இலங்கை மலையகத்தில் வளர்ந்து வரும்
எழுத்தாளரும், சமூக ஆர்வளரும், மார்க்ஸிய சிந்தனையாளரும், சட்ட தரணியுமான தோழர் எல். ஜோதிகுமார் அவர்களால் எழுதப்பட்டு கடந்த வருடம்
நந்தலாலா பதிப்பகத்தால் "
பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் " . என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந் நூல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது . இலங்கையில் 1980 களில் வெளிவந்த "
தீர்த்தக் கரை " எனும் முற்போக்கு அரசியல் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனுபவம் உடைய எழுத்தாளர் ஜோதிகுமார் அவர்கள் தாயகம் திரும்பிய மலையக மக்களின் மன உணர்வுகளை அவர்களின் வாழ்வியலை நேரில் கண்ட அனுபவம் வாயிலாக இந்நூலை திறம்பட வடிவமைத்துள்ளார் .
200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து இலங்கை மலையகம் சென்று அங்கு அடர்ந்த காடுகளை வெட்டி பெருந்தோட்டப் பயிர்களை விளைவித்து அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திய தமிழ் மக்கள் பேரினவாத அரசியல் வாதிகளால் வஞ்சிக்கப்பட்டனர் . அவர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் இந்தியாவிற்கே சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் வந்தனர் . அவ்வாறு வந்தவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பக்கத்து மாநிலங்களிலும் குடியமர்த்தப்பட்டனர் . அவர்கள் எதிர்பார்த்து வந்த மறுவாழ்வு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது கடந்த கால வரலாறு . சதுப்பு நிலப் பகுதிகளில் ஏற்படுத்தப் பட்ட மறுவாழ்வு திட்டங்கள் பெருமளவு தோல்வி அடைந்த நிலையில் சிலர் கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களை நோக்கி நகரலாயினர் . அவ்வாறு கொடைக்கானல் மலைகளை நம்பி சென்றவர்களின் துயர வாழ்க்கையை , அடிமை நிலையை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற சமூக உணர்வுடன் இந்நூலை எழுதியுள்ள தோழர் ஜோதிகுமார் பாராட்டுதலுக்கு உரியவராவார் .
மலையக மண்ணின் மைந்தரான இந் நூலின் ஆசிரியர் பெரும் பணச் செலவை பொருட்படுத்தாது இலங்கையில் இருந்து ஐந்து முறை கொடைக்கானல் சென்று தாயகம் திரும்பிய கொடைக்கானல் மக்களை நேரில் கண்டு கதைத்து கள ஆய்வு செய்து உண்மையான தகவல்களுடன் உணர்வு பூர்வமாக இந்நூலை எழுதியுள்ளார் . 88 பக்கங்களையும் எட்டு பகுதிகளையும் கொண்டுள்ள இந்நூல் அம்மக்களின் மன உணர்வுகளை குமுறல்களை ஆழமாக தொட்டுக் காட்டுகிறது . வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாபாத்திரங்கள் வாயிலாக எளிய தமிழ் நடையில் விளிம்பு நிலை மக்களின் வரலாற்று நிகழ்வுகளை துன்பங்களை துயரங்களை வலி கலந்த வரிகள் ஊடாக வெளிப்படுத்துவதை வாசிக்கும் போது நமது இதயங்களும் வேதனையில் துடிக்க தவறுவதில்லை . வெறுமனே போகிற போக்கில் எழுதாமல் அம்மக்களின் உரையாடல்களை முழுமையாக உள்வாங்கி விறுவிறுப்பு குறையாமல் கற்பனை கலக்காமல் எழுதியுள்ளார் .
சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற கொடைக்கானலில் பூம்பாறை காடுகளில் கொட்டும் மழையிலும் சுழன்றடிக்கும் குளிரிலும் சவுக்கு பட்டை உரிக்கும் தாயகம் திரும்பிய மலையக மக்களைப் பற்றி கூறும் நூல் இதுவாகும் . இந்திய விவசாய பின் புலத்தில் பிறந்து வளர்ந்து இலங்கை பெருந் தோட்டச் செய்கையில் உழன்று உருக்குலைந்து வந்த இவர்கள் கொடைக்கானல் பூம்பாறை காடுகளில் இறுகிப் போன வாழ்வில் முடங்கிக் கிடப்பதாக ஆசிரியர் அழுத்தமாக குறிப்பிடுகிறார் .
- எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமார் -
கொடைக்கானல் குளக் கரை ஓரம் தூண்டில் கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராகலை தோட்ட முதியவருடனான எழுத்தாளரின் உரையாடலின் போது இருவரும் பேசிக் கொண்ட மலையக மண் வாசனை கலந்த தமிழ் சொற்களை வாசிக்கும் போது நம்மை அறியாமல் நமது கடந்த கால மலையக நினைவுகள் பசுமையாக தோன்றி மறைகின்றன . இங்கிட்டு , ஏலாது , தேத்தண்ணி ,கொறைச்சி , குடுக்கிறது ,பெழ சொல்ல மாட்டேன் , தினமும் பாவிச்சி , எஸ்டேட் பெரட்டுல, ஏவூட்டு மவ , ஒதச்சி , எடத்த , கொற சொல்றது , ஓளிஞ்சி ஒக்காந்து , ஒலகத்த பத்தி , பேச ஏலும் , இப்பைக்கு , சப்பாத்தோட , தொங்கல் , இங்கன , சண்டியனுங்க இவ்வாறான மறந்து போன மலையக பேச்சுத் தமிழ் கொடைக்கானல் மலையில் பேசப்படுதை வாசிக்கும் போது இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி வந்து போகிறது .
கொடைக்கானல் சவுக்கு மரங்களில் பட்டை உரிக்க அழைத்து வரப்பட்ட தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் கூலி அடிமைகளாக ( Bonded Labour ) நடத்தப் பட்ட அவல வாழ்க்கையை நூலாசிரியர் கள ஆய்வு மூலம் வெளி உலகிற்கு வெளிப்படுத்த எடுத்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியதாகும் . அத்தொழிலாளர்களின் உள்ளக் குமுறல்களை அவர்களின் வார்த்தைகளில் கூற முற்படும் எழுத்தாளர்
" அங்க இருக்கிறவன் ( இலங்கை ) ஒரு நல்ல மனுஷன் " " இங்க ( இந்தியா ) நாணயமே இல்லை " " வாழ்க்கை சரியில்ல மிச்சம் சரியில்ல " " என்னைப் பொறுத்தவரை சிங்களவங்க நல்லவங்க " என அவர்களின் உரையாடல் வழியே கூறுகிறார் . இன்னொரு முதியவர் " இலங்கை ஞாபகம் எல்லாம் இப்ப வருது ..... கண்டபடி வருது ....... ராத்திரி படுக்கையில..... அப்பிடி வருது...... ஞாபகம் எல்லாம் ...... எதோ படம் ஓட்ற மாதிரி " என புலம்புவதை வாசிக்கும் போது அம்மக்கள் இலங்கையை எந்தளவு மிக ஆழமாக நேசித்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது . இவர்களைப் பொறுத்தவரை இவர்களின் தொப்புள் கொடி உறவு என்பது இந்தியா அல்ல அது இலங்கை என்பதை இவர்களால் மறக்கவோ துறக்கவோ முடியவில்லை .
இந்திய மக்களின் மன உணர்வுகளை இவர்கள் புரிந்து கொண்டவர்களாக இருப்பதையும் எழுத்தாளர் ஆங்காங்கே அவர்களுடனான உரையாடல் மூலம் சுட்டிக் காட்டி இருப்பதையும் காண முடிகிறது . விவசாயம் தான் இங்கே முதுகெலும்பு என மிகச் சரியாக கணித்து கூறும் இவர்கள் தனி ஒரு விவசாயி , சிறு விவசாயி என்போர் தங்களை முதலாளிகளாக நினைத்து செயல் படுவதை வன்மையாக கண்டிக்கின்றனர் .
இந்தியாவில் சாதியம் மிக ஆழமாக எல்லா இடங்களிலும் ஊடுருவி அதனடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப் படுவதை வன்மையாக கண்டிக்கும் நூலாசிரியர் கொடைக்கானலிலும் ஆதிக்க சாதியினரின் அடாவடித்தனங்கள் இருப்பதை மனக் குமுறலுடன் பதிவிட்டிருப்பதை காண முடிகிறது . தாயகம் திரும்பிய ஒருவர் காதல் வயப்பட்டு மணமுடித்த மாற்று சமூகப் பெண்ணை தந்தையே கிணற்றில் தள்ளி நடைபெறும் ஆணவக் கொலை பற்றியும் நூலாசிரியர் மனம் வெதும்பி குறிப்பிடும் போது அவரின் சமூக அக்கறையை காண முடிகிறது . சமூகப் பார்வை மட்டுமல்லாமல் அரசியல் பார்வையும் அம்மக்களிடம் இருப்பதை நூலாசிரியர் கண்டுணர்ந்து எழுதியுள்ளார் . வழக்கம் போல நூலாசிரியரின் உரையாடலின் போது முதியவர் ஒருவர் இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் பற்றி பொருளாதார கண்ணோட்டத்துடன் கூறுவது வியப்பைத் தருகிறது . அம்பானி பணம் சேர்க்க மோடி அவர்கள் உதவுவதாக அவர் அறிந்து அதனை தயங்காது பொது வெளியில் கூற முற்பட்டதையும் நூலாசிரியர் பதிவிட்டுள்ளார் .
கொடைக்கானலில் வாழும் தாயகம் திரும்பிய மலையக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களையும் நேரில் கண்டு உண்டு உரையாடி வெளி உலகிற்கு வெளிப்படுத்த ஆர்வம் கொண்ட தோழர் ஜோதிகுமார் அவர்கள் கொடைக்கானலில் மலைகள் காடுகள் குடியிருப்புகள் என அலைந்து திரிந்து இந் நூலை எழுதியதன் மூலம் கடந்து போன மக்களின் வரலாற்று நிகழ்வுகளை ஆழமாக பதிவு செய்துள்ளார் . கொடைக்கானலில் அம் மக்கள் அனுபவித்த கொடுமைகள் , சிரமங்கள் , பொருளாதார நெருக்கடி , உள்ளூர் மக்கள் அவர்களை பார்த்த வெறுப்பு பார்வை , தலைதூக்கி நின்ற சாதிய ஏற்றத் தாழ்வுகள் , ஆதிக்க சாதியினரின் ஆதிக்க மனப்பான்மை , அடர் காடுகளை அழித்து களனியாக்கிய விதம் , அவர்களின் வறுமை , இடைவிடாத போராட்டம் என அம்மக்களின் ஒவ்வொரு படி நிலையையும் உரையாடல் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார் . நூலை வாசிக்கும் போது நாமும் உடனிருந்து கேட்பதைப் போன்ற உணர்வை ஆசிரியர் ஏற்படுத்தி இருக்கிறார் .
" பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் " என்ற இந்நூலில் கொடைக்கானல் மக்கள் தொடர்பான ஆய்வுகளில் தேநீரும் தேநீர் கடைகளும் குறிப்பிடத் தக்க இடத்தைப் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது . இலங்கை மலையக மக்களுடன் இரண்டறக் கலந்த தேநீர் கொடைக்கானலிலும் தொடர்கிறது . நூலாசிரியர் தேநீர் கடைகளில் மக்களோடு மக்களாக அமர்ந்து தேநீர் அருந்துவதன் வாயிலாக நிறைய தகவல்களை திரட்டியுள்ளதை காண முடிகிறது . " அடடே இலங்கையா கண்டியா வாங்க தேத்தண்ணி சாப்பிடுவோம் " என்ற அழைப்புக்கு கட்டுண்டு விடுகிறார் . அவர்களின் கடந்த கால மலையகத்து நினைவுகள் மட்டுமல்லாமல் நிகழ்கால போராட்ட வாழ்க்கை பற்றியும் சின்னஞ் சிறிய தேநீர் கடைகளில் பேசப்படுகின்றன .
இலங்கை மலையகத்தில் மட்டுமல்ல கொடைக்கானலிலும் தொடர்கின்ற அடிமை முறையை எழுத்தாளர் வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் . சவுக்கு மரத்து பட்டைகளை உரிக்க அழைத்துவரப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கூட்டாக ஓரிடத்தில் அடைத்து வைக்கப் பட்டனர் எனவும் கூட்டாக வாழ்ந்த இடத்திற்கு கூப்பு என பெயர் கூறப்பட்டதாகவும் கூறுகிறார் . இவ்வாறு ஓரிடத்தில் 157 குடும்பங்கள் 1989 ஆம் வருடத்தில் மூன்று கூப்பாக வாழ்ந்தனர் எனவும் அறியப்படுகிறது . காற்று மழை பாராது கட்டாயம் பட்டை உரிக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர் . சில வேளைகளில் தண்டனையாக தாக்குதலுக்கும் உள்ளாகினராம் . காட்டுக்குள் வந்துவிட்ட அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப் படவில்லை . வெளி தொடர்பு இல்லாத நிலை . பிரசவத்திற்கு கூட வெளியே போக முடியாத நிலை . குடிசை வீடு . சமைக்கவும் படுத்துறங்கவும் ஒரே அறை . தரமற்ற உணவு . வெளியில் சென்று சாப்பிட அனுமதி இல்லை . வாழ்விடம் தகரத்தால் மறைக்கப்பட்டிருப்பதால் வெளியில் உள்ளவர்கள் இவர்களின் அவல நிலையை பார்க்க முடியாது . முட்களால் ஆன கம்பி வேலி மட்டுமல்லாது இரவில் அவற்றில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது .70 அடி நீளம் 20 அடி அகலம் உள்ள அவ்விடத்தில் ,200 பேர் தங்க வைக்கப் பட்டதாக ஆசிரியர் அறிந்துணர்ந்து எழுதி யுள்ளார் . இவ்வாறான ஒரு அடிமை வாழ்க்கையை கண்ணீர் மல்க கூறும் முதியவர் ஒருவர் " எங்க மக்கள் இங்க வந்து ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க . நீங்க எங்க பொறந்தீங்களோ அங்கத்தான் நீங்க வாழனும் " என இலங்கை மலையகத்தை நினைத்து வேதனையை வெளிப்படுத்தியதாக நூலாசிரியர் கூறுகிறார் .
கொடைக்கானல் மலையில் குடியேறிய தாயகம் திரும்பிய மலையக மக்களின் அடிமை விலங்கை உடைத்து " விடுதலை நகர் " உருவான வரலாற்றை நூலாசிரியர் அவர்களுடனான உரையாடல் வழியே வாசிப்போரையும் கொடைக்கானல் அழைத்துச் செல்கிறார் . ஒன்று திரண்டு வேலை நிறுத்தம் என்ற தொழிலாளர்களின் அடிப்படை ஆயுதத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்துகிறார்கள் . வேலை நிறுத்தத்தை முறியடிக்க முதலாளிகள் குண்டர்களை எப்படி எல்லாம் பயன் படுத்தினார்கள் என்பதை நூலாசிரியர் கூறுவதை வாசிக்கும் போது நாமும் ஒரு வித பய உணர்வில் உறைந்து போய் விடுகிறோம் . தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை மூர்க்கத்தனமாக முறியடிக்க முயலும் முதலாளித்துவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை ஏவிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் . கொடைக்கானலிலும் ஆட்சியாளர்கள் இதனையே செய்தனர் . காவல் துறையின் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகினர் . காவல் துறை சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக இம்மக்கள் குறிப்பிட்டுள்ளனர் .
கொடைக்கானல் மலையின் நிர்வாக ஆட்சியராக இருந்த திரு . குர்னிகால்சிங் அவர்களின் நேர்மையான செயல்பாடு , நீதித்துறையின் நியாயமான தீர்ப்பு காரணமாக தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற்று 2 ஏக்கர் காணியும் வீடும் கிடைத்த வரலாற்றை நூலாசிரியர் நூலில் உணர்வு பூர்வமாக பதிவு செய்துள்ளார் . இலங்கையில் மலையக மக்கள் காணி உரிமைக்காக இன்று வரையும் பெரும் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில் கொடைக்கானல் வந்த அவர்கள் அதனை அடைய கிடைத்தமை தாயகம் திரும்பியோர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும் . அடிமைத் தனத்தில் இருந்து கொஞ்சம் விடுதலை . அதனை நினைவு கூறும் வகையில் " விடுதலை நகரம் " என பெயரிட்டு வாழ்ந்து வருகின்றனர் . அவர்கள் கொடைக்கானல் மலையில் வாழ்விடம் சார்ந்து குறிப்பிடும் பெயர்களை மிகவும் ரசித்து இந்நூலில் பல இடங்களில் பதிவிட்டுள்ளார் . அவற்றில் " வாழும் வரை போராடும் தேநீர் நிலையம் " அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக இருக்கிறது .
" பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் " என்ற நூலை நேரில் கள ஆய்வு செய்து உண்மைத் தகவல்களுடன் எழுதியுள்ள நூலாசிரியர் தோழர் ஜோதிக் குமார் அவர்கள் தாயகம் திரும்பியோரின் வாழ்வியல் நிகழ்வுகளை இந்நூல் வாயிலாக சிறப்பாக பதிவு செய்துள்ளார் . தோழர் நந்தலாலா கூறுவதைப் போன்று இது ஒரு வரலாற்றுப் புதினமாக மலர்ந்துள்ளது .