இன்னும், மூன்று–நான்கு மாதங்களில், நாட்டின் காங்கிரஸானது, அமெரிக்காவின் கடன் பெறும் வரையறையை உயர்த்தவில்லை என்றால், அதாவது எமது நாடான இலங்கையைப் போல், காசடித்தும் - இறை வரிகளை விற்று தீர்த்தும் அல்லது, இன்னும் இது போன்ற பல வழிகளில், மக்களை அடமானம் வைத்து கடன்களைப் பெற்று வாழ்க்கை ஜீவிதத்தை ஓட்டி செல்ல, வழி செய்து தரும் வகையில் -காங்கிரஸானது கடன் பெறும் தனது வரையறையை உயர்த்தவில்லை என்றால்;–அமெரிக்காவானது, தனது, வங்துரோத்து நிலையை உலகு அறிய பிரகடனம் செய்வதை தவிர வேறு வழி இல்லை என அமெரிக்கத் திறைசேரியை சார்ந்த, யெலன் அம்மையார், அண்மையில் கூறிவிட்டார்.
இருந்தாலும் கடன் பெறும் உச்ச வரம்பை முற்றாக உதாசீனப்படுத்தி புறக்கணித்துவிட்டு– அப்புறக்கணிப்பிற்கூடாக இப்போதிருக்கும் வாழ்க்கை ஜீவிதத்தை தொடரலாம் அல்லது தொடர்ந்தும் உலக நாடுகளிடம் இருந்து பணம், புரட்டி, வாழ்வதைத் தொடரலாம் என அமெரிக்கப் பொருளியல் வல்லுனர்கள் சிலர் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். மொத்ததில் மூன்று வழிகளுமே, உலக வல்லரசாகிய அமெரிக்கா தேர்ந்து கொள்ள, அதன் முன் நிற்க கூடிய மூன்று வழிகளாகின்றன. அதாவது, ஒன்று, வட்டி கட்ட முடியாத வங்குரோத்து நிலைமையை அறிவிப்பது, அல்லது கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தி விட்டு மேலும் டொலர்களை அச்சிட்டு வெளியிடுவது, அல்லது கடன் முறிகளை மேலும் ஏற்படுத்துவது என இவ்வழிகள் தேரப்பட வேண்டியவையாகத் தோற்றம் தருகின்றன. ஆனால், அதால பாதாளத்துள் வீழ்ந்துள்ள இத்தகைய பொருளாதார நிலைமை, உலகின் முதல் வல்லரசு என கூறப்படும் அமெரிக்காவிற்கு வந்துள்ளது என்ற செய்தியே சங்கடத்தை உண்டு பண்ணும் செய்தியாக இருக்கின்றது.
இது போதாது என்று மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று, இன்று சீனாவும் ஜப்பானும் போட்டி போட்டு கொண்டு தாம் இதுவரை வாங்கி குவித்திருந்த, அமெரிக்க கடன் முறிகளை, உலக சந்தையில் விற்று கரைக்க வேறு தொடங்கிவிட்டன. ஜப்பானானது, இவ்வருடத்தின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்றே மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம், தன் கையிருப்பிலிருந்த 2.43 கோடி அமெரிக்க கடன்முறிகளை, உலக சந்தையில் விற்று தீர்த்து விட்டதாக அறிவித்து விட்டது. இதற்கு சற்றும் குறைவில்லாமல், சீனமும், தன் பங்கிற்கு, தான் பெற்று வைத்திருந்த கோடிக்கணக்கான பெறுமதியான அமெரிக்க கடன் முறிகளை விற்று தீர்த்துள்ளது. 2012இல் இருந்து 2022 வரையிலான 10 வருட காலப்பகுதியில், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் முறிகளை, சராசரியாக தன் கைவசம் கொணடிருந்த சீனா, இன்று விற்று தீர்த்தது போக பெப்ரவரி 2023இல் வெறும் 123.25 கோடி டாலர் பெறுமதியான அமெரிக்க கடன் முறிகளை மாத்திரம் தன் கைவசம் கொண்ட நாடாக இன்று திகழ்கின்றது.
இன்று, அதன் கையிருப்பு, ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து வெறும் 173.85 கோடி டாலர் பெறுமதியான கடன் முறிகளை தன் கையிருப்பாக கொண்டுள்ள நாடாக சீனம் மாறிவிட்டது. வேறு வார்த்தையில் கூறினால், அமெரிக்க கடன் முறிகளை வாங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு இருந்த இவ்விரு நாடுகளும் (ஒவ்வொன்றும் தலா ஒரு ட்ரில்லியனுக்கு அதிகமாக) இப்போது திடுதிப்பென, கடன் முறிகளை விற்கும் மும்முரத்தில் கச்சை கட்டி உள்ளன. டொலரின் பெறுமானம், உலக சந்தையில், தன் நம்பிக்கையை இழந்தபடியால்தான் இந்நாடுகள் தம்வசம் இருந்த கடன் முறிகளை விற்று தீர்த்தனவா? அல்லது டொலரின் பெறுமானத்தை குறைக்க எண்ணி திட்டமிட்டே இவை விற்று தீர்த்தனவா? என்பதெல்லாம் பொருளியல் ஆய்வாளர்களுக்கு சுவாரஸ்யம் தரும் கேள்விகளாக இன்று உருவாகியுள்ளது.
இருந்தும், அமெரிக்காவானது, சீனம், இலங்கைக்கு, வழங்கியிருக்கும் கடன்களுக்கான, மீள்செலுத்துகை நடைமுறைகளை, தளர்த்தவேண்டும் அல்லது இலகுபடுத்த வேண்டும் என்று கூச்சநாச்சமின்றி, இலங்கை சார்பில் குரல் கொடுக்கும் சிரிப்பிற்கு இடமான நிகழ்வும் இடம்பெறவே செய்கின்றது. அதாவது, IMF இன்று, வழங்க இருப்பதாக கூறும் 2.9 கோடி அமெரிக்க டொலர்களை முற்றாக வழங்குவதென்றால் சீனம், இலங்கைக்கு தந்துள்ள கடன்களின் மீள்செலுத்துகைக்கான வழிமுறைகளை தளர்த்தியாக வேண்டும் என்று ஒரு தமாஸ் போடு போட்டு இருக்கின்றது–தான் இருக்கும் கேடு கெட்ட நிலையிலும்!
இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவின் உள்விவகார நிலையை அலசி ஆராய முற்படும் உலக வல்லுனர்கள் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அந்நாட்டில், எவ்வளவு பலம் பொருந்திய ஒன்றாக காணப்படுகின்றது என்றும், அதனை சார்ந்திருக்கும் கம்பனிகள்–(யெலன் மஸ்க் முதல் ரேய்தான் வரையிலான நூற்றுக்கணக்கான பாதுகாப்பு துறை சார்ந்த கம்பனிகள்)–உலகம் முழுவதையும் எப்படி ஆக்கிரமித்து, யுத்த நிலைமைகளை அல்லது யுத்த நெருக்கடிகளை உலகம் முழுவதும் தோற்றுவித்து அதற்கு ஊடாக இலாபம் தேட முனைகின்றன என்பதனையும் விலாவாரியாக எடுத்துரைத்துள்ளனர். உதாரணமாக, உக்ரைன்-ரஷ்ய யுத்தத்தில், அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை (30-40 பில்லியன்) என்று உக்ரைனுக்கு தானம் செய்திருந்ததாய் அறிவித்த போதிலும், அப்பணத்தின் பெரும் பகுதி, ஒரு போதும் அமெரிக்க எல்லைகளை அவை தாண்டுவதில்லை என்றும், அது அமெரிக்காவின் உள்ளேயே கைமாறி கைமாறி ஒரு பையிலிருந்து மறுபையிற்கு தாவிக்கொள்வதுடன், உதவி தொகையின் பயணம் நிறைவு கொள்கின்றது எனவும் அம்பலப்படுத்தியிருந்தார்கள். (மக்ரோகர்).
உதாரணமாக, Northrop Grumman இன் பங்குகள் 2022இல் மாத்திரம் 40 வீதத்தாலும், Lockheed Martin இன் பங்குகள் 37 வீதத்தாலும், அதிகரித்துள்ளன என பதிவுகள் கூறுகின்றன. இதேவேளை, Lockheed Martin தனது உற்பத்தியான ஜவ்லின் ஏவுகனைகளை வருடத்திற்கு 2100இல் இருந்து 4000 வரை உயர்த்தியுள்ளது என்றும் தனது Himars ராக்கெட்டுகளையும் வருடத்திற்கு 60இல் இருந்து 96 வரை உயர்த்தியுள்ளது என்றும், இவை கோடிக்கணக்கான டொலர் இலாபங்களை அக்கம்பனிக்கு, உண்டு பண்ணவே செய்கின்றது என்றும், ABC செய்தி வெளியிட்டு இருந்தது. (Annika Burguess : 20.01. 2023)
இதேபோன்று “அமெரிக்க சஞ்சிகை” இல் Joha W.Miler அண்மையில் எழுதியிருந்தாவது: North Rop Grumman,Lockheed Martin, போய்ங், ஜெரல் டயனமிக்ஸ்–போன்று தாங்கிகளில் இருந்து விமானங்கள் வரை உற்பத்தி செய்யும் கம்பனிகளின் இலாப விகிதம் தற்போதைய உக்ரேனிய-ரஷ்ய போரால் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. இவ் ஸ்தாபனங்கள் அமெரிக்க பட்ஜெட் ஒதுக்கீடுகளில் (2022இல்) 678 கோடி டாலர்களை அல்லது (பட்ஜெட்டின்) 10 வீத ஒதுக்கீட்டை பெற்றவையாக இருக்கின்றன. அமெரிக்கா ஏனைய அனைத்து உலக நாடுகளை விட, பன்மடங்கு அதிகமாய் இராணுவத்திற்கு செலவழிக்கும் ஒரு நாடாகின்றது. இது மாத்திரமில்லாமல் வருடம் முழுவதும் பல கோடி பெறுமதியான ஆயுதங்களை உலகம் முழுவதும் அது ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இருந்து வருகின்றது. இது, தொடர்பில் போப்பாண்டவரை கூட, 2015இல், யுத்த வியாபாரத்தினை ஒரு முடிவிற்கு கொண்டு வர நேரம் கணிந்து விட்டது என்றும் கூறவைத்து விட்டது, அவர் கூறினார்;: “பணம், பணம், பணம்–அதிக சந்தர்ப்பங்களில், ஒன்றுமே அறியாத மக்களின் வஞ்சனையற்ற, சூதுவாதற்ற மக்களின்–மக்கள் சிந்திய இரத்தத்தில் ஊறிய பணம்…” (09.03.2023).
மேலும், The Shadow World: The Inside Of The global Arms Trade என்ற நூலில் ஆயுத உற்பத்தியில் கிட்டத்தட்ட, வருடம் ஒன்றிற்கு, 2 ட்ரில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றன என்ற உண்மை பதியப்பட்டுள்ளது. ( Andrew Feinstein )
இதேவேளையில், ஒரு கோடி டொலர் பணமானது, கல்வித்துறையில் பிரயோகிக்கப்படும் போது, அது 17,678 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் வேளையில், இதே பணம் சுகாதாரத்துறையில் 12,883 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரக்கூடும் என்றும், ஆனால் இதே தொகை ஆயுத உற்பத்தியில் ஈடுபடுத்தும் போது வெறும் 8555 தொழில் வாய்ப்புக்களை மாத்திரமே உருவாக்கி கொள்கின்றது என்பதையும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.
சுருக்கமாக கூறினால், இப்பணத்தொகை மனுக்குலத்தின் மேம்பாட்டிற்காக பாவிக்கப்படாமல், மனுக்குலத்தை அழித்தொழிக்கவே பாவிக்கப்படுவதாயுள்ளது என்பது ஒரு புறம் இருக்க, ஏற்படுத்தப்படும் தொழில் வாய்ப்புக்களின் தொகை கூட இங்கே, சோடை போன ஒன்றாகவே காணப்படுகின்றது. ஆனால் இந்த உண்மைகள், அனைத்தையும் குறித்த கம்பனிகளும், குறித்த கொள்கை வகுப்பாளர்களும் அறியாத ஒன்றல்ல. அனைத்து உண்மைகளையும் அறிந்தே அவர்கள் உக்ரேனிய-ரஷ்ய போரின் வகுப்பாளர்களாகவும், விவகாரங்ளை மூடிவிடும் கொள்கையின் கர்த்தாக்களாகவும் இருக்கின்றனர். காரணம் என்ன? இதனையும் மெக்ரோகர் அவர்களே விளக்குகின்றார்:
“ரிப்பப்லிக்கன்ஸ் (குடியரசுவாதிகள்) அல்லது டெமோகிரட்ஸ் (ஐனநாயகவாதிகள்)–இவர்கள் இருவருமே இவ்விடயத்தில்–அதாவது, ஒரு யுத்த விடயத்தில்–ஒன்றாகவே இருப்பர். காரணம் இருவரையும் காங்கிரஸிற்கும் செனட்டிற்கும் அனுப்பி வைப்பதே இவ்வாயுத கம்பனிகள் தாம். இக்கம்பனிகள் தரும் பண ஊக்குவிப்புக்களாலும், கையூட்டல்களாலும் தான் இவர்கள் காங்கிரஸிற்கும் செனட்டிற்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்..”.
இதனை விட, “அங்கு செல்லும் இவர்கள். வேறு எதனையும் செய்வார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது- இக்கம்பனிகளின்-அதாவது தம்மை அனுப்பி வைத்த கம்பனிகளின் நலன்களை முன்னெடுப்பதை தவிர எதைத்தான் இவர்கள் சாதிக்க கூடும். மொத்தத்தில் ஆயுத வியாபாரிகள், அமெரிக்க காங்கிரஸினை கைபற்றி விட்டனர்” என்ற குரல் வலுவுடன் ஒலிப்பதாக உள்ளது.
இதனுடன், தற்போது நலிவுற்று சிதைந்திருக்கும் அமெரிக்காவின் பொருளாதார நிலை மற்றும், ஆயுத உற்பத்தி துறையின், கட்டுபாட்டில் இயங்கும் காங்கிரஸ்–செனட் சபைகள்–பின் இதனுடன் இணைந்த ஒரு ஜனாதிபதி–இவை போன்ற யதார்த்தங்கள் போக அமெரிக்காவில் இன்று நிலவும் பணவீக்கம், வாழ்க்கை செலவின் உயர்வு, இவையும், இவற்றின் தாக்கத்தால் எழுச்சியுறும் தொழிற்சங்க போராட்டங்களின் உக்கிரமும் (வலதுசாரி-இடதுசாரி தொழிற்சங்கங்கள் இணைந்த ஒன்றாய்) இவ் அனைத்தும், ஒன்று சேர்ந்து வரலாறு காணாத, தாக்கத்தை அமெரிக்காவில் இன்று உருவாக்குவதாக இருக்கின்றன. இதனுடன் கூடவே, மெக்சிகோ போன்ற நாடுகளிருந்து ஊடுருவும் அகதிகள் பிரச்சினைகள் உள்ளிட, அமெரிக்க சமூதாயமே இன்று தன்னை அறியாமல் ஒரு கிரிமினல் சமூதாயமாக உருவெடுக்கும் அபாயகரமான போக்கும் இன்று அமெரிக்காவில் தென்பட தொடங்கியுள்ளது என மெக்ரோகர் போன்ற விமர்சகர்கள் குறிப்பிடுவதாயுள்ளது. அதாவது, நாட்டின் இவ் உள் விவகாரங்கள், உக்ரேனிய-ரஷ்ய போரை ஊக்குவிக்கும் காரணிகளாவும் திகழ்கின்றன.
அதாவது, ரஷ்ய-சீன-இந்திய-ஈரானிய-சவுதி-தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இன்று உருவாகி முளைவிடும் புதிய பார்வைகள், மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளின் ஒட்டு மொத்த பல்-பரிமாண தாக்கம் இதனுடன் கூடவே, நோட்டோ, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புக்களின் ஒற்றுமையை காத்தும் அவற்றிற்கு தலைமை தரவேண்டிய அவா சார்ந்த அமெரிக்க விருப்பங்களையும் நாம் கருத்தில் கொண்டால், அமெரிக்கா சுமக்க வேண்டிய ஒட்டுமொத்த சுமையின் நிறை மிகவும் பாரமானது. இத்துடன், கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்துள்ள, ஒரு நடைமுறை கொள்கையே, இவ் நோட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டமைப்புக்களை படிப்படியாக சிதற செய்வதும், டொலரின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தை இல்லாமல் ஆக்கியும், ஒரு முனை உலக ஆதிக்கம் என்பதனை இனியும் மிஞ்சவிடாது என்றும் உள்ளது என மெக்ரோகர் போன்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், விடயங்கள் இவ்வாறு இருக்கையில், வளர்ந்து வருகின்ற, ரஷ்ய-உக்ரைன் யுத்தத்தின் மூர்க்கமானது இப்போது நாளுக்கு நாள் மேலும் மேலும் மும்முரமாய் வளர்ந்து வருவதாகவே தெரிகின்றது. உதாரணமாக, சில தினங்களின் முன்னால் அமெரிக்காவின் மிக முக்கிய ட்ரோன் US,MQ-9 Reape கருங்கடலில் வீழ்த்தப்பட்டு நொறுக்கப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் இவ் ட்ரோனுக்கு முன்னால் பாய்ந்த இரண்டு ரஷ்ய விமானங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளேயாகும் என்பது அமெரிக்காவின் வாதமாக இருக்கின்றது. இதனை ரஷ்யா பெயரளவிலேயே மறுத்துள்ளது. (Guardian:14.03.2023) இவ் அதிசக்தி வாய்ந்த ட்ரோனின் மொத்த பெறுமதி 32 மில்லியன் டொலர்கள் ஆகும். கிட்டத்தட்ட 32 அடி நீளமும், 60 அடி அகலமும், 50000 அடி உயரத்தே பறக்கக்கூடியதும், 3750Kg நிறையைக் காவி செல்லக்கூடியதுமான (வேவு கருவிகள் அல்லது குண்டுகள்) இவ் ட்ரோனானது, ரஷ்யாவால் நொறுக்கி வீழ்த்தப்பட்டபோது அமெரிக்க ரஷ்ய முரண்கள் உறவுகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டின. ட்ரோன் நொறுக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க வெளிநாட்டு அமைச்சு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட ரஷ்ய தூதுவர் ட்ரோன் நொருக்கப்பட்டதை மறுத்தார் இல்லை. ஊடகங்களுக்கு அவர் செய்தி தெரிவிக்கும் போது இனியும் ரஷ்ய எல்லைகளை நோக்கி அமெரிக்க விமானங்கள் அல்லது வேவு பார்க்கும் ட்ரோன்கள் வருவதை ரஷ்யா பொறுத்துக்கொள்ளாது என அவர் கூறியது, அச்சுறுத்தும் பாணியிலேயே அமைந்ததாக உள்ளது.
இதற்கெல்லாம், சிகரம் வைப்பது போல, புட்டினின், அண்மைக்கால அறிவிப்பு-அதாவது-தந்திரோபாய அணுவாயுதங்களை நாங்கள் பெலோ ரஷ்யாவிற்கு நகர்த்த தீர்மானித்து விட்டோம்–என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தந்திரோபாய அணுவாயுதங்கள் (Tactical Nuclear Weapons) என்பவை சராசரி அணுவாயுதங்களில் இருந்து வித்தியாசப்படுபவன ஆகும். இவை நகரங்களை அழிக்க கூடியவையல்ல. ஆனாலும், போர்க்களங்களில் பாவிக்க ஏற்புடையது. அதாவது, இவற்றின் அணு சக்தி, போர்க்களங்களுக்கு ஏற்றாற் போல் மட்டுப்படுத்தப்பட்டு, அநேக நாசங்களை உண்டு பண்ணும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பானது, இங்கிலாந்தின்-அமெரிக்காவின்-ஜேர்மனியின் நவீன யுத்த தாங்கிகளின் உக்ரேனிய வருகையை அடுத்து, வெளியாகியுள்ளது. அதாவது, இந்நவீன தாங்கிகள் யுரேனிய முனைகளை தமது குண்டுகளில் ஏந்தியுள்ளன. இவை, கிட்டத்தட்ட, ஒரு வித அணுசக்தி பாவிப்புக்கு சமனாகி, பயங்கர தாக்கத்தை போர்களங்களில் ஏற்படுத்தக்கூடியது. இவற்றின் வருகை அறிவிக்கப்பட்டதுமே, ரஷ்யா ஏற்கனவே தனது எச்சரிக்கையை நேரடியாக விடுக்க செய்திருந்தது. உக்ரேனிய போர்க்களத்தின் நிலைமையை, இத்தாங்கிகளின் வருகை மேலும் அதிகரிக்கவே செய்யுமே தவிர குறைக்க போவதில்லை என ரஷ்யா கூறி நின்றது. ஆனால், ஆயுத வியாபாரிகளின் எண்ணப்பாடும் போராசையும் உக்ரேனிய போரின் உக்கிரத்தை குறைக்க வழிசெய்வதாக இல்லை. மாறாக, உக்கிரங்களை மேலும் எப்படி எப்படி வளர்த்து விடுவது என்பதிலேயே அவற்றின் கரிசனை ஆழப்படுவதாய் இருக்கின்றது. இதுவே, உக்ரேனிய போர் நிலைமைகளை ஓர் அணு பாவிப்புக்கு இட்டு செல்லக்கூடியதாக இன்று பரிணமிப்பதாய் உளது.
இவற்றின் பின்னணியிலேயே அமெரிக்காவின் இன்றைய பொருளாதார நிலைமைகளும், டொலரின் செல்லாத்தன்மையும் இப்போருக்கு இன்று வலு சமைப்பதாயும் உள்ளன. மறுபுறத்தில், புட்டின் அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் YARS அணு ஏவுகனையை, 3000 துருப்புக்களுடன் பரீட்சித்துப் பார்த்தது மாத்திரமில்லாமல், (இதுவரை இருந்து வந்துள்ள நடைமுறையை போல்) இது குறித்த தகவல்களை இனியும் மேற்குடன் தாம் பகிர தயாராக இல்லை என்றும் அறிவித்துவிட்டார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.