வங்குரோத்து நிலையை நோக்கி அமெரிக்கா: 31.4 'டிரில்லியன் டொலர்' (அதாவது 31.4 லட்சம் கோடி ரூபா)! இது மொத்த தேசியக் கடன்! மீளூமா? அல்லது தாழுமா? - ஜோதிகுமார் -
இன்னும், மூன்று–நான்கு மாதங்களில், நாட்டின் காங்கிரஸானது, அமெரிக்காவின் கடன் பெறும் வரையறையை உயர்த்தவில்லை என்றால், அதாவது எமது நாடான இலங்கையைப் போல், காசடித்தும் - இறை வரிகளை விற்று தீர்த்தும் அல்லது, இன்னும் இது போன்ற பல வழிகளில், மக்களை அடமானம் வைத்து கடன்களைப் பெற்று வாழ்க்கை ஜீவிதத்தை ஓட்டி செல்ல, வழி செய்து தரும் வகையில் -காங்கிரஸானது கடன் பெறும் தனது வரையறையை உயர்த்தவில்லை என்றால்;–அமெரிக்காவானது, தனது, வங்துரோத்து நிலையை உலகு அறிய பிரகடனம் செய்வதை தவிர வேறு வழி இல்லை என அமெரிக்கத் திறைசேரியை சார்ந்த, யெலன் அம்மையார், அண்மையில் கூறிவிட்டார்.
இருந்தாலும் கடன் பெறும் உச்ச வரம்பை முற்றாக உதாசீனப்படுத்தி புறக்கணித்துவிட்டு– அப்புறக்கணிப்பிற்கூடாக இப்போதிருக்கும் வாழ்க்கை ஜீவிதத்தை தொடரலாம் அல்லது தொடர்ந்தும் உலக நாடுகளிடம் இருந்து பணம், புரட்டி, வாழ்வதைத் தொடரலாம் என அமெரிக்கப் பொருளியல் வல்லுனர்கள் சிலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். மொத்ததில் மூன்று வழிகளுமே, உலக வல்லரசாகிய அமெரிக்கா தேர்ந்து கொள்ள, அதன் முன் நிற்க கூடிய மூன்று வழிகளாகின்றன. அதாவது, ஒன்று, வட்டி கட்ட முடியாத வங்குரோத்து நிலைமையை அறிவிப்பது, அல்லது கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தி விட்டு மேலும் டொலர்களை அச்சிட்டு வெளியிடுவது, அல்லது கடன் முறிகளை மேலும் ஏற்படுத்துவது என இவ்வழிகள் தேரப்பட வேண்டியவையாகத் தோற்றம் தருகின்றன. ஆனால், அதால பாதாளத்துள் வீழ்ந்துள்ள இத்தகைய பொருளாதார நிலைமை, உலகின் முதல் வல்லரசு என கூறப்படும் அமெரிக்காவிற்கு வந்துள்ளது என்ற செய்தியே சங்கடத்தை உண்டு பண்ணும் செய்தியாக இருக்கின்றது.
இது போதாது என்று மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று, இன்று சீனாவும் ஜப்பானும் போட்டி போட்டு கொண்டு தாம் இதுவரை வாங்கி குவித்திருந்த, அமெரிக்க கடன் முறிகளை, உலக சந்தையில் விற்று கரைக்க வேறு தொடங்கிவிட்டன. ஜப்பானானது, இவ்வருடத்தின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்றே மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம், தன் கையிருப்பிலிருந்த 2.43 கோடி அமெரிக்க கடன்முறிகளை, உலக சந்தையில் விற்று தீர்த்து விட்டதாக அறிவித்து விட்டது. இதற்கு சற்றும் குறைவில்லாமல், சீனமும், தன் பங்கிற்கு, தான் பெற்று வைத்திருந்த கோடிக்கணக்கான பெறுமதியான அமெரிக்க கடன் முறிகளை விற்று தீர்த்துள்ளது. 2012இல் இருந்து 2022 வரையிலான 10 வருட காலப்பகுதியில், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் முறிகளை, சராசரியாக தன் கைவசம் கொணடிருந்த சீனா, இன்று விற்று தீர்த்தது போக பெப்ரவரி 2023இல் வெறும் 123.25 கோடி டாலர் பெறுமதியான அமெரிக்க கடன் முறிகளை மாத்திரம் தன் கைவசம் கொண்ட நாடாக இன்று திகழ்கின்றது.