
“ராகவியை நினைச்சா … அவளின்ர சிரிப்புத்தான் முதலில கண்ணுக்குத் தெரியும்,” ராகவியின் பாடசாலைச் சினேகிதி மாயா அவளின் அந்தியேட்டி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றிக் கொண்டிருந்தாள்.
அஞ்சலிக்காக மேடையில் வைக்கப்பட்டிருந்த படத்திலும் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்த ராகவியின் முன் சில ரோஜாப் பூக்களை வைத்து ஒரு கணம் கண்மூடி அஞ்சலி செலுத்திவிட்டு நிமிர்ந்தான் கேசவன். பூத்தட்டில் மேலும் பூக்களை நிரப்புவதற்காக அங்கு வந்திருந்த ராகவியின் கணவர் விக்கியின் கண்களும் அவனின் கண்களும் ஒரு கணம் சந்தித்துப் பிரிந்தன. விக்கியின் கண்கள் கொவ்வைப் பழங்கள் போலிருந்தன. விக்கியைப் பார்த்ததும் தனக்கு வந்தது பரிதாபமா அல்லது கோபமா என்று கேசவனுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு மாதமாக விக்கியைத் தவிர்க்கவோ, எதிர்கொள்ளவோ முடியாமல் அவன் போரடுவது அவனுக்குதான் தெரியும். நாகரீகம் கருதி விக்கியின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு, மேடையிலிருந்து அவன் கீழே இறங்கினான். மீள மீள அவனின் முன் ராகவி வந்து நிற்பதுபோலவும், அதே கேள்விகளை அவள் திரும்பத் திரும்பக் கேட்பதுபோலவும் அவனுக்குப் பிரமையாக இருந்தது. அவளின் குழப்பங்களைச் சொன்னபோது எந்தவிதமான இடையீட்டையும் தான் செய்யவில்லையே என்ற குற்றவுணர்வு அவனை உறுத்திக் கொண்டிருந்தது.
கேசவனின் பால்ய சினேகிதன் ரவியின் மகள்தான் ராகவி. உணவகம் ஒன்றில் சமையலாளராகவும், இன்னொன்றில் பாத்திரங்கள் கழுபவராகவும் ரவி இரண்டு வேலைசெய்து கொண்டிருந்தான். அவனின் மனைவி உஷாவின் வேலை ரிம் ஹோட்டனில் மாலைநேர வேலையாக இருந்தது. கேசவனின் மனைவி வேலைக்காக வெளியில் போவதில்லை என்பதாலும், கேசவனின் வேலை இரவு வேலையாக இருந்ததாலும், ராகவியினதும் அவளின் தங்கை யாகவியினதும் சிறுபராயம் கேசவனின் வீட்டில்தான் அதிகமாகக் கழிந்திருந்தது. கேசவனுக்குப் பெண் பிள்ளைகள் இல்லாத குறையை அவர்கள் தீர்த்துக்கொண்டிருந்தனர்.
“சேர்ஜரி ஸ்பெசல் செய்யிறதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, அங்கிள்?” என ஒரு நாள் ராகவி அவனிடம் ஆலோசனை கேட்டபோது, “ராகவி, பிள்ளையளை வளக்கிறதுக்கு அது உனக்கு பிறகு இடைஞ்சலாயிருக்கும்,” என அவனின் மனைவி ஆனந்தி அவசரப்பட்டுப் பதில் சொன்னாள்.
“ஏன், ராகவியைக் கட்டப்போறவர் பிள்ளையளை வளக்கேலாதே? பொம்பிளையள் தான் வளக்கோணுமெண்டு எங்காவது எழுதியிருக்கோ? ராகவி, உனக்கது பிடிச்சிருந்தால் அதையே செய்யெண்டுதான் நான் சொல்லுவன்.” என்றான் கேசவன்.
“சேர்ஜரி ஸ்பெசல் செய்தால் பெருமையாயிருக்குமெண்டு அம்மா நினைக்கிறா. எனக்கென்ன பிடிக்குதுதோ அதைச் செய்யட்டுமாம் எண்டுதான் அப்பாவும் சொல்றார். ஆனா, எதைத் தெரிவுசெய்கிறதெண்டு எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு.”
முடிவில், இதயச் சத்திரசிகிச்சை நிபுணராக வந்திருந்த அவளுக்குத் திருமணம் பேசப்பட்டபோதும் அவனின் உதவியை நாடி அவள் வந்திருந்தாள். “உங்கட பிரெண்ட் திவ்வியராஜன் எடுத்திருந்த படத்திலை மச்சானை இலங்கையிலிருந்து கூப்பிட்டுக் கட்டினதாலை வாற பிரச்சினையளை நல்ல வடிவாய்க் காட்டியிருந்தவையல்லோ. அம்மாவுக்கு நான் என்ன சொன்னாலும் எடுபடுதில்லை, நீங்க ரண்டுபேரும் எனக்காண்டி ஒருக்கா அம்மாவோடை கதையுங்களன்.”
“ஓ, ‘உறவு’ பத்திச் சொல்றியா? அது மேடையிலை டான்ஸ் ஆடுறதாலை வந்த பிரச்சினை பிள்ளை! ஆனா, நீ ஒரு டொக்டர். மதிப்பான வேலையைச் செய்யிற ஒரு ஆள். உனக்கதெல்லாம் பொருந்தாது. எண்டாலும், மச்சானைக் கட்டுறது உனக்குப் பிடிக்கேல்லை எண்டால் வேண்டாமெண்டு சொல்லுறதுதானே. அல்லது இங்கை ஒரு ஆளைப் பார். அம்மா வேண்டாமெண்டே சொல்லப்போறா?
“ஓ, மாமா, உங்களுக்கு இன்னும்தான் அம்மாவைப் பத்தித் தெரியேல்லை. எனக்கு ஒழுங்காய்ச் சமைக்கவும் தெரியாது, அதாலை மச்சானைக் கட்டினால், என்னை விளங்கி, என்ர வேலைக்கு ஒத்தாசையா இருப்பாரெண்டு அம்மா நம்புறா.”
கேசவனின் மனதில் பழைய உரையாடல்கள் ஓடிக்கொண்டிருக்கையில், அடுத்த மேசையிலிருந்த உஷாவின் குரலும் அவன் காதுகளுக்குள் விழுந்து அவனை மேலும் அலைக்கழித்தது.
“தனக்கேன் அத்தனை நகையை, தான் ஒரிடத்துக்கும் போறேல்லை எண்டு, சாகிறதுக்கு முதல் சனிக்கிழமைதான் யாகவின்ர கலியாணத்துக்கு உதவட்டுமெண்டு அத்தனையும் யாகவி வேண்டாமெண்டு சொல்லச்சொல்ல அவளின்ர கையிலை திணித்தாள்..... பிறகு, எனக்கும், அம்மா, இந்தச் சீலைகள் எல்லாம் சும்மா அலுமாரிக்கை கிடக்கு, நீங்களாவது உடுங்கோ எண்டு பத்துச் சீலை மட்டிலை தந்தாள். அப்பவே தான் போகப்போறதா முடிவெடுத்திட்டாள் போலை.....!”
டொக்டர் கலாவைக் கட்டிக்கொண்டு கதறிக்கொண்டிருந்த உஷாவிடம், “எனக்குக்கூட, தனக்குப் பிரச்சினையள் இருக்கெண்டு அவள் சொல்லேல்லையே, சொல்லியிருந்தால் ஏதாவது ஆறுதலாவது சொல்லியிருக்கலாம். எல்லாத்தையும் தனக்குள்ளை அமுக்கி வைச்சுக்கொண்டு வெளியில சிரிச்சிருக்கிறாள்,” எனக் கலாவும் கலங்கினாள்.
அப்போது, அன்றைய அஞ்சலியை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த ராகவியின் உறவினர் ஒருவர், கேசவனை உரையாற்ற வரும்படி அழைத்தார். கதிரையை விட்டெழுந்த கேசவன் தன் கண்களை மாறிமாறித் துடைத்தபடி ஒலிவாங்கியை நோக்கிச் சென்றான்.
“எத்தனை உயிரைக் காத்த உன்னை … இன்னும் எத்தனையோ உயிர்களைக் காக்கக்கூடிய உன்னை, எங்களாலை காக்கேலாமல் போட்டுதே! அம்மா, ராகவி, என்னை மன்னிச்சிடம்மா!... (குரல் உடைய அவன் விம்மினான்) உன்ர வாழ்க்கையில நீ எதிர்நோக்கின சவால்களைப் பத்தியெல்லாம் என்னோட கதைச்சிருக்கிறாய்.
ஆனா, போனகிழமைகூட, நீ கரிசனையாய்ச் சொன்ன விஷயங்களை நான் சும்மா மேலோட்டமாகத்தான் எடுத்திருந்தனே தவிர, உன்ர நிலைமையை விளங்கி உனக்கு உதவிசெய்யத் தவறிட்டேனே... செத்துப்போனாப் பிரச்சினையில்லைப்போல இருக்கு எண்டு நீ சொல்லேக்கே ....”- கேசவனால் தொடர்ந்து பேச முடியவில்லை. விக்கிவிக்கி அவன் அழுதான்.
தன் இருக்கையிலிருந்து அவசரமாக எழுந்து சென்ற ஆனந்தி, கேசவனின் முதுகை வருடியபடி தானும் அழ ஆரம்பித்துவிட்டாள். பின்னர் அருகில் நின்ற ஒருவர் கேசவனை அணைத்துக் கூட்டிக்கொண்டுபோய் கதிரை ஒன்றில் இருத்தினார்.
அடுத்ததாக சேயோன் பேச ஆரம்பித்தான்.
“அன்பான உறவுகளே,
நான் கொஞ்ச நேரமெடுத்து உங்களோட கதைக்கப் போறன். எண்டாலும்,12:30க்குச் சாப்பிடக்கூடியதாய் எப்பிடியும் முடிச்சிடுவன்.
நானும் அம்மாவும் கனடாவுக்கு வரேக்கை எனக்கு ஏழு வயசு. அதுவரைக்கும் ஒரு பிள்ளையாய் செல்லமாயிருந்த எனக்கு, அம்மான்ர நேரத்தை அப்பா எடுக்கிறார் எண்டதையே சகிக்கேலாமல் இருந்துது. அதுக்குள்ளை இன்னொரு சகோதரமும் வரப்போகுதாம் எண்டதும் சரியான எரிச்சலாயும் கவலையாயும் இருந்துது. எனக்கு தம்பியோ தங்கைச்சியோ ஒண்டும் வேண்டாமெண்டு அம்மாவோடை நிறையச் சண்டை பிடிச்சிருக்கிறன். பிறகு ராகவியைப் பாக்கவெண்டு ஆஸ்பத்திரிக்கு அப்பா கூட்டிக்கொண்டுபோனபோது, அவளின்ர முகத்தைக்கூடப் பாக்கமாட்டனெண்டு அடம்பிடிச்சிருக்கிறன். ஆனா, ஒரு சில கிழமைக்குள்ளை ராகவி என்னை மாத்திப் போட்டாள்.
அவள் வளரவளர... ராகவி எண்ட பெயரைப் போலவே அழகான என்ர அன்பான தங்கைச்சியைப் பத்தி நான் நிறையப் பெருமைப்பட்டிருக்கிறன். அவளின்ர முகத்திலை சிரிப்பு நிரந்தமாயிருக்கும். ஆருடனும் சண்டைக்குப் போமாட்டாள். இதுதான் வேணுமெண்டு எதுக்கும் அடம்பிடிக்கமாட்டாள். எதையும் விட்டுக்கொடுத்திடுவாள்... இப்ப வாழ்க்கையையும் விட்டுக்கொடுத்திட்டாள்... இல்லை, இல்லை, நான் அப்பிடிச் சொல்லேலாது. அவளின்ர வலியை அவளாலை தாங்கேலாமல் போட்டுது... (விம்முகிறான்)
நீங்கள் கேட்டியள்தானே. எவ்வளவு அர்ப்பணிப்போடை தன்ர வேலையைச் செய்திருக்கிறாள், நோயாளர்களை எப்படி அன்பாகக் கவனிச்சிருக்கிறாள் எண்டு சென்ரேனியல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவளைப் பற்றிப் பேசினதெல்லாம் வெறும் புகழ்ச்சியில்லை. எதையும் முழுமனசோட சிறப்பாகச் செய்யிறதுதான் அவளின்ர இயல்பு.
ஆரோக்கியப் பராமரிப்பிலை வேலைசெய்கிறவை தங்கட நோயாளர்களைக் கவனிச்சுக் கொள்ளுற அளவுக்குத் தங்களைக் கவனிக்கிறதில்லையெண்டு டொக்டர் கலா சொன்னா. குடும்பத்தாக்கள் அவையைக் கவனிச்சுக் கொள்ளோணும். நாங்க ராகவியைக் கவனிச்சிருக்கோணும். பெரிய தவறு செய்திட்டோம்.
வேறை எந்தக் குடும்பத்திலும் இப்படியொரு இழப்பு இனி நடக்கக்கூடாது. அதுதான் ராகவியின்ர நினைவை நாங்க பேணுற வழியா இருக்கும், அதுக்காகத்தான் அம்மாட்டையும், அப்பாட்டையும், விக்கியிட்டையும் அனுமதி வாங்கிக்கொண்டு இதெல்லாம் சொல்லுறன்.
அவளுக்கென்ன அவளொரு டொக்டர், வாழ்க்கையில பிரச்சினையே இருக்காதெண்டு முந்தி எல்லாரும் நினைச்சிருப்பினம். இப்ப என்னத்துக்காண்டி இப்பிடி உயிரை மாய்ச்சாள்? என்ன பிரச்சினையெண்டாலும் மேவுற பலம் இருந்திருக்கும்தானே எண்டு சொல்லுகினம்.
டிப்பிறசன் எண்டது ஆரை, எப்ப என்னத்தைச் செய்யச்சொல்லுமெண்டு ஆருக்குத் தெரியும்?... (அவனின் குரல் உடைகிறது)
பாத்த ரீச்சர் வேலையளை விட்டிட்டு இங்கை வந்து கஷ்டப்படுறமெண்டு அம்மாவும் அப்பாவும் நெடுகச் சொல்லிக் கொண்டிருந்ததாலையோ என்னவோ, ராகவி படிப்பே கதியா இருந்தாள். பிறகு விக்கி விருப்பத்தோடைதான் கலியாணம்செய்தவன். ஆனா, ராகவிக்கு இருந்த வேலைப்பளுவுக்கும், மன அழுத்தத்துக்கும், டிப்பிரசனுக்கும் அவனால ஈடுகொடுக்க முடியேல்லை. அது அவன்ர பிழை இல்லை.
கிடைக்கிறதைச் சாப்பிடுற ராகவிக்கும், புட்டு, சோறு, தோசை எண்டு ஆக்கள் செய்துகொடுக்கச் சாப்பிட்டுப் பழகின விக்கிக்கும் ஒத்துப்போக முடியாதது வாஸ்தவம்தான். ஆனா, அதைப் புரிஞ்சு ஆவன செய்யிற நிலையில நாங்க இருக்கேல்லை. கலியாணம் முடிஞ்சு வீடியோ வாறதுக்கு முதலே விவாகரத்தெண்டு ஆக்கள் சொல்றமாரி நீயும் செய்யப்போறியோ? பிறகு தங்கைச்சிக்கு என்னெண்டு கட்டிக்கொடுக்கிறது எண்டெல்லாம் அம்மா அவளோடை பிரச்சினைப்பட்டிருக்கிறா... பிள்ளையொண்டு பிறந்தா எல்லாம் சரியாயிடும் எண்டும் ஆலோசனை சொல்லியிருக்கிறா.
ஆனா, இத்தனை பிரச்சினையளோடை பிள்ளைப் பெறுறதிலை விக்கிக்கு நாட்டமிருக்கேல்லை. அவளுக்கு டிப்பிரசன் எண்டது அவனைப் பயப்படுத்தியிருக்கு. வயசு போய்க்கொண்டிருக்கு எண்டது ராகவியின்ர கவலையாயிருந்திருக்குது. எண்டாலும் எல்லாத்துக்கும் சிரிச்சுக் கொண்டிருந்திருக்கிறாள்.
அவளின்ர கலியாணம் முடிஞ்சு வன்கூவருக்குப் போன நான், கடைசியா அவளை வழியனுப்புறதுக்குத்தான் ரொறன்ரோவுக்கு வந்திருந்தன்... வேலையில எனக்குப் பிரச்சினையள் இருந்ததாலை, எனக்கேன் சுமை ஏத்துவான் எண்டாக்கும் எந்தப் பிரச்சினையையும் அவள் எனக்குச் சொல்லேல்லை. போன மாசம்தான் யாகவிக்கூடாக எனக்குக் கொஞ்சம் தெரியவந்திருந்துது. போனில கதைக்கிறதைவிட நேரில வந்து கதைக்கிறது நல்லதெண்டு நினைச்சன்...
கிறிஸ்மஸ் லீவுக்கை ஏதோ ஒரு வழி கண்டுபிடிச்சு, புதுவருஷச் சங்கல்பமா ஏதாவது செய்யலாமெண்டு காத்திருந்தன். ஆனா, ஆனா ..., டிசம்பர் 19ம் திகதி பின்னேரம் ஆறு மணியளவில ராகவி என்னைக் கூப்பிட்டிருக்கிறாள். சில வேலையளை முடிக்க வேண்டியிருந்ததால வழமையான நேரத்துக்கு வீட்டுக்குப் போக என்னாலை முடியேல்லை. 6:30க்குத்தான் அவள் கூப்பிட்டிருப்பதைப் பாத்தன். அந்த நேரம் ரொறன்ரோவில இரவு 9:30ஆக இருக்குமெண்டதாலை, விடியக் கதைக்கலாமெண்டு இருந்திட்டேன்.
இப்ப அந்தக் கணம் மீளமீள என்ர நினைவில வந்து என்னை நிறையத் தொந்தரவு செய்யுது. அண்டைக்கு நான் அவளுடன் கதைச்சிருந்தா ------- கதைச்சிருந்தா... இந்தக் கேள்விக்குப் பதில் எனக்கு ஒருக்காலும் கிடைக்கப் போறதில்லை...(சில கணங்கள் மெளனமாகிக் கண்களைத் துடைத்துக்கொள்கிறான்)
ராகவின்ர முடிவுக்கு நாங்கதான் முழுக் காரணமெண்டோ, உயிரை மாய்க்கிறவையின்ர குடும்பத்தாக்கள் எல்லாரும் கரிசனையில்லாத ஆக்கள் எண்டோ, அந்த உயிர்களைக் காக்காத பாவிகள் எண்டோ நான் சொல்ல வரேல்லை. இன்னும் கொஞ்சம் கவனமாயிருக்க முயற்சிப்பம் எண்டுதான் சொல்ல வாறன்.
எங்கட வீட்டுக் கதையைத் தயவுசெய்து ஒரு கொசிப்பாப் பரப்பாம இதிலையிருந்து நீங்களும் என்னத்தைக் கற்றுக்கொள்ளலாமெண்டு யோசியுங்கோ. நினைவு மலரிலை டிப்பிரசனைப் பற்றித் தமிழிலை போட்டிருக்கிற விஷயங்களைத் தயவுசெய்து வாசியுங்கோ.”
சேயோன் பேச்சை நிறுத்திவிட்டான். சபை மிக அமைதியாக இருந்தது. சாப்பாட்டுக்குக்கூட ஒருவரும் எழும்பவில்லை.
கேசவனின் அருகிலிருந்த ஒருவர், “என்ர மகனும் இப்பிடித்தான்... 18 வயசில போட்டான். அவனுக்கு என்ன குறைவைச்சனாங்க எண்டுதான் நாங்க தலையைப் பிய்ச்சுக்கொண்டிருந்தம். இப்ப எனக்குக் கனக்க விளங்குது” எனக் கேசவனுக்குச் சொல்லிக் கலங்கினார்.
மண்டபம் நிறைந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்த இன்னொருவர், பெருமூச்சு விட்டுக்கொண்டார். இன்னொருவரோ “ம்ம், அந்தப் பிள்ளையோடை எத்தினை பேர் நெருக்கமாய் இருந்திருக்கினம், ஆனா, ஒருத்தராலகூட அவளைக் காப்பாத்தேலாமால் போட்டுதே,” எனத் தனக்குள் முணுமுணுத்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









