அரசியல் கைதியாக இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சிவ ஆரூரன் விடுதலை பெற்றுள்ள செய்தியினை ஜீவநதி ஆசிரியரும், எழுத்தாளருமான க.பரணீதரன் தனது முகநூற் பதிவில் அறிவித்துள்ளார். இது மகிழ்ச்சியான செய்தி. சிறையில் வாடிய பொழுதிலும் சமுதாயப் பிரக்ஞை மிக்க நாவல்களை எழுதியவர் சிவ ஆரூரன். அவற்றுக்காக இலங்கை அரசின் சாகித்திய விருதுகளைப் பல தடவைகள் பெற்றிருப்பவர்.
அண்மையில் இவர் சிறையிலிருந்து பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு தனது ஜீவநதி வெளியீடான 'ஆதுரசாலை' நாவலுக்காகச் சாகித்திய விருதினைப் பெற்றிருந்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.
மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியான சிவ ஆரூரன் நிரபராதியெனத் தீர்ப்புக் கூறப்பட்டு விடுதலையானதாகப் பரணிதரன் தனது முகநூல் குறிப்பில் கூறியிருக்கின்றார். நிரபராதியான சிவ ஆரூரனின் இதுவரை காலச் சிறை வாழ்வுக்காகவும், இழந்த அவரது வாழ்வின் பொன்னான காலத்துக்காகவும் உரிய நட்ட ஈட்டினை இலங்கை அரசு வழங்குமென்றும் எதிர்பார்ப்போம்.
சிவ ஆரூரன் சிறையில் வாடியபடியே இலக்கியத்தில் சாதனை புரிந்தவர். இதற்கு உறுதுணையாக விளங்கியிருக்கின்றார் 'ஜீவநதி' ஆசிரியரும், எழுத்தாளருமான பரணீதரன். தனது ஜீவநதி பதிப்பகம் மூலம் சிவ ஆரூரனின் பல நூல்களை வெளியிட்டவர் இவர். வலசைப் பறவைகள், ஊமை மோகம், ஆதுரசாலை ஆகிய நாவல்களையும், பூமாஞ்சோலை என்னும் சிறுகதைத்தொகுப்பினையும், The Innocent Victims என்னும் ஆங்கில நாவலையும் ஜீவநதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறைக்கூண்டிலிருந்து விடுதலைப் பறவையாக வெளிவந்திருக்கும் சிவ ரூபனின் வாழ்வில் மகிழ்ச்சி ததும்ப வாழ்த்துகின்றேன். இலக்கியத்தில் மேலும் பல காத்திரமான பங்களிப்புகளை நல்கவும் மேலும் வாழ்த்துகின்றேன்.