கன்னங்கரியாய் அப்பி நின்ற இருளுடன்,
ஒன்றுகூடி அடித்துப்பெய்தது மழை.
எதிர்த்திசையில் ஓடிவரும் கார்களின்
கூரிய வெளிச்சங்கள் என்
கண்களைக் குளப்பின.
நித்திரை முளித்து வேலைசெய்த களைப்பில்,
அரைத்தூக்கத்தில்
காரை ஓட்டிவந்த எனக்கு அன்றைய
காரிருள் ஆழ் மனசுக்குள் புகுந்து
காலங்களைப் புரட்டிப்போட்டது.
விழிகள் புதிதாய்ப் பூத்தது
போன்ற உசாரில்
காரை இன்னும் நிதானமாக
ஓட்டி வந்தேன்.
'காலச்சக்கரத்தின் சுற்று
கடுகதி வேகத்தில் சுழன்று
கொண்டேயிருக்கின்றது.
அதில் நானே அச்சாணி.
அச்சாணிக்கும்
எப்போது ஓய்வுவரும்?'
என்பதுபோன்ற
எண்ணச்சிதறல்கள்
மனசுக்குள் கரைந்தோடின.
இந்த
'அச்சாணிவாழ்வு'தந்த
அனுபவம் என்ன?
எம் மண் அது.
அங்கே போர்.
அந்தியமண் இது.
இங்கே போராட்ட வாழ்வு.
உயிர்போகின்றது மண்ணில்.
உயிர் போராடுகின்றது பனிமூடும் நிலத்தில்.
இப்படித்தான் காரை ஓட்டிக்கொண்டே
வீடுவந்து சேரும் வரைக்கும்
இருள் கவ்வ,
ஒளி சுமந்த நினைவுகள்
என்னோடு ஒட்டிக்கொண்டே வந்தன.
தெருக்களின் மஞ்சள் ஒளியால்,
பழுத்து விழுந்திருந்த இலைகளில்
மஞ்சள் தெளித்த வெளிச்சத்தில்,
சின்னச்சின்னதாய்,
குட்டிக்குட்டியாய்ப்
பரவியிருந்த அழகு
களைத்த கண்களுக்கு,
குளிர்ச்சியூட்டிப் பரவசமானது.
நினைவுகள் தொடர்ந்தன.
மாறாவடு ஒன்று.
எப்போதும் மாறாதது.
எம்மண்ணில் உயிர்ப்பலிகள் ஏராளம்.
இப்புலத்திலும் ஏக்கங்கள் அதிகம்.
ஏன் இதை எழுத வேண்டும்
என்று கேட்டால்,
இக்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என
நாளைக்கு நாலு பேராவது சொல்வார்கள்
என்ற
நம்பிக்கை.
அதற்காக.
நினைவை
விட்டுப்பிசகாமல்
அந்தக்காலம் மிளிர்கின்றது.
என் நாட்குறிப்பில்
மீண்டும் மீண்டும் புரட்டிப்புரட்டி
வாசிக்க வேண்டிய
நானெழுதிய
நீண்ட பக்கங்கள் நிரம்பிய
காதையொன்று காட்சியாய்
விரிந்தது.
புனைவில்லா மெய்யது.
இறையெனக்கும்பிடவைத்த இருவர்.
எமக்காகத் தமது பொழுதுகளையும்,
உணர்வுகளையும் அர்ப்பணித்த
எந்தையும், தாயுமாய் நின்ற
மாமனிதர் இவர்கள்.
ஜேர்மனியர்.
படபடக்கும் நெஞ்சுகளை
அன்பெனும் ஈரம் பாய்ச்சி,
கருணை காட்டி எம்மைக்
குளிரவைத்த
நாம் காணும் உயிருள்ள
தெய்வங்கள்.தேசம்,
வானம்,மரங்கள்,மொழி,
ஏன் மனிதமும் இங்கே
புதிதுதான்.
ஆனால்,
உள்ளம் ஒன்றுதானே என
வியக்கவைத்த
ஆசான்களும் இவர்களே!
இவர்களைப்பற்றி நாட்குறிப்பில் அன்று,
"அந்நிய மண்ணில்அடைக்கலம் தந்த தெய்வங்கள்"
என்றுதானே எழுதியிருந்தேன்
என்ற எண்ணக்கருவை
நினைவில் ஏந்தியபடி காரும்,
நானுமாக வீட்டுக்கு வந்துவிட்டோம்.
மழை விட்டபாடில்லை.
அப்பிய இருளும்
கரைந்து ஒளி தந்த பாடில்லை.
என்னையும் அது
பிரியவும் இஷ்டமில்லை.
அன்றைய என் இளவயது பிரிந்தாலும்,
அந்த நினைவுகள் மட்டும்
இதோ இந்த மழைபோலப்பெய்து கொண்டேயிருக்கு.
மழையில் நனைந்திடா ஈரத்தைக்
கண்ணீர் நனைத்தது.
உயிரும் சேர்ந்து அழுதது. என்றாலும்
'வாழ்வு அது நீளுது' என்றபடி
வீட்டுக்குள் வந்தாச்சு.
விழி அம்பாகி
உயிர் தவமாகி
எனக்குள் ஊடுருவி
என்னை வரவேற்கும்
என்னவளும்
வேலைக்குச்சென்றுவிட்டாள்.
வீடு பாவம்.
தனிமையில் எனக்காகக்
காத்திருந்தது.
நான் வந்ததும் நாலு வார்த்தையாவது
அது என்னோடு பறையும்.
"என்னை விட்டு எத்தனைபேர் போய்விட்டார்கள். நீங்களும்
என்னைத்தனியே விட்டுவிட்டு போகாதீர்கள்"
என்று என்னுடன் பேசுவதுபோன்ற பிரமையை
நான் உணர்ந்தேன்.
வாழ்வென்றால் என்ன,
எம்மைக்காப்பவருடன்,
எமக்குப்பிடித்தவருடன்
கதைப்பதுதானே!
வீட்டுடன் என் மனமும் பேசியது.
சுடச்சுட ஒரு கோப்பி போட்டேன்.
ஏத்தி இறக்கி ஆத்தி,
பொங்கி வரும் நுரையுடன்
அந்த இளஞ்சூட்டில் ஒரு மிடறு
உறிஞ்சிக்குடித்தேன்.
"ப்பா"
அதன் ருசி. அது சொல்லி மாளாது.
அதுவும் இந்த மழைக்காலத்தின்
கவிதைதான்.
கோப்பியைக்குடித்துக்கொண்டே
அலுமாரியைத்திறந்து
அன்றைய நாட்குறிப்பை எடுத்தேன்.
அதற்கான உகந்த பொழுதும்
இதுதான்.
எடுத்து வாசித்தேன்.
மெளனமே மொழியாகிக்
கலங்கி நின்றேன்..
நாட்குறிப்பும் மெய்சிலிர்த்தது.
நாட்குறிப்பில் இருந்து வந்தவைதான்
இனி வரப்போகும் கதை..
84களில் மனசாட்சியைப்புதைத்துவிட்டு
"உயிர்தப்பினால்போதும் " என்று
தாய் நிலத்தைப்பிரிந்த காலமது.
இடப்பெயர்வு என்பதும் போரின் யுக்தி,
அல்லது
வெற்றியின் ஒரு பங்கென்றால்,
புலம்பெயர்வு என்பது
'வீழ்ச்சி' என்று புரியாமல்,
எங்கே போகின்றோம்.
அடுத்தது என்ன?
வாழ்வின் அடுத்தபடி புரியாதவர்களாக
நாம் பறந்து வந்தோம்
என்பதுதான் உண்மை.
அதுதான் நடந்தது.
அங்கே போனால்
அரசியல் தஞ்சம் கோரலாம்,
அங்கே நிரந்தரமாக
வாழ்ந்தும்விடலாம்
என்ற நம்பிக்கை.
அதுவே அப்போதைய எம் கருப்பொருள்.
இந்த உயிருக்கு என்னதான் தேவை?
ஒன்று அன்பு.
அடுத்தது அடைக்கலம்.
இவையிரண்டும் போதும் மனிதனுக்கு.
அன்பைப்பரிமாறும் உள்ளம்,
அடைக்கலத்தையும் கொடையாய்க்கொடுத்துவிடும்.
இதுதான் நடந்தது எமக்கு.
எப்படி, எங்கே என்று கேட்டால்?
அகதியெனப்பதிந்துவிட்ட எம்மை
ஓரறைக்குள் இருவர் எனச்சட்டப்படி பிரித்துவிட்டார்கள்.
நித்திரைக்கு மட்டும் சட்டத்தை மதித்தோம்.
மற்றும்படி 6 தொடக்கம் 8,10 என
நாற்சார்வீடாகிவிடும்
நம் கூட்டு வாழ்க்கை.
அது ஒன்றுதான் எம் சந்தோஷம்.
அதை விடச்சந்தோஷம் ஒன்று வரும்.
அதற்காக நெடுநாள் காத்திருப்போம்.
எப்போதாவது ஊரிலிருந்து
"எயார்மெயில்"வரும்.
கோயிலுக்குப்போய் சாமி கும்பிட்டு
வீட்ட வந்து சாப்பிட்டு
அம்மாவின்ர மடியில படுத்திருக்க,
அவா தலைகோதிய அந்தப்பேரின்பம்போல
அந்தச்சுகம்.
அந்த நாள்.
அது அப்படித்தான்.
ஆனாலும் என்ன?
கடிதம் வந்த அன்று
அன்றைய இராத்திரி தலையணை நனையும்.
துவும் நிரந்தரமில்லையே!
அதற்கும் அப்பால் ஒன்றை
இந்த உயிர் தேடும்.
அந்தக்காலகட்டத்தில்தான்
கணவனும்,மனைவியுமாக
அந்த ஜேர்மனிய மனித குலத்திற்குள்
வாழ்ந்தவர் எம்மிடம் வந்தனர்.
அவர்கள் பாதங்கள்பட்டுப்
புல்லும்சாகாது" என்ற சொல்லுக்கு
வரைவிலக்கணம் அவர்களே!
கல்லூரிக்கு அதிபராய்க்கணவர்.
அங்கே ஆசிரியையாய் மனைவி.
எம்மைத்தேடி வந்தார்கள்.
யார் அனுப்பியது?
அவர்களுக்குள் வாழ்ந்த அந்த மனிதநேயம்.
'இவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும்'
என்று ஓடிவந்த
மனிதநேயம் மிக்க
மாமனிதர்கள் அவர்களே!
அந்தத்தாய் அன்புகனிய
அதிகம்பேசுவா.
அன்பைச்சேமிப்போம்.
கவலைகளைச்சுமந்தபோது சேமித்த தாயின்
அந்த வார்த்தைகளும்,
அறிவுரைகளும் எம்மை உற்சாகப்படுத்தின.
அவர்கள்
வீட்டிற்கு விருந்தாளியாக
எம்மை வரவேற்று
எம்மை இருத்தி
உணவுகள் பரிமாறி,தேநீர்
உவந்தளித்து,
அன்பைப்பகிர்ந்தபோது
எங்கள் முகங்களில் "சளார்" என்று
அறைந்தது போலிருந்தது.
மனித நேயத்தை இந்த
மானுடம் எப்படியெல்லாம் பகிர்கின்றது
என்றிருந்தது
அந்த அடியின் வலி.
இதையே நாம் எம் ஊரிலென்றால்
முதலில் ஒரு நண்பனை வீட்டிற்குக்கூட்டிவந்தால்,
"இவர் யார்? பின்னணி என்ன..?"
என எல்லாம் கேட்டறிந்தபின்புதான்
எங்கட சந்ததி வீட்டுக்குள்ளேயே அடுக்கும்.
ஆனால் இங்கே?
இந்த மனிதநேயத்தை எப்படிச்சொல்வோம்?
'சளார்' என்ற அந்த அடியின் அதிர்வு
என்னையும் உலுப்பிப்போட்டது.
இன்னும் சொல்வதென்றால்,
இரண்டாம் உலகப்போரின் வலிகளைச்சுமந்து,
உலக அரசியலைக்கரைச்சுக்குடிச்ச
புத்திஜீவிகள் இருவரும் என்பதும் பொருந்தும்.
ஐந்து வருடம் காத்திருக்கவேண்டும்
அப்போது சட்டப்படி வேலைசெய்வதற்கு.
அதுவரைக்கும் நாம் என்ன செய்வது?
மனப்பிராந்தி நம்மைக்கொன்றுவிடுமே!
அதைப்புரிந்துகொண்ட அவர்கள்
எமக்கென ஒரு வேலை எடுத்துத் தந்தார்கள்.
என்ன வேலை?
பேப்பர் போடும் வேலை.
தினமும்
அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரைக்கும்
அது. குளிரோ, பனியோ, புயலோ,மழையோ
நிலம் வெளிப்பதற்குள் பேப்பர் போட்டு முடிக்கவேண்டும்.
காலம் பூக்கும்,
உதிரும்.
எதுவரினும் நாம் வேலை செய்தோம்.
மனச்சிக்கலுக்கு ஒருபோதும்
துணைபோனதில்லை.
"உழைப்பும், துடிப்பும்,
உற்சாகமும் இளைஞர்களின்
உடற்பலம்.
இதற்கும் அப்பால் "
மனத்தின் திடம் என்று கூறி
உற்சாகப்படுத்திய
புதிய உறவுகளாய்
எமக்கென இன்னொரு
அம்மாவும், அப்பாவுமாக எம்மை
அவர்களின் கரிசனைக்குள் கட்டிப்போட்டார்கள்.
"இனந்தெரியா முகங்களையும்
இங்கே அன்பெனும் வித்திட்டு அறுவடை செய்ய
இந்த மண்ணிற்கும் ஈரமிருந்தது.
மொழியை எழுதுவது, வாசிப்பது ஒரு கலையெனில்
அதைவிடத்தொடர்ந்து
கூச்சப்படாமல் பேசுவதால்
கடலலைபோல பயமின்றி துணிந்து
எட்டிப்பிடிச்சிடலாம்" எனச்சொன்னவர்களும்
இவர்களே!
எமக்கும்,இக்குலத்துக்குமான
பாசப்பிணைப்பை உறவுப்பாலமாக்கி,
தொப்புள்கொடி உறவாக எம்மோடிணைந்து வாழ்ந்து ,
வாழ்வின் தத்துவங்களைக்கற்றுத் தந்திராவிடின்
இன்று? இப்படி இந்த மொழியைச் சரளமாய்ப்பேசவும்,
மனிதர் எல்லாமே சமமெனப்பழகவும்,
உயரவும் முடிந்திருக்குமா
என்ற கேள்வியை நித்தம்
என் மனசாட்சி கேட்டுக்கொண்டுதானிருக்கின்றது.
எம் வாழ்வுக்குக்கைகொடுத்த
அந்தத்தெய்வங்களுக்கு
இக்கதை சமர்ப்பணம்.
மாமனிதரை இழந்தால்
மண்ணும்,மழையும், மரமும்,
கன்னங்கரியாய் அப்பிநின்ற இருளும்
என்னோடு சேர்ந்து அழுதிடும் என்பது
எனக்கு இன்று நன்றாகவே புரிகின்றது.