என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.
அன்னராஜ் பாதிரியார் எனது மாமனாரிடமும், அத்தையிடமும்ஆணித்தரமாகக் கூறிவிட்டார்.
“சாரி ஜோசப்…. சாரி ரெஜினா…..மணப்பொண்ணே கலியாணத்தில இஸ்டமில்லைங்கிறப்ப என்னால எதுவுமே பண்ண முடியாது….. ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் உங்களுக்கு புரியவைக்கணும்னு இல்லை…. உங்க பொண்ணுகிட்ட பேசி, அவளை ஒத்துக்க வையுங்க….”
“அவள்கிட்ட பேசமுடியாது பாதர்…. சொன்னதையே சாதிப்பா….”
“பெத்தவங்க உங்களாலையே பேசமுடியல்லைங்கிறப்போ, நான் பேசிமட்டும் என்ன ஆகப்போவுது…. ஆனா ஒண்ணைய்யா ஜோசப்… உங்க பெரியமவ ஸ்டெல்லாவால நீங்க குனிஞ்ச தலையை, உங்க சின்னமவ திரேசா, அவ சொன்னமாதிரியே நிமித்திப்புட்டாயா…. ஆனா தாலிகட்டுறப்ப பாத்து ஏன் கலியாணம் வேண்டாங்கிறாண்ணு தெரியலியே....”
திரேசாவைச் சரிசெய்யும் பொறுப்பிலே நான்.
“ கலியாணப் பேச்சு எடுத்த நாளிலயிருந்து இப்போ கடைசி நிமிசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தே.…ஸ்டீபன் அப்பிடி என்னதான்டி பண்ணிப்புட்டாரு…..”
இந்த சம்மந்தத்தை பேசி ஒழுங்குபண்ணுறதுக்கு உங்க அண்ணன் என்னபாடெல்லாம் பட்டாருன்னு தெரியுமா….”
என்னை வேண்டாவெறுப்புடன் பார்ப்பதுபோல பார்த்தாள் திரேசா.
“அதுக்கு முன்னாடி நீங்க ஒரு சம்பவத்தைநெனைச்சுப் பாக்கணும் அண்ணி…. ஒரு வருசத்துக்கு முன்னாடி இதேசர்ச்சில வெச்சு, எல்லாரு முன்னாடியும் ஒரு சத்தியம் பண்ணினேனில்லியா….”
அவள் சொல்லும்போது, நடந்த சம்பவமெல்லாம் மனத்துள்ளே படமாக ஓடின.
எனது கணவர் ஆபிரகாமின் மூத்த தங்கை ஸ்டெல்லாவின் திருமண நிகழ்வு இரண்டு ஆண்டுக்குமுன் நடைபெற்றது.
முறைப்படி சம்மந்தம் பேசி, இருபாலாரின் விருப்பங்களையும் கேட்டு, இதே தேவாலயத்தில் ஓலை வாசிப்புகள் நடந்தேறி, நாளை காலையில் திருமணம் என்ற சூழலில், இரவோடு இரவாக அவள் எங்கள் கார் டிரைவர் தாமஸ்சுடன் ஓடிப்போய் பதிவுத்திருமணம் செய்துகொண்டாள்.
திருமணத்துக்கென வாழ்த்த வந்தவரெல்லாம் ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.மணமகன் வீட்டார் எங்கள் முகங்களில் காறி உமிழாத குறை ஒன்றுதான்.
வெளியே தலைகாட்ட முடியாதளவுக்குக் குறுகிப்போனோம்.
ஸ்டெல்லாவின் தாக்கம், மாமனாரைத்திரேசாவின்மீதுதிரும்ப வைத்தது.
அவள் ஏதாவது யோசனையில் இருந்தாலும்…..,
“யாரோட ஓடிப்போக பிளான் போடுறே…. உன் அக்காளும் இப்பிடித்தான் பூனைபோல இருந்து, நாய் வேலை பண்ணீட்டா….”
ஆரம்பத்தில் திரேசா பொறுத்துக்கொண்டாலும், வெளியே சென்றுவருவதற்கும், வேண்டப்பட்ட நட்புகள், உறவுகளுடன் பேசுவதற்கும்,
எல்லாவற்றையும் விட, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வழிபாட்டுக்கு தேவாலயத்திற்கு வருவதற்கும்கூட தந்தையார் கொடுத்த இறுக்கமான கட்டுப்பாட்டு நியதிகள், அவளுக்குச் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விடாமல் தடுத்தன.
அன்றயதினம் ஞாயிற்றுக்கிழமை. காலை வழிபாடு இதே தேவாலயத்தில்தான், பாதிரியார் அன்னராஜ் நடத்திக்கொண்டிருந்தார்.
வழிபாட்டுக் கூட்டத்துள், என்னருகே உட்காந்திருந்த திரேசாவின் முகத்திலே பரபரப்பு.
அவளைத் தொட்டு எனதுபக்கம் திருப்பி முகபாவனைச் சைகையால் கேட்டேன்.
“என்ன பிரச்சினை…..”
“ஒன்றுமில்லை….”
தலையை ஆட்டி பதில் சொன்னாள்.
பாதிரியார் திருப்பலியை முடிக்கும் தறுவாய்க்கு வந்துவிட்டார்.
வழிபாடு முடிவுபெற்று, கூட்டத்தார் கலைவதற்கான ஆரம்ப கட்டத்தில், சடாரெனத் துள்ளியெழுந்தாள் திரேசா.
அவளது குரல் பலமாக வெளிவந்தது.
“யாருமே போகவேண்டாம்…. எனக்காக அஞ்சுநிமிசம் உக்காரணும்னு ஆண்டவர் பேரால கேட்டுக்கிறேன்….”
பேசியபடியே பாதிரியாரின் பக்கம் சென்றுவிட்டாள் திரேசா. மக்களைப் பார்த்துக் கைகூப்பினாள்!
“எல்லாரும் என்னய மன்னிச்சிடுங்க.... உங்க எல்லாரையும் சாச்சியா வெச்சு, கர்த்தர்மேல ஆணையா சொல்லிக்கிறேன்.....
எனக்கு மூத்தவளாப் பொறந்த ஒருத்தியால எங்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானம்.... ஆனால் அதுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லையெங்கிறதும் உங்க அத்தனைபேரு மனச்சாட்சிக்கும் புரியும்னு நான் உறுதியா நம்புறேன்....
அத்தனை பேருக்குமே சொல்லிக்கிறேன்.
ஆண்டவரின் விருப்பம் எப்பிடியிருக்கோ அதுபடிதான் எல்லாமே நடக்கும்னு முழுசா நம்புறவங்களில நானும் ஒருத்தி....
எதிர்காலத்தில எனக்கிண்ணு சொல்லி ஒருத்தரைத் கலியாணம் பேசி, எங்க குடும்பத்தாருங்க கொண்டுவரக்கூடிய பட்சத்தில, கலியாணத்துக்கான அத்தனை ஏற்பாடுகளும் நடந்து, தாலி கட்டப்போற கடைசி நிமிசம் வரைக்கும் மாப்பிள்ளை முகத்தை நான் பாக்க மாட்டேன், பேச மாட்டேன்....
நேரிலை மட்டும் இல்லை.... போட்டோலையும், போனிலையும் கூடத்தான்....
வரக்கூடிய மாப்பிளை நல்லவரா, கெட்டவரா...
கறுப்பா,செகப்பா.... நெட்டையா,குட்டையா...
திடமானவரா, மொடமானவரா........
எது எப்பிடியிருந்தாலும், எங்கம்மா அப்பாவும், என் அண்ணனும் யாரைக் கைகாட்டுறாங்களோ அவருக்குத்தான் கழுத்தை நீட்டுவேன்.... இதில என்விருப்பம்னு எதுவுமே இல்லை....
எனக்கு அக்காளாப் பொறந்தவளால எங்க குடும்பம்மேல பட்ட களங்கத்தை, என்னோடை இந்தச் செயல்ப்பாட்டால துடைப்பேன்....
என்னய பெத்தவங்களையும், என் கூடப் பொறந்தவனையும் தலைநிமிர்ந்து நடக்க வைப்பேன்....
எனக்கிண்ணு ஒரு லட்சியமாயே இதை வெச்சுக்கிறேன்.... இந்த லட்சியமே என் வாழ்க்கை.... இந்த லட்சியத்திலயிருந்து கொஞ்சமாவது பெசகமாட்டேன்….பெசகிற மாதிரியான சூழ்நெலைக்கு எங்க ஆளுங்க என்னய ஆக்கினாங்கண்ணா அப்புறம் எனக்கு குடும்ப வாழ்க்கைன்னு ஒண்ணு தேவையே இல்லை....
இது எங்க அப்பா,அம்மா மேல சத்தியம்..... அண்ணன்மேல சத்தியம்..... ஆண்டவர்மேல சத்தியம்.....”
பேசிமுடித்தபோது, பாதிரியார் அன்னராஜ் அவளது தலையிலே தனது வலக்கரத்தை வைத்தார்.
“கோட் பிளெஸ்யூ மை சயில்ட்…..”
பெருவிரலால் நெற்றியில் சிலுவையிட்டார்!
“திருவள்ளுவர் இப்போ இருந்திருந்தால் அவர் உன்னைப்பாத்து சொல்லக்கூடிய வார்த்தை, இவள்தந்தை எந்நோற்றான் என்பதுதான்…. உன்னால உங்க குடும்பமே தலைநிமிரும்…. ஆண்டவர் ஆசீர்வாதம் எப்போதும் உனக்கிருக்கும்….”
--------------------------------------------------------------------------------------------
“எனக்கு மறந்துபோகல்லடி….அந்த சம்பவத்துக்கு அப்புறமாத்தான் மாமா உன்னைத் திட்டுறதை நிறுத்தினாரு…. பக்கத்து ஊரு பள்ளிக்கூடத்துக்கு டீச்சர் வேலைக்கு அனுப்பினாரு…..”
“அதுக்கு என்ன காரணம் அண்ணி…. நான் பண்ணின சத்தியத்தை முழுசா நம்பினதாலைதானே….”
“உன்னை முழுசா நம்பினதாலதான் உங்கண்ணன் உனக்காக அலைஞ்சு,உன்னோட கண்டிசன் எல்லாத்தையும் வெவரமா சொல்லி, இந்த சம்பந்தத்தை பேசிமுடிச்சாரு....
ஒரு மாசத்துக்கு முன்னாடி, மாப்பிள்ளை ஸ்டீபனோட பிரெண்டு பால்சன் எங்கிறவங்க ஸ்கூலுக்கு வந்து, மாப்பிள்ளை சார்பில உன்னய சந்திச்சு பேசினதாகவும், உங்க ஸ்கூல் கேண்டினில ஓங்கூட சேந்து, காப்பி சாப்பிட்டதாகவும், ரொம்ப கலகலப்பா பேசினதாகவும், ஏற்கனவே நீ சொல்லியிருக்கே.…” ஞாபகப்படுத்துவதுபோலக் கேட்டேன்.
“அது தப்பா அண்ணி....”
“அதில என்னடி தப்பு இருக்கு.... கட்டிக்கிட்டவனுக்கோ, இல்லே கட்டிக்கப்போறவனுக்கோ பிரெண்டாயிருந்தா அவன் அந்த நிமிசமே உனக்கு சகோதரன் ஆகினமாதிரித்தானேடி....”
“மாதிரியில்லை அண்ணி.... சகோதரனாகமுடிவே பண்ணீட்டேன்.… அவரு வந்து என்னய பாத்துப் பேசிட்டுப் போனதுக்கு அப்புறம் என்ன நடந்திச்சு தெரியுமா…..”
“என்னநடந்திச்சு…..”
“அவரு என்னய பாத்துப் பேசீட்டுப் போனதுக்கு அப்புறமா, என்னோட பெஸ்ட் பிரெண்ட் டீச்சர், வந்தது யாருன்னு விசாரிச்சா…. வந்தது என்னோட அண்ணன்னு சொன்னேன்….. உங்கண்ணன் சூப்பரா இருக்காரு….. கட்டிக்கிட்டா இப்பிடி ஒரு சுமார்ட்டான ஆளைத்தான் நான் கட்டிக்குவேன்னு சொன்னா…. மொதல்ல என்கலியாணம் முடியட்டும்…. அப்புறமா அதுக்கான ஸ்டெப்பை நானே எடுக்கிறேன்னு சொன்னேன்….”
“அப்புறம் என்ன…. சரியாத்தானே சொல்லியிருக்கே…. அதுக்கும் இப்போ இந்தக் கலியாணத்த நிறுத்தினதுக்கும் என்ன சம்பந்தம்....”
“சம்பந்தம் இருக்கு அண்ணி….. அண்ணன் எனக்கு வரன் பாக்கிறப்ப ஏங்கண்டிசன்எல்லாத்தையுமே தெளிவாய்ச் சொல்லித்தானே பாத்தாரு….”
“அதனாலதான் மாப்பிள்ளை இவரு வராம, இவரு பிரெண்டு பால்சனை………”
“போதும்…. நிறுத்துங்க…..” ஆவேசமாக கத்தினாள் திரேசா.
எல்லாருமே அதிர்ந்தனர். அனைவரின் பார்வையும் அவள்மீதே விழுந்தன.
திரேசாவின் ஆவேசம் தொடர்ந்தது.
“ பால்சன்ங்கிற பேரைச் சொல்லிக்கிட்டு வந்தது, பாத்தது, பேசினது எல்லாமே இந்த ஸ்டீபன்தான்…..”
பாதிரியார் அன்னராஜ் பதறியடித்துக்கொண்டு வந்தார்.
“திரேசா…. என்னம்மா சொல்றே…… பால்சன் வந்தாரு, பாத்தாரு, பேசினாருன்னு ஏங்கிட்டை சொன்னியேம்மா….”
“சொன்னேன் பாதர்…. பால்சன்னு நம்பினதால சொன்னேன்….. இப்ப ஸ்டீபன்னு தெரிஞ்சதால சொல்றேன் பாதர்….. என்னோடை உணர்வுகளை, லட்சியத்தை , சத்தியத்தை மதிக்கல்லை…..
ஆனா, ஆண்டவருக்கு முன்னால வெச்சு சத்தியம் பண்ணினதால…. அதுவும், தாலி கட்டி முடியிறவரைக்கும்னு சொல்ல வைக்காம, தாலி கட்டப்போற கடைசி நிமிசம் வரைக்கும்னு என்னய சொல்ல வெச்சு, முகத்தைப் பாக்கவெச்சு, என்னயக் காப்பாத்திட்டாரு ஆண்டவர்….”
“மை காட்.... என்ன கொடுமை இது....”
“போதும் பாதர்…. எல்லாமே போதும்…. மரணம் பிரிக்கும் வரைக்கும் என்னைத் தாங்கப்போற துணைன்னு யாரை நம்பினேனோ, அந்தத் துணையே என்னை ஏமாத்திட்டுது…. துரோகம் பண்ணிட்டுது….. மகா துரோகம்…. மன்னிக்க முடியாத துரோகம்…..”
எனக்கு மூச்சே முட்டியது. மேற்கொண்டு எந்தப்பக்கமும் நகர்ந்து பேச முடியாமல் செக் வைத்துவிட்டாள் திரேசா.
பாதிரியார் அன்னராஜின் பார்வை ஸ்டீபன் பக்கம் திரும்பியது.
“ஸ்டீபன்.... என்னைய்யா இது.... நீங்க படிச்சவங்கதானே.... உங்களைக் கட்டிக்கணும்னு இருந்த பொண்ணுகிட்ட இப்பிடி அண்டீசெண்டாவா நடந்துக்குவிய.....”
“ஐ ஆம் சாரி பாதர்..... நான் கட்டிக்கப்போற பொண்ணுதானே..... அதுதான் ஒருதடவை பேசிப்பாக்கலாம்னு பிரியப்பட்டேன்..... உண்மையைச் சொன்னா பேசமாட்டாங்கன்னுதான், என் பேரை மாத்திச் சொன்னேன்.... எனக்கு இது தப்பாவே தோணலை பாதர்....”
“டோண்ட் டோக் ஸ்டீபன்.... ஒரு பொண்ணும்,ஆணும் கட்டிக்கிட்டு வாழுறது அதிசயம் இல்லை.... ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக்கணும்..... ஒருத்தர் உணர்வை மத்தவர் மதிக்கணும்.... ஒரே மாமிசமாய் இருக்கணும்னு பைபிளே சொல்லுது.....
இந்தப் பொண்ணு, தன்னைப் பெத்தவங்க கைகாட்டிற மாப்பிள்ளைக்குத்தான் கழுத்தை நீட்டுவேன்னு எதுக்காகச் சொன்னாள் தெரியுமா.... மாண்டுபோன குடும்பப் பெருமையை மீண்டு எடுக்க மட்டுமில்லை.... தன்னைப் பெத்தவங்க தனக்கிண்ணு கட்டிவெக்கிற மாப்பிள்ளை நல்லவனாய் இருப்பான்னு பெத்தவங்க மேல நம்பிக்கை வெச்சதாலதான்....
இந்தப் பொண்ணுக்கு இவ அம்மா அப்பா மேலை இருக்கிற நம்பிக்கை, உங்கம்மா அப்பாமேலை உங்களுக்கு இல்லியா....
சரி....அதைத்தான் விடுங்க.... இந்தப் பொண்ணு ஒரு டீச்சராயிருக்கான்னு உங்களுக்குத் தெரியும்.... பாக்கணும்னு தோணினா சத்தங்காட்டாமெ வெளியில நிண்ணு பாத்திட்டு போகவேண்டியதுதானே....”
ஸ்டீபனால் எதுவுமே பேசமுடியவில்லை.
அழுது தோய்ந்திருந்த கண்களையும், முகத்தையும் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, திரேசாவின் அருகே வந்தாங்க அத்தை ரெஜினா.
“திரேசா.... நான் சொல்றதைக் கேளும்மா....எவ்வளவோ வேதனைக்கு அப்புறம், நம்ம வீட்டில ஒரு நல்ல சமாச்சாரம் நடக்கிண்ணு சந்தோசப்பட்டோம்.... அதைக் கெடுத்திடாதைம்மா.... இந்தக் காலத்தில யார்யாரோ என்னென்னமோவெல்லாம் செஞ்சு, கலியாணத்த முடிச்சுக்கிறாங்க.... அதெல்லாத்தையும் பாக்கிறப்போ, மாப்பிள்ளை பண்ணினதெல்லாம் பெரிய ஒரு தப்பே இல்லைம்மா.... அப்பிடித்தான் இருந்தாலும் அவரை நீ மன்னிச்சு ஏத்துக்கலாம் இல்லியா....”
ஒருசில நொடிப்பொழுதுகள் அமைதியாகக் கண்களை மூடிவிட்டுத் திறந்தாள் திரேசா.
இப்போது, அவளின் வார்த்தைகளில் ஆவேசம் இல்லை.
“அம்மா.... இம்புட்டு நேரமும் அண்ணியோடை மல்லுக்கட்டி நொந்திட்டேன்.... அடுத்து நீங்க ஆரம்பிக்காதீங்க..... முதல்ல மாப்பிள்ளைண்ணு சொல்றதை நிறுத்துங்க....”
“அப்பிடீன்னா என்னடி அர்த்தம்....”
“எல்லாமே முடிஞ்சுபோச்சுன்னு அர்த்தம்.... கட்டிக்கப்போறவருக்கு நண்பர்னு எப்ப சொன்னாரோ, அந்த நிமிசமே இவரை என் மனசில சகோதரனாகவே கிரியேட்டிவ் பண்ணிட்டேன்....அந்த நெனைப்புக்கு மாறாக, வேறை எந்த வியூவில வெச்சும் அவரை என்னால பாக்க முடியாதம்மா....”
என் கணவர் ஆபிரகாமும் பேசிப் பார்த்தார்.
“உன்னோட முடிவுதான் என்னண்ணு சொல்லுறே....”
“இனி நான் என்ன முடிவுக்கு வரப்போறேன்.... முடிவுதான் என்னய தேடி வந்திரிச்சே.....”
“புரியல்லை........”
“எனக்கிண்ணு வர இருந்த வாழ்க்கை, “சகோதரர்”ங்கிற உறவால, பொய்யான பாதையில திரும்பினதால, அதே சகோதரத்துவ உறவையே இனி என் வாழ்க்கைக்கு மெய்யான பாதையாய் ஆக்கிக்கப் போறேன்.... அதாவது, மக்களுக்கு சேவை செய்யிற ஒரு “சகோதரி”யா மாறப்போறேன்.... ஒரு கன்னியாஸ்திரியாகி ஆண்டவருக்கு என்னை அர்ப்பணம் செய்யப்போறேன்....”
அன்னராஜ் பாதிரியார் அருகே வந்தார்.
“திரேசா.... அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிடாதை.... கோபப்பட்டவங்க, ஏமாற்றப் பட்டவங்க.., அதனால வாழ்க்கையை வெறுத்தவங்க.... எல்லாருக்கும் சந்நியாசிமடம் ஒண்ணும் புகலிடம் இல்லை....
மனம் ஒரு குரங்கு ன்னு சொல்லுவாங்க.... கோபத்தில வாழ்க்கையை வெறுத்து, தற்கொலைக்கு முயற்சிபண்ணி வெசத்தை சாப்பிடுறவங்களும், கோபம் தணிஞ்சு நிதானத்துக்கு வந்ததுக்கு அப்புறமா வாழுறத்துக்கு ஆசைப்பட்டு வைத்தியம் பாத்தாலும், பலனில்லாமல் செத்துப்போற மாதிரியைவிட மோசமானது சந்நியாசம்.... பாத்துக்க....”
பாதிரியார் சொல்லும்போதுதான் சந்நியாசத்தின் ஆழம் புரிந்தது. மனத்தில் சிறு பயம் தெரிய அவளிடம் கெஞ்சாத குறையாக நான்.
“திரேசா....சொல்றதைக் கேளுடி..... நீ கலியாணம் பண்ணிக்காட்டியும் பரவாயில்லை.... வீட்டுக்குப் பிள்ளையாய் இருந்திடுடி.....”
பாதிரியாரும் நிறுத்தாமல் தொடர்ந்தார்.
“அவசரப்பட்ட முடிவுகளால சந்நியாசம் வாங்கிக்கிற சிலபேரு, காலப்போக்கில எண்ணங்கள் மாறுறப்போ......வெளியையும் வர முடியாமை.... உள்ளையும் ஒருமனசாய் இருக்க முடியாமை.... படுகிற அவஸ்தையும், ரகசியமா அப்பப்போ தப்புகளை பண்ணி தங்களுக்கும், தாங்கள் சாந்திருக்கிற மதத்துக்கும் கெட்டபேரை வாங்கிக் குடுக்கிற துறவிகளைப்பத்தின சம்பவங்கள் அப்பப்போ ஊடகங்க மூலமா அறிஞ்சுகிட்டுத்தானே இருக்கோம்....”
“அப்பிடி ஒரு கெட்டபேரை நான் எடுக்க மாட்டேன்.... நான் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவுக்கு வரல்லை பாதர்....பாமர வாழ்க்கை சலிச்சுப் போயிதான் வர்ரேன்....
எத்தனையோ கனவுகள்,லட்சியங்களோட வர்ர பொண்ணுக்கு அவள் புகுந்த வீட்டில, அவள் உணர்வுகளை மதிச்சும், லட்சியத்துக்கு ஒத்துழைப்புக் குடுத்தும், தட்டிக்குடுக்கிறவங்க எத்தினைபேரு இருக்காங்க சொல்லுங்க பாக்கலாம்....
இப்பிடியானவங்க கூட இருந்து, மனசில எந்தவொரு லட்சியமும் இல்லாம பொம்மையாய் ஒருத்தி வாழுற வாழ்க்கையை விட, அவ கடைசிவரைக்கும் தன்னைப் பெத்தவங்களுக்குப் பிள்ளையாவே இருந்திட்டுப் போகலாம்னு ஒருநேரத்தில நானும்நெனைச்சிருக்கேன்.... ஆனா, ஒலக நன்மைக்காகவும், சமாதானத்துக்காகவும் ஆத்மீக வழியில வாழக்கூடிய வாழ்க்கை எவ்வளவோ உன்னதமானதுன்னு இப்போ உணர்ந்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.....
ஏன் யாருமே ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க.... பொண்டாட்டி புருசனுக்குள்ள, பெத்தவங்க புள்ளைங்களுக்குள்ள நெறைய எடத்தில ஏமாத்துநடக்கிறதைப் பாக்கிறப்போ.... போதும் போதும்னு வாழ்க்கை சலிச்சே போச்சு..... ஆனா, நம்பினவங்களை ஏமாத்தாதவர்னு ஒருத்தரு உண்டுண்ணா அது ஆண்டவரு மட்டுந்தான்.... இது ஆண்டவரோட விருப்பம் பாதர்.....”
அவளின் முகத்திலே தெரிந்த பிரகாசம், உள்ளத்தின் தூய்மையை எடுத்துக் காட்டியது.
“உள்ளத்தில் ஒளியுண்டாயின் : வாக்கினில் ஒளியுண்டாம்....”
பள்ளிக்கூடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. திரேசாவிடம் நெருங்க முடியவில்லை. அவள் எவ்வளவோ உயரத்துக்கு வளர்ந்துவிட்டாள்.
பாதிரியார் அன்னராஜ் எனது அத்தையையும், மாமாவையும் அருகே அழைத்தார்.
“நான் சொல்லுறத கவனமாக் கேட்டுக்குங்க.... இதுக்கு மேல என்னோட அட்வைசுக்கு சான்சே இல்லை.... உங்க பொண்ணாவே இஸ்டப்பட்டு வர்ரப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியாது.... நீங்க நெனைச்ச வாழ்க்கையை அவளால குடுக்க முடியல்லை.... அவள் விரும்புற இந்த வாழ்க்கைக்கு உங்க ஆசீர்வாதத்தை மனசாரக் குடுக்கணும்ங்கிறதுதான் என் வேண்டுகோள்.... கட்டளையில்லை....”
அவர்கள் இருவராலும் பேசவே முடியவில்லை. அத்தை திரேசாவை தனது நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு கறியழுதாங்க.
தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்ட திரேசா, அவர்களின் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள்.
“அம்மா.... ஏற்கனவே நெனைச்சோ, திட்டம் போட்டோ நான் இந்த இடத்துக்கு வரல்லைம்மா..... இது ஆண்டவரோடை எதிர்பாப்பு..... கலியாணப் பொண்ணா என்னய ஆக்கி எனக்காக நெறைய சீர் செய்ய நெனைச்சிருந்தீங்க.... இப்ப எனக்காக ஒரேயொரு சீர் செய்யுங்க.... அதுவும் நீங்க பிரியப்பட்டா மட்டுந்தான்....”
அத்தையின் பதிலுக்கு முன் மாமா முந்திக்கொண்டு கேட்டார்.
“சொல்லம்மா.... எதுவானாலும் செய்யிறோம்.....”
“என் அக்காளை மன்னிச்சு, ஏத்துக்கிட்டு, ஆசீர்வதிக்கணும்....”
அவரிடமிருந்து பதில் இல்லை.
“சரி....” என்னும் பாவனையில் தலையை ஆட்டிவிட்டு, வெளியே நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்தார் அத்தை.
அடுத்து, திரேசாவின் பார்வை என்மீது விழுந்தது. முகத்திலே இலேசான புன்னகையை வருவித்துக்கொண்டு என்னருகே வந்தவள் என்னை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். தனியே அழைத்துச் சென்றாள்.
“மேன்மை தங்கிய அண்ணியாரே.... இதுவரை நேரத்துக்குள் என்னிடம் கேட்கவேண்டும் என்று ஓரிரண்டு கேள்விகள் தங்கள் உள்ளத்திலே உதித்திருக்க வேண்டுமே.... . கேளுங்கள்.....”
சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
என் வயதுக்கு இளையவளானாலும், புரிந்துணர்வில் திறமையானவள்.
“திரேசா.... உங்கக்கா செஞ்சிட்டுப்போனது துரோகம்.... ஆனா, உங்கம்மா, அப்பா அவளை மன்னிக்கணும்.....”
“அண்ணி..... நீங்க கேக்கப்போறது, அதுபோல ஸ்டீபன் பண்ணினதும் துரோகம்.... அவரையும் மன்னிச்சு நீ ஏத்துக்கிடிருக்கலாமே.... அதுதானே மொதல் கேள்வி....”
ஆணியடித்ததுபோல பேசிவிட்டாள். அமைதியாய் நின்றேன் நான்.
“அண்ணி.... ஸ்டெல்லாவுக்கு தேவை ஒரு வாழ்க்கை.... அதை செலெக்ட் பண்ணிற உரிமை அவளுக்கு இருக்கு.... ஆனா அதை அவள் அணுகின மொறை தப்பா இருக்கலாம்.... சரியான மொறையில போகணும்னு நெனைச்சு வீட்டில எடுத்துச் சொல்லியிருந்தா என்னாகும்.... எல்லாருமா சேந்து தாமஸ்சை அடிச்சு வெரட்டிட்டு, இவங்க இஷ்டத்துக்கு பாத்த மாப்பிள்ளையை கட்டி வெச்சிருப்பாங்க....பிடிக்காத மாப்பிள்ளையை கட்டிக்கிட்டதால, அவ செத்திருப்பா.... இப்ப செய்தமாதிரி அப்பவும் ஓடிப்போயிருப்பா..... ரெண்டுமே பண்ணல்லைன்னா, தாமஸ்சை மனசில வெச்சுக்கிட்டு, வெளியுலகத்துக்கு இந்த மாப்பிள்ளைகூட வாழ்ந்து, ஆண்டவருக்கு விரோதமான விபச்சாரத்தைப் பண்ணியிருப்பா....
அடுத்து, அவ செலெக்ட் பண்ணின வாழ்க்கைக்காக இழந்தது பெத்தவங்க உறவும், கூடப் பொறந்தவங்க உறவும்....
இந்தவலி, கடைசிவரைக்கும் அவ நெஞ்சில ஆறாத காயமாக இருக்கும்.... அந்தக் காயம் நாளாக நாளாகப் புரையோடிக் குமுறி , எண்ணைக்கு ஆச்சும் எரிமலையா வெடிக்கும்....”
“சரி.... இதே மன்னிப்பு ஸ்டீபனுக்கு போகாத காரணம்....”
“சொல்றேன்........ எனக்கு கலியாணப்பேச்சு எடுக்கிறப்பவே என்னோட கண்டிசன்களை அண்ணா சொல்லிட்டாங்க.... அப்போ மாப்பிள்ளை என்னசெய்திருக்கணும்.…என்னயகட்டிக்கப்போறவ ஆசை, லட்சியங்களுக்கு குறுக்க நிக்கக்கூடாதுன்னு முடிவுபண்ணியிருக்கணும்…. இல்லே, இந்தக் கண்டிசன் உள்ள பொண்ணு எனக்கு வேண்டாம்ணு ஒதுங்கியிருக்கணும்.... வேறை பொண்ணுங்க கிடைக்காமலா போயிடும்....
ஆனா, இவங்க பண்ணினது என்ன.... ஆள் மாறாட்டம்....பச்சைத் துரோகம்.... மன்னிக்கக் கூடியதா இது....
ஸ்டெல்லாவுக்கு தாமசு மனசில நெறைச்ச வாழ்க்கை.... ஸ்டீபனுக்கு நான் அப்பிடி இல்லை.... நான் இல்லேன்னா அடுத்த பொண்ணைப் பாப்பாங்க....”
“உன்னய ஏமாத்தினதுக்கு அவரை தண்டிக்கணும்னு தோணலியா.....”
“கலியாண வேளையில, இந்த மாப்பிள்ளை எனக்கு வேணாம்னு ஒரு பொண்ணு சொல்லிட்டாலே, அது அவனுக்கு கடைசிவரைக்கும் மனசில உறுத்திக்கிட்டிருக்கிற தண்டணைதானே அண்ணி....
அது மட்டுமில்லாம, ஸ்டீபனை என் அண்ணனாகவே நெனைச்சிட்டதால அவரைக் கோபிக்க முடியல்ல.... அதுமட்டுமில்லாமே என்கூட வேலைபாக்கிற பிரெண்ட் ஒருத்திக்கு ஸ்டீபனை புடிச்சிருக்கிண்ணு சொன்னேனில்லியா.... அவள்மட்டும் இண்ணிக்கு வந்திருந்தா சமாச்சாரத்தை வேறை மாதிரி டீல் பண்ணியிருப்பேன்....
பறவாயில்லை.... அவள் என்னை மாதிரி பார்வேட் டைப் கிடையாது.... இவரு வளைக்கிறதுக்கெல்லாம் வளைஞ்சு குடுத்து,கடைசில வளைச்சுப் போட்டுவா.... இதை நான் நேரடியா டீல் பண்ண முடியாது.... பாத்துக்கலாம்....
வாங்க அண்ணி.... ஹெபிக்கு போய் பிரேயர் பண்ணிட்டு வீட்டுக்குக் கிளம்புவோம்....”
இருவரும் ஹெபியை நோக்கி நடந்தோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.