கட்டுரையாளர் - முனைவர் கு.வளர்மதி, உதவிப்பேராசிரியர், இளங்கலைத் தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -


முன்னுரை

பல்வேறு உயிரினங்களுள் கல்வி பெறும் வாய்ப்பினை உலகில் மனிதர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். பிற உயிரினங்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பில்லை. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து கூடி வாழும் அமைப்பே சமுதாயம் எனப்படும். சமுதாயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகத் திகழும் கல்வியால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக மாற்றியமைக்க இயலும். சமுதாயத்தில் கல்வி பெற்றுள்ள இடத்தினைப் பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கல்வி – விளக்கம்

ஒரு சிறிய நிலப்பரப்பில் பொதுவாழ்க்கை முறையைப் பின்பற்றி, கூட்டாக வாழும் மக்கள்தொகுதி சமுதாயம் எனப்படும். ஒரு மனிதனுக்குச் சமுதாயத்தினையும் அச்சமுதாயத்தில் தன்னுடைய வாழ்க்கை நிலையினையும் அறிந்து கொள்ளும் அறிவினைத் தருவதாக கல்வி அமைகின்றது. கல்வி என்பதன் வேர்ச்சொல் ‘கல்’ ஆகும். ‘தோண்டுதல், துருவுதல்’ ஆகிய பொருட்களைக் ‘கல்லுதல்’ என்ற சொல் உணர்த்தும். உடலளவில் மனிதர்களாகத் தோன்றுபவர்களை உள்ளத்தளவிலும் மனிதர்களாக மாற்றுவதே கல்வியாகும்.

கல்விக்கு வரையறை அளிப்பது கடினம். இச்சொல்லின் பொருள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. கல்வி என்பது குழந்தை மற்றும் மனிதனின் ‘உடல், உள்ளம், ஆன்மா’ இம்மூன்றின் சிறப்பானவைகளை முழுவதுமாக வெளிக்கொணர்வதாகும் என்று காந்தியடிகள் கூறுகின்றார். தமிழ்ச் சொல்லகராதி, “கல்வி எனும் சொல்லுக்குக் கற்கை, கல்வியறிவு, வித்தை, பயிற்சிநூல் எனப் பொருள் புலப்படுத்துகிறது. தமிழ்ச் சொல்லகராதியில் இடம்பெற்றுள்ள பொருள்களே தமிழ்மொழி அகராதியிலும் காணப்படுகின்றன1 என்று கதிரைவேற்பிள்ளை குறிப்பிடுகின்றார். இங்கு, கல்வியானது ஏதேனும் ஒன்றைப் பற்றிய கற்றலே என்பது தெளிவாகின்றது.

சமுதாயமும் கல்வியும்

கல்வி கற்பது சமுதாயம் வெற்றி பெறுவதற்கான வழிகளில் ஒன்றாகும். இக்கல்வி அறஇலக்கியக் காலத்தில் மேல்குடியினரான அரசர், அந்தணர், வணிகருக்கு மட்டும் உரிமை உடையதாக இருந்தது. சூத்திரர், பஞ்சமர், மகளிருக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்தது. இவர்கள் கற்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. பிறப்பால் உயர்வு-தாழ்வு என்ற நிலையை ஒழித்து கல்வி என்ற அளவுகோல் கொண்டு சமுதாய மேன்மையையும் தாழ்ச்சியையும் கணக்கிட வேண்டும் என்ற கருத்தை வள்ளுவர் முதன்மைப்படுத்துகிறார். கல்வியறிவு பெற்ற சமுதாயம் உயர்வடையும். அதனால், ஏழைச்சிறுவனும் அடிப்படைக்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் இன்றைய காலகட்டத்தில் இலவசக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

பள்ளிகள் அனைத்தும் ஆடு, மாடுகளை அடைக்கும் கொட்டில்களாக இருந்த நிலைமை நீங்கி, இன்று ஆடு, மாடு அடைக்கும் கொட்டில்கள் எல்லாம் ஆரம்பப்பள்ளிகளாக மாறி இருக்கின்றன. தொழில் செய்யும் சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர், இன்று பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காகத் தங்கள் தொழிலையும் விட்டுவிட்டு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஏறி இறங்குகின்றனர். வீடு வீடாகச் சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு வரும்படி அழைத்த காலம் மாறிவிட்டது. இன்று எண்ணற்ற பள்ளிகள் இருந்தும், படிக்க இடம் கிடைக்காமல் அலைகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், சமுதாயத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமை புலப்படுகின்றது. இவ்வாறு, சமுதாயத்தில் கல்வியானது பின்னிப் பிணைந்துள்ளது.

கல்வி கற்கும் முறைகள்

மனிதனை மனிதனாகவும், சமுதாயத்திற்குப் பயன்படுபவனாகவும் மாற்றவல்ல இன்றியமையாத சாதனம் கல்வியே ஆகும். கல்வியின் பயன் முழுமையாகச் சமுதாயத்திற்குக் கிடைப்பதற்கு ஆசிரியர்களும், மாணாக்கரும் தங்களது கடமைகளை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். கற்றலும் - கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஆசிரியர்கள் கற்பிக்கும் நெறிமுறைகளையும், மாணாக்கர் கற்கும் நெறிமுறைகளையும், பண்புநலன்களையும் பழந்தமிழ் இலக்கிய - இலக்கண நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. அருச்சுனனுக்கு ஆசிரியராக இருந்த பெருமையைப் பெற்றவர் துரோணர். அருச்சுனனுக்குக் கற்பிப்பதைக் கண்ணால் கண்டே வில்வித்தையில் சிறந்து விளங்கியவன் ஏகலைவன். இதிலிருந்து அக்கால ஆசிரியர் துரோணரின் பயிற்றும் திறமையினையும், மாணாக்கர்களின் உற்றுநோக்கும் திறனையும் அறியமுடிகிறது. அக்காலத்தில் இத்தகைய அறிவுநிறைந்த குருவினைத் தேடிச்சென்று மாணாக்கர் கல்வி கற்றனர்.

கற்போர், ஆசிரியரிடம் பாடம் கற்கும் போது எத்தகைய நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி நன்னூலார்,

“நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல்
அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்”2

எனும் நூற்பாவின்வழி உணர்த்துகிறார். ஆசிரியரிடம் ஒருமுறை பாடம் கேட்டவன் அதேபாடத்தை அவரிடம் இருமுறை கேட்டு, கற்றுக்கொண்டால் அந்தப் பாடப்பொருள் பற்றி எவ்வித ஐயமும் கற்பவனுக்கு ஏற்படாது. ‘ஆசிரியரிடம் மூன்றுமுறை கேட்டுத் தெரிந்து கொண்டால், தன் ஆசிரியர் தனக்குக் கற்பித்த நெறியைப் பின்பற்றிக் கற்போருக்குக் கற்பிப்பார். கற்போர் தன்உடன் பயில்வோரிடம் ஒருவருக்கொருவர் தெளிவாகக் கூறிப் பார்த்துக் கொண்டால் பாடப்பொருளில் ஆழ்ந்த புலமையை எய்துவார்கள்’ என்று நன்னூலார் கூறுகின்றார். ஆசிரியரிடத்துச் செலுத்துகின்ற அன்பும், வழிபாடும், அவரிடத்தில் உள்ள அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்கான வழியாகும்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!”3

என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கற்போர் அனைவருக்கும் அறிவுரை கூறுகின்றார். ஆசிரியருக்குத் துன்பம் நேர்ந்த போது அது தீர்வதற்கு உதவியும், மிகுந்த பொருள் கொடுத்தும், அவரை வழிபட்டும் வெறுக்காது கல்வியினைக் கற்க வேண்டும்.

கல்விநிறை அரசன்

முறையான ஆட்சி செய்வதற்கு மன்னன் கல்வியறிவு பெற்றவனாக இருக்க வேண்டும். இன்னல் இன்றி நல்லாட்சி நடத்த அரசன் பெற்று இருக்க வேண்டிய கல்வியை அறநூல்கள்; விளக்குகின்றன. முறை தவறி ஆட்சி செய்யும் கொடுங்கோல் அரசின்கீழ் வாழ்வது துன்பம் தரும். இதனை இன்னாநாற்பது, ‘கொடுங்கோன் மறமன்னர் கீழ் வாழ்தலின்னா’ என்று கூறுகின்றது.

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு”4

என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. பலதுறை கல்வியறிவு பெற்ற அரசால் மட்டுமே செம்மையான ஆட்சி நடத்த முடியும்.

அமைச்சருக்குக் கல்வியறிவு

மன்னர்கள் கற்றறிந்த சான்றோரைத் தம்அருகில் அமரச்செய்து அவர்களது விருப்பத்தைக் கேட்டறிந்து ஆட்சி புரிந்தனர். மனஉறுதி, நற்குடிப்பண்பு, குடிகளைக் காத்தல், அறநூல், அரசியல்நூல் கற்றல், வேண்டுவன விலக்குவன அறிதல், விடாமுயற்சி என ஐந்தும் ஒருங்கே அமையப் பெற்றவனே அமைச்சன் ஆவான் என வள்ளுவர் அமைச்சருக்கு இலக்கணம் வகுத்திருப்பதை,

“வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு”5

என்ற இக்குறள் எடுத்துரைக்கின்றது. அரசன் திறத்துக்கு அவன் சபையே அறிகுறியாகும். அரசனது கல்வியின் பெருமையையும், அவன் சொல்லும் சொல்வன்மையினையும் அரசரைச் சுற்றியிருக்கும் அமைச்சர் களம் அறிவிக்கும். அதனால் அமைச்சரின் திறம் நன்கு விளங்குவதை,

“கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவை காட்டும்”6

என்று பழமொழிநானூறு குறிப்பிடுகின்றது. இரண்டாம் குலோத்துங்கச்சோழன் கல்வியறிவில் சிறந்தவரைத்தான் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதனால், சேக்கிழாரிடம் மூன்று கேள்விகள் கேட்டார். சேக்கிழாரின் விடையால் அவரது அறிவுத்திறனைப் பாராட்டி, இரண்டாம் குலத்துங்கச்சோழன் அவரை முதலமைச்சராக நியமனம் செய்தார். அறிவுடையவர்களால்தான் ஆட்சி சிறப்பு பெறும் என்பதை அரசர் உணர்ந்திருந்ததை இதனால் அறியமுடிகிறது. இன்றும் இக்கருத்து நடைமுறையில் இருக்கிறது.

கொடுங்கோல் அரசன் அறநூலும், அரசியல் நூலும் கல்லாதவரைத் தனக்கு இனமாகச் சேர்த்துக் கொள்வான். அக்கூட்டத்தினர் தவிர வேறு சுமை நிலத்திற்கு இல்லை என்பதை வள்ளுவர்,

“கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை”7

என்று எடுத்துரைக்கின்றார். நூல்களைக் கற்ற அமைச்சர்கள் பலரைத் தன்கண்ணாக இல்லாத அரசன் எடுக்கும் முடிவு தெளிவு பெறாது. மதிநுட்பம் வாய்ந்த அமைச்சர் குழுவைப் பெற்ற அரசு என்றும் வெற்றி பெறும். அமைச்சருக்குரிய இலக்கணத்தையும், அவர் ஆற்றவேண்டிய கடமைகளையும் வள்ளுவர் எக்காலத்திற்கும் பொருந்துவதாக விளக்கிக் கூறியிருக்கின்றார். வள்ளுவருக்குப் பின்வந்த அறநூல்களின் ஆசிரியர்களும் குறள் கருத்துக்களை அடியொற்றித் தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். ஒருசெயலைச் செய்வதற்குத் தேவையான கருவியும், அதற்கு ஏற்ற காலமும், வழிவகையும் அறிந்து சிறப்பான முறையில் சிந்திக்க வல்லவனே அமைச்சன் ஆவான் என முதல்குறளில் எடுத்துரைக்கின்றார். ‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு’ என்று ஒளவையார் கூறியிருப்பதைப் போல தகுந்த நேரம் வாய்க்கும் வரை காத்திருந்து செயலைச் செய்து முடிக்க வேண்டியது அமைச்சர் பொறுப்பாகின்றது. ஒரு செயலைச் செய்வதற்கு வழிவகைகள் பலவாக இருந்தாலும் அவற்றுள் சிறந்ததைத் தெரிந்து செயலாற்றவும், எதையும் ஐயப்பாட்டுடன் சொல்லாமல் முடிவாகச் சொல்லுதலில் வல்லவனே அமைச்சன் என்கின்றார் வள்ளுவர். அரசியல் அறங்களை அறிந்து கல்வி நிறைந்து, அடங்கிய சொல்லை உடையவனாய், எக்காலத்திற்கும் ஏற்றவாறு செயல் செய்யும் வழிவகைகளை அறிந்தவன் அரசனுக்கு ஆலோசனை கூறும் துணை ஆவான் என்பதை வள்ளுவர்,

“அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை”8

என்று தெளிவுபடுத்துகின்றார். அமைச்சர் மதிநுட்பம் வாய்ந்தவராகத் திகழ வேண்டும். அமைச்சராவதற்குரிய தகுதிகளை ஏலாதி,

“குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பு மாற்றலுடைமை – முடியோம்பி
நாற்றஞ்சுவை கேள்வி நல்லாரினஞ் சேர்தல்
தேற்றானேற் றேறும் அமைச்சு”9

என்று குறிப்பிடுகின்றது. குடிமக்களைப் பாதுகாத்தல், செயலில் வீரம், பலநூல் புலமையால் கலங்காத தெளிந்த அறிவு, சோம்பல் தன்னிடம் வராமல் தடுக்கும் ஆற்றல் போன்ற பண்புகளை உடையவன் அரசனால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவான் என்று கணிமேதாவியார் கூறுகின்றார். அரசன், தகுதியில்லாத செயலைச் செய்ய எண்ணும் போது அறிவுடைய அமைச்சர்கள் பொய்யுரைத்து வஞ்சித்தாயினும் அச்செயலைச் செய்யாமல் விலக்குவதை முன்றுறையரையனார் விளக்குகின்றார்.

தூதுவர், ஒற்றருக்கான அரசியலறிவு

அரசியல் நூலை அறிந்தவர் எல்லாரிலும் தூதுவராக இருப்பவர் அந்நூல் அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தூதுவருக்கு வள்ளுவர் வகுத்த இலக்கணமாகும். இயற்கையான அறிவு, கண்டார் மதிக்கும் தோற்றப்பொலிவு, ஆராய்ச்சியோடு கூடிய கல்வி ஆகிய இம்மூன்றும் நிறைந்தவன் வேற்றரசனிடம் தூதனாகச் செல்ல வேண்டும் என்பதை,

“அறிவுஉரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு”10

என்ற குறள் மூலம் எடுத்துரைக்கின்றார். வள்ளுவர் கூறிய தூதுவருக்கு இருக்க வேண்டிய குணமும், கல்வியும் எக்காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. அரசர், கல்வியறிவில் சிறந்தவரையே தூதுவராக அனுப்புகின்றார். இராமனின் தூதுவராக அனுமன் சென்றதை கம்பராமாயணம் தெரிவிக்கின்றது. வேற்றுநாட்டிற்குத் தூதுவராகச் செல்பவர்கள் அரசனுக்கு அடுத்தநிலையில் போற்றப்படுகின்றனர். இன்றும் நம் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குத் தூதுவர் செல்கின்றனர். அங்குள்ள பொருளாதார, அரசியல் நிலையைக் கண்டு வருகின்றனர். நம் நாட்டின் நிலையை அந்த அரசுக்குத் தெரிவிக்கின்றனர். சில இரகசியச் செய்திகளைத் தூதுவர் மூலம் இருநாடுகளும் அறிந்து கொள்கின்றன. அயல்நாட்டிலிருந்து நம் நாட்டிற்கும் தூதுவர் வருகின்றனர். அரசனுக்குரிய மரியாதையைப் பெற்று சிலநாட்கள் தங்கி இங்குள்ள நிலையை அறிந்து செல்கின்றனர். இருநாட்டு உறவும் வலுவடையத் தூதர்கள் காரணமாகின்றனர். இருநாடுகளுக்கும் பாலமாக விளங்குகின்றனர். தூதரை அடுத்து ஒற்றர்களும் இருக்கின்றனர். பகைவர் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் அறியாமல் செய்தலும், தான் செய்ய வந்த காரியத்தை மறவாமல் அரசருக்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும் ஒற்றருக்குரிய குணம் என்பதைத் திரிகடுகம்,

“எள்ளப்படு மரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் - இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்”11

என்று குறிப்பிடுகின்றது. அன்றும் இன்றும் ஒற்றர்கள் அரசருக்கு உதவியாகச் செயல்படுகின்றனர். இயற்கையறிவு, மதிநுட்பம் நிறைந்தவராக ஒற்றர்கள் திகழ்கின்றனர்.

குடிமக்களுக்குக் கல்வி

சமுதாயத்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இயலும். குடிமக்களுக்குப் பல்துறை கல்வியையும் குறிப்பிடுகின்றார், வள்ளுவர்,

“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று”12

நுட்பமானதாய் மாட்சியமைப்பட்டுப் பலநூல்களையும் நுணுகிக்கற்ற அறிவில்லாதவனுடைய எழுச்சிமிக்க அழகு, மண்ணின் சிறப்பாகப் புனையப்பட்ட பொம்மை போன்றது. எனவே, குடிமக்கள் ஒவ்வொருவரும் பல்துறைக் கல்வியறிவைப் பெற்று, அதனால் விளங்குகின்ற அழியாத அழகோடு வாழ வேண்டும் என்கிறார். வள்ளுவர் வாக்கிற்கேற்ப, இன்று எண்ணிலடங்கா புதிய புதிய பாடத்திட்டங்கள் மிகுந்துள்ளன. கணக்கு முதலிய அறிவியல் கல்வியிலும், கலை முதலிய இலக்கியக் கல்வியிலும் பலபிரிவுகள் இருக்கின்றன. ஈறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இக்கல்விப் பகுப்பை வள்ளுவர் விளக்கியிருக்கின்றார். வானவியல், அறுதொழிலோர் நூல், மருத்துவம், அளவையியல், மெய்யியல் போன்ற பல அறிவியல்களை ‘எண்’ என்ற சொல் சுட்டுகின்றது. அறிவியல் நீங்கிய மற்ற கல்விநூல்களை ‘எழுத்து’ என்ற சொல் குறிக்கின்றது. வள்ளுவர் காலத்திலிருந்த இக்கருத்து நிலை எக்காலத்திற்கும் ஏற்புடையதாக உள்ளது. சமுதாய உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ்வகைக் கல்வி இன்றியமையாததாக இருக்கின்றது. கணக்கும், அறிவியலும் ஆகிய இருவகைக் கல்வியும் எண்ணும், எழுத்துமாக மக்களுக்கு இருகண்களாக விளங்குவதை வள்ளுவர்,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”13

என்று கூறுகின்றார். இவ்வுலகில் சிறப்பாக வாழ விரும்பும் குடிமக்களாகிய சமுதாய உறுப்பினர்கள் அனைவரும் இவ்விருவகைக் கல்வியையும் கற்கவேண்டியது அவசியமாகும் என்கிறார். இக்கருத்தை அடியொற்றி ஒளவையார் ‘எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனவும், ‘எண்ணெழுத்து இகழேல்’ எனவும் குறிப்பிடுகின்றார்.

இல்லற நல்லறத்திற்குப் பெண்கல்வி

இல்லறம், துறவறம் என்னும் இருவேறு வாழ்வினை மானுடம் பேணுகின்றது. ஐம்புலஇன்பங்களைத் துய்த்தும், அதனை அடக்கியும் வாழும் நெறியை வள்ளுவர்,

‘அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்துஆற்றின்
போஒய்ப் பெறுவது எவன்’14

என்று வினவுகின்றார். மனிதவாழ்வின் சிறப்பாக மனையறத்தைப் போற்றுவதால், அதனை முதன்மைப்படுத்தி உள்ளார். ஒத்தஅன்பினராக, இல்வாழ்க்கையாகிய வண்டியைச் செலுத்தும் தன்மை உடையவராயினும் மனையாள் இயக்குசக்தியாக நின்று கணவனை இயங்கச் செய்கின்றாள். அதனால், இல்லறத்தில் பெரும்பொறுப்பு பெண்மைக்குரியதாகும். ஆண் மாவீரனாகவும், பெரும் செல்வந்தனாகவும் இருப்பினும், மாற்றான்முன் அவனது பெருமை, புகழ், அனைத்தும் சிறந்த மனைவியைப் பெறாவிடில் அழிந்துவிடும் என்பதை வள்ளுவர், ‘புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை’ என்கிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது இல்லறம். அவ்இல்லறத்திற்கு அச்சாணியாகப் பெண் இருக்கின்றாள். மனைக்கு விளக்கமாகத் திகழ்வதால் மனையாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். மனையாளின் திறத்தைப் பொறுத்தே மனைவிளக்கம் பெறும் என்பதை, ‘மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்’ என்கிறது, நான்மணிக்கடிகை. இல்லறம், நல்லறமாக மிளிர மனையாள் நற்பண்புகள் நிறைந்தவளாக இருக்க வேண்டும். பெண்கள் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய உயர்பண்புகளைத் தொல்காப்பியர், ‘அச்சமும் நாணமும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்குரிய என்ப’ என்று குறிப்பிடுகின்றார். இந்நற்பண்புகளைப் பெறுவதோடு கல்வியறிவும் வேண்டும் என்பதை நான்மணிக்கடிகையில்,

“----------- --------- வகையுடைப்
பெண்இனிது பேணி வழிபடின்”15

என்று விளம்பிநாகனார் உரைக்கின்றார்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்குவகையான நற்குணங்களும் அமையப் பெற்று, கணவனை மதித்து இல்லறம் நடத்துதல் இன்பம் தருவதாகும். இவ்இன்ப வாழ்வினை நடத்துவதற்கு, பெண்களுக்குக் கல்வியறிவு வேண்டும். பெண்ணால்தான் இன்ப வாழ்வெய்த முடியும். அழகும், அறிவும் உடைய கல்வியறிவு பெற்ற பெண் இல்வாழ்க்கைக்கு ஏற்ற துணையாவாள் என்பதை விளம்பிநாகனார், ‘-------- ----------- ------------- உருவொடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்’ என்று சுட்டுகின்றார். கல்வியறிவுடைய பெண்கள் திருந்திய கழனி. அங்கே நல்லறிவுடைய மக்கள் விளைவது திண்ணம் என்று பாரதிதாசன் குடும்பவிளக்கில் குறிப்பிடுகின்றார். ஒருவீட்டிற்கு நல்லமனையாள் இல்லாதிருப்பது அந்தவீட்டிற்குக் கேடாகும் என்பதை, ‘மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை’ என்று விளம்பிநாகனார் தெரிவிக்கின்றார். ஒருபெண் படித்தால் ஒரு சமுதாயமே மாற்றம் கொள்ளும் என்கிறார், பாரதிதாசன். ஓர்ஆண் கல்விபெறுவது குடும்ப வளர்ச்சிக்காகவும், பொருள் ஈட்டுவதற்காகவும் மட்டுமே அமையும். ஒருபெண் கல்விகற்றால், அந்தக் குடும்பம் நல்ல வளர்ச்சியடையும். ஒரு குடும்பம் வளர்ச்சியடைந்தால், இந்தச் சமுதாயம் வளர்ச்சி அடையும். சமுதாயம் வளர்ச்சியடைந்தால், தானாகவே இந்தநாடு வளர்ச்சியடைந்துவிடும். அதனால், ஆணிவேர் என்பது பெண்கல்வியில் உள்ளது.

இன்று, குடும்பத்தைக் காப்பதற்காக மட்டுமின்றி ஒருபெண் தன்னையும் காத்துக் கொள்வதற்கு கல்வி மிகவும் இன்றியமையாததாக உள்ளது. தமிழர்கள் இல்லறத்தை நல்லறமாகக் கொண்டிருந்தனர். இல்வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களைக் களைவதற்குப் பெண்ணுக்குக் கல்வியறிவு தேவை என்பதை வள்ளுவர்,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”16

என்கிறார். கல்வியறிவு இல்லாத பெண்களை இச்சமூகம் மதிப்பதில்லை. இல்லறத்தின் சிறந்த கடமைகளாக நன்மக்களைப் பெறுதலும், விருந்தோம்பலும் இருந்தது. பின்னர் வருவதை முன்னரே எண்ணிப்பார்த்து இல்லறம் நடத்தாத பெண்கள், கணவனுக்குத் துன்பத்தைத் தரக்கூடிய நோய் போன்று இருக்கின்றார்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்புசெலுத்தி வாழ்பவர் உலகிற்கு அணிகலன் போன்று விளங்குகின்றனர். கீழான சிற்றறிவு உடையவர்கள் பயிரிடையே வளரும் களை போன்றவர்களே என்கிறார், விளம்பிநாகனார்.

“பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் – பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் - கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத் தவர்”17

என்று நான்மணிக்கடிகையில் தெரிவிக்கின்றார். ஒரு அரசனுக்கு அறிவுரை கூறும் மந்திரியைப் போன்று, வீட்டில் கணவருக்கு ஆலோசனை கூறும் மதிநுட்பம் மனைவிக்கு வேண்டும். மந்திரிக்கு உள்ள அறிவு, வருமுன் காக்கும் தன்மை போன்றவை மனைவியிடம் இருக்க வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரிடமும் அன்பு செலுத்தி, அணிகலனாகத் திகழவேண்டும். கல்வியாலே கூர்மையான அறிவு உண்டாகும்.

குடும்பப் பொருளாதாரம் உயரப் பெண்கல்வி

வாழ்வில் ஒருவருக்குத் துணையாக வந்து அவரது நலத்தைப் பேணுகின்ற பெண்ணுக்கு இருக்கவேண்டிய தன்மைகளைப் பத்துகுறட்பாக்களில் வள்ளுவர் ‘வாழ்க்கைத் துணைநலம்’ எனும் அதிகாரத்தில் தெளிவுபடுத்துகின்றார். கணவனின் வருவாய் அறிந்து, அதற்குத்தகுந்தவாறு வாழ்க்கை நடத்துபவளே வாழ்க்கைத்துணையாவாள் எனும் கருத்தினை முதலாவது குறளில்,

“மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”18

என்று எடுத்துக் கூறுகின்றார். வள்ளுவரின் கருத்தை அடியொற்றி, சிறுபஞ்சமூலம் ‘வருவாய்க்குத் தக்க வழக்கு அறிந்து’ என்று சிறப்பிக்கின்றது. குடும்பத்தை நடத்தும் பொறுப்பு முழுவதும் பெண்களைச் சார்ந்தது. பாரதிதாசன் குடும்பத்தை நடத்துவதற்கு பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதை குடும்பவிளக்கில்,

“பெண்கட்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுவதற்கு
பெண்கட்கு கல்வி வேண்டும் மக்களைப் பேணுவதற்கு”19

என்கிறார். குடும்பத்தைக் காப்பதற்கும், மக்களை வளர்ப்பதற்கும் கல்வி வேண்டும் என்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டால் வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் கணக்கு அவளுக்குத் தெரியாது. திட்டமிட்டு செலவு செய்யும் போது செல்வம் பெருகும். ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்கிறது, ஆத்திச்சூடி. வருவாய்க்கு மீறி செலவு செய்தால் மானம் அழிந்து, அறிவு கெட்டு, எழுபிறப்பும் தீமையே தொடரும். இக்கருத்துகளை மனதில் கொண்டு, பெண்டிர் வாழ்ந்தால் செல்வமும், புகழும் பெருகும்.

இல்வாழ்வின் வெற்றியை உணர்த்தும் அடையாளமாகிய குழந்தைச்செல்வத்தைக் குறையில்லாமல் வளர்க்கப் பெண்கல்வி பேருதவி செய்கின்றது. பலநூல்களிலுள்ள நல்லனவற்றைக் கற்றுணர்தலும், பலருக்கும் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு இல்லறத்தைக் குறைவில்லாமல் நடத்தலும், ஊக்கத்துடன் முயற்சி செய்து, செயற்கரிய செயல்களைச் செய்தலும் ஆகிய இம்மூன்றினுள் கல்வியே தலைசிறந்து விளங்குகிறது. இதனை நல்லாதனார்,

“பல்லவையுள் நல்லவை கற்றலும் பார்த்துண்டாங்கு
இல்லறம் முட்டாது இயற்றலும் வல்லிதின்
தாளின் ஒருபொருள் ஆக்கலும் - இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை”20

என்று கூறுகின்றார். இம்மூன்றையும் செய்து முடிப்பதற்குக் கல்வியே துணைசெய்கிறது.

“சொந்தக்காரியம், பொதுக்காரியம் எல்லாவற்றையும்
நியாயமாகவும், திறமையாகவும், பெருந்தன்மையாகவும் செய்யக்
கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்”21

என மில்டன் உணர்த்துகின்றார். பெண்கள், கல்வியறிவின் பயனால் நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகின்றனர். சீரான வாழ்க்கை நடத்துகின்றனர். வேலைக்குச் சென்று பொருளாதாரச் சுமையைக் குறைக்கின்றனர். குடும்பத்தில் வறுமையெல்லாம் விலகிடும் நிலை பெண்கல்வியால் உருவாகின்றது.

தொகுப்புரை

1. கல்வி, மனிதவாழ்வின் முக்கியமான பகுதி. அது அறிவை மட்டுமின்றி மனிதப்பண்புகளையும் வளர்க்கின்றது.

2. ஒரு சிலருக்கு மட்டும் இருந்த கல்வி அறநூல் காலகட்டத்தில் அனைவருக்கும் கிடைத்தது. நாடாளும் மன்னன் தொடங்கி நாட்டின் கடைசி குடிமகன் வரைக்கும் அனைவரும் பெறவேண்டிய கல்வியின் முக்கியத்துவம் இவ்வியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. இளமைக்கல்வியின் பெருமையும், நன்மையும் கூறப்பட்டுள்ளது. குழந்தையை அறிவு நிறைந்த சான்றோனாக ஆக்குவது அன்று முதல் இன்று வரை பெற்றோரின் கடமையாக இருப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

4. கற்றலும், கற்பித்தலும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது. மாணாக்கர் கற்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

5. கல்வியறிவு பெற்றவரே அரசனாக முடியும். அமைச்சர் பதவி பெற முடியும் என்பது விளக்கப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் தூதர்கள், ஒற்றர்கள் போன்றோர் அரசருக்கு உதவியாகச் செயல்படுகின்றனர். அவர்கள் பெறவேண்டிய குணங்கள், படிப்பு, தகுதி போன்றவை கூறப்பட்டுள்ளன.

6. மனிதவாழ்வின் சிறப்பாக இருக்கும் மனையாள் (பெண்கள்) பெறவேண்டிய கல்வியும் அதன் பயன்களும் விவரிக்கப்பட்டுள்ளன. பின்னர் வருவதை முன்னரே அறிந்து, இல்லறம் நடத்த பெண்களுக்குக் கல்வியறிவு தேவை என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

7. இவ்வாறாக, ‘சமுதாயத்தில் கல்வி’ எனும் இக்கட்டுரையில், சமுதாயம் – கல்வி பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவமும், கல்வியால் சமுதாயம் அடையும் நன்மைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. இளமைக்காலத்தில் கல்வி பயில்வதன் அவசியமும், வறுமையுற்ற போது கல்வி கற்பதன் இன்றியமையாமையும் உணர்த்தப்பட்டுள்ளன. கல்வி கற்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. அரசர், அமைச்சர், தூதுவர், ஒற்றர், பெண்கள் என அனைவரும் பெற வேண்டிய கல்வியை இக்கட்டுரை விளக்குகின்றது.

அடிக்குறிப்புகள்

1. நா. கதிரைவேற்பிள்ளை, மொழியகராதி, ப.403

2. நன்னூல், எழுத்ததிகாரம், நூற்பா எண். 41

3. புறம் பா.எண். 183 : 1-2

4. குறள் எண். 383

5. மேலது, 632

6. பழமொழி நானூறு, பா.எண். 258 : 1-2

7. குறள் எண். 570

8. குறள் எண். 635

9. ஏலாதி, பா.எண். 17

10. குறள் எண். 684

11. திரிகடுகம், பா.எண். 85

12. குறள் எண். 407

13. மேலது, 392

14. மேலது, 46

15. நான்மணிக்கடிகை, பா.எண். 36 : 2-3

16. குறள் எண். 56

17. நான்மணிக்கடிகை, பா.எண். 31

18. குறள் எண். 51

19. பாரதிதாசன், குடும்ப விளக்கு, ப.24

20. திரிகடுகம், பா.எண். 31

21. அறநூல்களில் கல்வி கோட்பாடு, ப.8 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்