1
“31.4 ட்ரில்லியன் டாலர் கடன்?”
“,,,யாருக்கும், இது ஒரு செய்தியாக இருக்கலாம்.
எங்களுக்கு அல்ல.
கடன் பெறுவதே எமது தொழில்!
கடன் பெறுவதே எமது கம்பீரம்!!
கடன் பெற்றே இந்த சாம்ராஜ்யத்தை நாம் கட்டியெழுப்பி உள்ளோம்.
கடன் பெறுவதற்கூடாகவே உலகின் பெரும்பாலான நாடுகளை, நாம், எம் காலடியின் கீழ், கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம்…”
-இது கடனாளிகள் சார்பாக முன்வைக்கப்படும் வாதமாகும்.
மறுபக்கத்தில்:
“இதில் உண்மை இல்லாமல் இல்லை. இருக்கலாம். அல்லது இன்னும் சரியாக சொன்னால்- “இருந்திருக்கலாம்”. அதுவே உண்மை. ஏனெனில், இது கடந்த காலத்துக்கு உரித்தான ஒரு கூப்பாடு. 30 வருடத்தின் முன் இது ஓர் அப்பட்டமான உண்மையாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை வேறு. இன்றைய உலகம் மாறிவிட்டது”.
இது, மறுதரத்தவர் வைக்கும் எதிர்வாதமாகும். இவ்விரு தரப்பினரும்,இவ்வாறு முட்டி மோதும் ஒரு உலகிலேயே இன்று நாம் வாழ்கின்றோம். இவ்உலகிலேயே, பின்வரும் நகர்வுகளும் இடம்பெறுவதாக உள்ளது–விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!.
2
இதனையே, வேறு வார்த்தையில் கூறுவதானால், இதுவரை கட்டி எழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் பிரமாண்டம்–டாலரின் கேட்பார் கேள்வியற்ற ஆதிக்கம்–மேலும் ஒரு முனை உலகு என்ற நிலைமை–தர்க்கம்–வாதம்–அனைத்துமே இன்று சரிய தொடங்கியுள்ளன. அல்லது, குறைந்தபட்சம் கேள்விக்குட்படுத்தபடுகின்றன. காரணம் இல்லாமல் இல்லை. ஓரு சிறு உதாரணம்: ஒரு சிறு தொலைபேசி உரையாடலுக்கூடாகவே, தாம் கோரும் கோடிகளை, கொட்டி தீர்க்க சவுதி அரேபியா, தன் செல்லப்பிள்ளையான பாகிஸ்தானின் கோரிக்கைகளுக்கு என்றும் செவிசாய்த்து வந்திருந்தது–கடந்த காலங்களில். இன்று பாகிஸ்தானானது, உயிர் பிச்சை கேட்பது போல், சவுதியிடம், முழங்காலில் நின்று, மன்றாடி கேட்டுக் கொண்டாலும், ஒரு சதம் தானும் ஈயாமல், முகத்தில் அடித்தாற் போல் திருப்பி அனுப்புகிறது–தயவு செய்து நீங்கள் IMFமிடம் இருந்தே, பணத்தை கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி! (The Finance Times:22.03.2023)
IMF பாகிஸ்தானுக்கு 6.5 கோடி டாலர்களை தருவதாக கூறி, (இலங்கையின் விடயத்தை போன்றே), முடிவின்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது–கடந்த ஒரு வருடமாய்!.
போதாதற்கு, சவுதி அரேபியாவானது இன்று அமெரிக்காவின் பரம எதிரிகளான ஈரானுடனும், சிரியாவுடனும் கைகோர்த்து ஒப்பந்தங்களை செய்து கொள்ள விருப்பம் கொண்டு, அது தொடர்பிலான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. (அதிலும், முதலாவதை சீனமும், இரண்டாவதை ரஷியாவும் மூட்டுவித்தன என்பதையும் கருத்தில் கொண்டால்…) இது, மத்திய கிழக்கில் இன்று இடம்பெற்று வரும், ஆழமான, (அண்மை வரலாறுகள் காணக்கிட்டாத) அரசியல் மாற்றங்களை சுட்டுவதாக உள்ளது. இனி, ஆப்ரிக்கா-இந்தியா-பிரேசில் போன்ற நாடுகளின் விவகாரங்கள் குறித்து, தனியே, கூறவே தேவையில்லை. ஒரு ஜெய்சங்கர் போதும், நிலைமையை புட்டு வைக்க. அதாவது, ஒருபுறம் தனது கீழ்மை அடைந்துள்ள பொருளாதார நிலைமை. மறுபுறம், இந்த பொருளாதார நிலைமைகளுக்கு பக்கபலமாய், இதுவரை நிறுத்தி பிடித்து வந்த அல்லது தாக்கு பிடித்து நின்ற ராட்சச ராணுவ அமைப்பின் ஆதிக்கம் தொடர்பிலான கேள்வி.
இச்சூழ்நிலையிலேயே, இப்போது தனது பொருளாதார ஆதிக்கம் மாத்திரம் இல்லாமல் கூடவே, தனது ராணுவ ஆதிக்கமும் மெல்ல, மெல்ல சரிய தொடங்கியுள்ளது. அதாவது, தனது இரு கரங்களும், ஒன்றாய் வெட்டப்பட்டாற் போல் சில விவகாரங்கள் உலகில் நடந்தேற தொடங்கியுள்ளதை அமெரிக்கா மாத்திரமல்லாது, உலகமும் கவனிக்க தொடங்கி உள்ளது. ஆனால் இது ஒரு தொடக்கம் மாத்திரமே–முடிவல்ல என்பதும் ஒரு வெளிப்படைத்தான். அதாவது, ஒரு சாம்ராஜ்யமானது, தன் பங்குக்கு, ஒரு கடும் முயற்சி இல்லாமல் தன் சரிவை ஏற்று கொள்ளுமா, ஒரு புதிய ஒழுங்கை உள்வாங்கி தன் நிலையை அதற்கேற்ப மாற்றி கொள்ளுமா என்பதெல்லாம் கேள்விகுறிகள்தாம்.
3
உதாரணமாக, அண்மையில் தனது உக்ரேனிய போரில், ரஷிய மொத்தமாய் 81 ஏவுகணைகளை, உக்ரைன் மீது ஒரே நாளில் செலுத்தி பெரும் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது (CNN: 09.03.2023).
இவ் 81 ஏவுகணைகளும், உக்ரைனிய நாட்டில், பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டன என்று உக்ரைனிய அரசே ஏற்றிருந்தது. (தான் 31 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி விட்டதாய் அது கூறிக்கொண்ட போதிலும்…). இருந்தும், ரஷியாவோ, தனது அனைத்து ஏவுகணைகளுமே, தமது இலக்கை வெற்றிகரமாக அடைந்தன என்றும் அறிக்கை விட்டது. எது எப்படி இருப்பினும், உக்ரேனிய அறிக்கைபடி பார்க்கும் போதே, இதன்படி, 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், தமது இலக்கை அடைந்து விட்டதை உக்ரேனிய அறிக்கையே ஒப்பு கொண்டதாகின்றது. அப்படியானால், மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய பல்வேறு அதி நவீன ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு பீரங்கிகள் - ராக்கெட்டுக்கள்–பதில் ஏவுகணைகள்–இவற்றுக்கு யாது நடந்தது என்பதே கேள்வியாயிற்று.
இது ஒருபுறம் இருக்க, அதாவது, மேற்கு வழங்கிய, உக்ரைனின் அதி நவீன விமான எதிர்ப்பு அல்லது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை மௌனிக்கச் செய்து, பின், தமது இலக்கை அடையக்கூடிய ரஷியாவின் தொழிநுட்ப திறன் ஒரு புறம் இருக்க, இவ் 81 ஏவுகணைகளில் ஆறு Hypersonic வகையானது எனவும் (Kinzhal), இவை வரலாற்றில், முதல் முறையாகவே ஓர் யுத்த களத்தில் பாவிக்கப்பட்டுள்ளன என்பதுவே அதி முக்கியமான விடயமாகின்றது.
மேலும், இதுவே விடயங்களின் பாரதூரத்தை சுட்டிக் காட்டும் முக்கிய விடயமுமாகின்றது. அதாவது, Hypersonic வகையை சேர்ந்த இவ் நவீன ஏவுகணைகள் உலகிலேயே இரண்டே இரண்டு நாடுகளில்தான் உள்ளது. ஒன்று ரஷியா. மற்றது சீனா. இவ்விரு நாடுகளுமே அமெரிக்கா அல்லது அமெரிக்காவை சார்ந்த மேற்கு நாடுகளுக்கு நேரெதிரானவை.
இத்தாக்குதலை அடுத்து அமெரிக்க விமானப்படை, தனக்குரிய Hypersonic ஏவுகணைகளை உடனடியாக உருவாக்கி கொள்ள 385 மில்லியன் டாலர்களை பெண்டகனிடம் இருந்து கோரியதாக தகவல்கள் வெளியாயின (14.03.2023). ஆனால், இக்கோரிக்கையானது, ஒரு கோரிக்கையாக மாத்திரமே, இனி காலம் முழுவதும், கிடப்பிலும் கிடக்கக்கூடிய சங்கதியாக இருக்க போகின்றது, என்பதே அண்மையில் வெளிவந்த அமெரிக்க செய்திகள் வெளிப்படுத்தும் செய்தியாக உள்ளன.
காரணம், மார்ச் 13இல் தனது Hypersonic ஏவுகணையை பரீட்சித்து பார்த்த அமெரிக்கா இந்த தனது சோதனை வெற்றிப்பெற்றது என்று ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. ஆனால், பத்தே பத்து நாட்கள் கழிந்த நிலையில், அதாவது மார்ச் 24இல், இச்சோதனை (ARRW) வெற்றி பெறவில்லை என நேர்முறையாய் அறிவித்தது.
இதற்கு முன், “செப்டெம்பர் 30, 2020” முதல், அமெரிக்கா தனது Hypersonic ஏவுகணைகளை ஓர் தொடர் வரிசையில், போதியளவில் உற்பத்தி செய்து கொள்ளும் என்று அறிவித்திருந்த போதும் 24.03.2023இல், தான் அந்த நிலைக்கு இன்னும் வந்து சேர்ந்ததாக இல்லை என்று ஒப்புக்கொண்டு அறிக்கை விட்டது.
இவ்விரு முரண்பட்ட கூற்றுக்களும், உக்ரேனிய போரின் நிலைமையால் எழுந்த ஒன்று அல்லது நேட்டோ-ஐரோப்பிய ய10னியன்களின், ஸ்திரத்தன்மை குறித்து கரிசனையால் எழுந்த ஒன்றா என்பதனையும் தாண்டி அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கம் தொடர்பிலான கேள்வியை, இன்று உலகளாவிய ரீதியில், இன்று, கேள்விக்குட்படுத்தும் ஒரு விடயமாக அமைந்து விட்டது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், தனது நலிவுற்ற பொருளாதார நிலைமையுடன், (தனது தொழிநுட்ப பின்னடைவின் காரணமாய்), தனது ராணுவ ஆதிக்கமும் பறிபோகும் ஒரு நிலைமையை, இன்றைய யதார்த்தம், அமெரிக்கா மேல் சுமத்தி விட்டதா என்பதுவே உலகு இன்று கேட்கும் கேள்வியாகின்றது.
இதனுடன் இணைந்தாற் போலவே, விண்வெளியில், தற்போது நடந்து வரும் ஏட்டிக்கு போட்டியான, பல்வேறு, விவகாரங்களையும் கருத்தில் கொண்டால் சீனம் தற்போது தனக்கே உரிய விண்வெளி தளத்தை அமைத்து விட்ட விந்தை நிகழ்வையும், பின் அது ரஷியா போலவே நூற்றுக்கணக்கான செய்மதிகளை விண்ணில் சொந்தம் கொள்ள துவங்கியுள்ளது என்பதனையும் கருத்தில் கொண்டால் விடயங்களின் தீவிரம், பற்பல பரிமாணங்களுடைய, கேள்விகளை எழுப்புவதாய் உள்ளது. இவை அனைத்தும், உலகில் ஒரு முனை ஆதிக்கம் தொடர்பிலான வாதங்களை துவக்கி விடுவதில் புதிய தீவிரங்களை உண்டு பண்ணி விடுகின்றது எனலாம்.
இச்சூழலில், உக்ரைனின் தலைவிதியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, தனது சொந்த தலைவிதியை கையில் ஏந்தி கொள்வதில், இன்றைய அமெரிக்க அரசு அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளதாகவே தெரிகின்றது. இல்லையெனில், இவ்வளவு காலம் சென்ற பின்னர், ட்ரம்பை இன்று கைது செய்ய முன்வந்திருக்குமா என்பதெல்லாம், இன்றைய கேள்வியாகின்றது.
4
ஆனாலும், நாளும் வளர்ச்சி பெற்று வரும் ரஷிய-உக்ரைனிய மோதல்கள், அமெரிக்காவுடனான ஒரு நேரடி மோதலுக்கு அல்லது ஓர் மூன்றாம் உலக யுத்த போருக்கு அல்லது ஓர் அணு ஆயுத பாவிப்புக்கு அல்லது ஒரு நேட்டோவின் ஒரு படை இறக்கலுக்கு வழி செய்யுமா என்பதெல்லாம், இனி வரும் கேள்விகளாகவே இருக்கின்றன. மேற்கினால், ஒரு சமாதான படையை, உக்ரைனில் இறக்கும் முயற்சி, தற்போது, ரஷியாவின் கூற்றுகளால், தடுமாற்றங்களை அடைந்திருப்பதாகவே தெரிகின்றது. ரஷியாவோ, இது சமாதான படை என்ற பெயரால், வரவழைக்கப்படவிருக்கும் நேட்டோ படையே என்ற அளவில், இப் படையை தமது தாக்குதல் இலக்குகளாய் கொள்ள போவதில் தவறேதும் இல்லை என்று அறிவித்து விட்டது - இச்சமாதான படை தனது ஒப்புதல் இன்றி, உக்ரைனில் இறக்கி விடும் பட்சத்தில்!
5
சீதோஸ்ண நிலைமை இரண்டாம் பட்சமானது. முக்கியமானது நிலம் கெட்டிப்படுதலே எனக் கூறப்படுவதில் உண்மை இருக்கலாம். அதனால், ரஷியாவானது, தனது பிரதான படையெடுப்பை, குளிர்காலத்தில், நிலம் கெட்டிப்பட்டவுடன், (சகதிகளற்ற நிலை) தொடங்கி விடும் என்று வல்லுனர்கள் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தனர் (கடந்த வருடங்களில்). ஆனால், வருடத்தின் குளிர்காலம் வந்தும் சென்று விட்டது. ஆனால், நிலம்தான் கெட்டிப்படவில்லை. காரணம், இவ்வருடத்தின் குளிர்காலம் எதிர்ப்பார்த்த அளவு குளிரானதாக இருக்கவில்லை. நிலம் சகதி நிரம்பியதாகவே இருந்தது.
எனவே, துருப்புகளின் அசைவு என்பது சகதிகளில் முடியாததாகின்றது. ஆனால், ரஷியாவை பொறுத்தவரை இது வழமையானதுதான். ரஷியா எவ்வாறு தனது பிரதான படையெடுப்பை இரண்டாம் உலக போரின் போது, நிலம் கெட்டிப்படும் வரை, இரண்டு மாதங்கள் தள்ளி வைத்து காத்திருந்ததோ, அப்படியே, இப்போதும் நிலம் கெட்டிப்படும் வரை–அதாவது, இவ்வருடத்தின் கோடை தொடங்கி நிலம் கெட்டிப்படும் என காத்திருப்பதாய் தெரிகின்றது. ஆனால், ஒரு சில ஆய்வாளர்கள் “பக்மூத்தின்” நிலவரங்களை கருத்தில் கொண்டு பார்க்குகையில், ஏற்கனவே ரஷியாவின் பிரதான படையெடுப்பு, மறைமுகமாய் தொடங்கப்பட்டு விட்டதோ என ஐயுறவுப்படுவதாகவே தெரிகின்றது.
6
“பக்மூத்தின் நிலவரம்”
“பக்மூத்தின்” சண்டையில், “பக்மூத்தின்” நிலைமைகள் மிக மிக சுவாரஸ்யமாகவே அமைந்துள்ளன. கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களாய், தொடர்ச்சியான இடைவிடாத தாக்குதல்களால், அதிர வைக்கப்பட்டுள்ள “பக்மூத்” கிட்டத்தட்ட ஒரு எரிகின்ற சுடுகாட்டை போலவே இன்று காட்சி தருகின்றது.
“பக்மூத்தில்” இருந்து உக்ரைனின் துருப்புக்கள் வெளியேறிவிட்டன என்றும் பின்னர், இல்லை வெளியேறி கொண்டிருக்கின்றன என்றும் அறிவிப்புக்கள் உக்ரைனால் அடுத்தடுத்து பலமுறை விடுக்கப்பட்டிருந்தாலும், இல்லை இல்லை இப்போதுதான் புதிய துருப்புக்கள் வந்து சேர்ந்து, களமானது பலப்படுத்தப்படுகின்றது என்றெல்லாம் தலைகீழான செய்திகள் ஒன்றுக்கொன்று நேரெதிர் முரணாய் உக்ரைனிய அரசால் விடுக்கப்பட்டு வருகின்றது.
அதாவது, ஏறுக்கு மாறான, முரணுற்ற அறிக்கைகள் என்பன, “பக்மூத்தில்” களநிலவரங்கள் தொடர்பில், பிரசித்தம் பெற்றதாய், இன்று, அமைந்து போனது. இது உக்ரைனிய அரசுக்கு மாத்திரம் அல்லாமல் மேற்குக்கும் இது பொதுவான விதியாக இன்று அமைந்து விட்டது.
உதாரணமாக “பக்மூத்தை கைவிடுங்கள்” என்று மேற்கின் ராணுவ அதிகாரிகள் அபிப்பிராயப்படுவதாக வெளிவரும் கூற்றுக்கள் ஒருபுறம். “பக்மூத்தில் நவீன தாங்கிகளை இறக்கி விட்டுள்ளோம்” என்ற மார்தட்டல் மறுபுறம்.
கூடவே உக்ரைன் ராணுவத்தின் படைத்தளபதிகள் “பக்மூத்தின்” படைவிலகலை ஆதரிக்கின்றனர் என்றும் ஆனால் செலன்ஸ்கி மாத்திரமே அதற்கு ஆதரவு தர மறுத்துள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்ததாக இருந்தன.
இப்படிபட்ட முரண்பட்ட செய்திகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒன்று, எதிரியை திசை திருப்பும் நோக்கத்துடன் இச்செய்திகள் அவிழ்த்து விடப்பட்டதாய் இருக்கலாம்.
மறுபுறத்தில், இவற்றை கடந்த ஒரு யதார்த்தம் “பக்மூத்தில்” ஜீவிக்கவே செய்கிறது என்ற உண்மை கவனத்தில் கொள்ளத்தக்கதே.
““Solidar” நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து கைப்பற்றிய போது சில உக்ரைனிய வீரர்கள், ஐந்துமாடி கட்டிடங்களில் இருந்து, கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்-சரணடைய விருப்பமின்றி-என அறிக்கைகள் அன்று வெளிவந்திருந்தன. (கிட்டத்தட்ட, சயனைட் குப்பிகளை கடித்து மரணத்தை தழுவும் அதே தியாக உணர்வின் கீற்றுக்களை நாம் இங்கு அடையாளம் காணலாம்).
“பக்மூத்தில்” செறிவுற்றிருக்கும் இவ்வீரர்கள், ஒரு நாளும் பக்மூத்தை விட்டு நகரப்போவதில்லை–மரணம் அணுகினாலும் என்ற தளரா உறுதி இவர்களிடையே காணப்படுவதாய் இருக்கின்றது.
இச்சூழலில், ஸெலன்ஸ்கி அல்லது வேறு யாரேனும், பக்மூத்தின் படை விலகலுக்கான உத்தரவை பிறப்பிப்பார்கள் எனில், மறுகணம் அவர்களின் சொந்த இருப்பே கேள்விக்குறியாகிவிடும். (கிட்டத்தட்ட நந்திக்கடலில் இருந்து படை விலகலுக்கான கோரிக்கையை விடுத்தது போலத்தான்!). எனவே, ஸெலன்ஸ்கி, பக்மூத்தின் படைவிலகலுக்கான ஒரு கோரிக்கையை முன்வைப்பார் எனில் அதுவே அவருக்கு உலையாக அமைந்து விட கூடும்.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே, பக்மூத்தில், மேலும் வீரர்களையும் ஆயுதங்களையும் களமிறக்க வேண்டிய தேவை ஸெலன்ஸ்கி தலையில் இன்று விடிவதாய் உள்ளது. இதுவே, ரஷியாவுக்கான வரப்பிரசாதமுமாகின்றது. அதாவது, பக்மூத்தை ஒரு பொறியாக்கி உக்ரைனிய வீரர்களை மேலும் மேலும் இழுத்தெடுத்து அப்பொறியில் சிக்க வைக்கும் ஒரு ரஷிய திட்டம் மேற்படி “தியாக உணர்வை” அல்லது “சமரசம் கடந்த கொள்கை உணர்வை” தமக்கு சாதகமாக பாவிக்க துணிகின்றது. இவ்வடிப்படையிலேயே, பக்மூத் போர்களத்தில் ரஷிய மேற்கொள்ளும் போர் முறை மிகுந்த தந்திரம் படைத்ததாக காணக்கிட்டுகின்றது.
பெரிய படையெடுப்புகளை நடத்தாமல், அடிப்படையில், ஆர்ட்டிலரிகளிலேயும், ராக்கெட்டுகளிலேயும், ஏவுகணைகளிலேயும் ரஷியா தங்கி நிற்பதாய் தெரிகின்றது. ஆனால், இன்றைய ஆர்ட்டிலரி போர் முறையானது நேற்றைய ஆர்ட்டிலரி போர் முறையில் இருந்து, முற்றாக வித்தியாசம் படைத்தது என கூறலாம். (இரண்டாம் உலக போரில், மாபெரும் யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டாலின், ஆர்ட்டிலரியே, யுத்தத்தின் நாடி–வழிநடத்தக்கூடிய கடவுள் என அடையாளம் கண்டது நினைவில் கொள்ளத்தக்கது).
ஆனால், இன்று விடயங்கள் மாறிவிட்டன. ஆர்ட்டிலரிகள் தமது தாக்குதல்களை தொடங்கும் முன்னால், முதலில் ட்ரோன்களால் வேவு பார்க்க்கப்பட்டு, எதிரி துருப்புகள் அடையாளம் காணப்படுகின்றன. யுத்த வல்லுனர்கள் தற்போது ரஷியாவானது, தனது எதிரி படை துருப்புகளை 24 மணி நேரமுமாய், கிழமையில் ஏழு நாட்களும், மாதத்தில் 30 நாட்களாய் இடைவிடாது தங்கள் செய்மதி மூலமாக விண்ணிலிருந்தும் விமானங்கள் மூலமாகவும் ட்ரோன்கள் மூலமாகவும் துல்லியமாக இரவு பகல் என்று பாராது, தொடர்ந்து கண்காணிக்கின்றார்கள். அதன் பின்னரே ட்ரோன்கள் வழிநடத்த ஆர்ட்டிலரிகள் அல்லது ராக்கெட்டுக்கள் அல்லது ஏவுகணைகள் தனது இலக்குகளை துல்லியமாக, தெரிவு செய்த பின்னர், குண்டு மழை பொழிகின்றன.
சுருக்கமாக கூறினால், (அல்லது ஒரு வசதிக்காக கூறினால்) ஒரு வகை ட்ரோன்கள் முதலில் இறக்கப்பட்டு, அவை மோப்பம் பிடித்த பத்து நிமிடங்களுக்குள், அடுத்த வகைப்பட்ட ட்ரோன்கள் அனைத்து தாக்குதல்களையும் நடத்தி முடிக்கின்றன. அல்லது ஆர்ட்டிலரிகள், அல்லது ராக்கெட்டுக்கள், அல்லது ஏவுகணைகள் தமது தாக்குதலை நடத்தி முடிக்கின்றன. தாக்குதலை நடத்திய இவ் ஆட்ர்டிலரிகள் தம் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து சில நிமிடங்களுக்குள் தமது இருப்பிடத்தையும் மாற்றி கொள்கின்றன.
இது போக, மெக்ரோகர் போன்றோர், உக்ரைனில் இருக்கும் ஒவ்வொரு ஆர்ட்டிலரிக்கும் பதில் சொல்ல ரஷியாவிடம் பத்து ஆர்ட்டிலரிகள் காணப்படுவதாய் அப்பிராயம் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, பக்மூத்தை, உக்ரைனின் “கொதிகலன்” என்ற வகையில் குறிக்கும் ஓர் சொல் மிகை சொல்லாகாது என கருதப்படுகின்றது. சுருக்கமாக கூறினால், இரண்டாம் உலக போரில், ஜெர்மனியை துவம்சம் செய்த யுத்தமல்ல இன்று ரஷியா புரியும் யுத்தம் என்றாகின்றது. போதாதற்கு, பக்மூத்தை இன்று சுற்றி வளைத்துள்ள ர~;ய ஆர்ட்டிலரிகள், பீரங்கிகள், ட்ரோன்கள், ஏவுகணைகள் அனைத்தும் உக்ரைனிய வீரர்கள் சென்று வர ஒரே ஒரு பாதையை மட்டும் திறந்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இது, உக்ரைனின் பலம் என்று கருதினாலும் Suntzu என்ற போர் சாணக்கியர் (554-470 BC) பின்வருமாறு கூறுவார்:
“உங்கள் எதிரிகள் பின்வாங்கும் பொருட்டு தங்கத்தாலான ஒரு பாலத்தை நீங்கள் கட்டுவியுங்கள்” என.
அதாவது, ரஷியா, பக்மூத்தை ஒரு பொறியாக பாவித்து மேலும் மேலும் உக்ரைனிய துருப்புக்களை கவர்ந்திழுத்து, விட்டில் ப10ச்சிகளுக்கான விளக்காக பக்மூத்தை ஒளிர செய்யும் தந்ரோபாயத்தை கைக்கொள்கின்றது என்றே படுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால், மேற்கு அல்லது உக்ரைன் நகர்த்திய காய்களாக கிரைமியாவின் பாலத்தை தகர்த்தல் அல்லது நோர்ட்-2 எரிவாயு குழாய்களை அழித்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் ரஷியாவை அவசரமாக களமிறக்க செய்யும் முயற்சிகள், தோல்விலேயே முடிவடைந்துள்ளன.
இந்த, பொறிகளில் சிக்கமாட்டாத ரஷியா, தனது பாரம்பரிய துருவக்கரடியின் பதற்றமின்மையை கடைபிடித்து, தன் பிரதான படை இறங்கலுக்கான சாதக நிலைமைகளையே தன் கருத்தில் கொள்வதாக இருக்கின்றது. (இது எதிர்வரும், மே அல்லது ஜுன் மாதங்களில் இடம்பெறக்கூடும் என வல்லுனர்கள் அபிப்பிராயப்படுவதாய் தெரிகின்றது). அதுவரை, ரஷியா, பக்மூத்தை, உக்ரைனுக்கான தனது பிரதான பொறிகளில் ஒன்றாக கட்டமைக்கவே தீர்மானித்துள்ளது. முரடு தட்டிப்போன உக்ரைனிய வீரர்கள் பக்மூத்தை விட்டு வெளியேற மாட்டாத ஒரு நிலைமையில்-அதாவது வெளியேறுவது ஒரு இழுக்கு என்ற அரசியல் செயல்படும் வரை, ரஷியா, பக்மூத்தை ஒரு பொறியாகவே கொள்ளக்கூடும் என்றாகின்றது. எனவே, பக்மூத்தில் காணப்படும் இந்த பொறி அல்லது உக்ரைனில் காணப்படும் இந்த ஒரு பொறி அமெரிக்காவை எதனை நோக்கி இட்டு செல்லக்கூடும் என்ற கேள்வியே இன்று, பிரதானமான கேள்வியாக இருக்கின்றது.
அதாவது, அமெரிக்காவினது உள்நாட்டு நிலைமைகள் அதன் வெளிநாட்டு நிலைமைகள் போலவே, நாளுக்கு நாள், உக்ரைனை விட மோசமான சரிவுகளை சந்தித்து வருவதாக, பல ஆய்வாளர்கள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு சுட்டியாக அமெரிக்காவின் இரு பிரதான வங்கிகளின் சரிவுகளை அவர்கள் அடையாளம் காண்கின்றனர்.
7
SVB
சிலிக்கன் வங்கி என்று பரவலாக அறியப்பட்ட மேற்படி வங்கியானது, தனது கோடிக்கணக்கான டாலர்களை, அமெரிக்க இறைமுறி வடிவத்திலும் வேறு பல அரச முறிகளின் வடிவத்திலும், சொத்துக்களாய் கொண்டிருந்தது. இரு தினங்களின் முன், வங்கியின் முக்கியஸ்தர் ஒருவர் (CEO) வங்கி, இனி ஈட்டவிருக்கும் லாபங்கள் பொறுத்து விலாசி தள்ளியிருந்தார். ஆனால் மறுதினம் தன் வங்கி திவாலாகி விட்டதாக, அவர் அறிவிக்க நேர்ந்தது (10.03.2023). இவ்வங்கி திவாலாகி விட்டமைக்கு முக்கிய காரணம், அமெரிக்க அரசு, தன் இறைமுறிக்கான வட்டி வீதத்தை 0.25%இல் இருந்து, 4.75% ஆக உயர்த்தியதே ஆகும் என்பது வல்லுனர்களின் துணிபாகின்றது. அதாவது, மார்ச் 2022 அளவில், 0.25 வட்டி வீதத்தை கொண்டிருந்த அமெரிக்க அரசு பெப்ரவரி 2023இல் 4.75 வீதமாக வட்டி வீதங்களை உயர்த்தி விட்டது. வட்டி வீதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, வங்கியின் வாடிக்கையாளர்கள், சடுதியாக, ஒரே தாவலில் தங்களின் வைப்புக்களை வங்கியில் இருந்து மீளப்பெற்று புதிய வட்டி வீத்தின் அடிப்படையில் முறிகளை வாங்க தெண்டித்து விட்டனர்.
இப்படி சடுதியாக, வைப்பாளர்கள் தங்கள் பணத்தை வங்கியிடமிருந்து கோரிய போது, கொடுக்க பணமற்று, தர்ம சங்கடத்துக்குள் ஆளான வங்கி, தன் கைவசம் இருந்த 21கோடி டாலர் பெறுமதியான தனது அரச இறைமுறிகளை சந்தையில் குறைந்த விலைக்கு விற்று தள்ளி, காசை திரட்ட முயற்சித்தது. இதனால் மாத்திரம் வங்கிக்கு ஏற்பட்ட நட்டம் எட்டு கோடி அமெரிக்க டாலர் என மதிப்பிடப்படுகின்றது. இருந்த போதும், வைப்பாளர்கள் தொடர்ச்சியாக, தொடர்ந்தும் தம் வைப்புக்களை மீளப்பெற தொடங்கியதால் வங்கி தனது திவால் நிலைமையை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானது.
கேள்வி: அமெரிக்க அரசு ஏன் தன் வட்டி விகிதத்தை சடுதியாக உயர்த்தியது? புதிய இறைமுறிகளை விற்று காசு திரட்டவா? அப்படி என்றால், இக்காசற்ற நிலைமை எவ்வாறு உருவானது? இவை, உக்ரைனிய போரில் செலுத்தக்கூடிய தாக்கங்கள்தாம் யாவை?
(தொடரும்)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.