எழுத்தாளர் தேவகாந்தனின் இதழியற் பங்களிப்பு மற்றும் 'இலக்கு' சிற்றிதழ் பற்றிய சுருக்கமானதொரு குறிப்பு! - வ.ந.கிரிதரன் -
- ஜீவநதி சஞ்சிகையின் சிற்றிதழ்கள் சிறப்பிதழ் 175இல் வெளியான கட்டுரை. -
எழுத்தாளர் தேவகாந்தனைச் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக நாமனைவரும் அறிவோம். ஆனால் அவரது இதழியற் பங்களிப்பு பற்றி அதிகமாக இலக்கியச்சூழலில் கதைப்பதில்லை. ஏன்? தெரியவில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் அவரது இதழியற் பங்களிப்பு முக்கியமானது. கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது ஆண்டிதழான கூர் முக்கியமானது.அதேபோல் அவர் இந்தியாவில் இருந்தபோது தொண்ணூறுகளில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இலக்கு' சிற்றிதழும் முக்கியமானது. அதிக எண்ணிக்கையில் வெளிவந்திருக்காவிட்டாலும் , வெளிவந்த அனைத்து இதழ்களும் காத்திரமான இலக்கியச்சிறப்பு மிக்கவை. புதுமைப்பித்தன் மலர், பாரதியார் மலர், நா.பார்த்தசாரதி மலர், டானியல் மலர், பேராசிரியர் க.கைலாசபதி மலர்கள், ஆண்டு மலர், தி.ஜானகிராமன் மலர் என தரமான , இலக்கியச்சூழலில் நிலைத்து நிற்கக்கூடிய சிற்றிதழ் மலர்கள் அவை.