"நான் ஒரு மேடைப் பாடகன்
ஆயினும் இன்னும் மாணவன்
நான் கற்றது கை அளவு
இன்னும் உள்ளது கடலளவு
நான் எங்கெங்கு என்னென்ன
சங்கீதம் உண்டென்று
அங்கங்கு செல்கின்றவன்" - கவிஞர் வாலி
'நாளை நமதே'திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைக்குமொரு பாடல். கவிஞர் வாலியின் பாடல் வரிகள்! பாடகர்கள் டி.எம்.எஸ் & ஏஸ்.பி.பி இணைந்து பாடிய பாடல்! இப்படம் வெளியான ஆண்டு 1975. இத்திரைப்படம் வெளியாகி அடுத்த இரண்டு வருடங்களில் எம்ஜிஆர் தமிழக முதல்வராகிவிட்டார். அத்துடன் அவரது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வருகின்றது. இத்திரைப்படத்தின் பெயர் கூட அதிமுகவின் எதிர்கால வெற்றியை எதிர்வு கூறும் வகையில் 'நாளை நமதே' என்று வைக்கப்பட்டுள்ளது.
இப்பாடலைக் கேட்கையில் என்னை மிகவும் பிரமிக்க வைப்பவர் எம்ஜிஆர். இப்படம் வெளியான 1975இல் எம்ஜிஆரின் வயது 58. இப்பாடலில் அவரது துடிப்பு மிக்க ஆட்டமும், நடிப்பும், முதுமையின் சுருக்கங்கள் அற்ற முகவழகும் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. எப்படி 58 வயதில் இவ்வளவு இளமையாக, துடிப்புடன் ஆடிப்பாடி நடிக்க முடிகின்றது அவரால்? இக்கேள்வி எப்பொழுதும் இப்பாடலைக் கேட்கையில் எழுவதும் வழக்கம்.
ஓய்வு பெறுவதையே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்பவர்கள், முதியவர்கள் எம்ஜிஆர் போன்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்து வாழ்க்கையென்பது இருக்கும்வரை வாழ்வதற்கு என்னும் எண்ணத்துடன் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். ஓய்வு பெற்றதுடன் மூலைகளில் ஒதுங்கி விடாதீர்கள். உங்களுக்காக வாழத் தருணம் வாய்த்துள்ளது என்னும் நினைப்புடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்.
இப்பாடலின் இன்னுமொரு சிறப்பு: இப்பாடலில் டி.எம்.எஸ் & எஸ்.பி.பி இருவருமே எம்ஜிஆருக்குக் குரல் கொடுத்திருப்பார்கள். பாடலை அவதானித்தால் இதனை அவதானிக்கலாம்.
யாழ் ராணியில் இரு வேடங்களில் நடித்த எம்ஜிஆரின் 'கட் அவுட்டு'களுடன் ஓடிய 'நாளை நமதே' அங்கு 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.