மறக்க முடியாத விறந்தை! யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பிலிருந்து க.பொ.த(உயர்தரம்) படித்த காலத்தில் இந்த விறந்தையிலுள்ள வகுப்பறைகளில் பல வகுப்புகள் நடந்திருக்கின்றன. மறக்க முடியாத பல நினைவுகளைப் பதுக்கி வைத்துள்ள வகுப்புகள். வீதிப்பக்கம் ஜன்னல்கள். விறந்தையின் வடக்குப் பக்கம் நீண்ட முற்றம். அந்த முற்றத்தில் அவ்வப்போது நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கம்பவாரிதி ஜெயராஜ் மாணவனாக இருந்தபோது ஓரிரு நாட்கள் நடந்த கம்பன் விழா, மலேசியத் திருவாசகமணி கலந்து கொண்ட திருவாசக விழா இவையெல்லாம் இம்முற்றத்தில்தான் நடந்தன. இந்த வகுப்பறைகளைப் பார்த்ததும் நினைவுக்கு வரும் வாத்தியார்கள்: மகேந்திரன் மாஸ்டர், மகேஸ்வரன் மாஸ்டர், புண்ணியலிங்கம் மாஸ்டர், சோமசேகரசுந்தரம் மாஸ்ட்டர், கணேசலிங்கம் மாஸ்டர், மரியதாஸ் மாஸடர், சுந்தரதாஸ் மாஸ்டர், சிவராஜா மாஸ்டர், சந்தியாப்பிள்ளை மாஸ்டர்....
புண்ணியலிங்கம் 'மாஸ்டர்' இந்த விறாந்தை வழியாகத்தான் ஒருமுறை 'டைனமோ' எவ்விதம் வேலை செய்கிறதென்று காட்டுவதற்குத் தனது சைக்கிளை வகுப்பறைக்குக் கொண்டுவந்து 'டைனமோ' எவ்விதம் வேலை செய்கிறது என்பதைச் செய்து காட்டினார். ஒன்பதாம் வகுப்பிலென்று நினைவு.
அப்பொழுது நான் அதிபர்கள் கண்டு பிடிக்கும்வரை நீண்ட தலைமயிர் வளர்ப்பேன். எனக்கும் அதிபர்களுக்குமிடையில் இவ்விடயத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு நடைபெறுவதுண்டு. பி.எஸ்.குமாரசாமி அதிபராக வந்த புதிதில் இந்த விறாந்தையில் வைத்துத்தான் நீண்ட தலைமுடியுடனிருந்த என்னைக் கண்டு , சிரித்தபடியே தலைமயிரை வெட்டி வரவேண்டுமென்று கூறியது நினைவிலுண்டு.
இங்குள்ள வகுப்பறையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் சந்தியாப்பிள்ளை மாஸ்டர் எங்களுக்குத் தமிழ் வாழ்த்தியாராக வந்திருந்தார். ஒரு நாள் ஜன்னலுக்கப்பாலிருந்த வீதி வழியாகப் பிரேத ஊர்வலமொன்று சென்றுகொண்டிருந்தது. மாஸ்டர் உடனே எங்களையெல்லாம் பிரேத ஊர்வலம் சென்று முடியும் மட்டும் எழுந்து நின்று மரியாதைச் செய்ய வைத்தார். அந்நிகழ்வு மறக்க முடியாத நிகழ்வு. சந்தியாப்பிள்ளை மாஸ்டரை நினைத்தால் எப்போதும் நினைவுக்கு வரும் நிகழ்வு.
இவை போன்று எத்தனை நினைவுகளைத் தன்னகத்தே பதுக்கி வைத்துள்ளது இந்த விறாந்தை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.