‘டயஸ்போர’ (Diaspora) என்பது ஒரு பயங்கரவாத/ தீவிரவாத அமைப்பு என்ற மாயை பெரும்பான்மை மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்து அரசியல் நிலவரங்களும் இனவாத ஊடகங்களும் இந்த பிம்பத்தை உருவாக்கியுள்ளன. அண்மையில் சியத டிவி (Siyatha TV) இன் ‘டெலிவகிய’ (Telewakiya) நிகழ்ச்சியில் ஊடகவிலாளர் லால் மாவலகே (Lal Mawalage) இந்த மாயத்தை அல்லது பிம்பத்தை சுட்டிக் காட்டி, ‘டயஸ்போர’ என்பது புலம்பெயர் மக்களை குறிக்கின்ற ஒரு சொற்றொடர் என்றும் குறிப்பாக, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் மக்களையும் சுட்டுகின்றது - போன்ற கருத்துக்களை நேர்மையாகவும் வரலாற்று ரீதியான கருத்தியல்களோடும் உலகலாவிய விவரணங்க ளோடும் மிகத்தெளிவாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூதர்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது, இதுவே உலகத்திற்கு சாபக்கேடாகிவிட்டது. உலகில் பல சமூகங்கள் புலம் பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகில் அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். அரசியல் அடாவடித்தனம் காரணமாக சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு உருவானது. குடிபெயர் தலைக்குறிக்க மைக்ரேஷன் (Migation) டிஸ்ப்ளேஸ்மெண்ட் (Displacement) என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேசன் என்பது ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்த லாகக் காணக்கூடாது என்பது பன்னாட்டு வரையறை ஆகும்.

தமிழிலக்கியம் இன்று ’புலம்பெயர் இலக்கியம்’ எனும் ஒரு புத்திலக்கிய வகைமையைக் கண்டுள்ளது. “ ஈழத்தமிழின் புதியதான புலப்பெயர்வுகளின் விளைவாக முகிழ்ந்து வரும் இலக்கிய வகையைப் புலம்பெயர்ந்தோர் இலக்கியம்”  என்கிறார், எஸ்.பொன்னுத்துரை.  இவரே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதப்பிரயோகத்தினை முதலில் முன்வைத்ததாக சொல்லப்படுகின்றது. ‘எண்பதுகளிலே நமது நாட்டிலிருந்து அலைந்து உலைந்து திரிந்த மக்களின் புகலிடப் படைப்பிலக்கியங்களும் எழுத்துக்களும் உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலம்பெயர் இலக்கியம் என்றொரு தனிப் பகுதியினை உண்டாக்கின’ என்கிறார் பேராசிரியர் அ.சண்முகதாஸ். ‘அலைவும் உலைவும்’ (‘புகலிட படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்’: 2009) என்ற ஆய்வு நூலில் க.குணேஸ்வரன் பின்வருமாறு எழுதியுள்ளார், "இற்றைக்கு கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றினுள் தனித்துவமானதொரு இலக்கிய வகையாகத் திகழ்ந்து வருகின்றது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் திகழ்கின்ற இவ்விலக்கியத்துள் இதுவரை தமிழ் இலக்கிய உலகு எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் உள்ளடங்கியுள்ளன. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை அது உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது."

ஆங்கிலத்தில் ‘Diaspora literature’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான சொல்லாக தமிழில் ‘புலம்பெயந்தோர் இலக்கியம்’ எனும் சொல் கையாளப்படுகிறது. இது புலம்பெயர்ந்தோர்  இலக்கியம், புகலிட இலக்கியம், அலைவு இலக்கியம், புலச்சிதறல் இலக்கியம் எனவும் அழைக்கப்படுகின்றது. 'Diaspora Literature’ என்ற சொல்லைக் குறிக்க "expatriate literature" என்ற சொற்றொடரும் பயன்பாட்டில் உள்ளது. இங்கு ‘expatriate 6T6drugsbgs "to send out of one's country" GT60T GUTC56ft GasTests.TGoTib. மேலும் "expatiate என்பதற்கு ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி a person living outside her or his own country 6T6076 b GUITOb6ft 35(566 pg5. (oxford advanced learner's dictionary, fifth edition 1996, p.403) இவ்வகையில் "exile literature, Afro American literature, British Asian literature, French African literature 66. அழைக்கப்படும் இலக்கியங்கள் யாவற்றினதும் பொதுவான அம்சம் எல்லாம் ஏதோ ஒருவகையில் தாய் மண்ணை விட்டுப் பெயர்ந்து வந்தவர்களால் படைக்கப்படுவதே ஆகும்.” (யமுனா ராஜேந்திரன், புலம்பெயர் இலக்கியம் கோட்பாடு பற்றிய பிரச்சினை, சுவடுகள், நோர்வே, 1995, இதழ் 68) என்று கூறினாலும் மிக வலுவான காரணிகளாக இருப்பவை அரசியற் பிரச்சனைகளே ஆகும். புலம்பெயர்ந்தோர் என்ற சொல்லைவிட ‘புகலிட இலக்கியம்’ (Exile Literature) என்ற தொடர் பொருத்தமானது என்று சிலர் விவாதிக்கின்றனர். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெருக்கடியால் வேறொரு நாட்டிற்குச் சென்று புகலிடமாக தஞ்சம் அடையக் கூடியவர்களால் எழுதப்படக் கூடிய இலக்கியம் என்கின்றனர் (பார்க்க, ‘அலைவும் உலைவும்’; 2009: 02-15).

‘இன்று உலகஅளவில் புலம்பெயர்/ புகலிட இலக்கியத்தின் பாதிப்பும் வீச்சும் மிகுதி” எனக்குறிப்பிடும் பேராசிரியர் க. பூரணசந்திரன் புகலிட எழுத்தாளர்கள் பற்றி பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார். ‘ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து பல எழுத்தாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் ரஷ்ய உருவவியல் குழுவைச் சேர்ந்த ரோமன் யாகப்சன் போன்ற பலரிக்கின்றனர். ரஷ்ய உருவவியல் குழுவினர், செக்கோஸ்லவகியாவில் ப்ராஹா நகரில் முக்கியமான மொழியியல் வட்டத்தைப் பின்னர் உருவாக்கினார்கள். நவ பிராய்டியச் சிந்தனைக் குழுவினரும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த முக்கியமானதோர் எழுத்தாளர் சோல்சினிட்ஸின். இவருடைய ‘கேன்சர் வார்டு’ என்ற நாவல் புகழ்பெற்றது. ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். ஸ்டாலின் காலத்தில் புலம்பெயர்ந்தவர். அமெரிக்காவில் இறந்தார். இங்கிலாந்தில் வசிக்கும் சல்மான் ருஷ்தியின் நாவல்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்திய வம்சாவளியினரில் இன்னொருவர் வித்யாதர் சூரஜ் பிரசாத் நைபால். டிரிடினாடில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்பவர். அவருடைய ‘பெண்ட் இன் தி ரிவர்’ ஆப்பிரிக்கச் சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளை விளக்குகின்ற நாவலாகும். சுஜாதா பட், குஜராத்தில் பிறந்து பிரிட்டனில் வாழ்பவர். இவர் மங்கீ ஷேடோஸ், ஸ்டிங்கிங் ரோசஸ் போன்ற நூல்களை எழுதியுள்ளார். தஸ்லிமா நஸ்ரின் பற்றி அறியாதவர் குறைவு. வங்காளதேசத்தில் பிறந்து அகதியாகச் சுற்றிவருபவர். இவரது முக்கிய நாவல் லஜ்ஜா. உலகில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் இல்மஸ் குனே, மிலன் குண்டேரா, வோலே சோயிங்கா, தர்வீஷ் மஹ்மூத் எனப் பலர் உள்ளனர்’.

தமிழ் மரபில் புலம்பெயர்வு என்பது சங்ககாலத்திலேயே அயலக வணிகம் சார்ந்து இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக கிரேக்க ரோமானிய நாடுகளுக்கு நிகழ்ந்துள்ளது. சோழர் காலகட்டத்தில் அரசியல் ரீதியாக, அரசியல் ஆதிக்கம் காரணமாக கீழ்த்திசை நாடுகள் முழுவதும் புலம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. தமிழில், புலம்பெயர்வு வாழ்நிலையையும் அதன் காரணமாக உள்ள பொருளாதாரச் செயற்பாடுகளையும் குறிப்பிடுகிற முதல் நூல் ‘பட்டினப்பாலை‘ ஆகும். ‘ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் செல்வமும் கொண்ட புகார் நகரத்தின் சிறப்பினை அது இப்படிச் சொல்கிறது.

“தொல் கொண்டித் துவன் றிருக்கைப்
பல்லாய மோடு பதிபழகி
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்.”

(உருத்திரங்கண்ணனார்)

தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்கள், மொழி இன வேறுபாடின்றி மகிழ்ச்சியோடு இருந்தார்கள் என்ற புலம்பெயர்வு வாழ்க்கையின் சீரிய சிறந்த பண்பு இச்சங்க பாடலில் காட்சியாகியுள்ளது. தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்த மக்களைப் பற்றி தொன்மை இலக்கியங்கள் கூறுகின்றனவே தவிர, தமிழக மக்கள் வேற்றுப்புலங்களுக்கு பெயர்ந்தார்கள் என்று கூறவில்லை. 1777 இல் ஆங்கில ஆட்சியாளர் முதன் முதலாக தமிழர்கள் சிலரை பிஜி தீவிற்கு அனுப்பினர். தொடர்ச்சியாக ஆண் பெண் உழைப்பாளர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்டனர். மொரீசியஸில் கவர்னராக பணியாற்றிவந்த  சர். ஆதர் கோர்டன், ஃபிஜியின் முதல் கவர்னராக பொறுப்பேற்ற பின்பு  அவர் செய்த முதல் பணி இந்தியாவிலிருந்து ஃபிஜி தோட்ட வேலைகளுக்கு ஆட்களை கொண்டுவந்து இறக்கியதுதான். 1879ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் லியோனிதாஸ் கப்பல் மூலம் கொத்து கொத்தாக ஃபிஜி மண்ணில் கொண்டு தள்ளப்பட்டனர் இந்தியர்கள். அப்போதிலிருந்து 1916ஆம் ஆண்டுவரை கப்பல் கப்பலாகக் கொண்டுவரப்பட்டு ஃபிஜியில் குவிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 60,000 பேருக்கு மேல். புலம்பெயர்ந்து அல்லல் பட்ட இம்மக்களைப்பற்றி பாரதி பாடிய, ‘பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரீகள்’ என்ற இசைப்பாடல்தான், தமிழில் தோன்றிய முதல் புலம்பெயர் இலக்கியம் (கவிதை) அல்லது புலம்பெயர்ந்த மக்களைப் பற்றிய தமிழிலக்கியத்தில் நேரடியான முதல்பதிவு ஆகும். ‘கரும்புத் தோட்டத்திலே…’ என்ற பல்லவியோடு தொடங்கும் அந்த பாடலின் சில வரிகள் வருமாறு,

“…………………….. தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்" (கரும்புத்தோட்டத்திலே)”


‘தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே’ என்று இந்த பாடலில் பாரதியார் குறிப்பிடுவது பசிபிக் பெருங்கடலின் மத்தியில் சின்ன புள்ளியாகக் கண்ணில்படும் குறைந்தளவிலான மக்கள் தொகையை கொண்ட ஃபிஜி தீவுதான். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தமிழ், இந்தி, வங்காளம் பேசும் பலரை தேயிலைத் தோட்ட வேலைகளுக்காகவும் கரும்புத் தோட்ட வேலைகளுக்காகவும் கங்காணிகளின் ஆசைவார்தைகளால் வீழ்த்தி அவர்களின் சொந்த ஊர்களைவிட்டு வேறு நாடுகளுக்கு (மலேசியா, பர்மா. இலங்கை,..) அடிமாடுகளைப்போல எங்கே போகிறோம், என்ன செய்யப்போகிறோம் என்பதைக்கூட அறியாமல் கூட்டிச்சென்றனர். தமிழகத்திலிருந்து ஏழைமக்கள் பலர் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குத் தேயிலை, ரப்பர் தோட்ட உழைப்பாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள்தான் முதன்முதலாகப் புலம்பெயர்ந்த தமிழர்களாக கருதப்படுகின்றனர்.

இந்தப் புலப்பெயர்வு வாழ்க்கைச் சித்திரத்தை அளிக்கும் முதல் புனைவு இலக்கியம் (சிறுகதை) புதுமைப்பித்தனின்துன்பக்கேணி’ (முதல் வெளியீடு: மணிக்கொடி; 31.03.1935; 14.04.1935; 28.04.1935) ஆகும். இப்புனைவின் தலைப்பு பாரதியின் ‘பிஜித்தீவிலே ஹிந்து ஸ்திரீகள்’ கவிதையின் சொல்லாடலாகத்தான் (துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்) அமைந்துள்ளது. ,கேள்விப்பட்ட தகவல்களைக் கொண்டே புதுமைப்பித்தன் இந்தக்கதையை எழுதியிருக்கிறார். அடிமைக்கூலியாகச் சென்ற ஒரு தலித் குடும்பத்தின் நோயும் அவமதிப்பும் மரணமும் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இப்பிரதி உண்மையில் ஒரு நாவலுக்கான கட்டமைப்பு கொண்டது. பிரச்சினைப்பாடுகள் செறிந்த புலம்பெயர்தலின் அவலம் கொதிக்கும் இப்புனைவின் கதைக்களம் இலங்கை என்பது அவதானிக்கத்தக்கது. ‘இது ஒரு வரலாற்று வேடிக்கைதான்’ என்கிறார் சு.வேணுகோபால். ஏனெனில், இன்று புகலிட தமிழ் இலக்கியம் என்பது ஈழம் சார்ந்ததாகவே கவனிப்பாயிற்று. ஈழத்தமிழர் தெறித்தோடி உலகநாடுகளில் அடைக்கலம் புகுந்த இடங்களிலிருந்து எழுகின்ற இலக்கியம் ‘புகலிட இலக்கியமாக’ எண்பதுகளுக்குப் பின் அடையாளம் காணப்பட்டது.

இவ்விடத்தில் நேர்காணலொன்றில் (நாழிகை (லண்டன்), டிசம்பர் , 1994) பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் குறிப்பிட்ட ஒரு கருத்து நோக்கத்தக்கது: “ஐரோப்பாவில் வளர்ந்துவரும் தமிழ்க் கலாசாரச் சூழலை, குறிப்பாகப் புகலிடம் தேடிவந்த கலைஞர்கள், எழுத்தாளர்களின் இருத்தலுக்கான தேடலை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கிய அம்சமாகும். இலங்கையின் அரசியல் நெருக்கடி காரணமான 80களுக்குப் பின்னர் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுள் எழுத்தாளர்களும் கலைஞர்களும் பலர். இவர்கள் பெரும்பாலும் தமிழ் மாத்திரம் அறிந்தவர்கள். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குரிய களமாகச் சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் வெளியிடுகின்றனர். புத்தகங்கள் பலவும் வெளிவந்துள்ளன. இவற்றின் மூலம் தமிழில் புகலிடஇலக்கியம் என்பது கவனத்துக்குரிய புதிய பிரிவாக வளர்ந்துவருகின்றது. இன்றைய இலக்கியத்தின் பிரிக்க முடியாத பகுதியாக அதனை நாம் நோக்க வேண்டும்” (எம்.ஏ.நுஃமான்; முற்றுப்பெறாத விவாதங்கள்; 2023: 183, 184).

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடம் ஈழம் என்ற மண் பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. காரணம் முழுக்க நிகழ்கால அரசியல் பிரச்சனைகளோடு பிணைந்த ஒன்றாக இருக்கிறது. ஈழத்தில் இனமோதல் போர் காரணமாக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளன, எழுதப்பட்டுள்ளன. எனவேதான் தமிழ் புகலிட இலக்கியம் என்பது ஈழத்தவர்களின் படைப்புகளையே குவிமையப்படுத்தி நிற்கின்றது. ஆனால், ஆங்கிலயரின் காலனி ஆதிக்கம் நிலைபெற்ற நாளிலிருந்து தமிழர்களைக் கட்டாயமாகப் புலம்பெயர்ந்து (மலேசியா, பர்மா, இலங்கை. தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளுக்கு) செல்லவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகினர். தமிழர்கள் அடிமைகளாக் குடியேறத் தொடங்கிய 1777/ 1786 இல் இருந்தே புகலிட இலக்கியம் தோன்றியிருத்தல் வேண்டும். ஆனால் இயல் எழுத்தாக அவை அமையவில்லை; நாட்டார் பாடல்களாக மட்டும் வெளிப்பட்டன. இவர்களைக் கண்காணித்த கங்காணிகளும், கிராணிகளும் ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள்தான். அவர்களில் எவரும் இவர்களின் அவலத்தை எழுதவில்லை. இந்த அடிமைகளின் மூன்றாம் நான்காம் தலைமுறையினரே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உருவாகின்றனர். 200 ஆண்டுகால அடிமை வாழ்வை கிழக்காசிய நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்திருந்தும் எழுத்திலக்கியத்தில் அவர்கள் குறித்த பதிவு பெறமாலே போயிருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 1940களுக்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களின் வாழ்வு இலக்கியமாகத் தொடங்கியிருக்கிறது (இவ்வலக்கியங்களை அறிய பார்க்க, சு.வேணுகோபால்; ‘தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை’).

புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற உரைக்கட்டில் தேவகாந்தன் முன்வைத்துள்ள சில கருத்துக்கள் துல்லியமாய் துலக்கத்தக்கன. “புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிருஸ்ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் பா.அ. ஜயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைக்குள்ளும் கொண்டுவந்து விட முடியாதுபோய்விடும்…. ஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக, ஆங்கிலத்தில் எழுதும் பல்வேறு நாடுகளிலுமிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தம்மை Exile writer sஎன்றே குறிப்பிட்டு வந்தனர். அவர்களது படைப்புக்களும் Exile Literature எனக் குறிப்பிடப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவர்கள் குறிப்பாக சல்மான் ருஸ்டி, பாரதி முகர்ஜி போன்றோர், தம்மை migrate writers எனவே குறிப்பிடுகிறார்கள். அவர்களது இலக்கியமும் migrate literature எனவே அழைக்கப்படுகிறது. எக்ஸைல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கான வரைவிலக்கணம், ஒரு நிர்ப்பந்தத்தில் நாடு நீங்குதலையே குறிப்பிடுகின்றது. Migrant என்பவர் விருப்பக்குடியேறியாவார். I don't exist in this country, not as a writer, a citizen, nor human being. I don't feel that I belong anywhere not since my roots were torn from the ground என Samir Naggash கூறுவதுபோன்ற கதறல் அவரது படைப்பில் சாத்தியமே இல்லை. ஆக புலம்பெயர் தமிழிலக்கியம் என்பதைவிட தமிழ்க் குடியேறிகளின் தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் என குறிக்கப்படுவதே வெகுவிரைவில் உருவாகக்கூடிய சூழ்நிலையென நம்பகமாகத் தோன்றுகிறது” (இணையம்).

புகலிட இலக்கியம் பற்றிய இத்தகைய அறிகையுடன், வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்காட்டு/ கூட்டு முயல்கள்’ என்ற புகலிட அனுபவச் சிறுகதைகளைப் பற்றி நுண் நயமாக ஆய்வோம். இத்தொகுப்பு ‘ஜீவநதி’யின் 194ஆவது வெளியீடாகும். இந்நூலை ஜீவநதி வெளியீட்டகம் மிக நேர்த்தியாக வெளிக் கொணர்ந்துள்ளது. 2021 புரட்டாதி வெளிவந்த இப்பிரதியின் பக்கங்கள் 166 (+vii). 25 சிறுகதைகளும் இரு குறுநாவல்களும் இதன் உள்ளடக்கம். அட்டையில் நூலாசிரியரின் உருவம் ஓவியமாகியுள்ளது. 1983-1984 காலகட்டத்தில் நூலாசிரியர் அகதியாகப் புகலிடம் நாடி நியூயோர்க் மாநகரில் வாழ்ந்த காலகட்டத்தில், மாநகரத்துப் பெயர் தெரியாத வீதி ஓவியர் ஒருவர், அவரை (வ.ந.கிரிதரன்) வைத்து வரைந்த பென்சில் ஓவியம். ‘பரணீ அச்சகம்’ ஓவியத்தை கவின்நுட்பத்தோடு அட்டையில் பதியமாக்கியுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாண நகரிலுள்ள வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட, வ.ந.கிரிதரனின் தற்போதைய இருப்பிடம் டொராண்டோ, கனடா. மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் கனடாவில் இலத்திரனியற் பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் (இணையத் தள பராமரிப்பு , இணையத் தள அப்ளிகேசன்கள் எழுதுதல்) தகைமைகள் பெற்றுள்ளார். பத்து வயதில் எழுத தொடங்கிய கிரிதரன், பதினேழு வயதில் 'சலனங்கள்' என்ற முதல் சிறுகதையை எழுதியிருக்கிறார். இக்கதை அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவு தினச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. சிறுகதை, நாவல் (அமெரிக்கா, மண்ணின் குரல், குடிவரவாளன்), கவிதை (எழுக அதி மானுடா), கட்டுரை, ஆராய்ச்சி (நல்லூர் ராஜதானி நகர அமைப்பு) என தொடர்ச்சியாக பன்முகத்தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் அவர், பதிவுகள் இணைய இதழின் (https://www.pathivukal.com) ஆசிரியராகவிருந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து அதனை வெளியிட்டு வருகின்றார்.  கனடாவிலுள்ள “டொராண்டோ” மாநகரில் வாழும் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் பல்வேறு வகையான புகலிட அனுபவங்கள் ‘படாடோபம்’ இல்லாமல் உணர்வு மொழியால் புனைவாக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ‘கட்டடக்காட்டு/ கூட்டு முயல்கள்’ தொகுப்பு நுண்ணய வாசித்தலுக்கு உரியதாயிற்று.

கிரிதரன் என்னுரையில் படைப்பு மனோநிலை எவ்வாறு உருவாகின்றது என்பதனை உயிர்பித்துக் காட்டியுள்ளார். “எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சமபவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களி ருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான “கிழவனும் கடலும்” நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார்”. நான் (ஈழக்கவி) எழுதத் தொடங்கிய காலத்தில் (சித்தாந்த வெறுமை காலத்தில்) கவிதை (?) என்று எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். ஒரு முறை தினகரன் பத்திரிகையில் “குரு பூஜை” என்றொரு குறிப்பு காணப்பட்டது. அந்த குறிப்பிலிருந்த சொற்களை வைத்துக்கொண்டு நான் அன்று இப்படியொரு கவிதை எழுதியது ‘ஹெமிங்வே’யின் கருத்தை வாசிக்கையில் என் நினைவில் மின்னிற்று.

நீங்கா நினைவு

அபிஷேக
ஆராதனைக்கு
உன்
இதயக்கோவில்
தடைவிதித்துள்ளது…..

அன்னதானம்
கேட்டு வந்த
என் எண்ணவலைகள்
ஏமாந்து போயின!

உன்
ஞாபக முத்திரையை அகற்ற
குருபூஜை
நடத்துகிறேன்….

அங்கு வந்து
ஏன்
‘காபரே’
ஆடுகிறாய்?

(தினகரன் வாரமஞ்சரி; 1984)

கிரிதரனின் ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ என்ற சிறுகதை ‘டொராண்டோ சன்’ பத்திரிகையில் வெளியான புகைப்படத்தின் உந்தலினால் உருவாக்கம் பெற்றுள்ளது. புகைப்படம் மட்டுமல்ல, அவரது அனுபவமும் அதற்கு உரமாகியுள்ளது. அந்த அனுபவம் என்ன? இவரது விபரண மொழி இப்படி சொல்கிறது: ““கனடாவுக்கு வந்த காலகட்டத்தில் என் வேலை காரணமாக டொராண்டோவின் மேற்புக் புறத்திலிருக்கும் “கீல்” வீதியும், “சென்ட் கிளயர் மேற்கு” வீதியும் சந்திக்கும் சந்தியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் சந்தர்ப்பமேற்பட்டது. இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள பகுதியாக விளங்கும் அப்பகுதியில் அன்று கனடா பக்கர்ஸ் நிறுவனத்தின் கசாப்புக் கூடம் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை அக்கசாப்புக் கூடத்தைக் கடக்கும்போதும் மூக்கைத்துளைக்கும் மணமும், அங்கு வெட்டுவதற்காக அடைப்பட்டுக் கிடக்கும் மாடுகளின் நிலையையும் மனதில் பல்வேறு சந்தனைகளை உருவாக்கும். மனம் அக்காலகட்டத்தில் இலங்கைச் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலையுடன் அக்கசாப்புக் கூடத்தில் அடைப்பட்டுக்கிடக்கும் மாடுகளின் நிலையும் ஒப்பிட்டப் பார்க்கும்.”

பத்திரிகை புகைப்படம் எதனை காட்டிற்று? “400 கடுகதிப்” பாதைவழியாக, “மூஸ்” என்னும் மானின மிருகங்களை ஏற்றிச்சென்ற “ட்ரக்டர் டிரெயில”ரிலிருந்து, இடைவழியில், கதவு திறந்த நிலையில், அம்மிருகங்கள் அனைத்தும் தப்பி வெளியேறின. சில “400 கடுகதி”ப்பாதையின் நடுவில் ஓடித்திரிந்து வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. இதன் விளைவாக அங்கு சென்ற காவற்துறையினர் கடுகதிப் பாதையில் நின்ற அம்மிருகங்களைப் பிடிப்பதற்காக நின்ற காட்சிக்கான புகைப்படமே அப்புகைப்படம்.

புகைப்படமும் அனுபவமும் ஒன்று கலத்தலில் படைப்பு எப்படி உருவாயிற்று? “அந்தப் புகைப்படமும், ட்ரக்டர் ட்ரெயிலரிலிருந்து தப்பிய “மூஸ்” மிருகங்களும் என் சிந்தையில் பல வருடங்களுக்கு முன்னர் கனடா பக்கர்ஸ் கசாப்புக் கூடத்தைக் கடக்கும் போது அங்கு வெட்டப்படுவதற்காக நிற்கும் மாடுகள் பற்றியெழுந்த நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தன. வெட்டப்படுவதற்காகக் காத்திருக்கும் மாடுகள் அக்கசாப்புக் கூடத்திலிருந்து தப்பி, வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, தம் போராட்டத்தினை ஆரம்பித்தால் எப்படியிருக்குமென்று என் மனதில் சிந்தனையோடியது. அச்சிந்தனையின் விளைவாக உருவானதுதான் “ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை”.

லதா ராமகிருஷ்ணனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு லண்டனிலிருந்து வெளியாகும் ‘தமிழ் டைம்ஸ்’ ஆங்கில இதழில் வெளியிடப்பட்ட இக்கதை, தாயகம் (கனடா), திண்ணை, பதிவுகள் ஆகியவற்றில் களம் கண்டிருக்கிறது. அமெரிக்கா, பனையும் பனியும் (தொகுப்பாளர்கள் எஸ்.பொ., இந்திரா பார்த்தசாரதி) போன்ற தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. ஒரு மாட்டுப் பிரச்சினை எவ்வாறு நாட்டுப் பிரச்சினை ஆயிற்று என்பதனை உள்ளுறையாக அல்லது இறைச்சிப் பொருளாக இப்பிரதி உணர்த்துகின்றது. பின்வரும் பகுதிகள் இதனை நிதர்சனப்படுத்துகின்றன.

‘இந்த மாட்டின் மனநிலை என்னவாயிருக்கும்? அருகிலுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப் படுவதற்காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. இவ்விதம் தப்பிவர இந்த மாடு எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கும்?”

“கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையைப் பாவம் இந்த மாட்டால் உணர முடியவில்லை. அதனால்தான் தன்னுயிரைக் காத்துக்கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத்துடன் முயல்கிறது.”

“ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை… இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அரைகுறையாகத் தப்பி மீண்டும் அகப்பட்டவர்கள். தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள்….”

‘கனடாவின் டொராண்டோ மாநகரத்தின் பெருவீதிகளில், தனக்குள் தத்துவார்த்த விசாரணைகளையும் விசாரங்களையும் நடாத்திக் கொண்டு, புலம்பெயர்ந்த பல்தேச மனிதர்களைத் தன் பயணப்பாதை எங்கும் காணும், ஈழத்துப் புலம்பெயர்வாளர் ஒருவர் கதைகளின் நாயகனாகப் பாத்திரமேற்க, அவரை அகக்கண்ணால் பின்தொடரும் வாசகர் காணும் காட்சிகள் சிறந்ததோர் தளத்தில் சிந்திக்க வைக்கின்றன. கதைமாந்தர் உதிர்க்கும் தத்துவச் சாரல்களால் மனம் இடையிடையே சிலிர்த்து வியக்கிறது. வந்தேறுதேசத்தின் முதலாம் தலைமுறையினரின், ஆரம்பகால சோகங்களில் இடையிடையே எட்டிப் பார்க்கும் அங்கதம் சிறு புன்னகையுடனான ஆறுதலை தருகிறது. களமும் காட்சிகளும் முன்னே அறிமுகம் ஆனவையாக இருந்தாலும், மானுடதரிசனத்தின் பல்வகைமை, கதாசிரியரின் மொழிநடையூடாகத் தெளிவான மனப்பதிவுகளை வாசகரிடம் உருவாக்குகிறது’ – என்று இத்தொகுப்பு பற்றிய திறனாய்வில் ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதியுள்ளார்.

“கூட்டில் அடைத்து வைக்கப்பட்ட மிருகங்கள் எவ்விதம் இயற்கைக்கு மாறாகத் தமது நடத்தைகளை மாற்றிக்கொள்கின்றனவோ, அவ்விதமே காங்கிரீட் கூடுகளிற்குள் அடைத்து வைக்கப்பட்ட நகரத்து மனிதரும் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர்” என்ற மெய்யியலை (Philosophy) முன்னிறுத்தி எழுதப்பட்ட அற்புதமான புனைவு ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!’ இத்தொகுப்பின் கதைகளில் பல நகர இருத்தலை வெளிக்கொணர்வதால் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ என்பதே நூலின் மகுடமாயிற்று போலும்! பிரதிக்கு அப்பால் வாசகனைச் சிந்திக்கக் தூண்டுகின்ற நுட்பத்தோடு இச்சிறுகதை சித்தரிக்கப்பட்டிருக் கின்றது. புனைவின் தொடக்க, முடிவு சொல்லாடல்கள் இதனை பிரகாசப்படுத்துகின்றன. “நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொரண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?” எனத் தொடங்கும் உரை பின்வருமாறு முடிகிறது.

“என்னடா மச்சான், இந்த நேரத்திலை?”

“நீ சொன்னமாதிரியே கூட்டைத் திறந்து விட்டேன்.”

“நல்ல விஷயமென்று செய்திருக்கிறாய்”

“ஆனால்,… முயல்களிரண்டும் பல்கணியிலிருந்து பாய்ந்து விட்டன மச்சான்.”

இவ்வாறு இந்த உரைப்படைப்பு முடிவின்றி முடிவுறும் போது மனக்கடலில் தொடர் அலைகள் விகாசம் கொள்கின்றன. கிரிதரனின் பெரும்பாலான சிறுகதைகள் இவ்வாறு அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.. சுந்தர ராமசாமியின் கருத்தொன்று இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது. “சிறுகதை ஒரு கல். அது மனத்தடாகத்தை நோக்கி வீசப்படுகிறது. பாய்ந்தோடிச் சென்று அது ஒரு அலையை எழுப்புகிறது. அலையின் தொடர்கள் எழுகின்றன. அலை வளையங்கள் விகசிப்புக் கொள்கின்றன. மனத் தடாகத்தில் அது பல விகாசத்துக்கு ஏற்ப இந்தத் தொடர் அலைகளும் அதிக விகாசம் கொள்கின்றன. இங்கு ஒரு முடிவு என்று எதுவும் இல்லை. நமக்குச் சாவகாசம் இருப்பின் சிறுகதை என்ற கல்லை நம் தடாகத்தில் வீசி பார்த்துக் கொள்யலாம். கதை முடிகிறது. சிறுகதை மன அலைகளில் தொடர்ந்து கொண்டிருப்பது” (மல்லிகை; ஜனவரி 1986: 11). கிரிதரனின் சிறுகதைகள் மேற்குறித்த கருத்தியலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. காலம் என்ற கயிற்றில் புகலிட அனுபவங்கள்/ சம்பவங்கள் என்னும் முத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக சீராகக் கோர்க்கப் பட்டுள்ளன. சுவாரஸ்சியத்தை பிரதானமாகக் கொண்டு புகலிட அனுபவங்கள் கிரிதரனால் நேர்த்தியாகப் பின்னப்பட்டுள்ளன.

‘சுண்டெலி’ என்ற தலைப்பினைப் பார்த்ததும், உமா வரதராஜனின் ‘எலியம்’ என்ற சிறுகதை மனக்கண்ணில் தோன்றிற்று. இரண்டு கதைகளிலும் அங்கதம் இழையோடியிருக்கும் தன்மையினைக் காணலாம். ‘எலியம்’ குறியீட்டுப் பாணியிலமைந்த உயிர்ப்பான ஒரு உரைப்படைப்பு. ‘சுண்டெலி’ புகலிட வாழ்வியலில் எலித்தொல்லை பற்றி சுவாரஸ்சியமாக எடுத்துரைக்கின்றது. உயிர்வாழ்தலுக்காக உயிர்ப்போடு இயங்கல் பற்றி எலியை படிமமாக்கி கதைசொல்லி மிக நுண்மையாக சொல்லியிருக்கிறார். “ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதுமாக அந்தச் சுண்டெலி முயன்று கொண்டிருந்தது. சிலவேளை அது தன் முயற்சியில் வெற்றியடையலாம்.  அடையாமற் போகலாம். அதற்காக அது  தன் முயற்சியைக் கைவிடும் வகையைச் சேர்ந்தது போல் தென்படவில்லை. இறுதி வெற்றி கிடைக்கும்வரை அல்லது களைத்துச் சோரும்வரை அது தன் முயற்சியைத் தொடரத்தான் போகின்றது. இந்தச் சின்னஞ்சிறு உயிரிற்குள்தான் எத்தனை நூதனமான வைராக்கியம்…” இக்கதைப்பற்றி செ.கணேசலிங்கம், ‘சுண்டெலி ஒன்றின் மூலம் உயிர் வாழ்வின் மனித அடித்தள இருத்தலியலின் தாற்பரியத்தைக் கூற முயன்றுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘தப்பிப் பிழைத்தல்’ புனைவில் கதைசொல்லி அணிலொன்று உணவு தேடி எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை நுண்மையாக காட்சிபடுத்தியுள்ளார். பிரதியின் ஈற்றிலுள்ள தந்தை, மகள் உரையாடல் சிந்திக்கத் தூண்டுகின்றது.

“அப்பா! மிருகங்கள் சிந்திக்குமா?”

“நம்மைப் போல அவை சிந்திப்பதில்லை.”

“அப்படியென்றால்…. எப்படி இந்த அணிலுக்கு இதற்குள் உணவு இருக்கிற விடயம்தெரிந்தது?”

“அது தான் எனக்கும் தெரியவில்லை.”

“அப்படி உள்ளே உணவிருக்கிற விடயம் தெரிந்ததும் எவ்விதம் அதற்கு இவ்விதம் தூவார மொன்றினை ஏற்படுத்திஉள்ளே செல்ல வேண்டுமென்ற வடயம் தெரிந்தது? அப்படியென்றால் அது சிந்தித்திருக்கிறது தானே?”

“மகளே! அற்புதமானவிந்தப் பிரபஞ்சத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விடயங்கள் எவ்வளவோவுள்ளன. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது உயிரினம் எத்தகைய சிரமமான சூழல்களிலும் தப்பிப் பிழைக்க வழியொன்றினைக் கண்டு பிடித்து விடும் என்பது தான் அது மகளே!”

“உன்னைப் போல அப்பா!”

இப்பிரதியில் மட்டுமல்ல, பல பிரதிகளில் சில சொல்லாடல்கள்/ சொற்கள் தவிர்க்கப்பட்டிருந்தால் அவற்றின் கட்டமைப்பு இன்னும் கட்டிறுக்கமாக அமைந்திருக்கும். புகலிட வாழ்வியலில் உயிரினங்களின் (மாடு, முயல், எலி, அணில்) இயக்கம் பற்றி உள்ளுறையோடு எழுதியிருக்கும் முறைமை வித்தியாசமாவும் ரசிக்கத் தக்கதாகவும் உள்ளது. இப்பிரதிகளில் கூட தாய் நிலத்தை நினைவுறுத்தும் சொல்லாடல்கள் இயல்பாகவே வந்துவிழுகின்றன. எடுத்துக்காட்டாக,

(நி) “ஊரிலையென்றாலும் வீட்டு வளவிலை போய்க் கட்டி வைக்கலாம்…” (ஒரு ம(நா)ட்டுப் பிரச்சினை)

(ல) “என் மனைவியோ கனடா வந்து ஆறு வருடங்கள் ஓடியும் இன்னும் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில்தான் கதைத்து வருகிறாள்….” (சுண்டெலிகள்)

(ம்) எம் ஊர் மர அணிலின் அளவிலிருந்த அணில்….. (தப்பிப் பிழைத்தல்)

“சிறுகதை என்பது சிறிய அளவிலான கதையன்று. அது சிறுகச் சொல்லி உயர்பட்சத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் உரைப்படைப்பு. எடுத்துக்கொண்ட பொருள் பற்றிய உயர்பட்சத் தாக்கத்தை ஏற்படுத் துவதற்கான முறையில் அது ;அமைக்கப்படல்’ வேண்டும்’ – என்கிறார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. இத்தொகுப்பின் உரைப்படைபுகளில் அதிகமானவை இத்தகைய அணுகுமுறையிலேயே அமைந்திருக் கின்றன. இதற்கு உரத்த உதாரணமாக அமைந்திருக்கும் உரைப்படைப்புதான் ‘மான் ஹோல்!’ அகதிகள் மூவரின் ‘மான் ஹோல்’ சங்கமத்தின் சங்கதிகளே இப்பிரதி. அவர்களின் இருப்பு பற்றி சாமி என்ற பாத்திரம் இப்படி கூறுகின்றது. “பார்த்தாயா? இந்தியனான நீ இங்கே நடைபாதையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறாய். இந்தியனான நான் நடைபாதையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறேன். ஆபிரிக்கனான அவன் நடுரோட்டில் வாகனமோட்டி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறான்.” இப்புனைவில் ஒண்டாரியோ பாராளுமன்றம் படிமமாக வெளிப்பட்டுள்ளது. இந்த படிமத்தை கதைசொல்லி பின்வருமாறு சுட்டுகின்றார். “சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“பார்த்தாயா காலத்தின் கூத்தை.”

“காலத்தின் கூத்தா…”

“காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன”

சாமி மான் ஹோலில் அனாதையாக மரணித்துக் கிடக்கின்ற சந்தர்ப்பத்தில் படிமம் அதிர்கின்றது. புனைவின் நிறைவு சொல்லாடல்கள் இவை: “தொலைவில் இருளில் ரொமானெஸ்க் கட்டப்பாணியிலமைந் திருந்த ஒண்டாரியோ பாராளுமன்றம் அழகாக பிரகாசமாகத் தெரிந்தது. “அங்கிருந்து அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சாமி கூறியது நினைவில் தெறித்தது.”

மேலைத்தேய நாடுகளிலும் விடற்ற வீதிமனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதனை நுட்பமாக படம்பிடித்துக் காட்டுகின்ற கதையே மான் ஹோல்! சொந்தக்காரன், வீடற்றவன், கலாநிதியும் வீதிமனிதனும் இப்பிரச்சினையையே துல்லியப்படுத்துகின்றன. ‘புலம் பெயர்தல்’ என்ற பிரதியில் பின்வருமாறு ஒரு சொல்லாடல் காணப்படுகின்றது. “வீடற்ற வாசிகளிலொருவனான ஜோர்ஜ் மூலையில் படுத்திருந்தான். ஜோர்ஜ் முன்பு நல்லதொரு வேலையிலிருந்தவன். மனோநிலைப் பாதிப்பினால் வீடற்றவனாகி இவ்விதம் அலைந்து கொண்டிருந்தான். இவருக்கு அவன்மேல ஒருவிதப் பரிதாபமிருந்த காரணத்தினால் அவனை அவ்விதம் இரவுகளில் துயில்வதற்கு அனுமதித்திருந்தார். பாவம் இவனைப் போன்ற பல வீடற்றவர்களை இந்த டொரோண்டோ மாநகரின் கீழ்நகர்ப் பகுதியில் காண முடியும். நகரிலுள்ள 'மான் ஹோல்' மூடிகளின் கணகணப்பில் இரவுகளை வானமே கூரையாகக் கழிக்கும் இவ்விதமான பல வீடற்றவர்களை ஆங்காங்கே காண்பதென்பது இந்நகரின் அன்றாட இரவுக் காட்சிகளில் சாதாரணமானதொரு நிகழ்வே.”

‘Where are you from’ என்ற இக்கேள்வி புகலிடங்களில் எத்தகைய உளவியல் அதிர்வுகளை/ மன உளைச்சலை உண்டாக்குகின்றது என்பதை தாக்கப்பூர்வமாக சித்தரிக்கின்றது, இக்கேள்வியையே தலைப்பாகக் கொண்ட பிரதி. பின்வரும் வரிகள் இதனை துலாம்பரப்படுத்துகின்றன.

“நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்ட பத்தாவது ஆள் நீ. நீ தவறாக நினைக்க மாட்டாயென்றால் ஒன்று தாராளமாகக் கேட்கலாமா?" "கேள். நான் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டேன் தாராளமாகக் கேள்"

"எதற்காகச் சொல்லி வைத்தது மாதிரி நீங்கள் எல்லோருமே இந்தக் சேன்வியைக் கேட்கின்றீர்கள்? ஒவ்வொருவரின் தோற்றத்தையும் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்குமே. பின்னேத கேட்கின்றீர்கள்?"

"ஏன் கேட்கக் கூடாதா? நீங்கள் எல்லோரும் வந்தேறு குடிகள். உங்கள் பூர்வீகம் பற்றி அறிய எங்களுக்கு ஆசை இருக்காதா?"

"நீங்களும் தான் வந்தேறு குடிகள். நீங்கள் அன்று வந்தீர்கள். நாங்கள் இன்று வந்திருக்கின்றோம். அவ்வளவு தான் வித்தியாசம்."

"நீ நன்கு பேசப் பழகிக் கொண்டாய்" என்று கூறி அந்த மாது சிரித்தாள்.

"கனேடியக் குடிமகனல்லவா? அது தான்" என்று நானும் சிரித்தேன். அந்த மாதை இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு மீண்டும் வார்டன் பாதாள ரயில் வாகனத் தரிப்பிடத்திற்கு வருவதற்கு முடிவு செய்து வாகனத்தைத் திருப்பினேன். இந்த  Where are you from? என்ற கேள்வி இருக்கிறதே. இது மிகவும் சுவாரசியமானது. இங்கு வரும் ஒவ்வொரு குடியேற்றவாசியும் அடிக்கடி எதிர் நோக்கும் கேள்விகளில் ஒன்று. இது கேட்கப் படும் பொழுது, கேட்கும் நபரைப் பொறுத்துப் பல்வேறு அர்த்தங்களில் கேட்கப் படலாம். உண்மையிலேயே அறிய வேண்டுமென்று ஆவலில் கேட்கப்படலாம். அல்லது "நீ கனடியன் அல்ல" என்னும் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் துவேஷ உணர்வின் வெளிப்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியினை எதிர் கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சல்களை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இதனை எதிர் கொள்ளும் பொழுதும் அவர் அவமானப் படுபவராகவே உணர்ந்து கொள்வதால் அடையும் எரிச்சலினை யாரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு அனுபவங்களிற்கும் என்னைத் தயார் படுத்தி வாழ இயல்பூக்கம் அடைந்து விட்டேன்.”

“அண்ணை ஊரிலை எந்த இடம்?” என்ற வினாவுடன் கதை முடிகின்றது. கிரிதரனின் சிறுகதைகள் வலிந்து முடிவுகளை அடையாமல் இயல்பாகவே முடிவுறாமல் முடிவது தனிச்சிறப்பாகியுள்ளது. இப்புனைவில் தெறிக்கும் உணர்வுக் கொந்தளிப்புகள் பிரதியோடு வாசகனை இணைத்து அழைத்துப் போகின்றன. இத்தொகுபின் சிறுகதைகள் புகலிட வாழ்வின் நானாவிதமான சஞ்சாரங்களுக்கு சுய அனுபவத்தின் வழியாக செழுமை ஊட்டி, மனநிறைவை அளித்து விடுகின்றன. தாய்மண்ணைத் தாண்டிச்சென்றாலும் அழியா அதன் அருட்டுணர்வுகள் கதையோடு கதையாடலாக வெளிப்பட்டு பிரதிக்கு மெருகூட்டுவதோடு, அந்த அதிர்வின் தாக்கத்தை உணர்வுப்பூர்வமாக வெளிக்கொணர்ந்துள்ளன. பின்வரும் வரிகள் இதனை நிதர்ஷனப்படுத்துகின்றன. “"இந்தப்பாழாய்ப்போன சிங்கள, தமிழ் பிரச்சினை மட்டும் இல்லையென்றால்... உவங்கள் ஆமிக் காரன்ற கரைச்சல் மட்டும் இல்லையென்றால் அவர் கனடாவுக்கு விசிட் பண்ணிவிட்டுப் போயிருப்பார். இந்தப் பிரச்சினைகளுக்குள்ளும் அங்கென்றால் கந்தையா வாத்தி இருக்கின்றார் அரட்டையடிப் பதற்கு... இல்லாவிட்டால் அது இதென்று பொழுது போய்விடும். என்ன மாதிரி உற்சாகமாக, துடிப்புடன் திரிந்துகொண்டிருந்தார். அந்தத் துடிப்பு, கம்பீரம், உற்சாகம் எல்லாமே வடிந்து விட்டன. புதிய சூழல் எவ்வளவு தூரம் அவரை மாற்றி விட்டது. அங்கு அவருக்குச் செய்வதற்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் இங்கு....” (பொற்கூண்டுக் கிளிகள்!). தமிழ் கதைப்பரப்பில் இப்புனைவுகள் புதிய பரிமாணங்களோடு பரிணமித்துள்ளன.

இப்பிரதியின் இறுதியில் தொகுப்பாக்கம் பெற்றுள்ள இருகுறுநாவல்களும் இருவேறு வாழ்நிலையை உணர்த்தி நிற்கின்றன. ‘பிள்ளைக்காதல்’ என்ற தலைப்பே கதைசொல்லி எதனை வெளிப்படுத்த முனைகின்றார் என்பதனை குறிப்பாக உணர்த்திவிடுகின்றது. இவ்வுத்தியை பேராசிரியர் அ.ராமசாமி பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார். “தலைப்பின் வழியாகக்  குறிப்பாக உணர்த்தப்படும் மையப்பொருளைக் (தமிழின் இலக்கியவியல் இதனை உரிப்பொருள் என்கிறது) காலம், வெளி, பாத்திரங்கள் என்னும் மூவோர்மைகளை உருவாக்குவதின் வழியாகக் கதையின் வடிவத்தை முழுமையாக்குகிறார்கள். இவ்வோர்மைகளில் குறைபாடுகள் இருக்கும் கதைகள் கவனிக்கப்படாத கதைகளாகவும், சொல்ல நினைத்த உரிப்பொருளைச் சரியாக வெளிப்படுத்தாத கதையாகவும் கருதப்படுகின்றன.” கிரிதரனின் ‘பிள்ளைக்காதல்’ கவனிக்கத்தக்க கதையாகவும் உரிப்பொருளைச் சரியாக வெளிப்படுத்தும் கதையாகவும் அமைந்திருப்பதே அதன் சிறப்பு.

“‘சுமணதாஸ் பாஸ்’ குறுநாவல் கூடப் புகலிடத் தமிழ் அகதி ஒருவனின் நனவிடை தோய்தலாகத்தான மைந்துள்ளது, அவ்வகையில் அது கூடப் புகலிட அனுபவத்தின் வெளிப்பாடு என்று ஒரு வகையில் கூறலாம்” என்கிறது என்னுரை. இக்குறுநாவல் பற்றிய இருகருத்துக்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

ஒள்று, “தாங்கள் எழுதிய குறுநாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தமானது, ஞானம் சஞ்சிகையில் வந்த `சுமணதாச பாஸ்!’. வன்னி மண்ணின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு நாவல் முழுவதும் செறிந்து கிடக்கின்றது. நான் புலம்பெயர்வதற்கு முன்னர், இரண்டு மூன்று வருடங்கள் வவுனியாவின் அதே நிலத்தில் வாழ்ந்திருக்கின்றேன். இந்தக் காட்சிகளையெல்லாம் தரிசித்திருக்கின்றேன். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்துப் புனையப்பட்ட இக்குறுநாவல், இந்தப் பிரபஞ்சம் புதிர் நிறைந்தது என்பதை அழகாகச் சொல்கின்றது” - கே.எஸ்.சுதாகர்.

இரண்டு, “பிள்ளைப் பிராயத்தில் உயிர் காத்த பெரும்பான்மையின நட்பு ஒன்று பின்னாளில், உளவாளி என முத்திரை குத்தப்பட்டு குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட அவலத்தை, புலம்பெயர்ந்த ஒருவரின் பார்வையாக முன்வைக்கும் கதை 'சுமணதாஸ் பாஸ்'. ஆழமான அரசியல் ஒன்றை இந்நாவல் கொண்டிருக்கிறது. தனிமனிதர்களாக, சிறுபான்மையினரின் உற்ற நண்பர்களாக உயிர்காக்கும் பெரும்பான்மை இனமக்கள், சமூகமாக இணையும் போது இனவாதம் கொள்வதுண்டு. அதே சமயம் சிறுபான்மையினரும் தமது அரசியல் நலன்களுக்காக பெரும்பான்மையின மக்களின் நியாயங்களை மறுக்கிறார்கள். இருசாராரும் புரிந்துணர்வுடன் முரண்நிலைகளில் இருந்து விடுபடும் போது உண்மையான சுதந்திரம் உருவாகும்” - ரஞ்ஜனி சுப்பிரமணியம்.

வ.ந.கிரிதரன் ‘கட்டடக்காட்டு/ கூட்டு முயல்கள் தொகுப்பில் தன்னுடைய சுய அனுபவத்திலிருந்து திராணியான பிரதிகளை உருவாக்கியுள்ளார். எனவேதான், புகலிட இருத்தலின் நுண் அனுபவங்கள் உணர்வுச் செறிவோடு பிரவாகித்துள்ளன. அவரது ‘அமெரிக்கா’ நாவல் நியூயோர்க் மாநகரத்திலுள்ள புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாம் அனுபவங்களையும், ‘குடிவரவாளன்’ நாவல் நியோர்க் மாநகரத்தில் அகதியாக அலைந்து திரிந்த அனுபங்களையும் சித்திரிப்பது போல, இச்சிறுகதைத் தொகுப்பு இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் கனடாவின் “டோரோண்டோ” மாநகரத்து அனுபவங்களை சித்திரமாக்கியுள்ளது, ‘உண்மையில் கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், வாசித்தால் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் வாழ்க்கையை விபரிக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய நாவலொன்றினை வாசித்த உணர்வினை நீங்கள் அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்’ என்று கதைசொல்லி சொல்லியது பொய்யாகவில்லை.

உசாத்துணைப் பட்டியல்

1. ஆயிஷா அமீன் (2021), ‘ புகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்’, பேராதனை பல்கலைக்கழகம்  (குறித்த ஆய்விலிருந்து எஸ்.பொ.வின் புலப்பெயர்வு பற்றிய கருத்து பெறப்பட்டது).
2.  குணேஸ்வரன், க. (2009), ‘அலைவும் உலைவும்’, (புகலிட படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்), அல்வாய், யாழ்ப்பாணம்.
3. பூரணசந்திரன், க (2000), ‘புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வு” (குறித்த ஆய்வு இணையத்திலிருந்து பெறப்பட்டது).
4. வேணுகோபால், சு (2021.11.15), ‘தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை’ ஓலைச்சுவடி, கலை இலக்கிய சூழலிய இதழ் 5, (ஆசிரியர் சி.ச.திலீபன்; இணையம்).
5.  நுஃமான், எம்.ஏ. (2023), ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’, நாகர்கோவில், இந்தியா.
6. தேவகாந்தன், (2015.07.15), ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’, கதாகாலம் (அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்தரங்கில்
வாசிக்கப்பட்ட உரைக்கட்டு),
1.  கிரிதரன், வ.ந. (2021), ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!’, அல்வாய், இலங்கை.
2.   ரஞ்ஜனி சுப்ரமணியம், ‘வ.ந.கிரிதரனின் கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் – ஒரு பாா்வை!’, பதிவுகள்.காம்.
3.  சுந்தர ராமசாமி (1985), ‘சுந்தர ராமசாமி கருதுக்கள்’, மல்லிகை (ஜனவரி 1986; பக் 11), யாழ்ப்பாணம் (05.09.1985 அன்று கோலாலம்பூரில் நடந்த திறனாய்வுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை).
4.  சிவத்தம்பி, க. (2000), ‘ஈழத்துத் தமிழிலக்கியத் தடம் 1980-2000’, கொழும்பு,
5.  ராமசாமி, அ. (2019), ‘தமிழக சிறப்பிதழ் சிறுகதைகள் – சில குறிப்புகள்’, நடு இணைய இதழ் 22, புரட்டாதி 2019.
6.  சுதாகர், கே.எஸ்., “வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' சிறுகதைத்தொகுப்பு பற்றிய குறிப்புகள்!’, பதிவுகள்.காம்


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R