்தனர்.
ஒருபோது சந்திரிகா கேட்டாள்: “ சங்கவியை என்ன செய்யிறதாய் யோசினை, அன்ரி? உப்பிடியே விட்டிடப் போறியளோ கடைசிவரைக்கும்?”
அதை அவ்வளவு அக்கறையில் அவள் கேட்டிருந்தும் பரஞ்சோதிக்கு சற்று எரிச்சல் வரப் பார்த்தது. அது குணாளன்பற்றித் தெரியாமல் சட்டுப்புட்டென்று தீர்மானித்து நடத்துகிற காரியமா? மேலும் அதுபற்றி பரஞ்சோதியும் யோசிக்காமலா இருக்கிறாள்? ஆனாலும் பதவிசாய் மறுமொழி சொன்னாள்: “பெத்தவளுக்கும் கூடப்பிறந்ததுகளுக்கும் அந்த ஆசை இருக்குமோ? ஆனா நாங்கள் என்ன செய்யேலும், சந்திரிகா? அவளை விரும்புற ஒரு பெடியனே சுத்திச் சுத்தித் திரிஞ்சுகொண்டிருக்கு. அதுவாய் வந்தாத்தான் உண்டு. பாத்துக்கொண்டிருக்கிறம்.”
மெய்தான். கணவனைக் காணாமலாகிப் போனவர்களுக்கு பெரும்பாலும் அதுவே கடைசிவரையான விதியாக ஆகியிருக்கிறது. அதிலிருந்து உன்னியெழும்பி மீண்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் தம்மை வெளிவெளியாய் அடையாளம் காட்டியதில்லை. ஊரின் அவச்சொல்லை அது அள்ளிக்கொள்வதாய் இருந்தது.
பல கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் கூட வந்துகொண்டிருந்த கணவனைக் காணாமலாகிய சிலர், கடைசியாக நடந்த விசாரணைக் கமிஷனுக்கு வரவில்லை. ஏனென்று அவளுக்கு ஊகமுண்டு. பலபேர் இன்னும் அலைந்துகொண்டே இருக்கிறார்கள். அது ஒரு நியாயப்பாட்டிலானதாய் இருந்தது. அவர்கள் லௌகீக கஷ்ரங்களில் வதங்கினார்கள். காதலில் துடித்தார்கள். சரீரார்த்தத்த உணர்வெழுச்சியில் வாடினார்கள். அது காத்திருத்தல்கூட இல்லை. காக்கவேண்டிய இருத்தல்.
ஊர் நிலைமைபற்றிய உசாவலில் சிறிதுநேரம் கழிய, “உம்மட விஷயம் என்னமாதிரி, சந்திரிகா? யோசினையொண்டுமில்லையோ?” என அவளது மனநிலை இறுக்கமடைந்துவிடாத அவதானத்துடன் கேட்டாள் பரஞ்சோதி.
கேட்டு சந்தரிகா கலகலவெனச் சிரித்தாள். எல்லாமே அழிந்துபோனதா அவள் வாழ்வில்? ஏன் அத்தனை நிர்க்கதி? அவளது கல்யாணத்தில் பிள்ளைகூட இல்லையே! இருந்துமேன் விரக்தி கொள்ளவேண்டும்?
காலம் எவரையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு வீடும் அழிந்த மனங்களின், அழிந்த வாழ்வுகளின், அழிந்த நம்பிக்கைகளின் அம்சங்களைக் கொண்டேயிருக்கின்றது. எண்ணி பரஞ்சோதி ஏங்கினாள்.
சந்திரிகாவிடத்தில் எழுந்த சிரிப்பை அவளது தாய் விரும்பவில்லையென்பது அவளது செருமலில் தெரிந்திருந்தது. அவள் சிரித்து முடிய அடக்கியடக்கி வைத்திருந்த தன் மனக் குமைச்சலை அவள் வெடித்தாள்:
“ம்…! அவ எல்லாத்தையும் முந்தியே யோசிச்சு முடிச்சிட்டா. இனி எதுக்கு யோசிக்கவேணும்? அவ நினைச்சபடிதான் வாழுவா. ஆர் இதைக் கேக்கிறது? மண்டையில அடிபட்டு மாறாட்டத்தில திரியிற தேப்பனால ஏலுமோ? நொண்டி நொண்டித் திரியிற தாய்க்காறியால ஏலுமோ?”
உணர்வுகள் அவ்வாறு இறுகிவருகையில் சராசரி மனிதர்களிடையில் விஷயத்தை மாற்றுவதுதான் மிகச் சுலபமாகச் செய்யக்கூடியது. சாந்தமலர் அந்த உபாயத்தைத்தான் பாவிப்பாள். அப்போது பரஞ்சோதிக்கு அது கைகொடுத்தது. அவள் சந்திரிகாவின் தாயாரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்:
“ஏன் பாருங்கோ, சில்வெஸ்ரரின்ர அக்கா, அம்மா ஆக்கள் வந்துபோறேல்லயோ? ரூபியும் புருஷனும் நாலைஞ்சு மாசத்துக்கு முந்தி யாழ்ப்பாணம் வந்துபோனதாய் அறிஞ்சன். இஞ்சயும் வந்தவையோ?”
“சில்வெஸ்ரரின்ர அப்பா காலத்திலயிருந்து அந்தக் குடும்பத்தோட எங்களுக்கு நல்ல ஒட்டு. அக்கா, அம்மா எல்லாரும் வந்துதான் போய்க்கொண்டிருந்தினம். சில்வெஸ்ரர் போனமுறை வந்தாப் பிறகு எல்லாம் நிண்டுபோச்சு. எல்லாம் விதி. வேற நானென்ன சொல்லுறது? இதுக்காண்டி அவைய நான் குறைசொல்ல மாட்டன். எங்கட வீட்டில நடக்கிற கூத்துகளைச் சொல்லவேணும்” என்றவள் ஒருமுறை சந்திரிகாவைத் திரும்பி நோக்கிவிட்டு தொடர்ந்தாள்: “நீங்கள் பிறந்து வளந்து வாழுற மண்ணில்ல என்ர மண். என்ர குடும்பமும் இந்த நிலவெல்லையைச் சேந்ததில்லை. எல்லையற்றுக் கிடந்த ஒரு வன பூமியைச் சேர்ந்தவள் நான். எங்கட குடும்பம், ஊர் எண்டும் சொல்லமுடியாத ஒரு பிரதேசத்தில, வாழ்ந்துகொண்டிருந்தது. அங்க வாழுறதுக்கு இடைஞ்சல் வர, மானம் மரியாதையளக் காப்பாத்திக்கொண்டு அந்த மண்ணைவிட்டு வெளிக்கிட்டு வடக்காய் வந்தது. கடவுள் புண்ணியத்தில வன்னியில வாழ்க்கை கஷ்ரமில்லாமல் நேர்மையில அமைஞ்சிது. அந்த மானம் மரியாதையளக் கட்டிக்காத்துக்கொண்டு என்ர காலம்வரை நான் வாழ்ந்திட்டன். இவளின்ர கையில எண்டைக்கு அதைக் குடுத்தனோ, அண்டைக்கு எல்லாம் போச்சுது. தின்னக் குடிக்க வழியில்லையெண்டு இஞ்ச வந்து நாங்கள் கிடக்கேல்ல. இவ மாறவேணும். மாறினா மட்டும் போதாது. நாங்கள் சொல்லுறபடி கேக்கவும் வேணும். நாளுக்கு ஒரு கலியாணமெண்டு சீவிக்கிறதவிட... நானெண்டா உயிரை மாய்ச்சிடுவன்.”
தட்டுத்தடுமாறி எழுந்து கட்டைகளை டொக்கு… டொக்கென்று ஓங்கி நிலத்தில் அறைந்தபடி கதவைத் திறந்துகொண்டு அவள் உள்ளே போய்விட்டாள்.
சூழல் மௌனத்தில் உறைந்து கிடந்தது.
திகைப்பிலிருந்து மீண்டு பரஞ்சோதி திரும்பினாள். பார்வையில், குனிந்தபடி கண்ணீர் சிந்த இருந்த சந்திரிகா தென்பட்டாள்.
கேள்விகள் இல்லாமல் பதில் கிடைத்திருந்தது பரஞ்சோதிக்கு. பதிலின் மேலும் கேள்விகள் இருந்தன. அவை அப்போதைக்கு உசிதமானவையல்ல.
சந்திரிகாவின் தாய் அவள் குறித்த அந்த இரகசியத்தை தனக்குக்குள்ளேயே வைத்திருந்திருக்கலாமென்று பட்டது பரஞ்சோதிக்கு. அதற்கான நியாயங்கள் சந்திரிகாவிடம் இருக்கவும்கூடும். தாய் அதை யோசிக்காதது மட்டுமில்லை, அவளின் துகிலையும் உரிந்துகொண்டு போயிருக்கிறாள்.
ஒருவேளை பரஞ்சோதியையும் உள்வாங்கிவிட, மூன்றாம் தரப்பின் ஒரு அவசியத்தைக் கருதி, அவ்வாறு அவள் செய்தாளோ?
பரஞ்சோதியிடத்தில் இப்போது இருந்தது ஒரு பொறுப்பான காரியம். அவளுக்கு நேரமாகிக்கொண்டிருக்கிறதுதான். ஆனாலும் சந்திரிகாவை அப்படியே விட்டுவிட்டு அவளால் ஓடிவிட முடியாது.
தானெடுக்கும் எந்தப் பேச்சும் சந்திரிகாவை எள்ளளவும் நோகவைத்துவிடக்கூடாது என்ற திண்ணமிருந்தது அவளுக்கு. அறிவுரை ஆருக்குத் தேவை? அறிவு அவரவரிடமும் நிறையவேதான் இருக்கிறது. உண்மையில் தேவையானது ஆறுதல், அரவணைப்புகள். அவை இல்லாதபடியாலேயே பல காரியங்கள் தீயனவாய் நடந்து முடிந்துவிடுகின்றன. அதனால் சந்திரிகாவை ஆறுதல் படுத்தவும், ஆற்றுப்படுத்தவுமான வார்த்தைகளை அவள் கோர்த்தாள். “விடும், பிள்ளை. அம்மாவும் என்ன ஈறலில அப்பிடிச் சொல்லியிட்டுப் போறாவோ? உதுகளுக்கெல்லாம் நாங்கள் குலைஞ்சா எப்பிடி?”
சந்திராவுக்கு முதலில் தன்னைத் தனக்கே வெட்கமாகிப்போனது. பளீரென்ற வெளிச்சத்தில் கண்ணாடி முன்னால் அம்மணமாய் நிற்கிற கூச்சமெடுத்தது. ஆனாலும் அது அவளது வாழ்க்கை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான விதிகளைக் கொண்டுவந்து யாரும் இன்றைய அழிச்சாட்டியம் முடிந்த காலத்தில் வைத்து எதையும்… எதையும்தான்… அளந்து பார்த்துவிடக் கூடாது.
அவள் கண்களைத் துடைத்தாள், தன்னைத் தேற்றுவதுபோல். இப்போது அவள் உண்மையைத் தெரிவிக்கவேண்டும். அது ஒரு அறிவிப்பாய் இருக்கவேண்டும். பரஞ்சோதிக்கும், உள்ளே போய்விட்ட அம்மாக்காரி சமுத்திராவுக்கும். சந்திரிகா தன்னை உருக்கினாள். அதையே வார்த்தைகளாய் வார்த்தாள்.
“உயிர் தப்பவேணுமெண்டுதான் சமாதான காலத்தில ஒருத்தனோட ஓடிப்போய் குடும்பம் நடத்தத் துவங்கினன். அவன் ஆயுதமெடுக்காட்டியும் இயக்கத்தோட வலு ஒட்டாய் இருந்தவன். எப்பிடியோ யாழ்ப்பாணம் வந்து வாழ்ந்துகொண்டிருந்தம். யுத்தம் முடிஞ்சாப் பிறகு, பிழைப்புக்கு எதாவது செய்யவேணுமேயெண்டு கொழும்புக்கு வெளிக்கிட்டம். சரியாய் மாங்குளம் கடக்கிற நேரத்தில செக் பொயின்ரில வைச்சு ஆமி என்னைப் பிடிச்சான். நான் ரகசியப் போராளியாய் இருக்கேல்லை. நாலு பேருக்குத் தெரிஞ்ச, நாலு பேர் பயப்பிடுற போராளியாய்த்தான் இருந்தன். மாங்குளத்தில அடையாளம் காட்ட நிண்ட அந்த நாலு பேரில ஒருத்தன் என்னை போராளியாய்க் காட்டிக் குடுத்தான். காம்ப்புக்கும் கொண்டுபோகாமல் ஆறு நாள் வைச்சிருந்து என்னை நார் நாராய்க் கிழிச்சிட்டு விட்டாங்கள். ஆனந்தன் கொழும்பில நிக்கிறானோ, வீட்டில நிக்கிறானோவெண்டும் தெரியேல்ல. தனியனாய்த்தான், ஆரிட்டயோ மண்டாடி பஸ்சுக்கு காசு வாங்கிக்கொண்டு வீட்டை வந்தன். இஞ்ச வந்தா, இவன் ஆட்டிறைச்சி வாங்கி சமைச்சு, சாராயமும் குடிச்சுக்கொண்டிருக்கிறான். வந்த என்னைத் திரும்பியும் பாக்கேல்லை. என்னை விட்டிட்டு இவன் புத்தியாய்த் தப்பி வந்திட்டானெண்டு நான் பாயவேண்டிய இடத்தில, ஏதோ நான்தான் குற்றவாளிமாதிரி நடந்தான். அஞ்சாறு நாள் ஆகேல்லை. ஒரு ராத்திரி நல்லாய் நேரஞ்செண்டாப் பிறகு நான் அறைக்குள்ள படுத்திருக்கிறன். இவன் வெளியில. தொம்... தொம்மெண்டு கதவு தட்டின சத்தம் கேட்டு, நான்தான் எழும்பிவந்து கதவைத் துறந்தன். ‘உவன்தா’னெண்டு விரலை நீட்டி ஒருத்தன் கத்தினான். வந்த ரண்டாக்கள் எனக்குப் பின்னால நிண்ட ஆனந்தனை பிடிச்சபிடியில தறறெவெண்டு இழுத்துக்கொண்டு போனாங்கள். ‘ஐயோ, விடுங்கோ… அவரை விடுங்கோ’வெண்டு தொண்டை கிழியக் கத்தினன். கொண்டுபோட்டாங்கள். அண்டை அயல்ல என்னெண்டு கேக்க ஒரு சனம் வெளிய வந்து பாக்கேல்லை. அடுத்தநாள் காலமை பொலிஸில கொம்பிளெயின்ற் பண்ணினன். ஆமிக்காறன் பிடிச்சிருப்பானெண்டு சொன்னாங்கள். ஆமிக் காம்பபெல்லாம் ‘ஆனந்தனைப் பிடிச்சியளோ… எங்க வைச்சிருக்கிறிய’ளெண்டு அந்தளவு உடம்பு நோவோடயும் கேட்டுக்கேட்டுத் திரிஞ்சன். ஒரு ஆமி என்ர பரதவிப்பில இரங்கி ரகசியத்தில வந்து அந்தாளை கொழும்புக்குக் கொண்டுபோயிட்டதாய்ச் சொன்னான். தோட்டைக் கழட்டி வித்திட்டு, அடுத்தநாள் கொழும்புக்கு ஓடினன். கொழும்பு எனக்குத் தெரியாதன்ரி. கண்ணால கண்டதுகூட இல்லை. கொழும்பில இடம்வலம் தெரியாமல் நான் அலையேக்க, இடங்காட்டுறனெண்டு ஒராள் கூட்டிப்போய் ரா முழுக்க வைச்சிருந்திட்டு போகேக்க காசு தந்திட்டுப் போனான். என்ர உடம்பில சீவனில்லை. வீட்டில வந்துகிடந்து அழுதன். அவ்வளவுதான். அதுக்குமேல அனுபவிக்க எனக்குத் தெம்பில்லை. அதுக்குமேல அனுபவிக்க எனக்குத் துயரமும் இல்லை. அதுக்கு மேல அம்மா சொன்ன மானம் மரியாதையளக் காப்பாத்த எனக்கு புறியமுமில்லை. போராளியாய் இருந்திட்டு வந்து நாறிப்போய்க் கிடக்கிற துக்கம் எனக்கெல்லோ தெரியும். என்னை அந்த நேரத்தில ஆர் என்ன, ஏது எண்டு கேட்டினம்? ஆனா குறை விளங்கமட்டும் சில்வெஸ்ரர் வீட்டிலயிருந்து ஓடிவந்திட்டினம். ஒரே பேச்சாய்ச் சொல்லியிட்டன், விரும்பினா வாருங்கோ, இல்லாட்டிப் போங்கோ, நான் ஒருதரையும் வருந்தி அழைக்கமாட்டனெண்டு. நான் அழிஞ்சுபோனதவிட அம்மாக்கு அவையின்ர சொந்தம் விடுபட்டுப் போனதுதான் பெரிய துக்கமாய்ப் படுகிது. அதுதான் பொரிஞ்சு தள்ளியிட்டுப் போயிருக்கிறா. நான் இப்ப தனியனாயிட்டன். ஆரும் விரும்பினது என்னத்தையும் சொல்லட்டும். எனக்கு இனி விடிவில்லை எண்டதால நானும் மாறப் போறேல்லை. என்னைப் பாக்காத மனிசரை, என்னைப் பாக்காத அயலை நானேன் யோசிக்கவேணும், அன்ரி? ஆரும் எக்கேடும் கெட்டுப்போகட்டும். எல்லாம் கெட்டுத்தான இருக்கு? கெடுகாலத்தில நான் கெடாமலிருக்கிறது எப்பிடி, சொல்லுங்கோ? ஆருக்காச்சும் ஒராளுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கவேணும் எண்டதுக்காண்டித்தான் இப்ப நான் இவ்வளவும் உங்களிட்டச் சொன்னது.”
அவள் அழுதாள். அது சின்ன வார்த்தை. கரைந்து ஒழுகினாள்.
“அழாதயும், சந்திரிகா” என்றுவிட்டு குனிந்தபடி இருந்தாள் பரஞ்சோதி. உள்ளே சாமி சொல்லிக்கொண்டிருந்தார்: ‘எல்லாம் தலைகீழாய் மாறிப்போயிடும். இருந்து பாக்கத்தான போறியள்.’
வெகுநேரமாகியிருந்தது. கடைசி பஸ்ஸையாவது அவள் பிடித்துவிடவேண்டும். சந்திரிகாவிடமிருந்து விடைபெற்றாள் பரஞ்சோதி.
13
கூடலாய் மரங்கள் நிழல்போட்ட தெருவூடாக வவுனியா நகருக்குள் பஸ் பிரவேசித்தது. அது கடந்து வந்த பாதையில் இரு மருங்குமிருந்த அடர்ந்த காட்டைக் கண்டபோது, அதுபற்றி தானறிந்திருந்த விபரங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள் பரஞ்சோதி.
ஒருகாலத்தில் மிகப் பெரு வனமாகவிருந்த அந்தக் காடு, குரங்குகளுக்கு வெகுவாய்ப் பெயர்பெற்றிருந்தது. குரங்குகள் பயணிகளை நெருங்குகிற விதத்தை ‘வண்ணானின் மொழிகேட்டு வனம்விடுத்த சீதைதனை இந்நாளும் தேடுதல்போல் இருங்குரங்கு நெருங்கிடுமே’ என்ற ஈழக்கவியொருவரின் பாடலை ஆசிரியை அபிநயத்தோடு பள்ளியில் சொல்லியிருந்ததை இன்னும் அவள் மறக்கவில்லை.
அங்கே யானைகள் கண்டி வீதியின் வாகனப் போக்குவரத்துகளுக்கு இடஞ்சல் செய்யுமளவக்கே மிகுதியாகவிருந்தன. முறிகண்டிப் பிள்ளையார் வழியின் காவல் தெய்வமானது அதன் பிறகுதான். கரடிகளும், மான்களும், மரைகளும்கூட அங்கு குறைவில்லாதிருந்தன. அந்த நிலை இன்றைக்கு இல்லை. வனம் அப்பகுதியில் ஐதடைந்திருந்தது. இன்னுமே ஐதடைந்து கொண்டிருக்கிறது. ஏக்கர் கணக்கில் வனம் அழிக்கப்பட்டதாய் அண்மையில் ஒரு புள்ளி விபரக் கணக்கு வெளியிடப்பட்டிருந்தது.
பஸ் மேலே வர நெஞ்சை இறுக்கிக்கொண்டான அதிர்வலையொன்று அவளுள் இறங்கி அமுக்கியது. பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அது மெல்ல மெல்ல உடம்புபூரா வியாபித்துவிட்டிருந்ததை அவள் உணர்ந்தாள்.
அடங்காப்பற்றின் ஒரு பகுதியாக சரித்திரம் சொல்லியிருந்த வவுனியா, இப்போது அவ்வாறில்லையென்று பலபேரும் சொல்லியிருந்ததை உண்மையாய் அவள் கண்டாள். அதை விளங்க புதிய சிந்தனையுள்ள ஒரு அரசியல் தேவையாயிருந்தது. அதில் அடியாதாரம் கொண்டிருந்த உண்மைகளை பரஞ்சோதி போன்றவர்களால் விளங்கிக்கொள்வது கடினமாகவே இருக்கும்.
பாதைப் புனர்நிர்மாணங்களால் பயணம் தாமதமேற்பட்டது. பஸ் பொழுது சாய்கிற வேளையில் வவுனியா பஸ்நிலையத்தை அடையுமானால் என்ன செய்வதென்று அவளுக்குத் திட்டமிருந்தது. அவள் நடக்கிற முடிவைக் கைவிட்டு ஓட்டோ ஒன்றை அமர்த்திக்கொண்டு சாந்தரூபியின் வீட்டை சிரமமின்றி அடைந்தாள்.
மாவிலாறு ‘வாட்டர் ஷெட்’ வெற்றியின் பின்னால் விடுதலைப் புலிகளுக்கெதிரான கிழக்கு மாகாண யுத்தத்தை 2006 செப்ரெம்பர் 28ல் ஆரம்பித்த இலங்கை அரச படைகள், சம்பூர் மாவட்டத்தைக் கைப்பற்றியபோது, மிகத் துல்லியமான முன்சிந்தனையோடு முல்லைத்தீவிலிருந்த பல குடும்பங்கள் ஒரு யுத்த சூன்யப் பகுதிபோல் அப்போது கருதப்பட்டிருந்த வவுனியாவைச் சென்றடைந்திருந்தன. வவுனியாவிலும் சிரமம் இருக்குமானால் கொழும்பு சென்றுவிட அது வசதியான மய்யமாகவும் இருந்தது. 2006 முடிவதற்குள் சில்வெஸ்ரர் குடும்பமும் வவுனியாவுக்கு வந்துவிட்டிருந்தது. ஏற்கனவே சமாதான காலத்தில் முல்லைத்தீவு-கொழும்புப் பாதையில் மீன் லொறி ஓட்டி அனுபவமிருந்த சில்வெஸ்ரருக்கு, தனியார் தொலைதூர பஸ் கொம்பனியொன்றில் ட்றைவராக அங்கே வேலை கிடைப்பது அதனால் சிரமமாக இருக்கவில்லை. ஏற்கனவே தொடர்பிலிருந்த நண்பர்கள்மூலம் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கெடுப்பதும் விரைவிலேயே சாத்தியப்பட்டிருந்தது.
புதிதாய்க் குடிவந்த இடத்தில் ஏற்பட்ட சூழலின் அழுத்தம் ஆரம்பத்தில் சாந்தரூபியிலும், சில்வெஸ்ரரிலும் சற்று அதிகமானதாகவே இருந்தது. அது வடமராட்சியைவிட்டு தென்மராட்சியையோ, யாழ்ப்பாணத்தைவிட்டு முல்லைத்தீவையுமோ அடைந்தபோதிருந்ததைவிட வேறுபட்டதாயிருந்தது. அதில் இனம் மதம் சார்ந்த கலவைகளின் கூறு அதிகமாயிருந்ததை அவர்கள் கண்டார்கள். எள்ளளவும் மாறுபடாதிருந்தவர்கள் அவர்களது குழந்தைகள் லாசரஸ்சும் இஸபெல்லாவாகவுமே இருந்தனர். மெல்ல இறங்கிய மழை களனியில் இலகுவாய்க் கலப்பதுபோன்ற மிக்க இயல்பாக சூழ்நிலையோடு அவர்கள் கலந்திருந்தனர்.
சில்வெஸ்ரருக்கும் சாந்தரூபிக்கும் சூழ்நிலையின் அழுத்தத்தை உள்வாங்கி மனநிலை இறுக்கம் தெளிய சிறிது காலமாயிற்று. அதை ஒரு தேவையின் நிமித்தம் அவர்கள் செய்யவே வேண்டியிருந்தது. அப்போதும் முற்றுமுழுதான மனவிறுக்கத்தின் விடுபடல் சாத்தியமாகாமல்தான் இருக்கும். அது தவிர்க்கப்பட முடியாததும். சூழவே அந்நியங்களை நிறைத்திருந்த ஓரிடத்தில் மனத்தின் முழுமையான விடுபடலை எதிர்பார்த்துவிட முடியாதுதான். ராணுவ வாகனங்களின் உறுமுகையும், ஹெலி மற்றும் சிறுரக விமானங்களின் இரைச்சலும், சீருடையிலும், சிவிலியன் உடையிலுமான ராணுவத்தின் பிரசன்னமும், அருகிலிருந்த பன்சாலவிலிருந்த புத்த குருமாரின் எந்நேரமுமான நடமாட்டமும் மிக்கிருந்த அந்த இடம், இனரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய தேசத்தில், அவர்களை சதா அச்சுறுத்தும்படியான இடமாகவே இருக்கமுடியும்.
என்றுமில்லாதவாறு அந்த தமிழ்ப் பிரதேசத்தில் சிங்கள பொதுசனங்களின் ஊடாட்டமும் அதிகமாயிருந்தது. ஊழியராய், வர்த்தகராய், பயணிகளாய், பள்ளி மாணவராய், ஆசிரியராய், நேர்சுகளாய் அவர்கள் எங்கெங்கும் காணப்பட்டனர்.
கொதிக்கும் பொயிலர், கட்டித் தொங்கவிடப்பட்ட வாழைக் குலை சகிதம் ஒரு கடையிருக்கும். அதன் முன்னாலோ ஓரங்களிலோ வெற்றிலைத் துப்பலின் சிவப்புக் கீறல்களும், அருகிலுள்ள மின்சார தூணில் எஞ்சிய சுண்ணாம்பினால் விரலிழுத்த வெண்கோடுகளும் இருக்கும். அது தமிழ்க் கடையொன்றின் இருப்பினது அடையாளம். அவை பெரும்பாலும் அப்போது காணப்படாதிருந்தன. சடுதியான ஒரு பார்வையில் அவ்விதம் தோன்றிற்றா, சிறிது சிறிதாக உண்மையில் மாறிக்கொண்டு வருகிறதா என்பதை யோசிக்கவேண்டி இருந்தது.
பரஞ்சோதி ஒரு கனதியை உணர்ந்தவண்ணமே மகளின் வீட்டை அடைந்தாள்.
சாந்தரூபி தாயை எதிர்பார்த்திருந்தாள். அவளின் பிள்ளைகள் இரண்டும்கூட எதிர்பார்த்திருந்ததில் அவளைக் கண்டதும் ஓடிச்சென்று ஒட்டிக்கொண்டன.
சில்வெஸ்ரர் அப்போது வவுனியா-கொழும்பு ஒம்னி பஸ் ஓடிக்கொண்டிருப்பதாகவும், இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவானென்றும், பரஞ்சோதி சில்வெஸ்ரர் பற்றிக் கேட்டபோது சாந்தரூபி சொன்னாள். அது குடும்ப உள்விவகாரங்ளைப் பேச அந்தரங்கம் விழுந்திருந்த சமயம்.
சங்கவிபற்றி, மயூரன்பற்றியென பல விஷயங்களும் பேசிய பிறகு, அப்போதும் மயிர்க்கொட்டி பட்ட இடம்போல் அரித்துக்கொண்டிருந்த சந்திரிகாவின் விஷயத்தை ஒரு முன்னாள் போராளிப் பெண்ணென்ற அடையாளத்துடன் பரஞ்சோதி பேச்சுக்கு எடுத்தாள். அது இயக்கத்திலிருந்து விலகிய, விலகித் திருமணமான, இயக்கத்திலிருந்து தப்பியோடிய, யுத்த முடிவின் பின் புனர்வாழ்வு முகாங்களிலிருந்து வெளியேறிய பலரது வாழ்நிலையின் சீரழிவுகளும் அவர்களுக்கிடையில் விசாரணையாக வழிவிட்டது. தாய் குறிப்பிட்டதுபோன்ற பலபேரை தான் அறிந்திருந்ததாக சாந்தரூபி சொன்னாள். அவ்வகையான பெண்கள் யாழ்ப்பாணத்தை, முல்லைத்தீவைப்போல் அங்கேயும் அதிகமென்றாள்.
அப்போது பக்கத்து வீட்டிலிருந்து அழைத்துக் கேட்பதாக லாசரஸ் வந்து சொன்னான். “பொறுங்கோம்மா, வாறன்” என்றுவிட்டு எழுந்துசென்ற சாந்தரூபி சிறிதுநேரத்தில் திரும்பிவந்தாள்.
“பக்கத்தில இருக்கிறதார்? தெரிஞ்சாக்களோ?” என பரஞ்சோதி கேட்டாள்.
“இப்ப தெரிஞ்சாக்கள். நாங்கள் வரேக்க இஞ்ச இருந்ததுகள். சிங்கள ஆக்கள்தான். நல்ல மனிசர். மனுஷி வவுனியா ஆஸ்பத்திரியில அற்றெண்டனாய் இருக்கு. ரண்டு பொம்பிளப் பிள்ளையள். ஒண்டு ஒரு பிறைவேற் கொம்பனியில வேலை செய்யுது. மற்றது படிச்சிட்டு சும்மாதான் இருக்குது” என்றாள் சாந்தரூபி.
“முந்தி நீயிருந்த வீட்டுப் பக்கம் போய்வாறனியோ? சுத்திவர அங்க தமிழாக்கள்தான இருந்தினம்.”
“போறேல்ல. போக நேரமில்லை.”
“இதுகளும் உன்னோட நல்ல ஒட்டுப்போல.”
“காலமை கதைக்கேக்க நீங்கள் வருவியளெண்டு சொல்லியிருந்தன். அதுதான் பேச்சுச் சத்தத்தில நீங்கள் வந்திட்டியளோவெண்டு கேட்டிட்டுப் போறா.”
“நல்ல மனிசராயிருந்தாச் சரி, ஆர் எவரெண்டிருக்கே.”
“பாவம் அதுகள். எங்கட கதைமாதிரித்தான் அதுகளின்ரயும்.”
“எங்கட கதைமாதிரியெண்டா…?”
“இப்ப சட்டுப்புட்டெண்டு சொன்னா உங்களுக்கு விளங்கவே போகுது? எங்களின்ர தமிழ்ச் சண்டைக் கதையெண்டா, அதுகளின்ர சிங்களச் சண்டைக் கதை. என்னவாயெண்டான்ன இருந்திட்டுப் போகட்டும். நாங்கள் இதுகளப் பேசாமலிருக்கிறதுதான் நல்லம். சில்வெஸ்ரருக்கு இந்தமாதிரி பிரச்சினைக் கதையளப் பேசுறது பிடிக்காது. அது உண்மையும்தான? இருந்துதா சாப்பிட்டம்… சாப்பிட்டமா படுத்தமெண்டு இருக்கவேணுமெண்டு அடிக்கடி சில்வெஸ்ரர் சொல்லும். அக்கம்பக்கம் பாத்துப் பேசு எண்டிறது முந்தித்தான், அம்மா. இப்ப அப்பிடியும் பேசக்குடாது. உங்களுக்குப் பக்கத்தில இருக்கிற நிழல்கூட வேவு சொல்லியிடும். உங்கட நிழலே அதைச் செய்யாம இருந்தா நீங்கள் சரியான பாக்கியசாலி.”
“உண்மைதான், ரூபி.”
“எங்கயும் அது நல்லம். புதிசா வந்திருக்கிற இடத்தில இன்னும் நல்லம்.”
நேநீர் குடித்து முடிய இரவுச் சாப்பாட்டைக் கவனிக்க சாந்தரூபி சமையல்கட்டுக்கு நடந்தாள்.
பரஞ்சோதி அந்தச் சிறிய கூடத்திலிருந்தபடி ஜன்னலூடு வெளியே நோக்கினாள்.
தூரத்து புத்தர்சிலை ஒளி வெள்ளத்துள் மூழ்கி நெடிதுயர்ந்து நின்றிருந்தது.
அருகிலிருந்த பன்சால அடங்கிய மஞ்சள் வெளிச்சத்துள் ஆரவாரம் அறுத்துக் கிடந்தது.
உண்மையில் யுத்தத்தின் வெற்றிக் களை வேறு எங்கேயும் எவரிடத்திலும்விட, பன்சாலகளிலும் பிக்குமார்களிலும்தான் அதிகம் தென்பட்டதாய் தோன்றியது பரஞ்சோதிக்கு. பஸ்ஸில் யாழ்ப்பாணத்திலிருந்து பயணம் செய்துகொண்டிருந்த புத்தபிக்குவும் முகமெல்லாம் ஒரு பெருமிதத்தில் போர்த்ததுபோல்தான், குருமாருக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை ஆசனத்தில் கையை விசிறப்போட்டு தனியாளாக அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது கண்ணை தூசி விழுந்து உருட்டுவதுபோல அந்தக் காட்சி மனத்தை அவளுக்கு உருட்டியது. பன்சாலவின் இரவின் அந்த மவுனத்துள், பகலில் இருந்திருந்த அந்த கர்வத்தின் ஆரவாரம் அப்போது ஒரு கள்ளச் சிரிப்போடு அடங்கிக் கிடப்பதாகவே எண்ணினாள் அவள்.
வவுனியா முந்தின தடவை பார்த்ததுபோல் இப்போது தோன்றவில்லை. மரங்கள் வளர்கின்றன, சில வீழ்கின்றன, புதியாய்ச் சில முளைக்கின்றன… இத்யாதிகளால் பௌதீகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இது அதன் இயல்பான மாற்றம். இயல்பலாத மாற்றம் ஒரு அவயவத்தின் அதீத வீக்கமாக வலியோடும் அவலட்சணத்தோடும் தோன்றும்.
பயணங்கள் எங்கேயும் சுகம் செய்துகொண்டிருப்பதற்குக் காரணமே பௌதீகம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான். ஆனால் வவுனியாவில் இயல்பான, இயல்பலாத பல மாற்றங்களும் விழுந்திருந்தன. பரஞ்சோதி அந்த நிஜத்தை அப்போது தரிசனமாகிக்கொண்டிருந்தாள்.
அங்கு வந்த பிறகு நடந்த உரையாடல்களும், தென்பட்ட காட்சிகளும் அவளுக்கு நிறையத் தெரியவேண்டுமென்ற அவாவை ஏற்படுத்தியிருந்தன. அது சில்வெஸ்ர் வருகின்ற நேரமாக இருந்தது. மறுநாள் காலை சில்வெஸ்ரர் வேலைக்குப் போன பின்னால் சாந்தரூபியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென தீர்மானம் கொண்டாள். ‘நாளைக்கு சில்வெஸ்ரர் எந்த நேரத்துக்கு வேலைக்குப் போகும்?’ சாந்தரூபியிடம் கேட்டாள்.
“ஒன்பது மணிக்கு. ஏனம்மா?”
“சும்மாதான் கேட்டன். அதிருக்கட்டும், ரூபி. நாளைக்கு நீ அந்தக் கதையை எனக்குச் சொல்லவேணும்.”
“எந்தக் கதையை?”
“அதுதான் நீ சொன்னியே… சிங்களச் சண்டைக் கதையெண்டு…”
“ஓ… அதோ? அதை நீங்கள் குசுமான்ரியிட்ட கேக்கிறதுதான் நல்லது. மனுஷி நல்லாய்க் கதை சொல்லும். கேட்டுக்கொண்டிருந்தா எழும்ப மனம் வராது. நீங்கள் யோசிக்கவேண்டாம், மனுஷி நல்லாய் தமிழ் கதைக்கும்.”
“இஞ்ச அதுகள் வந்து கனகாலமோ?”
“சரியாய்த் தெரியாது. பத்துப் பன்ரண்டு வருஷமிருக்கும்.”
“ஓ..” அவ்வளவு காலமானால் பேசமுடியும்தான் என்பதுபோல் பரஞ்சோதி அடங்கினாள்.
மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு பன்சாலவிலிருந்து பிரித் ஓதும் சத்தம் ஒலிபெருக்கியில் முழங்க கண்விழித்தாள் பரஞ்சோதி. இரவு சில்வெஸ்ரர் வந்தது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை பதினொரு மணிக்கு மேலே வந்திருக்கலாம். காலையில்தான் அவனோடு கதைக்க அவளால் முடிந்திருந்தது.
பிறகு அடுத்த வீட்டில் கிணற்றடிப் பக்கமாய் குசுமவதியைக் கண்டாள் பரஞ்சோதி. நடுத்தர உயரம். நடுத்தர உடம்பு. மாநிறமாக இருந்தாள். யுவதியாயிருக்கையில் மிக்க அழகானவளாய் இருந்திருப்பாளென்று தெரிந்தது. உயிர்ப்பும் இடையறாச் சலனமுமாய் அவளது முகம் ஒரு தாமரைத் தடாகத்தை நிகர்த்திருந்ததாய்த் தோன்றியது. கண்கள் தாமரைப் பூக்களாய் மலர்ந்திருந்தன. அது சரிதான். ஆனால் அது செந்தாமரையின் மலர்வாய் இருந்தது அவளுக்கு.
குசுமவதியும், மூத்த மகள் யயானியும் வேலையில் இருந்தார்கள். காலையிலே குசுமவதி புறப்பட்டுப் போயிருந்தாள். விறாந்தையில் நின்றிருந்த பரஞ்சோதியைப் பார்த்து சிரித்துக்கொண்டு போனாள்.
வீட்டிலிருக்கிற சின்னது துருதுருப்புக் கூடினது. தாய் வேலை முடிந்து வருவதற்குள் மூன்று நான்கு தடவைகள் சாந்தரூபியின் வீட்டுக்கு வந்துபோய்விட்டாள். ரூபியோடு திக்கித் திணறி தமிழிலும் சிங்களத்திலும் பேசினாள். பிள்ளைகளோடு அந்தப் பிரச்னை அவளுக்கு இருக்கவில்லை. அவர்கள் தமிழில் படித்தார்கள். சிங்களம் பேசினார்கள். துருதுருப்பென்றாலும் இங்கிதமான பார்வையும், மரியாதையான பழக்கமும் அவளிடம் இருந்தன. போன தடவை வந்திருந்தபோதே அவர்களோடான பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாமென்று தவனமாகிப்போனது பரஞ்சோதிக்கு.
அன்று மாலையில் குசுமவதி வீட்டுக்கு தாயை அழைத்துக்கொண்டு போனாள் சாந்தரூபி.
அது ஒரு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட பழைய வீடாயிருந்தது. விறாந்தை கடந்துசெல்ல கூடம் வந்தது. ஒற்றை நடுவறைக்கு பக்கமிரண்டிலும் ‘ப’ வடிவமாய்க் கூடம் கிடந்தது. சுவரில் அடித்திருந்த ஆணியில் ஒருகிறேப் பேப்பர் மாலை போட்ட போட்டோ இருந்தது. பிரேமுக்குள்ளிருந்தும் அந்தப் போட்டோ சிரித்துக்கொண்டிருந்தது. கண்கள் தீட்சண்யமாய் நேரே ஊடுருவிப் பார்ப்பனவாய் இருந்தன. அறிவின் பிரகாசம் அவற்றில் இருந்திருந்தது. அதில் ஒரு சோகத்தின் உள்ளிருப்பை பரஞ்சோதியால் அவதானிக்க முடிந்தது. சாந்தரூபி போட்டோவை பார்வையால் சுட்டி குசுமவதியின் கணவரென மெல்லச் சொன்னாள்.
தான் அறியக்கூடிய கதையில் கனதி ஏறுவதை பரஞ்சோதி உணர்ந்தாள்.
தேநீரின் பின் நிகழ்ந்த அளவளாவுகையில் சிரித்துக்கொண்டு சொன்னாள் சாந்தரூபி: “குசுமான்ரி, அம்மாக்கு உங்கட கதை கேக்கவேணும்போல இருக்காம். நான் உங்களிட்டயே கேக்கச் சொல்லியிட்டன்.”
குசுமவதி பரஞ்சோதியைப் பார்த்து மென்மையாய்ச் சிரித்தாள். திரும்பி சுவரில் தொங்கிய கணவனின் போட்டோவை ஒருமுறை பார்த்தாள். பின் சொன்னாள்: “நீங்களும் மிச்சம் கஷ்டமெல்லாம் பட்டிருக்கிறீங்கள். இது எல்லாம் சிரிச்சுக்கொண்டு சொல்ல ஏலாத கதை. சிரிச்சுக்கொண்டும் கேக்க ஏலாமல் இருக்கும். அதுசுட்டி இப்ப அது வேணாம். இன்னொரு நாளைக்கு, அடுத்தமுறை வாங்களேன், அப்ப சொல்லுறன். நான் என்ட புருஷனையும், பிள்ளைகள் அவங்கட அப்பாவையும் இழந்தது பெரிய கதை. அதை பெரிசா விரிச்சா சிங்களச் சண்டைக் கதைதான். நீங்களும் ரூபீட்ட கேட்டு தெரிஞ்சு வையுங்க. நான் அப்புறமா ஒருநாளைக்கு எல்லாம் சொல்லுறன்.”
அவளது சிரிப்பிலும் அகலாது இருப்பதென்ன? அவள் கடந்து வந்த பாதையின் துயர ரேகைகளா? இல்லை. அது ஒரு மாபெரும் தோல்வியின் அடையாளம். தப்பாதென்றிருந்த நேரத்தில் கரணம் தப்பி உறவுகளின், நண்பர்களின், ஊரவரின் மரணங்களில் விளைந்த துக்கத்தினதும், தோல்வியினதும் ரேகை. அவளது கேகாலை மாவட்டத்தின் துயர வரலாறு அந்த ரேகைகளில் இருக்கிறது. அந்த இழப்புகள் தோல்விகளைச் சுமந்துகொண்டுதான் அவள் வவுனியா வந்திருந்தாள். நினைவுகளை அழிக்க முயன்றவர்களின் நினைப்புக்கும் எட்டாத் தூரத்திற்கு ஓடிவந்த அந்தக் கதையெல்லாம் நேரம் கெட்டிருந்து சொல்லவும், கேட்கவும்பட வேண்டியவை.
அவர்கள் ஈழப்போரின் துயரங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார்கள். காயம்பட்டு, உறுப்புகளை இழந்து, சீவத் தறுவாயில் ஆஸ்பத்திரி வந்த நூற்றுக் கணக்கான மனிதரின் அவலங்களின் சாட்சியாக குசுமவதியிருந்தாள். சாட்சி ஒருபோது சொல்லவும் முடியாமல் தடுமாறியது. பின் அழுதது.
யாரை யார் தேற்றுவது?
சிறிதுநேரம் பேசிய பின் சாந்தரூபியும் பரஞ்சோதியும் வீட்டுக்குக் கிளம்பினர்.
அடுத்தநாள் திங்கள் காலையில் கிளம்பவிருந்ததால், ஞாயிறு பின்னேரம் குசுமவதியிடம் சொல்லிக்கொள்ள பரஞ்சோதி அங்கே போயிருந்தாள். வட்டிலப்பம் சுட்டுக் கொடுத்தாள் குசுமவதி.
தன்னிடம் அன்றைக்கு வந்திருக்கும் நண்பர்கள் இரண்டு பேர் அப்போது வெளியே போயிருப்பதாகவும், அவர்களை அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவேண்டுமென்றும் குசுமவதி சொன்னாள். அவர்கள் சொல்லக்கூடிய கதைகள் பரஞ்சோதி தன் வாழ்நாளில் கேட்டிராத சோகங்களின் கதைகளாகவும் இருக்குமென்றாள்.
அப்போது குசுமவதியின் வயதை நிகர்த்த ஒருவரும், சற்று இளமையான தோற்றமுள்ள இன்னொருவரும் அங்கே வந்தார்கள். அவர்களை பரஞ்சோதிக்கு உக்கு எனவும், மற்றவரை சுது என்றும் அறிமுகப்படுத்திவைத்தாள் அவள்.
மூவரும் சிங்களத்திலேயே உரையாடினார்கள். மிக்க கலகலப்பாக இருந்தது அந்தச் சூழல். பின் தமிழிலே, “உக்கு, ரூபியின்ட அம்மாக்கு சிங்களச் சண்டை கதை கேக்க நல்ல விருப்பம் இருக்கு” என்று சொல்லிச் சிரித்தாள் குசுமவதி.
சிறிதுநேரம் புன்னகையோடிருந்த உக்கு, “தமிழ் சண்டைக் கதைபோல மிக்க சோகமானதுதான் சிங்கள சண்டைக் கதையும். நீங்க அதை குசுமவிட்டயே கேக்கிறது நல்லம். அது அவவின்ட கதையும்தான். அதுக்குப் பின்னாடி நான் ஒரு கதை சொல்லுவன். இங்க இருக்கிற சுது ஒரு கதை சொல்லுவாரு. நீங்க நல்லா கேக்கணும். ஏனின்டா, இந்தக் கதையள யாரும் இன்னிவரைக்கும் எழுதி வைச்சில்ல. நீங்க உங்கட பகுதிக்கு இதுகள எடுத்துக்கொண்டு போகவேணும். அங்க இருக்கிறவங்க எல்லாம் தெரிய இதை நீங்க சொல்லவேணும்.”
“மெய்யாய்த்தான், அக்கே. இந்தக் கதையள நீங்க எங்கேயும்தான் கேக்க ஏலாது. இவங்க ரண்டுபேரும் சிங்கள மனச் சாட்சிகளோட அடையாளம். கொஞ்சங்கொஞ்சமாப் புரிஞ்சுக்குவீங்க.” குசுமவதி உறுதியோடு சொன்னாள்.
வீட்டுக்கு வந்த பரஞ்சோதி சாந்தரூபியைக் கேட்டாள்: “ரூபி, உனக்கு முந்தியே இந்த சிங்களச் சண்டைக் கதை தெரியுமோ? நீயும் கண்டகண்ட புத்தகமெல்லாம் படிக்கிறனிதான?”
“முந்தியே தெரியுமம்மா. ஆனா கண்ட கண்ட புத்தகங்கள் வாசிக்கிறதால இது தெரியாது. இன்னஇன்ன புத்தகம் வாசிக்கவேணுமெண்டு தெரிஞ்சு வாசிச்சாத்தான் தெரியும்.”
“நீ இப்ப கொஞ்சம் சொன்னியெண்டா பிறகு குசுமவதி சொல்லேக்கை விளங்க சுகமாயிருக்குமெல்லே?”
1971இன் ஜேவிபியின் புரட்சிக் கதையையும், 1987இல் தொடர்ந்த அதன் அடுத்த கட்ட கதையையும், 2000ல் அது முற்று முழுதாய் முடிக்கப்பட்ட கதையையும் சுருக்கமாய்ச் சொன்னாள் சாந்தரூபி.
திங்கட் கிழமை காலையில் யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸெடுத்தபோது பரஞ்சோதியின் மனநிலை வந்ததுபோல் இருக்கவில்லை. அவள் நிறைய யோசித்துக்கொண்டே போனாள்.
ஒருபோது தான் எதைப்பற்றி அவ்வளவு நேரமாக சிந்தித்து வந்தாளென நினைத்தபோது அவளிடம் தெளிவான பதிலிருக்கவில்லை. கதை சொல்லவிருந்த அந்த மூன்று முகங்களை அல்லது அவை சொல்லக்கூடிய கதைகளின் பருவரையை அவள் யோசித்துக்கொண்டு சென்றிருக்கலாம்.
எதுவாயினும் யோசனை அவளில் உதித்தாயிற்று.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com