பாரம்பரிய நடனக் கலை மரபுகளில் ஒன்றான பரதநாட்டியம் உலகில் மரபுக் கலையைப் பிரதிபலிக்கும் அழகிய நடன வடிவமாகும். கைகளின் அபிநயங்களோடு கண்களில் பாவங்கள் மற்றும் முகபாவங்களின் தனிச்சிறப்பினைக் கொண்ட அழகிய கலை. இத்தகைய இந்த பரதநாட்டியக் கலையானது இசையோடும் தாளத்தோடும் இணைந்து ஆனந்த உணர்வினைத் தரும் அற்புதக் கலையாகும்.
இத்துணை சிறப்பு வாய்ந்த கலையை ‘சாஸ்வதம்’ நடன அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயந்தி யோரகராஜா மற்றும் ஸ்ரீமதி பவித்திரா சிவயோகமும் இணைவோடு அங்கத்தவர்களான ஸ்ரீமதி சஸ்கியா யோகராஜா கிஷான், ரூபேஷ் கேசியுடன் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்ட விதம் மிகவும் பாராட்டிற்குரியது.
லண்டனில் ‘சாஸ்வதம்’ என்ற நடனப் பள்ளியை 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து அண்மையில் தமது ஏட்டாவது ஆண்டை நிறைவேற்றும் வகையில் இக்கலையை மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தார்கள். லண்டன் பாரதிய வித்ய பவனில் இடம்பெற்ற இந்த நாட்டிய நிகழ்வில் எண்பதிற்கும் மேற்பட்ட பல்வகையான நாட்டியக் கலைஞர்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தமை அற்புதமான காட்சியாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.
ஸ்ரீமதி. அம்பிகா தாமோதரம், திருமதி. நித்தியானந்தன், ஸ்ரீமதி பாமினி சித்தரஞ்சன், ஸ்ரீமதி கலா அமரன், ஸ்ரீமதி பவானி பாக்கியராஜா, ஸ்ரீமதி விநோதினி இந்திரகுமார், ஸ்ரீமதி சஸ்கியா கிஷான், ஸ்ரீமதி பவித்திரா சிவயோகம், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து அலங்கரித்தனர். வரவேற்புரையை ஸ்ரீமதி பவித்ரா சிவயோகம் வழங்கிச் சிறப்பித்தார்.

ஸ்ரீமதிகளான சித்ரா முரளீதரன், சாந்தி தர்மேந்திரா, பாமினி லிங்கபாபு, சண்முகப்பிரியா குலேந்திரன், சாத்விகா சங்கர், பிறேமலதா நிரஞ்சன், சுஷிமிதா பனர்ஜி, பிறேம்லதா கலாமண்டலம், சுவாதி பட்டுவா, சுஜி அரவிந், டி.மீனாட்சி டோறா மற்றும் ஸ்ரீ.சின்னராசா, ஸ்ரீ. சந்தோஷ் மேனன், ஸ்ரீ.ரூபேஷ் கேசி போன்ற சிறந்த நாட்டிய ஆசிரியர்களின் மாணவர்கள் தமது உணர்வபூர்வமான நாட்டிய வெளிப்பாடுகளால் ரசிகர்களை கட்டிப்போட்டனர் என்றால் அது மிகையாகாது. இந்தியா, கங்கேரி, கனடா, சுவீடன், நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற பல நாடுகளிலிருந்து வருகை தந்து சிறப்பான நடனங்களை வழங்கியிருந்தமையைக் இங்கே குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன்.

இந்நிகழ்வின் போது ‘சாஸ்வத கலா போஷக’ வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் ஸ்ரீமதி. புஸ்கலா கோபால் (இங்கிலாந்து), கலாநிதி பத்மஜா சுரேஷ் வெங்கடேஷ் பெங்களுர் (டீயபெயடழசந) ஆகியோருக்கு வழங்கிக் கௌரவித்திருந்தனர்.
அத்துடன் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அவர்களுக்கு (இங்கிலாந்து) வழங்கப்பட்டது.
1960 களில் புலம்பெயர்ந்து லண்டன் வந்த கலாநிதி நித்தியானந்தன் அவர்கள் ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாக, ஒரு கல்வியாளராக, எழுத்தாளராக, ஒளிபரப்பாளர் மற்றும் பெருமை மிக்க தமிழ்த் தேசபக்தராக, மேற்கு லண்டன் தமிழ்ப் பாடசாலையை ஆரம்பித்து தலைமைப் பீடத்தை வகித்தவராக நாற்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தும் இன்றுவரை லண்டனில் செயலாற்றிக் கொண்டிருப்பவர்.
சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வின்போது ‘சலங்கை நர்த்தனாலய நுண்கலைக் கூடத்தை’ 40 வருடங்களாக நிறுவித் தொடர்ந்தும், ‘சாஸ்வதம்’ என்ற அமைப்பின் ஊடாக உலகளாவிய ரீதியில் முனைப்புடன் செயற்படும் நாட்டிய ஆச்சாரியர் கலாநிதி ஜெயந்தி யோகராஜா அவர்களை கலைஞர்கள் அனைவரும் மகிழ்வுடன் பாராட்டியிருந்தமை மனநெகிழ்வை ஏற்படுத்தி நின்றது.
இந்நிகழ்வின்போது பெறப்பட்ட நிதியானது சென்னையில் வறுமைக் கோட்டில் வாழும் நடனக் கலைஞர்களுக்கு உதவுவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்காகும் எனத் தெரிவித்திருந்தார்கள்.
நிகழ்சியினைத் மிகவும் அழகாக ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியிருந்தார் நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜா கிஷான்.
நன்றியுரையை இயல்பான சுவையோடு கலாநிதி ஜெயந்தி யோகராஜா வழங்கியிருந்தார். எல்லோரும் மிக மகிழ்வான தருணத்தை அனுபவித்த உணர்வோடு தங்கள் இருப்பிடங்களை நோக்கித் திரும்பியிருந்தமையை அவதானித்தபோது அழகானதொரு மாலையாகக் காட்சியளித்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









