எழுத்தாளர் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகள்' - வ.ந.கிரிதரன் -
- ஜீவநதி சஞ்சிகையின் 189ஆவது இதழ் எழுத்தாளர் முருகபூபதி சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. அதில் வெளியான வ.ந.கிரிதரனின் கட்டுரை. ஜீவநதி சஞ்சிகையினைப் பெற விரும்புபவர்கள் அதன் ஆசிரியர் பரணீதரனுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். - பதிவுகள்.காம் -
1. உருவக் கதைகளும் முருகபூபதியின் 'பாட்டி சொன்ன கதைகளும்'!
எழுத்தாளர் முருகபூபதியின் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்த 'பாட்டி சொன்ன கதைகள்' நூலைப்படித்தபோது இந்நூல் என் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. முருகபூபதி ஊடகத்துறையில் நீண்ட கால அனுபவம் மிக்க எழுத்தாளர். தன் ஊடகத்துறை அனுபவங்களைத் தவறாமல் தனது கட்டுரைகள் மூலம் ஆவணப்படுத்தி வருபவர். சிறுகதைகள், நேர்காணல்கள், பயண அனுபவங்கள், நூல் விமர்சனங்கள், உருவகக் கதைகள் என அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.தொடர்ச்சியாகப் பத்திரிகைகள், இணைய இதழ்களில் எழுதி வருபவர். இக்கட்டுரை அவரது 'பாட்டி சொன்ன கதைகள்' என்னும் உருவக்கதைகளின் தொகுப்பு பற்றிய திறனாய்வுக் குறிப்புகள் எனலாம்.
உருவகக் கதைகள் என்றதும் நினைவுக்கு வருபவவை கலீல் கிப்ரானின் கதைகள், ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள். தமிழகத்தில் உருவகக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ஐ.சாமிநாதன். அறுபதுகள், எழுபதுகளில் இவரது உருவகக் கதைகள் பல தமிழக வெகுசன இதழ்களில் வெளியாகின. இவர் கலைமகள் ஆசிரியராக விளங்கிய கி.வா.ஐகநாதனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் விந்தனும் உருவகக் கதைகள் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் உருவகக் கதைகளை எழுதியுள்ளதாக அறியப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரைல் தமிழில் உருவக் கதைகள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் சு.வே என்றழைக்கப்படும் எழுத்தாளர் சு.வேலுப்பிள்ளை. அடுத்தவர் எழுத்தாளர் எஸ்.முத்துமீரான். எஸ்.பொ, செம்பியன் செல்வன், செங்கையாழியான் போன்றவர்களும் உருவக்கதையின் பக்கம் தம் கவனத்தைத் திருப்பியிருக்கின்றார்கள். 'நான்' (யாழ்ப்பாணம்) பதிப்பக வெளியீடாக செம்பியன் செல்வனின் 'குறுங்கதை நூறு' (!986) தொகுதியில் சமூக, அரசியலைச் சாடும் சிறப்பான உருவகக் குறுங்கதைகள் சில உள்ளன.