தெளிவத்தை ஜோசப் : தமிழ் இலக்கியப் பெருஞ் சுடர் அணைந்தது! - மு.நித்தியானந்தன் -
பிரதேசங்கள், நாடுகள் என்ற எல்லையைத்தாண்டி தமிழின் ஈடிணையற்ற எழுத்தாளராக அங்கீகாரம் பெற்ற தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய வானில் கருந்திரையைப் போர்த்தியிருக்கிறது. தெளிவத்தை என்ற தோட்டத்துப்பெயரைத் தன் பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்த வெற்றிச் சாதனைக்காக மலையகம் பெருமிதம் கொள்கிறது.மலையக மக்களது வாழ்வின் துயர்க்கோலங்களை, சுரண்டலின் அகோரத்தை, அவலப்பட்டுப்போன சமூகக்கூட்டத்தின் கதையை அழியாத கல்வெட்டாய் தமிழ் இலக்கிய உலகில் பொறித்துவைத்துவிட்டுப்போன பெருமகன் தெளிவத்தை ஜோசப்பிற்காக இன்று தமிழ் இலக்கிய உலகம் கண்ணீர் சிந்தி நிற்கிறது. மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அது சரியாய் இருக்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இலக்கிய உலகின் தனி சாம்ராட்டாக உலாவந்த இலக்கியத்தலைமகன் இன்றில்லை எனும் செய்தி நம் நெஞ்சில் துயர அலைகளை எழுப்பி நிற்கிறது.
தமிழ் இலக்கியப்பரப்பில் ஒரு தமிழ்ச் சமூகம் எந்த அளவு துயரங்களை, அடிமைவாழ்வின் கூறுகளைக் கொண்டியங்கியது என்பதை ஜோசப் அவர்களைப்போல கலாநேர்த்தியுடன் சித்திரித்த பெரும் எழுத்தாளன் யாருமில்லை. மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒரு சனக்கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் இலக்கிய வியக்தி அவர்.மலையக சமுதாயத்தின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்து விட்ட அவலத்தை தனது கதைகளிலே அவர் மீட்டியிருக்கிறார்.சிறுமை கண்டு பொங்கிய கலகக்காரனின் எழுத்துகளாக அவரது கதைகள் சிறப்புப்பெறுகின்றன. மனிதன் சிறுமைப்படுத்தப்பட்ட கொடுமையை அவரைப்போல எழுத்திலே சித்திரித்தவர்கள் யாருமில்லை.