- பேராதனைப் பல்கலைக்கழக, அரசறிவியல் துறையின் நிறைவு வருட மாணவி அமரர் N. நித்தியவதனி அவர்கள், நேற்று முன்தினம் சிறுநீரகங்கள் செயலிழப்பால், கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார். அவர் உயிருக்காகப் போராடிய வேளையிலும், தமது கண்களை உவந்து தானம் செய்தார். மானுட வாஞ்சையை உணர்த்திய அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம். -
கண்களைக் கொடுத்து
ஒளியைப் பரிசளித்தாய்!
ஆகையால்...
கரைந்துபோன பின்பும்
நீயே காண்கிறாய்...!
அவனதோ அவளதோ
கண்களில் பூக்கையில்...
நீ
அவனதும் 'கண்மணி'
அவளதும் 'கண்மணி'
நீரையோ தீயையோ
இதுவரை காணார்...
அவற்றைக் காண்கையில்
உன்னையும் காண்பார்...!
நீயும் காண்பாய்..!
நிலவையோ சுடரையோ
இதுவரை காணார்....
அவற்றைக் காண்கையில்
உன்னையும் காண்பார்..!
நீயும் காண்பாய்...!
அவன் - அவனேயான அவனையும்
அவள் - அவளேயான அவளையும்
காண்கையில்...
உன்னையும் காண்பான்!
உன்னையும் காண்பாள்!
நீயும் காண்பாய்!
ஒரு சோடிக் கண்களால்,
ஓராயிரம் உலகைப் பரிசளித்து...
அவனதோ அவளதோ
உலகைப் படைத்திருக்கிறாய்...
மகளே!
இப்போதுதான்...
இப்போது மட்டுந்தான்...
கடவுள் உலகத்தைப் படைக்கவில்லை!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.