* ஓவியம் - AI
விருந்து என்பது தமிழர்களுக்கானத் தனிப்பெரும் பண்புகளுள் ஒன்று. நாடோடியாக வாழ்ந்த மனிதன் கூடி வாழத் தொடங்கியது நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். கூடி வாழும் குணம் என்பது இயற்கை. அது பறவைகளிடமும் விலங்குகளிடமும் இருக்கிறது. இதுவே மனிதர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கலாம். அவ்வாறான பறவைகள், விலங்குகளிடமிருந்து மனிதர்கள் நிலையான கூட்டு வாழ்க்கை வாழ்வதால் வேறுபட்டு இருக்கின்றனர். இதில் அவர்களின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றையும் உறுதிச் செய்ய வேண்டிய நெருக்கடி நிலை நேர்ந்த போது ஒருவருக்கொருவர் உதவியும் விட்டுக் கொடுத்தும் வாழத் தொடங்கினர். அதிலும் முக்கியமாக, உணவைப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டனர். அதுமுதல் பகிர்ந்து உண்ணும் பழக்கம் தோன்றியது. பகிர்ந்து உண்ணுதல் என்பதே மனிதகுல நாகரிகத்தின் முதற்படி. தமிழ் இலக்கியங்கள் இதனை விருந்து என்ற சொல்லால் குறிக்கின்றன. தமிழர் நாகரிக வளர்ச்சியில் அவ்வாறான விருந்தின் வகிபாகம் குறித்துத் தமிழ் இலக்கியத் தரவுகளின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
விருந்து - பசிப்பிணிக்கான மருந்து
தொல்காப்பியம் விருந்து என்ற சொல்லிற்குப் புதுமை என்று பொருள் தருகிறது. இதனை,
“விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” (தொல்காப்பியம்.செய்யுள்.239)
என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது. பின்னாளில் முகம் அறியாப் புதியவர்களுக்கு உணவளிக்கும் பண்பிற்கு இச்சொல் எடுத்தாளப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் விருந்து என்னும் சொல் விருந்தினரை குறிக்கும் ஆகுபெயரானது. விருந்து என்னும் சொல் வளர்ந்து விருந்தோம்பல் எனப்பட்டது. விருந்தோம்பல் என்பது ஒரு மனிதனுக்கான சமூகக் கடமை. விருந்தோம்பல் எனும் சொல் விருந்து+ஓம்பல் என்பதன் சேர்க்கை. இதில் ஓம்பல் என்பதற்கு பாதுகாத்தல், விருந்து என்பதற்கு உணவளித்தல் என்று பொருள். ஆக, உணவளித்து பசியில் இருந்து பாதுகாக்கும் பண்பினை விருந்தோம்பல் எனும் சொல் குறிக்கின்றது. நாளடைவில் விருந்தோம்பல் என்பதே மனிதனுக்கான அடிப்படைத் தகுதியாக மாறியது.
இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பும் பொருட்டு
முற்காலத்தில் நடை பயணமாக வெளியூர் செல்பவர்கள் தங்களுக்குத் தேவையான உணவினை கூடவே கொண்டு செல்வர். நீண்ட நாள் பயணம் மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படும் போது உணவு எடுத்துச் செல்ல இயலாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போது பயணத்தின் இடையே வரும் ஊர்களில் விருந்தை எதிர்பார்த்து சென்றிருக்கின்றனர். ஏனெனில், அக்காலத்தில் உண்ணும் உணவினை விலைக்கு விற்கும் பழக்கம் இல்லை. ஆகையால், அவ்வாறானவர்களை வரவேற்று உறவினர்கள் போல நினைத்து விருந்தோம்பும் பழக்கமும் குடியானவர்களிடம் இருந்திருக்கிறது. இதனை,
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்
கண்ணிற் காண நண்ணுவழி யிரீஇப்
பருகு வன்ன வருகா நோக்கமோ
டுருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ (பொருணராற்றுப்படை. 74-78)
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. அதுவும் முகம் மலர்ந்து குடியானவர்கள் தானே அச்செயலை விரும்பிச் செய்தனர் என்பதை இவ்அடிகள் தெளிவுறுத்துகின்றன. மேலும், இரவில் கதவைத் தாழிடச் செல்வதற்கு முன் விருந்தினர்கள் எவரேனும் உள்ளனரா? என்பதைப் பார்த்து உணவளித்திருக்கின்றனர். விருந்தினர் இரவில் வரினும் மனமகிழ்ந்து விருந்தோம்பினர் என்பதை,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே (நற்றிணை. 142)
என்ற அடிகள் எடுத்துரைக்கின்றன. பசி இரவு பகல் பாராதது. அதுபோல் விருந்தோம்பலும் இரவு பகல் பாராது செய்தல் வேண்டும் என்பதை நன்குணர்ந்த நாகரிக நிலையைப் பழந்தமிழர்கள் கொண்டிருந்திருக்கின்றனர் என்பதை இதன் வழி அறியமுடிகின்றது.
ஈதல் இசைபட வாழ்தல்
சிறந்த வாழ்க்கை எனப்படுவது எதுவெனில் அடுத்தவர்களுக்குக் கொடுத்து வாழ்வது. அதற்கான வல்லமை ஆடவர்களுக்கான அழகு என்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள். இல்வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதன் பெரும்தேவை விருந்தளித்தலுக்காகவே செய்யப்பட்டிருக்கிறது. விருந்தினர்கள் வராத வீடுகள் சமூகத்தில் பெருமதிப்பற்ற வீடுகளாக்க கருதப்பட்டிருக்கின்றன. விருந்து என்னும் நல்லறம் செய்வதாலே இல்வாழ்க்கை இல்லறம் எனப்பட்டிருக்கிறது. இல்லறத்தில் பெண் பெரும் பங்கு வகித்திருக்கின்றாள். இதனைத் தொல்காப்பியம்,
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (தொல்காப்பியம்., கற்பியல் -11)
என்கிறது. இதனை விளக்கும் முகமாகச் சிலப்பதிகாரம்,
மறட்பருங் கேண்மை யோடயப்பரி சாரமும்
விருந்து புறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் (சிலம்பு,மனை.காதை:71-73)
என்கிறது. இதில் இல்வாழ்க்கையில் இல்லாதவரால் விருந்து அளிக்க இயலாத சோகத்தைப் பெரிதென வெளிப்படுத்துகிறாள் கண்ணகி. கோவலன் பிரிந்த சோகத்தை விட இதுபெரிதான குறிப்பிடுகிறாள். அந்த அளவிற்கு இல்வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடாக விருந்து இருந்திருக்கின்றது. மேலும், இது தொல்தமிழர்களுக்கான சிறப்பு என்பதனை,
“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு,கொலை.காதை. 71-73)
என்ற சிலப்பதிகார அடிகள் சான்று பகர்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
பகுத்துண்ணும் பண்பை விருந்தோம்பல் எனக் குறிப்பிடும் திருவள்ளுவர் அவ்விருந்தோம்பல் குறித்துத் தனி ஒர் அதிகாரம் படைத்திருக்கிறார். அதில் பயிர் வளர்க்கும் வேளாண்மை போல் மக்களின் உயிர் வளர்க்கும் வேளாண்மையே விருந்து என்கிறார். வாழ்வியல் அறங்கள் பலவற்றைக் குறிப்பிடும் இவர் விருந்து என்பது எல்லா வகை அறங்களை விடவும் தலையாயது என்பதை,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. (திருக்குறள் - 322)
என்று குறிப்பிடுகிறார். மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டும் இப்பண்பு என்பது பிற உயிர்களை நேசிக்கும் திறம். இது விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் மனித அடையாளம். விருந்தினரைப் பேணும் குணம் உயர்வானது. ஆகவே, விருந்தினரை வைத்துக் கொண்டு தனித்துண்ணும் பழக்கம் சான்றோரால் விரும்பத்தகாதது. விருந்தினரை முகமலர்ச்சியுடன் பேணுபவரும் விருந்தினர் உண்ட பின்பு எஞ்சியதை உண்பவரும் வந்த விருந்தினர் சென்று விட்டால் அடுத்துப் புதிய விருந்தினரை எதிர்நோக்கிக் காத்திருப்பவருமே தலைசிறந்தவர்கள் என்கிறார் திருவள்ளுவர். மேலும் விருந்தோம்பல் என்பது ஒரு வேள்வி. இது துறவிகள் மேற்கொள்ளும் வேள்வியை விட மேலானது எனவும் விருந்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார். இதையே சீத்தலைச் சாத்தனார் உணவு என்பது உடலைக் காக்கும் உயிர் மருந்து. எனவே, அதனைத் தந்துதவி உயிரினங்களைக் காப்பது உயிர் தருவதற்குச் சமமானது என்பதை,
”ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!”( மணிமேகலை. பாத்திரம் பெற்றகாதை.-94)
என்று கூறுகிறார். மேலும் பசி என்பதைப் பிணி என்கிறார். உணவினைப் பசிப்பிணி போக்கும் மருந்து என்கிறார். பசியாற்றும் செயல் இவ்வுலகின் முதன்மையான அறம் என்கிறார். அதனைத் தவச்செயல்போல் விருப்போடு செய்ய வேண்டும் என்னும் கருத்தை உலகிற்கு உணர்த்தவே மணிமேகலை என்னும் பெருங்காப்பியம் படைத்திட்டார் எனலாம்.
முடிவாக
பசி கொண்ட உயிர்க்கு அன்போடு உணவிட்டால் அதன் கண்ணில் அருளைக் காணலாம். இதன் அடிப்படையில், உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பதை வாழ்வின் பொருளாக எண்ணி இரந்து வருவோர்க்கு இரவு பகல் பாராது, அவர்கள் எக்காலத்துவரினும் விருந்தோம்புதல் என்பது பழந்தமிழர் மரபு. அதன் தொடர்ச்சியாக இல்வாழ்க்கையில் விருந்தோம்பல் என்பது அடிப்படை அறமாகப் போற்றப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நிலையில் இருப்பதைக் கொண்டு இரப்பவர்களை ஓம்புதல், உற்ற நேரத்தில் வருபவருக்கு உதவுதல் என விருந்தோம்பலுக்கான தன்மையில் படிப்படியான பல மாற்றங்கள் நிகழ்ந்தேறிய நிலையில் தற்போது விலை விருந்து (PAYING GUEST) என்னும் உருமாறிய விருந்தோம்பலைக் காண முடிகிறது. இந்நிலை இயலாதார் ஆயினும் பொருளீட்டல் அவர் கடமை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை, உணவும் இல்லை என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. இது இயல்பிழந்து கொண்டிருக்கும் தமிழர்களின் தன்மை. இத்தருவாயில் இழப்பது இகழ்ச்சி என்பதை உணர்ந்து தமிழரின் தனிப்பெரும் பண்பினைத் தாழாது தவறாது காப்பது நம் கடமை.
பார்வைக்கு
1. இளங்கோவடிகள்., -சிலப்பதிகாரம்,உ.வே.சாமிநாதையர்(ப.ஆ), உ.வே.சா. நூல்நிலையம், 2008.
2. காசிநாதன், நடன -தமிழர் நாகரிகம், தமிழகத் தொல்லியல்துறை வெளியீடு, சென்னை, 1994
3. சீத்தலைச்சாத்தனார் -மணிமேகலை, உ.வே.சாமிநாதையர்(ப.ஆ), உ.வே.சா. நூல்நிலையம், 1931
4. தொல்காப்பியர், -தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, கழக வெளியீடு.
5. பதிப்பாசிரியர் (குழு) -நற்றிணை, பத்துப்பாட்டு. கழக வெளியீடு., சென்னை. 2007
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.