ஆய்வுச்சுருக்கம்
ஒரு சமூகமுன்னேற்றத்தின் வழிகாட்டியாக விளங்குவது பெண்நிலைப்பாடாகும். பொறுமையின் அடையாளமாகத் திகழும் பெண்கள். அமைதியான குணத்துடன், உணர்ச்சிகரமான சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் மற்றும் கடினமான சூழ்நிலையை நம்பிக்கையுடன் கையாளும் திறன் போன்ற தன்மைகளை இயல்பாகப் பெற்றிருப்பதால் பெண்மையைப் போற்றுகின்றோம். அதோடு இல்லறம் நடத்துவதற்கு ஏற்றவளாகப் பெண்ணை உருவாக்கி வருகின்றோம். பலபாத்திரங்களாகப் பரிமாணிக்கும் பெண்ணினத்தை மதிப்புடன் பேணுவது நம் தலையாய கடமையாகும்.
முன்னுரை
மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்பார் கவிமணி. இந்த உலகில் கருவைத் தாங்கி, கல்லறை வரை உறவோடு உறவைப் பின்னிப்பிணைத்து இயக்கும் ஆற்றல் பெண்மைக்கு உரியதாகும். பஞ்சபூதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தால்கூட, நற்சமூகத்தை வழிநடத்தும் சக்தி பெண் தான். அவளின் சாதனை அளப்பரியது. இத்தகு புனிதத்தன்மை வாய்ந்த பெண்ணின் நிலையை, “பறவையாடிப்பழகு” என்ற ஸ்ரீபதியின் சிறுகதை வழி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தாயே மகனை வெறுத்தல்
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”1
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்கத் தன்மகனை நற்பண்பாளன் எனப் பிறர்புகழப் பெருமை கொள்வது தாயின் உள்ளம் ஆகும். தவறு செய்யும் போது அதைக்கண்டு பெருமிதம் கொள்ளாமல் தட்டிக்கேட்கும் தாயின் பண்பு உன்னதமானது. அந்த வகையில் “லூசுக்கிழவியும் ரேசன் அரிசியும்” என்னும் சிறுகதையில் ஒருதாய் தன்னுடைய மகன் தவறான வழியில் செல்லும் போது அவனைத் தண்டிக்கின்றாள். இதனை,
“….எம்மவனுக்கு ரேசன் கடைகள்ல திருட்டு அரிசியைக் கொள்முதல் பண்றதுதான் வேலை. …..”இந்நேரம் என் வீட்டுக்காரர் மட்டும் உயிரோட இருந்து இந்த சங்கதி தெரிஞ்சதுன்னா பெத்த புள்ளைன்னுகூட பார்க்காம சுட்டுப்புடுவார். என்னாலையும் தாங்க முடியல. துணிஞ்சி விசத்தை ஒருநாளு கலந்துட்டேன்.” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, பக்.29-30)” என்ற வரிகள் காட்டுகின்றன.
மேற்கண்ட வரிகள் வாயிலாக மனசாட்சிக்குக் கட்டுப்படாமல் குற்றம்செய்தவனுக்கு மரணதண்டனை வழங்கும் தாயின் வீரச்செயல் நம்மை வியக்க வைக்கின்றது. தவறுசெய்தவன் தன்மகன் என்று தெரிந்து நீதிவழங்குவதில் பாகுபாடின்றி விவேகத்துடன் செயலாற்றும் பெண்மையின் துணிவு இங்கு புலனாகின்றது. இக்கருத்தானது கவிமணியின்,
“நீதிநெறி நில்லா வம்பருமே- நல்ல
நேர்வழி வந்திடச் செய்பவர்ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை உயர்
உத்தமர் ஆக்கமுயல்பவர் ஆர்?”2
என்ற பாடலடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. நீதியை நேர்பட நிலைநாட்டும் பொறுப்பு பெண்மைக்கே உரிய தனிச்சிறப்பு ஆகும் என்பதை இதன் வழி அறிய முடிகின்றது.
பிறர் தன்னை அவமானப்படுத்தினாலும், தனது கௌரவத்தை விட்டுக் கொடுக்காது வாழும் தாயின் வைராக்கிய உணர்வினை,
“ அன்னையில இருந்து இன்னைக்கி வரைக்கும் அவன் கட்டுன வீட்டுக்குள்ள போகல. அவன் சம்பாத்தியத்துல கைநனைக்கல. தனது வீரவாழ்க்கையை விவரித்தாள் கிழவி.” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, ப.30)”
என்ற வரிகள் வழி அறியலாம். இங்கு, கணவன் இறந்த பின்னும் தன்வாழ்வின் ஆதாரமாக விளங்கும் மகனை ஏற்றுக்கொள்ளாது, தனித்துத் தானாக உழைத்துத் தன்மானத்தோடு வாழ்கின்ற பெண்ணைப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
தவறுகள் குற்றமல்ல
இன்றைய குடும்பச்சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்லும்நிலை அதிகரித்து வருகின்றது. இளமை தொடங்கி முதுமை வரை தன்கையே தனக்குஉதவி என்ற அடிப்படையில் பெண்கள் அனைவரும் தானாகவே உழைத்து முன்னேற்றம் அடைகின்றனர். பெண் கஷ்டப்பட்டுப் படித்துஒரு வேலைக்குச் சென்றாலும் போகப்பொருளாகவே பார்க்கப்படுகின்றாள். இந்நிலை வேதனைக்குரிய ஒன்றாகும். “பலானமனிதர்கள்” என்னும் சிறுகதையில் தந்தையை இழந்த பெண், பொருளாதார நெருக்கடியால் தவறு செய்யும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள். ஊதியத்தொகை பெண்ணைவிட ஆணுக்கே அதிகமாக வழங்கப்படுவதும் ஒரு காரணமாக இருக்கின்றது. பெண் மனம் திருந்தி வாழமுற்பட்டாலும் ஆணாதிக்கச்சமூகம் அவளைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. இதனை,
“நானும் ஒருமாசமா ஏறாத கம்பெனி இல்லை. எல்லாவனும் நெத்தி நிறைய பட்டையை போட்டு மனசை சாக்கடை உள்ளகுட்டையாத் தான்வச்சிருக்கானுக. நான் திருந்தக் கூடாதுனு எதிர்பார்க்கிறானுக. திருந்தாம இருந்தா வச்சிக்குவானுகளாம். வேலைக்கு இல்ல. ஒருநாளைக்கு மட்டும்….” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, ப. 50)”
என்ற வரிகள் பதிவுசெய்கின்றன. தெய்வமாகப்போற்ற வேண்டிய பெண்களை விலைமாதர்களாகப் பார்ப்பது கீழான செயலாகும்.
வரதட்சணை
மணமகனின் இயலாமைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் சீதனமாக வரதட்சணை இருக்கின்றது. ஒரு சில திருமணங்களில் நகை, பணம், நிலம் போன்றவற்றை வரதட்சணையாகக் கேட்கும் முறை இன்றும் இருக்கத்தான் செய்கின்றது. வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இறுதியில் வெல்வது மரணம் மட்டுமே. கல்வியறிவு பெற்றிருந்தாலும் குடும்பச்சூழல் காரணமாக வரதட்சணை கொடுக்க முடியாமல் பெண்கள் வாழ்விழந்து ஆதரவற்றிருக்கும் நிலையினை,
“ஐந்தாயிரம் ரூபாய் வரதட்சிணை மற்றும் ரெண்டு பவுன் நகைக்காக கணவனால் கைவிடப்பட்டதை மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்..” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, ப.61)” என்ற தொடர்கள் புலப்படுத்துகின்றன.
பணம் இல்லை என்றால் பெண் பிணத்திற்குச் சமமானவள் என்பது போல, பெண்களின் வாழ்வு கேள்விக்குரியாகின்றது. தன்னுடைய குடும்பச் சூழல் காரணமாக பெண் வாடைகைத் தாயாக மாறும் நிலைமை இன்று நடைபெறுகின்றது. இதனை ஏற்க மறுக்கும் கணவன் அவளை விட்டு பிரிந்து செல்கிறான். இதனால் பெண்ணின் வாழ்க்கை ஒளி இழந்து உணர்ச்சியற்ற நடைபிணமாக இறுதியில் மாறுகின்ற நிலையினை,
“எவன் கூடவோ படுத்து புள்ளையப் பெத்துக்குடுத்து துட்டு வாங்கிட்டு வருவ….. உங்கூட நான் வாழணும்………என்னோட வாழ்க்கை தான் அவுஞ்சி போச்சி. அதை ஒண்ணும் செய்ய முடியாது. எங்கூடப் பொறந்ததுகளாவது நல்லா இருக்கட்டும். அதுக்காக என்னோட உயிரையே கொடுக்கிறதுன்னாலும் நான்கொடுப்பேன். இனி நான் வாழ்றதே அவங்களுக்காகத் தான் எனக்கென்ன குழந்தையா,? குட்டியா?” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, ப.62)”
என்ற வரிகள் பதிவுசெய்கின்றன. மேற்கண்ட தொடர்வழி வாடகைத்தாயாக மாறிய பெண்ணை இன்றைய சமூகம் வெறுக்கும் என்பது தெளிவாகின்றது.
குடி குடியைக் கெடுக்கும்
மது, மாது போன்ற தீயபழக்கங்கள் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் தீங்கு விளைவிப்பவை ஆகும். குடிகுடிப்பவரை மட்டுமல்லாது குடும்பத்திற்கே கேடு விளைக்கும். குடிப்பழக்கத்தால் குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆண்கள் நிம்மதியாகவே இருக்கின்றனர். ஆண்களின் சுயநலத்தை,
“ பாட்டில் பொங்குது
வீட்டில் பானை பொங்கல அவன்
தன்னை மறந்திட குடும்பம்
பசியை மறக்குது.”3
என்ற இணையதள கவிதை காட்டுகின்றது. குடும்ப வறுமை கண்டு உள்ளம் உருகித் துடிக்கும் தன்மை பெண்மைக்கே உண்டு என்பதை ஸ்ரீபதியும்,
“…..வாங்குற சம்பளத்தையெல்லாம் குடிச்சிடுறாரு. நாம ஒட்டலைன்னா புள்ளகுட்டிக பசியிலதான் கெடக்கும் என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு பெருமூச்சுவிட்டாள் இராமாயி.” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, பக்.74-75)”
என்ற வரிகளில் பதிவுசெய்கின்றார். ஆணின் குடிப்பழக்கத்தால் குழந்தைகள் பசியில் வாடுகின்றனர். இந்த அவல நிலை இக்கதையில் வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுகின்றது. தவறு செய்கின்ற ஆண்களைத் தட்டிக்கேட்க முடியாமல் பெண்கள் இன்றும் ஊமைகளாய் இருக்கின்ற நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது.
பணத்தைக் கண்டதும் அநியாயத்தை எதிர்க்க மறுக்கும். கணவனின் செயலால் தவறாக இருப்பினும் பெண்ணின் மனம் உள்ளுக்குள்ளே வேதனை அடையும் பெண்ணின் நிலையை,
“ ஏது இம்புட்டு பணம்? ஒரே தடபுலா இருக்கு என்று முறைத்தாள் இராமாயி. காலையில திங்கத்துல சொத்துன்னு சோத்துல மண்ணு விழுந்ததுல. அதான் நேரா குவாரிக்கு சண்டை போடப் போனேன். மொதலாளியே இருந்தாரு. டக்குன்னு முந்நூறு ரூவா அள்ளிக் கொடுத்தாரு மவராசன் என்று சொன்னபடி சிகரெட்டை விட்டெறிந்து தள்ளாடித் தள்ளாடி வேப்பமரத் திண்ணையில் குப்புறப்படுத்தான். இப்படிஜென்மங்க இருக்கிற வரைக்கும் புழுதிச்சோறு தான் திங்க முடியும் மனதிற்குள் நினைத்தாலும் இராமாயியால் வெளியில் சொல்ல முடியாது சொல்லிவிட்டு அடியார் வாங்குவது?” (ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, ப. 78)”
என்ற வரிகளில் அறியலாம். ஆண்களை எதிர்க்க முடியாமல் பெண்கள் அடிமைப்பட்டு ஊமைகளாய் வாழ்கின்ற நிலை இன்றும் தொடர்கதையாய் “.அச்சம் தவிர்“ என்ற பாரதியின் வரிகள் இருக்கின்றன. வெற்று வார்த்தையாக ஏட்டில் எழுதப்பட்டது போல இக்கதையில் காட்டப்பட்டுள்ள பெண்நிலை உள்ளது.
முடிவுரை
மகனைத் திருத்த தாயே விஷம் கொடுக்கின்ற செயலைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. கற்பரசியாக விளங்கும் பெண் வாடகைத்தாயாக மாறினால் அவள் வாழ்வு துன்பநிலையை அடையும் என்பதனை இக்கதையில் தெளிவாக அறியமுடிகின்றது. பெண்ணின் கைகளை நம்பி தான் குடும்பவாழ்வும் சமூகமும் இயங்கும் என்பதை ஸ்ரீபதியின் சிறுகதை வெளிக்கொணருகின்றது. இன்பமின்றி துன்பமே இறுதிப் பயணமாகும் பெண்நிலைப்பாட்டினைப் பிறிதோர் அணுகுமுறையில் ஆய்வுசெய்யும் பணியினைத் தொடரலாம்.
அடிக்குறிப்புகள்
1. மகேஸ்வரி, திருக்குறள் மூலமும், தெளிவுரையும், குறள் எண்., 69
2. அ.கா. பெருமாள், கவிமணியின் கவிதைகள், பாடல் அடிகள்-745
3. அ . வேளாங்கண்ணி, குடி குடியைக் கெடுக்கும் கவிதை (எழுத்து. காம்)
துணைநூற்பட்டியல்
1. ஸ்ரீபதி, பறவையாடிப்பழகு, கோவேந்தன் பதிப்பகம், 219, பத்திரகாளியம்மன் கோவில் சாலை, சிவகாசி-626 123 .
2. மகேஸ்வரி, திருக்குறள் மூலமும், தெளிவுரையும் – மகேஸ்வரி ஆப்செட் காலண்டர்ஸ், சிவகாசி- 626 123.
3. அ.கா. பெருமாள், கவிமணியின் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை – 600 017, நவம்பர்-2002.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.