ஆய்வு: முத்தொள்ளாயிரம் காட்டும் யானைமறம்! - முனைவர் ந.சுமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரத்தூர், விழுப்புரம். -
முன்னுரை
பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.
இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் நாடு, நகர் பகைப்புலம் அழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், வென்றி, புகழ், கைக்கிளை எனப் பல்வேறு குறிப்புகளைக் கொண்டுள்ளது. முத்தொள்ளாயிரம் மூவேந்தரின் வீரச் சிறப்பினையும், குதிரை, யானைப் படைகளின் தன்மையையும் இனிதே எடுத்துரைக்கின்றது. மூவேந்தரிடமும், யானைப் படைகள் சிறந்து விளங்கியது. அவ்யானைகள் பகைவரின் உயிரைக் குடிக்கும் கூற்றுவனைப் போல் விளங்கின. தம் நாட்டின் வெற்றிக்கு யானைப்படை முக்கியம் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும் யானைகளை நன்கு பராமரித்தனர். அவ்வாறு அவர்கள் பராமரித்த யானைகளின் மறம் (வீரம்) பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுச் சுருக்கம்
முடிவுடைய மூவேந்தர்களும் யானைப் படையை வைத்திருந்தனர். அப்படையில் உள்ள யானைகள் ஒவ்வொன்றும் போர்க்குணம் கொண்டவை. பகைவரைக் கண்டவுடன் கடிது சென்று அழிக்கும் திறன் கொண்டவை. பகைவரைக் கொன்று குவிக்கும் களக் காட்சியையும், யானையின் வீரத்தையும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் எடுத்துரைக் கின்றன. மேலும்,
யானைமறம்
சேரனின் யானைமறம்
சோழனின் யானைமறம்
பாண்டியனின் யானைமறம்
என்னும் தலைப்பில் முடிவுடை மூவேந்தர்களின் யானை படையின் இயல்பினைக் கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.