நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்

நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்

எழுத்தாளர் க.கலாமோகன் (ஜெயந்தீசன், கே.எல்.நேசமித்திரன் புனைபெயர்கள்)  புலம்பெயர்த் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமை.  புலம்பெயர் தமிழ்ப் படைப்புகளில் அங்கதச் சுவை மிகுந்து வெளிவரும் படைப்புகள் மிகவும் அரிது. இந்நிலையில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் அங்கதச் சுவை மிகுந்த படைப்புகளைத் தருபவர் கலாமோகன்.  கலாமோகன் பிரெஞ்சு மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர். இவரது கவிதைகள் பிரெஞ்சு மொழியில் வெளியாகிக் கவனத்தைப் பெற்றிருப்பவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது 'ஜெயந்தீஸன் கதைகள்' மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'நிஷ்டை' மிகவும் கவனம் பெற்ற சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று.  எக்ஸில் வெளியீடாக வெளிவந்துள்ளது.  அதன் பின்னணியில் இருந்தவர்கள் எழுத்தாளத் தம்பதியினர் கற்சுறா & ஜெபா.  தற்போது 'மற்றது' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது 'துவாரம்' சிறுகதைத்தொகுப்பு.  'மற்றது' பதிப்பகம் கற்சுறா & ஜெபா தம்பதியினருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயந்தீசன் கதைகளைப் பற்றிக்குறிப்பிடுகையில் அமரர் எஸ்.பொ அவர்கள்  'ஜெயந்தீசன் கதைகள் முற்றிலும் புதியதோர் ரஸானுபவத்திற்குள்  தமிழ்ச் சுவைஞரை ஆழ்ந்தும்.  புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் இவை ஒரு தேவையான பரிமாணத்தைப் பொருத்தும்; என்பார்.

நேற்று ஸ்கார்பரோவில் கற்சுறா & ஜெபா தம்பதியினரின் IO கேட்டரிங் உணவகத்தில்  'துவாரம்' தொகுப்புக்கான வெளியீடும், கலந்துரையாடலும் நடந்தது. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களைக்  கற்சுறா & ஜெபா தம்பதியினரின் விருந்தோம்பல் மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. 

நிகழ்வில் எழுத்தாளர்கள் கற்சுறா, யுவன் சந்திரசேகர்,  'காலம்' செல்வம், எஸ்.கே.விக்கினேஸ்வரன், அன்ரனி மனோகரன், அவ்வை விக்கினேஸ்வரன், தேவகாந்தன் , சமூக, அரசியற் செயற்பாட்டாளர் தயாபரன்,  எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான சுதா குமாரசாமி  , முகநூலில் நன்கறியப்பட்ட முகநூல் நண்பரும், கலை, இலக்கிய ஆர்வலருமான முருகேசு கனகலிங்கம் ஆகியோர்  கலந்துகொண்டு உரையாற்றினார்கள். நானும் என் கருத்துகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். 

நிகழ்வில் எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா, சமூக , அரசியற் செயற்பாட்டாளர்கள் நேசன், எல்லாளன், எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின்  தமிழக நண்பர் எனப் பலரைக் காண முடிந்தது.  நிகழ்வுக்  காட்சிகளைப் புகைப்படங்களாக்கியதுடன் , முழுமையாகக் காணொளியாகவும் பதிவு செய்துகொண்டிருந்தார் 'தடயத்தார்' யு டியூப் சானலை நடத்தும் ஊடகவியலாளர் கிருபா கந்தையா அவர்கள். டொரோண்டோப் பெருநகரில் நடக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்திவரும் கிருபா கந்தையாவின் பணி பாராட்டுதற்குரியது. 

நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக கற்சுறா & ஜெபா தம்பதியின்ரைப்பாராட்ட வேண்டும். கலாமோகனின் படைப்புகள் அனைத்தையும் திரட்டு வெளியிடுவது தம் முக்கிய பணி எனக் கற்சுறா தன் உரையில் குறிப்பிட்டதும் கவனத்துக்குரியது. 

நிகழ்வுக் காட்சிகளைக் கிருபா கந்தையா முகநூலில் பகிர்ந்திருந்தார். அவற்றை நானும் நன்றியுடன் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

நிகழ்வுக் காணொளி - தடயத்தார் யு டியூப் சானல்


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்