மாத்தளை வடிவேலன்: மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரம்! - மு.நித்தியானந்தன் லண்டன் -
"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம்.
இந்த மாத்தளை மண்ணை தன் சுவாசத்தில், மூச்சில், ரத்தநாளங்களில், சிந்தனையில் ஏற்றிப் பெருமிதம் கொள்பவர் மாத்தளை வடிவேலன். மாத்தளைப் பிராந்தியத்தில் அவர் காலடிகள் படாத இடமேயில்லை. அங்குலம் அங்குலமாக அந்தப்பிரதேசத்தை அளந்து வைத்திருப்பவர் அவர்; தெரிந்து வைத்திருப்பவர்; வடிவேலன் கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகளாக அந்த மண்ணோடு போராடி வந்திருக்கிறார்.அந்த மண்ணில் நடந்து முடிந்த அரசியல் மாற்றங்கள், எழுச்சிகள், புரட்சிகர இயக்கங்கள், அடுத்தடுத்து தொடர்ந்து இடம்பெற்ற இனவன்முறைகள், அவற்றிற்கு எந்த நேரத்திலும் பலியாகும் மக்களாக குறிவைக்கப்பட்ட மலையக மக்கள், உண்ண உணவின்றி தமிழ்த் தொழிலாளர்கள் அந்த மண்ணை விட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவலம், தோட்டங்கள் அரச உடைமை ஆக்கப்பட்டபின், மாத்தளையின் பெருந்தோட்டங்களின் பொலிவே சிதைந்து போன கோலம், இன சௌஜன்யம் குலைந்து போன கொடுமை - இத்தனையையும் அவர் கண்கூடாக்கண்டிருக்கிறார். தன் நெஞ்சிலே தணல் கொண்டு திரிந்திருக்கிறார். தோல்வியையும் துயரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார். மாத்தளை வீதிகளிலே அணிவகுத்துச் சென்ற ஊர்வலங்களில் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார். அரசியல் மேடைகளில் அவர் துணிவோடு முழங்கியிருக்கிறார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். தோல்விகளைக் கண்டிருக்கிறார், துவண்டு போனதில்லை. மாத்தளையில் உயிரோட்டம் மிக்க இலக்கியப் பாதையைச் செப்பனிடுவதில் அவர் மூலகாரணராயிருந்திருக்கிறார். மாத்தளையில் கே.முருகேசப்பிள்ளையும் , ஷெய்கு கலைமானுல் காதிரியும் ஏற்றிவைத்த உன்னத இலக்கியச்சுடரை முன்னேந்திச் சென்ற பெருமகனாக மாத்தளை வடிவேலன் திகழ்கிறார்.இர.சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன்,பாரதியின் பேத்தி விஜயபாரதி, அவரது கணவர் சுந்தரராஜன், கு.அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகளுக்கு மாத்தளையில் செங்கம்பளம் விரித்து சிறப்புச் செய்த நிகழ்வுகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட இளைஞராக வடிவேலன் திகழ்ந்திருக்கிறார். மாத்தளை கார்த்திகேசு, மலரன்பன், அல் -அஸ{மத், கதிர்வேல், பூபாலன், சி.கா.முத்து, ஆ .ராஜலிங்கம், பழனிவேல், கே.கோவிந்தராஜ், எச்.எச்.விக்ரமசிங்க, மாத்தளை சோமு என்று பேரணியின் அணைப்புடன் செயற்பட்டவர் வடிவேலன். மாத்தளையின் இலக்கியப் பாரம்பரியத்தை முன்னெடுத்த முக்கிய ஒரு கண்ணியாக வடிவேலன் இலக்கிய வரலாற்றுக்குரியவராகிறார்.