கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் தனது பவளவிழாவையும், பிறந்தநாளையும் நேற்று கொண்டாடினார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன். அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது யாழ் பல்கலைக்கழகத்தில். நண்பர் ஆனந்தகுமார் அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அவர் ஒரு வருடம் சீனியர். பால்ய காலத்திலிருந்து அறிமுகமான நட்பு. அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை கற்றுக்கொண்டிருந்தேன். 80/81 வருட மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராகவிருந்தேன். 'நுட்பம்' சஞ்சிகைக்கு கலாநிதி கா.சிவத்தம்பி, கலாநிதி க.கைலாசபதி ஆகியோரிடமிருந்து ஆக்கங்கள் வேண்டி அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். அப்பொழுது ஆனந்தகுமார் மூலம் அறிமுகமானவர்தான் அப்போது அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மு.நித்தியானந்தன் அவர்கள்.
அப்போது அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மலையக மாணவர்கள் வெளியிட்டிருந்த சஞ்சிகையொன்றினைக் காட்டினார். அதன் பெயர் மறந்து விட்டது. ஆனால் அதன் வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக உள்ளடக்கம் ஆ, ஆ .. வரிசையில் அழகாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அது பற்றிக் கேட்டபோது அதனைச் சித்திரா அச்சகத்தில் அச்சடித்ததாகக் கூறினார். அப்பொழுது எனக்கும் ஒரு சிந்தனை ஏற்பட்டது. அச்சஞ்சிகை போலவே 'நுட்பம்' சஞ்சிகையினையும் அச்சடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தால் எழுந்த சிந்தனையே அது. எனக்கும் மொறட்டுவைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அலைவதில் சிரமமிருந்ததால் எங்களுக்கும் 'நுட்பம்' சஞ்சிகையை அவர் ஏற்கனவே சித்திரா அச்சகத்தில் அச்சடித்த சஞ்சிகை போன்றதொரு வடிவமைப்பில் அச்சடித்துத் தர உதவ முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் மனம் உவந்து உதவ முன்வந்தார். அத்துடன் அவரே சித்திரா அச்சக உரிமையாளரை எனக்கு அப்போது அறிமுகப்படுத்தினார்.
'நுட்பம்' சஞ்சிகைக்கான ஆக்கங்கள், விளம்பரங்கள் அனைத்தையும் அவரிடம் கொடுத்தேன். அவரும் 'ஆனந்த குமாரசாமியின் இந்துக்கலை மரபு' பற்றி யாழ் பல்கலைககழக மாணவியாக அப்போதிருந்த மல்லிகா கனகரத்தினத்திடமிருந்தும், 'ஈழத்துக் கிறிஸ்தவ கிராமிய நாடகங்கள்' பற்றி கலாநிதி இ.பாலசுந்தரத்திடமிருந்தும், பேராசிரியர் சரத்சந்திராவின் தேசிய நாடகம்' பற்றி எம்.எஸ்.எம்.அனஸிடமிருந்தும் கட்டுரைகள் பெற்றுத் தந்தார்.
பின்னர் 'நுட்பம்' சஞ்சிகை சிறப்பாக வெளிவருவதற்கு அவரது பங்களிப்பு முக்கியமானது. அப்போது அவருக்குத் துணையாக யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மூர்த்தி என்பவருமிருந்தார். அவரையும் நித்தியானந்தன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். 'நுட்பம்' சஞ்சிகையின்பொருட்டு அவர் செய்த உதவிகளை ஒருபோதுமே மறக்க முடியாது.
அக்காலகட்டத்தில் அவரைச் சில தடவைகள் 'நுட்பம்' சஞ்சிகை விடயமாகச் சந்தித்துள்ளேன். ஒருமுறை அவரை அவர் வசித்து வந்த 'வைமன் றோட்' இல்லத்திலும் சந்தித்துள்ளேன். யாழ்ப்பாணக்கல்லூரி அதிபர் ராஜசிங்கத்தின் வீட்டு வளவில் அமைந்திருந்த இன்னுமோரில்லமது.
இன்னுமொரு தடவையும் அவரைச் சந்தித்துள்ளேன். கொழும்பு - யாழ் மெயில் புகையிரதத்தில் அவர் தமிழகத்துத் தமிழ் அறிஞர் ஒருவரை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். நான் மொறட்டுவைப் பல்கலைககழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்த 'நாவலர் பண்ணை' தன்னார்வத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த சமயம் நிகழ்ந்த சந்திப்பு அது. ஆனால் அச்சமயத்தில் அவருடன் நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
பின்னர் புலம் பெயர் சூழலில் 'பதிவுகள்' இணைய இதழில் அவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. முகநூலில் பதிவுகள் பற்றிப் பயன்மிகு கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டிருக்கின்றோம். தொலைபேசி மூலமும் உரையாடியுள்ளேன். இவையெல்லாம் திரு.மு.நித்தியானந்தன் அவர்களைப்பற்றி எண்ணியதும் நினைவுக்கு வருகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.