சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன் -
நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை அறிந்தேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது.
தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' (சுயசரிதை) 'மழைக்கால இரவுகள்' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார். இவரது முக்கிய சமூகப் பங்களிப்பாக இதனை நான் கருதுவேன்.
இவரது கட்டுரையொன்று 'பதிவுகள்' இணைய இதழில் ' மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில் , ஜெயன் மஹாதேவன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.
யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஜெயன் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.