எழுத்தாளர் நடராஜா முரளிதரனின் கவிதைத்தொகுப்பொன்று அண்மையில் 'நாளை' பதிப்பக (கனடா) வெளியீடாக வெளிவந்துள்ளது. அவரது புகலிட வேலை அனுபவங்களை, அவரது கடந்த கால அரசியல் ஈடுபாடு காரணமாக நிலையாகக் காலூன்ற முடியாமல் நிற்பதால் உருவான வலியினை வெளிப்படுத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கியுள்ள தொகுப்பு. இத்தொகுப்பின் பிரதான கவிதை தலைப்புக் கவிதையான எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை' என்னும் கவிதை.
இந்தக் கவிதை முதன் முதலில் வெளியானது 'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்பக் காலத்தில் (டிசம்பர் 2009 இதழ் 120). இக்கவிதை பற்றி நூலுக்கு அணிந்துரை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் பின்வருமாறு கூறுவார்:
"எனது மண்ணிலிருந்து
நான் இடம்பெயர்க்கப்பட்டபோது
எனது மண்ணின் சில துணிக்கைகளும்
என்னோடு ஒட்டிக்கொண்டு
விலக மறுத்து
சகவாசம் புரிவதை
யாருக்கு நான் உணர்த்துவேன்"
கவிதையின் இவ்வரிகளைக்குறிப்பிடும் அரவிந்தன் 'இந்தக் கவிதையைப் புலம்பெயர்ந்த அனைவரது துயரமாக நான் வாசிக்க இயலும்' என்று குறிப்பிடுவார். சிறந்த கவிதையென்பது கவிஞரின் உணர்வுகளிலிருந்து பிறப்பது. அவ்விதம் பிறக்கும் கவிதையானது , அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகளை இயல்பாகவே கண்டடைந்து விடும் வல்லமை மிக்கது. இக்கவிதையும் அத்தகைய கவிதைகளில் ஒன்று. கவிஞரது சொந்த அனுபவங்களின் வலி உணர்த்தும் வரிகள் என்பதால் கவிதை சிறந்த கவிதைகளில் ஒன்றாகப் பரிணமித்துள்ளது.
நூலுக்கான தனது முன்னுரையில் கவிஞர் நடராஜா முரளிதரன் அவ்வப்போது தன்னால் எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுப்பில் சேர்த்திருப்பதாகக் குறிப்பிடுகின்றார். கூடவே அவை வெளியான (வெளிவந்திருந்தால்) ஊடகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கலாம். அவ்விதம் குறிப்பிடுவதன் மூலம் அவ்வூடகங்களின் பெயர்களும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். இவ்விதம் ஆவணப்படுத்துவது அவசியமானதொன்று. குறிப்பாக இக்காலக் கட்டத்தில்.
இத்தொகுப்பு பற்றிய விரிவான என் எண்ணங்களைப் பின்னர் ஒரு சமயம் விரிவாகப் பதிவு செய்வேன். பதிவுகளில் அன்று வெளியான நூலின் தலைப்புக் கவிதையின் முழு வரிகளையும் கீழே தந்துள்ளேன்.
-நடராஜா முரளிதரன் -
எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை - -நடராஜா முரளிதரன் -
கவிதை வாசிப்போம்!
எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை
அந்த அவாவினை
என் நினைவின் இடுக்கிலிருந்து
பிடுங்கியெறிவதையே
என் எதிரிகளும்
என்னவர்களும்
இடைவிடாது புரியும்
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்
எனது கனவுகளின் போதே
சாத்தியமாகியுள்ள
அந்த நினைவுப்படலத்தை
எனது அன்புக்குரியவளே
நீயும் சிதைத்து விடாதே
மூடுண்ட பனியில்
அமிழ்ந்து போய்
சுவாசம் இழந்துபோய்
நான் தவிப்பதுவாய்
நேற்றும் ஓர் கனாக் கண்டேன்
கோடை தெறித்த வெய்யிலில்
கருகும் உயிரினத்துக்கான
உஷ்ணவெளியில்
பிறந்த நான்
கனவுகளில்
உயிர் பிழைப்பதாய்
நீ நம்புவாய்
ஆனால்
எனது மண்ணிலிருந்து
நான் இடம்பெயர்க்கப்பட்டபோது
எனது மண்ணின் சில துணிக்கைகளும்
என்னோடு ஒட்டிக்கொண்டு
விலக மறுத்து
சகவாசம் புரிவதை
யாருக்கு நான் உணர்த்துவேன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.