ஏ! விரிந்திருக்கும் விரிவானே!
நீ எப்போதும் போல் இப்போதும்
என் சிந்தையை விரிய வைக்கின்றாய்.
என் தேடலைப் பெருக வைக்கின்றாய்.
உன்னைப் புரிதல் என் தேடலின் ஊற்று.
உன் விரிவு , ஆழம், தொலைவு
என்னை எப்போதும் வியப்பிலாழ்த்துகின்றன.
வியப்பினூடு விடைகள் எவையும் கிடைக்குமா
என்று முயற்சி செய்கின்றது மனது.
விடைகள் கிடைக்கப்போவதில்லை என்பது
அயர்வினைத் தந்தாலும் உனை, உன் வனப்பை
அயராது இரசிப்பதில் ஒருபோதும் எனக்கு
அயர்வில்லை. அயர்வற்ற இரசிப்புத்தான்.
இருப்பின் இருப்பறிய இருப்பது நீ ஒன்றுதான்
என்கின்றது எப்போதும் தேடிக்கொண்டிருக்கும்
என் நெஞ்சம்.
உன்னில், உன் விரிவில் சஞ்சரித்தவாறு
கீழே பார்க்கின்றேன்.
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
எத்துணை அற்பம்! அற்பத்துக்குள்
எத்துணை அதிசயம்! படைப்பில்
எத்துணை அற்புதம்!
எத்துணை நேர்த்தி!
எத்துணை ஞானம்!அற்பத்திற்குள் மூழ்கிக் கிடக்கும் விளைவுகளால்
உற்பத்தியாகின்றன் முரண்கள்!
முட்டி மோதும் முரண்கள் மிகுந்து
மோதிப் பெருக்கெடுக்கின்றன குருதிப் பேராறுகள்!
விருட்சங்கள் எரிந்த வனப்பிழந்த வனங்களில்
பரிதவிக்கின்றன பல்லுயிர் இனங்கள்!
இம்மண்ணில் எத்தனை அனர்த்தங்கள்!
இம்மண்ணில் எத்துணை பேரிடர்கள்!
இம்மண்ணின் இன்பமொழித்த ஆறறிவே! உன்
இறுமாப்பிற்கு அர்த்தமேதும் உண்டா?
ஆக்கமிருக்கையில் அழிவைத்தேடும் அற்பமே!
ஆறறிவென்ற இறுமாப்புக்கு உண்டா பெருமை?
மண்ணிலிருந்து விண்ணைப் பார்! பின்
விண்ணிலிருந்து மண்ணைப் பார்!
பார்த்தால்,
மண்ணின் பெருமையினை, நல்
எண்ணத்தின் மேன்மையினை,
நன்குணர்ந்திட உன்னால் முடியும்!
உணர்ந்தால்,
உள்ளும், வெளியும் உள்ளவற்றின் அர்த்தம்தனை
தெள்ளத் தெளிவாக
உன்னால் உணர முடியும்! அப்போது
அள்ளக் குறையாத ஆறென,
வெள்ளமென வேகமெடுத்துப் பாயும்
உள்ளத்தின் அறிவெனும் பேராற்றல்!