I
அண்மைகாலத்து இலங்கையில், பல்வேறு சம்பவங்கள், அடுத்தடுத்து இடம் பெற்று, இலங்கை அரசியல் சூழலை அல்லது அச்சூழலை வசப்படுத்த முயலும் சிந்தனைகளை, அடியோடு சிதறடிக்கும் தொடர் கோர்வையாக, அரங்கேறத் தொடங்கியுள்ளன.
குருந்தூர் அரசியல் விவகாரத்தில் தொடங்கி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாக தூற்றப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்ட விடயமாகட்டும் அல்லது செல்வராசா கஜேந்திர குமார் குண்டுக் கட்டாக பொலிசாரால் ‘குளற குளற’த் தூக்கி சென்ற சம்பவமாகட்டும் (தினக்குரலின் தலைப்புச் செய்தி) அல்லது சனல் - 4 அலைவரிசை வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தொடர்பிலான இஸ்லாமிய தீவிரவாத விடயங்களாகட்டும் அல்லது எமது முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு தப்பி சென்ற விடயமாகட்டும் அல்லது சட்டமா அதிபர் நீதிபதி சரவணராஜாவை அழைத்து தீர்ப்பை மாற்றி எழுத சொன்ன குற்றச்சாட்டாகட்டும் அல்லது ‘தமிழ் மக்களை இந்தியாவும் கைவிட்டு விட்டது. ஐ.நா. படையை உடனடியாக இங்கு அனுப்பவேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஷ் அவர்களின் கூற்றாகட்டும் (தினக்குரல் தலைப்பு செய்தி: 01.10.2023) அல்லது ஒக்டோபர் மாத்தின் நடுப்பகுதி தொடக்கம் இந்தியா இலங்கைக்கான தனது படகு சேவையை, நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையில் ஆரம்பிக்கும் என்ற செய்தியாகட்டும் - அனைத்துமே, அவ்வவ் அளவில், தனித்தனி அதிர்வெடிகள் தாம்.
இருந்தும், இவ் அதிர்வெடிகளிடை கண்ணுக்கு எளிதில் புலப்படாத ஏதோ ஒரு தொடர்பும் இருக்கவே இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். இதனாலோ என்னவோ இச்சம்பவங்கள் அனைத்தையும், தனித்தனியே எடுத்து வாதிப்பதை விடுத்து இவற்றை ஓர் சங்கிலிக் கோர்வையாக அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கண்ணிகளாக கணக்கிலெடுத்து ஆய முற்படுவது இச்சம்பவங்களின் பின்னால் மறைந்துள்ள அரசியல் அர்த்தப்பாடுகளை கண்டுணர்வதாக அமையும் என்றும் இதே ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களின் இக்கூற்றை ஒரு முன்னுரையாக கொண்டு இத்தொடரின் வாசிப்புகளை நாம் முன்னெடுக்க முயல்வது சிறப்பானது.
II
சென்ற கட்டுரைத் தொடரில், திட்டமிட்ட ரீதியில், நுணுகிய வினைத்திறனற்ற செயற்பாடுகளின் மூலம், குறித்த இனங்களின் தேசிய அரசியலை “செயற்கையாக”த் தூண்டி விடுதல் அல்லது எழுச்சியுற செய்தல் என்பது தொடர்பிலான அரசியலை அலச முற்பட்டிருந்தோம்.
யதார்த்தத்தில் இருந்து முற்றாய் அந்நியப்படுத்தப்பட்டு கற்பனை , கனவுகளில் ஊறி மிதக்கும் இவ்வகை அரசியலுக்கு, வடகிழக்கு, எவ்வாறு கடந்த காலங்களில் களம் சமைத்திருந்தோ அதே போன்று அண்மைக் காலங்களில் இவ்வகை அரசியலானது மலையக சமூகங்களிடையேயும் ஊடுருவி, இன்று செழுமை பெற தொடங்கியிருப்பது இன்றைய புதிய நிலவரமாகின்றது.
இப்படிப்பட்ட உசுப்பி விடும் (உசுப்பேற்றும்) அரசியலுக்கு ஒத்தாசை தந்து அதற்கு தேவைப்படும் சமூக அடித்தளங்களை இட்டு விடுவதில் புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்தினது மறைகரம் மலையத்தில் செயல்படாமல் இல்லை என்பதே சென்ற கட்டுரை தொடரின் சாரமாகியது.
முக்கியமாக, விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் வடமாகாண சபை எவ்வாறு முடக்கப்பட்டது என்பது போன்றே அண்மை காலத்தில், மலையகத்தின் கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டு ஒரு ஸ்தம்பித நிலையை அடைய செய்வதில் இம்மறைகரத்தின் செயல்பாடு அடிநாதமாகியது.
எம்மவரின் கரங்களை கொண்டே எமது சமூகங்களின் கண்களை குத்தி கிழிக்கும் இவ்வகை உத்திகள் நுண் அரசியலால் விளைந்த ஒட்டுமொத்த விளைவுகள் என்பதும், இவற்றின் மொத்த பலாபலன்களையும் உறிஞ்சி தீர்க்கும் மறைமுக சக்திகள் யாவை – எவை என்பதும் சமூக அக்கறை கொண்ட எமது இளையதலைமுறையினர் முகம் கொடுக்கும் ஆரம்ப வினாக்களில் ஒன்றாகின்றது. ஆனால் இத்தகைய கேள்விகள் ஒருபுறம் இருக்க, இவ்வகை அரசியலானது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஏதோ ஒரு வகையில் இன்று பலமுடன் செயல்படுவதாகவே உள்ளது, - இதே புலம்பெயர் அரசியலின் தீவிர ஒத்தாசைகளுடன்.
இருந்தும், இதற்கான ஒட்டு மொத்த கொடுப்பனவுகளும், இறுதிக் கணிப்பில், (அல்லது இறுதியில்) இங்குள்ள அல்லது இங்கேயே வாழக்கூடியே தமிழ் மக்களாலேயே செலுத்தப்படுவதாக இருக்கும். (உதாரணம், முல்லைதீவு நீதிபதி போன்ற இரண்டொரு பேரின் தப்பியோட்டங்களை தவிர்த்து) என்ற நிதர்சனமான உண்மையானது பூதாகரமாக எம்முன்னால் எழுந்து நிற்கவே செய்கின்றது.
இத்தீர்க்கமான கேள்வியை புறற்தள்ளி, தத்தமது அரசியல் அபிலாசைகளை வெறும் அகநிலை சார்பில் முன்னெடுத்து, தமது தேடுகைகளில் ஆழ்வோர், இத்தேடுகைகள் அனைத்தும், ஈற்றில் அப்பட்டமான நிராசையில் சென்று முடிவடைந்து விடுவதை, எமது கடந்த கால முப்பது வருட அனுபவம் கறாராக எடுத்துக் காட்டியே உள்ளது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே சென்ற கட்டுரை தொடர், குறிப்பாக இன்றை மலையக சிதைப்பு படலமும் அதன் தாக்கமும் என்ற கருத்தாக்கத்தை வாதிக்க முற்பட்டிருந்தது.
III
வடமாகாண சபையை வினைத்திறன் அற்றதாய்க் காட்டி, சர்வதேசத்தின் முன் நிறுத்துவோம் என்ற ஊறிப்போன அரசியலின் ஒரு பகுதியாகவே வடமாகாண சபைக்கான நிதி பயன்படுத்தப்படாமல் அப்படியே மில்லியன் கணக்கில், மீண்டும் மத்திக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந் நடைமுறையானது எமது புலம் பெயர் மக்கள் ஈறாக யார் யாரை திருப்த்திபடுத்தி இருப்பினும், அதைவிட பன்மடங்கில் தெற்கின் பெருந்தேசியவாத முகங்களுக்கு, “இந்திதி திரும்பல்” எதிர்பாராத, ருசிகரமான சந்தோசமிக்க ஏற்புடைய செயற்பாடுகளாக இருக்க செய்தன.
நிதியை திருப்பி அனுப்பி, வடமாகாண சபையை வினைத்திறன் அற்றதாய் காட்டினால் சர்வதேசம் ஒடோடி வந்து பிய்த்து பிடுங்கி விடும் என்ற எதிர் பார்ப்புகள் முன்னெடுக்கப்படுகையில், தெற்கோ, குறிப்பிட்ட நிதி வருவாயில், சாவதானமாய், தமது சாலைகளை புணரமைப்பதிலும் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதிலும் மகிழ்ச்சியுடன் மேற்படி நிதியை பட்டுவாடா செய்து கொண்டிருந்தது.
பிரச்சினை, இன்று இதே அரசியல் முன்னெடுப்பு மலையகத்திலும் ஊடுருவி உள்ளதா? இதன் தாக்கங்கள் எவ்வாறு உள்ளன என்பதுமாகும்.
IV
சென்ற வாரத்தில் ஊடகத்தில் வெளிவந்த இரு செய்திகள் முக்கியத்துவம் ஏந்துபவையாக இருந்தன: ஒன்று, ஹட்டன் புனித கெப்ரியல் கல்லூரியில் தமிழ் பிரிவு நடத்தப்படும் விதம் குறித்து “பிரிவினை காட்ட வேண்டாம்” என்றும் “தமிழ்ப் பிரிவுக்கு பாராபட்சம் காட்டுதல் ஆகாது” என்றும் கல்லூரிக்கு விஜயம் செய்த மாகாண கல்வி செயலாளர் மேனகா ஹேரத் புத்திமதி கூறினார் என்பதாகும். (வீரகேசரி: 24.09.2023) இது போன்றே எமது புகழ்பூத்த மனோ கணேசன் அவர்கள் விசாகா, நாளந்தா போன்ற வரலாற்று ரீதியிலான, முற்றுமுழுதான பௌத்த பாடசாலைகளில் தமிழ்ப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற அதிர்வெடியை வீசியெறிந்ததும் ஆகும். இது, பெருந்தேசிய வாதத்தால் கொந்தளித்து போய் கிடக்கும் தென் இலங்கையில், எத்தகைய கொந்தளிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது யாரும் அறிந்திருக்க கூடிய சிறு பிள்ளை விவகாரம் தான்.
இவ்விரு செய்திகளுமே, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் அரசியலுக்கு உதாரணங்களாக திகழக்கூடியதுதான் என்பது கூறாமலேயே விளங்கும். ஏனெனில், இதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாகத்தான், ஹட்டன் கல்வி வலயத்தில், எம்மவரான, முன்னைநாள் ஹட்டன் கல்விப்பணிப்பாளர், ஸ்ரீதரனின் அனுசரனையோடு ஹட்டன் கல்வி ஸ்தாபனங்களை ஒட்டுமொத்தமாக சிதைத்தழிக்கும் முயற்சி, ஆரம்பமானதை சென்ற கட்டுரை தொடர் விலாவரியாக அம்பலப்படுத்தியிருந்தது.
மலையக பல்கலைகழக நுழைவு எண்ணிக்கையை கணிசமான அளவில் மட்டுப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும் இச் செயற்பாடுகளை தெற்கானது ஒரு வரப்பிரசாதமாகவே கொள்ளும் என்பதில் கேள்விக்கு இடமில்லை. காரணம், ஹைலன்ஸ் கல்லூரியின், கல்வி நிலையை ஸ்தம்பிக்க செய்வதால், ஏற்படும், பல்கலைகழக நுழைவு குறைவானது, தெற்கின் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்பது தெளிவு.
இருந்தும், இதை பற்றி எல்லாம் யாதொன்றும் கதைக்காத மனோ கணேசன் அவர்கள் இன்று, விசாகா–நாலந்தாவில், தமிழ் பிரிவை ஆரம்பிக்க கூறும் அரசியல் வினோதமானது மாத்திரமல்ல ஆனால் விசித்திரமானதும் கூட (ஹைலன்ஸ் கல்லூரியில், தீர்க்கமான இடமாற்றங்களை செய்த, அதே சமயம் மலையக பிள்ளைகளுக்கான கல்வியை கொடு என்று மன்னாரின் இருந்து மாத்தளை வரை நடைபவனி தொடங்கிய அதே கதைதான் இந்த கதையும்). இருந்தும், இவ் வினோத அல்லது விசித்திர அரசியல் என்பது, இன்று உலக முழுவதும் தலைவிரித்தாடும் ஒரு காலகட்டத்திலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம் என்பதும் எமக்கு தெரிந்தாகவேண்டி உள்ளது. உலகம், இன்று வரலாறு காணாத மாற்றங்களை கண்டு வர துவங்கியுள்ளதே இவ்வினோதங்கள் இடம்பெறுவதற்கான அடிப்படை காரணங்களாக அமைகின்றன.
அதாவது ஒரு முனை உலகு (Unipolar world) என்பது பல்முனை (Multipolar World) உலகுக்கு இடம் தர வேண்டிய இழுபறி, மற்றும் உலகின் தென் மண்டலம் விழித்தெழுந்துள்ள இன்றைய நிலையிலும் முக்கியமாக ஆபிரிக்கா கண்டம் அல்லது BRICS - போன்ற அமைப்புகள் இன்றைய டாலரின் அந்தஸ்தை கேள்விக்குட்படுத்தும் நிலையிலும், ஐநா சபையில் தமது இடம் என்ன என நாடுகள் கேள்விகளை முன்னெடுக்கப்படும் சூழலிலும், இவ்வினோத அரசியல் விசித்திரமாக காட்சி அளிப்பது தவிர்க்க முடியாததாகின்றது. (இந்நிலவரம், உக்ரைனிய-ரஷ்யப் போர்களத்தில் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் வரப்படலாம் என்ற முடிவும் ஒரு புறம் இருக்க). ஆனால் இவ்வகை விசித்திர அரசியலுக்கு இலங்கையின் வடக்கிழக்கோ, அன்றி மலையகமோ விதிவிலக்காக அமையபோவதில்லை என்ற உண்மை சுட்டிக்காட்டத்தக்கதே ஆகும்.
V
இப்பின்னணியிலேயே, இன்று, இலங்கையில் நிலவக்கூடிய இவ்விசித்திர அரசியல் குறித்த “புரிதல்” என்பது “அரகல” முன்வைத்த அரசியல் காலக்கட்டத்திலிருந்து தொடங்கபடவேண்டிய தேவைப்பாட்டை சுட்டுகின்றது.
“அரகல” போராட்டமானது, இன–மத–சாதீய வேறுபாடுகளையும், கட்சி அரசியல் பேதங்களை கடந்ததாகவும், வடக்கின் நினைவேந்தல்களை கூட “தன்னளவில்” நியாயப்படுத்துவதாகவும், உண்மை நல்லிணக்கத்தை கோருவதாகவும், இன வேறுபாடுகள் நிறைந்த தெற்கின் மக்களிடை, ஓர் புதிய அரசியல் நாகரீகத்தை அறிமுகப்படுத்துவதாகவும் இருந்தது.
இப்போராட்ட அலைகளின், ஒட்டுமொத்த விளைபயனாய் முன்னைநாள் ஜனாதிபதியும் அவரது சகபாடிகளும், ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இருந்தும், இதன் அடுத்த படியை நோக்கி, இவ் அரகலவிற்கு தலைமை தாங்கியவர்கள் நகர முடியாத பட்சத்தில் (செய்வதறியாத பட்சத்தில்) மேற்கின் - இந்தியாவின் அனுசரனையோடு ரணில் பதவியேற்க நேர்ந்தது.
அரகலவின் போது, மக்களின் கட்டுக்கடங்கா கோபத்தை கண்டுணர்ந்த பாராளுமன்றம் உடனடியாக கூடி, இப்பேராபத்தில் இருந்து தப்ப, ஒரு தனி நபராய் இருந்த, ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஜனாதிபதியாக்கியது. (அரகலவில் பங்கேற்ற கட்சிகள், பாராளுமன்றத்தில் மூவராக மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிக்கத்தக்கதுதான்).
இச்சூழலில், பொறுப்பேற்ற ஜனாதிபதியின் முன்னிருந்த ஒரே கடமை அரகல தோற்றுவித்த அரசியலை இந்நாட்டில் வேருடன் பிடுங்கி எறிந்து விட்டு, அதற்கு பதிலாய் ஆதிக்க சக்திகளுக்கேற்ற ஓர் அரசியலை நட்டு விடுதல் என்பதுவே ஆகும்.
இப்பின்னணியிலேயே வசந்த முதலிகே போன்றோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மாதகணக்கில் சிறையில் அடைப்பட்டனர். மேலும், அரகல சார்பான செயற்பாடுகள் அல்லது ஊர்வலங்கள், அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இதே வேளை, இந்நாட்டை சூறையாடியவர்கள் அல்லது திறை சேரி முறிகளை கல் மனம்போன போக்கில் விற்றுத்தள்ளி இந்நாட்டை மீளவே முடியாத கடன் சுமைக்குள் தள்ளி விட்டவர்கள் தொடர்பில் எந்தவொரு குறைந்தபட்ச விசாரனைகூட நடத்தப்படாமல் விடப்பட்டது காலத்தின் சோதனை என ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
ஆனால் விடயம் இத்துடன் முடிந்ததாக இல்லை. அதாவது, அரகலவை, அடித்து நொறுக்கியதுடன், நிகழ்ச்சி நிரல் தன் பூரணத்துவத்தை எய்தியதாக இல்லை. அரகல நொறுக்கப்பட்டதுடன், அது கொண்டு வந்ததிருந்த அரசியலும் நொறுக்கப்பட வேண்டி இருந்தது. அதாவது “அரகல” ஏற்படுத்திய அரசியலானது வேருடன் பறிக்கப்பட்டு அதற்கு பதிலாய் வேறொரு அரசியல், அவ்விடத்தில் ஆழநடவேண்டிய தேவைப்பாட்டை உலக வல்லரசுகள் கோராமல் விடவில்லை. மிக முக்கியமாக, இலங்கை வீற்றிருக்கும் பூகோள தந்திரோபாய அமைவிடத்தையும் கருத்தில் கொள்வோமானால்.
VI
எரிபொருளுக்கான நீள்வரிசை, எரிவாயுக்கான நீள்வரிசை, உணவு பொருட்களின் தட்டுப்பாடு, பணவீக்கம் - இவற்றை நீக்கி விடுதல் மாத்திரம் ஆட்சியாளர்களின் அபிலாஷைகளை ப10ர்த்திசெய்வதாகாது அதாவது, பொருளாதார மீட்சி என்பது மாத்திரம், இவர்களது பார்வையில், விடயங்களை ப10ர்த்திசெய்வதாகாது. மாறாக முகிழ்த்திருக்கின்ற புதிய அரசியல் சுவாத்தியம், எப்பெயரிலாவது முற்றாக துடைத்தெறியப்பட்டு, இதற்கு பதிலாய் தமக்கு சாதகமான ஓர் அரசியல் சுவாத்தியம் இடப்பட்டு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே வல்லரசுகளினதும் ஆட்சியாளர்களினதும் கோரிக்கையானது.
சுருக்கமாக கூறினால், பொருளாதார நெருக்கடிகள் தளர்த்தப்படும் அதே நேரம் குருந்தூர் மலையின் அரசியலும் அங்கே ஆழ நட்டாகப்பட வேண்டும் என்பதுமே கோரிக்கையானது. இப்பின்னணியிலேயே சர்வதேச நிதி நிறுவனத்தின் (IMF) வருகையும் இலங்கையில் ஆரம்பமானது.
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.