நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் ஜா – எலைக்கு அருகில் துடல்ல சந்தியை கடக்கும்போது நீங்கள் ஒரு சிலையை காணமுடியும். தேவதைபோன்று வெண்ணிறத்தில் காட்சியளிக்கும் அந்தச்சிலை நடிகை ருக்மணிதேவி. கொழும்புச்செட்டி சமூகத்தைச்சேர்ந்த இவரது முன்னோர்கள் தமிழர்கள். ருக்மணிதேவி சிங்கள திரையுலகில் பிரபல்யம் பெற்றிருந்தாலும் ஓரளவு தமிழும் பேசக்கூடியவர். சிறந்த பாடகி. அவர் நடித்த சிங்களப் படங்களில் அவர் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு அவரே குரல்கொடுத்தார். இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி பாடிவந்தவர். அக்காலத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்திலும் தோன்றியவர்.
1978 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி காலை வழக்கம்போன்று நீர்கொழும்பிலிருந்து கொழும்பில் வீரகேசரிக்கு வேலைக்குப்புறப்பட்டேன். எங்கள் நீர்கொழும்பூருக்கு கிரியுள்ளை என்ற ஊரிலிருந்து கொழும்பு நோக்கி வரும் கடுகதி இ.போ. ச. பஸ்ஸை காலை 7-45 மணிக்குப் பிடித்தால், கொழும்பு ஆமர்வீதி சந்தியில் 8-45 மணிக்குள் வந்தடைந்துவிடலாம். நான் வழக்கமாகச்செல்லும் பஸ். ஆசனம் கிடைப்பது அபூர்வம். நின்றுகொண்டு பயணித்தாலும், அந்த பஸ் கடுகதி என்பதனால் சோர்வு இருக்காது. ஜா – எலையில்தான் அடுத்த தரிப்பு வரும். அன்றைய தினம் துடல்ல சந்தியை நெருங்கும்போது எமது பஸ் தனது வேகத்தை குறைத்தது. வீதியில் பொதுமக்கள் நிரம்பியிருந்தனர். எட்டிப்பார்க்கின்றேன். வீதியில் இரத்தம் சிந்தியிருக்கிறது. ஒரு பெண்ணை சிலர் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர். அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அவரது உடலிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.
“ருக்மணி தேவி .. ருக்மணி தேவி“ என்று மக்கள் கத்திக்கொண்டிருந்தனர். எமது பஸ் அந்தக்காட்சியை கடந்து சென்றுகொண்டிருந்தது. சமகாலத்தில்தான் வீதி விபத்துக்கள் அதிகம் என்று எண்ணிவிடாதீர்கள். நற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இதுதான் நிலைமை. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பதவிக்காலத்தில் அணிசேரா உச்சிமாநாடு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1976 ஆம் ஆண்டு நடந்திருப்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையில் வீதி அகலமாக்கப்பட்டது. அதன்பின்னர் வாகனங்களின் வேகமும் அதிகரித்தது.
வீரகேசரி அலுவலகத்திற்குச் சென்றதும் வழியில் கண்ட விபத்து பற்றிச்சொன்னேன். படுகாயமடைந்த ருக்மணிதேவி குற்றுயிருடன் எடுத்துச்செல்லப்பட்டதை கண்டேன். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை எமது அலுவலக நிருபர்கள் கண்டறிந்து எழுதினர். ருக்மணிதேவியை சில சந்தர்ப்பங்களில் நீர்கொழும்பு பிரதான கடை வீதியில் கண்டிருக்கின்றேன். அழகான பெண்மணி. எப்பொழுதும் சிரித்த முகம். அவரது குரலில் வெளிவந்த பல பாடல்கள் சோகரசமானவை.
தனது பெரிய குடும்பத்திற்காக திரையுலகில் பெற்ற வருவாய் அனைத்தையும் வழங்கியவர். அவருக்கென சொந்தமாக வீடு இல்லை. சகநடிகரான எடி ஜயமான்னவை காதலித்து மணந்தார். எடி ஜயமான்ன சில சிங்களப்படங்களில் நகைச்சுவைப்பாத்திரமேற்று நடித்தவர். பின்னாளில் சினிமாஸ் குணரட்ணத்திற்குச் சொந்தமான வத்தளை ஹெந்தளையிலிருந்த விஜயா ஸ்ரூடியோவின் முகாமையாளராக பணியாற்றினார்.
எங்கள் ஊர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் அபிவிருத்திச்சங்கத்தில் நான் அங்கம் வகித்திருந்த காலப்பகுதியில் ரிதம் 76 என்ற பல்சுவை கதம்ப நிகழ்ச்சியை நீர்கொழும்பு மாநகர மண்டபத்தில் நடத்தினோம். அந்த நிகழ்ச்சிக்கு சிங்கள நடிகர்கள் எடி ஜயமான்ன, ரவீந்திர ரந்தெனிய, சாந்திலேகா, டொனி ரணிசிங்க, ஶ்ரீயாநி அமரசேன ஆகியோருடன் மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன், அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தனர். கோமாளிகள் திரைப்படத்தின் தயாரிப்பாளர் முகம்மட்டும் வந்திருந்தார். ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்த ருக்மணிதேவி அந்த ரிதம் 76 நிகழ்ச்சிக்கு வரவில்லை. மூவினத்தவர்களும் ஒற்றுமையாக இணைந்து நடத்திய கதம்பவிழா.
1977 இற்குப்பின்னர் காட்சிகள் மாறின. ஜே.ஆர். நிறைவேற்று அதிகார அதிபரானதும் இலங்கைப் பிரதமராகவிருந்த ரணசிங்க பிரேமதாச, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சில நன்மையக்கும் பணிகளையும் செய்திருக்கிறார். மாளிகாவத்தை தொடர் மாடிக்குடியிருப்பில் மூவினத்தையும் சேர்ந்த சில பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதியை செய்துகொடுத்தார். அதுவரையில் சினிமா படங்களைக்காண்பித்துக்கொண்டிருந்த மருதானை டவர் திரையரங்கினை சுவீகரித்து டவர் அறக்கட்டளை ( Tower Foundation ) அமைப்பினை உருவாக்கினார். அந்த மண்டபத்தில் தமிழ் – சிங்கள நாடகங்களும் மேடையேறின. எழுத்தாளர் சுபைர் இளங்கீரன் எழுதி கலைஞர் அந்தனி ஜீவா இயக்கிய பாரதி நாடகமும் அந்த டவர் அரங்கில் முதல் மேடையேற்றம் கண்டது.
இவ்வாறு கலைஞர்களை ஊக்குவிப்பதற்கும் தனது வாழ்நாளில் நேரத்தை செலவிட்ட ரணசிங்க பிரேமதாசவும் எழுத்தாளர்தான். இவரும் சில இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
குடியிருப்பதற்கு சொந்தமாக ஒரு வீடும் இல்லாதிருந்த நடிகை ருக்மணிதேவிக்காக டவர் அறக்கட்டளையின் சார்பில் நீர்கொழும்பில் ராஜபக்ஷ பூங்காவுக்கு அருகாமையில் ஒரு நிலத்தை வாங்கி அதில் ஒரு இல்லத்தை ரணசிங்க பிரேமதாச அமைத்தார். அதன் கட்டுமானப்பணிகளை பார்த்திருக்கும் ருக்மணிதேவி, அதில் குடியிருப்பதற்கான வாய்ப்பினை இழந்து 1978 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வாகன விபத்தில் கொல்லப்பட்டார். வீதியில் தனது விதியை முடித்துக்கொண்ட ருக்மணிதேவியின் அடக்கம் செய்யப்பட்ட நீர்கொழும்பு பொதுமயானத்திலும் அவரை அந்த விதி, விட்டு வைக்கவில்லை என்பது மற்றும் ஒரு சோகம். அவர் இறந்து ஒரு சில நாட்களில் நீர்கொழும்பு பிரதான வீதியால் அவரது இறுதி ஊர்வலம் சென்றபோது திரண்டிருந்த மக்கள் திரளில் மூவின மக்களும் கலைஞர்களும் கலந்திருந்தனர்.
நானும் மல்லிகை ஜீவாவும் வீதியோரமாக நின்று அஞ்சலி செலுத்தினோம். அந்த ஊர்வலத்தில் வந்த கலைஞர் லடீஸ் வீரமணி, எங்களை கண்டுவிட்டு, அருகில் வந்து “பெரிய இழப்பு … பெரிய இழப்பு “ என்று சொல்லிவிட்டு அகன்றார். ருக்கமணிதேவியின் பூதவுடல் நீர்கொழும்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த சாரியையும் விலையுயர்ந்த சவப்பெட்டியையும் இரவோடு இரவாக தோண்டி களவாடி எடுத்துச்செல்ல சில கயவர்கள் முயன்றபொழுது, மயானக் காவலர்களினால் கையும்மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையும் செய்தியாக வீரகேசரியில் எழுதினோம்.
அவருக்காக நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தை தமக்குத்தரவேண்டும் என்று அவரது குடும்ப உறவுகள் போட்டிபோட்டன. அந்த சர்ச்சைக்கும் ரணசிங்க பிரேமதாச முற்றுப்புள்ளி வைத்தார். உமக்குமில்லை, எவருக்குமில்லை என்ற தீர்மானத்தை உறுதியாக எடுத்த பிரதமர் பிரேமதாச, டவர் ஃபவுண்டேசனிடமே அதனை ஒப்படைத்து, ருக்மணிதேவி ஞாபகார்த்த இல்லமாக்கி, அங்கே அந்த நடிகை பயன்படுத்திய உடைகள், அலங்காரப்பொருட்கள், திரைப்பட ஸ்டில்ஸ்கள், ஆகியன இடம்பெற்ற மியுசியமாக்கினார். ஒரு நாள் இரவு, அந்த கண்காட்சிக்கூடத்தை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா திறந்துவைத்தார். ருக்மணிதேவி விபத்தில் கொல்லப்பட்ட துடல்ல சந்தியில் அவருக்காக சிலை நிறுவப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம்பெயர்ந்து வந்துவிட்டேன். இலங்கை செல்லும்போது கொழும்புக்கு பயணிக்கும் வேளைகளில் அந்தச் சிலையை கடந்து செல்வேன். நீண்ட காலத்திற்குப்பின்னர் நீர்கொழும்பில் ஒரு மரணச்சடங்கில் கலந்துகொண்டபொழுது அந்த மயானத்துக்குச்சென்று ருக்மணிதேவியின் கல்லறையை பார்த்தேன்.
அந்தக்கல்லறை சரியான பராமரிப்பின்றி சிதிலமாகியிருந்தது. மயானத்தை பராமரிக்கும் காவலர்களிடம் விசாரித்தேன். அவர்கள் என்னை அங்கிருந்த ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அதனைத்திறந்து அவர்கள் காண்பித்தவற்றை பார்த்து வியப்புற்றேன். அங்கே ருக்மணிதேவியின் முகத்துடன் ஒரு வெள்ளைச்சிலை, அவர் நடித்த அனைத்து திரைப்படங்களின் பட்டியல் பதிந்த சீமெந்துப்பலகை, மற்றும் அலங்கார தூண்கள், வளைவுகள் இருந்தன. அவை அனைத்தும் தூசுபடிந்து அலங்கோலமாக காட்சியளித்தன.
“ஏன்…இப்படிக்கிடக்கின்றன?” எனக்கேட்டேன்.
“எல்லாம் குடும்ப அரசியல்தான் “ என்றார்கள்.
மேலும் விபரித்தார்கள்.
உறவினர்களுக்கோ, கல்லறையில் பாசம் இல்லை. பணத்தில்தான் பாசம் இருந்திருக்கிறது. இத்தனைக்கும் தனக்கென ஒரு வீட்டை சொந்தமாக வாங்கிக்கொள்ளாமல் இரவு பகலாக ஓய்வின்றி நடித்து உழைத்து உறவினர்களுக்கு சோறுபோட்டவர்தான் ருக்மணிதேவி. ருக்மணிதேவி 1978 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வாகன விபத்தில் கொல்லப்பட்டார். அவருக்காக வீடு நிர்மாணித்து அதனை இறுதியில் காட்சியகமாக்கிய ரணசிங்க பிரேமதாசவும் கொழும்பு ஆமர்வீதியில் 1993 மே மாதம் 01 ஆம் திகதி மேதினத்தன்று கொல்லப்பட்டார். ஒன்று வீதி விபத்து. மற்றது திட்டமிட்ட படுகொலை. இருவரது விதியும் வீதியில் முடிந்திருக்கிறது.
இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் நான் கடந்துசெல்லும் வீதிகள் இவை. !
( தொடரும் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.