- யாழ் இந்துக்கல்லூரி(கனடா) நடத்திய கலையரசி2023 மலருக்காக எழுதிய கட்டுரை.
நான் கல்வி கற்ற மூன்று கல்வி நிலையங்கள்; ஆரம்பக் கல்வி ,வகுப்பு ஏழு வரை - வவுனியா மகா வித்தியாயலம். எட்டு தொடக்கம் க.பொ.த (உயர்தரம்) வரை - யாழ் இந்துக்கல்லூரி. பட்டப்படிப்பு, கட்டடக்கலை - மொறட்டுவைப்பல்கலைக்கழகம். இவற்றை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. இவை பற்றிய நினைவுகள் எப்போதும் என்னுள்ளத்தில் பசுமையாக இருந்து வரும். இவற்றில் யாழ் இந்துக்கல்லூரியில் படித்தது என் பதின்ம வயதுகளில். நான் யாழ் இந்துவில் படித்த காலத்தில் நண்பர்களுடன் நகரில் சுற்றித்திரிவதில் அதிக ஆர்வம் மிக்கவனாகவிருந்ததால் பல பங்கு பற்றியிருக்க வேண்டிய நிகழ்வுகளில் பங்கு பற்றவில்லை. அதனை இப்பொழுது உணர முடிகின்றது. 'இந்து இளைஞன்' போன்ற யாழ் இந்துவின் பிரசுரங்கள் பலவற்றை இப்பொழுது பார்க்கும்போது ஒன்றை மட்டும் உணர முடிகின்றது. அங்கு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் ஈழநாடு, கண்மணி, சிரித்திரன் போன்றவற்றில் எழுதிக்கொண்டிருந்தேன். குறிப்பாக ஈழநாடு பத்திரிகையின் மாணவர் மலரில் எழுதிக்கொண்டிருந்தேன். வாரமலரில் சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். ஆனால் யாழ் இந்துக்கல்லூரி வெளியிட்ட சஞ்சிகையில் எதனையும் எழுதவில்லை. இதற்கு இன்னுமொரு காரணம் எமக்குத் தமிழ் படிப்பித்த எவரும் இவ்விதமான சஞ்சிகைக்கு நீங்களும் எழுதுங்கள் என்று கூறியதுமில்லை. சஞ்சிகையினை அறிமுகப்படுத்தியதுமில்லை. அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். தமிழ் ஆசிரியர்கள் இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களை இவ்விடயத்தில் அதிகம் தூண்ட வேண்டும். அது நல்ல ஆரோக்கிய விளைவுகளைத்தரும்.
யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய நாற்சார வீடுகளும், யாழ் இந்துக் கல்லூரிக் கட்டட ஒழுங்கும்!
யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் எப்பொழுதுமே என் வீட்டில் இருந்து படிப்பதைப்போல் உணர்வதுண்டு. அது ஏன் என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. இதற்கு முக்கிய காரணம் யாழ் இந்துக் கல்லூரியின் கட்டடங்கள் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறைதான். நீங்கள் சிறிது அவதானித்தால் யாழ்ப்பாணதுப் பாரம்பரிய நாற்சார வீடுகளின் அமைப்பு முறையினை யாழ் இந்துக் கல்லூரியின் கட்டங்கள் அமைக்கப்பட்ட ஒழுங்கில் ஓரளவு அவதானிக்க முடியும். அதுவே நான் அவ்விதம் உணர்வதற்கு முக்கிய காரணம்.
யாழ் இந்துக் கல்லூரியை பாதித்த கட்டடக்கலைக்கூறுகளைச் சிறிது அசை போடுவதுதான் இந்த எனது நனவிடை தோய்தலின் முக்கிய நோக்கம். இதுவோர் விரிவான ஆய்வுக்கட்டுரையல்ல. ஒரு நனவிடை தோய்தலே. எதிர்காலத்தில் இவ்விடயத்தில் போதிய தகவல்களைத் திரட்டியதும் எழுதும் சாத்தியமுள்ள விரிவானதோர் ஆய்வுக்கட்டுரைக்கு அடிகோலும் ஆரம்பப் பதிவாக இந்த நனவிடை தோய்தலைக் கருதலாம்.
யாழ் இந்துக் கல்லூரியின் கட்டடங்கள், அவை அமைக்கப்பட்ட ஒழுங்கு இவற்றின் அடிப்படையில் இவற்றைப் பாதித்த கட்டடக்கலைக் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;
1. யாழ் மாவட்ட நாற்சார வீடுகளை உள்ளடக்கிய பாரம்பரியக் கட்டடக்கலை.
2. ஆங்கிலேயர் மற்றும் மேனாட்டவரின் செவ்வியற் கட்டடக்கலை.
நாற்சார வீடொன்றின் முக்கிய அம்சங்கள்; அதன் நடுவில் அமைந்துள்ள முற்றம். அந்த முற்றத்தையும் , முற்றத்தைச் சுற்றியுள்ள விறாந்தை. இவற்றை யாழ் இந்துக்கல்லூரியின் கட்டடங்களை உருவாக்கும்போது நன்கு பயன்படுத்தியிருப்பது , எந்நேரமும் காற்றோட்டம் மிக்க சூழலில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வழி வகுத்துள்ளது. இறை வணக்க மண்டபம், அதிபர் காரியாலயம், இரு புறமும் விறாந்தையுடன் கூடிய வகுப்பறைகள். இவ்விதமான ஒழுங்கில் அமைந்திருந்த கட்டட ஒழுங்கமைப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
இந்த சிறிய மைதானத்தையொத்த முற்றத்தில் பல்வேறு கலை நிகச்சிகள் நடைபெற்றன. இன்னும் அவற்றில் சில நினைவிலுள்ளன. ஒன்று- இன்று கம்பவாரிதி என்றழைக்கப்படும் ஜெயராஜ் மாணவனாக இருந்த சமயம் நடந்த கம்பன் விழா. ஓரிரு நாட்கள் நடைபெற்றதாக நினைவு. அதில் ஜெயராஜும் சிறப்பானதோர் உரையாற்றியிருந்தார். அடுத்தது: மலேசியாவிலிருந்து வந்திருந்த திருவாசகமணி என்னும் புகழ்பெற்ற சொற்பொழிவாளர் வந்து கலந்துகொண்டிருந்த நிகழ்வு. இந்நிகழ்வும் ஓரிரு நாட்கள் நடந்திருக்க வேண்டும்.
இவ்விதம் நாற்சார வீடொன்றில் முற்றம் எவ்விதம் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவியாக இருக்கின்றதோ அவ்விதமே யாழ் இந்துக் கல்லூரியின் இந்த முற்றமும் பயன்பாடு மிக்கது.
மேனாட்டவரின் செவ்வியற் கட்டடக்கலைத் தாக்கம்
அடுத்தது யாழ் இந்துக் கல்லூரியின் பிரதான கட்டடங்களில் மேனாட்டுச் செவ்வியற் கட்டடக்கலையின் கூறுகளே பிரதான பங்கை வகித்தன. மேனாட்டுச் செவ்வியற் கட்டடக்கலை என்னும்போது பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டடக்கலைக் கூறுகளையே அது குறிக்கும். காலத்துக்குக் காலம் அச்செவ்வியற் கட்டடக்கலை மீண்டும் மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளதைப் பல்வேறு நாடுகளிலுமுள்ள நவீன கட்டடங்கள் பல இன்றும் புலப்படுத்தி நிற்கின்றன. பொதுவாக அரசாங்களின் முக்கிய கட்டடங்கள் (பாராளுமன்ற, நாட்டின் அதிபர் மாளிகை போன்ற) , புகையிரத நிலையங்கள், தபாற் கந்தோர்கள், கல்வி நிலையங்கள் பலவற்றில் இதன் தாக்கங்களை இன்றும் காணலாம்.
இச்செவ்வியற் கட்டடக்கலையின் பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:
பிரம்மாண்டமான தோற்றத்தைத் தரும் தூண்கள், உயந்த கூரைகள், விசாலமான மண்டபங்கள், அலங்காரக் கூறுகள் அதிகமற்ற சுவர்கள், சமச்சீர்த்தன்மையில் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருத்தல், குவி கூரை (Dome),முக்கோண முகப்பு (Pediment) இவையெல்லாம் மேனாட்டுச் செவ்வியற் கட்டடக்கலையின் முக்கிய அம்சங்கள். மேலும் செவ்வியற் கட்டடக்கலையில் விகிதாசாரம் (Proportion) முக்கியமான பங்கினை வகிக்கின்றது. தூண் ஒன்றின் விட்டத்தை வைத்தே அதன் உயரம், அத்தூணில் அமைந்துள்ள பல்வேறு கட்டடக்கலைக் கூறுகளின் அளவுகள் எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. இவை எல்லாமே புதிதாகக் கட்டப்படும் கட்டடமொன்றில் இருக்க வேண்டுமென்பதில்லை. சில இருந்தாலே அவ்வகைக்கட்டடங்களை இவ்வகையான நவீனச் செவ்வியற் கட்டடங்கள் என்று கூறலாம். அவ்வகையில் யாழ் இந்துக் கல்லூரிக் கட்டடங்களிலும் இக்கட்டடக்கலையின் தாக்கத்தைக் காணமுடிகின்றது. வளைவுகள், தூண்கள், நிரையாக அமைந்துள்ள ஜன்னல்கள் என்பவை மேனாட்டுச் செவ்வியற் கட்டடக்கலையினை நினைவூட்டுவன. தூண்களைப் பொறுத்தவரையில் பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டடக்கலையில் அமைக்கப்பட்ட தூண்களின் வடிவங்களில் அமைக்கப்படாவிட்டாலும், அவை எவ்விதம் கிரேக்க, ரோமானியக் கட்டடங்களில் பாவிக்கப்பட்டனவோ அவ்விதம் வளைவுகளுடன் பாவிக்கப்பட்டுள்ளன். மேலும் சுவர்களிலும் தூண் அலங்காரங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இவை கட்டடங்களுக்கு ஒரு பிரம்மாண்டத்தன்மையினைத் தருகின்றன.
கே.கே.எஸ் வீதியை நோக்கி நிற்கும் முகப்பின் நடுப்பகுதியிலிருந்து இருபுறமும் சமச்சீராகக் கட்டடம் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் (படம்1) . இது போல் இறை வணக்க மண்டபத்தின் தோற்றத்தை முற்றத்திலிருந்து கவனித்தால் அதுவும் இவ்விதமாகச் சமச்சீர்த்தன்மை மிக்கதாக அமைக்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம் (படம் 2) . இவை போல் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள், இரு பக்கங்களில் அமைந்துள்ள விறந்தையுடன் கூடிய வகுப்பறைகள் என சமச்சீர்த்தன்மை பல இடங்களில் மிளிர்வதை அவதானிக்க முடியும்.
இந்துக்கல்லூரி போன்ற தமிழர் கல்வி நிலையங்களை அமைக்கும்போது மேனாட்டுக் கட்டடக்கலைப் பாணியைப் பயன்படுத்தினாலும், அவை தமிழ்ர்தம் கட்டடக்கலைக் கூறுகளையும் உள் வாங்கும் வகையில் அமைக்கப்படுவது சிறப்பானதாகவிருக்குமென்று உணர்கின்றேன். யாழ் இந்துக் கல்லூரியைப்பொறுத்தவரையில் யாழ் பாரம்பரிய நாற்சார வீடுகளில் காணப்படும் முற்ற ஒழுங்கு பிரதான கட்டடங்களை அமைப்பதில் கைக்கொள்ளப்பட்டிருந்தாலும், கட்டடங்களில் தமிழர்தம் கட்டடக்கலைக் கூறுகளைக் காண முடியாதது துரதிருஷ்ட்டமானதே.
இங்குள்ள என் கருத்துகள் நான் இந்துக்கல்லூரியில் படித்த காலத்தில் என் சிந்தையில் பதிந்து கிடக்கும் இந்துக்கல்லூரியின் பிம்பங்களை அடிப்படையாக வைத்து எழுந்தவை. இன்று கல்லூரிக்குப் பல புதிய கட்டங்களும் உருவாகிவிட்டன. அவற்றை முழுமையாகப் பார்க்காமல் என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் அண்மையில் கட்டப்பட்ட யாழ் இந்து அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கின்றேன். அவையும் மேனாட்டுப் பாணியில் அமைந்த வளைவுகளையும், தூண்களையும் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அருங்காட்சியகம் போன்றதொரு கட்டடத்துக்குப் பண்டத்தமிழர்தம் கட்டடக்கலைக்கூறுகளையும் பாவித்திருந்தால் அது இன்னும் பொருத்தமாகவிருந்திருக்குமென்னும் எண்ணம் தோன்றுவதையும் என்னால் தடுக்க முடியவில்லை.
எதிர்காலத்தில் யாழ் இந்துக்கல்லூரிக்குப் புதிய கட்டடங்களை அமைக்கும்போது தமிழர் கட்டடக்கலைக்கூறுகளையும் உள்வாங்கி அமைப்பது பொருத்தமாகவிருக்குமென்று கருதுகின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.