நரசிம்ம பல்லவராக எம்ஜிஆரும், நர்த்தகி சிவகாமியாகச் சரோஜாதேவியும் திரையில் வரும் இப்பாடல் இடம்பெற்றுள்ள திரைப்படம் 'கலங்கரை விளக்கம்'. இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. கேட்பதற்கு இனிமையான, மனத்துக்கு ஒத்தடம் தரும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். பாடல் வரிகள் ஒவ்வொன்றும், அவற்றைப் பாடிய டி.எம்.எஸ் & பி. சுசீலா குரல்களின் இனிமையும் , அபிமான நடிகர்களின் நடிப்பும் நெஞ்சைக் கொள்ளுவன. எப்பொழுது கேட்டாலும் கேட்பவர் உள்ளங்களை இன்பத்திலாழ்த்தும் பாடல். காதலின் சிறப்பைச் சிறப்பாக எழுத்தில் வடித்திருப்பார் கவிஞர். இப்பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனல்லர். அவரிடம் உதவியாளராகவிருந்த பஞ்சு அருணாசலம். கண்ணதாசனின் கவி உதவியாளரும் கவிதை எழுதுவார் என்று எண்ண வைக்கும் பாடல்.
பஞ்சு அருணாசலத்துக்குத் திரையுலகில் பல முகங்கள் உண்டு. தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக, இயக்குநராக என்று பன்முக ஆளுமை மிக்கவர் இவர். கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. 'அன்னக்கிளி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களையும் இயற்றியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. 'நானும் ஒரு பெண்'ணில் இடம் பெறும் 'பூப்போலப் பூப்போலப் பிறக்கும்', 'காற்றினிலே ஒரு கீத'த்தில் வரும் 'ஒருவானவில் போலே', 'ஆறிலிருந்து அறுபது வரை'யில் வரும் கண்மணியே காதல் என்பது', 'தம்பிக்கு எந்த ஊரு'வில் ஒலிக்கும் 'காதலின் தீபமொன்று ஏற்றினாளே ' பாடல்களை இவற்றியவரும் இவரேயென்பது இவரது கவித்துவச் சிறப்புக்கு உதாரணங்கள்.
'கலங்கரை விளக்கம்' வவுனியா ஶ்ரீ முருகன் திரையரங்கில் என் பால்ய பருவத்தில் பார்த்த ஆரம்பக் காலத் திரைப்படங்களிலொன்று.
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=Xp2pN6Weyxk
- கவிஞர் பஞ்சு அருணாசலம் -
பாடல் வரிகள் முழுமையாக:
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக் கை பட பாடுகிறேன்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனிச் சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தென்னவன் மன்றத்துச் செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
என்னிடம் கோபம் கொள்ளுவதோ?
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ?
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா