- எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர் -
எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் (அருண் அம்பலவாணர்) சிறந்த கவிஞர். எழுத்தாளர். ஆனால் அவ்வப்போது அவர் எழுதும் புலனாய்வு ஊடகக் கட்டுரைகள்தாம் சில வேளைகளில் சிரிப்பைத் தருகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியன் தனது முகநூற் பதிவொன்றில் என்னைத் த பிரச்சார முகவராக ஜெயமோகன் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டுகின்றார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. மேலும் பல குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றாற். ஜெயமோகனின் பங்களிப்பில் உருவான தமிழ் விக்கி பற்றிக் கடுமையாக விமர்சித்ததால், ஜெயமோகன் என்னுடன் சமரசம் செய்ய, தமிழ் இலக்கியத் தோட்டத்துக்குப் பரிந்துரை செய்ததால்தான் என்க்கு அண்மையில் கிடைத்த தமிழ் இலக்கியத் தோட்ட விருது கிடைத்ததாம். ''தமிழ் விக்கி உருவானபோது அதன் டிசைன் பற்றி மிக்காத்திரமாக விமர்சித்து அதன் துர்நோக்கங்கங்களை அம்பலப்படுத்தியவர் அவர். அவரது குறித்த முகநூல் விமர்சனம் இப்பதிவின் இறுதியில் உள்ளது. சுதாரித்த ஜெயமோகன் அ.முத்துலிங்கத்திடம் ஆணையிட்டு கிரிதரனுக்கு கடந்த வருடம் ஒரு இயல் விருது கொடுக்க ஏற்பாடு செய்தார். அம்முயற்சி சக்சஸ். " என்று எழுதுகின்றார். அப்பட்டமான கற்பனை. நகைச்சுவைக் கற்பனை. ஜெயமோகன் பல தடவைகள் டொராண்டோ வந்தபோதும் சந்திக்காத நான் , இம்முறை ஜெயமோகன் வந்தபோது சந்தித்தது அதற்காகத்தானாம். இது எப்படி இருக்கு? எத்தகைய கற்பனைமிகு சிந்தனை!
இந்நிலையில் இயல் விருது பற்றியும், ஜெயமோகனது பரிந்துரை பற்றியும் இவர் இவ்விதம் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையானது. உண்மையில் இவ்விருது பற்றிய தகவலை எனக்கு முத்துலிங்கம் கூறியபோது நான் மறுத்திருந்தேன். அதற்குக் கூறிய காரணம் ஒருமுறை நானும் நடுவராக இருந்திருக்கின்றேன் என்பதுதான்.அதற்கு அவர் நான் 'தமிழ் இலக்கியத் தோட்டத்தில்' இல்லை என்பதால் அதில் எவ்விதத் தவறுமில்லையென்றதும்தான் ஏற்றுக்கொண்டேன்.
இவை தவிர மேலும் அவர் கூறுகின்றார் நான் குத்துக்கரணம் அடித்து ஜெயமோகனைப்பற்றி சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றேனாம். ஆக நான் எழுதியது ஜெயமோகனின் நிகழ்வு பற்றிய நிகழ்வுக் குறிப்பும், பகிர்ந்திருந்தது அவர் தன் வலைப்பதிவில் அந்நிகழ்வு பற்றி எழுதிய குறிப்பையும்தான். இதைத்தான் நட்சத்திரன் செவ்விந்தியன் ' சமூக வலைத்தளங்களில் ஜெயமோகனின் புகழ் பாடி வருகிறார் கிரிதரன் என்று விபரிக்கின்றார். அத்துடன் எழுத்தாளர் ஜெயமோகனும், நானும் நிற்கும் புகைப்படத்தையும் பிரசுரித்துள்ளார். உண்மையில் நான் , எழுத்தாளர் குரு அரவிந்தன், ஜெயமோகன் நிற்கும் படத்தை என் முகநூல் பக்கத்திலும், பதிவுகள் இணைய இதழிலும் பதிவு செய்திருந்தேன். அப்புகைப்படத்தில் இருக்கும் நானும் ஜெயமோகனுமிருக்கும் பகுதியை வெட்டி ஒட்டியிருக்கின்றார் அருண் அம்பலவாணர் (ந.செ).
ஜெயமோகனின் கருத்துகள் சிலவற்றில் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும் , அவரது எழுத்து எனக்குப் பிடிக்கும். அத்துடன் பதிவுகள் இணைய இதழில் பல படைப்புகளை எழுதியவர் அவர். பதிவுகள் விவாதங்களில் பங்கு பற்றியவர். அவ்வப்போது சில விடயங்களைப் பற்றி அவருக்கு எழுதியிருக்கின்றேன். அவற்றுக்கு அவர் பதிலளிப்பார். இவ்விதமானதொரு நிலையில் அவர் கடந்த தடவைகள் டொராண்டோ வந்திருந்தபோது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படவில்லை. அதனால் இம்முறை சந்திக்க வேண்டுமென்று முடிவெடுத்தேன். சந்திப்பில் கூட ஓரிரு வார்த்தைகளே பேச முடிந்தது நிகழ்வின் தன்மை காரணமாக. இந்நிலையில் நட்சத்திரன் அதற்குக் கண்ணும் காதும் வைத்து ' இதுவரை பல தடவை ஜெயமோகன் கனடாவுக்கு வந்துள்ளபோதும் (தனக்கு விருது கிடைத்தபின்) இவ்வருடமே தான் ஜெயமோகனை சந்தித்ததாக கிரிதரனே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.' என்று கூறுகிறார். ஒப்புதல் வாக்குமூலம் என்னும் சொற்றொடரை இங்கு தவறாகப் பாவித்துள்ளார் ந.செ. அவரது தமிழ் விக்கி பற்றியும் எழுதினேன். அவ்வப்போது ஜெயமோகன் பற்றி எழுதியிருக்கின்றேன். அவர் எழுதியவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன்.
இதுவரை காலமும் நட்சத்திரன் செவ்விந்தியனின் புலனாய்வு ஊடகக்கட்டுரைகளில் உண்மைகள் ஏதாவதிருக்கக் கூடுமோ என்று எண்ணினேன். ஆனால் இக்கட்டுரையைப் பார்த்ததும் சிரித்து விட்டேன். நிச்சயம் ஜெயமோகன் வாசித்திருந்தாலும் சிரித்திருப்பார். பதிவுகளில் அதிகம் எழுதிய காரணத்தால் , இணையரீதியிலான , அவரது எழுத்துகளூடான தொடர்பு மட்டுமே எனக்கு ஜெயமோகனுடனுண்டு. இதுவரையில் அவருடன் நான் தொலைபேசியில் கூடப் பேசியது கிடையாது.
இதே நேரத்தில் புலனாய்வு ஊடகத்துறை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது. ஒருமுறை பதிவுகளில் நடந்த விவாதங்களில் கவிஞர் ஜெயபாலன் மேல் சேறு வாரியிறைக்கப்பட்டது. அப்பொழுது அவ்விதம் மறைந்திருந்து சேற்றினை வாரியிறைத்தவரின் ஐபி முகவரியைத்துல்லியமாகக் கண்டறிந்தபோது ஆச்சரியமாகவிருந்தது ஆஸ்திரேலியாவிலிருப்பது தெரியவந்தது. அக்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை சரியா பிழையா என்பதை ஆராய்ந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதிய 'இந்திரன் சந்திரன்' கூற்று உண்மையா , இல்லையா என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து எதிர்வினையாற்றியிருந்தோம். அவ்வெதிர்வினை பதிவுகளில் 2000 -2011 காலகட்டத்தில் வெளியான கட்டுரைகளில் ஒன்றாக 'திஸ்கி' எழுத்துருவிலுள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அது மீள்பிரசுரம் செய்யப்படும்.
நட்சத்திரன் செவ்விந்தியன் என் மீது கூறும் குற்றச்சாட்டுகளும் உண்மை என்றால் தமிழ் இலக்கியத் தோட்டத்துடன், ஜெயமோகனுடன் தொடர்பு கொண்டு அக்குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டு ஆதாரங்களின் அடிப்படையில் தான் சொல்வது உண்மை என்பதை நிரூபித்திருக்க வேண்டும். அவை எவையுமில்லாமல் தான் கற்பனையில் நினைப்பதைக் குற்றச்சாட்டுகளாக, புலனாய்வுக் கற்பனைச் சிந்தனைகளாக ஒருவர் மீது சேற்றினை வாரியிறைப்பதற்குப் பாவித்திருப்பது நல்ல ஊடகவியலாளொருவருக்கு ஏற்ற அறமல்ல.
புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் உண்மைகளின் அடிப்படையில் ஆய்வு செய்து எழுத வேண்டியது அவசியம். சம்பவங்களை வைத்துக் கற்பனை செய்து எழுதுவது புலனாய்வு எழுத்து அல்ல. நட்சத்திரன் செவ்விந்தியன் இயல் விருது கிடைத்தது பற்றி எழுதியதும் உண்மை அல்ல. எழுத்தாளர் ஜெயமோகனுடனான எனது தொடர்பு பற்றி எழுதியதும் உண்மை அல்ல. அவரது உள்மனத்தில் உதித்த கற்பனை. புலனாய்வுக் கற்பனை.
அவரது சில முகநூற் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் கனவையும் நனவில் கலந்து , நனவையும் ஒருவிதக் கனவாக வாழ்கின்றாரோ என்றும் நான் நினைப்பதுண்டு. அக்கனவுகள் அவருக்கு இன்பத்தைத் தரும்போது, அக்கனவுகளில் வருபவர்கள் அவர் பதிவுகள் பற்றிய தம் கருத்துகளைக் கூறாமலிருக்கையில் நான் எதற்காக அவரது கனவுகளைக் கலைக்க வேண்டும் என்பதால் அவரது நனவுக்கனவுகளை நான் கலைக்கப்போவதில்லை.