[எழுத்தாளர் மா.சித்திவினாயகம் 'ரொறன்ரோ தமிழ்ச் சங்க'த்தில் 'கனடாவில் நவீனத் தமிழ்க் கவிதை' பற்றி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்]

 கனேடியப் பனி நிலத்தின்இந்தப்  பெருங் குளிரிலும், நம் தமிழ்க் கவிதைப் பூந்தோட்டம்  சீரோடு செழிக்கிறது.  அது கொடிவிட்டுத் தழைத்துச் செழிக்கின்ற புனிதத்தைப் போற்றுகிற,  இந்த தமிழ்க்கவிதை   உரையாடலுக்கு  வருகை தந்திருக்கும் அறிஞர்களே, கவிஞர்களே அன்பு உறவுகளே உங்கள் கரங்களை தமிழன்போடு இறுகப் பற்றுகின்றேன். 

    புலம்பெயர்ந்த மக்களின் புண்பட்ட இதயங்களுக்குக் கவிதையே மருந்தாகிறது. அவர்களின் பண்பாட்டு அடையாளங்களுக்குக் கவிதையே மகுடமாகிறது. 

    இத்தகையதொரு சீரிய உரையாடலை, அவசியமான உரையாடலை  ஒருங்கிணைத்த ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கும், அதன் நெறியாளர், மதிப்பிற்குரிய பேராசான் சுப்பிரமணிய ஐயா அவர்களுக்கும், அவருக்குத் தோள் கொடுக்கும் தோழர் அகில் போன்றோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 

கடந்த மாதம் இதே அவையில் மானிடவியல் குறித்த தேடல் ஒன்று இடம் பெற்றது ... மனிதன் குரங்கிலிருந்து கிளைத்தானா அல்லது கடவுளின் கையால் படைக்கப்பட்டானா என்ற அந்தப் பதிலறியாப் பெரும் போர் இன்றும் எங்கும் தொடர்கிறது. அதே போன்றதொரு தர்க்கமும், மயக்கமும் தான் கனடாவில் நவீன கவிதையின் தோற்றம் குறித்தும் நமக்கு எழுகின்றது. 

கனடியத் தமிழ்க் கவிதையின் வேர்களைத் தேடுவது என்பதும்   அதிலும் நவீன கவிதைக்கான பிறப்பை ஆராய்வதென்பதும் அதன் பூர்வீகம் அறிய முற்படுவதும்.. .. ஓர் வில்லங்கமான முயற்சி.  இது ஒரு சிக்கலான, தேடல்.. ஆனால் அந்தத் தேடலை தேடுவதுதான் தமிழர் வாழ்வின் வரலாற்றின் நீட்சியென்பதை  தன் குறிக்கோளாக கொண்டுள்ள  ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கென் வாழ்த்துகள். 

 தமிழ் இலக்கியப் பரப்பின் திசையையே மாற்றியமைத்த பெரும் திருப்புமுனை ஈழத் தமிழர்களின்  புலம்பெயர்வு. பனி படர்ந்த இந்தப் பரந்த தேசம், இன்று எம் இனத்தின் இரண்டாவது தாய்நிலமாக உருவெடுத்துள்ளது. 

    பூர்வீக மண்ணில் பல்வேறு காரணிகளால் தமிழ் மொழி மெல்லச் சிதைந்து வருகிறதோ என்கிற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், தமிழைக் காக்கும் தலைமை நாடாக கனடா திகழும் என்கிற தீர்க்கமான நம்பிக்கை நம்மிடம் தளிர் விட்டு ஒளிர்கிறது. 

    இங்கு உருவான நவீன கவிதைகள் வெறும் சொற்களின் கோலங்கள் அல்ல; அவை எம் இனத்தின் பெருவலியின் பதிவுகள், இருப்பின் அத்தாட்சிகள், போராட்டத்தின் சாட்சியங்கள். 

    போர் தந்த ரணங்கள், சுனாமி தந்த பேரழிவுகள் என இரத்தமும், சதையுமாகச் சிதைந்து கிடக்கும் ஒரு சனக்கூட்டத்தின் சாகாவரம் பெற்ற வெளிப்பாடுகள்தான்  இந்தக் கவிதைகள். 

    கனடியத் தமிழ்க் கவிதைகளின் படிமுறைகளை நாம் மூன்று நிலைகளில் வைத்துப் பகுத்துப் பார்க்கலாம். அதில் முதல் நிலையாக  இரத்தமும் சதையுமாக போரோடு இருந்த நேரடி  நினைவுகளால் ஏற்ப்பட்ட வலி  ஏக்கம்! 

    அதை நேரடியாக கண்டு அனுபவித்த கவிஞர்கள் எழுதியிருக்கின்றார்கள்.  அவ்வாறான  தொடக்கக் காலக் கவிதைகளில் இழந்துவிட்ட நிலத்தின் வாசமும், பறிகப்பட்ட வாழ்வும்  வீசிக்கொண்டே இருந்தது. 

    ஊர் பற்றிய ஏக்கம், உறவு பற்றிய தவிப்பு, நிமிர்ந்து நின்ற பனைமரங்கள், அலைமோதிய கடல், அனலாய் எரிந்த போர் என அந்தச் சொல்லாடல்கள் முழுக்க முழுக்க இழப்பின் வலியால் நிறைந்திருந்தன. 

    கவிஞர்களின் பேனா முனைகளில் நிலத்தின் மணமும், போரின் காயமும் ஒருசேரத் துடித்தன. அங்கே சொற்கள் கவிதைகளாகப் பிறக்கவில்லை; அவை எம் மண்ணை நினைத்துச் சிந்திய கண்ணீர் துளிகளாகவேவடிவெடுத்தன.

    இரண்டாவதாக, நம் கவிதை மொழியில் நிகழ்ந்த பெரிய மாற்றம் புதிய நிலம் புதிய பண்பாடு.   வெப்பமண்டலத்தின் வியர்வை படிந்த நம் தமிழ் மொழிக்குள், இந்தத் துருவ நிலத்தின் வெண்மையான பனி (Snow) மெல்ல மெல்ல ஊடுருவத் தொடங்கியது. 

    செந்நிற மண்ணும் செழுமையான பனை மரங்களும் மறைந்து, கவிதைகளுக்குள் ஊசியிலைப் பைன் (Pine) மரங்களும், பச்சை சிவப்பு மஞ்சளாய் வண்ணங்கள் மாறும் மேபிள் (Maple) இலைகளும் வந்து விழுந்தன. 

    ஆடும் மாடும் மேய்ந்த நம் அக நிலத்தில், இன்று கரிபூக்களும், றாக்கூன்களும், கருப்பு வெள்ளை நிறத்தில் ஸ்கங்குகளும், பீவர், மூஷ்களும் உலா வரத் தொடங்கின. 

    குளிரும், கொடிய தனிமையும், அந்நியமாதலும் கவிதையின் உயிர்நாடிகளாய் மாறின. 

    சி.என் ரவரும், ஒன்ராறியோ வாவியின் ஆழமான அமைதியும் புதிய படிமங்களாக உருவெடுத்தன. 

    ரிம் ஹோட்டன் (Tim Hortons) காப்பிக் கடையும் , பபுக்கீயூ (BBQ) அடுப்புகளும், பன்றி  இறைச்சியும் கூட நம் வாழ்வியலின் குறியீடுகளாயின. 

    ஒரு கவிஞன் தான் வாழும் புதிய நிலத்தோடு கொள்ளும் இந்த ஆத்மார்த்தமான உரையாடலே, கனடியத் தமிழ்க் கவிதையின் நவீனத்துவ உச்சம் என்று நான் நம்புகின்றேன்.

    மூன்றாவதாக, நாம் காலங்காலமாக நம்பிய சமூகத்தின் வாழ்க்கை முறை, நம்பிக்கை, கலை, மொழி மற்றும் விழுமியங்கள் யாவற்றையும் கேள்வியாக்கியபடியே கனடிய நிலப்பரப்பில்   தமிழ்க் கவிதை நிலம் தாண்டி 'பெண்' எனும் பெரும் ஆளுமை குறித்து சுதந்திரமாகவும்,காத்திரமாகவும் பேசாத செய்திகளையெல்லாம்  பேசத் தொடங்கியது. 

    பண்பாடு என்பது பண்படுதல் என்றும் , அது மாறுந் தன்மையது என்றும்  சொன்னது அது  காலங்காலமாகச் சொல்லப்படாத கதைகளையும், சொல்லத் துணியாத உண்மைகளையும் நம் கவிதைகள் உரக்கப் பேசின. 

    அதிகாரத் திமிரால் ஆளப்படும் உலகையும், எப்ஸ்டீன் போன்ற முதலாளித்துவ ஆணாதிக்கப் பேய்களின் அக்கிரமங்களையும் கூட நம் கவிதைகள் சுதந்திரமாகச் சாடின.  இது ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மகா பாய்ச்சல்! 

    புலம்பெயர் மண்ணின் புத்தெழுச்சியால், நவீனப் பெண் கவிஞர்கள் தங்கள் அக உணர்வுகளைச் சிறை உடைத்துத் திறந்தனர். 

    ஆணாதிக்கத்தின் வேர்களை அறுத்தெறிந்து, புலம்பெயர் வாழ்வில் பெண்கள் சுமக்கும் அந்த 'இரட்டைச் சுமை' குறித்துக் காத்திரமாகவும், கவித்துவமாகவும் பதிவு செய்யத் தொடங்கினர். 

    ஆணாதிக்க இருளை அகற்றி, பெண்மையின் பேரொளியை ஏந்தி நிற்கும் இந்த மாற்றம் நம் கவிதையின் புதிய அடையாளம்!"

    இன்றைய கனடாவில் தமிழின் நவீன கவிதை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது நம் மொழி வேர்களைப் பாதுகாக்கும் உன்னத ஆயுதம்! 

    மூத்த கவிஞர்கள் நட்ட விதையை, இன்று இளைய தலைமுறை கவிஞர்கள் விருட்சமாக்கி, தமிழை உலகளாவிய நவீன மொழியாகக் கனடிய மண்ணில் நிலைநிறுத்தி வருகின்றனர். 

    புதிய நிலங்களில் திசையெங்கும் படரும் கிளைகளாக நம் கவிதைகள் தமிழ் மொழியின் எல்லையை விரிவுபடுத்துகின்றன என்பதே நிதர்சனம். 

    "புலம்பெயர் இலக்கியமே உலகத் தமிழ் இலக்கியத்தின் மகுடம்' என்று இலக்கிய ஆளுமை எஸ். பொன்னுத்துரை (எஸ்.போ) அவர்கள் கனேடிய மண்ணில்  என்றோ சொன்ன தீர்க்கதரிசனம், இன்று கனடிய மண்ணில் மெய்ப்பட்டிருக்கின்றது. 

    இந்த இலக்கியப் பாய்ச்சலுக்கு உதயன், ஈழநாடு, தாய்வீடு, செந்தாமரை, ஈழமுரசு, உலகத்தமிழர், தாயகம், வைகறை, முழக்கம், மஞ்சரி காலம்,நம்நாடென பல் நூற்றுக் கணக்கான   பத்திரிகைகளும், பதிவுகள் போன்ற எண்ணற்ற இணையச் சஞ்சிகைகளும் அரியணையாக நின்று ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. 

    இன்று கவிதைகளின் பெருக்கமும், புதிய கவிஞர்களின் வருகையும் ஒரு புதிய சூழலை உருவாக்கியுள்ளது. புலம்பெயர் இலக்கியம் என்ற பொதுப்பெயரைக் கடந்து, நாம் வாழும் நிலம், பேசும் களம், எதிர்கொள்ளும் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளை எல்லையாகக் கொண்டு இன்று இலக்கியம் வகைப்படுத்தப்படுகிறது. கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியம், ஐரோப்பியத் தமிழ் இலக்கியம், நோர்வே, டென்மார்க், ஸ்கண்டிநேவியத் தமிழிலக்கியம்  என அந்தந்த பிரதேச மணத்தோடும், வாழும் நாடுகளின் முனைப்போடும் புதிய புதிய கிளைகளாக அவை வேர் விடத் தொடங்கியுள்ளன. 

    கனடியத் தமிழ் இலக்கியம் என்பது தனித்த ஒரு அடையாளம்; அது பனி நிலத்தில் பூத்த தமிழ் மலர்! அந்தப் பூக்களின் வாசம் உலகெங்கும் வீசுகிற பெருங்கவிதை!"

    இங்கு ஆய்வாளர்கள் பலர்  எழுதியிருப்தைப்போல கனடாவில் தமிழ்க் கவிதை 1984-ல்தான் தடம் பதித்ததா? என்கின்ற கேள்வி அவசியமானது. 

    அப்படியென்றால், 1984-க்கு முன்னதாக கல்விக்காகவும், உத்தியோகத்திற்காகவும் இந்தக் கடும் குளிரில் கால் பதித்த நம் முன்னோர்கள் கவிதை அறியாதவர்களா? கலை உணர்வு இல்லாதவர்களா? என்ற கேள்வி நம் முன்னே பூதாகரமாக நிற்கிறது. எகிப்திய மண்ணில் புதைந்து கிடந்த ஈராயிரம் ஆண்டுச் சிகைகொற்றனை இன்று கண்டுபிடித்திருப்பது போல, நம் காலத்திற்கு முன்னைய கவிஞர்களையும் நாம் காலம் கடந்துதான் கண்டெடுக்கப் போகிறோமா என்கிற கவலை நெஞ்சைக் கசக்குகிறது. 

    இந்த வரலாற்றுத் தேடலை வலுப்படுத்த, அண்மைக்காலத்தில் கனடாவில் வெளியான மூன்று முக்கிய ஆய்வுகளை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன . பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் 'கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்', என்கின்ற 500 பக்கங்களுக்கும் அதிகமான வரலாற்றுப் பதிகை மற்றையது எழுத்தாளர்  அகில் அவர்களின் 'கனடா எழுத்தாளர்கள் பற்றிய தேடல் மற்றும் கணையாளி இதழிற்கு எழுதிய கட்டுரை 

    இன்னொன்று தேடலுள்ள ஆய்வாளர் மைதிலி அவர்களின் 'புலம்பெயர் இலக்கிய ஆய்வு' என்கிற 'பதிவுகள்' இணையவலைத் தேடல். 

    இந்த  மூன்றும் சொல்ல வருகிற  தேடலும், ஆராய்வும்  ஒரு புள்ளியில் தான் பெரும்பாலும்  இணைகின்றன. 

    கனடியத் தமிழரின் புலம்பெயர் வரலாற்றில், கவிதையின் முதல் எழுச்சிஎன்பது  மொன்றியல் மண்ணில்தான் நிகழ்ந்தது என்பதைத் தான்  இவை உரக்கச் சொல்கின்றன. இதனை உறுதி செய்ய நான் 'பதிவுகள்' இணைய ஆசிரியர்  வ.ந. கிரிதரனை தொடர்பு கொண்ட வேளை அவரும் 'புரட்சிப் பாதை' இதழ்களின் நகல்களை எனக்கு அனுப்பியிருந்தார். அவற்றை காணொளியாக்கி இங்கு காட்ட வேண்டும் என்ற என் எண்ணம் என் கணணியின் இயலாமையால் சாத்தியப்படவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். 

    'புரட்சிப்பாதை', 'தமிழ் எழில்' போன்ற கையெழுத்துப் பிரதிகள்தான் அகதிகளாக வந்த நம் மக்களின் ஆதி வெளிப்பாடுகள் என அவை அடித்துக் கூறுகின்றன.

    இந்த ஆய்வுகள் பல கவிஞர்களை அடையாளப்படுத்தினாலும், இன்னும் எத்தனையோ ஆளுமைகள் இந்தப் பதிவுகளின் பார்வையில் விடுபட்டுப் போயிருக்கிறார்கள். 

    கவிஞர்களைப் பெயரிட்டுப் பட்டியலிடுவது என்பது கத்தியின் மேல் நடக்கும் அபாயகரமான முயற்சிதான்! இருப்பினும், விடுபட்டவர்களைத் தேடிக் கண்டடைவதும், ஆவணப்படுத்துவதும் இன்றைய இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத, மிக அவசியமான பணியாகும். 

    பத்திரிகைகளும்,இணைய வலைகளும் அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். நமது பத்திரிகைகள் சஞ்சிகைகள் தம் வருட முடிவில் அதில் எழுதுகிற கவிஞர்களை, எழுத்தாளர்களை அட்டவணை செய்வதில்லை. அது செய்யப்பட வேண்டிய பணி 

    விடுபட்ட அந்த வேர்களைத் தேடியும் நம் பயணம் தொடர வேண்டியதாகவிருக்கின்றது. 

    தோழர்களே! கவிதை என்பது வெறி கொண்ட வெறுங் கிறுக்கல் அல்ல .. அது நிகழ்காலத்தின் தரிசனம், கடந்தகால வரலாறு,  எதிர்காலத்தைக் காட்டி நிற்கும் தெளிந்த கண்ணாடி! 

    புதிய அனுபவங்களை, பழைய புரிதல்களின் புதிய வெளிச்சத்தில், சொல்லத் துணியாத செய்திகளைச் சொல்லும் துணிச்சலே கவிதை. 

    என்க்குத் தரப்பட்ட தலைப்பு 'கனடாவில் நவீன தமிழ்க் கவிதை' !

    இங்கே 'நவீனம்' என்பதற்கு என்ன வரைவிலக்கணம் உண்டு? நவீனத்தின் மூலமெது ? நவீனத்தின்்விடிவெள்ளி எது? யாப்பு மரபை மறுத்தலும், எளிய சொல்லாட்சியென படிமங்கள் குறியீடுகளால் படங்காட்டி நிற்கிற புதுமைதான் நவீனமா ? என்கிற கேள்விகள் எழுகின்றன.

    நவீனம் தமிழ் மரபில் இல்லவே  இல்லை" என்று யாராவது வாதிட்டால், அது தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் அதன் தொடர்ச்சியையும் புரிந்து கொள்ளாததாலேயே எழும் கருத்தாகும்.  

     நவீனம் என்கிற வடமொழிச் சொல் ஒருவேளை பிரெஞ்சுப் புரட்சியின் பின் முகிழ்த்த சொல்லாக இருக்கலாம். 18-ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் வந்த பிறகு 'யாப்பு' (செய்யுள் இலக்கணம்) உடைந்து உரைநடை உருவானது. வடிவம் மாறியதால் அதை நாம் 'நவீனம்' என்கிறோம். 

    ஆனால், அதில் சொல்லப்படும் தனிமனித உணர்வுகள், சமூகச் சிக்கல்கள், தத்துவத் தேடல் போன்றவை சங்க காலத்திலேயே தமிழில் தொடங்கிவிட்டன. இன்றைய நவீனப் புதுக்கவிதைகள் சொல்கிற குறைந்த சொற்களில் அதிக ஆழமான பொருளைத் தருவது (Economy of words). இதையேதான் சங்க இலக்கியத்தின் 'குறுந்தொகை' பாடல்கள் செய்தன. படிமங்கள் உருவகங்களாக இருந்தன. 

    நுட்பமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் தோழர்களே ...  

    இந்த நவீனச் சூட்சுமம் அறியாதவர்கள்தான் புதுக்கவிதையென்றும், மரபுக்கவிதையென்றும் எதிர்த்து நின்று இங்கு பஞ்சாயத்து நடாத்துகிறவர்கள். மாய்ந்து கட்டி மல்லுக்கு போகின்றார்கள். 

    நொந்து சுமந்து பெற்று, நோவாமல் ஏந்தி முலை தந்து வளர்த்த தாயின் உடலுக்கு மெய்யிலே தீமூட்டுவேன்?' 

    என்று சுடலையில் நின்று கதறிய பட்டினத்தாரின் அந்தப் பெருவலியை விடவா இன்றைய நவீனக் கவிதை எம் உணர்வை உலுக்கிவிட முடியும்? அதனைப் பழம்பாடல் என்றோ, படிமமில்லாக் குப்பை என்றோ எவ்வாறு ஒதுக்கிவிட முடியும் ? 

    தமிழ் இலக்கிய ஆதி வரலாறு என்பதும் மரபு என்பதும் ஏதோ புரியாத சொற்களின் தொகுப்பல்ல. நவீனத்துவம், பின்நவீனத்துவம், மைய நீக்கம், படிமம் என நாம் இன்று சூட்டிக்கொள்ளும் பெயர்கள் எல்லாம் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தமிழின் மாபெரும் தொடரோட்டம் என்பதை நாமுணர வேண்டும் ! அவற்றைப் புதுக்க விதைத்த விதைகளாக நாம் போற்றுவது சிறப்பு  அதற்காகப் பொருதுவதுதான் தப்பு. 

    அந்த ஓட்டத்தில் மைல்கற்களாய் நின்றவர்கள் பட்டினத்தாரும், மாணிக்கவாசகரும், சந்தத் தமிழால் சிலிர்க்க வைத்த அருணகிரியும் ,தேவாரம் பாடிச்சிந்திக்க வைத்த நம்முன்னோரும் தான்..  

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனச் சங்கத் தமிழ் உரைத்த சமத்துவ நீதியும், 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' எனக் கடவுளையே கேள்வி கேட்டுச் சபித்த திருவள்ளுவரின்அந்தப் பேராண்மையும் தான் நவீனத்தின் ஆதிப்புள்ளிகள் தோழர்களே ! 

    தேவாரத்திலும், திருப்புகழிலும் முக்குளித்து, தமிழ்க் கிழவி ஔவையின் அறத்தில் அழகு பார்த்ததுதான் நம் தமிழ்க் கவிதை எனும் பெருந்திமிர்! 

    அவற்றைச் வெறும் "சங்கப் பனை ஓலைச்சருகுகள்' என நாம் ஒருபோதும் புறந்தள்ளிவிட முடியாது. 

    அந்தத் தொடர்ச்சியின் நீட்சியே இன்று கனடியப் பனி நிலத்தில் நாம் எழுதும் நவீனக் கவிதை!" 

    தமிழ்க் கவிதை என்பது காலத்தின் பெருவெளியில் கரைபுரண்டு ஓடும் ஒரு கவிதை மகாநதி! 'அவை நம் இனத்தின் வரலாற்றுப் பதிவுகள்!

    பன்னிரண்டாம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் கலைக் கோபுரமாய், கவிதைச் சிகரமாய் வீறுகொண்டு எழுந்தவன் கவிச்சக்ரவர்த்தி கம்பன்! 

    'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்' எனத் தொடங்கி, இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி அந்தமில்லாப் பேரியக்கத்தையே தன் பத்தாயிரத்திற்குமதிகமான விருத்தப்பாக்களில் சிறைபிடித்த மகா கலைஞன் அவன். 

    கம்பன் ஊற்றிய அந்தத் தமிழ்த் தேன் தான், இன்றைய நவீனக் கவிஞர்களுக்கும் வற்றாத ஊற்றாக, அள்ள அள்ளக் குறையாத சுரங்கமாகத் திகழ்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    அந்தக் கம்பனுக்குப் பின், நவீனத் தமிழின் விடிவெள்ளியாக, புத்துலகின் தந்தையாக நாம் போற்ற வேண்டியவர் தைரியநாதர் எனும் வீரமாமுனிவர்! 

    இத்தாலியின் வெனிஸ் நகரில் பிறந்து, முப்பது வயதில் தமிழ் மண்ணின் மணம் நுகர்ந்து, இங்கேயே வேரூன்றிப் போனவர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. 

    காவியுடை தரித்து, கடுக்கன் பூண்டு, மாமிசம் துறந்து, ஒரு முழுமையான தமிழ்க் கவித் துறவியாக, சொல்லின் செல்வராக வாழ்ந்த அந்தப் பேராளனே நவீன தமிழ் இலக்கியத்தின் ஆதி மூலவராக கருதப்பட வேண்டியவர்!

    "தோழர்களே! தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் வழங்கிய கொடைகளிலேயே மிக உன்னதமானது அவரது சதுரகராதி! சூத்திரங்களாக இருந்த தொல்காப்பியமும், செய்யுள் வடிவில் இருந்த நிகண்டுகளும் மட்டுமே பொருள் சொல்லும் கருவிகளாக இருந்த அக்காலத்தில், சாமானியனும் சொற்களின் பொருள் அறிய 'அகரவரிசை'ப்படுத்தி பொருள் தேடும் நவீனத் திறவுகோலைத் தந்தவர் அவர். இன்றைய நவீன புதுக்கவிதையின் வசன நடைக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழ்வது அந்தச் சதுரகராதிதான்! 

    தமிழ் இலக்கணங்கள் ஐந்தினையும் சூத்திரங்களாய்த் தொகுத்து, அதற்குத் தெளிவுரை எழுதி, 'பரமார்த்த குரு கதை' எனும்  தன் மொழிபெயர்ப்பு  அச்சு நூலைத் தந்து, நகைச்சுவை இலக்கியத்திற்கும் வித்திட்ட மகா ஆசான் அவர். 

    3615 விருத்தப் பாடல்களைத் தேனாகக் குழைத்து, 'வாடாத மாலை'யாம் தேம்பாவணி காவியத்தைப் படைத்து, தமிழுக்கும் கிறித்தவத்திற்கும் இடையே ஒரு கலைப் பாலமாய் நிமிர்ந்து நின்றார். 

    'நறும் பூ அனைய சொல் மலரால்' தொடுக்கப்பட்ட அந்தத் தேம்பாவணியில், ஒரு ஒடுக்கப்பட்ட தலித்திய  தச்சரான இயேசுவின் தந்தை சூசையப்பரை காப்பிய நாயகனாக்கிப் பாடியதுதான் அந்தப் படைப்பின் மகுடமான சிறப்பு! 

    ஓர் எளிய மனிதனை இலக்கியத்தின் உச்சத்தில் அமர்த்திய அந்தப் புரட்சிகரமான அணுகுமுறையே தமிழின் நவீனத்தின் தொடக்கம் தோழர்களே.

    அதற்கடுத்து 17-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை வானில் ஒரு பெரும் புயலாய் வந்துதித்தவர் உமறுப் புலவர்!அவரே நம் 'இஸ்லாமியக் கம்பர்'. 

    தமிழ் மரபின் செழுமையைத் தழுவி, நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பொக்கிஷமாய் வடித்த 'சீறாப்புராணம்' எனும் 5027 விருத்தப்பாக்களால் காவியத்தைச் செதுக்கிய சிற்பி அவர். 

    இஸ்லாமிய விழுமியங்களை உள்வாங்கி, மரபு மாறாமல் நவீனம் ததும்பப் பாடிய அவரது 'செஞ்சொல் மலர்கள்' என்றென்றும் வாடாதவை. 

    சங்கத் தமிழின் வேரில் தொடங்கி, கம்பனின் கிளைகளில் படர்ந்து, வீரமாமுனிவரின் தேம் பாவணியில் மணம் பரப்பி உமறுப் புலவரின் செஞ்சொல்லில் தொடரும் இந்த நீண்ட நெடிய மரபின் நீட்சியே, இன்று கனடியப் பனி நிலத்தில் நாம் சுவாசிக்கும் நவீனத் தமிழ்!"

    கனடாத் தமிழ்க் கவிதைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். இந்த முன்னோடிகள் இட்ட அஸ்திவாரம் இல்லையேல், இன்று நாம் பேசும் நவீனத்திற்கு முகவரியே இல்லை தோழர்களே! 

    அதன்பின், 1912-இல் மகாகவி பாரதி எனும் யுகப்புரட்சியாளன் வருகிறான். 'பாஞ்சாலி சபதம்', 'கண்ணன் பாட்டு', 'குயில் பாட்டு' எனத் தமிழை உரைநடையாக்கிக் குமரிக் கடல் முதல் இந்தக் கனேடியப் பனி நிலம் வரை கொண்டு சேர்த்தவன் அவன். 

    மரபா, வசனமா, நவீனமா என்கிற  பிச்சுப் பிடுங்கல் கேள்விகளுக்கெல்லாம் இடமில்லாமல், 'வார்த்தைகள் நடந்தால் வசனம், அவை நடனமிட்டால் கவிதை' என்பதை மெய்ப்பித்தவன் பாரதி! 

    அவனிடம் மொழி வசப்பட்டது, வானமே ஏணியானது. 

    நண்பர்களே மொழிவசப்பட்டவன் எவனோ அவனே கவிதைக்காரன்...நவீனமோ, மரபோ மொழிவசப்படாதவன் எவனும் கவிஞனேயல்ல. 

    மரபில் வளர்ந்த தமிழ்க் கவிதைக்குள் திடீரெனப் பாய்ந்த புதுப் பாய்ச்சலாக, மணிக்கொடியில் வளர்ந்த புதுக்கவிதையின் பிதாமகர் ந. பிச்சமூர்த்தி தோன்றுகிறார். 

    'ஆமைபோல் உணர்ச்சிக் கிணற்றில் அமிழ்வோம், அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம்' 

    என உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து, யாப்புச் சிறைகளை உடைத்து எறிந்தவர் அவர். 

    கொம்பையும் கிணற்றையும் பிணைக்கும் வித்தையைத் தமிழுக்குக் கற்றுத் தந்து, நவீன கவிதைக்கான ராஜமுத்திரையை அமைத்துக் கொடுத்தவர் பிச்சமூர்த்தி! 

    இந்த மகா நதிகளின் சங்கமமே, இன்று கனடியப் பனி வயல்களில் நாம் பாடும் கவிதை !"

    தோழர்களே! பாரதிக்குப் பின் எழுந்த அந்தப் புதுக்கவிதைப் பெருஞ் சுடர், கடல் கடந்து ஈழத்து மண்ணிலும் பெரும் தீயாய் உருவெடுத்தது. 

    1940-களுக்குப் பின், பாரதிதாசனின் புரட்சியையும் கலைவாணனின் சிந்தனையையும் உள்வாங்கி, ஈழத்து நவீன கவிதையாளர்கள் முளைவிடத் தொடங்கினர். 

    எழுத்தாளர் அ.ந. கந்தசாமி   கவிஞர்  'கவீந்திரனாக' நின்று வழிகாட்ட, உருத்திரமூர்த்தியெனும் மகாகவி, சோ. நடராசன், நாவற்குழியூர் நடராசன், செ. கதிரேசபிள்ளை, சாரதா, சிவசேகரம், நுகுமான்,யாழ்ப்பாணன், முருகையன், நீலாவணன், சக்தி, அ. பாலையா, சண்முகம் சிவலிங்கம், காசி ஆனந்தன், சு. வில்வரத்தினம், சிலையூர் செல்வராசன், சுபத்திரன், வண்ணச்சிறகு, வரத பாக்கியான்,எனப் பல்லாயிரக் கணக்கானோர்  ஈழத் தமிழ்க் கவிதையின் நவீனப் பாய்ச்சலுக்கு உரமிட்டவர்கள்! 

     இவர்களுள் மகாகவி எனும் மகா கலைஞன்,  'குறும்பா' போன்ற படைப்புகளின் வழி கவித்துவத்தில் பெரும் புதுமைகளைச் செய்தார். 

    ஈழத்து நவீனத் தமிழ் இலக்கியம் என்பது இதழ்களின் மடியில் வளர்ந்த அரிய குழந்தை. 

    செ. கணேசலிங்கனின் 'குமரன்' களனி போன்ற இடதுசாரி இதழ்களும், 'பூரணி', 'அலை' போன்ற பல்வேறு சிற்றிதழ்கள் நடத்திய இலக்கியவேள்வியும்,  விவாதங்களுமே அற்புதமான புதுக்கவிதையாளர்களை எமக்குத் தந்தன. 'குமரன்' இதழில் வரதபாக்கியன் என்ற பெயரில் கவிதை வடித்து, பின் புதுவை இரத்தினதுரையாக, பேனா மனோகரனாக, சோலைக்கிளியாக, மலையன்பனாக  மிளிரும் ஆளுமைகள் அந்தப் பள்ளியில் பயின்றவர்களே! 

    அதன்பின்னர், போரின் ரத்தமும் சதையுமாகப் புறப்பட்டார்கள் 'போர்க்காலக் கவிஞர்கள்'. சேரன், ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை, புதுசுரவி, ஆதவன், இளவாலை விஜேந்திரன்,, கி.பிஅரவிந்தன், செல்வி, சிவரமணி, ஒளவை மாதுமை, எனத் தொடர்ந்தது அந்தப்பெரும் கவிப் பட்டாளம்.

    இதே காலகட்டத்தில் தான் 31 கவிஞர்களின்  'மரணத்துள் வாழ்வோம்' எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுப்பு அங்கு பிறந்தது.  .அந்த தொகுப்பினை தொகுப்பதில் முன் நின்றுழைத்தவர்கள் , மதிப்பிற்குரிய இ.பத்மநாப ஐயர், கவிஞர் சேரன், அ.யேசுராசா, 
மயிலங்கூடலு¡ர் பி.நடராசன் ஆகியோர்.  அந்தப் பெரும் தொகுப்பில், சித்திவிநாயகம்பிள்ளை என்ற பெயரில் என் கவிதையொன்றும்  இடம்பெற்றிருந்தது.  அதற்குப் பிறகு தீ, அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்கிற இரு கவிதைத் தொகுப்புகளை வெவ்வேறு நாடுகளில் நான்  வெளியிட்டிருந்தேன்.  

    இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், கேள்விகள் கேட்காத, சுயமாகச் சிந்திக்காத "தலை இல்லாத" கூட்டமே இந்த ஏகாதிபத்திய உலகிற்கு தேவை யென்பதை தலைகளைப் பறிகொடுத்தோர் என்ற கவிதையாக எழுதினேன். 

    தலையில்லா இறால்களுக்கே
    மவுசு அதிகம் என்கிறது விளம்பரம்!
    உண்மையில்...
    சிந்திக்க மறுதலித்த
    மனித முண்டங்களுக்கே
    இங்கு மதிப்பும் அதிகம்!

    தலையுள்ள இறால்களை விட…………
    தலையில்லா இறால்களுக்கும்
    தலையுள்ள நெத்தலிகளை விட……………
    தலையில்லா நெத்தலிகளுக்கும்
    அதிக விலையும் அதிக மவுசும் என
    அந்தக் கடை விளம்பரங்கள் –

    என்னைக்குழப்பி விடுகின்றன !

    தலைகள் இருப்பதே கேவலமாகவும்
    கௌரவக் கோளாறாகவும் 
    உணருகிற நாட்கள் இது !
    என்று தொடர்கிற அக்கவிதை.... 

    பிரபஞ்சத்திற்கான புதிய சங்கீதங்களைச் சுடுகாடாக்கி விட்டு
    அடுத்தவன் பிரக்ஞையை உன் பிரக்ஞை என்று வாதிடும்
    உனக்கு – வட்டமாய் திரண்ட ஓர் தலையிருந்தென்ன ?
    இல்லாமலிருந்தென்ன ??

    என்று முடியும் அந்தக் கவிதை

     'இனியொரு' இணைய வலையில் பல வருடங்களுக்கு  முன்  எழுதிய கவிதை. 

    இன்றைக்கும் தலையிருந்தால் நாம் மறுபடி மறுபடி    ட்ரம்பைத் தெரிவு செய்வோமா ? என்பது ஓர் கேள்வி...

    'மரணத்துள் வாழ்வோம்', மற்றும் 18 பெண்கவிஞர்களின் பெருமாற்றலாக வெளிப்பட்ட"சொல்லாத சேதிகள்" போன்ற போர்க்காலக்கவிக்கனல்கள் தான்  , இன்று கனடியப் பனி நிலத்தில் நாம் எழுதும் கவிதைகளுக்கும்  மூலமாய் அமைகிறது! தோழர்களே  கனடியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் காலக்கண்ணாடியைத் திருப்பிப் பார்த்தால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அதன் முதல் அச்சு மொன்றியல் மண்ணில்தான் பதிந்திருக்கிறது. 

    1984-ஆம் ஆண்டு மொன்றியலில் மலர்ந்த 'தமிழ் எழில்' என்னும் மாதாந்த கையெழுத்துப் பிரதிதான் அந்த ஆதிப்புள்ளி! அங்கேயேதான் 'தமிழர் ஒளி' என்கிற முதல் தமிழ் வானொலிச் சேவையும் தன் குரலை ஒலிக்கத் தொடங்கியது என்கிற செய்தியை பலரின் ஆய்வுகள் பேசுகின்றன.

    நூல் வடிவில் வந்த கவிதைகளைத் தேடிப் போனால், தொடக்க காலத்தின் இரு பெரும் தடங்கள் நமக்குத் தென்படுகின்றன:

    முதலாவதாக, 1985-ஆம் ஆண்டு ரவி அமிர்தன் அவர்களின் 'விழிப்பூ' கையெழுத்துப் பிரதியாக வெளிவந்தது. 

    அதே காலகட்டத்தில், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அவர்களின் 'மண்ணின் குரல்' — இது நாவல், கட்டுரைகள் மற்றும் எட்டு நவீன கவிதைகளைச் சுமந்து வந்து கனேடிய  நிலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த எட்டுக் கவிதைகளும் அற்புதமானவை.

    அதில் 80/ 81 களில் கிரிதரன் அவர்களால் எழுதி 'மண்ணின் குரலி'ல் வெளியான கவிதை இது..

    புல்லே! பசிய எழிற் புல்லே! 
    உன்னைத்தான்...
    மிதிபட்டு, மிதிபட்டு, 
    மிதிபட்டே வாழுமொரு வாழ்வில்
    என் சிறு புல்லே! நீ
    மாய்ந்திடவில்லை. 
    மனதொடிந்து
    ஓய்ந்திடவில்லை. அதை இவர்க்குப்
    புரிய வைத்திடு. , ஆமாம்
    புல்லே புரிய வைத்து விடு!

    அடங்கி, அயர்ந்து, அடிமைகளாய்க்
    குடங்கிக் , குமைந்து, கூனிக் குறுகியே
    வாழும் எம்  மக்கள் உன்னிடம்
    அறிந்ததோ பற்பல.
    அதை இவர்க்கு உரைத்துவிடு புல்லே!

    புல்லின் நுனிகளிலும்
    புரட்சிகள் பூத்துவிடும் காலமிது என்பதனை
    புரிய வைத்துவிடு சிறு புல்லே
    இம் மூடர்களுக்கு 

    புரிந்ததா மூடரே! புரிந்ததா?
    புரிந்துமா நிற்கிறீர் எதிர்த்தெமை.
    ஆமாம்! நீர் போக மாட்டீர். ஆயின்
    போக வைப்போம் நாம்.
    புரட்சிகள் வெடிக்காமல்
    புதுயுகங்கள் பிறப்பதில்லை என்பதனைப்
    புரிய வைப்போம் பதர்களே 

    என்று  சிங்கள இனவெறி அரசிற்கெதிராக  80 களில் எழுதிய கவிதை கனடா மண்ணிலே ஈழத்து மண்ணின் குரலாக முதலில் பதிந்திருந்தது ! 

    இவை அனைத்தும் 'புரட்சிப்பாதை' எனும் சஞ்சிகையில் வேர்விட்டு எழுந்தவை என்பது கிரிதரன்  மற்றும் இணையப் பதிவுகள் சொல்லும் நிதர்சன உண்மைகள்.. 

    கனடாவில் எண்பத்தேழு, எண்பத்தெட்டுகளில் தான் அச்சு இயந்திரங்களின் மை கவிதை நூல்களில் படியத் தொடங்கின. அதன் தொடக்கமாக, 1988 லே வெளியான சுதா குமாரசுவாமி அவர்களின் கவிதைத் தொகுப்பை நாம் வரலாற்றுச் சான்றாகக் கொள்ளலாம். 

    ஆனால், ஒரு பெரும் கேள்வி நம் முன்னே தொக்கி நிற்கிறது! 1984-ஆம் ஆண்டிற்கு முன்னரே டொராண்டோ மாநகரில் தமிழ்ப் பத்திரிகைகள் முளைவிடத் தொடங்கிவிட்டன. இன்றும் மணம் பரப்பும் 'செந்தாமரை' இதழ் அப்போதே வெளிவரத் தொடங்கிவிட்டது. அது அன்று கையெழுத்துப் பிரதியா அல்லது அச்சு வாகனத்தில் ஏறி வந்ததா? இத்தகைய கேள்விகளுக்கு விடை காண்பதே நம் வரலாற்றை முழுமைப்படுத்தும் முயற்சியென்று நம்புகின்றேன் தோழர்களே. 

    துரதிர்ஷ்டவசமாக, நம் இலக்கிய ஆய்வுகள் அத்தனையும் ரொறன்ரோவோடும், மொன்றியலோடும் முற்றுப் பெற்றுவிடுகின்றன! நியூபவுண்லாந்தின் கடற்கரையிலும், கல்கேரியின் கடும் குளிரிலும், வன்கூவரின்இயற்கை எழிலிலும் இருந்து பெருங்குரலெடுத்துப் பாடும் நம் தமிழ்க் கவிஞர்களின் குரல்கள், கவனிப்பாரற்றுப் போயிருப்பது ஒரு கசப்பான அபத்தமல்லவா? 

    ஆனால், இன்று காலம் மாறியிருக்கிறது! கனடாவின் புலம்பெயர் படைப்பிலக்கியம், மூத்தவர்களின் அனுபவத்தோடும் இளையவர்களின் வேகத்தோடும் கைகோர்த்து ஒரு மகா சமுத்திரமாக விரிவடைந்து வருகிறது. 

     கவிதையோடு நின்றுவிடாமல் சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், கூத்து, திரைப்படம், சிறுவர் இலக்கியம் மற்றும் பத்தி எழுத்து எனப் பன்முகத் தன்மையோடு அது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

    பன்னாட்டுப் பதிப்பகங்கள் இன்று கனேடியக் கவிஞர்களைத் தேடி வந்து களம் தருகின்றன; புத்தகத் திருவிழாக்கள் வீதிதோறும் களை கட்டுகின்றன. உலக அளவில் தமிழ்ப் படைப்பாளிகளைத் தேடிப் பிடித்து மகுடம் சூட்டும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் போன்ற அமைப்புகள் நம் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றுகின்றன. 

    இந்த இலக்கியப் பயணத்தை ஆவணப்படுத்துவதில் பதிவுகள் இணையம், உதயன், காலம், தமிழர் தகவல், ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்,இலக்கியவெளி மற்றும் கனடா எழுத்தாளர் இணையம் போன்ற பல அமைப்புகளின் அர்ப்பணிப்பு மிக்க பணி என்றென்றும் போற்றத்தக்கது. 

    உண்மையில்... கவிதை நூல்களை வெளியிட்டவர் மட்டுமா கவிஞன்? பத்திரிகைகளில் பக்கங்களை நிரப்பயவரா கவிஞன்  , மேடைகளில் கவியரங்குகளில் கவி  பாடியவரா கவிஞன் , அல்லது ஹைக்கூவை, கல்வெட்டை, படிமத்தை, தேர்ந்த மரபைச்  செதுக்குபவரா கவிஞன் ? வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா கட்டளைக் கலித்துறைகளில் வல்லவர்கள் தான் கவிஞரா 

    யார் கவிஞன் ?   இங்கு இது ஓர் பெருங் கேள்வியாக எழுகிறது ? அதை எப்படி வரையறை செய்வது என்பது விடையறியாக் கேள்வி...

    இங்கு கவிஞர்களை, எழுத்தாளர்களை வரையறைசெய்வதும், விருதளிப்பதும் பெரும்பாலும்  கேலிக்கிடமான பொழுது போக்காக உள்ளது.   அது ஒருவருக்கொருவர் முதுகு சொறிவதாகவும் , மாறிமாறி மாலையிடுவதாகவும்.திறந்த விமர்சனங்கள் எதுவும் இங்கு இல்லை என்றும் குற்றச் சாட்டுகள் நிறையவே உண்டு . அவற்றையும் நாம் சீர் தூக்கிக் கணக்கிலெடுக்க வேண்டும் 

    கவிஞர்களின் பட்டியலைத் தயாரிக்கும்போது இந்தக் கேள்விகள் நம்மை நோக்கி சரமாரிகளாய்  எழுகின்றன. எந்த வரையறையினுள் நாம் கவிஞரை வகுப்பது எழுத்தாளரை வகுப்பது  ?? . 

    வடிவம் எதுவாக இருந்தாலும், உள்ளத்தின் வலியை உண்மையாகப் பதிவு செய்யும் ஒவ்வொருவனும் கவிஞனே! என்று சொல்கிக் கொள்ளலாமா ??

    ஒரு சிறந்த கவிதை எப்படியிருக்க வேண்டும்? 'சுவை புதிதாய், பொருள் புதிதாய், வளம் புதிதாய், சொல் புதிதாய்' சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்பான் மகாகவி பாரதி. அந்தப் பாரதியின் வழிவந்து, கவிதையை யாப்பிலக்கணச் சிறையிலிருந்து விடுவித்து, அது தன்னிச்சையாகச் சிறகடிக்க வேண்டும் என அதற்குச் "சுயேச்சைக் கவிதை' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவன் ஈழத்துப்  பிரமிள். 

    இன்று கனடியப் பனிப்புலத்தில் கவிதை செய்பவர்களை நாம் மரபு என்றோ, புதுமை என்றோ கோடுகளிட்டுப் பிரிக்க முடியாது. 

    'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள, குமுறுகின்ற கோடரியே கவிஞன்' என்று வித்துவான் க. வேந்தனார் முழங்கிய அந்த வீறுகொண்ட வரிகளே, நம் கவிஞர்களின் பேனா முனைகளாக மாறவேண்டும். 

    ஆனாலும் நம்முள்ளும் பல பிரிவினைகள் உண்டு.  அந்தக் குறூப்பிலுள்ளவன் மற்றைய குறூப் காரனை  கவிஞனென ஒத்துக் கொள்வதில்லை. ஓரு இயக்கம் தனக்கு எதிரான இயக்கத்திலுள்ளவனை ஏற்பதில்லை. ஓர் மதக் காரன் மற்றைய மதக்காரன் இலக்கியத்தை, எழுத்தை  வாசிப்பதில்லை..இப்படித்தான் நம் அனைத்தும் ஏட்டுக்குப் போட்டியாகி எல்லாமிழந்து ஏதிலியாக நிற்கின்றோம் 

     காய்தல் உவத்தலின்றி, எந்தப் பேதமுமின்றி கவிஞர்கள் பற்றிய ஆழமான ஆய்வுகள் இந்த மண்ணில் இன்னும் விரிவாக நிகழ வேண்டும். அப்படி மொழியின் சிறப்பால்,  எல்லைகளைத் தாண்டி, நவீனத் தமிழ்க் கவிதையை அடுத்தடுத்த தளங்களுக்குக் கடத்திச் சென்ற  முன்னோடிகள்தான்  இன்று நாம் சுவாசிக்கும் இலக்கியக் காற்றின் உயிர்நாடிகள்! 

    மரபும், நவீனமும் கைகோர்த்து நடக்கும் இந்த நீண்ட பயணத்தில், நம் முன்னோர்களின் படைப்புகள் காலத்தைக் கடந்தும் தமிழின் பெருமையை இங்கே பறைசாற்றிக் கொண்டே இருக்கின்றது. அவர்களின் எழுத்துக்களே நம் இனத்தின் உண்மையான ஆவணங்கள் என்பதை நாமுணர வேண்டும்.

    கனடியத் தமிழ் இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திப் பிடித்த பெருமை நம் பேராளுமைகள் பலருக்கு உண்டு. 

    கவித்துவமும், தத்துவமும் ஒருசேர நம்முள்ளிருக்கும் பேராசிரியர் சேரன் அவர்களுடைய கவிதைகள் ஆழ்ந்த பொருள்ள அற்புதமானவை. அவரின் பல கவித்தொகுப்புகள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ்க் கவிதைகளின் முகவரிக் காரன்  சேரனவர்கள். 
    கனடாவில் வதிகிற சேரன் தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல முழு உலகுக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு விலை மதிப்பற்ற சொத்து எனக் கூறுவதில், எனக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்கின்றார் அவரது கவிதைகளை விமர்சித்த விமர்சகர்  கவிஞர் நவம் அவர்கள். உண்மையில் நாமும் அந்தக் கூற்றை வழி மொழியலாம். 

    சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று யமன் கவிதையில் எழுதினார்  சேரன்.  

    இறந்த உடல்களுக்கும்,
    அகதி முகாம்களிலே
    குழந்தைகளின்
    இடையறாத அழுகுரல்களுக்கும்,
    எரிந்த வீடுகளுக்கும்
    இடையே

    எதைத்தான் நான் எழுத என்கின்றார் சேரன்.

    காடாற்று என்கிற அவரது கவிதைத் தொகுப்பு ஊழிக்கும்,  இனப்படுகொலைக்கும் பின்னால்  கவிதை எழுத முடியுமா என்கிற தமிழர்களின்  கையறு நிலையின் தவிப்பு.    

    நீரற்றது கடல், 
    நிலமற்றது தமிழ் 
    பேரற்றது உறவு 

    என தமிழரின  வாழ்வுப் பெருஞ் சீரழிவை  3 வரிகளில் தலைப்பில்லாக் கவிதை சொன்ன கவிஞானி..
   

    அடுத்து,  

    உலக இலக்கியங்களை தமிழுக்கும், தமிழை உலகுக்கும் மொழிபெயர்ப்பின் வழி கடத்தி, உலக    இலக்கியப் பரப்பில் தமிழை நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களிற்குரியது.  கனேடிய மண்ணில் அவரின் திடீர்  மறைவு கனேடியத் தமிழ் கவிதைக்கும், தமிழர்க்கும் பாரிய இழப்பு.

    அதுபோலவே . சமூகச் சிந்தனையோடு மொழியை ஆளும் கலாநிதி பார்வதி கந்தசாமி, பேராசிரியர் சுப்பிரமணிய ஐயா, பேராசான் பாலசுந்தரம், கெளசல்யா அம்மையார்,  என ஒரு பெரும் அறிவுப் பட்டாளமே தமிழ் வளர்க்க கனடாவில்  அணிவகுத்து நிற்கிறது. 

    அதேபோல், 
    பாட்டனார் பண்படுத்தி
    பழமரங்கள் நாட்டி வைத்த
    தோப்பை அழியவிட்டு
    தொலை தேசம் வந்தவன் நான்.
    என்னுடைய பேரனுக்காய்
    எவன் வைப்பான் பழத் தோட்டம்? 

    என்று பெருங்குரலெடுத்துப் பாடிய  

    ஈழத்து நவீன கவிதையின் முகமாகவும், புலம்பெயர் வாழ்வின் ரணங்களைப் பாடிய கவிஞனாகவும், ரொறன்ரோவின் வீதிகளில் கவிதையைத் தேடி அலைந்தவராக  வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் இன்றும் நம் நினைவுகளில் வாழ்கிறார். ஒரு பயணியாக கனடா வந்த 

    கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் சொல்கின்றார்

    சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கிறேன்
    கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது
    வசந்தத்தின் வருகையை எழுதியபடி
    ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது
    ஒரு தனித்த காட்டு வாத்து.
    சிறகுகளால் என்
    கண்ணீர் துடைத்தபடி என்கின்றார். 
    ஆனால் கனடாவில் எம் கண்ணீரை துடைக்காத வாத்துகள்தான் இங்கு ஏராளம் ..

    இனிக் கனடியத் தமிழ்க் கவிதைக்கு ஆழமான அடித்தளம் இட்டுக் கொண்டிருக்கின்ற  தமிழக் கவிப் பேராளுமைகள்  என்று பார்த்தால்   எவரைச் சொல்ல எவரை நான் விடுவது.....

    அ. கந்தசாமி: 'ழகரம்' சஞ்சிகை வழி புதுமை சேர்த்தவர், 'கானல் நீர்க்கனவுகள்' வழி தன் கனவுகளைப் பேசியவர்.

    கவிஞர் வி. கந்தவனம்: மரபிலும் நவீனத்திலும் வல்லவர், ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைத் தந்து கனடாவில் கவி வளர மரபு வகுப்புகளை முன்னின்று நடத்திய மாபெரும் பேராசான். காந்தளகம் வாயிலாக இலக்கண  யாப்பை எழுதினார்

    கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் நவீன கவிதை, மரபுக் கவிதை மற்றும் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். 90-க்கும் மேற்பட்ட நூல்களையும், 15,000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்துள்ளார். இவரது படைப்புகளில் 'எழிலி' (சாகித்திய மண்டலப்பரிசு பெற்றது), 

    தீவகம் வே. இராஜலிங்கம்: புதுக்கவிதை, மரபுக்கவிதை என இரு தளங்களிலும் பத்திற்கு மேற்பட்ட  புத்கங்களைத் தந்த ஆற்றலாளர்.

    என். கே. மகாலிங்கம்: மொழிபெயர்ப்பிலும், இதழியலிலும் தமிழைச் செதுக்கிய அரிய கவிஞர். பூரணி இதழால் புதுமை படைத்தவர்

    வ.ந. கிரிதரன்: 'பதிவுகள்' இணையம் வழி உலகத் தமிழரை ஒரு குடையின்கீழ் இணைத்தவர். 'நானென்றால் நான்யார் நானென்றால் இவ்வுடலோ ஆன்மாவோ பிரபஞ்சமா' என்றெல்லாம  கவிவழி கேள்வி கேட்ட   கட்டடக்கலைஞர்.  கனேடிய மூத்த கவிஞர். 'மண்ணின்  குரலி'ன் ஆசிரியர்

    க. நவம்: லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதைகளைத் தமிழாக்கி 'எனினும் நான் எழுகின்றேன்' என எம் தன்னம்பிக்கையை உரசிக் கொண்டிக்கின்ற மகத்தான சிந்தனையாளன்

    செழியன்: எண்பதுகளில் சமூக அவலங்களைக் கவிதைகளாகச் செதுக்கி, தன் இறுதி மூச்சு வரை கவிதைக்காகவே வாழ்ந்தவர்.

    திருமாவளவன்: நிலத்தின் ஏக்கத்தையும், புலம்பெயர் வாழ்வின் வலியையும் தன் கவிதைகளில் ஆழமாகப் பதிவு செய்த கவித் துருவ நட்சத்திரம்! 

    ஊடகத்துறையிலும் கவிதைத்துறையிலும் முத்திரை பதித்த உதயன் லோகேந்திரலிங்கம் அவர்கள் ஈழத்தில் மலையன்பனாக மூத்த கவிஞராகத் திகழ்ந்தவர்.

    மரபாசான்  மாவிலி மைந்தன்  சண்முகராசா அவர்கள் புதுக்கவிஞனாக ஆரம்பித்து மரபில் பல கவிதைப்புத்தகங்களை எழுதியவர்.

    இரா. சம்பந்தன்,அனலை ஆறு இராசேந்திரம், கா.நாகலிங்கம், போன்றவர்கள் மரபை நன்கறிந்து கவிதை செய்கிற அற்புத கவியாளுமைகள்  

    சக்கரவர்த்தி, சபா அருள்சுப்பிரமணியம், பொன்னையா விவேகானந்தன்   எம். சித்திவிநாயகம்,துரைசிங்கம்,கவிஞர் புஹாரி, சோக்கல்லோ’ சண்முகம், கவிச்சாரல் தந்த அகணி சுரேஷ், ஹம்சத்வனி யெனும் தமிழ்ச்செல்வன் மற்றும் ரவி கனகசபை  போன்ற ஆளுமைகளின் எழுத்துக்கள் காலத்தின்  சாட்சியங்களாக நம் மண்ணின் வாசனையைச் சுமந்து நிற்கின்றன.

    பெண்களின் அக உணர்வுகளையும், வாழ்வியலின் நுட்பங்களையும் பதிவு செய்யும்  ஒளவை, கலைவாணி(தமிழ்நதி), இராஜ்மீரா இராசையா,  கோதை அமுதன், வியன்களம் தந்த கொற்றவை பவானி தர்மகுலசிங்கம்  அவர்கள்  ஈழத்தின்  உரு திரைப்படப் பாடலாசிரியர், சிவதனி பிரபாகரன், தான்யா தில்லைநாதன், பிரதீபா தில்லைநாதன், சுல்பிகா, சுமதி ரூபன், நிவேதிகா, ஸ்ரீ ரஞ்சனி விஜேந்திரா, மோனிகா,  நிரூபா, கௌரி, கட்பகம் யசோதரா,   

    என இப்படி ஆளுமைப்  பெண் கவிஞர்களின் பெரும் பாய்ச்சல் இங்கே நிகழ்ந்தபடிதான்  இருக்கிறது.

    நவீன கவிதையின் திசைவழியை மாற்றிய பலருள்  ஜார்ஜ் இ. குருஷேவ், காலம் செல்வம், வீணைமைந்தன், குறமகள், பா.அ. ஜெயகரன், சகாப்தன், சிவா சின்னத்தம்பி, ரதன்,நிலா குகதாசன், கனி விமலநாதன்,குமணன், சங்கர் கணேஸ், க. இராசநாதன், த. அகிலன், அகில் சாம்பசிவம், ரூபன் ரட்ணம் ஆகியோரின் கவிதைகள் நவீனத்துவத்தின் புதிய தடங்கள்.

    காதல் புத்திரன், தமிழ்கோத்தன், ஆனந்த பிரசாத், டேனியல் ஜீவா, கற்சுறா, ‘’, நடராஜா முரளிதரன், ராவுத்தர், நந்தன்,மொகமட்ஹன்சீர், ,ந திவ்யராஜன்  மற்றும் பொறியாளர் ஜீவா ரவீந்திரநாத் (கிப்ளிங் ஜீவா ரவி) எனத் தொடரும் இந்தப் பட்டியல் தமிழின் எல்லையற்ற பெரும் பாய்ச்சல்.  

    கவிஞர் மணியம்பிள்ளை (கந்தசாமி)  எனப்படும் மோகன் 

    "வடக்க தறையிருந்து தெக்கநாடி என் பயணம் 
    இடக்குமுடக்கெல்லாம் கண்ணெறிஞ்சு போகிறனே
    இலந்தப் பழக்காடு இருந்து வந்த நண்பரெலாம் கிரந்தக் கதையோட கிண்டல் விடுகினமே" 

    என்று கனடாவில் கிராமிய சொல்லாட்சிச் சுவையால் "தமிழோடிசைபாடு" என்கிற கவிதைக் தொகுப்பைத் தந்தவர். 

    வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி தன் கவிப் புத்தகத்தில் அவற்றிற்கு  பண்பாட்டு வழக்குகளை கவிப் பின்னிணைப்பாக கொடுத்திருந்தார். இலங்கையில் சோலைக்கிளி அவ்வாறான முயற்சியை மேற்கொண்ட ஒருவர். 

    சிவபாலு மாஸ்ரர் அவரகள் எழுத்தாளர் இணையத் தலைவராக விருந்த காலத்தில்  உருவான மரபுப்பட்டறை வகுப்பை  கவிஞர் கந்தவனம் மற்றும் வித்துவான் அலெக்ஸாண்டர்  போன்றோர் கனடாவில் உருவாக்கி  பலருக்கு  மரபைக்கற்றுக் கொடுத்தார்கள்.  அதில் பயின்று அதன் தொடர்ச்சியாக இன்று அரிய கவிஞராகி   மாவிலி மைந்தன்  சண்முகராசா அவர்கள் மரபு  வகுப்புகளை நவீனமும் மரபுமாய்  நடாத்தி அரிய பணி செய்து வருகின்றார்.    அதுவும் இலவசமாக...

    அவரோடு இணைந்து ஆளுமைக் கவிஞர் "மரபில் பூத்த பூக்களைத் தந்த இராஜ்மீரா ராசையா இயங்கி வருகின்றார்.  

    இவர்களின் கவிஞர்கள் கூட்டம் பெரியது.  

    மருத்துவர் போல் ஜோசப்

     முனைவர் புஸ்பா கிறிஸ்ரி 

    கவிஞர் வாசுகி

    வாணிதாசன்

     மதிபாஸ்கரன்  -

    சசிகலா ஜீவன் 

    குமரகுரு

    மார்க்கம் சந்திரன்

    ஶ்ரீ பஞ்சநாதன்

    இரஜனி சதானந்தன்

     மஞ்சுளா ஜெயப்பிரகாசன் 

     தில்லைராணி பாலேஸ்வரன்- 

    தேவகி விக்னேஸ்வரன் 

     சுகந்தி மார்க்கண்டு 

    ஹேமா சுஜானந்த் 

    இராஜினி சுபாகரன்

    வெண்பாப் புலவர் மயில்வாகனனார் 

    தயா சின்னத்தம்பி 

    ரஞ்சி கதிர்காமநாதன்  என நூற்றுக்கணக்கான  ஆளுமை மிக்க ஆற்றலுள்ள கவிஞர்கள் உருவாகி வருகின்றார்கள். 

    தேடியதெல்லாம் விட்டு திசை பல சென்றிட்டாலும் 

    பாடிய தமிழை மட்டும்  பாதையில்  விட்டு விடாமல் காப்பாற்றக்  கடும் முயற்சி எடுக்கின்றது அவர்களது  கனேடியக் கவிக்கழகம்.  

    அது பல கவிதை நூல்களை வெளியிடுகின்றது. 

    மற்றும் புதுக்கவிதையாளராக

    நான் மீண்டும் நடக்கத் தொடங்கியிருந்தேன்' என வானத்தைத் தொடும் தன்னம்பிக்கையைத் தந்த இளையவர் மயூமனோ,  

    மற்றும் இளங்கோ எனும் நவீன சிந்தனையாளன்

    ஒரு  செர்ரிப் பூ உதிர்ந்து
    நிலத்தை வந்தடைவதற்குள்
    மலைபோல குவிகின்றன நான் 

    கட்டவேண்டிய கடன் பில்கள்..."

    என்று தன்னுடைய நாடற்றவனின் குறிப்புகளில் புலம் பெயர் துயரை எழுதி வைத்தவன். 

    இவர்களைப் போன்ற  பல ஆளுமைகள் சேர்ந்தது தான் கனடாவின் கவிப் பூந்தோட்டம்.  

    இத்தனை கவி ஆளுமைகளும் சேர்ந்துதான்  கனடியத் தமிழ்க் கவிதையை ஒரு உலகளாவிய அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.  இதில் பல நல்ல கவிஞர்களை நானும் தவற விட்டிருப்பேன்.   அப்படியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். .அவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்  

    இந்த நெடிய பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெயரும் ஒரு கவிதைப் புத்தகம்; அவர்கள் ஒவ்வொரு சொல்லும் நம் இனத்தின் அடையாளம். இவர்கள் அனைவரும் இணைந்துதான் கனடாவில் தமிழை ஒரு நவீன மொழியாக, வாழும் மொழியாக அரியணையில் ஏற்றியுள்ளனர்!

    கனடா எனும் குளிர்மண்டலக் காற்றில், கவிதையை அனலாய் மூட்டிய நெருப்பு மனிதர்கள் அவர்கள்! 

    திருமாவளவன், செழியன், நிலா குகதாசன் கவிஞர் கந்தவனம்,ஞானகணேசன், குமார் மூர்த்தி, , பண்டிதர் அலெக்சாண்டர் என இந்தக் கனடியப் பனி நிலம் எம் அரிய பல கவிஞர்களைத் தின்று தீர்த்து விட்டது..  எம் கண் முன்னாலேயே அவர்களைக் காலம் பறித்துக் கொண்டாலும் , அவர்கள் கவிதை வடித்த பேனாக்களின் ஈரம் இன்னமும் காயவில்லை. 

    அது எம்மோடு இருக்கிறது.  என்றும் இருக்கும்.

     கவிஞர் திருமாவளவன், 'சைத்திரியம்' என்கிற கவி வழியாக அதிகாரத்தின் முகத்தில் நையாண்டியாக இவ்வாறு ஓங்கி அறைகின்றான். 

    "வேட்டையாடல் சைத்திரியருக்கு அறம்... கோவிலில், மசூதியில், பாடசாலையில் உன் துவக்கை இயக்கு... குருதியில் குளி, நிணம் புசி!' 

    காஸாவில் விழுகின்ற இஸ்ரேல் குண்டிற்கும்,  நாடுகள் பிடிக்கும் டரம்பிற்கும்  கூட இது பொருந்தும். 

     திருமாவளவன் கக்கிய அந்தக் கடும் கவிப் பொறி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொடூரமாக அண்மையில் கொல்லப்பட்ட  அப்பாவிகளின்  இரத்தச்சாட்சியாய் இன்றும் ஒலிக்கிறது. 

    அவனது 'பனிவயல் உளவு' ஒரு மானிடச் சோகத்தின் மகாவலி! '

    அழு பெண்ணே அழு... 

    மாவீரமென்று சோகத்தைப் 

    புதைக்கத் தெரியாத 

    பேதை நீ அழு!' 

    என அவன் முரசறைந்தபோது, ஈழத்துப் பிள்ளைகளை பறி கொடுத்த  தாய்மாரின் கண்ணீரில் அரசியல் நடத்தும் அயோக்கியர்களின் முகத்திரை கிழிந்து தொங்கியது. 

    புகலிட மண்ணில் பொங்கல் என்பது நாளைய பொழுதுகளில் வெறும் பொருளற்ற மொழியற்ற சடங்காகிப் போய்விடுமோ என்கிற ஆதங்கத்தில், 

    தமிழ்க் கவிதையாளர்களே  எப்படிப் பொங்குவது என்று ஒரு புத்தகமெழுது புலத்து மொழியில் இப்போதே!' 

    எனச் சொல்லிவிட்டு மறைந்து போன அந்த மகாகவிஞன், இறந்தாலும் தன் எழுத்தால் இன்றும் நம்மோடு வாழ்கிறான். 

    நொருங்கிய எலும்பும் நோவுற்ற உடலுமாய் நிலவறை தோண்டி மாய்ந்த மக்களின் பெருந்துயரைச் சொன்ன கவிஞன் செழியன்.  

    அவனது கவிதை "கடலை விட்டு மீன் குஞ்சுகள்" என்பது புலம்பெயர்ந்த சுடலைகளில் செத்துப் போக காத்திருக்கின்ற  எமக்காக எழுதிய கவிதையது...

    வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி என்று ஆரம்பிக்கிற பாரதியாரின் தனிப்பாடல் ஒன்று எமது பாடசாலை வகுப்புகளில் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இருந்தது. இங்கிருக்கக் கூடிய பலரும் அதனை அறிந்திருப்பீர்கள்.

    முனிவர் ஒருவர்  இன்னொரு முனிவரின் சாபத்தால் பன்றியாக போக நேர்ந்ததால் அவர் தன் சீடனிடம ்பன்றியாய் போனால் மானம் போய்விடும  

    பன்றியாம் போது பார்த்து நில்லாதே!
    விரைவிலோர் வாள் எடுத்து என்னைக் கொன்று தொலைத்தலுன் கட ன் என்று கூறி முனிவர் பன்றியாகி விட்டார். 

    சீடனுக்கோ பெருங்கவலை குருவைக் கொல்வதா என்று  ஒரு  வருடம் வரை   அவன் பன்றியான குருவின் பக்கம் போகவில்லை. நீண்டநாளின் பின் 

    குருவைப் பார்ப்போமென்று சீடன் போனபோது 

    அந்த குருவான பன்றி தன் மனைவி மக்களோடு புல்லினுள் விளையாடிப் புணர்ந்து, மகிழ்ந்து  கொண்டிருந்தது.   அதைப் பார்த்த  சீடனுக்கு கடுங்கோபம்.

    மேதகு முனிவரே போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ? என்று முனிவரைக் கொல்வதற்கு வாளை உயர்த்தினான் சீடன்..

     துடித்துப் போய்  பன்றிக் குரு சொன்னது

     டேய் விசரா.. காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
    இனிய பல்லின்மம்  இதன் கணேயுளவாம்; பன்றி வாழக்கை வலுதிறமடா

    இந்த வாழ்க்கை எனக்கு இன்பமாகவே இருக்கிறது; உனக்கு இதைப் பிடிக்கவில்லை என்றால் அதே வாளால் உன்னை நீயே கொன்று மடி"

    என்று சீடனுக்கு சொல்லியபடியே குருப்பன்றி தன் மனைவியோடு ஓடி ஒளிந்ததாக பாரதியின் கவிதை சொல்கின்றது. 

    வாழ்க்கை எந்தச் சூழலில் அமைந்தாலும், அந்தச் சூழலுக்கு ஏற்ப மனம் பழகிவிடும் என்பதும், "வாழ்வின் மீதுள்ள பற்று" (attachment to life) எவ்வளவு இழிநிலையிலும் மனிதனை விடாது என்பதையும் பாரதியார் இதில் நகைச்சுவையுடனும் தத்துவத்துடனும் விளக்கியிருப்பார். 

    இதே போன்ற ஓர் கவிதையை  கனேடிய மண்ணில் மறைந்த செழியன் எழுதியிருப்பார் புலம்பெயர்ந்த எங்களுக்குச் சரியாகப் பொருந்துகிற கவிதை.,"கடலை விட்டு மீன் குஞ்சுகள்" என்பது அதனுடைய தலைப்பு 

    கடலில்   நீந்திக் கொண்டிருந்த
    மீன் குஞ்சுகள்
    சந்தோசத்தில் துள்ளி விழுந்து தரைக்கு
    வந்தன
    கடற்கரை மணலில் புரண்டு
    ஆசையை அள்ளிப் பூசின
    குழந்தைகளோடு பட்டம் விட்டு விளையாடி
    நாளை வருவதாகக் கூறி நடந்து
    சென்றன
    வெய்யிலில் நெடுஞ்சாலையில் நின்று வியர்த்து
    ஐஸ் குச்சியொன்றை வாங்கிச் சூப்பின
    தாம் பிறந்த
    கடல் நீரெல்லாம் உப்பென சொல்லித்
    துப்பின
    கோபுரக் கலசத்தின் விளிம்பு வரை ஏறி
    வியந்து, விசில் அடித்து
    மகிழ்ந்தன
    இலைகளின் மறைவில் அழகியை வீழ்த்தி
    இதழைக் கவ்விச் சப்பிய
    மனிதனையே பார்த்து வாய்பிளந்து
    முனகின
    மீனுக்கோ தன் பிறந்த 
    கடலுக்கு  திரும்ப மனமே இல்லை
    இருளில்
    பழுத்த இலைகளில் ஏறி
    கொட்டக் கொட்ட விழித்தே
    இருந்தன
    மீன் குஞ்சு
    இரவுவிடுதிகளில் நடனமாடித் திரிந்தது
    அழகிய இசைக் கலைஞனின்
    இசையில் மயங்கி தெருவில் திரிந்தது 
    இரவுகளில்
    நுரைக்கின்ற பியரில் மனதைக் கரைத்து
     நதிக்கரையிலே  நின்று புலம்பியது
    கடலை விட்டுப்போன மீன் குஞ்சுகள்
    மறுபடியும்
    கடலுக்கு மட்டும் திரும்பவே
    இல்லை;    

    என்று  இதை எழுதிய நண்பர் செழியனும்  இதே கவிதைக்கு சாட்சியாய் ஊர் திரும்பாமல் இந்த கனேடிய மண்ணிலேயே தன்னுயிரை விட்டார் 

    அவரின் அருகிருந்து கண்ணீர் சொரிந்தோம் நாம்.   நிலம் இழந்த மக்களின் குரலாய், நிமிர்ந்து நிற்கும் செழியன் கவிதை அது

    இந்த ஆளுமைகளின் எழுத்துக்களே இன்று கனடியத் தமிழ் இலக்கியம் நிமிர்ந்து நிற்பதற்கான வைரத் தூண்கள்! அவர்கள் காட்டிய பாதையில், இன்று புதிய கவிஞர்கள் புத்தம் புதிய வானத்தைத் தேடிப் பயணிக்கிறார்கள்!"

    கவிஞனின் மௌனம் என்பது சமூகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். அந்த மௌனத்தைக் கலைத்து, சமூகச் சிக்கல்களைக் கலைவடிவமாக்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே உன்னதப் படைப்பு! 

    தோழர்களே! நவீன கவிதை என்பது வெறும் தனிமனித ரசனையல்ல; அது காலத்தின் கட்டாயமான சமூக மனச்சாட்சி! அது தனிப்பட்ட உணர்வுகளின் வடிகாலாக மட்டும் தேங்கிவிடாமல், சமூக மாற்றத்திற்கான ஒரு நுட்பமான கருவியாக உருவெடுக்க வேண்டும். 

    அந்த வகையில் எம் தமிழ் நவீன கவிதைகள் அதிகாரத்திற்கு எதிரான அரசியல் செயல்பாடாக ஒலிப்பதும் , புரையோடிப் போன மூடநம்பிக்கைகளைச் சாடும் பண்பாட்டு விமர்சனமாகத் திகழ்வதும் . , பெண் விடுதலை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேசும் விடுதலைச் சிந்தனையாக வீறுகொள்வதும் . தமது அகவயமான அனுபவத்தால்  சமூகத்தின் பொது அனுபவத்தை  நிறையவே பேசுவதும் மகிழ்வைத் தருகின்றது 

      இடப்பெயர்வு சார்ந்த அரசியலையும், சமூகப் புரிதல்களையும் உள்ளடக்கிய ஒரு செறிவான இலக்கிய வேள்வி அது  ! சமூக மாற்றத்திற்கான எமது இந்த அறச்சீற்றமே நம் நவீன கவிதையின் உயிர்நாடி. என்பதை நாம் பெருமையோடு சொல்லலாம்

    என் புலம்பல் நீண்டு செல்கின்றது எண்ணுகின்றேன் முடித்துக் கொள்ளலாம். 

    இறுதியாக எம் தமிழ் நவீனக் கவிதையின்  சமூகப் பொறுப்புப் பற்றி காலத்திற்கு காலம்  நாம்  மீளாய்வு  செய்ய வேண்டும்

    கனடா இன்று புலம்பெயர் தமிழர்களின் அறிவுசார் மையமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல மில்லியன் டாலர் செலவில் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் (Tamil Chairs) உருவாக்கப்படுவது ஒரு வரலாற்றுச் சாதனைதான். குறிப்பாக ரொறன்ரோப் பல்கலைக் கழகத்தின் ஸ்காபரோ வளாகத்தில் மே 1, 2024 அன்று பேராசிரியர் சித்தார்த்தன் மௌனகுரு முதலாவது தமிழ் இருக்கை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மகிழ்ச்சி. ஆனால் அதன் பயன்பாட்டை பலரும் அறிய முடியாதுள்ளது. அவ்வாறானவர்களைத்தான் பொது வெளியில நாம் பேச வைக்க வேண்டும்.  

    இந்த இருக்கைகளும், சமூக மையங்களும் வெறும் 'பாபெல் கோபுரங்களாக' உயர்ந்து நிற்குமா அல்லது நம் எதிர்காலச் சந்ததியினருக்குத் தமிழைப் பயிற்றுவிக்குமா? அதற்கான பணிகளென்ன என்பதைப் பற்றி நாம் பேச வேண்டும். 

    எதுக்கப்பா கலை, கவிதை விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைப் படியுங்கள்  என்ற படி ontario அரசாங்கம் உட்பட  பள்ளிகளில் கலைக் கல்வியை புறக்கணிப்பதாகவும், தாராளவாத கலைகளை மதிப்பிழக்கச் செய்வதாகவும் பல விமர்சனங்கள் எழுந்துள்ள பொழுது இது..

    பல்கலைக்கழக இருக்கைகள் பெரும்பாலும் உயர்மட்ட ஆராய்ச்சி மற்றும் பட்டதாரி கல்வியிலேயே கவனம் செலுத்துகின்றன. இவை உலக அளவில் தமிழின் பெருமையை நிலைநாட்டினாலும், வீட்டில் தமிழ் பேசத் தடுமாறும் இரண்டாம் தலைமுறை இளைஞர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிப்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது.

    புலம்பெயர் சூழலில் இளையோர் தமிழைத் மறப்பதும், ஆங்கிலம் தழுவுவதும் மொழியின் தொடர்ச்சிக்கு பெரும் இடர்! தாயகத் தொடர்பற்ற விநியோகச் சிக்கலும், சமூக ஊடகங்களின் மேலோட்டமான வாசிப்புப் போக்கும் நவீனக் கவிதையின் ஆழத்தைச் சிதைக்கின்றன. 

    ஆரோக்கியமான விமர்சனப் பற்றாக்குறை, குழு மனப்பான்மை மற்றும் நிதிநெருக்கடிகள் தரமான படைப்புகளுக்குத் தடையாகின்றன. 

    இச்சவால்களை வெல்ல, படைப்புகளை உலகளாவ மொழிபெயர்ப்பதும், அதன் வழி இளையோரை ஈர்ப்பதுமே காலத்தின் கட்டாயம்!"

    சமூகப் பிணைப்போடும்  வெளிப்படைத தன்மையோடும் இவை  இயங்க வேண்டும். 

    கனடியத் தமிழ் இலக்கியத்தின் வருங்காலம் என்பது வெறும் இருக்கைகளில் மட்டும் இல்லை; அந்த இருக்கைகள் நம் இரண்டாம், மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளின் நாவுகளில் தமிழை, கவிதையை,எப்படி ஏற்றி வைக்கப  போகின்றன என்பதில்தான் இருக்கிறது. 

    மொழிகாக்க கவிதை ஒரு கருவி என்றால், தமிழ்க் கல்வி அதன் உயிர்நாடி என்பதை நாமுணர வேண்டும்.

    கனடாவில் நவீன தமிழ்க் கவிதை முன்னேற வேண்டுமாயின், அது தன் வேர்களைத் தமிழிலும், கிளைகளைப் பிற மொழிகளிலும் பரப்ப வேண்டும். உள்ளூர் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டு, உலகளாவிய கருப்பொருள்களைப் பேசுவதே அதன் உண்மையான வெற்றியாக அமையும்.

    "வானைத் தொடுகின்றன மாளிகைகள் - அங்கோ
    வாட்டும் பிரிவினை வேற்றுமைகள்!
    வீடுகள் இங்கே இருக்கிறது - ஆனால்
    உறவுகள் தனித்துத் தீவாய் கிடக்கிறதான"  இந்த அச்சச் சூழலை  எப்படி நாம் மாற்றப் போகின்றோம்.என்பதைச் சிந்திக்க வேண்டும் தோழர்களே..

    குறைந்த பட்சம் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக இலக்கியத்தோடு இணைப்பதும், இளைய தலைமுறையினரைத் தமிழ் இலக்கியத்தின் பக்கம் ஈர்க்கும் திட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகும் என்கிற செய்தியோடு இந்த வய்ப்பைத் தந்த ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்திற்கும், மாண்புமிகு சுப்பிரமணிய ஐயா அவர்களிற்கும்  உங்களுக்கும்  நன்றிகூறி அமர்கின்றேன். என்பேச்சு யாரையும் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.   வணக்கம் உறவுகளே! 

உசாத்துணைக் கருவூலங்கள்! 
கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் : பேராசிரியர் இ.பாலசுந்தரம் 

புலம்பெயர் இலக்கிய ஆய்வு ! - மைதிலி தயாநிதி , திறனாய்வாளர் 

புலம்பெயர்ந்தோர் இலக்கியமும் ஈழத்துப் புலம்பெயர்ந்தோர் தமிழிலக்கிய ஆய்வுகளும்: - முருகையா சதீஸ், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

கனடா எழுத்தாளர்கள் பற்றிய தேடல் !அகிலேஸ்வரன் சாம்பசிவம் , எழுத்தாளர்

 நூலகம்

'பதிவுகள்.காம்'  இணையத் தளம் !


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்