அறுபதுகள், எழுபதுகளில் இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இசைக்குழுக்களில் இணைந்து பாடிப்புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் ஸ்ரனி சிவானந்தன். இலங்கைப் புகையிரதக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபடியே தன் இசைப்பயணத்தையும் தொடர்ந்தவர் இவர். இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனப் புகழ் ராமதாஸின் 'கோமாளிகள்' திரைப்பட வெற்றியைத்தொடர்து வெளியான 'ஏமாளிகள்' திரைப்படத்தில் ‘வா இந்தப் பக்கம்’ என்னும் பாடலைப் பாடியவர் இவர். 'இலங்கை இந்தியக் கூட்டுத்தாபன'தயாரிப்பான 'நெஞ்சுக்கு நீதி'யிலும் பாடியிருக்கின்றார். இந்தியத் தமிழ்க் கதாநாயகன் ஒருவனுக்காக (நடிகர் ஶ்ரீகாந்த்) முதலில் குரல் கொடுத்த இலங்கைத் தமிழ்ப் பாடகர் இவரே. வேறு யாரும் பாடியிருக்கின்றார்களா என்பது தெரியவில்லை.
இவர் 'ஏமாளிகள்' திரைப்படத்தில் பாடிய எழுத்தாளர் தம்பிஐயா தேவதாஸின் 'இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை' 'ஏமாளிகள்' திரைப்படம் பற்றிய குறிப்பில் பின்வருமாறு பதிவு செய்துள்ளது:
"கண்ணன்-நேசம் இசை அமைத்தார்கள். கலாவதி, ஜோசப் ராஜேந்திரன், ஸ்ரனி, சிவானந்தன் ஆகியோர் பின்னணி பாடினார்கள். இதுவும் ராம்தாஸ் ஏற்கனவே எழுதி ஒளிபரப்பிய வானொலி நாடகமே. ராம்தாஸே திரைப்படத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை வசனம் எழுதினார். உதவி டைரக்ஷன், தயாரிப்பு மேற்பார்வை போன்றவற்றை அவரே பொறுப்பேற்றார்..... ஸ்ரெனி சிவானந்தன் பாடும், ‘வா இந்தப் பக்கம்’ என்ற பாடலுக்கு இசை அமைப்பாளர்களில் ஒருவரான நேசம் தியாகராஜா வாயசைத்தவாறு நடனமாடியுள்ளார்."
இவர் நடிகர் திலகத்துக்காக பாடிய பாடல்கள் அக்காலகட்டத்தில் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதாக அறியக்கிடக்கின்றது.
உண்மையில் இவரைப்பற்றி அறிதிருக்கின்றேன், ஆனால் பெரிதாக இவர் பங்கு பற்றிய இசை நிகழ்வுகளைப் பார்த்ததாக நினைவிலில்லை. அமுதன் அண்ணாமலை, நித்தி கனகரத்தின்ம், ஏ.ஈ.மனோகரன் போன்ற பாடகர்கள் பாடிய பாடல்கள் நினைவுக்கு வருவதைப்போல் இவர் பாடிய பாடல்கள் உடனடியாக என் நினைவுக்கு வரவில்லை. என் பால்ய பருவத்தில் ஆலயத் திருவிழா இசை நிகழ்வுகளில் கண்ணன் இசைக்குழு, அருணா இசைக்குழு ஆகிய குழுக்களின் இசை நிகழ்வுகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். நிச்சயம் அந்நிகழ்வுகளில் இவரும் பாடியிருந்திருப்பார்.
இவரது மறைவுச் செய்தியை இன்று முகநூல் மூலம் அறிந்ததும் இவரது பாடல்களை யு டியூப்பில் தேடிப்பார்த்தேன். எவையும் கிடைக்கவில்லை. யாராவது இவை பற்றி அறிந்திருந்தால் அறியத்தரவும். ஆனால் இவரது இறுதிக்காலம் பற்றிய துயர் நிறைந்த காணொளியைக் காண முடிந்தது. துயர் தந்த காணொளியை பாரிஸ் கலைஞர் எஸ்.கே.ராஜெனின் யு டியூப் சானலான 'எம் தமிழ்' ( Emthamizh - S. K. Rajen) பகிர்ந்திருந்தது. அண்மையில் பகிரப்பட்டிருந்த இக்காணொளி பாரிஸ் டைமண்ட் ஹவுஸின் 'ஏணிப்படிகள் ' நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
அக்காணொளி மூலம் அண்மைக்காலமாக இவர் கிளிநொச்சியில் அமைந்திருக்கும் 'யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்ல'த்தில் வாழ்ந்து வந்ததை அறிய முடிந்தது. இவருக்கு பாரிஸ் டைமண்ட் ஹவுஸினர் வழங்கிய ரூபா 50,000 பற்றிய விபரத்தையும் அறிய முடிந்தது. இவருக்கு ஒரு மகன் இருக்கும் விபரத்தையும், இவரது இசை உலகப் பங்களிப்புகள் பற்றிய முக்கிய தகவல்களையும் அறிய முடிந்தது.
இக்காணொளி 'கண் முன்னே கரையும் கலைஞனின் வாழ்க்கை 'கண்ணன் கோஷ்ரி' பாடகர் ஸ்ரனி சிவானந்தன்' என்னும் தலைப்பில் தயாரிக்கப்பட்டிருந்தது. இவரது இறுதிக்காலத்தில் இவ்விதமானதொரு கெளரவிப்பினைப் பாரிஸ் டைமண்ட் நிறுவனம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இவர் இழப்பால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலி!
காணொளியைக் காண - https://www.youtube.com/watch?v=0BMac6tr7LU