பேராசிரியர் கோபன் மகாதேவாவின் ஆக்கங்கள் சில!
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றோம். - ஆசிரியர், பதிவுகள்.காம் -
1. உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!
- மறைந்த அவரது மனைவி வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. -
நித்திரையே வாராத நீள் இரவின் நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.
எத்தனையோ எண்ணங்கள் எனது நுனி மனக் குகையில்
நத்தைகள்போல் நெளிந்து நித்திரையை அரித்து உண்டு
புத்தியையும் புண் ஆக்கிச் செல்லும் வேகமும் அடக்கிச்
சத்தியமும் சபலமும் சாக்கடையின் சேறையும் கலந்து
மெத்தையிலே நீரூற்றாய் மேனி தனைக் குளிப்பாட்டி
எத்தையுமே நிரல் போட்டு எத்தனிக்கும் அதை நிறுத்தி
முத்துமுத்தாய் முன்னாளில் கவி புனைந்த என் மனசைக்
குத்திக் குடைவதனால் குழப்பத்துக்கு உருக்கொடுத்து
கத்திக் கதற வைத்துப் பல கலவரங்கள் உண்டு செய்து
சத்தம் இல்லா இரவினிலே சலசலப்பால் நிறை குலைத்து
செத்து ஒழிந்த நாட்களுக்கு நான் செல்லாமல் முன் போக
உத்தி ஒன்றும் தோன்றாது உருளுகிறேன் தீச்சுடரில்