முன்னுரை
கல்வி சமுதாய மாற்றத்திற்கு ஒரு சிறந்த கருவியாகும். சமூக முன்னேற்றத்திற்கு மட்டுமின்றித் தனிமனிதன் சிறப்புக்கும் உயர்வுக்கும் கல்வி வகை செய்கிறது. கல்வியின் மூலமே மக்களின் வாழ்வும் சமுதாயமும் சிறப்புப்பெறும். அது சமூகச் செயல்முறையில் பிரிக்க முடியாத ஒரு கூறு. சமூகத்தில் வாழும் மனிதனை உருவாக்குவதில் கல்வி தலையாய பங்கு வகிக்கின்றது. மனிதன் இயற்கையாகவே சமூக இயல்பினராயிருப்பதாலும் சமூகத்தின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பினராயிருப்பதாலும் மனிதனுக்கு அளிக்கப்படுகின்ற கல்வி எக்காலமும் சமூக இயல்புடையதாக இருக்க முடியும் எனக் கொள்ள இடமுண்டு.
கல்வி என்பதற்கு "அறிவு கற்றல் நூல்" என்ற பொருள்களைத் தருகின்றது தமிழ்மொழியகராதி. அறிவு, கற்றல், நூல் வித்தை என்ற பொருள்களும் தரப்படுகின்றன. கல்வி ஒரு தனிமனிதனின் ஒழுக்கத்தை வடிவமைக்க வேண்டும்; மனதை வலிமைப்படுத்த வேண்டும்; அறிவை விரிவாக்க வேண்டும்; தன் காலிலேயே தான் நிற்கக் கூடியவனான வலிமையைத் தரவேண்டும்; இவை அனைத்தும் கல்வியால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கவேண்டும் என விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர்.
சமூக அமைப்பில் கல்வியானது பொருளாதார அமைப்பு என்னும் அடித்தளத்தின் மேல் நிறுவப்படும் மேல்கட்டமைப்பின் ஒரு கூறு என்னும் கருத்தை மார்க்சும் ஏங்கல்சும் வெளிப்படுத்தினர்.
மனிதனது திறனை வளர்ச்சி பெறச் செய்யவும், உள்ளுணர்வை வெளிப்படுத்தவும், பண்புகளை வெளிக்கொணரவும் அறிவினை உருவாக்கவும் கல்வி துணைபுரிகின்றது.
ஓவியக்கலை
வெண் சுதையினால் கலைஞர்கள் கண்ணைக் கவரும் ஓவியங்களைப் புனைந்தனரென்பதை அறியலாம். வீடுகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்பதை,
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதோறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் (மணி, 3:127-131)
என்பதன் மூலம் அறியமுடிகின்றது.
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்தரச் செய்கைப் படாம்போர்த் ததுவே (மணி, 3:167-168)
என்னும் இவ்வடிகளில் காணலாம். இதில் கைவினைச் சித்திரம் என்பது ஓவியத்தை குறிப்பதாகப் புலப்படுகின்றது. பளிங்கினாலே அமைந்த பளிக்கறை மண்டபம் ஒன்று உவவனத்தில் அமைந்திருந்தது. அதில் “சித்திரக் கைவினை திசைதோறும் செறிந்தன” (மணி, 5:11) என்பதை அறியலாம். சம்பாதி தெய்வத்தின் கோயிலில் கைத்தொழில் சிறப்புடன் விளங்கிய சித்திரப்பாவை ஒன்று இருந்தது தெரியவருகின்றது. (மணி, 196) ஓவியக்கலையினை விரித்துக் கூறும் நூலினை ஓவியச் செந்நூல் என மணிமேகலை குறிப்பிடூகின்றது. (மணி, 2:31)
கட்டடக்கலை
அற்புதமான வேலைப்பாடமைந்த அழகிய கட்டடங்களை மயன் இழைத்தது எனக் கூறும் மரபு மணிமேகலையில் இருந்ததெனலாம். மயன் என்பவன் தேவத்தச்சன். புகாரிலுள்ள உவவனத்தில் பளிக்கறை மண்டபம் ஒன்றிருந்தது. இது உள்ளெழும் ஓசையை வெளியில் விடாததாக அமைந்திருந்தது. அம்மண்டபத்தின் கதவைத் தாழ்கோத்துவிட்டால் கதவு அமைந்த பகுதியை வெளியே இருப்பவர் அறியமுடியாது. உள்ளிருப்பவரின் உருவத்தை மட்டும் வெளியே காட்டும் இயல்புடையது. இத்தகு சிறப்புமிகு கட்டடத்தை,
மயன் பண் டிழைத்த மரபின ததுதான் (மணி, 3:79)
என சுதமதி கூறுகிறாள்.
சக்கரவாளக் கோட்டம் என்ற அமைப்பைத் தேவத்தச்சன் அமைத்தான் என்று தெரியவருகிறது. “பெரும்புறக் கடலினால் சூழப்பட்டுள்ள சக்கரவாளம் என்னும் மலைக்குட்பட்ட இடத்தின்கண் நடுவிடத்தே நிலைபெற்றது.
மேருமலை பக்கத்தே நின்றன எழுவகைப் பட்ட குலகிரிகள்; நான்கு வகைப்பட்ட மிகப்பெரிதான தீவுகளும், இரண்டாயிரம் எனப்படும் இடைப்பட்ட சிறுதீவுகளும், மற்றும் பிறதீவுகளும் அவ்விடத்தே அவ்வற்றிற்கு உரிய இடவகையில் அமைந்திருந்ததனை காண்போர்க்கு அறிவுவர அமைத்துக்காட்டி, ஆங்கே வாழும் உயிர்களையும், அவை வசிக்கும் இடங்களையும் சுதையாற் பாவை வடிவுகளாகப் புகாரில் செய்து அமைத்ததே சக்கரவாளக் கோட்டமாகும். (மணி, 6:192:201)
அக்கோட்டத்தின் விமானம் ஓவியம் போல வானளவு உயர்ந்ததாக விளங்கியது. விண்ணவர் நுழைந்து செல்லும் செழுங்கொடிகள் விளங்குவதாக ஒவியம் செய்யப்பட்டவாயிலும், நெற்பயிரும் கரும்பும் பொய்கையும் பொழிலும் நன்கனமெழுதிய நலஞ்சிறந்த வாயிலும், மிக்க வெண்மையுடைய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில் வடிவங்கள் எழுதப்பெறாத வெளியான இடத்தினுடைய வாயிலும், நீண்ட தோற்றத்தையுடைய பூதவடிவம் நிற்கின்ற வாயிலும் ஆகிய அதன் நான்கு வாயில்களும் சிறப்பான கட்டிடக் கலையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. (மணி, 6:39-49)
தவத்தில் சிறந்தோர்கள், அசர்கள், கணவனுடன் ஒருங்கே உயிர்நீத்த கற்புடைய மகளிர் ஆகிய இறந்தோர்களின் உடலைப் புதைத்தவிடத்தே அவர்கட்கு செங்கல்லால் கட்டப்பட்ட கோட்டங்கள் இருந்தனவென்பதை அறியமுடிகின்றது.
நாடக மடந்தையர் நலங்கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து (மணி, 4:51-52)
என்ற அடிகளின் வழி நாடகக் கணிகையரின் அழகுபொருந்திய வீதியில் ஆடகப் பொன்னால் செய்யப்பட்ட மாளிகைகள் அமைந்திருந்தன எனத் தெரிய வருகின்றது. ஆடகம் நால்வகைப் பொன்னுள் ஒன்றாகும். சாத ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என நான்குவகைப் பொன்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. (சிலம்பு, 14:201-202)
சுடுசெங்கற்களால் கட்டப்பெற்று உயரமுடன் திகழுகின்ற நெடிதான நிலையினையுடைய வீடுகள் இருந்தன. அரண்மனையின் நந்தவனத்தில் மண்டபம் ஒன்றிருந்தது. அம்மண்டபத்தைத் தமிழ்நாட்டுத் தொழில் வினைஞர்களோடு, மகதநாட்டுத் தொழில் வல்லுநரும், மராட்டியக் கம்மியரும் (பொன்வேலை செய்பவா்) அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும் சேர்ந்து செய்தமைத்தனர். பவளத்தால் ஆகிய திரண்ட கால்களையும், பல்வேறு மணிகளால் இழைத்த போதிகளையும் கொண்டது. போதிகை என்பது தூண் மேல் வைக்கும் சட்டமாகும். கோணச் சந்தியை உடையது. பொன்கூரை வேயப் பெற்றது. (மணி, 19:107-115) இம்மண்டபமும் கட்டடக்கலைக்குச் சான்றாக அமைந்ததெனலாம்.
சோதிடம்
சோதிடக்கலை காலக்கணிதம் என மணிமேகலையில் குறிக்கப்படுகின்றது.
கற்பங் கை சந் தங்கால் எண்கண் (மணி, 27:100)
இவ்வடியில் எண் என்று சொல்லப்பட்டதைச் சோதிடம் என்று ஒளவை துரைச்சாமிபிள்ளை கூறுகிறார்.
கருவோடு வரும் எனக் கணியெடுத்து உரைத்தனன் (மணி, 24:59)
இந்த அடியில் கணி என்பது சோதிடனைக் குறித்தது. இதன்வழி சோதிட வல்லார் இருந்தனரென்றும் அவர் கூறியது நடந்தது என்றும் அறிய முடிகின்றது. சங்கப்புலவர் பூங்குன்றனாரைக் கணியன் பூங்குன்றனார் என அழைப்பது இத்துடன் ஒப்புவைத்து நோக்கத்தக்கது. கலைகளையெல்லாம் கற்றுக் கொடுத்தவர்கள் ஆசிரியரென்று அழைக்கப்பட்டனர். (மணி, 7:42) நான்மறைகளை ஓதுதலும் ஓதுவித்தலும் அந்தணர்களின் தொழிலாயிருந்தன.
வார ணாசியோர் மறையோம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் (மணி, 13:3-4)
ஆட்டிநின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை (மணி, 13:46)
என்ற அடிகளின் வாயிலாக மறைஓதுவித்தவ்களை உவாத்தி என்றழைத்தனர் எனத் தெரிகின்றது.
மெய்ப்பொருள் கல்வி
மணிமேகலையில் கூறப்படுகின்ற பெளத்தசமயக் கொள்கைகளைக் கற்றுத் தரும் கல்வியை போதிசத்துவர்களும் சாரணர்களும் தந்தனர். மாதவி, சுதமதி, மணிமேகலை ஆகியோர் மெய்ப்பொருள் கல்வியை அறவணஅடிகளிடம் கற்றனர் எனத் தெரியவருகின்றது. மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தைப் புகட்டும் துறையினைத் தத்துவம், தரிசனம் எனக் கூறினர்.
ஐவகைச் சமயமும் அறிந்தனள்-ஆங்குஎன்”(மணி, 27:289)
இதுசாங் கியமதம் (மணி, 27:202)
வைதிக மார்க்கத்து அளவை வாதியை (மணி, 27:3)
மேற்கண்ட அடிகளின் வழி சமயம், மதம், மார்க்கம் என்ற மூன்று சொற்களும் ஒரே பொருளில் கையாளப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. பெளத்தம் தவிர்ந்த ஏனைய சமயக் கொள்கை பற்றிய கல்வி அல்லது தத்துவங்கள் ஆண் மக்களுக்கு மட்டுமே போதிக்கப்பட்டன எனலாம். பிறசமயக் கொள்கைகளை அறிவதற்கு மணிமேகலை ஆண் உருவம் தாங்கி தவக்கோலத்துடன் சென்றாள்.
இளையோள் வளையோள் என்றுனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்க (மணி, 26:68-69)
எனக் கண்ணகி கூறுவதிலிருந்து பெண்களுக்கு மெய்ப்பொருள் கொள்கையைப் போதிக்கமாட்டார்கள் என்பதை அறியமுடிகின்றது. பெளத்த சமயக் கல்வியைப் பெறுதற்கு ஆண்பெண் என்ற வரையறையில்லை. ஐவகைச் சமயங்களின்
ஆட்டிநின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை (மணி, 13:46)
என்ற அடிகளின் வாயிலாக மறை ஓதுவித்தல்களை உவாத்தி என்றழைத்தனர் எனத் தெரிகின்றது.
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் (மணி, 11:77)
என்பதில் புணை என்பது படகைக் குறிக்கிறது. யானையை ஒழுங்கான பாதையில் செலுத்துபவன் பாகன். அதுபோல மனிதனை நல்வழியில் இட்டுச் செல்லுதலின் கல்வி பாகர் என உருவகம் செய்யப்பட்டுள்ளது என்பதனை,
கல்விப் பாகரிற் காப்புவலை யோட்கு (மணி, 18:165)
என்ற அடி விளக்குகின்றது. கல்விதான் பண்பாட்டினை வழங்கும் என்ற கருத்தினைச் சாத்தனார் ஒரு எடுத்துக்காட்டின் மூலம் உணாத்தியுள்ளார்.
கல்லாத இளைஞன் சுயசிந்தனையின்றிப் பிறர்தரும் பெரும்பொருள் பெற்றுத் தகாத செயலில் ஈடுபட முயன்றான். அச்செயலில் தோல்வியுற்றதும் தன்னை ஏவியவரை, இழித்துப் பேசி அகன்றதைக் காணமுடிகின்றது. (மணி, 23:43-57)
காமம், கொலை, கள், பொய், களவு என்ற தீவினைகளை ஒருவர் களைவதற்குப் பயன்படும் மெய்ப்பொருள் கல்வியே சிறந்தது. வெகுளி தோன்றாமல் மனத்தை அடக்குதல், வறியவர்க்கு வழங்கித் துன்பம் துடைத்தல், பசிபோக்குதல், எல்லா உயிர்க்கும் அன்பு செலுத்துதல் என்பனவற்றைப் புகட்டும் மெய்ப்பொருட் கல்வியே விழுமியது, மேம்பட்டது என்பதைச் சாத்தனார் சுட்டுகின்றார் எனக் கொள்ளமுடிகின்றது. (மணி, 23:130-136)
முடிவுரை
சமூகவியலாளர்கள் சமூக உறுப்பினனாக வாழ கல்வி இன்றியமையாதது, கல்வி ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குச் சமூக நடத்தைகளின் அறிவைக் கடத்துகின்ற செயற்பாங்கு என்கின்றனர். குழந்தைகள் தம் மூத்தோர் போலச் செய்வதும் ஒரு வகைக் கல்விமுறை ஆகும். சங்கஇலக்கியங்களில் கல்விக்கு முதன்மை கொடுக்கப்பட்டூள்ளது. மேலோர் கீழோர் என்ற வேறுபாடின்றி கல்வி கற்றோருக்கு அரசனும் முதன்மை கொடுத்தான் என்றறிய முடிகின்றது. கலைகளைக் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியரேன்றும் மறைகளைக் கற்றுத் தந்தவர்கள் உவாத்தி என்றும் பெளத்தமதக் கருத்துகளைப் பிறருக்குக் கற்பிப்பவர்கள் போதி சத்துவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். உலகியல் கல்வியும் மெய்ப்பொருள் கல்வியும் மக்களுக்கு அளிக்கப்பட்டன எனத் தெரிகிறது. சமூகம் முழுமைக்கும் பொதுவான கல்விமுறை இல்லையெனலாம்.
துணை நின்ற நூல்
ந.மு. வேங்கடசாமி நாட்டார் & ஒளை சு. துரைசாமி, பிள்ளைமணிமேகலை (மூலமும் உரையும்),கௌரா பதிப்பகம், சென்னை, 2017.
சந்தானம்.எஸ். கல்விக் கோட்பாடுகளும் தத்துவங்களும், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 1993.
செல்லன் கோவிந்தன், மணிமேகலையின் காலமும் கருத்தும், சென்னை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.