- டால்ஸ்டாயும் மாக்சிம் கார்க்கியும் -
1இருபதாவது முறை, வாசிக்கும் போதே, இச் சிறியவரிகளில் மறைந்து கிடக்கும் எண்ணங்களை ஓரளவில் புரியக் கூடியதாக இருந்தது. இத்தனை இரத்தினச் சுருக்கமாகக் கூறுதல் என்பது கடினம். ‘கடுகைத் துளைத்து’ எனச் சொல்வதுபோல், கிட்டத்தட்ட, இங்கேயும் அதே பண்பலைதான் காணகிட்டுகின்றன. ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு தளத்தில் இயங்குவதாய் இருக்கின்றது.
இறைவன் பொறுத்த டால்ஸ்டாயின் அபிப்ராயங்கள் விசித்திரமானவை. தொளதொளவென்ற தனது சட்டைப் பைக்குள் கையை நுழைத்து, பின், ஒரு டயரியின் நைந்த பகுதியை எடுத்து, கார்க்கியிடம் தந்துவிட்டு: “இறைவன்… அதுவே எனது… ஆர்வம்…” என்று வரையறுக்கும் இந்த மனிதரின் வார்த்தைகள் எம்மையும் ஒருகணம் நிலைக்குலையச் செய்வதே. என்ன இது? ஆசையா அல்லது மனுகுலத்தின் மேல் கொண்டுள்ள ஒட்டுமொத்த மரியாதையின் பிரதிபலிப்பா?.
ஆயிரம் இலக்கியங்களை நுகர்ந்ததன் அனுபவங்களும், தத்துவச் செல்வங்களைத் தேடித் திரட்டி, கிரகித்தபின், ஆயிரம் மனிதர்கள் நடந்த காலடி சுவடுகளையும் உள்வாங்கி அவிழ்த்து விடப்படும். இவரது வார்த்தைகள் மகாபாரதத்தின் தோற்றுவாயையும், இராமாயணத்தின் ரிஷி மூலத்தையும் உள்ளடக்கவே செய்கின்றன. இக் கருத்து நிலையில் இருந்து உதிப்பதே இவரது கலையாகின்றது.
இவரது கடவுள் எனும் கருத்தும், இங்கேயே பரிணமித்திருக்கலாம்.
இது பாரதியின் கடவுளுடன் ஒப்புநோக்க வேண்டிய தேவையை எழுப்பாமல் இல்லை.
2
கார்க்கிக்குக் கைகொடுத்த பல விடயங்கள், பாரதிக்குக் கிட்டாதவையாக இருந்திருக்கலாம். ஆனால் ,அவை உழைப்பின் பிரம்மாண்டத்தையும், ரஷ்யாவின் புதிய விழிப்பினையும், உள்ளடக்காமல் இல்லை. கடைக்கண்’ வைத்த ஒரு நிலைநின்று, பாரதிக்கு உலகை அளக்கக்கூடிய சாதுர்யம் கிட்டியுள்ளது. ஆனால், அதுமட்டுமல்லாமல், டால்ஸ்டாயின் கடவுளானவர், பாரதியின் கடவுளிலிருந்து வேறுபடுகின்றார் என்பதே முக்கிய விடயமாகின்றது.
வேறு வார்த்தைகளில், கூறுவதானால், “உழைப்பு” என்ற கருத்து நிலையானது, அந்நியப்படாமல், பாரதியின் விடயத்தில், அவனது கடவுளுடன் ஒன்றிணைவதாய் உள்ளது. ஆனால், டால்ஸ்டாயின் கடவுள் பொறுத்த கருத்துநிலையோ வேறுநிலையில் இயங்குவதாய் தெரிகின்றது.
தனிமனிதன் சார்ந்த அணுகுமுறையும், இதற்கு மறுதலையாக, கூட்டுமனிதர்கள் ஒன்றிணையும் ஒரு பாணியும், இவற்றை ஒன்றிலிருந்து ஒன்றாய் வேறுபடுத்தி காட்டும் புள்ளிகளாகின்றன.
3
டால்ஸ்டாயின் மொழி ஆளுமை பொறுத்துக் கூறும் கார்க்கி, இவர் இத்திசையில் பயணித்திராவிட்டால், ஒரு இயற்கை விஞ்ஞானியாக மாறியிருப்பார் எனக் கருதுகின்றார். – அதாவது உள்ளியங்கும் எந்த ஒரு யதார்த்த விதியையும் புறந்தள்ளாது உள்வாங்கும் மனோபாவம் இவரது முதல் விதியாகின்றது.
உதாரணமாக, கலாம் வேறு துறையை தேர்ந்தெடுத்திருந்திருப்பாரெனில் அங்கேயும் பிரகாசிக்கவே செய்திருப்பார். ஏனெனில், அவரது இயல்பு, உள்ளியங்கும் உலக விதிகளை, உணர்வு பூர்வமாக ஆழக் கைப்பற்றி உள்வாங்குவது என்பதாகும்.
இவரது மொழியின் ஆளுமை தொடர்பில் மேலும் கூறவரும் கார்க்கி, இம்மனிதன் ஒரு முழுமுதல் “கடவுளாக இருக்கின்றார்–கிருஷ்ணன் போன்ற ஒருகிளைத் தெய்வம் அல்ல” எனக் கூறியிருப்பது அவதானிக்கத்தக்கதாகும். ‘வானம் இங்கே வசப்படல் வேண்டும்’ அல்லது ‘சொல் ஒன்று இங்கே புதியன சமைத்தல் வேண்டும்’ என அவர் கருதுவது ஆழமிக்கது–அவரது மொழிவன்மையை எடுத்து காட்டுகிறது. இதனாலேயே, கார்க்கி அவரை ஓர் 'கிளைத் தெய்வமாக'க் கருதாது, “முற்றும் முழுதான இறைவன் இவர்” என வர்ணிக்கின்றார். ஆனால் இந்த இறைவனும், கார்க்கியின் பார்வையில், பல்வேறு விஷமங்களை உள்ளடக்கியவராகவே உள்ளார்.
சுபத்திரை மாதை நொடியில் களவாடி செல்ல, இரு கணங்களே திட்டம் தீட்டும் சாணக்கியத்தைக் கண்ணன் உள்ளடக்கியது போலவே” இவரும் பல தந்திரங்களை உள்ளடக்கிய மிக தீட்சண்யமிக்க மனிதராக காணகிட்டுகின்றார். கார்க்கியின் வார்த்தைகளில், அனைத்து தெய்வங்களின் தந்திரங்களை உள்ளடக்கி ஒன்று சேர்த்தாலும், இவரது தந்திரங்களும் சாணக்கியமும் அவற்றைக் கடப்பதாக உள்ளது என அபிப்பிராயப்படுவார்.
- டால்ஸ்டாய் -
4
கார்க்கியும், டால்ஸ்டாயும், செக்கோவும், Suller ரும் இணையற்ற நண்பர்களாகக் காட்சி தருகின்றனர். இலக்கியங்களை வாசிப்பதும், வெவ்வேறு தத்துவங்களை வாதிப்பதும், பின் காலாற நடந்து திரிவதும், டால்ஸ்டாயின் டயரிகளை வாசித்து மகிழ்வதும் இவர்களின் பண்பாக இருக்கின்றது. செக்கோவ் கார்க்கியிடம் கூறுவார்: “அவனது அறையில் நீ தங்குவதென்பது எனக்குப் பிடிக்காத ஒன்று…”. வாய்விட்டுச் சிரித்தவாறு செக்கோவ், கார்க்கியிடம் கூறுவார்: ‘பொறாமைதான்… கிழவருக்கு!’. இக்கருத்துப் பல தளங்களில் வாதிக்கப்படத்தக்கதே. இதன் உட்கிடையை, கார்க்கி உணர்வதுபோல், செக்கோவும் உணராமல் இல்லை எனலாம். ஆனால் இது, இருவரது பார்வையிலும் டால்ஸ்டாயை எவ்விதத்திலும் சிறுமைகொள்ள செய்வதில்லை. லெனின் கூறுவார்: ‘அறிவீர்களா? முழு ஐரோப்பாவினையும் எடுத்து அலசி ஆராய்ந்தாலும், இவரை மிஞ்சக்கூடிய எழுத்தாளர் யாரும் இருந்ததாக இல்லை… அப்படியா?’. கார்க்கி சிரித்துக்கொள்வார். பின் ஒருநாள், லெனினின் மரணத்தின் பின், கார்க்கியின், லெனின் குறித்த அவதானிப்புகள் பதியப்பட வேண்டிய சோக நிர்ப்பந்தமும் எழவே செய்கின்றது. ஆனால், இங்கே தொடப்பட்ட விடயங்களும், அங்கே தொடப்பட்ட விடயங்களும், சாராம்சத்தில் வேறுப்பட்டவையாகவே காணகிட்டுகின்றன. ஏனெனில் லெனின் இயங்கிய தளமும் டால்ஸ்டாய் இயங்கிய தளமும் வேறு வேறானவை. மனுக் குலத்தை, ஒரு தனிமனித அடிப்படையில் டால்ஸ்டாய் அணுகியபோது, லெனினோ, மனுக் குலத்தை, ஓர் பொருளியல்-அரசியல்-தத்துவ அடிப்படையில் அணுகினார் எனலாம். இதனாலோ என்னவோ ஒரு சிறிய இலங்கையில் கூட சாதிக்க முடியாத எண்ணங்கள் பலவற்றை, ரஷ்யா என்ற பிரம்மாண்டம், இம் மனுக்குல வரலாற்றில், முதன் முறையாக, சாதித்துக் காட்டியது. அத்தனைப் பிளவுகளையும், அத்தனை நெருக்கடிகளையும், இன முரண்பாடுகளையும் கொண்ட அந்தப் பின்னடைந்த அந்நாட்டினது வரலாற்றில், முதன் முறையாக இத்தகைய வியக்கத்தக்கப் பாதிப்பினை ஏற்படுத்தியதாலோ என்னவோ அது, அந்தப் பாரதியையும் கவர்ந்திழுக்காமல் விட்டபாடில்லை. காளியை அழைத்து, லெனினின் கருமங்களைச் சிலாகிக்கும், அவனது செய்கையானது, எமது சிந்தையையும் கவருவதாகவே உள்ளது. இந்தப் பின்னணியில் டால்ஸ்டாயை அணுகிக் கொள்வது தகும்.
5
ரஷ்யாவின் இந்தச் சாதனைக்கான அடிப்படைக் கூறுகளில் ஒன்று, லெனினது கருத்துநிலை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தவிர்க்க முடியாதபடி, இதில் அவரது அக உலகமும் சம்மந்தப்படுவதாகவே இருகக்கூடும். அதாவது அக உலகின் கருத்துநிலை அல்லது ஓர் வசதி கருதி கூறுவோமானால் அவரது கடவுள் பொறுத்த சிந்தனை எவ்வித ஈர்ப்புகளைக் கொண்டிருந்தது என்பதும் எமது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.
மார்க்ஸியத்தின், மதம் சார்ந்த கருத்துநிலையை வலுவாகப் பின்பற்றும் லெனின், அவரது காலத்தில் கடவுள் சார்ந்த பிரச்சினைகளை வேறுவிதமாக எதிர்கொள்ள நேரிடுகின்றது. சரியாகச் சொல்வதென்றால், இப்பிரச்சினையை வேறு ஒரு தளத்தில் வாதிக்க வேண்டிய அவசியத்தைக் காலம் அவருக்கு ஏற்படுத்தி தருகின்றது.
கார்க்கி உட்பட்ட பல்வேறு கலைஞர்களும், தத்துவ வாதிகளும் கடவுளைச் சிருஷ்டிப்பது எப்படி என வாதித்தப்போது, லெனின் அதனைக் கடுமையாகச் சாடாமல் விடவில்லை. கடவுள் பொறுத்த கார்க்கியின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தப்போது அது ஒரு தனிமனிதனின் ஆசாபாசம் சம்பந்தப்பட்டதல்ல. ஆனால் அது, சமுதாயத்தில், வர்க்கங்களாக எப்படி எப்படி பாவிக்கப்படுகின்றது என்பதே அடிப்படையானது என வாதிப்பார் லெனின்.
இருந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், லன்டனில் அவர், மார்க்ஸின் கல்லறைக்கு சென்று வருவது வழமையாயிற்று. லெனினின் இந்நம்பிக்கையை, இவ்வணுகுமுறையை எங்கே கொண்டுப்போய் நிறுத்துவது என்பது கேள்வியாகிறது. இவ்வடிப்படையிலேயே லெனினது அக உலகம், டால்ஸ்டாயின் கருத்து நிலையும் ஒப்பிட முடியாத வித்தியாசங்களை காட்டுவதாய் உள்ளன.
6
தனிமனிதன் ஒருவன், தன் கடவுளைக் காண்பதற்கும், உழைப்பாளி மனிதன் ஒருவன் தன் கடவுளைக் காண்பதற்கும் இடையிலான வேறுபாடுகள் அனந்தம். இங்கே, “வரலாற்றுப் பொருளியல்” கண்ணோட்டங்கள், நேரடியாகச் சம்மந்தப்படவில்லை. காரணம் இருவரது வாழ்நிலைகளும் வேறுப்பட்டவை என்பது போதுமானது.
உடற்பயிற்சி செய்யும் ஒருவனை ஏளனமாகப் பார்ப்பது, ஓர் உழைப்பாளியின் பார்வையில் ஒருவேளை, வித்தியாசப்படுவதாய் இருக்கலாம். ஆனால், இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், உடற்பயிற்சி என்பது ஓர் உழைப்பாளியின் வாழ்வில் நாளாந்தம் இடம்பெறும் ஒரு வாழ்நிலை யதார்த்தமாகின்றது. இனி, இத்தகைய உழைப்பாளி ஒருவர், உடற்பயிற்சி என்பதனைத் தனியாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு எழுவதாக இல்லை. அதாவது, வாழ்நிலை என்பது வித்தியாசப்படுகின்றது. இது போலவே டால்ஸ்டாயின் கடவுள் பொறுத்த எண்ணப்பாடுகளும் கார்க்கியின் கடவுள் பொறுத்த எண்ணப்பாடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமுறலாம். இருப்பினும் இருவருமே, ஒரு கட்டத்தில், தத்தம் கடவுளார்களை கட்டியெழுப்ப முற்பட்டவராயினும்.
லெனின் இதனை நிராகரித்து இருந்தார் என்ற விடயமானது இங்கே, இணைத்து பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
7
Suller மீது, டால்ஸ்டாய் கொள்ளும் அதீத காதல், கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. டால்ஸ்டாயைப் புரிந்து கொள்வதும், இப்பரிசீலிப்பில் பெரும் பகுதியாகின்றது. டால்ஸ்டாயின் காதலானது, இவ்விடயத்தில், சற்றே முட்டாள்தனமானது எனக் கூறவும் செய்யலாம் (கார்க்கி அப்படித்தான் கருதுவதாய்த் தெரிகின்றது). கிட்டத்தட்ட ஒரு தாயின் அன்பை உள்ளடக்கும் இவ் வாஞ்சையானது, ஒரு வயதான மாதின் தன் செல்லக்கிளி சம்பந்தமான அன்பைக் காட்டுவதாய் உள்ளது. ஆனால், மறுபுறத்தில், இவ்வகை மனிதர்கள் (அதாவது Suller போன்ற மனிதர்கள்) புறநகர்களில் வசித்து வந்தாலும் அவர்கள் அங்குள்ள மனிதர்களின் மேல் தமது அன்பைப் பொழிந்து அவர்களின் ஆன்மாவையும் தீண்ட செய்கின்றனர் எனக் கார்க்கி அபிப்பிராயப்படுவார். அம் மனிதர்களும், இத்தகைய மனிதர்கள்மேல், பதிலுக்கு அன்பைச் செலுத்துவதை வழமையாகக் கொள்வதைக் கார்க்கி அவதானிக்கின்றார். இப்படி, புறநகரில் வாழக்கூடிய, ஆளுமைமிக்க மனிதராகவே Sullerரை, கார்க்கி வரையறுக்கின்றார். ஆனால், பெண்கள் இவரை மறுதலிப்பது குறித்து கவலையும் கோபமும் அடைவார். கவலையற்றுத் திரியும் இச்சுதந்திர மனிதன், நாளை அல்லது மறுதினம், எதனை ஆற்றக் கூடும் என்ற கேள்வி இப்பெண்களின் உதாசீனங்களில் மறைந்திருப்பதை அவர் காண்கின்றார். ஆனால், இத்தகைய உதாசீனங்களும் டால்ஸ்டாயை Suller சார்பாக இயங்க வைக்கின்றது எனலாம். ஆறுதலான புன்னகையுடன் இவனை அரவணைக்க முயலுகின்றார் அவர்.
8
“சுதந்திரம், சுதந்திரம், சுதந்திரம்: போதும் நிறுத்து! ‘லியோவ்ஷ்கா…!’ ” டால்ஸ்டாய் ஒருமுறை Sullerரிடம் கோபமடைந்து கூறுவார். “…கிளிப்பிள்ளைப் போல் நிதம் இதனை பேசுகின்றாய் என்னிடம். சரி. இந்த சுதந்திரமானது, ஈற்றில் உனக்கு கிட்டிவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பின்…? என்ன…? நீ கூறும் இச்சுதந்திரமானது, உன்னை எங்கு கொண்டுபோய்ச் சேர்த்திருக்கும்…? முடிவற்ற வெறுமை… இதைத்தான், நீ தேடி முடித்திருப்பாய்… ஆம், உண்மையில் நீ ஒரு சோம்பேறியாக மாறியிருப்பாய்… அல்லது குரோதம் நிறைந்தவனாக அல்லது ஒரு பிச்சைக்காரனாகக் கூட மாறியிருப்பாய். இது தான் வாழ்வு!... இப்படித்தான் வாழ்வு இருக்கின்றது…”
“வாழ்வில் எதுத்தான் உன்னைப் பிணிக்கக்கூடும்? பறவைகள் போன்று கட்டற்று… அவை கூட, கூடு கட்ட வேண்டிய ஒர் நிர்ப்பந்தத்தில் உள்ளன… ஆகவே, இந்த கதையை விடு”.
“புத்தர் ஒரு சுதந்திர மனிதன்தான். கிருஸ்த்துவும் ஒருவேளை அதைவிட மேலாக இருக்கலாம். ஆனால் இங்கே பார். இருவருமே ஏனையோரின் பாவங்களைச் சுமக்க முற்பட்டவர்கள் தாம். இவற்றின் விளைவுகள் எவையெவை என்பதெல்லாம் தனித்து வாதிக்கத்தக்கதே. ஆனால், நீ செய்வது என்ன? வாதிக்கின்றாய். வாதிக்கின்றாய். முடிவின்றி வாதிக்கின்றாய். சமயங்களில் என்னைக்கூட ஏசவும் செய்கின்றாய். விட்டால் எனது மூக்கைத் தொலைத்துக் காயப்படுத்தி விடுவாய். நில். தயவுசெய்து இதனை இத்துடன் நிறுத்திக் கொள்.”
துயருடன் பார்க்கும் கார்க்கி விசனித்து புன்னகைப்பார்.
- மாக்சிம் கார்க்கி
9
கார்க்கியிடம், டால்ஸ்டாயின் நெருக்கமும், அவரது கடவுள் பற்றிய கொள்கைகளும், அதை மீறிய தந்திரங்களும்-நுணுக்கங்களும்-விஷமங்களும், பின் வாஞ்சைகளும், பின் மனம் விட்டு காதலிக்கும் அவரது பண்பும், பின் டயரியை கார்க்கி, செக்காவ் போன்ற பிறர் ஒருவருக்குத் தருவதில் பெரும் இன்பமும், இன்னும் பலவும், மேலே பதியப்பட்டுள்ளன.
ஆனால், டால்ஸ்டாய்-செக்கோவ்-கார்க்கி ஆகிய மூவரையும் வித்தியாசப்படுத்தி காட்டும் எல்லைக்கோடுகள் யாவை என்பது கேள்வியாகின்றது.
அதாவது, யார் இவர்கள்? இலக்கியமானது இக்கேள்விக்கான உரிமையை எடுத்துக் கொள்கின்றது.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பார்வையில் அறிவு என்பது இலக்கியத்திற்கு அடிப்படையானது என்பதும், அவ் அறிவை விஸ்தரித்து மேலும் வளர்த்தெடுக்கும் ஆயுதமாக அல்லது அடிப்படையாக மனித நேயமே விளங்குகின்றது எனவும் கருதுவார் அவர்.
அதாவது, மனிதனின் பரந்த இதயமானது அவனது அறிவை விசாலிப்பதாய் உள்ளது.
கார்க்கியின் பார்வையில், இது இயற்கை விஞ்ஞானம் பொறுத்த விடயங்களில் மாத்திரமே இது வித்தியாசப்படலாம், என்பதேயாகும்.
ஒரு பெரிய இதயத்தின் இருப்பானது, கைலாசபதியின் பார்வைக்கு ஏற்ப மனிதனை பலதரப்பட்ட மூலைகளுக்கும் நகர்த்தி செல்லும் காரணியாகின்றது. வசதி படைத்த எங்கெல்ஸ் லண்டன் மூலை முடுக்கெல்லாம், அலைந்து திரிவது விதியாயிற்று. வான்கோவும் இதே போன்று.
ஆனால், இதன் மொத்த விளைவுதான் என்ன? பெரியார், பெரியார்களையே காமுறுவர் என்பது போல எங்கெல்ஸ் எனும் மாமனிதனை, மார்க்ஸ் என்ற பெருமனிதன் கண்டு கட்டி அணைத்திருக்கலாம்.
கிட்டத்தட்ட, இது, கார்க்கியை, அவனது அத்தனை வித்தியாசங்களுடனும், டால்ஸ்டாய் அள்ளி அரவணைத்தது போல!
டால்ஸ்டாய் இறந்து விட்ட செய்தி கேட்டு, கண்ணீர் வடிய சிந்திக்கும் கார்க்கி, தான், இனி இவ்வுலகில் ஒரு அனாதையாகி விட்டதாக உணர்கின்றேன் எனக் கூறுவது, பல அர்த்தங்களை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றது.
ஆனால், கைலாசபதியின் கூற்று, அடிப்படையாகின்றது. மனித நேயத்தின், பல்வேறு விகசிப்புகளை அறிந்த பெருமகன் அவர்.
டால்ஸ்டாய் கார்க்கியை அள்ளி அணைப்பதில் உள்ள பேதங்களையும் நேசங்களையும் அறிய அவர் முற்பட்டிருக்கலாம்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.